றெக்கை – அத்தியாயம் 4

This entry is part 4 of 18 in the series றெக்கை

வெளியே மரத் தட்டில் பழங்களும், மா உருண்டைகளும், கூழாக வேகவைத்து மசித்த காய்கறியுமாக ஒரு நாற்பதுக்காரி நல்ல கருப்புப் பெண் நின்றிருந்தாள். வழக்கம்போல் கிட்டாவின் எட்டடி உயர உருவம் பார்த்ததும் ஏற்படும் திகைப்பு அவள் முகத்தில் தீர்க்கமாக எழுதியிருந்தது. 

சமாளித்துக் கொண்டு மத்திய வயசு நிதானம் மேலெழ புன்னகையோடு நிலைப்படி கடந்து உள்ளே வந்தாள். நிர்மலா அவளை வரவேற்றாள். 

 போன் ஷூர் மதாம். 

நிர்மலாவோடு பிரஞ்சில் வணக்கம் பரிமாறிக் கொண்டார்கள்.

விசி தீனிமேசைப் பக்கம் இருந்து ஒரு மர நாற்காலியையும் முக்காலியையும் மெல்ல இழுத்தபடி குளித்தபின் வரும் பரிசுத்த கந்தம் சிதற வந்தாள்.

 வந்தவள் கையில் வைத்திருந்த பலகாரத் தட்டை முக்காலி மேல் வைத்தாள்.

  விசி அந்த நாற்காலியை  அருகே இருத்தி, Asseyez-vous என்று வந்தவளை அமரச் சொன்னாள். அதற்குள் அம்மா அமர, இன்னொரு நாற்காலியை தூக்கி வந்து இருத்தினான் கிட்டா. 

நான் உங்க அடுத்தவீட்டுக் காரி. பெஞ்சின்னு பேரு. கொல்லர் சாமோட பெண்டாட்டி. நானும் அவனுக்கு உதவியா கருமான் வேலை   எல்லாம் செய்வேன். வீட்டுலே சும்மா உட்கார்ந்திருந்தா உறக்கம் வருது இல்லேன்னா  அக்கம்பக்கத்துலே யாரோடயாவது சண்டை வருது

நிர்மலா அவளோடு சேர்ந்து நகைத்தாள்.

தெய்வத்துக்கு நன்றி.   

 நிர்மலா கையை நீட்டி பெஞ்சியின் கரத்தைப் பற்றினாள்.  நிர்மலா.அருகே நின்ற விசி தலையைக் கொஞ்சம் முன்னால் குனிந்து ’உங்களை வரவேற்க  எங்க அம்மா கூட  நாங்களும் இருக்கோம். நான் விசி அங்கே வாசல்லே நிக்கறவன் என் தம்பி கிட்டா. 

பெஞ்சி எழுந்து உற்சாகமாக பதின்ம வயதில் அடியெடுத்து வைக்கும் அந்த இரண்டு சிறுவர்களோடும் கைகுலுக்கத் தன் கழுத்தை எக்கி  தலையுயரத்தி  நின்றாள். 

விசி என்ற விசாலி –கிட்டா கூறினான்.

 கிட்டா என்ற கிரிஷ் லெவி –    விசி சொன்னாள். 

பெஞ்சி எந்த முகபாவத்தை எப்படி வெளிப்படுத்துவாள்  என்று பார்க்க நிர்மலாவுக்கு ஆர்வம் மேலிட்டது. பெஞ்சி எந்த வித  முகபாவ மாறுதலும் இன்றி மகிழ்ச்சி குரலில் தெரிய கேட்டாள். 

மதாம் நீங்க டாக்டர் தானே? 

ஆமா என்று பொறுப்போடு பதில் சொன்னாள் நிர்மலா. 

உங்க வீட்டுக்காரரும் டாக்டர் தானா?   . 

பெஞ்சி உனக்கு என் சரித்திரமே தெரிஞ்சிருக்கு. புதுசா என்ன சொல்லப் போறேன், சரி அது இருக்கட்டும். தட்டு முழுதும் லட்டு இஷ்டம் போலே வெட்டுன்னு எங்க மொழியிலே சொல்வாங்க.வீட்டுலே என்ன விசேஷம்? பலகாரத் தட்டைப் பார்த்தபடி நிர்மலா கூறினாள்.

 ஏன் கேக்கறீங்க என் கூறு கெட்ட புருஷன் திடீர்னு சாவு வந்திட்டிருக்குன்னு நீட்டி நிமிர்ந்து படுத்துட்டான் நேத்திக்கு ராத்திரி சகஜமாகி ஒரு வாரம் நடந்ததை எல்லோருக்கும் கதை சொல்லற மாதிரி, முடிந்தால் பாட்டும் ஆட்டமுமா அதைக் கொண்டாடணும். கொண்டாடவில்லைன்னா  யெருபா தெய்வ குற்றமாகிடும். கூடவே அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் இன்னிக்கு மூணு வேளை நாளைக்கு பகல் மட்டும் சாப்பாடு எங்க செலவு. கஷ்டம். .

 அப்படி சிரமப்பட்டு வரும்னா எனக்கு உஙகள் தெய்வ பிரசாதம் எதுவும் வேண்டாம். வரட்டா? ஸ்கூல் ஹெட்மிஸ்ரஸை சந்திக்கப் போயிட்டிருக்கேன்

நிர்மலா அதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கிட்டா மரத் தட்டில் இருந்து  தேங்காய் வெண்ணெய் மினுமினுக்கும் இனிப்பை கிள்ளி வாயில் போட்டுக் கொண்டான். 

ஹெட்மிஸ்ட்ரஸுக்கு நான் இண்ட்ரொட்யூஸ் பண்ணி விடட்டுமா? பெஞ்சி கேட்டாள்.

அப்படியா, ரொம்ப நல்லதாப் போச்சு. பசங்களை ஸ்கூல்லே போடலேன்னா சும்மா வெளயாடி நேரத்தை வீணடிச்சுடுவாங்க. வாங்க பெஞ்சி இப்பவே ஸ்கூல் போய் பார்த்துட்டு வரலாம். 

இன்னிக்கு சனிக்கிழமை. ஸ்கூல் கிடையாது. திங்கள்கிழமை  போகலாம்.  பலகாரத்தை எல்லாம் சாப்பிட்டு முடிச்சாத்தான் கூட்டிப் போவேன். 

பெஞ்சி கண்டிப்பான ஹெட்மிஸ்ட்ரஸ் குரலை நகலெடுத்துச் சொன்னாள். 

தேங்க்ஸ் ஆண்ட்டி. சாக்லெட் நல்ல இனிப்பா இருக்கு. விசி, கொக்கோ வாசனை வருது ஆனா சாக்லேட் இல்லே. என்னவா இருக்கும்? 

விசாவிடம் விசாரித்துக் கொண்டு வாசலுக்கு நடந்தான். வாசல் தோட்டத்திலே பெரிசு பெரிசா பாட்டில் மாதிரி காய் விட்டிருக்கு என்று சந்தோஷமாக அறிவித்தான். 

அதுக்கு பெயரே பாட்டில்காட் தான் கிட்டா. 

தம்பியோடு அறிவு பகிரக் கிடைத்த சந்தர்பத்தை விசி பின்வலிக்கவில்லை என்பதில் திருப்தியா என அம்மாவைப் பார்வையில் கேட்டாள். நிர்மலா ஒரு குறும்சிரிப்போடு அதை ஆமோதித்து அந்த நிமிடத்தைக் கடந்தாள்.   

 விசி ஆப்ரிக்க ஸ்வீட் எடுத்துக்க. உனக்கு நிச்சயமா பிடிக்கும் என்று பெஞ்சி சொல்லி விட்டு நிமிர்வதற்குள் விசி வாசலுக்கு வெளியே தோட்டம் கடந்து கப்பி ரோட்டில் கிட்டாவோடு நடந்து கொண்டிருந்தாள். 

எப்படி ஒரே வினாடியில் அந்தத் தொலைவைக் கடந்தாள் அந்தச் சிறுமி என்று புரியாமல் நிர்மலாவைப் பார்த்தாள் பெஞ்சி. 

சரி நான் கிளம்பறேன். ஒரே நாள்லே சரித்திரம் பூகோளம் எல்லாம்  முழுக்க பரிமாறிக்க முடியாது நிர்மலா. உங்க செல்லப் பெயர் என்ன? 

சொன்னாள் நிர்மலா.  

ஆஹா, நிம்மி. சிக்குனு இருக்கு. அப்படியே கூப்பிடப் போறேன் இனிமேலே.. நிம்மியக்கா. சரியா? 

வாசல் நிலைக்கதவைப் பிடித்துக்கொண்டு நின்று  ‘நிம்மியக்கா ஒரு நிமிஷம்’ என்று அழைத்தாள். அவசரமாக ஆளோடிக்குள் நகர்ந்து நிர்மலா கையைப் பிடித்து தன் மார்பில் வைத்துக் கொண்டாள். 

நிர்மலாவின் மனசு இது வேணாம்டி  எங்கேயோ போயிடும்டி கர்மம் என்று சிநேகாம்பாள்  குரலில் ரகசியம் சொன்னது. சும்மா இரும்மா

அவள் கணவன் லெவி ஆட்காட்டி விரலைச் சுழற்றியபடி இதிலும் ஒரு ரசம் உண்டு என்று  நகர்ந்தான்.  

நிம்மியக்கா நீங்க இருக்கற அழகுக்கு ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்லத் தோணறது என்று நிர்மலாவின் கண்ணுக்குள் விழுங்குவது போல் தீர்க்கமாக நோக்கினாள் பெஞ்சி. 

ஜாக்கிரதைன்னா? நிர்மலா பார்வையைத் தாழ்த்தி மெதுவாகக் கேட்டாள். 

ஜாக்கிரதைன்னா இங்கே இருக்கற இளம் வயசு, மத்திய வயசு ஆண்களும் பெண்களும் உங்க சிநேகம் கிடைக்காதான்னு ஏங்கப் போறாங்க. நீங்க கையைப் பிடிச்சு பார்த்து உடம்புக்கு என்னன்னு விசாரிப்பீங்க ஒரு டாக்டராக. நீதான் வேணும்னு கையை விடாமல் அடம் பிடிக்கலாம். ஜாக்கிரதை. அதிலே முதல் ஆசாமி என் வீட்டுக்காரன் தான். என் தங்கச்சியை கணக்கு பண்ணிட்டு இருக்கான் இப்போ. அவகிட்டேயும் ஜாக்க்கிரதைன்னு தான் சொல்லியிருக்கேன் நிம்மி 

சொல்லி விட்டு நிர்மலாவை  இறுக அணைத்து உதட்டில் தீர்க்கமாக ஒரு முத்தமிட்டு வெளியே நடந்தாள். 

நிர்மலா கைக்கடியாரத்தில் மணி பார்த்தாள். பகல் பனிரெண்டு மணி. டிஸ்பென்சரி எடுத்து வைக்க ஏகதேசம் மூணு  மணி நேரம் பிடிக்கலாம். இன்றைக்கு இனிமேல் ஆரம்பித்தால் ராத்திரி ஆகிவிடும் வேலை முடிக்க. பசங்க வயற்றில் பசியோடு எவ்வளவு நேரம்  இதெல்லாம் செய்ய முடியும் என்று தெரியவில்லை. 

இன்னிக்கு வேணாம். விசியும் கிட்டாவும் எங்கே? தெருவிலே ஷூ போட்டுக்காம வெறுங்காலோட போயிருப்பாளோ. 

செருப்பு தேடி காலை நுழைத்துக்கொண்டு அவசரமாகத் தெருவில் இறங்கினாள்.   அவள் நினைத்தது சரிதான். ரெண்டு பசங்களையும் காணோம். 

சித்திரம் : சங்கரா

தன்னிச்சையாக விசி, கிட்டா என்று குரல் உயர்த்தி விளித்தபோது வயல் வரப்பில் நடந்தபடி சத்தம் போட்டுக் குரல் திரும்பி வரக் காத்திருப்பு ஒரு வினாடி நினைவுக்கு வந்தது. கனவில் வந்து காணாமல் அறுந்து போன பிள்ளைப் பிராயத்து நாட்களில் ஒன்று அது. 

கிட்டா,, விசி எங்கேடா இருக்கேள்?

வந்தாச்சு அம்மா. 

கிட்டா குரல் ஸ்பஷ்டமாக ஒலித்தது. விசி கூடச் சேர்ந்து சிரிப்பதும் மனதில் பால் வார்த்தது. நாலு திசையும் பார்த்தபடி கப்பி ரோட்டில் ஏறும் போது ஏதோ தோன்ற வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். 

கார் எங்கே போச்சு? 

கப்பி ரோடில் வேகம் கொண்டு கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்து  கொண்டிருந்தது. கிட்டா அதை ஓட்ட, பக்கத்தில் விசி எதிர்ப்படுகிற சகலரையும் பார்த்துக் கையாட்டிக் கொண்டிருந்தாள்.

காருக்கு வாயிருந்தால் ஜலஜலஜல என்று நட்டு, போல்ட், பலகை, அரைப் பீப்பாய் எல்லாம் அதிர சொல்லியிருக்கும் – ஏண்டா என்னை ஓடச் சொல்றே. நான் ஓடின காலம் முடிஞ்சு போச்சு. இனிமே ஸ்டீரிங்க் தனி, ப்ரேக் தனியா, இருக்கை தனின்னு உதிர்ந்து இல்லாமல் போயிடத்தான் ஆசை. 

அந்தக் கார் பிரத்யோகமானது. போர்ட் கம்பேனியார் ஐரோப்பாவிலே முதன்முதலாக அறிமுகப்படுத்தி ஒரே வருஷத்திலே  முன்னூறு கார் விற்க   இறக்கியது.

ஸ்பெயினில் மேட்ரிட் மாநகரில்  முன்கூட்டியே பணம் கட்டி விற்பனை ஆரம்பமானதும் முதல் காரை வாங்கிய டாக்டர் லெவி. நிர்மலாவின் கணவன். இந்த ஒரு வருஷத்தில் காரோடு நல்ல சினேகம் வளர்த்துக் கொண்டிருந்த மருத்துவன் டாக்டர் லெவி. வண்டிக்கு வலிக்காமல் ஹேண்டிலை பதனமில்லாமல் சுற்றித் துயிலுணர்த்தி ஓடத் தயாராக்குவதில் நிபுணத்துவம், மனுஷ மருத்துவத்தில் உள்ளது போல அவனுக்கு ஏற்பட்டது. 

நிர்மலா காரைக் கிளப்பினால் ஓடுவேனோ என்று அது   பானட்டை இறுக்கிக்கொண்டு ஏதோ கார் பாஷையில் அங்கலாய்க்கும். அந்த ஆரம்ப உதாசீனம் எல்லாம் தீர்ந்து நிர்மலா ஐரோப்பா கடந்து ஆப்பிரிக்கா வரப் பொறுமையோடு ஓடியது. இப்போது சின்னப் பிள்ளைகள் ஓட்டி ஏதாவது சேதம் உண்டானால்? பொருள் சேதம் உடல் சேதம். வேணாமாயிருந்தது. 

இனிமேல் காரை தொட்டேளோ ரெண்டு பேருக்கும் பிருஷ்டத்துலே பத்துபத்து  பிரம்படி கிடைக்கும், ஆமா சொல்லிட்டேன். 

நிர்மலா குரல் கண்டிப்பானதாக எழுந்து பிரம்படிக்கு வரும்போது கெக்கெகென்று சிரிப்பில் காணாமல் போனது. ஓய் ஓய் என்று கிட்டா காரில் திரும்ப ஏறிக் கூவ, சாவி இல்லாமல், எண்ணெய் சிதறாமல் கார் உயிர்த்தது. விசி அவன் அருகே அமர்ந்து, ஜோஜோ ஜோஜோ என்று இனிய தேவதைக் குரலில் தாலாட்ட, கப்பி ரோடு மறுபடி நிசப்தத்தில் அமிழ்ந்தது.

(தொடரும்)

றெக்கை

றெக்கை – அத்தியாயம் மூன்று றெக்கை– அத்தியாயம் 5

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “றெக்கை – அத்தியாயம் 4”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.