றெக்கை– அத்தியாயம் 7

This entry is part 7 of 18 in the series றெக்கை

டிஸ்பென்சரி எடுத்து வைக்க நிர்மலா நினைத்ததை விட அதிக நேரம் பிடித்தது.  பூர்ண சந்திரோதய தினம் நல்ல முயற்சிகளில் ஈடு[பட உசிதமானதில்லை என்று சொல்லிக் கேட்டது அவளது பிள்ளைப் பிராயத்தில்.. அது தேய்பிறைக் காலமாம். மதம் மாறி கிறிஸ்தியானி ஆன அவளது அப்பா கூட சோற்றுக்கடை  தொடங்கியது அமாவாசை அன்றுதான். நிறைந்த நாள். அது முப்பது வருடம் முந்தி நடந்தது. அதெல்லாம் இருக்கட்டும். இன்றைக்கு புதன்கிழமை. நாளும் கோளும் நம்பினோருக்கு அனுசரணையாக நிற்கும் தினம்.

 விடிய இன்னும்  நேரம் உண்டு.. குளித்து விட்டு வரலாம் என்று எழுந்தாள்.

ஊராட்சி நிர்வாகம் வலனாடு முழுக்க குழாயில் தண்ணீர் திறந்துவிட இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். அதுவரை சும்மா கையைக் கட்டிக்கொண்டு இருந்தாகணுமா? 

வாசலில் மனதுக்கு இதமான பெண்குரல்களும் சிரிப்பொலியும்.இன்றைக்கு நல்ல நாள் என்று நிர்மலாவின் மனம் சொன்னது. வாசலுக்கு வந்தாள். 

மூன்று பெண்கள், 

நிர்மலா பசங்களோடு வலனாடு வந்தபோது எதிர்ப்பட்டவர்கள். இப்போதும் தலையிலும் இடுப்பிலும் தண்ணீர்க் குடங்களோடு நிற்கிறார்கள்.

போசி டக்டரம்மா 

துறுதுறுவென்று அழகான கண்கள் அசைய,மூன்று பெண்களில் குட்டச்சி வாழ்த்தினாள். சுப்ரபாதம் என்று நிர்மலா முகத்தில் சிரிப்பு பொங்கச் சொன்னாள்.மூணு பேரும் ஒரே நேரத்தில் நிர்மலா சொன்னதை பிரதியெடுக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மீண்டும் சிரிப்பு.

உள்ளே வாங்கடி அம்மாடி, 

நிர்மலா வாசல் கதவை விரியத் திறந்து வைத்து அவர்களை உள்ளே அழைத்தாள். 

இல்லே அம்மாடி வீட்டுவேலை குவிஞ்சு  கிடக்கு. பசங்க எழுந்திரிச்சா  உடம்பு கழுவி நிஜார் மாற்றி ஸூல்லே கொண்டு விடணும். அதுக்கு முந்தி பசியாற வைக்கணும், இது ஆம்பளை பசங்களுக்கு மட்டும்.

நெட்டச்சி நிறுத்த, சொல்லி வைத்த மாதிரி சிரித்தார்கள்.மூன்று பேரும் குடத்தை தோட்டத்தில் இறக்கி விட்டு ஈரக்கையை இடுப்பில் துடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள். டாக்டரம்மா, மூத்த சகோதரி போன்ற வாஞ்சையும் இடத்துக்கு  ஏற்றாற்போல் பேச்சும் சிரிப்புமாக அவர்களோடு சமமாக இறங்கி வந்து கலந்து பழகுகிற பண்பும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. 

அது ஏன் ஆம்பளைப் பசங்களுக்கு மட்டும் இந்த சிஷ்ருசை? 

 ஆம்பளை பசங்கன்னா படிச்சுட்டு டவுனுக்கு போய் வேலை      செஞ்சு குடும்பத்த காப்பாத்துவாங்க, பொம்பளைன்னா என்ன செய்யலாம்?  வீடு சுத்தம் பண்ண,  ஆடு மேய்க்க, தண்ணி தூக்கி வர, சமையல் பண்ணன்னு தான் சின்னச்சின்னதா வேலை இருக்கு 

குட்டச்சி இடுப்பில் கை வைத்தபடி குறுகுறுவென்று நோக்கிக்கொண்டு கேட்டாள்.

அப்புறம் வரேன் யக்கா சூலுக்கு போகணும்

அவள் தோழிகளைப் பார்க்க, போகலாம் என்று அவர்கள் பார்வையால் சொன்னார்கள். 

நிர்மலா உ:ள்ளிருந்து  பெரிய பொதியாக, எடுத்து வந்தாள்’.

அம்மாடி இது மாட்ரிட் பட்டணத்திலே வாங்கியது. பேஸ்ட்ரி நெறைய சீனி சக்கரை, கோழிமுட்டை., எருமைப்பால் ஊற்றி செஞ்சது

எதுக்கு யக்கா, உங்க பசங்களுக்கு வாங்கி வச்சதா இருக்கும். பாவம் சின்னப் பசங்க. ஊரு விட்டு ஊரு வந்து உங்களோட கூட அல்லல் பட்டுக் கிடக்கும்.

அப்படி நான் சொன்னேனா?

இல்லே யக்கா வந்து

வந்தும் இல்லே  போயுமில்ல, இது உங்க பசங்களுக்கு. பொம்பளை பசங்களுக்கு.

பொதியை கைமாற்றிக்கொண்டு நிர்மலா சொன்னாள்.  

அடுத்த வீட்டில் இருந்து சத்தம். கொல்லன் சாமுவுக்கு மறுபடி சாவின் அழைப்பு கிடைத்திருக்கிறதா? அல்லது மச்சினி    மேல் கை வைத்து விட்டானா?

சாமு மனைவி ஏற்கனவே சொல்லப்பட்ட பெஞ்சி அவனோடு சச்சரவு செய்வதை நிறுத்தாமல் நிர்மலா வீட்டில் வேகமாக நுழைந்து வந்து கொண்டிருந்தாள். 

நீ கொல்லு பட்டறையை திறந்து இன்னியோட பத்து நாளாச்சு. இப்படியே போனா  துருத்தியை  கூட மறந்துடுவே

அந்த மூன்று பெண்களும் ஒருத்தரை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். 

நிம்மி போகலாமா? பெஞ்சி கேட்டாள்.

அவள் கேட்டது நிர்மலாவை என்றாலும் முறைத்தது அந்த மூன்று பேர் குழுவை. 

வலனாடு எல்லைக்கு வெளியே இருக்கப் பட்டவங்க இல்லே? இங்கே என்ன வேலை உங்களுக்கு

பெஞ்சி குரலில் கண்டிப்பு  ஏறியிருந்தது.

நிர்மலா அவளை நிறுத்தச் சொன்னாள்.

அவங்களை நான் தான் அழைதேன்

அந்த மூன்று பெண்களுக்கும் மவுனம் அணி செய்யப் புறப்பட்டு போனார்கள். நிர்மலா அவர்களுக்கு கொடுத்த கேக் பொதியை தீனி மேசை மேலே விட்டுப் போனார்கள். 

எதுக்கு பெஞ்சி அவங்களை

நிர்மலா வார்த்தை கிடைக்காமல் சிரமப்பட்டாள். ஆலப்பாட்டு வயசர் தாத்தா ஏதோ ஜன்மத்தில் நிர்மலாவுக்கும் சாரதா அக்கச்சிக்கும் பெப்பர்மிண்ட் முட்டாயி வாங்கி வந்தது நிர்மலாவுக்கு நினைவு வந்தது.  விருத்தர் பாவப்பட்டவர். அவர்களுக்கு மிட்டாய் வாங்கி வர இடுப்பில் நாலு சக்கரம்   முடிந்து வைத்திருந்தாராம். அவர் பறக்க ஆரம்பித்ததும் இடுப்பில் இறுக்கிக் கட்டியிருந்த அங்கவஸ்திரம் நெகிழ்ந்து நாலு சக்கரம் காசும் தரையில் விழுந்து விட்டதாம். 

பசு மாடு காணாமல் போன யாரோ திரும்ப வருமா என்று ஆலப்பாட்டு வயசனை ஜோசியம் கேட்க வந்தார்கள். கண்டிப்பாக வரும் என்று சோழி  உருட்டிப் பார்த்து நல்ல செய்தி சொன்னார் வயசர்.  அந்தக் கன்று கூடவே ஒரு காட்டுப் பசுவின் ஆண் வாரிசோடு வந்து சேர்ந்ததாம். ஜோசியம் கேட்க வந்தவர்கள் அதீத உற்காசத்தோடு வழக்கமான காணிக்கையான நான்கு சக்கரத்துக்கு மாறாக ஒரு ரூபாய் இங்க்லீஷ் பணம் கொடுத்தார்களாம். 

பேத்திகளுக்கு செலவழிக்க உத்தேசித்திருந்த உபரி காசுக்கு புது வரவான சாக்லெட் வாங்கிப்போய் அதுகளுக்கு கொடுத்தாராம். சாக்லெட்டை எப்படி தின்பது என்று புரியாத நிர்மலா, சாரதா அக்கச்சி  என்ன பண்ணுகிறாள் என்று அவளைப் பார்த்தாள்., அக்கச்சி சாக்லெட்டை உறையோடு விழுங்குவதா உறையை துப்புவதா என்று வயசனிடம் கேட்க   அவா அவா சௌகர்யம் போல செய்யூ குஞ்ஞே என்று வழி காட்டினாராம்.

அம்மா வந்துண்டிருக்கா என்று சாரதா அக்கா கை வீசி அவசரப்படுத்தினாள்.

முழுங்குடி, 

நிர்மலாவும் அவசரமாக விழுங்கி வைக்க அக்கா தங்கை ரெண்டு பேரும் தொண்டையில் சிக்கிய ஆரஞ்சு சாக்லெட் துண்டங்களோடு பேச முடியாமல் போனது.  

சம்பவம் இங்கே முடியவில்லை. சகோதரிகளின் அம்மா நாகலட்சுமி   அம்மாள், கலபில இரைச்சல் இன்றி வீடு கிடந்தது கண்டு சந்தேகப்பட்டு வாசலுக்கு போக அங்கே தாத்தாவும் பேத்திகளும் வகையாக மாட்டிக் கொண்டார்களாம். கதை இன்னும் இருக்கு.. 

வயசர் ஏகத்துக்கு குழம்பி பறக்க உத்தேசித்தபோது அவர் மடியை பிடித்து நாகலட்சுமி இழுக்க கீழே விழுந்த இன்னும் ஒரு சாக்லெட். அதை உடனடியாக பறிமுதல் செய்தாள் சினேகா என்ற நாகலட்சுமி. தன் தந்தையாரான ஆலப்பாட்டு வயசர் இத்தனை வயசுக்கு மேல் சாக்லெட் தின்பதைக் கடுமையாக விமர்சித்தாள். வயசுக்கு தொகுந்தபடி இருக்கப் பாரும் என்று அறிவுரைத்தபடி அவள் கைப்பற்றி இருந்த சாக்லெட்டை சுவாதீனமாக வாயில் போட்டுக் ’கொண்டாள்.

  குழந்தைகளுக்கு தலா ஒரு அடி முதுகில் வைத்து சாக்லெட்டை உறை பிரித்து இப்படி தின்ன வேணுமென்று சொல்லிப் போனாள் அவள்.. 

இதெல்லாம் நிர்மலாவின் கனவிலும் மறக்க முடியாமல் அடிக்கடி வரும். நிர்மலா நினைக்க ஆரம்பித்தது சுருள் பிரிந்து கொண்டே போனது.

என்ன நிம்மி சிரிக்கறே. என் டிரஸ்ஸா? 

பெஞ்சி குரல் நிர்மலாவை நிகழ்காலத்துக்கு இழுத்தது.பெஞ்சியை கவனித்து பார்த்தாள் அவள்.

 பெஞ்சி இடுப்பில் இறுக்கமான  கால்சராயும் மேலே ஆம்பிளைகள்போல மேல்சட்டையுமாக இருந்தாள். நல்லா இருக்கா என் ட்ரெஸ் நிம்மி என்று கேட்டபடி வாசலைப் பார்த்து விட்டு யாரும் வரலை என்று உறுதிப் படுத்திக் கொண்டு சட்டென்று திரும்பி நிர்மலாவின் உதடுகளை விரல் கொண்டு வருடிக் கடித்து தீர்க்கமாக முத்தமிட்டாள். 

சித்திரம் ஷங்கரா

நிர்மலாவுக்கு மனசு சொன்னது இது தப்பு என்று. உடம்பு இன்னும் கேட்டது. விலகி நின்று பெஞ்சியை கண்டிக்கும் பார்வையோடு அவளிடம் வேண்டாம் என்று தடுப்பதற்குள் தொண்டையில் ஆரஞ்சு மிட்டாய், 

நிம்மி சாரி இத்தனை அருமையான உதடு யாருக்கும் இங்கே இல்லே. என்னை மந்திரம் போட்டு உன் உதட்டை வச்சு இழுக்கறே. நான் என்ன பண்ணணும் சொல்லு. 

வந்த காரணம்  என்ன சொல்லு

சொல்றேன் சொன்னதும் உனக்கு ரொம்ப பிடிக்கும். 

சொல்லேன். தடிச்சி சொல்லித் தொலைடீ. 

நாம் இப்போ ஸ்கூலுக்கு போறோம். ஹெட் டீச்சரம்மா வச்சலா பிள்ளையை சந்திக்க, வாவா. மீதி எல்லாம் கிடக்கட்டும். 

அஞ்சே நிமிடத்தில்   உடை உடுத்தி காலில் ஷூ அணிந்து ஸ்கூலுக்குக் கிளம்பினாள். 

அவங்க? 

பெஞ்சி படுக்கை அறைப் பக்கம் விரல் சுண்டினாள். 

பசங்க ரெண்டு பேரும் சாப்பிட தீனி மேசை மேல் ஆகாரம் இருக்கு. வாழைப் பழமும் ஆப்பிளும் பழக் கூடையில் உண்டு.. சாப்பிட்டு சமர்த்தாக இருந்தால் அம்மா வரும்போது பசங்களுக்கு ஏதாவது வாங்கி வருவது குடும்ப வழக்கம். ஸ்பெய்ன் தலைநகர் மேட்ரிட்டிலும் இன்னும் கொஞ்சம் கிழக்கே வந்து மெல்லிஸியிலும் வசிந்த காலத்திலும் ரொம்பப்  பழகிய  நடைமுறை, போகலாமா?

 நிர்மலா கேட்டாள் 

நடந்து போயிடலாம் தானே. 

நடந்தா,? பெஞ்சி கேட்டாள். .

வெறும்  நிம்மி இருக்கா டாக்டர் நிம்மி எங்கே ? நிர்மலாவின் நாசியை திருகிக்கொண்டு கேட்டாள்.

டாக்டர் என்றால் கார்பனேட் மிக்சர் பாட்டில் கையிலே தூக்கிண்டு வரணுமா?

ஒன்றும் பேசாமாமல் உள்ளே போனாள்..வெளியே வந்தபோது அவள் டாக்டர் நிர்மலா ஆகியிருந்தாள்.. வெள்ளை ஓவர்கோட் அவளது தோளில் ஏறியிருந்தது.

 பெஞ்சி நிர்மலாவை தலையில் இருந்து கால் வரை நோக்கினாள். மகாத்ருப்தி என்றபடி   முன்னால் நடந்தாள்.   

 ஹெட்மிஸ்ட்ரஸ் பிள்ள எப்படி இருப்பா? 

நிர்மலாவுக்கு   ஏற்கனவே    பழக்கமான ஏழெட்டு ஸ்திரிகள் ஒவ்வொருத்தராக உட்கண்ணில்  தெரியலானார்கள். சின்ன வயசில் நிர்மலாவுக்கு சங்கீதம் பரிசயப்படுத்திய தெலுங்கு மாமி  எல்லாருக்கும் மேலே வந்தாள. பாடுடி குட்டி  லம்போதர லகுமிகரா அம்பாசுத அகடவிகட.

 வாயைத் திறக்காமல் முணுமுணுப்பாக பாடியபடி கார்க்கதவைத் திறக்க பின் சீட்டீல் இருந்து சிரிப்பு   சத்தம். 

அம்மா குட் மாரினிங். நாங்களும் வரோம். நாங்க தானே  அங்கே படிக்கப்  போறது. 

விசி நீ தலை குளிச்சியோ. மகளைக் கேட்டாள் நிர்மலா. ஆச்சும்மா.

 சீட் மேல் வைத்திருந்த க்ராங்  ஹேண்டிலை எடுத்துத் தரச் சொன்னாள் கிட்டாவை. அவன் கரகரவென்று அதிரும் ஹேண்டில் சத்தத்தை பிரதி செய்தான். ஒரு வழியாக கார் புறப்பட்டது. 

அம்மா, ஹேண்டில்லே ஏதோ பழுது இருக்கு. 

ஆமா, நானும் கவனிச்சேன் என்றாள் நிர்மலா

பெஞ்சி சொன்னாள் –

நான் எங்க வீட்டுக்காரன் கிட்டே சொல்றேன்  புதுசா ஒரு ஹேண்டில் செஞ்சு தரச் சொல்லி. நானே செஞ்சுடுவேன். எனக்கும் ஒண்ணு புதுசா வேணும். 

 சட்டென்று வெடிச் சிரிப்ப்பை உதிர்த்தாள்.  

‘பெஞ்சி நீ செத்த சும்மா வர்றியா? கார் ஓட்ட மிடியலே 

பள்ளிக்கூடம் வந்து விட்டது.  எளிமையன ஸ்கூல் கட்டிடம். சுத்தமாகவும் பராமரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. 

ஏதோ குறைகிறது என்று தோன்றியது நிர்மலாவுக்கு, என்னவாக்கும்?

வணக்கம் வாங்க.

 வாஞ்சையோடு வரவேற்ற  பெண்மணி தன் பெயரைச் சொன்னாள் –அங்கமாலி வல்சலா பிள்ளை.

மலையாளம் தெரியுமா?

நிர்மலா சந்தோஷமாக அவளைக் கேட்டாள்.

கொறச்சொக்கெ அறியாம் . பத்து வருடமாக இங்கே அசிஸ்டெண்ட் ஹெட் மாஸ்டராம். இப்போ ஆக்டிங் ஹெச் எம்மாம்.   ஹப்பி ஹாப்ப்யா அடுத்த ஊர் தஜமாவில் ஸ்கூல் வாத்தியாராக்கும், நீங்களும் டீச்சர் தானே?

நிர்மலா நான் டாக்டர் என்றாள். 

அடடா நீங்க யார்னு தெரியாம ஏதேதோ பேசிட்டிருக்கேன். உக்காருங்க உக்காருங்க. 

சொல்லியபடி தான் அமர்ந்திருந்த நாற்காலியை நிர்மலாவுக்கு ஒழித்துக் கொடுத்து விட்டு பிள்ளை டீச்சர் மேஜை நுனியில் உட்கார்ந்தாள்

விழுந்துடப் போறிங்க டீச்சர் என்று பிஞ்சி வீறிட்டாள். பிள்ளை மிஸ் விழுந்துதான் விட்டாள். அவரது மூக்குக்கண்ணாடி நாலடி தள்ளி தரையில் விழுந்தது. பெஞ்சி பிள்ளை டீச்சரையும், நிர்மலா அவரது கண்ணாடியையும்  எடுத்தார்கள்.  

வாசலில் உயர்ந்த  சிறுவர்கள்  இருவர் நின்றிருந்தார்கள். நிர்மலாவை நோக்கி மாம் ஷெல் வி கொ என்று கேட்டான் கிட்டா

.நிர்மலா அக்கா பசங்களை ஸ்கூல்லே     போட வந்திருக்காங்க. 

பெஞ்சி சடசடவென்று பேச்சுக்குள் வந்து விட்டாள்

எஸ்   டாக்டர் நான் செய்ய வேண்டியது என்ன? 

பிள்ளை மிஸ் கேட்டாள்.. நிர்மலா நிதானமாக இன்னொரு தடவை சொன்னாள். 

எஸ் எஸ் எஸ் அதைத்தான்  கேட்கறேன்.இந்த குழந்தைகளா படிக்கணும்?

வாசல் பக்கம் விரல் சுட்டினாள் பிள்ளை மிஸ். 

ஏது கிளாஸ்?

பையன் அஞ்சாம் கிளாஸ்,. பொண்ணு எட்டாம் கிளாஸ்

அதுக்கு முந்திய க்ளாஸ் பாஸ் பண்ணிருக்காங்கன்னு ட்ரான்ஸ்பர் செர்டிஃபிகேட்

 நிர்மலா உக்காந்து தேடுங்க 

பென்சி தரையில் சம்மணமிட்டு அமர்ந்தபடி சொன்னாள். இரண்டு பசங்களுக்கும் செர்ட்டிபிகேட் கைப்பையில் இருந்து எடுத்து பிள்ளை டீச்சரிடம் கொடுத்தாள் நிர்மலா. அவள் கண்ணை இடுக்கிக்கொண்டு படித்து, ஒற்றைப் பார்வையில் அனைவரையும்  நோக்கிக் கருத்து சொன்னாள் – 

ஸ்பானிஷ் மொழியில் இருந்தா இங்கே யாருக்கு புரியும்? 

பெஞ்சி பிள்ளை டீச்சரிடம் அருகில்  போய் சொல்ல   வேண்டியிருந்தது..டீச்சர்   அவளை இழுத்து நிற்க வைத்தாள். 

 ஏன் டீச்சரே, அதுக்காக இங்க்லாந்து நாட்டுக்கு போய் ரெண்டு வருஷம் படிச்சுட்டு இங்க்லீஷ் சான்றிதழை வாங்கிட்டு வரணுமா?

நிம்ர்லாவுக்கு உள்ளூர சந்தோஷம். பெஞ்சி  அவள் கேட்க நினைத்தை, ஆனால் டாக்டர்    என்ற உயர்ந்த ஸ்தானம்  கருதி பேச முடியாது. 

சரி ஏத்துக்கிட்டாலும்  எங்கே உக்கார்த்தறது? 

ஏன் டீச்சர் மத்த பசங்க மாதிரித்தானே இவங்களும்?

 மத்தவங்க தரையிலே நான் உக்காந்த மாதிரி உட்காரணும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம். முடியுமா? 

சட்டென்று கிட்டா தரையில் உட்கார்ந்தான்.   கூடவே விசியும்.

இது எனக்கு பிடிச்சிருக்கு.

ஏழு மணி நேரம்  எட்டு இல்லை 

பிள்ளை டீச்சர் முழங்கினாள். 

 அது என்ன ஸ்கூல் ஃபீஸ் டிஸ்கவுண்டோ?

அதுவா, எல்லா  இங்கிலிஷ் கிளாஸும் பெஞ்ச் போட்டுத்தான்.

அது என்ன அப்படி?

நாம் பேசற பாஷை எல்லாம் சீக்கிரம் அழிஞ்சு போயிடும். இங்கிலீஷ் மட்டும்  கால காலத்துக்கும் சீவிக்கப் போறது . அதுக்கு மரியாதை செய்யத்தான்.

  கெச்சலாக நாலறை அடி மிச்சத்தில்   உயர்ந்த பிள்ளை பிரகடனம் செய்தாள்.

நாளையிலே இருந்து பசங்க இங்கே படிக்க ஆரம்பிக்கட்டும். No magic during school hours. No teleporting. No levitating. No monkey business.

 வந்த மகிழ்ச்சியில் பெஞ்சி  நிர்மலாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். . அவசரமாக விலக்கினாள்.நிர்மலா.

திரும்பும்போது திறந்திருந்த வகுப்பறையில் மெல்லப் பறந்து நுழைந்து ஒரு  சுற்று சுற்றி வந்தார்கள் விசியும் கிட்டாவும். 

ரொம்ப  உஷ்ணமா இருக்கு அம்மா. – கிட்டா பெரிய மனுஷன் போல் தோளை குலுக்கிக்கொண்டான். 

அப்ப நீங்க பள்ளிக்கூடம்  போக வேண்டாம். நானே வீட்டில் உங்களுக்கு   சிலபஸ் மட்டும் வாங்கி அதும்படி தினம் பாடம் எடுக்கப் போறேன்..தினம் எட்டு மணி நேரம்  இல்ல… பனிரெண்டு மணி நேரம். வீடுங்கிறதால் நோ ஹாலிடே 

நாங்க ஸ்கூலே போய்க்கறோம்.

 சொல்லிவிட்டு நிம்மதி பார்வையில் தெரிய காணாமல் போனர்கள்.

வீட்டுக்கு போயிட்டாங்க  என்றாள் நிர்மலா. 

 மேலே படிந்த கரங்களை விலக்கி   காரை செலுத்திக்கொண்டிருந்தாள்.                                                                                                                  

 நிம்மி கேட்டா கோபிச்சுக்க மாட்டியே

நிர்மலாவின் அருகே மிக அருகே நெருங்கி உட்கார்ந்து கேட்டாள் –பசங்க கர்ப்ப காலத்திலேயே இந்த மந்திரவாதம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தாங்களா?  ஏன் கேக்கறேன்னா, வலநாடுலே கருவிலே இருக்கறது ஆண் பிள்ளைன்னா தினம் ஒரு மணி நேரம் கர்ப்ப ஸ்திரியை உட்கார வச்சு சுற்றி நின்னு வரிசையா இங்க்லீஷ் பாட்டு  பாடி ஆடுவாங்க, டிங் டாங் பெல், மேரி ஹேட் அ லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் .. 

 ஆடாதேடி நாசமாப் போனவளே. கர்ப்பத்தில் அம்மா கருப்பையில்  இருக்கும்போதே எல்லாம்   கற்றுக் கொள்ள இதிகாசத்திலே தான் முடியும்; அது மேஜிக் இல்லை ஃபிசிக்ஸ் 

நிர்மலா சொல்லி வந்ததை அவசரமாக நிறுத்தினாள். தாறுமாறாக ஓடிய கார் ஊருணி கரை ஏற முடியாமல் கீழேயே சுற்றிக்கொண்டிருந்தது.. 

திடீரென்று யாரோ  தலையில்   வாழைக் குலையோடு குறுக்கே வந்தார்கள். 

இதென்ன மாதிரி மனுஷன்? நிர்மலா அதிர்ச்சியடைந்தாதள். அவர் அவன் உடம்பு தசைகள் இறுகியதால் அங்காங்கே தோலில் சுருக்கத்தோடு இருந்தான். சராசரிக்கு அரையடி உயரம் அதிகம். கண்கள் பாதி மூடியிருந்தன. அரைத் தூக்கத்தில் நடக்கிறான். சோம்நாம்ப்லிஸ்ட். அச்சு அசல் ஒரிஜினல் வெள்ளக்காரன். 

ஹலோ சார்.

நிர்மலா அவசரமாக கப்பி  ரோடுக்கு நடுவே நடந்து போகும் மனுஷனை     அழைத்தாள். அவன் காதில் கேட்டதாகத் தெரியவில்லை. 

நிம்மி ஸோம்பி ஜடம் அது. புது பணக்காரன் டேவ் வாங்கி இருக்கான்.

வெளயாடறியா? வெள்ளைகாரனுக்குத் தான் தோட்ட வேலை, கடையிலே வேலை, வீட்டு குசினியிலெ சமையல் வேலை,, படுக்கை அறையிலே     உல்லாச காரியம்னு செய்ய அந்தக் காலத்திலே, அதாவது ஐம்பது வருஷம் முந்தி ஆள் வேண்டியிருந்தது பிடிச்சு வந்த நல்ல கருப்பன், நல்ல கருத்தம்மா  ஒருத்தரை விடாமல்   அடிமைச் சூடு போட்டு அடிமை சந்தையிலே கூவிக்கூவி விற்பாங்க.

வாஸ்தவம் தான். பென்சி தலையாட்டினாள். .

வெள்ளைக்கார அடிமை, கருப்பு எஜமான் எப்படி சாத்தியம்? 

ஏய்ய்ய் ய்ய், 

எதிரே நிறைகுடத்தோடு நிர்மலாவுக்கு வெகுவாக பிடித்துப் போன மூன்று பெண்கள். 

நாளைக்கு வரோம் நல்லா இருடி அக்கச்சி என்றபடி கொஞ்சம் குடத்து நீரை  விட்டெறிந்தார்கள்

நிர்மலாவுக்கு மட்டும் வாழ்த்து சொல்லிக் கடந்து போனார்கள் 

ஸோம்பி. அதுவா வேறே எதுவுமா? இது என்ன மாதிரி மனுஷ உருவென்று யோசித்த படியே காரை மெதுவாக ஓட்டிப் போனாள் நிர்மலா.                                                         

றெக்கை

றெக்கை– அத்தியாயம் 6 றெக்கை– அத்தியாயம் 8

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.