- றெக்கை – அத்தியாயம் 1
- றெக்கை – அத்தியாயம் 2
- றெக்கை – அத்தியாயம் மூன்று
- றெக்கை – அத்தியாயம் 4
- றெக்கை– அத்தியாயம் 5
- றெக்கை– அத்தியாயம் 6
- றெக்கை– அத்தியாயம் 7
- றெக்கை– அத்தியாயம் 8
- றெக்கை– அத்தியாயம் 9
- றெக்கை அத்தியாயம் பத்து
- றெக்கை– அத்தியாயம் 11
- நாவல் றெக்கை– அத்தியாயம் 12
- றெக்கை – அத்தியாயம் 13
- றெக்கை – அத்தியாயம் 15
- றெக்கை அத்தியாயம் 16
- றெக்கை அத்தியாயம் 14
- றெக்கை – அத்தியாயம் 17
- றெக்கை – அத்தியாயம் 18

கப்பி மேவிய சீரான பாதை தேய்ந்து குண்டும் குழியுமாக விரிந்த பெருவழியில் கார் வந்துகொண்டிருந்தது. சாயங்கால வெய்யில் மஞ்சள் பூச, எழுந்து பறந்த தூசியைச் சுமந்து வந்தது அது.
இளமை விடைபெறத் தயங்கும் சரீரம் களைத்துத் தளர்ந்திருக்க கார் ஓட்டி வந்த பெண் கருப்பர் இன அல்லது இந்திய ஸ்த்ரீயாக இருக்கலாம்.
காரின் மெழுகுசீலைக் கூரை திறக்கப்பட்டுப் பின்வரிசை இருப்பில் ஒரு சிறுவனும் சிறுமியும்.
ஐரோப்பிய ஆப்பிரிக்க சாயல் கலப்பில் இருந்த அவர்கள் சத்தம் எழுப்பாமல் தங்களுக்குள் ஏதோ பேசியபடி வந்தார்கள். இருவரும் நல்ல உயரம். பையன் எட்டு அடிக்கு மேல். சிறுமி அவனைவிட ஒரு அங்குலம் கம்மி. பார்க்கிறவர்களுக்கு வியப்பு ஏற்பட, ஒரு வினாடி பயப்பட வைக்கும் உயரம். சிறுவனை விட ஒன்றிரண்டு வயது சிறுமிக்குக் கூடுதலாக இருக்கக் கூடும்.
வழியில் வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்த நான்கு கரும்பு ஆலை கூலிகள் கரும்புச்சாறு வாடையடிக்கும் தொப்பிகளைக் கையில் எடுத்து வருக என்று அசைத்தபடி புன்முறுவலுடன் வழிவிட்டு நின்றார்கள். காரை லாகவமாக ஓட்டிப் போன பெண் ஒரு புன்னகையில் நன்றி சொன்னாள். வசீகரமான புன்னகை அது.
அதைக் கொண்டாட இன்னொரு தடவை தொப்பி எடுத்துத் தூக்கிப்போட்டுப் பிடித்துக் கையில் வைத்துக் கடந்து போனார்கள் அந்தப் படிப்பறியாத கூலிகள்.
அவர்கள் தங்களுக்குள் பேசுவது காரில் இருப்பவர்களுக்குக் கேட்காது என்று தோராயமாக இடைவெளி தீர்மானித்து குரல் தணித்துப் பேசியபடி ஓட்டமும் நடையுமாக நகர்ந்தார்கள்.
பின்னால் திரும்பிப் பார்த்து,’தெய்வத்தோட குழந்தைங்களா, இல்லே வேறே மாதிரியா’ என்று முணுமுணுத்தபடி நடந்தார்கள்
‘ஏழடி இருக்குமா?
தெய்வம் கொடுத்த எட்டு அடிக்கு இந்தப் பக்கம் இருக்க மாட்டாங்க.
’தெய்வம் என்ன உசரமாக இருக்கும்?’
’கரும்புப் புகை சுவாசித்து சுவாசித்து உன் புத்தி அலங்கோலமாகிப் போச்சு போ. தெய்வம் என்ன உயரமாக இருக்கும்னு கேக்கிறயே. மகா தவறு இல்லேயா? தெய்வம் எத்தனை உயரமாக இருக்கும்னு தான் தலைமுறை தலைமுறையாக கேட்டது போல கேட்கணும்.
’பரம்பரையை குப்பையிலே போடு. தெய்வம் எவ்வளவு உயரமாக இருக்கும்னு கேக்கறது சரியானது’.
’தெய்வத்துக்கு நம்ம மொழி தெரியுமா?’
’ஏன் தெரியணும்?’
நிறுத்திக்கலாம்.
போருக்குப் போகிறவன் போல் உடை உடுத்த நடுவயசுக்காரன் நிறுத்தச் சொல்லிக் கைகாட்ட மற்ற இளைஞர்கள் சரிதான் என்று தலையாட்டினார்கள்.
அவர்கள் இன்னும் பேசினால் தெய்வ குற்றமாகி விடும் என்றோ என்னவோ மௌனமாக நடந்தார்கள்.
பின்னால் இருந்து குரல்கள் – அங்கிள் அங்கிள்.
திரும்பிப் பார்க்க அந்தச் சிறுவனும் சிறுமியும் அவசரமாக வரச் சொல்லிக் கையசைத்துக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.
கார் பேனட் திறந்திருக்க உள்ளே இருந்து ரேடியேட்டரில் வைத்திருந்த தண்ணீர் ஆவியாகத் தப்பித்துப் போய்க் கொண்டிருந்தது. பின்னே டிரைவர் இருக்கையில் தலையைக் கையில் பிடித்தபடி அந்தப் பெண்மணி.
போருக்குப் போவது போல் உடுத்திய நடுவயதுக்காரன் கார் உள்ளே கூரான பார்வையை எறிந்தான்.
’ஏற்கனவே லேட். இன்னிக்கு கள்ளுக்கடைக்கு போன மாதிரி தான்’
அவன் முணுமுணுத்தது அவனுக்கே கேட்டிருக்காது.
வந்தவர்கள் தலை திறந்த காரை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில்லை; வெள்ளைக்கார ஸ்திரியையும் தான். சற்று மிரண்டு போனார்கள்.
அவர்களில் ஒரு இளைஞன் அவர்களின் குழுக்குறியில் சொன்னான் – ‘இந்த ராட்சச வாகனம் வெள்ளைக்காரர்கள் எப்படியோ அடக்கிய புரியாத ஒரு விஷயம். பிசாசு வண்டி. அதன் உள்ளே மனுஷர்கள் இருக்க, மூடி போட்டு இப்படி நீராவியை வேறே உள்ளே சேர்த்து வைத்திருக்கிறது இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது. போதாக்குறைக்கு உலகில் எங்குமே இல்லாததாக, ஏழெட்டு அடி உயரத்தில் இரண்டு சிறுவர்கள். பத்து வயதுக்குள்தான் இருப்பார்கள்’.
மத்திய வயசன் ஆமாவென்று எதற்கோ தலையாட்டினான்.
’இன்னும் கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டிருந்தா வெள்ளைக்கார மந்திர வித்தை நடத்தி, நம்மளை மயக்கம் போட வச்சு, கைகாலைக் கட்டுவாங்க. இந்த ராட்சச வாகனத்திலே திணிச்சு எடுத்துப்போய் அங்கம் அங்கமாகப் பிச்சு சுட்டுத் தின்னுடுவாங்க.. முக்கியமாக சகலத்துக்கும் ஆதாரமான உறுப்பு’.
அவர்கள் குழூக்குறியாக ஏதோ மொழியில் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரு பக்க நாசியை விரலால் பொத்திக்கொண்டு தலையைக் கவிழ்ந்து குரல் தாழ்த்தி நங்ங்ங்ங்ங்ங்ஙா என்று வேகமாகப் பேசப்படுவது அது.
’இந்தப் பெண்ணும் சாமான்யப்பட்டவளாக இருக்க முடியாது. உப்பு சேர்த்து உண்டு விடக்கூடும்’
’ஓடுடா ஓடு’.
அவர்கள் அவசரமாக ஓட ஆரம்பித்தார்கள்.
தலையில் ஏற்றிய நீண்ட கழுத்துள்ள மண் பானையும், ஒக்கலில் ஏற்றிய சுரைக் குடுக்கைப் பானையுமாக பெருவழியில் வந்த இளம் பெண்கள் மழை மாதிரி சிரித்தார்கள்.
மாமியார் வீட்டுக்கு ’முக்காலியோட போயிருப்பான்’ – ஒருத்தி சொன்னாள் .
ஒரு பெண். ரகசியம் பேசுகிற சந்தத்தில் சொல்ல, கார் ஓட்டி வந்தவள் அவர்களை ஈரக்கையால் தடுத்து ’உதவி செய்யுங்க’ என்றாள். அவர்களுக்கு அது புரியாமல் போனது.
’அம்மா, க்ரியோல் பாஷையில் பேசு’. சிறுவன் அம்மாவிடம் சொன்னான்.
‘ஓ, க்ரியோல் தெரியுமா? அப்போ சிரமமே இல்லை’ சதா மூக்கை உறிஞ்சியபடி இருந்த மூணாம் பெண் உற்சாகத்தோடு கூறினாள்.
’என் கார் ரேடியேட்டருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்க உங்கள்லே யாராவது’. உள்ளபடிக்கே வேண்டுதலோடு கேட்டாள் கார்க்காரி.
மூன்று பானைகளும் தலை விட்டு இறங்கின. லாகவமாக அவற்றில் ஒன்று ரேடியேட்டரை நிரப்ப, மீதி இரண்டும் காரின் பின் வானம் பார்க்கக் கட்டியிருந்த பீப்பாயில் வீழ்ந்து நின்றது. அந்தப் பெண்கள் இடுப்பில் சுமந்திருந்த சுரைக்குடுக்கைப் பானைகளும் நீர் பொழிய, பீப்பாய் நிறைந்தது.
’பீப்பாய்க்குள் பெய்த மழை’
துருதுருவென்று இருந்த லட்சணமான கருப்புப் பெண் சிரித்தபடி சொன்னாள்.மூன்று பேரில் அவள் ஆகக் குட்டையாக இருந்தாள்.
’மூணு பேரும் பானைத் தண்ணியை முழுசா ஊத்திட்டீங்களே? நீங்க வீட்டுக்கு வெறும் பானையாகத் திரும்பிப் போவிங்களா?’
கார் ஓட்டி வந்தவள் சின்னக் கருப்பியை அவள் சிரிப்பைக் கொஞ்சம்போல் கடன் வாங்கி அணிந்தபடி கேட்டாள்.
‘வெறும் கலமாக வைக்கக்கூடாது அம்மாடி. சுரைக் குடுக்கையிலே கொஞ்சம் போல தண்ணி இருக்கு’.
கருப்பி அவள் கையைத் தன் கரத்தோடு சேர்த்து வைத்தபடி அறிவித்தாள் – நாங்க இப்படி பேசிக்கிட்டே இன்னொரு தடவை குளத்தில் நீர் மொண்டுக்கிடுவோம்.
சுருள்முடிக்காரி கேட்டது – ’இவ்வளவு பெரிசா ராட்சச வண்டியை வாங்கி ஓட்டிட்டு வர்றியே அம்மாடி, உங்க தேசத்தில் இதுக்கு என்ன விலை இருக்கும்?’
’ரொம்ப விலை அம்மாடி’ கார்க்காரி சிரித்தபடி சொன்னாள்.
‘அது புரியுது. எத்தனை காசு’
‘ஆயிரம் கோக்கோ கொட்டை, ஆயிரம் கூடை சேனைக்கிழங்கு, ஆயிரம் கூடை வாழைக்காய் எல்லாம் சேர்த்து என்ன விலையோ அதுக்கு மேலே கொஞ்சம் –கோழி நூறு, ஆடு நூறு கொடு. காரைத் தர்றேன்
‘அம்மாடி நீயே வச்சுக்க உன் வண்டியை, எனக்கு வேணாம்’
கனமான சிரிப்பு கார்க்காரி தொடங்கி வைக்க சேர்ந்தொலித்தது.
அவள் ஒரு தலைமுறைக்குப் போதுமான நன்றி சொல்லி வண்டியைக் கிளப்பினாள். சக்கரங்களை இருந்த படிக்கே அதிவேகமாகச் சுழலச் செய்து அந்தப் பெண்கள் அதிர்ச்சியில் உறைய நிறுத்தினாள்.
’காரிலே ஏறுங்க. குளக்கரையிலே கொண்டு விட்டுட்டுப் போறேன்.’
பின்சீட் பக்கம் கையசைக்க அங்கே இருந்த இரண்டு சிறுவர்களும் கார் முன்வரிசை இருக்கைகளுக்கு இடம் மாறிக்கொண்டார்கள்.
’நீர்நிலை எங்கே இருக்கு?’
கார்க்காரி மூன்று கன்யகைகளையும் பொதுவாகப் பார்த்துக் கேட்டாள்.பக்கத்தில் தான் என்று ஒரே பதில் சொல்லி மூன்று பேரும் மூன்று திசையில் கை காட்டினார்கள். அவர்களோடு சேர்ந்து சிரித்த கார்க்காரியும் அவளுடைய மகனும் மகளும் நகைப்பைச் சுருக்கமாக வைத்துக்கொண்டார்கள். நான்காவது திசையில் வண்டி நகர்ந்தது.
வலனாடு சுற்றிப் பார்க்க வந்திருக்கிறீர்களா குடும்ப சகிதம்?
சுருள்முடி அலங்காரி கேட்டாள்.
’வலனாடு ஊரில் கொஞ்சம் வேலை இருக்கு’
பொத்தாம் பொதுவாகச் சொன்னாள் கார்க்காரி. நல்லா இருங்க என்று மூவரும் கை உயர்த்திக் காட்ட கார் நின்றது.
’வலனாடு இன்னும் ஐந்து நிமிடம் நீங்க போயிட்டிருக்கற வழியிலே போனால் வந்துவிடும். நல்லா இருங்க’ என்றபடி குட்டைப் பெண் குடத்தில் இருந்து கையைக் குழித்து ஒரு உள்ளங்கை நீரை கார்க்காரி மேலும் இன்னொரு கை சிறுவர்கள் மேலும் தெளித்து மயில்கள் போல் அகவிப் போனார்கள்.
ஐந்து நிமிடம் பயணம் செய்து வலனாடுவில் போய்ச்சேர முடியவில்லை.
ஊர்க்காவல் என்று எழுதிய பழைய காரை நிறுத்திக்கொண்டு நின்ற நீலச் சீருடை அணிந்த படை வீரர் ’வலது பக்கம் இன்னொரு இருபது நிமிடம் பயணம் செய்தால் மாற்று வழியில் வலனாடு போய்ச் சேரலாம் என்று மரியாதை விலகாமல் சொன்னார்.
ஐந்து நிமிடம் பயணம் தொடர்ந்து கார் கனைத்துக் கொண்டு நின்று விட்டது. ஊர் எல்லை என்று ஊகிக்க முடிந்தது கார்காரிக்கு. மழை வேறே வரப்போகிறதாக பயம் காட்ட ஆரம்பித்தது.
உள்ளூர்க்காரர்கள் எட்டு அடி உயரச் சிறுவர்களை அதிசயமாகப் பார்த்தபடி நின்றார்கள். மழையின் முதல் தாரைகள் கார் மேல் விழ, முன் வரிசை இருக்கைகள் சட்டென்று வெற்றிடமாக, சிறுவனும் சிறுமியும் காணாமல் போனார்கள்.
’மந்திரவாதம்.. மந்திரவாதம் சீனப் பெண்பிள்ளை மந்திரவாதம் செய்ய வலனாடுவுக்கு வந்திருக்கிறாள் ஓடுங்க ஓடுங்க’ என்று கூச்சலிட்டபடி உள்ளூர்க்காரர்கள் காவல் படையை எதிர்பார்ப்போடு நோக்கினார்கள். ராட்சச வண்டியில் வந்த பசங்க எங்கே?
‘மாயமந்திரம் செய்ய லைசன்ஸ் வேணுமே அம்மா நீங்க வைச்சிருக்கற உரிமத்தை காட்டுங்க’ என்று வாசாலகமாகச் சொன்னார் படை வீரர். அவரைப் பொருட்படுத்தாமல் கார் ஊர்ந்தது.
எதிரே கூரை வேய்ந்த நூற்றுச் சில்லரை சிறிய வசிப்பிடங்கள் தென்பட்டன. அதே அளவில் ஆஸ்பெஸ்டாஸ் பாவிய சிறு காரைக் கட்டிடங்களும் இருந்தன. சுண்ணாம்பு தீற்றிய சுவர்களும் ஜன்னல்களுமாகப் பெரிய காரைக் கட்டிடமான ஒரு மச்சு வீடும் கண்ணில் பட்டது. பூட்டியிருந்த அந்தக் காரைவீட்டு வாசலில் நின்று இரண்டு பசங்களும் கையசைத்தபடி உற்சாகமாகக் கூச்சலிட்டார்கள்.
மாம், வலனாடு. வலனாடு’.
காருக்குள் இருந்து வீட்டு வாசலுக்கு எப்படி வந்தார்கள்? குலவையிட்டுக் குரவை ஆடிய பெண்கள் ஒரு நொடி ஆட்டம் நிறுத்தி அதிசயமாகப் பார்த்தார்கள்.
வலனாடு என்று கார்க்காரியும் குரல் உயர்த்தியபடி வீட்டு வாசலில் கார் நிறுத்தினாள்.
அருகில் இருந்து ஓ என்று கூட்டமாக அலறும் சத்தம் மற்ற எல்லா சத்தத்தையும் விட அதிகமாகக் கேட்டது. லாந்தர் விளக்குகள் அங்கே தேசலான வெளிச்சத்தில் இருள் விலக்க ஆரம்பித்தன. மர பெஞ்சுகளை சுமந்து வந்து இரண்டு இளைஞர்கள் வாசலுக்குக் குறுக்கே அவற்றை இறக்கி உள்ளே இருந்து எழுந்த கூவலோடு கூட ஓலி எழுப்பினார்கள்.
யாரோ அங்கே இறந்து போனார்கள் என்று கார் பெண்மனி அவதானித்துக் கொண்டு மெல்ல அடுத்த வீட்டுப் பக்கம் அடியெடுத்து வைத்தாள்.
அங்கே வாசலில் பெஞ்சில் அமர்ந்து வாதாங்கொட்டைகளிலிருந்து வாதாம்பருப்பைப் பிரித்தெடுத்து வாயிலிட்டு சுவைத்துக் கொண்டிருந்த வயதானவர் கூட்டம் சற்றே பேச்சு நிலைத்தது.
அவர்கள் எல்லோரும் கார் பெண்ணைக் கூர்மையாகப் பார்த்து இருக்க, ஆட ஆயத்தமான முதுபெண்கள் அவசரமான சைகை காட்டினார்கள்.
‘இங்கே எதுவுமில்லை. நீங்க வரக்கூடாத இடம் இது. போய் விடுங்க’.
அந்த சைகைகள் கார் பெண்ணை அகற்றி நிறுத்த, கூட வந்த சிறுமி ’பசிக்குது அம்மா இன்னிக்கு முழுக்க சாப்பிடாம இருக்கோமே’ என்று அம்மாவிடம் சைகையில் சொன்னாள். முது பெண்கள் நடுவாசலுக்கு நகர்ந்தார்கள்.
அந்த மூதாட்டிகள் மெல்ல அசைந்து வட்டமிட்டு ஆடியபடி உல்லுலுல்ல்ல்ல்ல்லு என்று குலவை இட்டபோது காரில் வந்தவளுக்கு இருப்பவர்களின் பேச்சு மொழி அர்த்தமாகத் தொடங்கியது. அது கிரியோல் மொழிக் குடும்பத்தில் அபூர்வமாகப் புழங்கும் சிறுமொழி. ஆட்டம் நிறுத்தி மூச்சு வாங்கிய ஒரு மூதாட்டி உல்லுல்லுலு குலவையில் பங்கெடுக்க கார் பெண்ணை அழைத்தாள்.
சிறுமி அம்மா கையைப் பற்றி கவன ஈர்ப்புக்காக இழுத்தாள். ’ரொட்டித் துண்டுகளை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்று இங்க்லீஷில் சொல்லிக்கொண்டே ஓடினாள் அவள். காருக்கு உள்ளே சாடி பிரப்பங்கூடையில் காகிதத்தில் பொதிந்து வைத்திருந்த பலகாரப் பொதியை எடுத்துக்கொண்டு திரும்பி இறங்கினாள்.
’அம்மா, வாசல் கதவு பூட்டியிருக்கே’ என்று கிரீச்சிட்டபடி தன் சகோதரனுக்கும் தகவல் கடத்த வேண்டி வாயில் கை குவித்துக் கூவினாள். அவன் அருகே எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
’கிட்டா வா’ என்று அகவிய சிறுமியோடு ராத்திரிப் பறவை ஒன்று கூடவே அழைத்தது. வாசல் ஓரமாக பெஞ்சில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர் கார்க்காரியைப் பார்த்துக் கெஞ்சும் தொனியில் சொன்னார் – ’நல்ல பெண்ணே, நீ வருவேன்னு தெரியும். வரலாம் தான். ஆனால் இப்போ இல்லை. சம்மட்டி அடிச்சு கருமான் வேலை செய்யும் சாம் ஒரு வாரமாக போதம் கெட்டு மல மூத்திராதிகள் உடம்பிலிருந்து தன்னிச்சையாக விலகறது தெரியாது கிடக்கிறான். அவன் ராத்திரி விடியறதுக்குள்ளே தானே விருப்பப்பட்டு யொரூபா தெய்வவெளிக்குப் போகலேன்னா நாங்க எல்லோரும் சேர்ந்து அவன் மூச்சை நிறுத்தி விடுவோம். நீ ஊரிலே குடியேற வந்த நேரம் இப்படி இருக்கணுமா? பிள்ளைகளோடு நாளைக்கு வந்திடேன்’.
அருகே நின்ற மூதாட்டி ஆமா அழகுப் பொண்ணே என்று ஆதரவாகக் கூறினாள்.
கார்க்காரி மவுனமாகத் திரும்பினாள்.
’ டாக்டரம்மா’
பின்னால் இருந்து குரல். அந்தக் கிழவன் தான். வந்தவள் புன்சிரிக்க முற்பட்டாள்.
’Byenveni nan Valanadu, doktè’
ஹெயிட்டிய பாணி க்ரியோல் மொழியில் வரவேற்பு சொல்லி, சிரம் தாழ்த்தி வணங்கினான். (தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
