- றெக்கை – அத்தியாயம் 1
- றெக்கை – அத்தியாயம் 2
- றெக்கை – அத்தியாயம் மூன்று
- றெக்கை – அத்தியாயம் 4
- றெக்கை– அத்தியாயம் 5
- றெக்கை– அத்தியாயம் 6
- றெக்கை– அத்தியாயம் 7
- றெக்கை– அத்தியாயம் 8
- றெக்கை– அத்தியாயம் 9
- றெக்கை அத்தியாயம் பத்து
- றெக்கை– அத்தியாயம் 11
- நாவல் றெக்கை– அத்தியாயம் 12
- றெக்கை – அத்தியாயம் 13
- றெக்கை – அத்தியாயம் 15
- றெக்கை அத்தியாயம் 16
- றெக்கை அத்தியாயம் 14
- றெக்கை – அத்தியாயம் 17
- றெக்கை – அத்தியாயம் 18
- றெக்கை – அத்தியாயம் 19
- றெக்கை – அத்தியாயம் 20
- றெக்கை – அத்தியாயம் 21
- றெக்கை – அத்தியாயம் 22
வலனாடுக்கு மேற்கிலிருந்து ஒரு கூத்தாடி வந்தான், ஆரஞ்சு வர்ணத்தில் முழங்கால் வரை நீண்டு தொங்கும் சட்டையும நெகிழ்ச்சியான கால்சராயும், சிரசில் மணிகள் கட்டிய கோமாளித் தொப்பியுமாக அவனது கோலம் ஏக அமர்க்களமாக இருந்தது. போதாக்குறைக்கு கண் மை கொண்டு பெரிசு பெரிசாக கண்களைச் சுற்றி வட்டம் வரைந்திருந்தான். இந்த வினோதம் மட்டுமில்லாமல் அவனொரு சைக்கிளை ஓட்டி வந்தான்.
எல்லோரும் தான் சைக்கிள் ஓட்டுகிறார்கள். பிள்ளை மிஸ் ஒற்றைச் சக்கர சைக்கில்ல்ள் ஓட்டுகிறாள். விழுகிறாள். திரும்ப எழுகிறாள். ஆனால் அவள் சைக்கிள் மேல் ஆரோகணித்து இரண்டு கையையும் ஹேண்டில் பாரிலிருந்து எடுத்து தோளின் குறுக்காக பற்றிக்கொண்டு இப்படியும் அப்படியும் அசைந்து ஆடிக்கொண்டும் சவாரி செய்வதில்லை. கூத்தாடி போல் உரத்த குரலில் பேசிக்கொண்டும் ஓட்டுவதில்லை.
சுற்றிக் கூடிய பெருங்கூட்டத்துக்கு கூத்தாடியின் சைக்கிள் பிரசங்கம் இப்படி இருந்தது –
வலநாடு நகர கனவான்களே, சீமாட்டிகளே வணக்கம். நான் பொம்மா. சைக்கிள் பொம்மா. நீங்கள் இதுவரை காணாத ஒரு அதியற்புதத்தை இன்று இப்போது துவங்கி கண்ணுறப் போகிறீர்கள். விடாமல் சைக்கிள் ஓட்டப் போகிறேன்.ஆம்.தினம் இருபத்து நாலு மணி நேரம் ஐந்து நாள் நூற்றிருபது மணி நேரம் சைக்கிளை விட்டு இறங்க மாட்டேன். பல் விளக்க, குளிக்க, , ஆகாரம் பண்ண, சாயா குடிக்க, ஏன் உறங்கிய படிக்கே சைக்கிளை ஓட்ட நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
சுற்றி நின்றவர்கள் பலமாகக் கரகோஷம் செய்தபோது கிட்டா பக்கத்தில் இருந்தவன் இடைமறித்துக் கேட்டான் –
ஏனப்பா சைக்கிளில் இருந்தபடி ஒண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாம் எப்படிப் போவியாம்?
அது என் பிரச்சனை எஜமானே
கேள்வியிலும் பதிலிலும் திருப்தி அடைந்த கூட்டம் மேற்கொண்டு சைக்கிள்கார கூத்தாடி என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலுடன் நின்றது, சைக்கிளில் இருந்தபடிக்கே அவன் தொடர்ந்தான்.
சைக்கிளை விட்டு இறங்காமல் ஐந்து நாள் இந்த வெளியில் சுற்றிவந்ததோடு ஆச்சரியம் அதிசயம் முடியப் போவதில்லை , என்னை இந்த மண்ணில் குழி தோண்டிப் புதைக்கப் போகிறீர்கள். இரண்டு நாள் சென்று வெளியே எடுத்ததும் நான் மறுபடி சைக்கிள் ஓட்டப் போகிறேன். எப்படி புதைக்கப்பட்டு திரும்ப எழுகிறேன் என்பது
அதுவும் உன் பிரச்சனைதான்
கிட்டா பக்கத்தில் நின்றவன் அவன் தோளை இறுக்கிக் கொண்டு கூவினான். கிட்டா விலகி நின்றான்.
நகரசபை அனுமதி வாங்கிட்டியா கூத்தாடி? ஒற்றை சக்கர சைக்கிளில் வந்த பிள்ளை மிஸ் வண்டியை விட்டு இறங்கியபடி விசாரித்தாள்.
அம்மா, விண்ணப்பிச்சிருக்கேன்,
ஏதோ பார்த்து பண்ணு. சின்னப் பசங்க காலை ஒன்பது மணியிலே இருந்து சாயந்தரம் ஐந்து மணி வரை உன்னை வேடிக்கை பார்க்க வந்தா சைக்கிள்லே இருந்தபடியே ஸ்கூலுக்கு அனுப்பு.
அவளது ஒற்றை சக்கர சைக்கிளை அதிசயமாகப் பார்த்தபடி சைக்கிளோடு நகர யத்தனிக்க, அவசர அவசரமாக நகரசபை உறுப்பினர்களும் நகரசபை தலைவ ரும் வந்தார்கள்.லாம்
ஐயா எனக்கு சைக்கிள் சுத்திவர அனுமதி கொடுத்திட்டீங்களா? சைக்கிள் கூத்தாடி நகரசபை தலைவரை ஆர்வத்தோடு விசாரித்தான்,
இதோ இருக்கு. எடுத்து ஜாக்கிரதையா வச்சுக்க, என்று சர்க்கார் சாணிக்காகிதம் ஒன்றை கால்சரய் பையில் இருந்து எடுத்து அவன் கையில் வைத்தார். இதுவும் தரணும் அண்ணன் என்று முன்னால் நடந்து வந்த ஒரு கவுன்சிலர் குழப்பமாக தெளிவுபடுத்தினார்..
நிற்காமல் சைக்கிள் ஓட்டும்போது என்ன எல்லாம் செய்யலாம் என்று அனுமதியளிக்கப்படும் காரியங்கள் இன்னொரு நீளமான , இன்னும் மங்கலாக எழுத்துகள் தெரியும் சாணித்தாளில் அனெக்ஷராக தரப்பட்டிருந்தது,
அதன் படி செய்ய அனுமதி அளிக்கப்பட்டவையில் சில –
உடை மாற்றிக் கொள்ளலாம்.சாப்பா ட்டில் கல் இருந்தால் ஓரமாக துப்பலாம். தலை வாரிக்கொள்ளலாம். ஸ்வரம் பிசகினாலும் பாட்டு சத்தமெழுப்பாமல் பாடலாம். முதுகு சொறிந்து கொள்ளலாம். அசைவம் தவிர்த்து இக்கிணியூண்டு சிறிய உருளைக்கிழங்கு சமோசா உண்ணலாம் சைவப்புலவு சாப்பிடலாம். தேநீர் குடிக்கலாம் இன்ன பிற.
எல்லாக் காகிதத்துக்கும் அடியில் சாணிப் பேப்பரில் எழுதியது –
சைக்கிள் வித்தை எல்லாம் முடிந்த பிறகு கூத்தாடி தன் சைக்கிளை நகரசபைக்கு குறை நிறை அல்லாத விலைக்கு விற்றால் நன்றி பாராட்டுவோம், நகரசபை சொத்து வரி வசூல் செய்யும் ஊழியர்கள் கூடுதல் நேரம் சைக்கிள் ஓட்டிப்போய் கூடுதலாக வரி வசூல் செய்ய முடியும் என்று நகரசபை நம்புகிறோம்.
அய்யா ரொம்ப நன்றி. என் பழைய சைக்கிளை உங்க கிட்டே வித்துட்டு எனக்கு புது சைக்கிள் வாங்க விருப்பம் இல்லை. என் பெண்டாட்டியை விட கூடுதல் நேரம் என்னோடு இருக்கப்பட்ட இரும்புக் குதிரை இது.
சரி வச்சுக்க யாருக்கு வேணும் காயலாங்கடை போகவேண்டிய சைக்கிளும் மண்ணும். உன்னோட உயிரோடு புதைக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
நகரசபை தலைவரும் உறுப்பினர்களும் அவசரமாக திரும்பி நடந்தார்கள். கிட்டாவும் அவர்களோடு நடந்து விட்டு எட்டு அடி கடந்து நின்றான். பின்னால் இருந்து பையா பையா என்று சத்தம். கும்பலில் கிட்டா பக்கம் நின்றவன் தான் அழைத்தது.
நான் பையா இல்லே கிட்டா.
நான் வெண்ணெய். அடுத்த டவுணில் பால், தயிர், மோர், திரட்டுப்பால், ஸ்ரீகண்ட், காலாகண்ட் கடை வச்சிருக்கு. அம்மா கிட்டே சொல்லி கூட்டி வாயேன். பத்து விழுக்காடு தள்ளுபடி தரேன்,
அம்மா கிட்டே சொல்றேன். ஆனா அவங்க வாங்க வருவாங்கன்னு நினைக்கலே. கிட்டா அழுத்தந்திருத்தமாக சொல்ல வெண்ணெய்க் கடைக்காரன் கொஞ்சம் தடுமாறி போஸ்ட் ஆபீஸ் வாசலில் ஒதுக்கி நிறுத்தியிருந்த தன் புத்தம்புது சைக்கிளை குழந்தையைத் தூக்குவது மாதிரி ஜாக்கிரதையோடு வண்டியை உருட்டிக்கொண்டு கிட்டாவைப் பார்த்து புன்னகைத்தான்,

டாக்டர் நிர்மலா தன் மகனும் மகளும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டு காரை உபயோகிப்பதை குறைக்க வேண்டும் என்று அவர்களிடம் அடிக்கடி சொல்வாள். ஒவ்வொரு தடவை பிள்ளை மிஸ் ஒற்றை சக்கர சைக்கிள் ஓட்டி வந்து தரையிலோ தண்ணீர்க் குட்டையிலோ தலை குப்புற விழுந்து எழுகிற காட்சி எல்லாம் நினைவுக்கு வர சைக்கிள் வாங்குவதை ஒரு வருஷம் தள்ளிப் போட்ட்டிருக்கிறாள். இனியும் அதை தள்ளிப்போட முடியாது என்பதை அவள் அறிவாள். தினசரி எழுதும் டயரிக் குறிப்பில் போன வாரம் குறித்திருந்தாள் –
வலனாடு ஊரில் செம்பாதி ஆண்களும் அபூர்வமாக பெண்களும் கடந்த ரெண்டு வருஷத்தில் தான் சைக்கிள் வாங்கி ஓட்டி சவட்டிப் போகிறார்கள். பக்கத்து ஊர் முழுக்க எஸ்பானிய கலாசாரத்துக்கு பங்கம் வராமல் ஆண்டு தோறும் கார்னிவால் என்ற கலைவிழா நடத்துவதில் மும்முரமாகி விக்ஞான முன்னேற்றத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். பெலன் என்ன என்றால் ஓபரா, பேலட், கொல்லேர் தழுவும் மாட்டை அடக்கும் விளையாட்டு என்று நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து விட்டு வேலை செய்கிற கரும்பு ஆலைக்கு கால் தேய நடந்து போகிறார்கள். அந்தப் பணத்தில் கணிசமாக சேர்த்து வைத்தால் ஒரு சைக்கிள் வாங்கி சவுகரியமாக போக வரலாமே என்று கேட்டால் சைக்கிள் காளை மாட்டோடு சண்டை போடுமா என்கி வ்றார்கள்.
ஒரு நிமிஷம் சைக்கிளை பிடிச்சுக்க, வந்துடறேன்.
வெண்ணெய்க் கடைக்காரன் மண்பாதை ஓரமாக குத்த வைத்தான்,
இந்த ஊர்லே புதரைப் பார்த்தா செடியை பார்த்தா உடனே மூத்ரம் ஒழிக்க குத்தவச்சு உட்கார்ந்துடுவாங்க அத்தனை ஆம்பளைகளும். நாம் தான் ஜாக்கிரதையா நடக்கணும்.
பெஞ்சி அத்தை அம்மாவிடம் சொன்னதை கிட்டா கேட்டிருக்கிறான். ஒரு கால்பந்தாட்ட குழுவே சடசடவென்று ஒரே நேரத்தில் கால்பந்து மைதானத்திலேயே பெய்தது நினைவு வர அவன் சிரித்தான். புது சைக்கிள் வாசனை மெல்லியதாக வீசியது. மூக்கை உறிஞ்சினான்.
என்னப்பா என் சைக்கிள் அத்தனை வாடை அடிக்குதா?
சைக்கிளைப் பிடித்திருந்த இரண்டு கையையும் கிட்டா ஒரே நேரத்தில் விலக்க வண்டி சாய்ந்தது.வெண்ணெய்க்காரன் பாய்ந்து வண்டியை தரையில் விழாமல் பிடித்தான்.
ஏம்ப்பா சைக்கிளை பிடிச்சுக்க தெரியாதா? அப்புறம் எப்படி சவாரி செய்வே?
எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது அங்கிள்
றெக்கை முளைச்சு பறக்கறே சைக்கிள் ஓட்ட தெரியாதா? வேடிக்கைதான்,
என்ன வேடிக்கை இ;ருக்கு இதிலே? நீங்க பிறந்தபோதே சைக்கிள் ஓட்டிட்டுத்தான் பிறந்திங்ககளா
மௌனமாக நடந்து வந்தார்கள்.
அங்கிள், நீங்க எப்படி சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டீங்க? எத்தனை நாள் ஆகும் கத்துக்க?
ரெண்டு நாள்லே கத்துக்கறவங்க உண்டு. ஆயுசு பூரா சைக்கிளை அங்கே இங்கே தொப்புனு கீழே போட்டு விழுகிறவங்களும் உண்டு. நம்ப பிள்ளை மிஸ் வாத்திச்சி மாதிரி.
அவன் சிரிப்பில் வெண்ணெய்க்காரன் கலந்து கொண்டு கையை ஆறடிக்கு உயர்த்தி அவன் முதுகை வருடினான்.
நீங்க எனக்கு சைக்கிள் சொல்லித் தரீங்களா? ஆவலோடு கேட்டான் கிட்டா. ஒருத்தரிடம் போய் இதை தரீங்களா. அதை தர்றீங்களா என்று வேண்டுவது அசிங்கமாகத் தெரிந்தாலும் சைக்கிள் ஆசையில் அவன் முனைப்பாக இருந்தான்,
நானா? வெண்ணெய் உருட்டி வா ழை இலையிலே வச்சு விக்கவே நேரம் பத்தலே.
கிட்டா முகத்தில் ஏமாற்றம் எழுதியிருந்தது.
சரி நீ நம்ம ஆளா போயிட்டே.. ரெண்டே நாள் சைக்கிள் கத்துக்க உனக்கு போதும். காலை ஊன்றறது எல்லாம் ஈசியா வரும் உன் அசாத்திய உசரத்துக்கு. எத்தனை வயசுடா செல்லம்? பத்து அடி இருப்பியா?
அதெல்லாம் நான் அளக்கறது இல்லே. எட்டு அடி இருப்பேன்னு அம்மா சொல்றாங்க. இன்னும் வளந்துகிட்டிருக்கேன்.
நல்லா இரு. எங்கிட்டே ஒரு பழைய சைக்கிள் இருக்கு. அதுலே கத்துக்கொடுக்கறேன். இப்போ முன்னாலே ஏறிக்க ஓட்டிப் போறேன். என்ன பார்க்கறே பின் சீட்டு இல்லேன்னா? முன்னாடி பார் எதுக்கு இருக்கு? ஜம்ப் பண்ணி ஏறி உட்கார். அப்படித்தான். நாளைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு மைதானத்துக்கு வந்துடு. சரியா?
கிட்டா வீட்டுக்கு போனபோது விசி மட்டும் குரோஷா பூத்தையல் செய்து கொண்டிருந்தாள்,
அம்மா ஊர்க் கோடி க்கு போயிருக்கா. காவேரிக்கு டெலிவரி டைம்மாம்
அம்மா என்ன பண்ணுவா அதுக்கு? பிஸ்கட் பேழையில் இருந்து ரெண்டு மேரி பிஸ்கட்களை எடுத்து மென்றான்.
அம்மா காவேரிக்கு சுகப் பிரசவமாக ஹெல்ப் செய்வா.
அதென்ன சுகப்பிரசவம் சுகமில்லாததுன்னு?
உனக்கு வயசாகிறபோது தானே தெரிஞ்சுப்பே ஆமா அம்மா எங்கே நெய் வாங்குவா?
நெய் எல்லாம் கிடையாது. வெண்ணெய் .கடை அடுத்த தெருவிலே இருக்கே அங்கே இருந்து புது வெண்ணையா யாரோ எடுத்து வந்து கொடுத்தா போன வாரம்.அவர் பெயர் கூட நவநீதம். சம்ஸ்கிருதப் பெயர். தமிழாக்கினா புது வெண்ணெய்னு வரும்
கசகசன்னு இருக்கு. குளிச்சிட்டு வரேன். கிட்டா எழுந்தான்.
அதை முதல்லே செய். உங்கிட்டே புளிச்ச மோர் வாடை வருது.
அடுத்த நாள் சாயந்திரம் ஆறு மணிக்கு கிட்டா மைதானத்துக்குப் போனான். சைக்கிள்காரன் புனிதர்களின் தரிசனம் கிட்டியது போல் தன்னடக்கமாக இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு சைக்கிளை செலுத்திக்கொண்டு சுற்றி வந்து கொண்டிருந்தான், இவனுக்கு வண்டி கீழே விழாமல் பேலன்ஸ் பண்ண கற்றுக்கொள்ள எத்தனை நாள் பிடித்திருக்கும் என்று கிட்டா ஆச்சரியபட்டான்.
கிட்டு வந்துட்டியா? வெண்ணெய்க்கடைக் காரன் தான், காயலாங்கடை போகவேண்டிய அறுதப்பழசு சைக்கிள் ஒன்றை ஓரமாக நிறுத்தி விட்டு வந்து கொண்டிருந்தான்.
நான் கிட்டு இல்லே. கிட்டா.
சரி அதுக்கென்ன? நறுக்கென்று கேட்டபடி எம்பி கிட்டாவின் தாடையை வருடினான்.
இந்த மைதானத்துலே சைக்கிள்காரனைப் பார்க்க ஒரே கூட்டமா இருக்கு. அடுத்து மாவு மில்லை ஒட்டி நிறைய வெட்டவெளி இருக்கு. போகலாம்.
கிட்டா ஒரு வினாடி தயங்கினான். வெண்ணெய்க்காரன் அவசரப்படுத் தினான்.
இந்தா சைக்கிளை பிடிச்சு நகர்த்திக்கிட்டு வா. நான் பின்னாலேயே வரேன்.
வெண்ணெய்க்காரன் துரு ஏறிய சைக்கிளைத் தொடர்ந்து வந்தபடியே கட்டளை இட்டான்
அப்படியே சைக்கிளை உருட்டிக்கிட்டு ஓடி வா பார்க்கலாம். விழமாட்டே. நான் பிடிச்சுக்கறேன்.
மாவுமில் பூட்டி இருந்தது. இருட்டு கவிந்து கொண்டிருந்தது. அந்த அரையிருட்டில் சைக்கிள் பழகணுமா? கிட்டா வண்டியை இடுப்பில் சாய்த்துக் கொண்டு வெண்ணெய்க்காரனிடம் கேட்டான்.
அரைமணி நேரம் இல்லியா பத்து நிமிஷம் பேலன்ஸ் பண்ண சொல்லித் தரேன். வண்டியிலே ஏறி உக்காரு, நான் பின்னாலே பிடிச்சுக்கறேன்.
அவன் கைகள் கிட்டாவின் வலது இறக்கையை தடவி மேலே ஏற முயற்சி செய்ய, கிட்டா அவனை கன்னத்தில் அறைந்தான். ஒரு நிமிடத்தில் அவன் நின்ற இடத்தில் ஒரு முள்ளம்பன்றியாக மாறியிருந்தான் கிட்டா.. ஆக்ரோஷமாக உடம்பு முழுக்க முட்கள் சிலிர்த்து நிற்க பின்னால் விசாவின் குரல் கேட்டது.
கிட்டா வேணாம்,
குரல் மட்டும் கேட்டது. எங்கே விசா?
கரகர என்று எலும்பைக் கடித்துத் துளைக்கும் சத்தம், வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டமாக வந்து இறங்கின.விசா தான்..
இவனை இங்கே வி ட்டு வைத்தால் எத்தனை சின்னப் பசங்களை மோசமான தொந்தரவு கொடுத்து சீரழிப்ப. வேணாம். இவன் இங்கே இருக்க வேணாம்.
விசாவின் குரல் அந்தக் குரூரமான வெட்டுக்கிளிக் கூட்டத்திலிருந்து வந்தது வெட்டுக்கிளிகள், வெண்ணெய்க்காரனை அப்படியே நகர்த்தி தலைகீழாக்கி மிதக்கவிட்டன. அவன் உடல் முழுவதும் முட்டி மொய்த்து பெரும் படையாக உயர்ந்தது. ஈனமாக குரல் எழுப்பிக்கொண்டிருந்தவனை எங்கோ சுமந்துகொண்டு வெட்டுக்கிளிகள் பறந்தன. மைதானத்தில் சபிக்கப்பட்டவனாக சைக்கிள் காரன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான்.
Discover more from சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026
Subscribe to get the latest posts sent to your email.
