றெக்கை அத்தியாயம் 14

This entry is part 16 of 18 in the series றெக்கை

நான் நிர்மலா. இங்கே நாள் என்பது காலை எட்டு மணிக்கு நான் என்   கிளினிக் அறையைத் திறப்பதில் தொடங்குகிறது. பூட்டும் சாவியும் சேர்ந்த பிறகு ஊடுகதவைப் பகுதி திறந்து உள்ளே போகும்போது இது என் ராஜ்ஜியம் என்று மமதை ஏற்படுகிறது.

வரிசையாக உள் அலமாரிகளில் வைத்திருக்கும் கெட்டி கண்ணாடி ஜாடிகளில் காய்ச்சலுக்கான நீல நிற மருந்தும் ஜீரணத்தை சரியாக்கும் சிவப்பு நிற மருந்தும் மற்றவையும் அரைவாசி நிரம்பப் பெற்று அமெரிக்கையாக இருந்து என்னையே பார்க்கின்றன. 

அதெல்லாம் சொல்வது போலிருக்கு- 

நிம்மி,எங்களுக்கு எல்லாம் விடியுங்காலம் எப்போ வரும்? எப்போது நோயாளர்கள் இந்த கிளினிக் வாசல்லே வரிசையாக நின்று டாக்டர் நிர்மலா அம்மா அக்கா தங்கச்சி,   என் நோயை இல்லாதாக்குங்க என்று பரபரத்துக்கிட்டிருப்பாங்க. 

என்ன நிம்மியக்கா, காலையிலேயே பலமான யோசனையிலே இருக்கீங்க. 

பெஞ்சிதான். கையில் ஒரு மரத்தட்டு. மேலே  கவிழ்த்த இட்டலிப் பானை மூடி மாதிரி ஒரு பாத்திரம்.

காலையிலே பசியாறறது ரொம்ப அவசியம்னு சீக்காளிங்க வந்தா ஒரு மணி நேரம் லெக்சர் கொடுக்கறீங்க. நீங்க சொல்றதோட சரி. அதும்படி நடக்கிறதில்லே. நான் அதான் இன்னிக்கு ரொட்டியை சூளை அடுப்பிலே வாட்டி பழக்கூழோடு கொண்டுவந்திருக்கேன். சாப்பிட்டு தெம்பா உட்காருங்க.

நான் அவள் கிட்டே என்ன மாதிரி நன்றி சொல்லப் போறேன். அவள் கையைப் பிடித்துக்கொண்டு கண்ணில் வைத்து ஒத்திக்கொண்டேன். ஒரு துண்டு ரொட்டியை என் வாயில் ஊட்டிவிட்டு நகர்ந்தாள்.

மீதி வைக்கக் கூடாது சரியா? அறை வாசலில் நின்று சொல்லிவிட்டு பறக்கும் முத்தம் ஒன்றை என்னை நோக்கி ஏவியபடி போனாள்.

 அவள் போய் பத்து நிமிடம் ஆகியும் அவள் குரலும் வாசனையும் கிளினிக் உள்ளே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது.

 நான் இந்த ரெண்டு மாசத்திலே வந்த நோயாளிகள் பொதுவாக எப்படி இருந்தாங்கன்னு வகைப்படுத்த முயற்சி செய்தேன் –

வலநாடு ஊரில் யெரூபா தெய்வ வழிபாட்டுக்கு பூசாரி சொன்னபடி விரதம் இருக்கறது, பூசாரிக்கு சாப்பாடு கொடுக்கறது இப்படியே தீவிரமான யெரூபா கொண்டாடல் தலைமுறை கடந்து வந்துட்டிருக்கு.

இந்த ஊரில், சிறுநகரத்திலே கலப்பு இனத்தவர்கள் மற்ற இடங்கள் போல இல்லாமல், கணிசமாக கண்ணில் தட்டுப் படுகிறார்கள். நல்ல கருப்பு நிற குடிமக்கள் நல்ல கருப்பு, நடுத்தர கருப்பு, ஒரு கீற்று கருப்பு இப்படி விதங்களான மாநிறம் – கருப்பு கலந்திருப்பது பார்க்க ரம்யமாக இருக்கு.

இந்த நல்ல கருப்பு – மாநிற மேல் தோல் நிறத்தை அவர்கள் யாரும் பொருட்படுத்துவதே இல்லை. மாநிறப் பொண்ணு நல்ல கருப்பரை கல்யாணம் செய்து கொண்டு சௌக்கியமாக இருக்கிறாள். கருத்தம்மா மாநிறத்தானை கட்டிக்கொண்டு அயராமல் சுகிக்கிறாள்.

இங்கே இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய, ஆனால் தடாலென்று சொல்ல முடியாமல் இனக்கவர்ச்சி தொடர்பான ஒரு நறுக்கு தகவலுண்டு – பெண்கள் பதினைந்து வயது முதல் அறுபது, அதற்கும் மேலேயும் ஓரளவு இருபாலினராக படுகிறது. Bisexual preference

எல்லோருக்கும் கிரயோல் மொழி தெரிந்திருக்கிறது. குழூக்குறியாக நாசித் துவாரம் பொத்தி ஞு ஞு ஞு ஞு ஞு ஞு ஞு என்று ரொம்ப சிரமப்பட்டு ‘பார்த்தியா என் தாய்மொழி இதுதான்’ன்னு பெருமையடிக்க முனைகிறார்கள். மலையாளத்தில் ஜெர்மானிய மொழியைக் கலந்து பேசற மாதிரி இன்னொரு பரவலான பயன்படுத்தப்படும் கிளைமொழியும் இருக்கிறது.

தினமும் குளிக்க முடியாவிட்டால் கவலை ஏதும் இல்லை. கிடைக்கும் சொற்பமான தண்ணீரை தொட்டியில் கொட்டி, தொட்டிக்குள் இறங்கி உட்கார்ந்து குளிக்கிறார்கள். குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ஆறடி மனிதர் சௌகரியமாகப் படுத்துக்கொள்ள முடியும் அளவில் சிமெண்ட் தொட்டி இருக்கிறது. ஒருவர் குளித்து தொட்டியிலிருந்து இறங்கியதும் அந்தத் தொட்டித் தண்ணீரில்  குடும்பத்தின் இன்னொருத்தர் இறங்கிக் குளிக்கிறார். தொட்டி தண்ணீரை எப்போது மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.

தெருக்கள் பெரும்பாலும் சுத்தமாக இருக்கின்றன என்றாலும் கூட்டம் கூட்டமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பால் மரத்த பசுக்கள் எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு உயிர்வாழ வேண்டிப் போகிறது. அவை தெருச் சுவர்களில் ஒட்டிய சினிமா போஸ்டர், அதை சுவரில் ஒட்ட வைத்திருக்கும் பசை, துவைத்துக் காயப் போட்டிருக்கும் துணிகள் – என் ப்ரேஸியரை ஒரு மாடு தின்று விட்டது, பாதி கழித்த மனுஷ போஜனம் – தோசை, சப்பாத்தி, வற்றல் குழம்பு சாதம் என்று சகலமானதையும் உண்டு எப்படியோ சீவிக்கும். பசு போல் ஆடுகளையும் பெருந்தொகையில் வளர்த்து கொழுகொழுவென்று ஆகும்போது அடித்து பிரியாணி செய்து விடுகிறார்கள். கொழுத்த செம்மறி ஆடுகள் சில ஆண்களின் இனக்கவர்ச்சித் தேர்வாவதும் உண்டு.

இவர்களின் வாய் சுகாதாரம் சர்ச்சைக்குரியது, ஜப்பானியர்கள், லெவி சொல்வான்,ஜப்பானியர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிட்ட அப்புறம் பல் விளக்குவாங்களாம். வளநாடு மக்கள் பல் விளக்கி நான் பார்த்ததில்லை. ஆனாலும் உமி, அடுப்புக்கரி, உப்பு என்று பலவிதமான பொருளும் சேர்த்து ஒரு பொடி உண்டாக்கி தலைமுறை தலைமுறையாக பிரயோஜனப்படுத்துவதாகவும் அதனால் பல் வெளுக்காவிட்டாலும் வாயிலிருந்து வாடை வருவதில்லை என்றும் பெஞ்சி சொல்வாள். அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

இந்த வகைப்படுத்தல் யாருக்காக செஞ்சிட்டிருக்கேன்? லெவி இருந்தால் வாங்கி படிச்சுட்டு, பாத்ரூம் எங்கேன்னு பகடி பண்ணுவான். ஆல்பீ இருந்தால் படிக்கறதுக்கு முன்னாலேயே இதிலும் ஒரு ரசம் உண்டு என்று குறும்புச் சிரிப்போடு சொல்வான். ரெண்டு பேரையும் நான் இழந்துட்டேன். ரெண்டு பேரோடு உறவு வச்சுக்கறது   குடும்பப் பொண்ணுக்கு அதென்ன சொல்றா இழுக்கு தான். ரெண்டு பேரோடு எங்கே உறவு கொண்டாடினேன்? ஆல்பீ போய்ச் சேர்ந்து ஆறு மாதம் கழிச்சுத்தானே லெவியை கல்யாணம் செஞ்சது.

டாக்டர் மதாம் ஜாஜா வந்திருக்கேன்.

வாசலில் இருந்து வந்த சத்தம் என் கவனத்தை திரும்ப கிளினிக்குக் கொண்டுவந்தது. வலநாடு கால்பந்து அணியின் கோல்கீப்பர் ஜாஜா. ரெண்டு வாரம் முன்னால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கால்பந்தாட்ட பந்தயம் காண ஊரோடு காத்திருக்க மைதானத்தில் சகலரும் பார்த்திருக்க, ஏனைய வலநாடு அணி உறுப்பினர்களோடு குத்தவைத்து சிறுநீர் கழித்தவன். மேட்ச் தொடங்கும் முன் குறிகளின் ஊர்வலம் இருக்கும் என்று சொல்லியிருந்தால் அடித்து பிடித்துக்கொண்டு பசங்களோடு பள்ளிக்கூட மைதானத்துக்கு பந்து களி பார்க்க போயிருக்க மாட்டேன்.

மதாம் நான் உட்காரலாமா? அதிமதுரமான ஃப்ரஞ்ச் மொழியில் கேட்டான் ஜாஜா. கண்கள் குறும்பாகச் சிரிக்க,   தன்னிச்சையாக   விழிகளைத் தாழ்த்திக்கொண்டேன்.

பாய்ஸ் வில் பி பாய்ஸ். முணுமுணுத்தபடி ஜாஜாவை தீர்க்கமாக நோக்கினேன்.

மேடம் சாரி. நீங்க இருந்ததை கவனிச்சிருந்தா விஷமம் ஏதும் செஞ்சிருக்க மாட்டோம். ஜெனியூன்லி சாரி, மதாம்.

 மன்னிக்கத் தயாரான முகபாவம் பூண்டு ’பரவாயில்லை’ சொல்ல முன்வந்து நிறுத்தினேன். பூண்டு வாடை எங்கணும் சூழ்ந்திட காவேரி உள்ளே வந்தாள்.

அக்கா டாக்டர் நீங்க புத்தகத்திலே வாசிச்சு சொன்ன சமையல் குறிப்பு படி பூண்டு ரசமும் பூண்டு துவையலும் வீட்டிலே செஞ்சு பார்த்தோம். என்ன, ரெண்டு பல்லு பூண்டு போடற இடத்திலே ரெண்டு பல்செட் போட்டுட்டோம். மத்தபடி நல்லா வந்திருக்கான்னு டெஸ்ட் பண்ணி கொடுங்க ப்ளீஸ். உங்க நேரத்தை வீணடிக்கறேன். சாரி ஜாஜா தம்பி.

சித்திரம் : ஷங்கரா

காவேரி, கொஞ்சம் உள்ளே போய் இரேன். கிளினிக் உள்ளே அவசியம் இல்லாம வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன் தானே.

 கண்டிப்பான மெல்லிய குரலில் நான் சொல்ல காவேரி தலைவணங்கினாள். அடுத்து ஒன்று இதேபோல். தினசரி வாழ்க்கையில் எதிர்படும் சாதாரண அத்துமீறல் தொடர்பானது –

அப்புறம் காவேரி, பூண்டு, லவங்கபட்டை, சோம்பு இப்படி மசாலா சமாசாரங்கள் எதுவும் இந்த வீட்டுக்குள்ளே வராமல் இருந்தா நல்லா இருக்கும். ஏலக்காய், மிளகு இவை உள்ளே வர தடையேதும் இல்லை.

சரி அக்கா சரி டாக்டர். காவேரி குரலில் குழைந்தாள்.

ஜாஜா சாரி, இந்த பசங்க என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை.  ஜாஜாவை நாடி பிடித்துப் பார்த்தபடி சொன்னேன். 

உய் மதாம். இந்த வாரம் மேட்ச் இருக்கு பிராக்டிஸுக்கு வாங்கடான்னா ஒருத்தன் கூட வரமாட்டேங்கிறான்- ஜாஜா குறைப்பட்டுக் கொண்டான் 

 உன்னோட உடம்புக்கு சுகக்கேடு உண்டான்னு தான் நான் சொல்லமுடியும். உங்க டீம் ஏதாவது செஞ்சா இல்லே செய்யலேன்னா என்னால் ஒண்ணும் பண்ண முடியாது. சொல்லு, என்ன உன் பிரச்சனை?

அவன் பாதி எழுந்து நின்று குனிந்து என் காதில் ரகசியம் சொன்னான் –

அதான் மேடம். எனக்கு என்ன செய்யுதுன்னா  ரெண்டு நாளா வந்து

ரெண்டு நாளா?

நீர்க்கடுப்பு ரெண்டு நாளா ரொம்ப சிரமமா இருக்கு

அவன் என்ன சொல்ல வந்தான் என்று எனக்கு புரியவில்லை. ஜாஜாவை இன்னும் ஐந்து நிமிடம் குரிச்சியிலே உட்கார்ந்திருக்கச் சொல்லி கிளினிக் வெளியே வந்தேன். இத்தனை படித்து பட்டம் வாங்கி பெர்லினிலும், ஸ்பெயினிலும் கிளினிக் வைத்து நூற்றுக் கணக்கான நோயாளிகளின் வாதனை தீர்க்க மருத்துவம் பார்த்தவளை இந்த அதென்ன, நீர்க்கடுப்பு காலை முறித்து தரையில் போட்டு விட்டதே.

பெஞ்சி  தீனி மேசையில் இருந்து, காவேரி கொண்டு வந்திருந்த பூண்டு லவங்கம், ஏலம், கிராம்பு, மிளகு எல்லாம் அரைத்து கலந்த இந்தியா தம் பிரியாணியை ஒருவழி பண்ணிக் கொண்டிருந்தாள். நான் வெளியே வந்ததைப் பார்த்து காவேரியும் தீனி மேசைப் பக்கம் நகர்ந்தாள்.

என்ன பிரச்சனை? பெஞ்சி மென்றபடி கேட்டாள்.

நீர்க்கடுப்பு-ன்னா என்ன லோக்கல் பாஷையிலே? அலுப்போடு கேட்டேன்.

யாருக்கு நீர்க்கடுப்பு? பெஞ்சி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினாள்.

எனக்குன்னே வச்சுக்க. நிர்மலா எதிர்பார்க்காமல் ரெண்டு பெண்களும் சிரித்தார்கள்.

பாவம் அந்த பையன் சீக்குன்னு வந்திருக்கான். சுகவீனம் எங்கேன்னு பார்த்து குணமாக்க வேண்டாமா?

நல்லா பாருங்க நல்லா குணமாக்குங்க, யார் வேணாம்னாங்க.

உனக்கு வந்தா தெரியும்’டி குட்டி – இன்னும் அதிகம் சிரிப்பு.

ரெண்டு செவியிலும் ரெண்டு தங்கச்சிகளும் நீர்க்கடுப்பு விளக்கம் சொல்ல, தன்னிச்சையான செயலாக சீய்ய்ய் என்று அருவருப்பு காட்டினேன். அடுத்த வினாடி, தினம் நூறு நீர்க்கடுப்பு கேஸ் பார்த்து குணமாக்கும் டாக்டர் நிர்மலாவானேன்.

ஜாஜா, நீ ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணி குடிப்பே?

ஒரு கிளாஸ் இல்லேன்னா ரெண்டு கிளாஸ்.

போதவே போதாது. ஒரு நாளைக்கு எட்டு கிளாஸாவது குடிக்கணும்.

அவ்வளவு குடிச்சா போகிற இடத்தில் எல்லாம் குத்த வைக்க வேண்டி வரும் டாக்டர்.

அது உன் பிரச்சனை ஜாஜா.

அப்படியா மதாம்? சரி, சைமன் டாக்டர் சொல்லுவார் -360 டிக்ரி ஹெல்த் செக் பண்ணி பார்க்கணுமா?  

வேணாம் என்று அவசரமாக சொன்னேன்.  

இந்த சீட்டுலே நீர்க்கடுப்பு தணிய என்ன மருந்து மாத்திரை கழிக்கணும்னு எழுதித் தரேன். மெல்லிஸி டவுண்  க்ராப்ட்ரீ ஃபார்மசிஸ்ட் கிட்டே கிடைக்கும். என் டெம்பரரி கம்பவுண்டர் லேடி இங்கேயே வச்சு குடிக்க வேண்டிய மருந்தையெல்லாம் அவுன்ஸ் கிளாஸில் ஊற்றிக் கொடுப்பாள். கல்ப் இட்.

அந்த மூணு பொண்ணுங்கள்லே யாரு உங்க கம்பவுண்டர், டாக்டர்?

யார் மருந்து ஜாடிகள் வைத்த பெஞ்ச் அருகே இருக்கறாளோ அந்த பொண்ணுதான். 

  நான் பார்த்துக்கொண்டிருக்க, வீட்டு சமயலறைக்குள் கரடி புகுந்தது போல்  வீடு – கிளினிக் உள்ளே தலையில் வாழைக் குலை ஒன்றை ஏற்றி வைத்தபடி ஸோம்பி ஒன்று நுழைந்தது. ஸோம்பி ஒருவர் நுழைந்தார் .

ஸோம்பி ஸோம்பி என்று கூச்சலிட்டு சின்னப் பசங்கள் பின்னாலேயே ஓடி வந்தனர்.

ஜடம் படியேறி வந்திருக்கு. நிர்மலா அக்கா, இனி எப்போவும் இந்த கிளினிக்குக்கு அதிர்ஷ்டம் தான் – யமுனா நதி சொன்னாள்.

ஸோம்பின்னு சொல்லு. காலேஜ் போய் விக்ஞானம் படிச்சவங்க அப்படித்தான் சொல்வாங்க. படியாதவங்க தான் ஜடம், நடைப்பிணம்-னு சொல்றது. எவ்வளவு நெகடிவிடி பார் – ஜாஜா தீர்மானமாக கூறினான்.

அவன் ஒரு கை கொடுத்து வாழைக்குலையை ஸோம்பி தலையிலிருந்து இறக்கினான். சோளக்கொல்லை பொம்மை மாதிரி ஏதேதோ உடுப்பை மாட்டி அனுப்பபட்ட தூதன் அந்த துணிச் சுருளுக்குள் நிதானமாக தேடி ஒரு கடுதாசியை எடுத்து என்னிடம் கொடுத்தான்.

அன்பான வாழ்த்துகள் டாக்டர் நிர்மலா. நானும் என் மனைவி ரூத்-தும் உங்களையும் உங்கள் மகள், மகனையும் எங்கள் சிறுவீட்டில் விருந்துக்கு அழைப்பதில் பெருமை அடைகிறேன். நாளை இரவு ஏழரைக்கு உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். 

டேவி போட்டர்.

(பின்குறிப்பு) வலநாட்டில் டாக்டர் நிர்மலா மருத்துவ தொழில் சிறக்க  என் வாழ்த்துகளோடு வாழைக்குலை

சத்தமாக எனில் மெதுவாக டேவியின் லிகிதத்தை வாசித்தபடி  ஸோம்பியை உன்னிப்பாக பார்த்தேன். என்னை ஸோம்பியாக்கினால் இவர் போல் இருப்பேனோ?

ஸோம்பி கையைக் குலுக்கி சொன்னேன் -நான் நிர்மலா. டாக்டர் நிர்மலா. நீங்கள் யாரென்று அறிந்து கொள்ளலாமா?

 ஸோம்பியின் கண்கள் சற்றே விரிய, எதிர்ப்பட்ட பெஞ்சியையும், ஜாஜாவையும், யமுனாவையும் இடித்து தள்ளிக்கொண்டு ஓடலானார்.

தொடரும்

றெக்கை

றெக்கை அத்தியாயம்   16 றெக்கை – அத்தியாயம் 17

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.