றெக்கை –  அத்தியாயம் 24  

This entry is part 24 of 24 in the series றெக்கை

இந்த டயரிக் குறிப்புகளை நிகழ்ந்த தேதி, மாதம், வருடம் துல்லியமாக எழுத முடியவில்லை என்பதில் எனக்கு சற்று மனத் தாங்கல் உண்டு.  நேற்று பகல் என்ன உண்டாய் என்று கேட்டால் பாகல்காய் பிட்லை, கொட்டு ரசம் என்று உடனே சொல்லிவிடலாம்.மூன்று வருடம் முன்பு எந்த தினத்தில் பிரஸீல் நாட்டுக்கு இன்பச் செலவு போயிருந்தாய் என்று கேட்டால் உடனே சொல்வது சிரமம். நடந்ததை மட்டும் நடந்தபடி எழுதிப் போகிறேன்.சகலம் கிருஷ்ணார்ப்பணம்.

மாயா என்ற மாயசண்டிகை, விஞ்சையர் பூமியிலிருந்து வந்தவளாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட பேரிளம்பெண் . நிறைசூலியாக இங்கே வந்தாள். முத்தச்சன் பார்வையில் அவள் படாமலே இருந்திருக்கலாம். அவளை முத்தச்சன் எனக்கு பரிச்சயப்படுத்தாமலேயே போயிருக்கலாம். ஈன்று புறம் போடுதல் மட்டும் என் தலைக் கடனே என்று அவள் பிரசவித்து இருக்கலாம்.பிறப்பிலேயே ரெண்டு வயசுக் குழந்தை உயரத்தால் நாலு வயசுக்காரனாக இறக்கை கட்டிப்  பறக்காமல் இருக்கலாம்.கூடவே ஆறு     வயதில், றெக்கை அடர்ந்து எட்டு வயதுக்கான உயரத்தோடு அவன் சகோதரியையும்  மாயசண்டிகை என்னிடம் ரெண்டு நாள் மட்டும் ஒப்படைக்காமல் இருக்கலாம். திருவள்ளுவர் மஹரிஷி சொன்ன மாதிரி, யாதனில்  யாதனில் நீங்கியான் நோதல் அதனில் அதனில் இலன்,

பொழுது விடிந்தபோது என் கணவன் அல்பி லிஸ்பனில் இருந்து வந்து சேர்ந்தான். வழக்கமாக நீண்ட நெடும் பயணம் போய்த் திரும்பும்போது அவன் வீட்டு வாசலிலேயே என்னை அணைத்து சரமாரியாக முத்தமிடுவான். இப்போது அதொன்றும் அரங்கேறவில்லை. தளர்ந்து போய் ஒரே வாரத்தில் சிந்துபாத் கதையில் வரும் கடல் கிழவன் போல் கூனிக்குறுகி அமரத் தோள் தேடும் நோயாளனாக கை நடுங்க நின்றான். என்னைப் பார்த்தும் பார்க்காதவனாக முகத்தில் சிடுசிடுப்பும் படபடப்பும் நிரந்தரமாகக் குடியேறக் காத்துக் கொண்டிருந்தவனாக அல்பி என்னை எதிர்கொண்டான்.

மாயசண்டிகை பற்றி அவனிடம் சொல்ல இது உகந்த தருணம் இல்லை என்று தோன்றியது. முத்தச்சன் அவ்ட் ஹௌஸிலிருந்து வெளியே வந்து மிலிட்டரி சல்யூட் அடித்து அல்பியின் முகத்தில் இறுக்கம் தளர வைக்க முயன்றது போல் தோன்றியது.

ஓவியம்: ஷங்கரா

திருட்டு கிழவா, நான் ஊருக்குப் போய் வரும்போது வீட்டு வாசல்லே மூட்டை முடிச்சை சாரட்டிலே இருந்து இறக்கி உள்ளே கொண்டு போறதை எவன் பண்ணுவான்?

நான் தான் அது செய்ய. கிழவியும் தான் ,

அல்பியின் சினம் உச்சத்தில் இருந்தது. வேறே யார் மீதோ மிக அதிகமாக திராவகமாகச் சுட்டுப் பொசுக்காமல் கிழட்டு தம்பதியை வையும்  குரல்

அவுசாரி கிழவி எங்கேடா? 

கேட்ட பிறகுதான் அல்பிக்கு உரைத்தது. இந்த மூப்பர்கள் அவனுக்கு அடிமைகளில்லை. அவனுக்காக பணி எடுக்கும் சிப்பந்திகள்.

உடனே குரலை மாற்றிக் கொண்டு முத்தச்சனைப் பார்த்துத் தன்மையாகச் சொன்னான் –sorry auld nigger… sorry auld girl

முத்தச்சன்   இரண்டு கைகளையும் வானம் நோக்கி உயர்த்தி அழுவது போல் மொழி கடந்து ஏதோ புலம்பினான்.முத்தச்சி கண்ணைச் சுருக்கி வலது கையை உயர்த்தி உள்ளங்கை வெளியே தெரிய ஆசீர்வதித்தாள்.என்னமோ தோன்ற  அடங்கிய குரலில்  ஒ என்று சோகத்தில் நனைந்த குலவையிட்டாள்.

அல்பி பதறி கைகூப்பினான். தலை குனிந்திருந்தது.குழந்தை அழும் சத்தம் எங்கோ கேட்டது,அவுட் ஹவுஸ் கதவு திறக்க உள்ளே இருந்து ஆறு வயது காணும் சிறுமி ஒருத்தி வெளிப்பட்டாள்.அவுட் ஹவுஸ் .உள்ளே பார்த்து ஜோஜோ ஜோஜோ என்று தாலாட்டு இனிய குரலில் .பாடினாள்.உள்ளே குழந்தை அழுகை நின்றிருந்தது.

அல்பி பதற்றமும் படபடப்பும் குறைய யார் அது முத்தச்சா  என்று ஆர்வத்தோடு விசாரித்தான்,

சின்ன தேவதை என்று சுருக்கமாக பதில் சொன்னார் முத்தச்சன்.அல்பிக்கு ஒன்றும் புரியவில்லை.

விருந்தாளி வந்திருக்காங்களா?

இல்லே எஜமான். டாக்டர் எஜமானியும் நம்ம கிழவியும் பிரசவம் பார்த்தாங்க. எங்கே தொடங்குவது என்று புரியாமல் முத்தச்சன் தவித்தார்.

நான் தான் இருக்கச் சொல்லியிருக்கேன் – நான் தெளிவாக ஆரம்பித்தேன்.

யாரும்மா உனக்கு இங்கே சொந்தபந்தம் இருக்குன்னு சொல்லவே இல்லே செல்லமே. 

சொல்லிக் கொண்டிருந்த போதே பலமான இருமல் அவனை பேசவிடாமல் தொண்டையை அடைத்தது, நிற்க முடியாமல் முத்தச்சனின் தோளைப் பிடித்துக் கொண்டு அவனைச் செலுத்தினான் அல்பி, வாசல் படி ஏற முடியாமல் திணறினான்,

அப்போது மறுபடி அவுட் ஹவ்ஸ் கதவு திறக்க அந்த குழந்தைப் பெண். விசி என்று நான் பெயரிட்டிருந்தவள். அல்பியிடம் எப்படி சொல்வது?

அடிமைச் சந்தையில் இரண்டு நாள் முன் முத்தச்சனும் தொடர்ந்து நானும்  சந்தித்த இறக்கை முளைத்த பேரிளம்பெண்ணில் தொடங்கினேன்,

 என்னது?பிருஷ்டத்தில் றெக்கை முளைத்தவளா?  நம்ப முடியாமல்   சிரித்தான், விஞ்சை யர்  உலகம். புஷ்பக விமானம். புல்ஷிட்.

இருமலோடு சொன்னான்.சின்னப் பெண் விசி என்னை அடுத்து வந்தாள். காலை வணக்கம் அம்மா என்று சர்க்கரைக் குரலில் இன்னும்மழலை நீங்காது மிழற்றினாள். அந்த நிமிடத்தில் உறைந்து தான் போனேன்.

அம்மா பசிக்குது.

ரொட் டி ஜாம் தர்றேன் கண்ணு என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, முத்தச்சி  வீட்டுக்குள் ஓடினாள்.

அவுட் ஹௌஸிலிருந்து  ரெண்டு வயசு சிசுவாக கிட்டா இடுப்பில் நாப்கின்னோடு ஓடி வந்தான். அழகான சிரிப்போடு அல்பியை நோக்கினான். நிற்காத இருமலோடு  அவனிடமிருந்து விலகினான், சின்னப் பிள்ளைக்கு குத்திருமல் தொற்றாமல் இருக்க வேண்டும் என்ற ஜாக்கிரதைதான் அதற்குக் காரணம் என்று எனக்குப் புரிந்தது.

இன்னும் எத்தனை பேர் அவுட் ஹவுஸில் இருக்காங்க? 

அல்பி முத்தச்சனோடு சகஜமாக கேட்டான். அவன் முகம் களைப்பில் வெளிறி இருந்தது.

நிம்மி, எக்காளப் பூவெங்கே பதுக்கி வச்சிருக்கான் கிழவன்?

எக்காளப் பூ என்னாக்க? புரியாமல் கேட்டேன்.

அதைத் தின்னால் நடைப் பிணமான ஸோம்பி ஆக்கிவிட்டுடும். மெமரி சுத்தமாக அழிந்து போகும், ஊமத்தை விஷச்செடி இருக்கே, அதைப்போல,இன்னும் உக்ரமாக மனுஷனை நடைப்பிணமாக்கிடும்.

சத்தியமா நானும் விஷச் செடியை உண்ணலே, எஜமானிக்கும் என்வீட்டுக்காரிக்கும் தின்னத் தரலே சத்தியம்

அவன் தோள் மேல் உடுத்தியிருந்த துவாலையை தரையில் வைத்து அதைத் தாண்டிக் குதித்தான். கிழவியையும் குதிக்கச் சொன்னான்,

ஏய் அதொண்ணும் வேண்டாம். அல்பி அவசரமாகச் சொன்னான்.

நான் அவசரமாக அவன் அருகே நகர்ந்து அவன் தடுமாறி தரையில் விழுவதற்குள் அவனை அணைத்து பிடித்துக் கொண்டேன்.   இருமலோடு என்னை எதிர்கொள்ள அணைத்தபடியே டிஸ்பென்சரி அறையில் மர பெஞ்சில் அமர்ந்து அல்பியை மடியில் இருத்து அவனுக்குப் பிடித்த ஆழ்வார் பாசுரத்தை குரலெடுத்துப் பாடினேன்,

 கோவிந்தன் வந்தெனை புறம் புல்குவான்

கோபாலன் வந்தெனை புறம் புல்குவான்

முதுகில் ஏதோ சில்லென்று ஸ்பரிசம்.        

எனக்குப் பின்னால் இத்தணூண்டு பிஞ்சுக் கைகள் ரெண்டு என்னைப் புறம் புல்கிக் கொண்டு இருந்தன, நான் அந்த பொக்கிஷத்தை அப்படியே கை ஆற அணைத்து மடியில் போட்டுக் கொண்டேன்,

0அம்மா  மம் மம்

என் கொங்கைகளை பார்த்தபடி பிடிவாதம் பிடித்தான், பசி

என் வரண்ட முலைகள்  அரும்பி  ஆறு ஆண்டு காலத்தில் ஒரு முறை கூட பால் சுரத்ததில்லை. எட்டு முறை கரு தங்காமல் உதிர்ந்த துன்பம் மகா கொடியது.  என்னைப்     போல், அல்பியைப் போல் தொடர்ந்து தெய்வத்தால் ஏமாற்றப் பட்டால் அது மகா சோகம் அல்லவா?         

இந்துக் கடவுள், கத்தோலிக் கடவுள்,யெபுரு கடவுள்,  யூதக் கடவுள். எந்தக் கடவுளும்    உதவவில்லை. ஒரு பொழுது, நாலு பொழுது,ஒட்டக் காயப்போட்டு ஆகாரத்தை வந்தித்து எல்லா தெய்வங்களுக்கும் பட்டினிவழிபாடு, யெரூபாவுக்காக நக்னமாக நின்று லகு கீதம் பாடுதல்,  பெண் பூசாரிக்காக  வாசலில் விழிவைத்து காத்திருப்பு.எதுவும் பலிக்க…  வெயிட், கொங்கைகளில் தன்னிச்சையாக்க பால் சுரந்து கொண்டிருக்க இனிய வலி. 

சும்மா பாச்சியை நோண்டிட்டிருக்காதே.

அல்பி, அது ரெண்டிலும் பால் நிரம்பறது    

கிட்டா சுவாதீனமாக என் முலை பற்றி அமுதம் உண்டுகொண்டிருந்தான்.அவனது குட்டிக்கால்கள்  என் வயிற்றில் சதா உதைத்துக் கொண்டிருந்தன.

அல்பி மெல்ல எழுந்து என் அருகே வந்தான். நிலை தடுமாறி காற்றில் மிதப்பது போல் அலைபாய்ந்தான், நல்ல வேளை முத்தச்சி பாய்ந்து அவனைப் பிடித்து தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். அவன் தலையை மெல்லத் தடவிக் கொண்டே என்னைப் பார்த்துச் சொன்னாள் – ரெண்டு குழந்தைகள்.

கிட்டா  அமிர்தம் வாயார உண்டபடியே நித்திரை போயிருந்தான். வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம், அப்பாடா என்று மனதில் நிம்மதி.மாயசண்டிகை திரும்பி வந்திருப்பாள். எனில் குழந்தைள் அவளோடு போக வேண்டி இருக்கும். கடவுள் மேல் வகைதொகை இல்லாமல் கோபம் வந்தது, பொற்கிழி கொடுத்துவிட்டு என்ன என்று பார்க்கும் முன் பிடுங்கி விட்டது.

முத்தச்சன் வாசலுக்குப் போய் திரும்பி வந்தார், மாயா வரவில்லை என்பது கொஞ்சம் ஆசுவாசம் ஊட்டியது, 

லெவி எஜமான் லிஸ்பன் பட்டணத்திலிருந்து அல்பி எஜமானுக்கு லிகிதம் அனுப்பியிருக்கிறார்,

முத்தச்சன் வந்த தாக்கலை அல்பியிடம் கொடுத்தார்.

அவன் அதைப் பிரித்தான். படித்துக் கொண்டே போக முகம் மலர்ந்து போனது.

நிம்மி, நல்ல சேதி. என் பணத்தையும் லெவி பணத்தையும் போர்ச்சுகல் வங்கியில் போட்டு வச்சது பாதுகாப்பாக இருக்கு, கூட இன்னொரு சந்தோஷம். இது ரொம்ப அதிகம் மகிழ்ச்சி தரும் போர்ச்சுகல் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு பண்ணியிருக்கோம் நானும் லெவியும், எந்தப் பணம்னு கேட்கறியா? சொல்றேன். இங்கே அடிமைச் சந்தையிலே  அடிமை வாங்கி விக்கறதை ஏறக்கட்டிட்டு அந்த முதலீட்டை போர்ச்சுகல் பங்கு சந்தையிலே முடக்கினோம். ஒரே மாதத்திலே ரெண்டு மடங்காக வருமானம். ’

அல்பியின் நோய் குறைந்து போனது போல் தெரிந்தது,

எல்லாம் இந்த ரெண்டு குட்டி தேவதைகள் இந்த வீட்டில் அடியெடுத்து வைத்த நேரம் தான் – முத்தச்சன் தனக்கே வந்த  வைரமும் தங்கமும் என மகிழ்ந்தார். எனக்கு பயம் ஏற்பட்டது, மாயாவுக்கு என்ன ஆச்சு?

லெவி எப்போ திரும்பி வருவார்?

குரலில் விஷயம் அறிய வேண்டிய எதிர்பார்ப்பு தெரியாமல் கேட்டேன்.

ஏன் நிம்மிஅவன் இல்லாம ரொம்ப குளிருதா?

கேட்டுவிட்டு ஓவென்று சிரித்தான் அல்பி.சும்மா  பகடி செஞ்சேன் என்று தன்நிலை விளக்கம் வேறு.

அடுத்த வாரம் தான் வருவேன்னு எழுதியிருக்கான் லெவி. 

என் தோளில் தட்டி மிச்சமிருந்த பகடியை உதிர்த்தான்,

யாரும் எங்கேயும் போகட்டும் வரட்டும், எனக்கு அனாவசியமான தகவல் எல்லாம்.

நான் வாசலில் மணிமுழக்கம் கேட்க அங்கே போனேன்.யெருபா தெய்வத்தின் பூசாரி.

 ஐந்து நிமிடம் நிறுத்தாமல் ஆடினான் . அப்புறம் எனக்கு அண்மையில் வந்தான்.சிரித்தபடி சொன்னான் –

விஞ்சயர் உலகம் மாயசண்டிகை தொடர்ந்து பட்டினி கிடந்து மெலிந்தாள்.அனரெக்ஸியா நெர்வோஸா. இறந்து பட்டாள்.

 தொடரும்

றெக்கை

றெக்கை –  அத்தியாயம் 23

Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.