றெக்கை  அத்தியாயம் பத்து

This entry is part 10 of 20 in the series றெக்கை

சந்தைக்கு வந்தாச்சு. 

சாரட்டின் கதவு திறக்க வெளியே குதித்தபடி லெவி சத்தமிட்டான். ஆல்பி தொப்பியை சரி செய்துகொண்டு நிர்மலாவை பார்த்தான். 

வா பெண்ணே கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம்.

நிர்மலா முகம் இறுகி சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.

ஆல்பி முன்னால் நடக்க, சாரட் பக்கம் திரும்பப் போனான் லெவி.

தொப்பியை சாரட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன். எடுத்துக்கிட்டு வர்றேன். காலையிலேயே உஷ்ணம் தகிக்குது. 

சாரட்டுக்கு திரும்பப் போக திருப்தியான காரணம் சொல்ல முடிந்ததில் அவனுக்கு அரை நிமிட நிம்மதி.

நிர்மலா அவனை எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் பார்த்தாள். லெவி அவள் இருக்கை நோக்கி இரு கரமும் நீட்டி அவள் தோள்களைப் பற்றி முன்னால் இழுத்தான். பூமாலை போல அவள் உடல் அவனை இதமாக ஒற்றித் தாழ வந்தது. தரையில் கால் பதித்து இறங்க வந்த  பாதத்தை தாங்கினான்.   

பாதரட்சை வேணாமா?

சாரட் ஓட்டுகிறவன் பஞ்சமா பாதகம் செய்தது போல் பதைபதைத்து கையில் குறுஒரு ஜோடி காலணிகளோடு ஓடி வந்தான்.

நிம்மி, அப்படி கூப்பிடலாமில்லே? லெவி இரைஞ்சும் பார்வை பார்த்தான். குறு குறுத்தாள் நிர்மலா.

நாம் மூணு பேரும் டாக்டர்கள்.இன்னும் பல காலம் மருத்துவம் பார்க்கப் போறோம். அடிதடி, காயம், மண்டை நொறுங்கி ரத்தம் வடியறது, கண்ணுமுழி வெளியிலே வருவது இப்படி எத்தனையோ மனசுக்கு ஒவ்வாததெல்லாம் நம்ம தொழிலில் நாம் கடந்து போக வரும். அடிமைச் சந்தை  உள்ளே அஞ்சு நிமிடம்  போயிட்டு வர்றது அது போல ஒண்ணுதான்.

லெவியின் கரம் அவள் இடுப்பை வினாடி நேரம் வருடி பின்வாங்க கனவான் ரக தோரணைகளை திரும்ப அணிந்து வந்தான் அவன். 

பழசிலும் பழசாக அடிமைச் சந்தை வளாகம் இரண்டு அடுத்தடுத்த வீதிகளூடே படர்ந்து கிடந்தது. உள்ளே ஒரு இருளடர்ந்த மண்டபம், அதைச் சுற்றி நீள வாக்கில் ஏழெட்டு அறைகள். அவற்றுக்கு அடுத்து நாலுபேர் பக்கம் பக்கம் தோள் வைத்து நடக்கவோ என்னவோ வெளிவட்டம். ஆகாயம் பார்த்த வெளியில் அங்கங்கே தரைக்குள் பாறாங்கல் ஊன்றியிருக்கிறது. எப்படியோ அந்தப் பாறைக்குள் கெழு நாட்டி இரும்பு சங்கிலிகள் தொங்கின. சர்வ வியாபகமாக மூத்திர நெடி நாசியில் குத்தியது. பிராணன் அடுத்த வினாடி நீங்கும் தருணத்தில் உயிர் விடைபெறும் ஓசை. உலகத்தையே வென்ற மமதைச் சிரிப்பொலி, பெரியவர்களும் குழந்தைகளும் வீறிடும், தேம்பும் ஓசை, உரத்த குரல்களில் வாக்குவாதங்கள், காரணம் இல்லாமல் அதிகாரத்தை யாரோ யாருக்கோ உணர்த்த கன்னத்தில் அறைந்து கால்களுக்கு இடையே உதைக்க பீரிட்ட வலியின் தீன அலறல் சத்தம். தெய்வம் மறந்து போன இந்த இருள் வெளியில் ஆடு மாடு போல் மனிதர்களை வாங்கியும் விற்றும் அடகு வைத்தும் மும்முரமாக வர்த்தகம் நடக்கிறது. 

ஆல்பி குரல் கேட்ட மாதிரி இருந்தது. அடுத்த நிமிடம் லெவியின் உற்சாகமான குரல். சேர்ந்து சிரிக்கும் ஒலி. பக்கத்தில் தான் இருக்கிறார்கள் என்பது ஏதோ விதத்தில் ஆசுவாசமாக இருந்தது. 

நடு மண்டபத்தைச் சுற்றி இருந்த நான்கைந்து அறைகள் பூட்டியிருந்தன. அவற்றில் ஒன்றை திறந்து கொண்டிருந்த சிப்பந்தி நிர்மலாவுக்கு வந்தனம் சொன்னார். எதிரே வந்து மரியாதையோடு வினவினார் –

எஜமானி அம்மா. ஏழெட்டு வயசில் ரெண்டு பையன்கள் ரொம்ப குறைந்த விலைக்கு வாங்கித் தரேன். அருமையான வேலைக்காரங்க, தோட்டத்துலே நாள் முழுக்க உழைக்க இப்பவே பழக்கப்படுத்திட்டா இன்னும் அறுபது வருஷத்துக்கு வேறே யாரையும் தேவைப்படாது போகும். நாலு தலைமுறையா நோய்நொடின்னாலே என்னன்னு தெரியாத குடும்பம். வேலைக்கு எப்போதாவது ஒருநாள் மட்டம் அடிச்சான்னு வந்தா என்னை கூப்பிடுங்க. வாங்குங்க எஜமானி அம்மா. காலையிலே முதல் விற்பனை இதுவா இருக்கட்டும். உங்க அதிர்ஷ்டக் கையாலே ஆரம்பிச்சு வைக்கலாமா?

அவன் சொல்லிக்கொண்டிருந்த போது உச்சத்தில் பீரிடும் பயமும், ஆழ்ந்த உறக்கத்தின் நடுவே எழுப்பி அனுப்பப்பட்ட அதிர்ச்சியும், என்ன ஏது என்று புரியாத சோகமுமாக அழுதபடி இருந்த இரண்டு நல்ல கருப்பு பையன்களை இழுத்துக்கொண்டு ஒரு முரடன் அறைக்கு வெளியே நின்றான். அந்தக் குழந்தைகளைப் பார்க்க நிர்மலாவின் மனம் பதறியது. 

அவள் நோக்குவதை அறிந்து முரடன் அந்த இரு தளிர்களை கால் கொண்டு சவட்டினான். 

என்ன பார்க்கறீங்க சிக்னோரா? நான் உங்க ஊரான் இல்லே. போர்சுக்கல் காரன். இந்த பிராணிகளை வாங்கி விற்கிறவன். நீங்க வாங்கப் போறதுன்னா நில்லுங்க. இல்லேன்னா போய்க்கிட்டே இருங்க.

அவள் திரும்ப தரையில் புரண்டு அழும் பூக்களை நோக்கினாள். அவை முரடனின் அடுத்த தாக்குதலை எதிர்பார்த்து விதிர்விதிர்த்துத் தரையில் கிடந்தபடிக்கே சிறுநீர் கழித்தன. முரட்டு தேவடியா மகன் காலை தூக்கினான்.

கிருஷ்ணா, ஸ்ரீக்ருஷ்ணா, இந்த புழுத்த நாயோட காலை எப்பவும் அசைக்க முடியாதபடி பாரிசநோய் தாக்க கருணை செய்யூ அம்பலபுழ ஸ்ரீக்ருஷ்ணா 

அந்த சீக்குப்பிடித்த முரட்டு பன்றி கைகால் மரத்துப் போனான். போவான். நிர்மலா வேண்டுதல் விடுத்ததால், நாளை சாவான் கபோதி.

நாலைந்து பேர் கூட்டமாக பேசிக்கொண்டு உள்ளே வர நிர்மலா அழுகையை அடக்கியபடி வெளியேறினாள். 

மண்டபத்தில் என்னதான் நடக்கிறது என்று நோக்க அங்கே நுழைந்தாள்.  முதலில் தட்டுப்பட்டது நேற்று பாடியபடி ஊர்ந்த அடிமை ஊர்வலம் . அவர்கள் கழுத்தில் பட்டை இல்லாமல் போயிருந்தது, கானம் பாடி வந்த அந்தக் கிழவன் எங்கே? காணோம்.

 நடுநாயகமாக உடம்பில் கோவணம் மட்டும் மானம் மறைக்க அணிந்து தரையில் குத்த வைத்திருந்த வேறொருவன்  பாட ஆரம்பித்தான். நேற்று பாடிய அதே பாடல். நூறு பாட்டு பாடினாலும் அந்த துயரம் மாளாது. நூறுக்கு மேல் எண்ணத் தெரியாது அந்தப் பாவப்பட்ட மனுஷர்களுக்கு.

இசைஞனுக்கு அருகே நின்றிருந்த நீச வணிகன் ஒருத்தன் கைப்பிரம்பை   முதுகில் விளாசினான்.  எனக்கு என்ன போச்சு என்று விட்டேத்தியாக உணர்ந்த நிமிடங்களை தொடர்ந்து மனதில் சேமித்து அவன் பாட்டு நீண்டது.

 மணிச் சத்தம் உக்ரமாக ஒலிக்கிறது.

சித்திரம் : ஷங்கரா

ஏலம் தொடங்குகிறது. இந்த அழகான இளம்பெண் உங்களுக்காக காத்திருக்கிறாள். எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடிய அடிமைப் பெண்டு. ஏலம் விடும் எனக்கே இவளைப் பார்க்க என்னென்னமோ செய்யத் தோன்றுதே. நீங்கள் தூசியத்தனை விலை கொடுத்து வாங்கினால் நாள் முழுக்க, ராத்திரி முழுக்க, எப்படி வேண்டுமானாலும், என்றால் எப்படி வேண்டுமானாலும் தான், இவளை சந்தோஷத்தோடு உபயோகிக்கலாம். அனுபவிக்கலாம். வாடகைக்கு விட்டு காசு சம்பாதிக்கலாம். தொடக்க விலை நூறு ரிண்ட். நூறு ரிண்ட். 

கையில் எடுத்த மணியை ஒலித்து தரையில் சம்மணம் கொட்டி உட்கார்ந்து அழ ஆரம்பித்த கன்யகையின் தலைமுடியைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். இவளின் ஸ்தன தர்சனம் காட்டித் தாரும், இவளை நக்னையாக்கி நிறுத்தும்  என்று காவாலித்தனமான கூச்சல்கள் கூட்டத்திலிருந்து வெளிப்பட நிர்மலா அவசரமாக வெளியேறினாள். 

இந்த பெண்ணுக்கு என்ன மாதிரி நீதி கிடைக்கப் பண்ணுவாய் ஸ்ரீக்ருஷ்ணா?’

போடி குண்டச்சி நிம்மி. ஒரே நாளில் செய்து முடிக்க எவ்வளவு காரியம் கொடுக்கறே. எனக்கு இப்போது பால் பாயசம் குடிக்கணுமாக்கும்.

சரிடா வெண்ணெய் களவாணி. நாளைக்கு முடியுமான்னு பார்.

ஆல்பீ எங்கே போய்ட்டே. அவள் கத்தினாள்.

இங்கே தான் கண்ணம்மா. குரல் மட்டும் வந்தது.

அவளை கடந்து போன சீமாட்டி ஒரு நொடி நின்றாள். நிர்மலாவை கிசுகிசுத்த குரலில் விசாரித்தாள் அவள்.-

சீமாட்டி, நீங்களும் என்னைப்போல் தானா? கண்ணால் பார்த்தால் போதாது. கை கொண்டு பரிசீலனை செய்தாலே  தோஷமும்  விசேஷமும் புலப்படும். இந்த பக்கம் வாங்க, யாரோ வாந்தி எடுத்து வச்சிருக்காங்க, இந்த அறைதான். வாங்க உள்ளே போகலாம்.

அறையில் கொளுத்தி வைத்த மெழுகு திரிகள் இங்கே ஏன் வந்தே என்று நிர்மலாவை வினவின. அந்த அறைக்குள் சுவரை ஒட்டி ஒரு  ஸ்கிரீன் எதையோ மறைத்துக் கொண்டிருந்தது. சந்தைக்கு வந்த சீமாட்டி கைகளில் கையுறைகளை அணிந்து கொண்டாள். நிர்மலாவை காத்திருக்க வேண்டினாள். ஓடி திரையை முழுக்க இழுத்தாள். 

திரைக்கு பின்னால் வடிவான உடம்போடு ஆறு அடிமை இளைஞர்கள் முக்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். ஆறு அடிமைகளும் எழுந்து நின்றார்கள். திடகாத்திரர்களான முழு நக்னர்கள் அவர்கள். பிரமாதம் பிரமாதம் என்று அவள் வாய் சொன்னதை நம்பவில்லையோ என்னமோ, அந்த சீமாட்டியின் கரங்கள் அதித சுறுசுறுப்போடும் நளினத்தோடும் செயல்பட்டன.  

நிர்மலா இன்னொரு முறை வெளியே ஓடி வந்தாள். இனி ஆயுசுக்கும் அவள் இந்த நரகத்துக்கு வரமாட்டாள்.

மண்டபத்துக்கு நேரெதிரே பூட்டி வைத்திருந்த அறை இப்போது ஜன்னல் திறந்து வெளிச்சமாக இருந்ததை நிர்மலா கவனித்தாள். அறையை பெருக்கி கொண்டிருந்தாள் ஒரு கிழவி. முதியவன் ஒருத்தன் அங்கே கிடந்த மேசை நாற்காலிகளை தூசி தட்டிக் கொண்டிருந்தான்.  

லெவியை பார்த்து வேகமாக பின்னால் வந்து அவன் பாதத்தில் முத்தமிட்டு மண்டியிட்டான், கிழவி அவனுக்கு அடுத்திருந்து மண்டியிட்டாள்.

லெவி எஜமான், இந்த கடைப்பட்ட கிழட்டு அடிமை ராவியோட வந்தனம் ஒரு நூறு உங்கள் காலடியிலே சேரட்டும். எஜமானோட தகப்பனார் பெரிய எஜமானரோட  பிரியமான தாசியாக அவருக்கு எல்லா வித சந்தோஷமும் சம்திருப்தியும் கொடுத்து வந்தவளும், சின்ன எஜமானாக சமூகம் இருந்தபோது தங்களுக்கு பல தினுசிலும் உடலுறவு கத்துக் கொடுத்தவளுமான என் மனைவி யெரியோட வந்தனம் இன்னொரு நூறும் உமக்கே சேர்க.

அவன் ஒரு நிமிடம் மூச்சு வாங்கினான். நிர்மலா வெறுப்போடு வெளியே போனாள்.

லெவி, என்ன விளையாட்டெல்லாம் ஆடினே நீயும் அவளும்?

அல்பீ  லெவியின் தோளில் பாராட்டாக தட்டி இங்லீஷில் கூறினான்.

கிழவியை சாதாரணமாக நினச்சுடாதே. இங்க்லீஷ் செக்ஸ், இந்திய உடல் உறவு, சீன செக்ஸ், அரபு படுக்கை கலை இப்படி நிறைய கத்து வச்சிருக்கா.

அல்பீ ஆச்சரியம் காட்டி, கேட்டான் – இதிலே இங்க்லீஷ் செக்ஸ் எப்படியானது?

ரெண்டு பேரும் தனித்தனியா படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக்கிட்டு உறங்கறது.

லெவி இன்னொரு முறை சிரிக்க கிழவனும் சங்கடமாகச் சிரித்தான். கிழவி தரையைப் பார்த்தபடி குனிந்திருந்தாள். திடீரென்று இரண்டு பேரும் கேவுகிறது போல் குரல் உயர்த்தினார்கள்.-

லெவி எஜமான். நீங்க எவ்வளவு திட்டினாலும் அடிச்சாலும் இந்த ரெண்டு கிழட்டு நாய்களும் உங்க காலடியை விட்டு எங்கேயும் போக மாட்டோம்.

திரும்பிப்போக உத்தேசித்து வாசலுக்கு நடந்த நிர்மலா உள்ளே வந்தாள். கிழவி லெவி காலில் விழுந்து அலறினாள்.

எஜமான், எங்க ரெண்டு பேருக்கும் உங்களை விட்டா போக்கிடம் ஏது?   அரைச் சாப்பாடு போடுங்க. நீங்க உடுத்து கிழிச்சதை போட்டுக்க கொடுங்க. தயவு செய்து வேற எஜமான் யார் கிட்டேயும் எங்களை வித்துடாதீங்க. எங்களை     காப்பாத்துங்க எஜமான். வேறே யாராவது இந்த ரெண்டு கிழத்தையும் பூங்கா வாசல்லேயும். சர்ச் ஓரத்திலேயும் கையில் தட்டை வச்சுக்கிட்டு ஹெயில் மேரின்னு கூவி பிச்சை கேட்க வைப்பாங்க. இத்தனை வருஷம் கௌரவமாக உழைச்சு கிடந்துட்டு பிச்சை எடுத்து உயிர் போக விட்டுடாதீங்க.

கல்லையும் கரைக்கும் தீனமான குரல் எழுப்பி அந்த பிரலாபம் நீண்டது. நிர்மலா மவுனமாக கண்ணில் நீர் வழிய நின்றாள். ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக லெவியை அருகில் அழைத்தாள். மிக அருகே நகர்ந்தான் அவன். பேசிக்கிட்டு இருங்க வந்துடறேன் – ஆல்பீ சிறார் பள்ளி மாணவன் போல ஒரு விரலை உயர்த்தியபடி போனான்.

லெவி, ஒரு உதவி செய், சில் வ ப்ளே. நிர்மலா கேட்டாள்.

செஞ்சா என்ன தருவே? லெவி அவளை விழுங்குவது போல் பார்த்தபடி கேட்டான்.

அவன் கையை நாசுக்காக பற்றினாள் நிர்மலா. முத்தமிட்டு விலகினாள். எதிர்பாராது வந்த சந்தோஷத்தில் திளைத்தான் லெவி. ஆல்பீ திரும்பி வந்ததை அவன் கவனிக்கவில்லை.

என்ன உதவின்னு நீ கேட்பேன்னு நினைச்சேன்.

சாரி, நிம்மி நான் அவசரத்திலே இருக்கேன். போன மாசம் என்னிடம் வாங்கிய அடிமையை திரும்ப எடுத்துக்கிட்டு பணத்தை வாபஸ் பண்ணு, அவனுக்கு ஒரு எழவும் தெரியலேன்னு ஒரு கஸ்டமர் கேட்கறார். 

எனக்கும் ஆல்பீக்கும் அவசர தேவை  – நிர்மலா சொல்வதை கேட்காமல் இருக்க முடியாது

 வேறே ஒண்ணுமில்லே. எனக்கும் ஆல்பீக்கும் டிஸ்பென்சரியிலே ஒரு அசிஸ்டண்ட் இருந்தா  நல்லா இருக்கும்னு தோணறது. இன்னொரு டாக்டர் இல்லை. வென்னீர் போட்டு தினம் உபகரணங்களை சுத்தப்படுத்த, தினம் ரெண்டு வேளை தரை மெழுக, சமையல் பண்ண எனக்கு உதவி செய்ய, காய்கறி, பலசரக்கு வாங்கிவர. மாதக் கடைசியிலே நமக்கு வரவேண்டிய பாக்கி ஃபீஸ் வசூல் பண்ண .. ஒரு ஆண், ஒரு பெண் இருந்தா இதெல்லாம் செய்யச் சொல்லலாம், இந்த கிழவன் கிழவி ஜோடி மாதிரி … முடிந்தவரை சம்பளம் தர ரெடி

மாதிரி என்ன, இந்த ஜோடியையே எடுத்துக்க. நான் அவங்களை வீட்டுலே இருக்கற பழைய மரச்சாமான் போல நினைக்கறேன். பிரயோஜனமில்லாமல் இடத்தை அடைச்சுக்கிட்டு கிடந்தால் தூக்கி கடாசு. உபயோகப்படுவாங்கன்னா நல்லது தான். வச்சுக்கோ. ஓடற வரைக்கும் ஓடட்டும். நிம்மி கேட்டபடி செய்யலாம், ஆல்பி நீ என்ன சொல்றே? 

செஞ்சுடலாம். பெருந்தன்மையோடு சொன்னான் ஆல்பீ.

– தொடரும்

றெக்கை

றெக்கை– அத்தியாயம் 9 றெக்கை– அத்தியாயம் 11

Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.