- றெக்கை – அத்தியாயம் 1
- றெக்கை – அத்தியாயம் 2
- றெக்கை – அத்தியாயம் மூன்று
- றெக்கை – அத்தியாயம் 4
- றெக்கை– அத்தியாயம் 5
- றெக்கை– அத்தியாயம் 6
- றெக்கை– அத்தியாயம் 7
- றெக்கை– அத்தியாயம் 8
- றெக்கை– அத்தியாயம் 9
- றெக்கை அத்தியாயம் பத்து
- றெக்கை– அத்தியாயம் 11
- நாவல் றெக்கை– அத்தியாயம் 12
- றெக்கை – அத்தியாயம் 13
- றெக்கை – அத்தியாயம் 15
- றெக்கை அத்தியாயம் 16
- றெக்கை அத்தியாயம் 14
- றெக்கை – அத்தியாயம் 17
- றெக்கை – அத்தியாயம் 18
- றெக்கை – அத்தியாயம் 19
- றெக்கை – அத்தியாயம் 20
நிர்மலாவின் டயரிக் குறிப்புகளில் இருந்து

இரவு கனிந்து கொண்டிருந்தபோது அவர்கள் வந்தார்கள். பலவந்தமாக வரிசையில் நிறுத்தி, நடக்க வற்புறுத்தப் பட்டார்கள்.அவர்கள் கந்தல் சுருணைகளை ஆடையாக உடுத்தவர்கள். எல்லா வயதிலும் ஆண்கள், பெண்கள். குழந்தைகள். அவர்களில் பெண்கள் மார்பு மறைக்க அனுமதி இல்லாமல் முலை தெரியக்காட்டி நடப்பவர்கள். கூரை இல்லாத சக்கர வண்டியில் குழந்தைகள் தாறுமாறாக எறியப்பட்டுத் தாயின் கர்ப்பப்பையில் கிடந்ததுபோல் கைகள் கொண்டு கால்கள் பிணைத்து பசியும் களைப்புமாக மயங்கி கிடக்க மற்றவர்கள் வண்டியை தள்ளிக்கொண்டு வருகிறார்கள். ஒருவர் பின் ஒருவராக ஆண்கள் வரிசையில் வருகிறார்கள். பெண்கள் இன்னொரு வரிசை. ஆண்களின் கழுத்தில், வளர்ப்பு நாய்க்கு கழுத்தில் அணிவித்த பட்டி போல் மாட்டி இறுக்கமாக பூட்டி வைத்திருக்கிறது. நீண்டு கனத்த இரும்புச் சங்கிலி ஒவ்வொரு கழுத்துப் பட்டையையும் இணைக்கிறது. பெண்கள் ஒவ்வொருத்தி கை மணிக்கட்டையும் அதேபோல் இன்னொரு இரும்பு சங்கிலி இணைக்கிறது.
குரல் நடுங்க ஒரு கிழவன் பாட ஆரம்பிக்கிறான். நல்ல கருப்பர்களுக்கே உரிய சோகம் மீகூர்ந்த பாட்டின் அடிகள் அன்புக்கு உரியவர்களை பிரிந்து வந்த துயரத்தையும் இனியொரு முறை காண்போமா என்ற ஆதூரத்தையும் காற்றில் விதைத்துப் போகின்றன.
நிர்மலா தேதியைப் பதிந்து விட்டு அதற்கு அடுத்து இடம் அடிமைச் சந்தைக்கு என்று பதிந்தாள். அடுத்து ஊர் என்று குறித்து லா லேட்டினா, மேட்ரிட், ஸ்பெயின் என்று பதிந்தாள். நோட்டுப் புத்தகத்தை மூடினாள்.
நிர்மலாவின் டயரிக் குறிப்புகள். அந்தரங்கமும் ரகசியமும் தனிப்பட்டதும் ஆன குறிப்புகள். இதை எழுதும் டாக்டர் நிர்மலா படர்க்கையில் எழுதுகிறார் – ’நான் அங்கே போனேன்’ என்பதை ‘நிர்மலா அங்கே போனாள்- என எழுதுவது போல.
இந்த டயரிக் குறிப்புகளை நிர்மலாவின் அனுமதியின்றிப் படிக்கும் யாரும் வாய் பேச முடியாமல், கண் பார்க்க முடியாமல், காது கேட்காமல், உடம்பு மரத்துப்போய் நடக்க வழங்காமல் போய்விடுவார்கள். மெல்ல சாவு நிச்சயம்.
மேற்படி எச்சரிக்கை இரண்டாம் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது.
தமிழ், மலையாளம் என்ற இரு மொழிகளில் ஒன்றில் பதிவுகள். கிட்டத்தட்ட எல்லா தினமும் நாட்குறிப்பு தினமே.
நிர்மலா கைக்கடியாரத்தில் மணி பார்த்தாள். நடுநிசி கடந்திருந்தது.
புயல் விளக்கைத் தாழப் பிடித்துக் கொண்டு மாடியில் இருந்த படுக்கை அறைக்கு மெல்லப் படியேறினாள்.
அத்தியாயம் 9
எல்லாம் இப்படித்தான் ஆரம்பித்தது.
ஆல்பி என்ற ஆல்பர்ட் வாக்னர் விடியும் முன்பு படுக்கையில் அடுத்திருந்த அவன் மனைவி நிர்மலாவை துயிலுணர்த்தினான்.
போன் ஷூர் நிம்மி
குடன் மார்கன் ஆல்பி.
அவன் மேல் பரவிக்கொண்டு கண் இமைகள் மேல் முத்தமிட்டு எச்சிலாக்கினாள்.
மே ஐ கம் இன்?
ஐயோ இப்பவா? உன் நெருங்கிய சிநேகிதன் லெவி வரப் போறான்னு சொன்ன மாதிரி இருந்தது
அவன் பாட்டுக்கு வரட்டும். நாம் பாட்டுக்கு உருண்டு கிடப்போம். இது ஸ்பெயின். உங்க ஊர் இல்லே. சகல சுதந்திரமும் உண்டு.
லெவி பார்க்க மாட்டானா? நிர்மலா நாணமும் வெட்கமுமாக படுக்கையிலிருந்து எழுந்தாள்.
ஊரே பார்த்திருக்க உடல் இரண்டு பின்னிப் பிணைந்து குலவிக் காலம் உறைய கிடப்பதும் தனி ரசனைக்கு உரியதன்றோ என் மான்குட்டி?
என்ன மனுஷன்யா
மனதில் அலையடித்து உயர்ந்த காமம் உடனே வடிய அவள் வெறுப்பையும் கோபத்தையும் அருவருப்பையும் அழுத்தக் கலந்து பூசிய பார்வையை பதிலாக்கி மௌனமாக நகர்ந்தாள்.
மூன்று வருடம் முன் ஆல்பியை கல்யாணம் செய்தது தப்புக்காரியமோ? குசினியில் கபே தயாரித்துக் கொண்டிருக்கும்போது நிர்மலாவின் நினைவுகளின் ஊர்வலம்.-
மெட்றாஸ் மெடிக்கல் காலேஜில் படிக்கும் போதே ஆல்பி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்
நிம்மி, இன்னும் மூணு மாதத்தில் நம்ம ரெண்டு பேரும் டாக்டராகி விடுவோம். அப்புறம்?
கல்யாணம் தான் வேறே என்ன? நிர்மலா கடற்கரை மணலில் கையளைந்து கொண்டு சொன்னாள்.
அது இருக்கவே இருக்கு செல்லம்.எங்கே ப்ராக்டிஸ் பண்ணறதுன்னு சொல்லு
ரெண்டு பேரும் ஒரே இடத்தில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டால் ரெண்டு பேருக்கும் நல்லது.
நான் நினைத்தேன், நீ சொல்லிட்டே கண்ணம்மா
நாம் மதறாஸ் பட்டணத்திலேயே தொழிலை ஆரம்பிச்சா என்ன?
கிளினிக் இங்கே மெட்றாஸ்லே வைக்கணுமா? என்ன சொல்றே? மதறாஸ் பட்டணம் முழுக்க சீக்காளிங்க தான் அசுத்த மூச்சு விட்டுக்கிட்டிருக்காங்க. பத்து பேர்லே நாலு பேர் நோய் பிடிச்சவன். ஆம்பளைன்னா டிபி காசநோய். பொம்பளைன்னா வெள்ளைப் படுதல், சிசுன்னா ஈரல் குலைக்கட்டி, அலுத்து போயிடும் நிம்மி.
அப்போ பட்டணத்தை விட்டால் வேறே எங்கே ப்ராக்டீஸ் பண்ண சரியாக வரும்-நிர்மலா கேட்டாள்.
எங்கே பணப் புழக்கம் நிறைய இருக்கோ அங்கே தான்
ஆல்பி அடுத்து சொன்னான், – ஜெர்மனி திரும்பி டாக்டர் கடை அதான் டிஸ்பென்ஸரி வைக்க ஆசை
அப்போ நான்?
உன்னையும் கூட்டிப் போய்த்தான்.
நிர்மலா வாய் பொத்தித் தடுப்பதற்குள் இதழ் கலந்தான். ஆளரவம் இல்லாத மெரினா கடற்கரை இருள் சூழ அலையடித்துக் கொண்டிருந்தது.
ஜெர்மனியில் எங்கே? நிர்மலா கேட்டாள்.
பெர்லின், ஃப்ராங்க்பர்ட் எங்கே ஆனாலும் சரிதான், கூட்டம் வரும். வரும்போது வெறும் கையை வீசிக்கிட்டு வரும் கும்பல் இல்லை. பிரிட்டீஷ் பவுண்டோ, டாய்ஷ் மார்க்கோ பணம் கொண்டு வர்ற நோயாளிகள் அதிகம். உங்க மதறாஸ் பட்டணத்துலே நோயாளி குத்திருமி துப்பின சளி, காதை அடச்சுக்கிட்டு இருந்த மெழுகு, கண்ணிலே பீளை, வாயிலே ஊத்தை இப்படித்தான் கொண்டு வருவான்.
ஜெர்மனி போய் ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சா பெரும் பணக்காரர் ஆகிவிடுவோமா
அது எனக்குத் தெரியாது நிம்மி. ஆனால் வெறும் வயத்துலே வென்னீரை குடிச்சிட்டு, தோலான் துருத்திக்கெல்லாம் கடை விரித்து வைத்தியம் பார்க்கணும்னு எனக்கு நமக்கு தலையெழுத்து இல்லை. ஹிப்பாக்ரடீஸ் உறுதிமொழி வேதப் புத்தகத்திலே பதிந்து வச்ச தெய்வ வாக்கில்லை.
அந்தப்படிக்கு மெடிக்கல் டிகிரி வாங்கினதும் பெர்லின் மாநகருக்குக் குடி மாற்றினார்கள் நிர்மலாவும் ஆல்பியும். தாமதமில்லாமல் டிஸ்பென்சரி தொடங்கினார்கள். முதல் நாளே இருபது நோயாளிகள். மலச்சிக்கல், காய்ச்சல், வயிற்றில் உப்புசம் என்று வழக்கமான நோய்நொடிகள். முதல் நாள் என்பதால் மருந்துக்கு காசு எதுவும் வாங்கவில்லை. ஆனால், டாக்டர் ஃபீஸ்? அது வந்த சுவடே இல்லை.
யூதர்கள் பெரும்பான்மையாக இருக்கற பிரதேசம். டாக்டரும் யூதன். நோயாளியும் யூதன். காசு விஷயத்தில் இரண்டு பேரும் சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம். புருசன் பெண்டாட்டி ரெண்டு பேரும் டாக்டர். ரெண்டு டிஸ்பென்ஸரி வச்சு இன்னும் அதிகம் யூதர்களை நல்ல ஆரோக்கியசாலி ஆக்கலாம். பணம் இன்னிக்கு வரும் நாளைக்கும் வரும். நீங்க ஜாம்ஜாம்னு தொழிலை நடத்துங்க. சமூகப் பெரியவர் ஒருத்தர் ஆசியாக மொழிந்தது இது.
முதல் நோயாளி மலச்சிக்கல், ரெண்டாம் நோயாளி மலச்சிக்கல். மூணாவது மலச்சிக்கல். டாக்டர் சொல்வதற்குள் நோயாளி கால் சராயை அவிழ்த்து நிர்மலாவுக்குக் காட்டி விடுவான். என்னத்தை பார்க்க. டாக்டரம்மா, கட்டி தட்டி அடைச்சிருக்கு, உள்ளே விரலை விட்டு எடுத்துப் போட்டுடலாமா?
ஜெர்மனியில் மலச்சிக்கல் அதிகம். காரணம் என்ன? நிர்மலா ஆல்பியைக் கேட்டாள்.
ஜெர்மன் டாய்லெட்டில் கழித்ததை பார்க்க முடியாது. நேரே செப்டிக் டாங்க் உள்ளே போய் விடும். அந்த அற்ப விஷயம் ஜெர்மானியர்களை ஏகத்துக்கு எரிச்சல்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த எரிச்சல் அடிக்கடி மலச்சிக்கலாகவும் மூல நோக்காடு ஆகவும் மாறி வருகிறது.
ஒரே வருடத்தில் புருஷன் – பெண்டாட்டி ஜோடி டாக்டர்கள் உள்ளூர் – பேட்டை மகாஜனங்களிடமிருந்து ரொம்பவே அந்நியப்பட்டுப் போனார்கள். வைத்தியம் செய்து விட்டு பத்து டாயிஷ் மார்க் கரன்சி டாக்டர் ஃபீஸ் கேட்டால் நாளைக்கு தரேன் என்று நழுவுகிறார்கள். அல்லது ஒருத்தருக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷன் ஒரு கூட்டத்துக்கே பொதுவாகிறது.
ஆல்பியின் அம்மா சம்பாதிக்கத் தெரியாத அசட்டு டாக்டர் – மகனை திட்டித் தீர்த்து வேறெதுவும் செய்ய முடியாமல் செத்துப்போனாள். அவள் கருத்தில் அவனது இந்திய மனைவி மாய மந்திரம் செய்வதில் நிகரற்றவள். நிர்மலா வாராவாரம் துடைப்பத்தில் ஏறி இந்தியா போய் சக மந்திரவாதிகளை சந்தித்து வருகிறாள். ஆல்பியின் ரத்தத்தை நடுராத்திரியில் குடிப்பது அவள் திட்டம் இத்யாதி கரித்து கொட்டல்கள். ஆல்பியின் அம்மா ஒரு சனிக்கிழமை பின்மாலைப் பொழுதில் காலமானாள்.
ஆல்பியும் நிர்மலாவும் பெர்லினில் ஜெனரல் ப்ராக்டிஷனர் டாக்டர்களாக ப்ராக்டிஸ் தொடங்கியபோது ஜெர்மனி முழுக்க யூத வெறுப்பு பரவத் தொடங்கியது. ஆல்பி இல்லாத நேரத்தில் ஒரு கும்பல் டிஸ்பென்சரிக்குள் புகுந்து சகலமானதையும் நொறுக்கிப் போட்டது. காயின் ஆபேல் எங்கே என்று சுவர் முழுக்க சிகப்பு வர்ணத்தில் சுவரெழுத்து எழுதிவிட்டுப் போனது.
ஆல்பியின் ஏஸ்பேனிய நண்பன் லெவி அவனிடம் சொன்னது நிர்மலாவுக்கும் ஆல்பிக்கும் இருந்த பெர்லின் கனவுகளை காற்றில் பறக்கவிட்டது. புதிய ஸ்பெயின் ஸ்வப்னங்களுக்கு வழி வகுத்தது.
ஆல்பி, ஸ்பெயினில் கிளினிக் திற. மாட்ரிட் மாநகரம் உனக்கும் உன் மனைவிக்கும் நல்லதெல்லாம் தரும். நான் பார்த்துக்கறேன் வா. வந்தார்கள்.
அவனும் அவனது நண்பனும் பள்ளித்தோழனுமான லெவி இருவரும் தலைமுறையும், சுவாசித்திருக்கும் நாடும், பேசும் மொழியும், இனமும் கடந்த யூதத்தின் கண்ணிகள். லெவியின் காலியாக இருந்த லெ லாட்டினோ வீதி வீட்டில் ஆல்பியும் நிர்மலாவும் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள்.
ஆல்பியும் நிர்மலாவும் மாட்ரிட் வந்து நிர்மலா இந்தக் குசினியில் காலை கபே எடுக்கும் மூன்றாம் நாள் இது.
சலோ ஸ்ரீக்ருஷ்ணா, நமுக்கு இத்திரி கோப்பி எடுக்கலாம்.
இரண்டு கோப்பைகளில் பில்டர் காபி நிறைக்க அந்த வாசத்தை கண் மூடி அனுபவித்தாள் நிர்மலா.
என் சர்க்கரைக் கட்டி. முத்தம் போட்டு ரொம்ப நேரமாச்சு. நிம்மி டியர் Guten Morgen
ஆல்பியின் காத்திரமான குரல் நிர்மலாவை நிகழ்காலத்துக்கு இட்டு வந்தது. அவளைப் பின்னால் இருந்து அணைத்து தலையை சாய்த்து முத்தமிட முனைந்தான்.
இன்னும் பல் துலக்கலேப்பா ஆளை விடு
காமத்தில் நாற்றமும் அவசியமான அங்கமாச்சே பாப்பா. போர்க்களத்திலிருந்து திரும்பிக்கிட்டிருந்த நெப்போலியன் அவனோட பெண்டாட்டி ஜோசஃபினுக்கு லெட்டர் எழுதி கொடுத்து அனுப்பிச்சானாம் –
ப்ரியமானவளே, நான் உன்னோடிருக்க வந்துக்கிட்டிருக்கேன். நான் வர்ற வரைக்கும் குளிக்காதே அன்பே. உன்னை உன் உடம்பின் சகல வாடைகளோடும் அனுபவிக்க காத்திருக்கேன்.
குசினி வெளியே நிழலாடியது. வந்திருப்பவன் அவனது நண்பன் லெவியாக இருக்க வேண்டும். ஆல்பீ கட்டற்ற மகிழ்ச்சியோடு அறிவித்தான் –
நிம்மி, Presenting the one and only Levi Cohan, jack of all trade, master of all plus delta.
நிர்மலாவை முதல் முறையாக சந்தித்த மகிழ்ச்சியை முகத்தில் எழுதியபடி சுறுசுறுப்பாக குசினிக்குள் காலணி களையாமல் வந்தான் லெவி கோஹன்.
நிர்மலாவின் வலது கையை இறுகப் பிடித்துக் குலுக்கியபடி அவள் கண்ணில் உற்று நோக்கிச் சிரித்தான். அவனுக்கு நிர்மலா கையை விட உத்தேசம் இருந்ததாகத் தெரியவில்லை.
மெக்சிகோகாரர்கள் தான் அசப்பில் இந்தியன் போல இருப்பார்கள் என்று சொல்வார்கள், லெவி மெக்சிகன் இல்லை. ஸ்பானியார்ட். தீர்க்கமான நாசியும், கருகருவென்று வளர்த்திய கட்டை மீசையும், வெள்ளைக்கும் கருப்புக்கும் நடுவில் வந்த மாநிற உடல் நிறமுமாக -அதை நல்ல கருப்பாக எடுத்துக்கொள்ள லெவிக்கு எந்த விரோதமும் இல்லை.
லெவி இடது கையால் சட்டைப் பைக்குள் ஏதோ தேடி எடுத்தான். சிறு காகிதத் துண்டு அது. அதை தட்டுத்தடுமாறி உரக்கப் படித்தான் –
சுகமாணோ சுந்தரி பெண்குட்டி? ப்ராதல் கழிஞ்ஞோ?
கழிச்சு கழிஞ்ஞு தம்ப்ரானே. நிர்மலா கையை விடுவிக்க முயன்றபடி சிரிப்புக்கு இடையே கூறினாள்.
அவன் கையை விட்டால் தானே
இந்த நிமிட மகிழ்ச்சி நிர்மலாவுக்கு நினைவில் இனி அவ்வப்போது வந்தபடி இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது.
நானும் லெவியும் கிட்டத்தட்ட இருநூறு வருஷம் நண்பர்கள், தெரியுமா நிம்மி?
ஆல்பி லெவியின் கையில் இன்னும் சிறைப்பட்டிருந்த நிர்மலாவின் கரத்தை நாசுக்காக விடுவித்தபடி அவளிடம் சொன்னான். அதீத ஆச்சரியத்தை முகத்தில் காட்டி அப்படியா என்றாள் நிர்மலா.
ஆமா, அவனோட கொள்ளு தாத்தாவும் என் கொள்ளுத் தாத்தாவும் உற்ற சிநேகிதர்கள். அவன் தாத்தாவும் என் தாத்தாவும் பிசினஸ் பங்காளிகள். அதி தீவிர பிசினஸ் பார்ட்னர்கள் எங்க ரெண்டு பேரோட அப்பாக்களும். நானும் லெவியும் போல அப்பாக்கள் நெருங்கிய நண்பர்கள். ரெண்டு அப்பாக்களும் சொல்லி வச்ச மாதிரி ஒரே வருடம், மாதம் இறந்து போனாங்க ஒருத்தர் மேட்ரிட்டிலே மற்றவர் பெர்லினிலே. எங்க தலைமுறையிலே நாங்க பிசினஸை சுமுகமாக முடிக்க முடிவெடுத்திருந்தாலும் அவன் இன்னும் பிசினஸ்லே இருக்கான். மெடிக்கல் பிராக்டிஷ்னராவும் இருக்கான்.
ஆல்பி சொல்லிக்கொண்டே போக இடைமறித்து நிர்மலா கேட்டாள் – என்ன பிசினஸ் அதுன்னு தெரிஞ்சுக்கலாமா?
ஆல்பி சரியான வார்த்தைகள் கிடைக்காதது போல் நின்றான். தொண்டையில் சிக்கிய ஆரஞ்சு மிட்டாய் நினைவு வந்தது நிர்மலாவுக்கு.
உடல் ஏற்றுமதி. கண்ணைச் சிமிட்டியபடி சொன்னான் லெவி.
என்னு வச்சா?
லெவி ஆல்பியை பார்த்தான். உன் சம்சாரம் கேட்கறா. சொல்லுடா
நிம்மி, லெவி வீட்டு வாசல்லே மரத்தடுப்பு வச்சு கணக்கு வழக்கு பார்க்கற ஆப்பீஸ் வச்சிருக்கான், அங்கே சுவர்லே கரும்பலகையிலே அன்றாட நிலவரம் கணக்கு எழுதி வச்சிருப்பான் –
கையிருப்பு உடல்கள் 35
இன்றைய வரவு 15
வாடகைக்கு விட்டது 2
இன்று விற்பனை 9
இன்றைய கையிருப்பு 34
எனக்கு புரியலியே.
நிர்மலா லெவியைக் கேட்டாள்.
வேறே என்ன? அடிமை வர்த்தகம் தான்.
லெவி மற்றுமொரு முறை நிர்மலாவின் கையை இறுகப் பற்றினான்.
வாசலில் சத்தம். நடு வயசு நல்ல கருப்பன் ஒருவன் தடதடவென்று உள்ளே வந்து லெவிக்கும், ஆல்பிக்கும் முன்னால் மண்டியிட்டு வணங்கி எழுந்தான்.
லெவி எஜமானுக்கு நமஸ்காரம். ஆல்பி எஜமானுக்கு சுபமங்களம். லெவி எஜமான் மூணு வேலை செய்து முடிக்க உத்தரவு பண்ணியிருந்தார் முதலாவதா, ஒரு பொருளை, இல்லை, ரெண்டு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பத்திரமாக கொண்டு சேர்க்கணும், சேர்த்தாச்சு. ரெண்டாவது உத்தரவு ஆல்பி எஜமான் டாக்டர் கடை நடக்க ஏற்படுத்தி இருக்கற ஸ்தலத்தை நிறைய தண்ணீர் விட்டு சுத்தப்படுத்தியாச்சு. உங்க மூணு பேருக்கும் காலை தீனியும் சாயாவும் உண்டாக்கி இங்கே எடுத்து வரணும்னு மூணாவது கட்டளை. இதோ இந்தப் பாத்திரங்கள்லே அதி உன்னதமான, சுத்தமும், சூடும் சுவையும் கொண்ட முழுக்க சைவமான ஆகாரமும் கொண்டு வந்தாச்சு. எஜமான், நான் அடுத்து என்ன செய்யணும்?
லெவி நிர்மலாவின் விழிகளையே செயல் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அடிமை சேவகன் அவன் தோளை மெல்ல தட்டினான்.
இரு மண்புழுவே. பேசிக்கிட்டிருக்கேன் இல்லே.
பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தான் லெவி. எவ்வளவு இறங்கி வந்து சகஜமாகப் பேசினாலும் எஜமானன் எஜமானன் தான். அடிமை அடிமைதான்.
தொடரும்
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
