- அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
- செயற்பாலது ஓரும் அறன்
- நுண்பொருள் காண்பது அறிவு
- வகையறச் சூழ்ந்தெழுதல்
- தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு
- ஒருமையுள் ஆமைபோல்
- நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…
- எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
- கர்மத்தின் வகையறிதல்
- செயல் என்னும் நிவேதனம்
- ஒன்றே நினைந்திருக்க உள்ளம் கனியும்
- ஞானம், ஞேயம், ஞானகம்யம்
- சத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம
- ஆனந்தம் பிரம்மனோ வித்வான்
- சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
- கீதா முகூர்த்தம்
- நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
- புத்தியில் நிலைத்தவன்
- இறை உறையும் இடம்
பகவத் கீதையின் மத்யம ஷட்கம் என்றழைக்கப்படும் அத்தியாயங்கள் ஏழிலிருந்து பனிரெண்டு வரையுள்ள பகுதியின் சாராம்சத்தை இப்பகுதியில் காணவிருக்கிறோம். கீதையின் முதல் ஷட்கம் தத்-தவ்ம்-அஸி என்ற உபநிஷத் மகாவாக்கியத்தில் த்வம் என்ற சொல்லை மட்டும் எடுத்துக்கொண்டு விளக்கியது என்று பார்த்தோம். ஆத்ம, அனாத்மாவின் இயல்புகள், ஆத்ம ஞானத்தின் முக்கியத்துவம், அதை அடைவதற்காக இயற்றப்படும் சாதனையான கர்மயோகம், ஞானத்தை அடைந்த ஸ்திதப்ரக்ஞன் இவ்வுலகில் வாழும் முறை, ஸ்திதப்ரக்ஞ நிலையை அடைவதற்கான வழி ஆகியன முதல் ஷட்கத்தில் விளக்கப்பட்டன.
மேலும் இப்பகுதியில் ஞானயோகப் பாதையில் சுயமுயற்சியின் இன்றியமையாமையும் விளக்கப்படுகிறது. சுயமுயற்சி என்பது நமது உலக வாழ்க்கைக்கும் முக்கியமானது என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் லெளகிக வாழ்க்கையைப் போல நண்பர்களோ, சுற்றத்தாரோ அல்லது பிராரப்தமோ ஆன்மிகப்பாதைக்கு உதவாது. சிரவணம் எனப்படும், ஆசிரியரிடமிருந்து உபதேசத்தை கற்பது வேண்டுமானால் நமது முயற்சிக்கு அப்பாற்பட்டு இருக்கலாம். சரியான ஆசிரியரை அடைவது முதல், அவரது உபதேசத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பது வரை எல்லாவற்றிக்கும் ஒருவனின் சொந்த முயற்சி அவசியமாகிறது. நாம் கற்ற வேதாந்தக்கல்வி குறித்த ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள ஆற்றப்படும் பயிற்சியான மனனம் செய்யும் காலத்தில், நமது ஐயங்களைத் தொகுத்து, விசாரம் செய்து அதை நீக்குவதில் ஆசிரியரின் பங்கு இருந்தபோதிலும், தனியொருவனின் முயற்சிதான் இங்கு பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் இந்த ஞானத்திற்கு தேவையான தகுதியை அடைவதிலும் சுயமுயற்சி தேவையாகிறது. இறுதியாக, நிதித்யாசனம் எனும் நிலையில் சாதகன் தனித்துவிடப்படுகிறான். தன்னுடைய முழு முயற்சியினால் மட்டும்தான் ஒருவனால் தான் அடைந்த ஞானத்தில் நிலைத்து நிற்கமுடியும். இவ்விதம் இந்த அகவிடுதலைக்கான பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் தனியொருவனின் சுய முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. “தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே எதிரி. எனவே ஒருவன் தான் தன்னையே உயர்த்திக்கொள்ள வேண்டும். மாறாக தன்னைத்தானே அழித்துக்கொள்ளக் கூடாது,” என்று கிருஷ்ணர் ஒரு சுலோகத்தில் கூறுகிறார் (உத்தரேதாத்மனாத்மானம் ஆத்மானமவசாதயேத்).
கீதையின் இரண்டாவது ஷட்கம் “தத்” என்ற சொல்லை ஆதாரமாக எடுத்துக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்துக்கு மூலமாக இருக்கின்ற பரம்பொருளான அந்த ஈஸ்வரனுடைய மெய்யியலைப் பற்றி ஆராய்கிறது. முதல் ஷட்கத்தின் இறுதி அத்தியாயமான ஆறாவது அத்தியாயத்தில், “யார் சிரத்தையுடன் சித்தத்தை என்பால் வைத்து என்னை நாடுகின்றானோ(மத்கதேந அந்தராத்மநா), அவன் மற்ற எல்லாவிதமான யோகியைக் காட்டிலும் மிக மேலானவன்” என்கிறார் கிருஷ்ணர். இது இரண்டு கேள்விகளுக்கான விதையாக ஆகிறது. இறைவனிடம் மனம் லயிப்பவனாக யோகி எப்படி ஆகிறான்? அந்த இறைவனின் உண்மையான சொரூபம் என்ன? இந்த இருகேள்விகளுக்கு விடையாகவே மத்யம ஷட்கம் என்ற இந்தப்பகுதி அமைகிறது.
அத்வைத வேதாந்தத்தின்படி இறைவன் இவ்வுலகுக்கு உபாதான காரணமாகவும் (கச்சாப்பொருள்), நிமித்த காரணமாகவும் (Intelligence Cause) ஒரே நேரத்தில் இருக்கிறார் என்று பார்த்தோம். எவ்வாறு ஒரு சிலந்தி தன் சொந்தக் கூட்டினைத் தனக்குள்ளிருந்தே நூலாக வெளிப்படுத்தி, பின்னர் அதிலேயே நிலைகொள்வது போல, பரம்பொருளானது தனது ஆற்றலால் அகில உலகத்தையும் தோற்றுவித்து, அதில் எங்கும் நிறைந்து இயங்குகிறது. ஆனால் இறைவன் என்பவரை இவ்வுலகில் நாம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் விதமே வேறு. இறைவன் அருவமானவர், குணங்கள் ஏதுமற்றவர், எங்கும் நிறைந்தவர் என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன. இவ்வுலகிலோ இறைவனை பலவிதமான உருவங்கள் கொண்டவராகவும், குணங்கள் கொண்டவராகவும்தான் வழிபடப்படுவதைக் காண்கிறோம். அருவமான, குணங்களற்ற, மாறுதலற்ற அந்தப் பரம்பொருளை நிர்குண பிரம்மம் என்றும், அதுவே இந்த உலகைத் தோற்றுவித்துக் காக்கும் நிலையை எட்டும்போது, உருவமுள்ள, குணங்களை அடிப்படையாகக் கொண்ட சகுண பிரம்மம் என்றும் அழைக்கப்படுகிறது. கீதையின் இந்த மத்யம ஷட்கம், ஒரு சாதகனை சகுண உபாசனை எனப்படும் வடிவ வழிபாட்டிலிருந்து தொடங்கி , படிப்படியாக அருவமான முழுமுதல் மெய்ஞானமான நிர்குண பிரம்ம ஞானத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
இப்பகுதியை கிருஷ்ணர் இவ்வாறு துவங்குகிறார்: என்னிடம் பற்றும் அன்பும் கொண்டவனாய், என்னிடத்திலேயே எல்லாவிதத்திலும் அடைக்கலமடைந்தவனாய், யோகத்தில் அமர்ந்தவனாய், எங்ஙனம் என்னை முழுமையாக அறிவது என்பதை என்னிடமிருந்து கேள், அர்ஜூனா! என்கிறார். இந்த சுலோகத்தின் ஒவ்வொரு சொல்லும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரண்டாவது ஷட்கத்தில் என்னென்ன விஷயங்களைத் தான் அலசப்போகின்றேன் என்பதை இந்த சுலோகத்திலேயே குறிப்பிட்டு விடுகின்றார்.
கிருஷ்ணர் கீதையில் பல இடங்களின் “நான், எனது” என்று குறிப்பிடுகிறார். அவர் “நான்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பது இடத்துக்கு இடம் மாறுபடும். சில இடங்களில் தன்னை வசுதேவனின் மகனான கோகுலத்துக் கண்ணனாகவும், சில இடங்களில் காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும், சில இடங்களில் உலகிற்குக் காரணமான ஈஸ்வரனாகவும், சில இடங்களில் அந்த பிரம்மமாகவும் தன்னை குறித்துக் கொண்டு சொல்கிறார். எனவே எந்தெந்த இடத்தில் எந்தப் பொருள் பொருந்தி வருகிறதோ அதையே நாம் தேர்ந்தெடுத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு “என்னிடத்தில் அடைக்கலமடைந்தவனாய்” (மதாஸ்ரய:) என்று கூறும்போது கிருஷ்ணர் தன்னை ஈஸ்வரனாக வரித்துக் கொள்கிறார். உலகியல் மக்கள் பலரும் தாங்கள் விரும்பிய பொருட்களை அடைவதற்காக இறைவனிடம் சரணடைவர். ஆனால் இங்கு கிருஷ்ணர் ஈஸ்வரனாகிய என்னிடமே சரணடைந்தால், நானாகிய அந்த ஈஸ்வரனையே அடைய முடியும் என்கிறார். அதாவது இங்கு அடைய வேண்டிய இலக்கான சாத்யம் அந்த ஈஸ்வரன்தான். அதை அடைவதற்கான சாதனமும் ஈஸ்வரனே. “எங்ஙனம் என்னை முழுமையாக அறிவது என்று கேள்” என்று கூறுகிறார். ஈஸ்வரனை முழுமையாக அறிவது என்றால் மாயையும், பிரம்மமும் கலந்த சகுண பிரம்மம் மற்றும் மாயைக்கு அப்பாற்பட்ட, தூய நிர்குண பிரம்மம் ஆகிய இரண்டைக் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்வது என்பதைக் குறிப்பாகச் சொல்கிறார்.
“என்னிடத்தில் அன்பு வைத்தவனாய்” என்று அவர் கூறுவது மூலம் ஈஸ்வரனைப் பற்றிய அறிவை முதலில் ஈஸ்வரனின்பால் வைத்த அன்பின் மூலமாகவே துவங்க வேண்டும் என்று கூறுகிறார். நான் உன் அன்பிற்கு விஷயமாக ஆகும்போதுதான் உன் அறிவிற்கும் விஷயமாக ஆவேன் என்று கூறுகிறார். ஈஸ்வரனின் மீது வைக்கும் அன்பே பக்தி எனப்படும். இப்பகுதியில் பக்தியைக் குறித்து விரிவாகப் பேசவிருக்கிறார். “யோகத்தில் அமர்ந்தவனாய்” என்று அவர் கூறுவது சாதகனுடைய ஞானயோகப் பயிற்சியை, ஈஸ்வரனைப் பற்றிய உண்மையான தத்துவத்தைக் கேட்டலைக் குறிக்கிறது.
பின்னர் கிருஷ்ணர் அர்ஜூனனிடம், “ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் முழுமையாகக் கூறுகிறேன். அதை அறிந்தபின் உனக்கு அறியவேண்டியது எதுவும் மிச்சமிருக்காது,” என்று கூறுகிறார். இங்கு ஞானம் என்பதை செவிவழி பெறப்படும் அறிவு, சிந்தனைக்குரிய அறிவு என்ற பொருளில் பயன்படுத்துகிறார். ஞானம் என்பதை பரோக்ஷ ஞானம் என்று புரிந்து கொள்ளலாம். விஞ்ஞானம் என்பது அபரோக்ஷ ஞானம். ஓர் இடத்தைப் பற்றிச் செவிவழியாகக் கேள்விப்படுதல் பரோக்ஷ ஞானம் (இங்கு ஞானம்). அந்த இடத்துக்கு நேரிலேயே சென்று பார்ப்பது அபரோக்ஷ ஞானம் (இங்கு விஞ்ஞானம்). இப்பகுதியில் அவர் கூறப்போகும் ஈஸ்வரனைப் பற்றிய அறிவு செவிவழியாகத் தெரிந்து கொள்ளும் பரோக்ஷ ஞானமாக மட்டுமல்லாது, அனுபவத்துக்குரிய அபரோக்ஷ ஞானமாகவும் இருக்கும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஞானம் என்பது உருவத்துடன் கூடிய சகுன பிரம்ம ஞானத்தையும், விஞ்ஞானம் என்பது அருவமான நிர்குண பிரம்ம ஞானத்தையும் குறிக்கிறது. “பிரம்மம் இருக்கிறது,” என்று அறிந்து கொள்வது ஞானம். “நான் பிரம்மமாகவே இருக்கிறேன்,” என்று உணர்ந்து கொள்வது விஞ்ஞானம். இந்த சுலோகத்துக்கான உரையில் சங்கரர், “மனத் தூய்மையில்லாமல் சாஸ்திரத்தை கேட்கும்போது உண்டாகும் அறிவு என்பது வெறும் வார்த்தைகளுக்கான அர்த்தமாக மட்டும் இருக்கும். இதுவே ஞானம். சாஸ்திர அறிவிற்கும் ஒருவனுடைய அனுபவத்திற்கும் முரண்பாடில்லாத, விரோதமில்லாத நிலையே விஞ்ஞானம்,” என்கிறார். “முழுமையாகக் கூறுகிறேன்,” என்று கிருஷ்ணர் சொல்வது ஞானம், விஞ்ஞானம் ஆகியவற்றின் முழுமையான அறிவு, அவற்றை அடையச் செய்யப்படும் சாதனம், அவற்றை அடைவதன் பலன் ஆகியவை அனைத்தையும் உனக்கு முழுமையாகக் கூறுவேன் என்பதாகும். சங்கரர் தனது பாஷ்யத்தில், இதை அறிந்தபின் ஒருவன் சாதிக்கும் பொருட்டு தெரிந்துகொள்ளப்பட வேண்டியது என வேறெதுவுமில்லை; ஒரு மனிதனால் அடையப்பட வேண்டிய முடிவு அடையப்பட்டுவிட்டது; எதுவும் மிச்சமில்லை, என்கிறார். மேலும் அவர், தன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவன் எல்லாம் அறிந்தவனாகிறான் என்கிறார். இந்தக் கூற்றை வேறெந்த அறிவும் சொந்தம் கொண்டாட முடியாது. அறிவின் மற்ற எல்லா வடிவங்களும் வெறும் தகவல் குவியலாகவும், தோன்றி மறைவனவாகவுமே உள்ளன. ஒன்று மட்டுமே சத்யம். எனவே, ஒருவன் தெரிந்துகொள்ள வேண்டியதும் ஒன்றே ஒன்றுதான். இதுவே இந்த ஞானத்தின் ரகசியம், என்கிறார்.
வேறெதுவும் அதற்குமேல் அறியத் தேவையில்லாத இந்த அறிவை எல்லாரும் அடையத் துடிப்பதில்லை என்கிறார் கிருஷ்ணர். “ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன்தான் மோட்சத்திற்காக முயலுகிறான். அந்த முயற்சி செய்பவர்களான நல்லியல்பு உடையோர்களுக்குள்ளும் யாரோ ஒருவன்தான் என்னை உள்ளபடி அறிகிறான்,” என்று கூறுகிறார்.
இந்த உலகிற்குக் காரணமான ஈஸ்வரனைப் பற்றி விளக்கும்போது கிருஷ்ணர், “நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அகங்காரம் இப்படி எட்டுவிதமாக என் பிரக்ருதி பிரிவுபட்டிருக்கிறது,” என்று கூறுகிறார். இங்கு அவர் சகுண பிரம்மத்தைப் பற்றி விளக்க முனைகிறார். சகுண பிரம்மம் என்றால் பிரம்மமும், மாயையும் இணைந்தது என்று புரிந்து கொள்ளலாம். மாயை மற்றும் பிரம்மம் குறித்து அத்வைத வேதாந்த தத்துவம் எவ்வாறு விளக்குகிறது என்பதை இந்த நூலில் முற்பகுதிகளில் விரிவாகப் பார்த்திருக்கிறோம். இங்கு கீதையின் பார்வையில் மாயையும், பிரம்மமும் இணைந்த சகுண பிரம்மத்தின் இயல்புகள் என்பதைப் பார்க்கவிருக்கிறோம்.

சகுண பிரம்மம் என்றால் அது உலகிற்குக் காரணமான ஈஸ்வரன். இது பிரம்மமும், மாயையும் இணைந்தது. பிரம்மத்தின் இயல்புகளைப் பின்வருமாறு கூறலாம்: அநாதி (துவக்கமில்லாதது); சேதனம் (அறிவு வடிவமானது); நிர்விகாரம் (மாற்றமில்லாதது); நிர்குணம் (குணங்களற்றது); சுதந்திர சத்தா (யாரையும் சார்ந்திராதது); சத்யம் (இருப்பாக இருப்பது). மாயையும் அநாதிதான். அது என்று தோன்றியது என்று கூறிவிட முடியாது. ஆனால் அதற்கு முடிவுண்டு. எப்போது ஆத்மாவைப் பற்றிய அறிவு ஏற்படுகிறதோ அப்போது மாயை என்பது இல்லாமல் போகிறது. மாயையின் பிற இயல்புகள் ஆத்மாவுக்கு நேர்மாறானது. அது அசேதனம் (உயிரற்றது; உணர்வற்றது); சவிகாரம் (மாற்றங்களுக்குட்பட்டது); சகுணம் (முக்குணங்களுக்குட்பட்டது); பிரம்ம ஆஷ்ரயம் (தன்னுடைய இருப்புக்கு பிரம்மத்தைச் சார்ந்திருப்பது); மித்யா (வெறும் தோற்றம் மட்டுமே). கிருஷ்ணர் கபிலரின் சாங்கிய மதத்தில் கூறப்பட்டுள்ள, இந்த உலகம் தோன்றியதன் படிநிலையை (கிரமம்) அப்படியே இங்கு கையாள்கிறார். உற்பத்தி செய்யும் திறனுக்கு பிரக்ருதி என்ற பெயர் கொடுத்து, இரு வகையான பிரக்ருதிகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஒன்று பரா பிரகிருதி, இன்னொன்று அபரா பிரகிருதி. பரா என்றால் மேலான என்று பொருள். பரா பிரகிருதி என்பது நேரடியாகவே தூய உணர்வாகவும், இருப்பாகவும் உள்ள பிரம்ம தத்துவத்தைக் குறிக்கிறது. இதற்கு ஸ்வரூப பிரகிருதி என்றும் பெயர் உண்டு. அபரா பிரகிருதி என்பது மாயா தத்துவத்தைக் குறிக்கிறது. இதற்கு ஸ்வபாவ பிரகிருதி என்று பெயர்.
கபிலரின் சாங்கிய மதம் மொத்தம் 25 தத்துவங்களைப் பட்டியலிடுகின்றது. அதில் ஒரு தத்துவம் புருஷன் என்பது. இது ஆத்மாவைக் குறிக்கிறது. சாங்கிய மதத்தைப் பொறுத்தவரை ஆத்மா செயல் செய்பவனாக இல்லாதபோதிலும், செயலின் பலனை அனுபவிப்பவனாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்து அத்வைத தத்துவத்துக்கு ஒவ்வாதது. மற்ற 24 தத்துவங்களும் படைப்பிற்கு மூலம் என்ற அடிப்படையில் அத்வைதத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பாரமார்த்திக திருஷ்டியி பார்க்கும்போது படைப்பு என்பதே நிகழவில்லை எனினும், ஈஸ்வர தத்துவத்தை விளக்குவதற்காக இந்த 24 தத்துவங்களையும் முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் அத்யாரோப அபவாத நியாயப்படி நிராகரணம் செய்யப்படும்.
அந்த 24 தத்துவங்களில் முதல் தத்துவம் மூலப்பிரக்ருதி. இது அநாதி எனச் சொல்லப்படுகிறது. வேதாந்தத்தில் உள்ள ‘மாயை’ என்பதையே இவர்கள் மூலப்பிரக்ருதி என்றழைக்கின்றனர். இரண்டாவது மஹத். மூலப்பிரக்ருதியில் ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் எனும் முக்குணங்கள் சமமாக உள்ளன. அந்த சமநிலை குலையும்போது, அது சிருஷ்டிக்கு தயாராகிறது. இதுவே மஹத் நிலை. மூன்றாவது அகங்காரம். இது வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி எனும் ஐந்து பூதங்களின் சூட்சுமமான நிலை; வெளித்தோற்றத்திற்கு வராத அவ்யக்த நிலை. நான்காவது மனம். மேற்கூறிய ஐந்து சூட்சும பூதங்களின் சத்துவ நிலை. ஐந்திலிருந்து பதினான்கு வரை பத்து இந்திரியங்கள்(புலன்கள்) (ஐந்து ஞானேந்திரியங்கள் மற்றும் ஐந்து கர்மேந்திரியங்கள்). மேற்கூறிய ஐந்து சூட்சும பூதங்களின் ராஜச நிலையை இந்த பத்து இந்திரியங்கள் குறிக்கின்றன. பதினைந்திலிருந்து பத்தொன்பது வரை ஐந்து தன்மாத்திரைகள். தொடுஉணர்ச்சி, சுவை, வடிவம், வாசனை மற்றும் ஒலி போன்ற ஞானேந்திரியங்களின் செயல்பாடுகள் சார்ந்திருப்பவைகள். இருபதிலிருந்து இருபத்து நான்கு வரை ஐந்து ஸ்தூல பூதங்கள். ஐந்து சூட்சும பூதங்களின் தாமஸ நிலை.
சிருஷ்டியின் இயல்பை கற்பிக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் இதுபோன்ற வழிமுறைகள் சிருஷ்டி-பிரக்ரியா என்றழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பார்வையைச் சரியாக புரிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் விசாரணை ‘பிரக்ரியா’ எனப்படும். சாஸ்திரத்தில் இது போன்று பல்வேறு பிரக்ரியாக்கள் கையாளப்படுகின்றன. எந்தவொரு பிரக்ரியையை பயன்படுத்துவதன் நோக்கமும் பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதைக் குறிப்பிடுவது மட்டுமே. கீதையில் கிருஷ்ணர் சிருஷ்டி பிரக்ரியையைப் பயன்படுத்துவன் நோக்கமும் அதுவேதான். அவர் சாங்கிய மதத்தின் மூலப்பிரக்ருதியை ‘அஹங்கார:’ எனும் சொல்லின் மூலமும், மஹத் தத்துவத்தை ‘புத்தி:’ என்றும், அஹங்கார: என்பதை ‘மந:’ என்ற சொல்லைப் பயன்படுத்தியும் விளக்குகிறார்.
“ஒரு நூலில் பல்வேறு மணிகள் கோர்க்கப்பட்டிருப்பது போல, இந்தப் படைப்பு முழுவதும் என்னிடம் மட்டுமே தொடுக்கப்பட்டுள்ளது,” என்று கிருஷ்ணர் ஒரு சுலோகத்தில் குறிப்பிடுகிறார். மேலும் “என்னுடைய மாயையால்தான் இந்த படைப்பு தோன்றியுள்ளது. முக்குணங்களான சத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவற்றின் வடிவான அந்த மாயையைக் கடத்தல் என்பது கடினம். என்னிடத்தில் முழுமையாகச் சரணடைந்தவர்கள் மட்டுமே இந்த மாயையை எளிதில் கடந்து போகிறார்கள்” என்று இன்னொரு இடத்தில் கூறுகிறார். என்னையே (“மாம் ஏவ”) சரணடைந்தவர்கள் என்று கூறும்போது “நான்” என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார்? யாதவ மன்னனான கிருஷ்ணரையோ, படைப்பின் காரணமான ஈஸ்வரைனையோகூட அவர் இங்கு நான் என்ற சொல்லில் குறிப்பிடவில்லை. சங்கரர் இந்த “மாம்” என்ற சொல்லுக்கு உரை எழுதும்போது, “தனது இயல்பையுடையவன்(ஸ்வாத்ம-பூதம்), அனைத்தின் சுயமாக இருப்பவன்(ஸர்வ-ஆத்மா)” என விளக்கமளிக்கிறார்.
எட்டாம் அத்தியாயத்தில் அர்ஜூனன் கிருஷ்ணரிடம் ஏழு கேள்விகளுக்கான விளக்கத்தை வேண்டுகிறான். அந்தக் கேள்விகள்: அந்த பிரம்மம் யாது? அத்யாத்மம் எது? கர்மம் என்பது யாது? அதிபூதம் என்று சொல்லப்படுவது எது, மேலும் அதிதெய்வம் என்று எது அழைக்கப்படுகிறது? இந்த உடலில் அதியக்ஞன் என்பவர் யார், அவர் எப்படி இருக்கிறார்? தன்னடக்கம் பழகியவர்களால் மரண காலத்திலும் நீங்கள் எங்ஙனம் அறியப்படுபவர் ஆகின்றீர்கள்?
கிருஷ்ணர் இந்தக் கேள்விகளுக்கு முதலில் சுருக்கமாக நான்கு சுலோகங்களிலும், பின்னர் விளக்கமாகவும் பதிலளிக்கிறார். பிரம்மம் என்றால் அக்ஷரம் என்று பதிலளிக்கிறார். அக்ஷரம் என்றால் அழியாதது, அனைத்தையும் வியாபித்திருப்பது என்று பொருள். எந்தவொரு பொருளும் காலத்தினால், தேசத்தினால் அதற்கேயுரிய குணங்களினால் வரையறுக்கப்படுகின்றது. ஆனால் அண்டங்கள் அனைத்திற்கும் இருப்பிடமாகவுள்ள பிரம்மம் எந்த வகையிலும் வரையறுக்கப்படாதது. கால தேசத்திற்கு அப்பாற்பட்டது; குணங்களற்றது. இதே அத்தியாயத்தின் பிற்பகுதியில், அக்ஷரம் எனும் சொல்லினால் ஓம் என்னும் பிரணவம் குறிக்கப்படுகிறது. எனில் இங்கு ஏன் அது ஓம் எனும் சொல்லைக் குறிக்கக்கூடாது என்ற கேள்வியை சங்கரர் எழுப்பி, அதற்கான விடையையும் அளிக்கிறார். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ‘பரம’ எனும் உரிச்சொல் அந்த சாத்தியத்தை நீக்குகிறது. மேலும் இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பும் ‘ஓம்’ அல்ல. எனவே அக்ஷரம் என்பது அழியாதது என்ற அர்த்தத்தில் பிரம்மத்தையே குறிக்கின்றது.
அத்யாத்மம் என்றால் உடலுக்குள் இருப்பது என்று பொருள். அத்யாத்மம் என்ற சொல்லுக்கு விளக்கமாக கிருஷ்ணர் ஸ்வபாவம் (இயல்பு)என்ற சொல்லை அளிக்கிறார். பிரம்மத்தினுடைய ஸ்வபாவம், ஒவ்வொரு உடலுக்குள்ளும் ‘நான்’ என்னும் சொல்லுக்கு இலக்காக உள்ள பிரக்ஞையாக, பிரத்யகாத்மாவாக இருப்பதாகும். இங்கு பிரம்மம், அத்யாத்மம் இரண்டும் ஒன்றே என்பதை கிருஷ்ணர் நிறுவுகிறார். வெளியுலகிற்கு அதிஷ்டானமாக இருக்கும்போது அது பிரம்மம் என்றும், தனியொருவனின் உடலுக்கு ஆதாரமாக விளங்கும்போது அதே மெய்ப்பொருள் ஆத்மா(அத்யாத்ம) என்றும் அழைக்கப்படுகின்றது. ஞானியானவன் சிருஷ்டி அனைத்திற்கும் மூலகாரணமாக பிரம்மத்தை அறிகிறான் என கிருஷ்ணர் கூறியிருந்தார். அவன் பிரம்மனை அறியப்படும் ஒரு பொருளாக அல்லாமல் தனது சுயமாகவே அறிகிறான் என்பதை சுட்டிக்காட்ட அவர் இங்கு அத்யாத்ம என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
கர்மம் என்ற சொல்லுக்கு பதிலாக “விஸர்க:” என்ற சொல்லை அளிக்கிறார். இதற்கு விட்டு விடுதல் அல்லது தியாகம் செய்தல் என்று பொருள். குறிப்பாக இது தேவதைகளுக்கு அளிக்கப்படும் ஆகுதியைக் குறிக்கிறது. பொதுவாக இங்கு கர்மம் என்ற சொல் எல்லாச் செயல்களையும் குறிக்கிறது. ஒருவனது கர்மங்களிலிருந்து உருவாகும் கர்மபலனே அவன் உடல் எடுப்பதற்குக் காரணமாக இருக்கிறது. புதிதாகப் பிறப்பது உடல் மட்டும்தானே தவிர ஆத்மாவுக்குப் பிறப்போ, இறப்போ கிடையாது. கிருஷ்ணர் நான்காவது அத்தியாயத்தில் “அர்ப்பணம் செய்தல் பிரம்மம்; நெய் முதலிய ஹவிஸும் பிரம்மம்; பிரம்மமாகிய அக்னியில் பிரம்மத்தால் கொடுக்கப்படுகிறது. பிரம்மமாகிய கர்மத்தில் மனம் குவிந்துள்ளவனால் பிரம்மமே அடையப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே இங்கு கர்மமும் பிரம்மமேயாகும்.
அடுத்த மூன்று சொற்களுக்கு சுருக்கமாக, “அழியும் பொருள் அதிபூதம் என்று சொல்லப்படுகிறது. புருஷன் அதிதெய்வம் எனப்படுகிறான். இனி இந்த தேகத்தினுள் நானே அதியக்ஞமாகிறேன்” என்று கூறுகிறார். அழியக்கூடிய அனைத்தும் அதிபூதம். இங்கு புருஷன் என்ற சொல்லால் குறிப்பிடப்படுபவர் சூட்சுமப் பிரபஞ்சத்துக்குக் காரணமான ஹிரண்யகர்பன். ஆகவே அக்ஷரமாகிய இந்த பிரம்மமே, ஆத்மவிசாரத்தில் ஈடுபடுபவனை குறிக்கும்போது அத்யாத்மமாகவும், மற்ற எல்லா உடல்கள் மற்றும் பொருள்களை குறிக்கும்போது அதிபூதமாகவும் இருக்கின்றது. ‘இவ்வாறு அத்யாத்மம் மட்டுமல்ல அதிபூதமாக அதியக்ஞனாக நானே (பிரம்மம்) இருக்கின்றேன்’ என்கிறார்.
இறுதிக்கேள்விக்கு பதிலாக “ஒருவன் வாழ்நாளின் இறுதி வினாடியில் எதை நினைக்கிறானோ, அதையே அடைகிறான்” என்கிறார். வாழ்வின் இறுதி நேரத்தில் ஒருவன் பரம்பொருளை நினைக்க வேண்டுமெனில், வாழ்நாள் முழுவதும் இடைவிடாத பயிற்சியும் மெய்ஞான விழிப்புணர்வும் தேவை என்பதை இங்கு குறிப்பாலுணர்த்துகிறார்.
கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்துக்கு ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்று பெயர். பிரம்மத்தை அறிதல் என்பது மிக மேலான கல்வி. அது மட்டுமல்ல அது மிகவும் ரகசியமான (குஹ்யம்) மெய்ஞானம் என்று இதற்குப் பொருள். இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் பிரம்மத்தின் அதிஷ்டானத் தன்மையையும் (ஆதார நிலை), அசங்கத் தன்மையையும் (பற்றற்ற நிலை) வெளிப்படுத்துகிறார். “புலன்களுக்குப் புலப்படாத என் அருவ வடிவத்தால் இந்த உலகம் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களும் என்னிடம் நிலைகொண்டுள்ளன; ஆனால், நான் அவற்றிடம் நிலைகொள்ளவில்லை” என்கிறார். இதுபோன்று ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாக்கியங்களால் பிரம்ம தத்துவத்தை விளக்குவது உபநிஷத்துக்கள் மற்றும் கீதைக்கே உரித்தான விளக்க முறையாகும். சொல்லால் விளக்கவே முடியாத தத்துவத்தை இவ்வாறு முரண்பட்ட வாக்கியங்களைக் கொண்டுதான் விளக்க இயலும். இங்கு கிருஷ்ணர் அனைத்து உயிர்களும் என்னிடம் நிலைகொண்டுள்ளன என்று கூறிய அதே வேகத்தில் நான் அவைகளிடத்தில் நிலைகொள்ளவில்லை என்று கூறுவது காரணத்துக்கும், காரியத்துக்கும் இடையிலுள்ள சத்யம்-மித்யா தொடர்பைக் குறிப்பிடுவதற்காகத்தான். இதை இப்படிப் புரிந்து கொள்ளலாம். களிமண் இவ்வாறு கூறுகிறது: அனைத்துப் பானைகளும் என்னிடத்திலேயே உள்ளன; ஏனெனில், பானைகளின் காரணமாக நானே இருப்பதால், காரணத்திலிருந்து காரியமான பானைகள் வேறாக இல்லை என்பதனால் அனைத்துப் பானைகளும் என்னிடத்திலேயே இருக்கின்றன. அதேநேரத்தில் களிமண்ணான நான் என்னுடைய இருப்புக்குப் பானைகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பானைகள் இருக்கும்போதும், உடைந்தபின்னரும் அவை களிமண்ணான நானாகவே இருக்கின்றன. எனவே களிமண்ணான நானே சத்யம்; பானைகள் வெறும் நாமரூபம், அதாவது மித்யா எனப்படும் தோற்றம் மட்டுமே. மீண்டும் அடுத்த சுலோகத்திலேயே கிருஷ்ணர் “அனைத்து உயிர்களும் என்னிடத்தில் இல்லை” என்ற இன்னொரு முரண்பட்ட வாக்கியத்தைக் கூறுகிறார். அதாவது உலகம் வெறும் தோற்றம் மட்டுமே. இருப்பதெல்லாம் பிரம்மம் மட்டும்தான் என்பதை இங்கு நிறுவுகிறார்.
பின்னர் பத்தாம் அத்தியாயமான விபூதி யோகத்தில் கிருஷ்ணர் சாதகனுடைய மனதை விரிவுபடுத்தும் விதமாக இந்தப் படைப்பு முழுவதிலும் இறைவனுடைய மகிமை வெளிப்படுவதைக் காணுமாறு பணிக்கிறார். இந்தப் படைப்பில் நாம் காணும் அழகு, அறிவு, பேராற்றல், ஒளி போன்ற உன்னதமான விஷயங்கள் அனைத்தும் இறைவனின் வெளிப்பாடுதான் என்கிறார். படைப்பில் எவையெல்லாம் சிறந்தவையாக இருக்கின்றதோ, அவையெல்லாம் நானே என்று குறிப்பிடுகிறார். “ஆதித்யர்களில் நான் விஷ்ணு, ஒளிர்பவைகளில் நான் சூரியன், வேதங்களில் நான் சாமவேதம், உணர்வுகளில் நான் மனம், மரங்களில் நான் அரசமரம், முனிவர்களில் நான் கபிலர்” என்று பட்டியலிட்டுக் கொண்டே வந்து இறுதியில், “எதுவெல்லாம் சிறப்புமிக்கதாகவும், மங்களகரமானதாகவும், பேராற்றல் கொண்டதாகவும் இருக்கிறதோ, அதையெல்லாம் எனது ஒளியின் ஒரு சிறு பகுதியிலிருந்து தோன்றியது என்று அறிந்துகொள்” என்று முடிக்கிறார்.
பதினோராவது அத்தியாயத்தில் அர்ஜூனனின் வேண்டுகோளுக்கு இணங்க கிருஷ்ணர் அவனுக்கு “திவ்ய சக்ஷு:” எனப்படும் தெய்வீகப் பார்வையை வழங்கி, தன்னுடைய விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டுகிறார். அர்ஜூனன் அதில் அண்ட சராசரங்கள் அனைத்தும், தேவர்கள், முனிவர்கள், அனைத்து உயிர்களும் ஒரே உடலில் அடங்கியிருப்பதை காண்கிறான்.அஞ்சத்தக்க மகா கால வடிவத்தைக் காண்கிறான்; அதில் போர்க்களத்தில் நிற்கும் வீரர்கள் அனைவரும் காலத்தின் வாயில் வீழ்ந்து அழிவதைக் காண்கிறான். விஸ்வரூப தரிசனம் என்பது இந்தப் படைப்பு முழுவதையும் இறைவனின் வடிவமாகவே காணுதலாகும். தெய்வீகப்பார்வை என்று இங்கு குறிப்பிடப்படுவது விருப்பு, வெறுப்பற்ற பார்வையைக் குறிக்கும். கர்மயோகியானவன் தன் விருப்பு வெறுப்பற்ற பார்வையினால் எப்போதும் இறைவனின் விஸ்வரூபத்தைப் பார்த்தபடியேதானிருக்கிறான் என்பது இதற்குப் பொருளாகும்.
பனிரெண்டாவது அத்தியாயமான பக்தியோகத்தில் அர்ஜூனன், “உருவ வழிபாடு செய்யும் பக்தர்களில் யாரைக் காட்டிலும், அருவமான பிரம்மத்தைத் தியானிப்பவர்கள் மேலானவர்களா?” என்று கேட்கிறான். இதற்கு பதிலாக கிருஷ்ணர் நான்கு விதமான பக்தர்களைப் பற்றிப்பேசுகிறார். ஆர்த்த பக்தன், அர்த்தார்த்தி பக்தன், ஜிக்ஞாசு பக்தன், மற்றும் ஞானி பக்தன். ஆர்த்த பக்தன் தனக்குப் பெரும் துன்பம் வரும்போது அது நீங்கவேண்டி இறைவனை வழிபடுபவன். அர்த்தார்த்தி சுகமும், செல்வமும் வேண்டி இறைவனை வழிபடுபவன். ஜிக்ஞாசு பக்தன், “இறைவன் யார்? இந்த உலகத்தின் உண்மை என்ன? நான் யார்?” என்ற தத்துவ உண்மையை அறிய முயல்பவன். ஞானி பக்தன் இறைவனும் நானும் வேறல்ல என்ற உண்மையை உணர்ந்தவன். கிருஷ்ணர் இந்த நான்கு பேருமே நல்வினை (சுக்ருதின:) புரிந்தவர்கள் என்கிறார். ஏனெனில் அவர்கள் வேறு யாரிடமும் செல்லாமல் இறைவனையே சரண்புகுந்திருக்கிறார்கள். “ஆனால் இவர்களில் ஞானியே எனக்குப் பிரியமானவன். ஏனெனில் அவனே என் ஆத்மா. நானே அவன்,” என்று கூறுகிறார்.
இறுதியாக இப்பகுதியில் கிருஷ்ணர் மெய்ஞானத்தை அடைந்த ஞானியின் இயல்புகளை விவரிக்கிறார். அத்வேஷ்டா சர்வபூதானாம் என்று துவங்கி, “எந்த உயிரையும் வெறுக்காதவன், அனைவரிடமும் நட்பும் கருணையும் கொண்டவன், ‘எனது’ என்ற பற்றும் ‘நான்’ என்ற அகங்காரமும் அற்றவன், இன்ப துன்பங்களைச் சமமாக நோக்குபவன், பொறுமையாளன். அவனே எனக்குப் பிரியமான பக்தன்,” என்று கூறுகிறார்.
மத்யம ஷட்கம் முழுவதும் கிருஷ்ணர், “இந்தப் படைப்பு முழுவதும் பிரம்மத்தின் தோற்றமே. உன்னுள் ஆத்மாவாக இருப்பதும், இந்தப் படைப்பில் மிளிர்வதும் ஒரே பிரம்மம்தான்” என்று கூறி உருவவழிபாட்டில் துவங்கும் பக்தி எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளே நான் என்ற அத்வைத ஞானத்தில் முடிக்கிறார். இவ்வாறு “தத்” எனப்படும் பரம்பொருளின் உண்மைத்தன்மையை விளக்கியதன் மூலம் அடுத்ததாக வரவிருக்கும் மூன்றாவது ஷட்கத்துக்கு அடித்தளம் அமைத்துத் தருகிறார்.
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
