- றெக்கை – அத்தியாயம் 1
- றெக்கை – அத்தியாயம் 2
- றெக்கை – அத்தியாயம் மூன்று
- றெக்கை – அத்தியாயம் 4
- றெக்கை– அத்தியாயம் 5
- றெக்கை– அத்தியாயம் 6
- றெக்கை– அத்தியாயம் 7
- றெக்கை– அத்தியாயம் 8
- றெக்கை– அத்தியாயம் 9
- றெக்கை அத்தியாயம் பத்து
- றெக்கை– அத்தியாயம் 11
- நாவல் றெக்கை– அத்தியாயம் 12
- றெக்கை – அத்தியாயம் 13
- றெக்கை – அத்தியாயம் 15
- றெக்கை அத்தியாயம் 16
- றெக்கை அத்தியாயம் 14
- றெக்கை – அத்தியாயம் 17
- றெக்கை – அத்தியாயம் 18
- றெக்கை – அத்தியாயம் 19
- றெக்கை – அத்தியாயம் 20
- றெக்கை – அத்தியாயம் 21

வீட்டுக்குள் இருந்து கால் சலங்கை கட்டி ஆடுகிற மாதிரி தொடர்ந்து சிரிப்பு சத்தம். மூன்று பெண்கள். ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு பேசவும், பேசாமல் வாயை குவித்து அடுத்த நகைப்புக்காக காத்திருக்கும் செவியழகும் நிர்மலாவுக்கு ரம்மியமாக தோன்றியபடி இருந்தன.
அம்மாடி மூணு பொண்ணூகளா, உங்க ஒவ்வொருத்திக்கும் பெயர் கிடையாதா என்று சிரித்தபடி வினவினாள். ஏனில்லெ அம்மாடி ஒண் டு திரி.
அது நல்லா இல்லே கங்கா யமுனா. காவேரி,
அந்தப்படியே அவர்கள் நாமகரணம் செய்யப்பட்டார்கள். நிர்மலா மேட்ரிட்டில் இருந்து கொண்டு வந்த ஏழு பெரிய தகரப் பெட்டிகளை ஒவ்வொன்றாக திறந்து வெளியே வைத்தார்கள்.
முதல் பெட்டி உள்ளே புல்லாங்குழல் வாசிக்கும் ஸ்ரீகிருஷ்ணன் ஜம்மென்று பசு மேல் சாய்ந்து நிற்கும் சந்தன விக்ரகத்தை கங்கா எடுக்க, விசி அச்சுதம் கேசவம் என்று உரக்க மென்மை இழையோட நாமம் சொல்லி பிரார்த்தனை செய்தாள்.
அக்கா அம்மாடி – இது சிலுகை நாட்டி பாடற பாட்டு இல்லியே. நீ அதைத்தானே உன் ப்ரேயருக்கு வச்சிப்பே என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் காவேரி,
என்னை சிலுவைக்கு மாத்திக்க சொன்னார் எங்க அப்பா. மூணு வருஷம் வேதத்திலே இருந்து பேச்சலர் ஓஃப் மெடிசன் பட்டமும், எல்.எம்.பி Licensed Medical Practioner சர்ட்டிஃபிகெட்டும் வாங்கினேன், எங்கே இருந்து வந்தேனோ அங்கேயே மனசாலே திரும்பிட்டேன்.
உங்க வீட்டுக் காரவுங்க ஒண்ணும் சொல்லலியா?
இது எனக்கு மட்டும் தெரிஞ்ச ஒண்ணு
மூன்று நல்ல கருப்பு நதிகளும் வலது கை விரல் மடக்கி ஹிப் ஹிப் ஹுரே சொல்ல நிர்மலாவுக்கு அவள் பிறந்த மண்ணும் பேசும் தமிழும் மலையாளமும், உணவும் அவள் எப்போவாவது திரும்பி வரக் காத்திருக்கும்.
கிருஷ்ணனை வாங்கி வாயில் முத்தமிட்டாள் நிர்மலா.
தெய்வத்துக்கு வாயில் முத்தமிடலாமா? யமுனா கேட்டாள்.
ஓ இடலாமே என்று நிர்மலா திருப்பினாள்.
எங்க சாமி யொரூபா ரொம்ப கோபக்காரன். எல்லாத்துக்கும் அபராதம் விதிச்சுடும். உங்க சினேகிதி இருக்கே. அவங்க
யாரு? வாய் துளிக்கூட அசையாமல் மூன்றும் பெஞ்சி எனறு சொன்னார்கள்.
விரதம் இருக்க வேண்டிய தினத்தில் மூக்கு பிடிக்க சாப்பிட்டதாக புகார். பூசாரி மூலம் யொரூபாவுக்கு தெரிஞ்சது. இன்னொரு புகார், அதே பெஞ்சி மேல்தான்
விரத மீறலுக்காக யொரூபா தெய்வம், பெஞ்சி ஒரு ஆடு பூசாரிக்குத் தர வேண்டும்னு விதிச்சது. அவங்க மாட்டேன்னு ரொம்ப நிச்சயமாக சொல்லிட்டாங்க, யரூபாவுக்கு வந்ததே கோபம்.
பெஞ்சி அக்கா துணியை எல்லாம் அவுத்துட்டு மொட்டக்கட்டயா ஒரு மணி நேரம் நிக்கணும். ,
பூசாரி தான் தெய்வம் பேசினதை உடனுக்குடன் கேட்டு வந்து சொல்வார். உடனே வாயை மூடச் சொல்லி சொல்லி விட்டிருக்கிறதா தெய்வம்னு தெரியவில்லை.
அப்புறம் கொஞ்சம் சலுகை காட்டியது. பெஞ்சி நக்னையாக நிக்கும்போது தெய்வமும் பூசாரியும் தான் அதை பார்க்க முடியும்.
அடுத்த வாரம் பூசாரி வீட்டில் ஆடு வந்து சேர்ந்தது. பெஞ்சி வீட்டுக்காரனே ஓட்டி வந்துவிட்டுப் போனான்.
நிர்மலாவுக்கு ஏனோ சிரிப்பு வந்தது. அது விரிவதற்கு முன்னால் கைக்குட்டை கொண்டு அதை துடைத்தாள் எது எப்படியோ அந்த கிழட்டு பூசாரிக்கு பெஞ்சியை தலை முதல் கால் வரை ஆற அமர உக்கார்ந்து பார்க்க முடியாமல் போச்சு.
மூன்று நதிகளும் இன்னொரு முறை கலகலத்தன.
உஷ் அவங்களுக்கு கேட்கப் போறது
அடுத்த வீட்டை சுட்டி உதட்டில் விரல் வைத்து எச்சரித்தாள் நிர்மலா. சத்தம் அடங்கும் முன், பெட்டியில் இருந்து ஒரு வண்ண ஓவியத்தை எடுத்தாள் யமுனா. நாலு துணி ஒன்றன் மீது ஒன்றாக மேலே சுற்றி வைத்த ஓவியம் அது..
எல்லா ஒப்பனைகளும் உரிந்த பிறகு பளிச்சென்று முழுவதாக, எல்லா வண்ணங்களும் ஓவியன் வரைந்த அசலாக உயிர்த்தன. ஓவியத்தில் நடுவில் கொஞ்சமும் இயற்கை மாறாத புல்தரை. இரண்டு ஆண்கள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருவர் வெள்ளயர். மற்றவர் நல்ல கருப்பர்.ஒரு பேரழகி ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள். அந்தப் பெண்ணின் ஒரு பாதம் முதல் ஆண் மடியிலும் அவளது இன்னொரு பாதம் மற்ற ஆண் மடியிலும் மெல்லத் தொட்டு இருக்கின்றன. ஓவியத்தின் கீழே என்னமோ எழுதியிருக்கிறது,
இங்கிலீஷ்
எழுத்துக்கூட்டிப் படிக்க சிரமப்படும் அந்த நதிப் பெண்களுக்காக அதை நிர்மலா வாசித்தாள் –
Inspired by Eduard Manet’s Luncheon on grass எடுவர்ட் மனேயின் இம்ப்ரஷனிஸ்ட் ஓவியமான புல்தரையில் பகல் உணவு அளித்த உற்சாகத்தில் (வரைந்தது)
ஆர்வத்தோடு பார்த்த மூன்று பெண்களும் அந்தப் படம் ஏதோ மனசைப் படுத்துகிறது என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்கள். ஐந்து நிமிடம் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
முடிந்து ஒரே குரலில் சொன்னது –நிம்மி அக்கா படத்தில் தேவதை கணக்கா ஒருக்களிச்சு படுத்திருக்கறது நீங்க தானே? நல்லா இருக்கு ஆனா தப்பு.
எது? நான் ரெண்டு பேர் மடியில் கால் வச்சிருக்கக் கூடாது. அதானே?
அதில்லே அக்கா, ஒவ்வொரு தடவை உங்க பேரை நீங்க சொல்லும்போதும் தெய்வம் உங்களுக்கு விதிச்ச உயிரோடு இருக்கும் காலத்திலே ஒருநாள் குறைஞ்சுடும். உங்களை படமாக வரைஞ்சா ஒரு வருடம் குறஞ்சு போயிடும். உஙகளை பார்க்க பாவமா இருக்கு அக்கா. விடுங்க. நான் பாத்துக்கறேன். பூசாரியை பார்த்து பிராயச்சித்தம் என்னன்னு கேட்கறேன்.
அம்மாடி அய்யோ அம்மாடி என்று நிர்மலா கங்காவின் முதுகில் தட்டிப் பெரிதாக சிரித்தாள்.நல்ல வேளை பசங்க பள்ளிக்கூடம் போயிருக்காங்க.
அவளோடு கூட மூன்று நதிகளும் சிரிக்கிறார்கள். காவேரி குசினிக்குள் போய் மர அடுப்பில் மரச்சுருள் நிரப்பி நெருப்பு உண்டாக்கினாள்.
காலையிலேயே பெஞ்சி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போன பசும்பாலோடு தேயிலை கலந்து காய்ச்சினாள். வடிகட்டற துணி எங்கே வச்சிருக்கு? நிர்மலா ஒரு புதுக் கைக்குட்டையைக் கைகாட்டினாள். வடிகட்டி பாத்திரத்தில் வந்தது அடர்த்தியான டீ. சர்க்கரை தான் இல்லை.
அஸ்கா சீனிச் சர்க்கரை எங்கே வச்சேன் தெரியலிய.
அவள் வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தபோதே அதை ஓவியம் எடுத்து வந்த பையில் கண்டார்கள்.ஏன் அங்கு வைத்து மூட்டை கட்டினார்கள் என்று தெரியவில்லை.
அந்தப்படிக்கு சீனியடைத்த தகர டப்பாவை மீட்டெடுத்தார்கள். குழந்தைகள் போல் கூவென்று கூவிக்கொண்டு ஆளுக்கு ஒரு கரண்டி சர்க்கரையை லாஹிரி வஸ்து போல நாவில் சுழற்றி அரைக்கண் மூடி மோடி கிறக்குதடி தலையை என்று கிறங்கிப் போனவர்களாக உண்டார்கள்.
நிர்மலா பொய்க் கோபத்தோடு சர்க்கரையை கைப்பற்றினாள்..
ஜாக்கிரதை பொண்ணரசிகளா. இப்படி சர்க்கரையை ஸ்வாஹா பண்ணினா நாளைக்கு வயறு அடைச்சுண்டு வலிக்கும்.
நிர்மலா இன்று இந்த உற்சாகம் பெருகி வடிய கடைசி தினம். நாளை டிஸ்பென்சரி துவங்கி அதற்கு அப்புறம் அவள் டாக்டர் ஆகிவிடுவாள். சின்னப் பெண்களோடு கூட கத்திக் கீசி கிறீச்சிட்டு தரையில் விழுந்து அடக்க முடியாமல் சிரிக்க இன்னும் ஏதாவது பாக்கி இருந்தால் அதை உடனே நடப்பாக்க வேண்டும்.
யமுனா ஒரு கையில் சாயா கோப்பையோடு தீனி மேசையில் பரத்தி வைத்த அந்த ஓவியத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.
தடிச்சி நீ படத்து மேலே டீயைக் கொட்டத்தான் போறே
படத்துக்கு மேலே ஏன் டீயை கொட்டச் சொல்றே?
யமுனா அன்போடு விசாரித்தாள். நிர்மலா அவசரமாக நகர்ந்து அவள் கரத்திலிருந்த சாயா கோப்பையை வாங்கி தீனி மேசைமேல் வைத்தாள்.
சாரி அல்பீ. உரக்க முணுமுணுத்தாள்.படத்தில் அமர்ந்திருந்த முன்வழுக்கை வெள்ளையன் சிரிக்க முற்பட்டான். அவள் கையில் படத்தோடு தீனி மேசைக்கு அருகே நிற்க, அடுத்தவர் பற்றிய விசேஷங்களை ஆர்வமாகக் கேட்கும் முனைப்போடு மூன்று நதிகளும் அவளைச் சுற்றிக் கொண்டார்கள்.
என்னைப் பற்றி இங்கே யாருக்கும் தெரியாது. மந்திரம் மாயம் பண்ற டாக்டர். பசங்க பறக்க முடிஞ்சவங்க. றெக்கை கட்டிண்டு இல்லே றெக்கை முளச்சு. இப்படித்தான் பொதுவிலே நினைப்பு,
என் குடும்பம் தமிழும் மலையாளமும் பேசற பிராமணக் குடும்பம். எங்க அப்பா நான் அஞ்சு வயசாக இருக்கும்போதே வேதத்துலே ஏறிவிட்டார். அதாவது கிறிஸ்தவராயிட்டார். அவரும் என் அக்கச்சி சாரதாவும் தீவிரமான கிறிஸ்துவர் ஆனாலும் எங்கம்மா சுத்தமான வைதிக இந்துவாகத்தான் அவ காலமாகிற வரைக்கும் இருந்தாள். வேதத்திலே ஏறினதாலே எங்கப்பாவுக்கு இட்டலிக்கடை அதாவது தென் இந்தியாவிலே கோடிக் கணக்கான பேர் ஆகாரம் கழிக்கற பலகாரங்கள் உண்டாக்கி விற்கும் கடை அது வைக்க அப்பாவின் ஆப்தர்கள் உதவி பண்ணினாங்க.
ஆக வீட்டுலே எந்த குழப்பமும் இல்லாம நானும் எங்க அக்கச்சியும் கலாசாலை படிப்பு முடிச்சு காலேஜுக்கும் மேலதிக கல்விக்காக போனோம். நான் மெடிகல் பிராக்டிஷனர்.சர்ட்டிபிகேடும் அக்கச்சி இங்க்லீஷ் இலக்கியத்திலே .எம் ஏ-வும் வாங்கி்னோம்.
அக்கச்சி சாரதா என்ற தெரிசா ஒரு இங்கீலீஷ்காரரைக் கல்யாணம் செஞ்சுண்டு இங்லாந்துலே தாமசிக்க போய்ட்டா, நான் ஜெர்மனி போனேன். இந்தப் படத்துலே எனக்கு வலது பக்கம் இருக்கற முன்வழுக்கைக்காரர் ஆல்பி என்ற ஆல்பர்ட் வாக்னரை மோதரம் மாத்தி கல்யாணம் செஞ்சுண்டேன். மெடிக்கல் காலேஜ்லே என் கூடப் படிச்சவன். ப்ரஷ்யா ஸ்வதேசி. பெர்லின்காரனாக்கும் அவன்.
ரெண்டு பேரும் அங்கே மெடிக்கல் பிராக்டிஷனர்களாக சேர்ந்து ஒரு டாக்டர் கடை ஆரம்பிச்சு அது சரியா போகலே. இவா அதான் ஆல்பியோட குடும்பம் யூத மதக்காராள். ப்ரஷ்யாவிலே யூதன்னா வெறுப்பு யூதனையும் தேளையும் சேர்ந்து பார்த்தா யூதனை முதல்லே அடி இப்படி என்கிட்டேயே பகடின்னு சொன்னா அக்கம்பக்கத்துலே. அப்போ தான் பகவான் கிருபையிலே நல்லதா வழி பிறந்தது.
நிம்மி, பசங்க ஸ்கூ.ல்லே பசியாற்ற நேரம் வந்திருக்கு. நீ இவங்களோட வெட்டி விருதாவா வம்பு பேசிட்டிருக்கே. கிளம்பு. உன் பசங்களுக்கும் நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்,
பெஞ்சி பூவாகச் சிரித்தாள். .மூன்று நதிகளும் போய் விட்டார்கள்.
டாக்டரம்மா
டேவ் சத்தமாக அழைத்துக் கொண்டு வாசலில் நின்றான். வலனாடு முக்கிய பிரமுகன் குசலம் விசாரித்து முடிந்தது,
பென்சி கொஞ்சம் அந்தாலே நிக்கரியா? நன்றி குழந்தே.
தொப்பையத் தடவிக்கொண்டு டேவ் சிரித்தான்.
முதல்லே போன வாரம் யொரூபா தெய்வம் விதித்தபடி விடுமுறை அன்று நாங்க ஏதோ போதையிலே புட்பால் மாட்ச் நடத்திட்டோம். அதுக்கு சுத்த யூதத்தியான உங்களை குலவையிட்டு வரவேற்காதது மட்டும் இல்லே எல்லாத்துக்கும், மோசமாக எல்லோரும் கூட்டாக உட்கார்ந்து எதயோ எல்லாம் உங்கள பார்க்க வச்சுட்டாங்க சாரி. உள்ளே வரலாமா டாக்டர்.
ஆல்பீ உறவு கொள்ளும் முன்னால் மரியாதையோடு வினவித்தான் வருவான். அந்த ஆரடி ஜெர்மானியன் எங்கே இந்த நாலடி நல்ல கருப்பன் எங்கே.
விவஸ்தையே இல்லாமல் எதைப் பற்றி எப்போது நினைப்பு.
வரச்சொல்லி கையசைத்தாள். அவன் குஷியாக படி ஏறி வந்து பெஞ்சில் அமர்ந்தான்.
நீங்க வேற மர ஜாமான் எல்லாம் கொண்டு வந்தீங்களா? சைமன் டாக்டர் பெஞ்சு, சேர், டேபிள் எல்லாம் வச்சுட்டு போயிருக்காரே
டேவ் ஆச்சரியப்பட்டான்.
அதே தான் இதுவும். வீட்டு சொந்தக்காரர் ஒரு பூட்டு . மட்டும் பூட்டி இருந்தார் அங்கே சைமன் டாக்டர் அவரோடது எல்லாம் போட்டு வச்சிருந்தார்.
எல்லாத்தையும் தாராளமா எடுத்துக்குங்க. அப்புறம் இன்னொண்ணு சைமன் டாக்டர் நோயாளியை சோதனை செய்து மருந்து கொடுக்கறதுக்கு கட்டணம் ஒண்ணும் வாங்க மாட்டார்.
அப்புறம் காத்தையா தின்னுண்டு இருந்தார்?
நிர்மலா கேட்க நினைத்தாள். தொண்டையில் ஆரஞ்சு மிட்டாய்,
எளிமையான திட்டம் சைமன் டாக்டரோடது. சைனாவிலே வழக்கத்திலே இருக்காம். எப்படின்னா, ஒவ்வொரு குடும்பமும் மாதாமாதம் டாக்டருக்கு ஒரு ரூண்ட் செலுத்தணும் அந்த நல்ல குடும்பம் நோய்வாய்ப்பட்டா டாக்டர் கட்டணம் வாங்காமல் விலையில்லா மருத்துவம் செய்வார். நல்லா இருக்கு இல்லே?
டேவ் சிலாகித்த சைமன் டாக்டரின் புது திட்டத்தை தன் பங்குக்கு பாராட்டினாள் நிர்மலா. எதோ நினைவு வர குசினிக்குள் அவசரமாக போனாள்.
ஐயோ ஸ்கூல் விட்டிருக்குமே. அவள் சஞ்சலப்பட, ஸ்கூல் ரெண்டு மணிக்குத்தான் விடுவாங்க .நிம்மு பயப்படலாமா. பெஞ்சி இருக்கா விட்டுடுவாளா என்ன.
போடி எருமை என்று நிஜமாகவே கோபம் மேலெழுந்திட கண்டிப்பான குரலில் சொன்னாள்.நதிகள் அதைக் கேட்டிருக்கலாம்,.
சாரிம்மா சாரிம்மா மீனும் வறுவலும் சமச்சு, சாப்பிட்டு பார்த்தோம் நானும் கொல்லனும். நாய் கவ்விட்டு வந்த மாதிரி வஸ்து. அந்த வாயோட நிம்மிக்கு மரியாதை பண்ணிட்டேன். சாரிம்மா.
நிர்மலா அவள் கைக்கடியாரத்தை பார்த்தாள். இப்ப போனால் ஸ்கூல் விட்டு கூட்டிக் கொண்டு வர சரி்யாக இருக்கும்.
பொண்ணுங்களா நாளைக்கு ஆஸ்பத்திரி ஆரம்பம் இருக்கு. குளிச்சுட்டு வாங்கடி சுத்தபத்தமா கங்கா, யமுனா, காவேரி, பெஞ்சி வா போகலாம்.
அம்மா, நாங்க வந்தாச்சு
விசியும் கிட்டாவும் படி ஏறிக்கொண்டிருந்தார்கள். புது சிறகுகள் அவர்களுக்கு முளைத்திருந்தன.
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
