றெக்கை –  அத்தியாயம் 25

This entry is part 25 of 27 in the series றெக்கை

உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன். மாயசண்டிகை இறந்துபட்டாளா! யெபுரு பூசாரி மணிகள் சதா சஞ்சலித்திருக்கும் கழியை பக்கத்தில் வைத்துவிட்டு என் எதிரே மண்டியிட்டு அமர்ந்தான்,

கண்ணை இறுக மூடிக்கொண்டு நங்னங்ஜஞ்ஜோந்கக் என்று பலமாக ஏதோ மொழியில் சத்தமிட்டான். நடுநடுவே தலையை ஆட்டி சரி சரி என்று எதையோ யாரிடமோ பேசி நிறுத்தினான்,

டாக்டர் எஜமானி, தெய்வத்திடம் பேசிவிட்டேன். அவர் இருக்கும் இடத்தில் நடுராத்திரியாம் இப்போது.கொசுக்கடியால் நித்திரை போகாமல் இருக்கிறதாம்.நீங்கள் இந்த நிகழ்வில் செய்யக் கூடியது ஏதுமில்லை,யெபுரு தெய்வம் நீங்கள் விரும்பினால்  கோழி பிரியாணி வாங்கி பூசாரிக்கு அதாவது எனக்கு நாளை பகலுக்கு முன் படைக்கலாம்.மாயசண்டிகை ஆவியாக வந்து தொந்தரவு படுத்தாமலிருக்க அதே பூசாரி மூலம் ஐந்து படி கோதுமை, இரண்டு படி தனியா, காடி, பேர் சொல்லக் கூடாத வஸ்து ரெண்டு படி இதெல்லாம் படைத்தால் மாயசண்டிகை சல்யம், இந்த வார்த்தை எங்கிருந்து என் புத்தியில் ஈஷிக்கொண்டதே தெரியவில்லை, சல்யம் எனில் தொந்தரவு இல்லாமல் போகும், 

பேசி முடித்ததும் கழியை வீசிக்கொண்டு வாசலுக்குப் போய் ஆட ஆரம்பித்தான்,

எனக்கு குழப்பமாக இருந்தது. மாயசண்டிகையின் குழந்தைகளை என்ன செய்ய? 

எதிர்பாராத வண்ணம் அல்பி உதவிக்கரம் நீட்டினான்,

போகட்டும் நிம்மி. நம்ம நிதி நிலைமை நல்லா தான் இருக்கு. ரெண்டு சின்னப் பசங்கள் சாப்பாடு, உடுப்பு, தங்க இடம் ஏற்படுத்தித் தர்றது ஒரு பிரச்சனையே இல்லை. லெவி இன்னைக்கோ நாளைக்கோ வந்துடுவான். அவனையும் கலந்துக்கலாம். இது தாற்காலிகமாக செய்ய வேண்டியது, ஒண்ணு ரெண்டு மாசம் போகட்டும், இந்த குழந்தைகளுக்கு விஞ்சயர் பூமியிலே அம்மா வழி யாராவது இல்லாம போகாது, , யெபுரு பூசாரி நங்னமன்கன்னு ஏதோ பேசி மாயசண்டிகை சொந்த பந்தம் யார்னு கண்டுபிடிச்சுடுவான், குழந்தைகளை அவங்க கிட்டே ஒப்படைச்சுடலாம்; 

சித்திரம் : ஷங்கரா

ஒத்துக்கொண்டு தலையாட்டினேன்.சொல்லி வைத்தாற்போல் அடுத்த நாளே லெவி லிஸ்பனில் இருந்து வந்து விட்டான்.அல்பி லிஸ்பனில் இருந்து வந்தபோது தளர்ந்து பலகீனமாக இருந்தான். அவனுக்கு நேர் எதிராக ஆரோக்கியமும் சந்தோஷமுமாக லெவி.

அவன் லிஸ்பனில் தங்கியிருந்தது அவனுடைய பேங்க் மூலம் முதலீடு செய்தது என்ன நிலையில் இருக்கிறது என்று சோதனை செய்யத்தான், அந்த பணத்தில் ஒரு பெரும் தொகை அல்பி பெர்லினில் இருந்து ஸ்பெயினில் மாட்ரிட்டுக்கு நானும் அவனும் வந்தபோது எடுத்து வந்து லெவியிடம் பத்திரமாக, பாதுகாப்பாக வைத்திருக்கத்தான்.

என்ன ஏதாவது தேறுமா? அல்பி இதுவும் கடந்து போகும் காலகட்டத்தில் மாட்டிக்கொண்டது போல் வருத்தத்தை பங்கு வைக்கத்தான்.

ஒளறாதே அல்பி, உன்னோட முதலீடு இப்போது எவ்வளவு ஆகியிருக்கு தெரியுமா?

சொன்னான், நாலு மடங்கு அதிகம் ஆகியிருக்கு. எல்லாம் அடிமை     வியாபாரம் மூலம்தான். அதே போல் பொதுவாக தலைவலிக்கு அலுப்பு மருந்து உற்பத்தி செய்யறதும் ஏகமா பெருகிடுத்து, எல்லாம் நிம்மி வந்த நேரம்.

நான் சமையல் அறைக்கு போகும்போது பின்னாலேயே வந்துவிட்டான் லெவி. விவஸ்தையே இல்லாமல் பின்னால் இருந்து இறுக அணைத்து காது மடலைக் கடித்தான்.விடு லெவி என்று நாலு தடவை வற்புறுத்தியாகி விட்டது, அவன் விடமாட்டேன் என்கிறது போல் என்னை திருப்பி அவனை பார்க்க வைத்தபடி உதடுகளை கவ்விக்கொண்டான். என் மார்பு நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த அவன் கைகள் லட்சியம் நிறைவேற இன்னும் உழைக்க வேண்டிய சுகமான நிர்பந்தம் இருபபதை உணர்ந்து சாரைப் பாம்பு போல் சத்தமின்றி ஊர்ந்தன.

இதில் ஒரு ரசம் உண்டு. அல்பி படுக்கை அறையில் அடுத்த நித்திரை போக ஆயத்தமாக புரண்டு கொண்டிருந்தான், லெவி சமையலறை தரையில் என்னைக் கிடத்தினான். நான் அவனை அணைத்துக்கொண்டேன், சமையலறை ஸ்டோர் ரூமில் முடிந்திருக்கும். அங்கே எதோ சத்தம்.நான் எழுந்து பார்க்க முத்தச்சி சமையலுக்கான ஆயத்தங்களில் மும்முரமானவளாக ஸ்டோர் ரூமில் கோதுமை மாவோ வேறு எதுவோ பெரிய பாத்திரத்தில் நிறைத்து சமையலறைக்குள் வந்தபோது என் கண்கள் முத்தச்சியின் தகிக்கும் விழிகளை சந்தித்தன,

தேவிடியாளே, டாக்டர் தொழில் செய்ய வந்துட்டு வேறே எதுவோ அனுபவப்படுத்திட்டிருக்கே. உன்னை புழுத்த பன்றி மருவட்டும்.

அவள் மனது என்னுடைய மனத்தோடு பேசியதைக் கேட்டேன்.

லெவி அயோக்கியன் என்னை எழுந்திருக்க விடாமல் மேலே இருந்து நற்காலை சொன்னான். அவன் பார்வையில் அடிமைகள் வரமாட்டார்கள்.

நான் சக்தி எல்லாம் திரட்டி அவனை விலக்கி வெளியே ஓடினேன், பின்னாலே அவனும். அவனிடமிருந்து கால்கள்  விலகி ஓட, மனம் அவனைப் போகவிடாதே என்றது,

குழந்தை சத்தம், லெவி திரும்பி பார்த்தான்,

நற்காலை சொன்னபடி விசியும்,கிட்டாவும் அவுட் ஹவுஸிலிருந்து வெளியே ஓடி வந்தார்கள். கிட்டா லெவி மீது மோதிக்கொண்டான். கால் தரையில் பாவாமல் கீழே விழப் போனான். லெவி அவனைத் தாங்கிக் கொண்டான். பிறந்த நாள் முதல் பழகி பரிச்சயமான அப்பனோ அம்மாவனோ போன்ற சகஜமான உறவினன் போல்  கிட்டா லெவியின் கைகளைப் பிடித்தபடி தட்டாமாலை சுற்றினான். விசி லெவியின் மிகைப்படுத்தப்பட்ட அன்பு ததும்பிடும் அணைப்பு வளையத்தில் கை கோர்த்து ஆடலானாள்.

பசங்களா, ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி, முத்தச்சன் கூப்பிட ஸீ யு அங்கிள் என்று சிட்டாகப் பறந்து போனார்கள் விசியும் கிட்டாவும். 

லெவி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நான் கேட்டதும் தாமரை மலர்ந்தது போல் அவன் முகம் மலர்ந்தது, விரல்கள் கொண்டு என் மாரிடத்தில் கோலம் போட, வா போகலாம் என்றான் அவசரமாக.

வீட்டுத் தோட்டத்தின் ஈசான மூலையில் காற்றும் சூரியனும் எட்டிப் பார்க்காத சிற்றறைக்கு என்னைக் கைபிடித்து அழைத்துப் போனான்  லெவி.

 அடுத்த பதினைந்து நிமிடம் மாயசண்டிகை மகாத்மியமாக எல்லாத் தகவலும் லெவியிடம் நான் சொன்னேன், அவனும் அல்பி மாதிரி இதெல்லாம் எக்காளப் பூ கைங்கர்யம்தான் என்று விஞ்சயர் பூமி, புஷ்பக விமானம், றெக்கை முளைத்த ஸ்திரிலோலன்கள் வகையறா சமாசாரங்களைப் புறம் தள்ளினான். அவன் சொன்னான் –

எல்லாம் இந்த கிழவனும் கிழவியும் செய்யற கருப்பு மாயாஜாலம். 

லஹரி மீதூர லெவி என்னை கையிடுக்கில் முகர்ந்தபடி கூறினான். முத்தச்சன், முத்தச்சி என்று நான் ஓஹோவென்று தலையில் ஏற்றிக் கொண்டாடுகிற கிழட்டு ஜோடி தான் ப்ளாக் மேஜிக் செய்து அந்த சண்டிப் பொம்பளையையும் அவளோட பசங்களையும் நானும் அல்பியும் இல்லாத நேரமாகப் பார்த்து இங்கே குடிவச்சு இருக்காங்க.

அப்போ  றெக்கை எப்படிவந்ததாம்? நான் புன்சிரித்து விசாரித்தேன்.

அக்குள்லே றெக்கை தானே. சிம்பிள். நீ உங்க கேரள-பூமியிலே பெண் தெய்வத்துக்கிட்ட ஏதாவது பெரியதாக நேர்ந்துக்கறது  அது வேண்டிய படி நடந்தா நாக்கிலே அலகு குத்தறது இதை விலாவாரியா வர்ணிக்கற புத்தகம் பெயர் மறந்துபோச்சு அதில் படத்தோடு வந்திருக்கே, ஞாபகம் வந்துடுத்து, Castes and tribes of Southern India by Edward Thurston

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

சின்னதாக கத்தி கடப்பன்னு நாக்கை குத்திக் கிழிச்சு மணிக் கணக்காக நேர்த்திக்கடன் கழிக்கறது இந்தியாவிலே பழக்கம் தானே. இங்கே வேலுக்கு பதிலா றெக்கை. மனசிலாயோ.

இல்லை என்றேன் அவன் கையைத் தட்டிவிட்டபடி. ஜிவ்வென்று றெக்கை இல்லாமலே பறக்கிறது போல அவன் குரல் மெஸ்மரைஸ் செய்தவண்ணம் ஒலித்தது,

நான் மனசே இல்லாமல் அந்த மாயத்திலிருந்து மீண்டேன், நான் அவன் சொல்வதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ரசிக்கிறேன் என்று போதம் ஏற்பட்டோ என்னமோ  டாக்டர் வெள்ளை கோட்டை மனதில் கழற்றி வக்கீலின் கருப்பு கோட்டை அணிந்து மேலும் சொன்னான் –

நிம்மி, எல்லாம் கடந்து போகட்டும். மார்க்கெட்டில் நாலு கோழி  முட்டை வாங்கி வரலாம் என்று புறப்பட்டுப் போய் ரெண்டு சிறுவர்களை வாங்கி வந்தோம் என்று நருவிசாக காரியம் நடக்க அடிமை சந்தை இருந்தது சில காலம் முன்பு வரை. இப்போது நமக்கு சொந்தமில்லாத குழந்தைகளை தத்து எடுத்துக்கலாம் என்ற யோசனை இருந்தால் அதை முதல்லே களை. நிம்மி ராஜாத்தி வாயைத் திறவேன்,உன் சிருங்காரமான தெற்றுப் பல்லை என் நாவு கொண்டு ஸ்பர்சிக்க வேணும்.

அவசரமாக வேணாம் என்று மனசே இல்லாமல் தலையசைத்தேன். லெவி அடுத்த ஈடு முத்தங்களோடு என்னை பலவந்தமாக மடியில் இருத்தி பின் கழுத்தில் தொடங்கினான்

வீட்டு உள்ளே கணவன் உறங்கிக் கிடக்க வீட்டுத் தோட்டத்தில் அவனுடைய ப்ரிய தோழன் அவனுடைய மனைவியோடு சிறுசொல் பரிமாறிக்கொண்டிருப்பது நியாயமா என்று உலகம் விசாரிக்குமேஇருந்தாலும் லெவி ஒரு வசீகரமான களவாணி,  அவன் மேல் இருக்கப்பட்ட கள்ளக் காதலன் என்ற வசைக்கு மாற்று படிவம் வரும்வரை இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்

காமாந்தகன் உடை களைய முற்படும் போது அறைக்கு வெளியே சத்தம்.

 நிம்மி, லெவி. இருக்கீங்களா?

கூடிய மட்டும் உடுப்பை சீராக்கிக்கொண்டு, இருக்கோம் என்றான் லெவி. காமம் மணத்த அறையில் நாசியை விடர்த்திக் கொண்டு ஏதோ வாடையை அது இருக்கிறதா என்று சோதிக்கும் ஆர்வம் அல்பிக்கு.

அப்படித்தான் என் கணவனை எனக்குத் தெரியாதா?

இதிலும் ஒரு ரசமுண்டு

புன்சிரித்தபடி லெவியின் தோளில் கை பற்றி மெல்ல நடந்தபடி சொன்னான் அல்பி.குழந்தைகளைப் பற்றி லெவி அல்பியிடமும் அட்சரம் பிசகாது கூறினான், மார்புக் காம்புகளை வருடாமல். 

குழந்தைகளை இன்னும் ரெண்டு வாரம் என் பாதுகாப்பில் வைத்திருக்க முடிவானது, அதற்குள் மாயசண்டிகையின் உற்றார் உறவினர் என்று யாராவது வந்துவிடலாம்.லெவியே  இன்ப அதிர்ச்சியோடு சுற்ற ஆரம்பித்தான். அது மந்திரித்த ஆடு போல் முகபாவம்.

 அடுத்த வாரத்தில் இருந்து கிளினிக்கில் நோயாளிகள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. ஸ்பெயின் ராணுவத்துக்கு மருத்துவ சேவை தர ஒப்பந்தமும் கையெழுத்தானது. எல்லாம் பசங்க வந்த நேரம் என்று நான் சொன்னபோது முத்தச்சி எனக்கு திருஷ்டி கழித்தாள்.குலவை வேறு. இது எல்லைப்புற சிறுநாடு ஆகிய வளநாடு தேசத்து குலவை என்றாள் கிழவி, வளநாடு பெயர் பரிச்சயமானது. தமிழ்ப் பெயர் போல தொனிப்பதால் அந்த நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

மறுபடி நாட்கள் பெரும் சம்பவங்களின்றி நகர்ந்தன.  ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து சக மாணவர்களோடு கொஞ்சம் படிப்பு கொஞ்சம் விளையாட்டு என்று விசி மும்முரமானாள். கிட்டா இரண்டு முழுநேர பேபிசிட்டர்களோடு அம்மாம் உண்டபடி ஆட்டம், பாட்டு  என்று அமர்க்களப்படுத்துகிறான், அந்தப் பெருசுகள் முத்தச்சா, முத்தச்சி என்று குழந்தைக் குரலில் கூப்பிட பாகாகக் கரைந்து போய் ஓடி வருகிறார்கள்.

மாயசண்டிகை வரவே இல்லை.             

தொடரும்

றெக்கை

றெக்கை –  அத்தியாயம் 24   றெக்கை –  அத்தியாயம் 26

Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.