தயங்கி தயங்கி நடந்த புரட்சி – மேலை உலகம் தன் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க கற்றுக்கொண்டது எப்படி?

 நேரில் அனுபவிக்காமலேயே சில விஷயங்களை நம்புகிறோம்.  ஏனென்றால் வேறு வழியில்லை. சிலவற்றை நாம் அனுபவிக்க வாய்ப்பில்லாமலேயே நம்மை விட்டுப் போய்விடுகின்றன.

  1. இங்கிலாந்தின் வடக்கு. ஒரு கிராமம்.

அங்கே மனிதன் ஒருவன் இருந்தான். நான் அவனை வில்லியம் என்று அழைக்கிறேன். அவன் கற்பனை,  இது முக்கியம், சொல்லி வைக்க வேண்டும். ஆனால் அவன் வாழ்ந்த உலகம் கற்பனை அல்ல. அந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள் என்று நமக்குத் தெரியும். திருச்சபை ஆவணங்கள் சொல்கின்றன. கம்பளி வியாபாரிகளின் கோரிக்கை வியாபாரிகள் சொல்கின்றன. கிராம தேவாலயங்களின் பழைய புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால் அவர்கள் என்ன உணர்ந்தார்கள் என்று எந்த ஆவணமும் சொல்வதில்லை.

வரலாற்றில் இப்படிப்பட்ட இடைவெளிகள் நிறைய இருக்கின்றன.

அந்த இடைவெளிகள் என்னை தொந்தரவு செய்கின்றன. நீண்ட காலமாக செய்கின்றன. 

கல்வி மேற்கு உலகில் எப்படி வந்தது என்று சொல்ல விரும்புகிறேன்; ஆனால் தேதிகளாக அல்ல, சட்டங்களாக அல்ல. ஒரு மனிதன் இரவில் வீட்டிற்கு திரும்பும்போது என்ன நினைத்தான் என்று சொல்ல விரும்புகிறேன். ஒரு பெண் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்போது என்ன உணர்ந்தாள் என்று சொல்ல விரும்புகிறேன். அந்த கதை வேறு விதமாக இருக்கும்

வில்லியம் கற்பனை. அவன் மகன் மேத்யூ கற்பனை. பாரீஸில் வாழ்ந்த எத்தியேன் கற்பனை. கோனிக்ஸ்பெர்கில் மழையில் காத்திருந்த க்ளேர் கற்பனை. வெர்ஜீனியாவில் பாதி கட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை பார்த்த ஜூலியன் கற்பனை. பாஸ்டனில் சூப் ஊற்றிய மெர்சி கற்பனை.

ஆனால் அவர்கள் கேட்ட கேள்விகள் கற்பனை அல்ல.

SPCK 1699ல் நிறுவப்பட்டது உண்மை. ஆம்ஸ்டர்டாம் துறைமுகம் உண்மை. ஜெபர்சன் பாரீஸில் பேசியது உண்மை. ப்ரஸ்யாவின் கட்டாயக் கல்வி உண்மை. ஹோரஸ் மான் ப்ரஸ்யன் மாதிரியை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தது உண்மை.

நடந்தவை உண்மை. உணர்ந்தவை என்னுடையவை. இடைவெளி அங்கே இருக்கிறது. வேறு வழியில்லை, நான் அந்த இடைவெளிக்குள் நடக்கிறேன்.

1690ல் இங்கிலாந்தின் கிராமம்


“சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்” திருச்சபையை விட்டு வெளியே வருகையில் பாதிரியாரின் குரலில் கம்பளி வியாபாரிகளுக்கு சொல்லப்பட்ட பிரார்த்தனை வரிகள் மனதில் நின்றது. உதடுகளின் பேச்சும், எண்ணும், எழுத்தும் எனக்கு ஏன்? என் பிரயாசம் தரும் உணவை, கம்பளியை அது தரப்போகின்றதா என்ன? ஆனால் ஏன் பாதிரியார் கொடுக்கும் மனுவில் வெறும் கைக்குறி வைக்கையில் என்னை பார்த்து இரக்கமாக பார்த்தார்? ஏன்?

இங்கிலாந்தின் வடக்குக் கிராமங்களில் மழை நீண்ட நேரம் பெய்துவிட்டு நின்ற பிறகு மண் ஒரு தனி வாசனை விடும். அந்த வாசனையை வில்லியம் சிறுவயதிலிருந்தே அறிந்தவன். மாலை நேரத்தில் தேவாலயத்திலிருந்து நடந்து வீட்டுக்குத் திரும்பும்போது, பாதையின் ஈரத்தையும் காற்றின் கனத்தையும் பார்த்தாலே இரவு முழுவதும் மழை திரும்புமா என்று அவனுக்குத் தெரிந்துவிடும். அந்த அறிவை யாரும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. அவன் தந்தையிடமிருந்து வந்தது. அவன் தந்தைக்கு , அவருடைய தந்தையிலிருந்து, இப்படியே போனால் அது கடைசியில் இந்த நிலத்திலேயே முடியும். அதில் இருந்தே அறிவினை எடுத்துக் கொண்டனர்.

அன்று மாலை அவன் நடந்த பாதை முழுவதும் ஈரமாக இருந்தது. பார்லி வயலின் அப்பால் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் அசைவில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த இருபது ஆண்டுகளாக இலையுதிர் காலம் இப்படித்தான் வந்தது. மண், குளிர், ஈரம், மெதுவான புகை, தொலைவில் குரைக்கும் நாய்.  இப்படி மாறாதிருக்கும் உலகத்துக்குள் ஏதோ மாறி விட்டதென்ற உணர்வு மாலையில் அவனை விடாமல் பின்தொடர்ந்தது.

கோட்டுக்குள் மடித்து வைத்திருந்த மனுவின் மேல் அவன் கை சென்றது. எடுத்துப் பார்த்தான். ஒரிரு எழுத்துக்கள் பரிட்சயமாக இருந்தன. அவனுக்கு வாசிக்கத் தெரியாது என்பதை அவை அவனுக்கு சொல்லிக் கொண்டிருந்தன. அன்றைய கூட்டத்தில் பாதிரியார் அதை இருமுறை உரக்க வாசித்துக் காட்டியிருந்தார். இங்கிலாந்தின் கம்பளி வியாபாரத்தை பாதுகாக்க வேண்டும். கிழக்கிலிருந்து வரும் பருத்தித் துணிகள் சந்தையை கெடுக்கின்றன. லண்டனில் உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கிராம மக்கள் பெயர் போட வேண்டும்.

பெயர் எழுதத் தெரியாதவர்கள் குறியிடலாம்.

வில்லியமும் குறியிட்டான்.

அவன் அந்த மனுவை நம்பவில்லை. ஆனால் அது பிரச்சனை அல்ல. பாதிரியாரை அவன் மதித்தான். காய்ச்சலில் கிடப்பவர்களருகே உட்கார்ந்து பிரார்த்தனை செய்யும் மனிதர். இறந்தவர்களை மரியாதையுடன் புதைக்கும் மனிதர். ஆனால் அவருடைய தம்பி லண்டனில் பருத்தி இறக்குமதி செய்கிறான் என்பதையும் கிராமத்தில் எல்லோரும் அறிவார்கள். கூட்டம் கலைந்த பிறகும் அந்த உண்மை வில்லியமின் மனதில் தங்கியிருந்தது. ஆகவே அந்த மனு கிராமத்தை விட்டு நகரத்துக்குப் போனால், அது மீண்டும் யாருடைய குரலில் பேசும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாதது என்பதையும் நம்பினான்.

இப்போது காகிதங்கள் எல்லா இடத்திலும் இருந்தன. துறைமுகங்களில் இறங்கிய கப்பல்களின் பட்டியல்கள். புதிய வரிகள் பற்றிய அட்டவணைகள். கடல்பாதைச் சட்டங்கள். லண்டனில் எடுக்கப்பட்ட முடிவுகள். வில்லியமுக்கு அவற்றில் ஒன்றையும் வாசிக்க முடியவில்லை. ஆனால் அவை அவன் வாழ்க்கையை அவனை விட நன்றாகப் புரிந்துகொண்டு வருகிறதுபோல சில நேரங்களில் தோன்றியது.

வீட்டைப் பார்த்தான். புகைக்குழாயிலிருந்து புகை மெதுவாக மேலேறிக் கொண்டிருந்தது. அந்த வீட்டுக்குள் அவன் மனைவி இருந்தாள். கடந்த சில ஆண்டுகளாக அவள் மாறி இருந்தாள் என்று அவன் நினைத்தான். பெரிய மாற்றமல்ல. ஆனால் முன்பு கேட்காத விஷயங்களை இப்போது கேட்கத் தொடங்கியிருந்தாள்.

கடந்த மாதம் சந்தைக்குச் சென்றபோது, கிழக்கிந்திய பருத்தித் துணி விற்ற வியாபாரியின் கடை முன் அவள் நின்றுகொண்டிருந்தாள். இண்டிகோ சாயத்தில் ஆழ்ந்த நீலமாக இருந்த துணியை அவள் மெதுவாகத் தொட்டாள். பிறகு உடனே கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்; அது தங்களுக்குரிய பொருள் அல்ல என நினைத்தாள். 

அன்று இரவு  “நம்ம பொண்ணுக்காவது ஒருநாள் இதுல உடை தைக்க முடியுமா?”  என அவள் கேட்டாள்.

வில்லியம் பதில் சொல்லவில்லை. அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் தன்னைவிட பெரிய உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் மகன் மாத்யூ அப்படிப்பட்ட உலகத்தையே விரும்பினான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிராமத்தைவிட்டு சென்றபோது, அவன் கண்களில் ஒளியொன்று இருந்தது. செயின்ட் ஆல்பன்ஸ் மதுக்கடைகளில் அமர்ந்த மாலுமிகள் சொன்ன கதைகள் அவனை மாற்றியிருந்தன. ஆம்ஸ்டர்டாம். படாவியா. சர்க்கரைத் தீவுகள். கிழக்கத்திய நாடுகளிலிருந்து வரும் பொருட்கள். நிலத்தைவிட அதிக வாழ்வு கடலில் இருப்பதாக அவன் நம்பினான்.

கடைசியாக சண்டை போட்ட இரவு இன்னும் வில்லியமுக்கு நினைவில் இருந்தது. அவனை அடித்தபோது கோபம் இருந்தது. ஆனால் அந்தக் கோபத்துக்குள் பயமும் இருந்தது. கடல் மனிதர்களை திருப்பித் தராது என்ற பயம். நிலம் கைவிடாது என சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் சொல்லைக் கடந்து மாத்யூ போய்விட்டான்.

மாத்யூவிடம் இருந்து மூன்று கடிதங்கள் வந்தன. ஒன்றையும் வீட்டில் யாராலும் வாசிக்க முடியவில்லை. பாதிரியார்தான் அவற்றை உரக்கப் படித்துக் காட்டினார். கடைசிக் கடிதம் ராட்டர்டாமிலிருந்து வந்தது. அதற்குப் பிறகு அமைதி.

வில்லியம் பாதையோர மண்ணை குனிந்து தொட்டான். விரல்களுக்குள் உரசிப் பார்த்தான்.

காலை மழை வரும்.

இந்த அறிவு இன்னும் அவனுடையது என்று அவன் நினைத்தான். எந்தக் கிளார்க்கும், எந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கும், எந்தக் கப்பல் உரிமையாளருக்கும் இந்த வயலில் நின்று மழையின் வாசனையை இவ்வளவு துல்லியமாக அறிய முடியாது. ஆடுகள் இன்னும் அவன் கைகளை நம்பின.

ஆனால் உலகம் மெதுவாக வேறொருவரின் மொழியில் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது.

கடந்த வசந்தத்தில் வந்த அளவையாளர்கள் அவனுக்குப் புதிதாகத் தோன்றினர். அவர்கள் இரும்புச் சங்கிலிகளை நிலத்தில் நீட்டி அளந்தார்கள். பின்னால் வந்தவன் எண்களைப் புத்தகத்தில் எழுதிக்கொண்டான். “ஏக்கர்.” “மதிப்பீடு.” “வரி.” “பதிவு செய்யப்பட்ட எல்லை.”

வில்லியமின் தந்தை “வடக்குப் பகுதி” என்று மட்டும் அழைத்த நிலம் இப்போது எண்களாக மாறிவிட்டது.

ஒரு மாதத்திற்குப் பிறகு நிலவரி உயர்ந்தது.

நிலம் மாறவில்லை என்று வில்லியம் நினைத்தான். மாறியது அதை விவரிக்கும் காகிதங்கள்தான்.

அவன் வீட்டை அடையும் போது கதவு திறந்தது. அவன் மனைவி மெழுகுவர்த்தியுடன் வெளியே வந்தாள். சில நொடிகள் இருவரும் பேசவில்லை. அந்தச் சிறிய ஒளி மட்டும் காற்றில் நடுங்கிக்கொண்டிருந்தது.

மழை மணம் கொண்ட அந்த இங்கிலாந்து காற்றுக்குள் இப்போது வேறொன்றும் கலந்து கொண்டிருந்தது. கடல்களின் வாசனை. அச்சக மை. கணக்குப் புத்தகங்கள். இன்னும் பெயரிடப்படாத எதிர்காலங்கள்.

1700 ஆம்ஸ்டர்டாம்

அன்றைய தினம் மேத்யூவினை ஆம்ஸ்டர்டாம் துறைமுகத்தில் தாக்கியது கடலின் மணமல்ல. ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் உச்சரிப்பு.

“இந்த ஆம்ஸ்டர்டாம் மழையும் இங்கிலாந்தை விட மோசம்தான்,” என்று யாரோ சபித்துக்கொண்டிருந்தான்.

மேத்யூ திரும்பிப் பார்த்தான். ஒரு கணத்திற்கு துறைமுகம் பின்னால் மங்கியது. கப்பல் தூண்கள் உரசும் சத்தம், டார் மணம், நனைந்த கயிறுகள், மீன் கழிவுகளுக்காக கத்தும் கடற்பறவைகள், மிளகு மூட்டைகளருகே வாக்குவாதம் செய்துகொண்டிருந்த டச்சு வியாபாரிகள்,எல்லாமே சற்றுநேரம் தொலைவுக்குச் சென்றது.

“எலையாஸ்?”

மற்றவன் அவனைப் பார்த்துக்கொண்டே நின்றான். பிறகு சிரிப்பு உடைந்து வந்தது.

“நாசமா போய்ட்டே!” என்று கத்திக்கொண்டு அவனை இழுத்துக் கட்டிப்பிடித்தான்.

ஆயிரக்கணக்கான மனிதர்களால் நிரம்பிய துறைமுகத்தின் நடுவில், தன் கிராமமே மனித உருவில் திரும்பி வந்ததுபோல மேத்யூவுக்கு தோன்றியது.

அவர்கள் பேசிக்கொண்டே வேலை செய்தார்கள். டிராங்க்பாருக்குப் புறப்பட இருந்த டேனிஷ் கப்பலுக்குச் சரக்குகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. மரப்பெட்டிகள், இரும்பு கருவிகள், கம்பளித்துணி மூட்டைகள், பீர் பீப்பாய்கள், திறக்கக் கூடாத பெட்டிகள். வேலை நிற்கவில்லை. துறைமுகமும் நிற்கவில்லை.

எலையாஸ் சில மாதங்களுக்கு முன்தான் இங்கிலாந்தை விட்டு வந்திருந்தான். ஆனாலும் கடல் ஏற்கனவே அவன் முகத்தை மாற்றியிருந்தது. கண்களின் ஓரம் உப்புக் காற்றால் கருகியிருந்தது. குரலும் மாறியிருந்தது. கிராமத்தைப் பற்றி பேசும்போது கூட அவன் முழுவதும் அங்கே இல்லாதவன் போலத் தோன்றினான்.

துறைமுகம் முழுவதும் சோர்வில்லாத ஒழுங்கொன்று இயங்கிக்கொண்டிருந்தது. சேற்றில் நனைந்த மரத்தளங்களில் சரக்குவண்டிகள் உருண்டன. கிளார்க்குகள் மடிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு அலுவலகங்களுக்கும் கப்பல்களுக்கும் இடையில் ஓடிக்கொண்டிருந்தனர். முத்திரை இல்லாமல் எந்தச் சரக்கும் நகரவில்லை.

அருகில் ஒரு ஆங்கிலக் கப்பல் தலைவர் டச்சு அதிகாரியிடம் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தான்.

“மூன்று நாட்களாச்சு. இன்னும் கிளியரன்ஸ் இல்ல.”

அதிகாரி அமைதியாக பதில் சொன்னான்.

“காகிதம் இல்லாமல் கப்பல் கிளம்பாது.”

“காகிதம் முக்கியமா? உனக்குத்தான் என்னைத் தெரியுமே? பத்து வருடம் முன் இப்படி இல்லையே?”

“பத்து வருடம் முன் உன் கப்பல் ட்ரான்கோபார் செல்லுமா என்ன? நீயும், நானும் ஓன்றாக மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். இன்று நாம் யார்?”

கப்பல் அங்கேயே நின்றது.

மேத்யூ சிரித்தான். கிராமத்தில் காகிதங்கள் என்றால் தேவாலய அறிவிப்புகள் அல்லது பாதிரியார் வாசிக்கும் பைபிள் வசனங்கள். இங்கே காகிதங்கள் கப்பல்களை நிறுத்தின. மனிதர்களை காத்திருக்க வைத்தன. பணத்தை நகர்த்தின.

“நம்ம ஊர்ல முன்னாடி காகிதத்துல கர்த்தரின் வார்த்தைதான் இருந்தது,” என்றான் எலையாஸ் மூட்டையைத் தூக்கிக்கொண்டே. “இப்போ வேற வார்த்தைகள் வந்துட்டு இருக்குது.”

மேத்யூ பதில் சொல்லவில்லை. அவன் தோளில் இருந்த பாரத்தை சரி செய்துகொண்டான்.

சில நேரம் கழித்து எலையாஸ் கேட்டான்.

“உன் தம்பி இன்னும் அந்தப் பைபிள் பள்ளிக்குப் போகிறான் தெரியுமா? என் அக்கா பிள்ளைகள் போகின்றன.”

“அப்படியா? யார் பள்ளி நடத்துவது? எனக்கு ஊரில் இருந்து கடிதம் வருவதில்லையே?”

“உனக்கு முகவரி இல்லையே. எங்கே கடிதம் போடுவார்கள். ஹெ .. ஹெ .. “

“அது சரிதான். சரி யார் பள்ளி நடத்துவது? பிரபுக்கள் பணம் கொடுக்க மாட்டார்களே?”

“Society for Promoting Christian Knowledge” பள்ளியை நடத்துகின்றது. சர்ச்சுக்குள் பள்ளி உள்ளது. அவர்களே பணம் வசூலித்து நடத்துகின்றார்கள். கஷ்டம். சம்பாதிக்கும் வயதில் எழுத, படித்து நம் கிராமத்தில் என்ன செய்வது. நாம அவன் வயசுல கம்பளி எடுத்துக்கிட்டிருந்தோம். இவங்க கம்பளியும் எடுக்கல. கடலுக்கும் வரல.”

மேத்யூ பதில் சொல்லவில்லை. அவன் தம்பி படிக்கக் கற்றுக்கொள்வான். அது நல்லதா கெட்டதா என்று இப்போது அவனால் தீர்மானிக்க முடியவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரிந்தது. அவன் தம்பி படிப்பது பைபிளை. இந்தத் துறைமுகத்தில் இயங்கும் காகிதங்களை அல்ல. ஆனால் அவனால் இந்த காகிதங்களை ஒருநாள் படிக்க கூட முடியும். அதிகாரியாக, கப்பலின் தலைமை மாலுமியாக… பெருமூச்சு விட்டான்.

அவர்கள் இருவரும் தங்கள் கையில் சுமையாக இருந்த பெட்டியை கீழே வைத்தார்கள். உடைந்த மூலையில் இருந்து உலோக எழுத்துக்கள் தெரிந்தன.

“இந்திய எழுத்துக்களாம்,” என்றான் அருகில் இருந்த டச்சு தொழிலாளி.

ஜெர்மனியில் வார்க்கப்பட்ட அச்செழுத்துக்கள். டிராங்க்பாரில் மிஷனரிகள் பயன்படுத்தப் போவதாக இன்னொருவன் சொன்னான்.

யாரோ சிரித்துக்கொண்டு, “இந்தப் பெட்டில இருக்கிற பிரசங்கங்களாலேயே கப்பல் மூழ்கிடும்,” என்றான்.

அனைவரும் சிரித்தார்கள்.

ஆனால் மேத்யூ அந்த எழுத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வாசிக்கத் தெரியாது. இருந்தாலும் உலகம் முழுவதும் இப்போது ஏதோ எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற உணர்வு அவனை விட்டு போகவில்லை.

“என் தம்பி பங்கு கோவில் பள்ளியில் என்ன பாடம் படிக்கின்றான்?” மேத்யூ குரலில் ஆர்வம் இருந்தது.

“ஒழுக்கம். பைபிள். பிரார்த்தனைகள்…ஒழுக்கத்தினை எழுத்தாக்கி வாயில் திணிக்கின்றார்கள்” எலையாஸ் சிரித்துக்கொண்டே  சொன்னான்.

“ஒழுக்கத்தால டச்சுக்காரங்க இவ்வளவு கப்பல் கட்டினாங்களா?” மேத்யூ கேள்வியில் எரிச்சல் இருந்தது.

“நம்ம ஊர்ல பேசுற மாதிரி பார்த்தா கடலுக்கு போறவங்க எல்லாரும் குடிகாரன்.”

“அது பொய்யா?”

“முழுக்க பொய்யும் இல்ல.”

இருவரும் சிரித்தார்கள்.

துறைமுகத்தின் மறுபுறம் இன்னொரு கப்பல் காத்திருந்தது. காகிதங்கள் வரவில்லை. யாரோ டச்சு மொழியில் கத்திக்கொண்டிருந்தான்.

“ஆனா,” என்றான் மேத்யூ மெதுவாக, “நம்ம ஊர்ல இருந்தா என்ன கிடைக்கும்?”

அவன் கையை நீட்டி துறைமுகத்தை காட்டினான். 

கப்பல்கள்.
கணக்குப்புத்தகங்கள்.
இந்திய துணிகள்.
கிழக்கிந்தியாவின் மசாலா மூட்டைகள்.
ஆப்பிரிக்க மரச்சரக்குகள்.
மதுக்கடைகள்.
மாலுமிகள்.
பணக்கார வியாபாரிகள்.

அவன் கண்கள் ஓவ்வொன்றையும் தொட்டு விரிந்தன. முடிவில்லாத பட்டியல் என நினைத்தான்.

“உலகமே இங்க வந்து கிடக்குது.”

எலையாஸ் தலைஅசைத்தான்.

“கம்பளி தொழிலுக்கு போகனும் என்பதே என் அப்பாவின் கனவு”  மேத்யூ சொன்னான்.

“நீ போவியா?”எலையாஸ் கேட்டான்.

“சில சமயம் தோணும்.”

அவர்கள் இருவரும் சில நொடிகள் அமைதியாக நின்றனர். துறைமுகத்தின் சத்தம் அவர்களைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. கயிறுகள் அசைந்தன. கப்பல் மணி தொலைவில் அடித்தது. அருகில் ஒரு போர்த்துகீசிய மாலுமி ஒரு இரவிலேயே இரண்டு மாத சம்பளத்தை சூதாட்டத்தில் இழந்ததை பற்றி அழுகாத குறையாக பேசிக் கொண்டிருந்தான். சரக்கு மூட்டையில் படுத்திருந்த ஒரு சிலர் கேப் அருகே கடற்கொள்ளையர்கள் அதிகரித்துவிட்டதாக டச்சுக்காரர்கள் பேசிக்கொண்டிருந்னர்.

“அவர்களில் பாதி ஆங்கிலேயர்கள்தான்,” என்று யாரோ சொன்னான்.

மேத்யூ அதை நம்பினான். தன்னை ஊரே அஞ்சும் கொள்ளையனாக ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்த்தான். உடல் சிலிர்த்தது.

“வெர்ஜீனியால நிலம் வாங்கின ஜேக்கப் பற்றி கேட்டியா?” என்றான் எலையாஸ்.

மேத்யூ உடனே திரும்பிப் பார்த்தான்.

“உண்மையா?”

“கணிசமான ஏக்கர் இல்ல. ஆனா அவனோடது. பிரபுக்களுடையது இல்ல.”

அந்தச் சொல் மேத்யூவுக்குள் நீண்ட நேரம் தங்கியது.

அவனுக்கு கடல் பிடித்தது. கப்பல்களின் அசைவு பிடித்தது. துறைமுகங்களின் சத்தம் பிடித்தது. பணம் பிடித்தது. கதைகள் பிடித்தது. ஒருநாள் திரும்பிவராமல் மறைந்து போகலாம் என்ற சாத்தியமும் அவனை ஈர்த்தது.

ஆனால் அந்த எல்லாவற்றுக்கும் அடியில் இன்னும் நிலம்தான் இருந்தது.

சிறிய வீடு.
சில ஆடுகள்.
தன் பெயரில் ஒரு நிலம். அமெரிக்கா. புதிய நிலம், தனக்கென நிலம்,

அவன் தந்தையைவிட பெரிய கனவு இல்லையோ என எண்ணி வருந்தினான்.

மாலை வேலை முடியும் போது காசு கையிலே கிடைத்தது. இரவு ஆகும் முன் அதன் பாதி கரைந்துவிட்டது.

கிழக்கு துறைமுகத்தருகிலிருந்த மதுக்கடை சத்தத்தில் அதிர்ந்தது. பெரிய பாத்திரங்களில் பஞ்ச் கொதித்துக்கொண்டிருந்தது. கரீபியன் ரம். தெற்கிலிருந்து வந்த எலுமிச்சை. சர்க்கரைத் தோட்டங்களின் இனிப்பு. தூரக் கிழக்கிலிருந்து வந்த ஜாதிக்காய்.

உலகமே ஒரு பானமாக கலந்திருந்தது.

எலையாஸ் கிண்ணத்தை உயர்த்தினான்.

“இங்கிலாந்துக்காக.”

பள்ளிக் கூடத்தில் ஒழுக்கம் படிக்கும் தம்பி மேத்யூவின் நினைவில் வந்தான். “யே..” என முகம் சுருக்கினான்

“இங்கிலாந்தை விட்டு வெளியேறுவதற்காக,” என்றான் மேத்யூ.

அந்த இரவு, பஞ்ச் தொண்டையில் எரிந்துகொண்டிருக்க, ஹெர்ட்போர்ட்ஷயர் சிரிப்பு காதில் ஒலிக்க, உலகம் தன் தந்தை நினைத்ததைவிட மிகவும் பெரிதாகிவிட்டது என்ற உணர்வு மட்டும் தெளிவாக இருந்தது.

பாரீஸ், 1785.

மண்டபம் முழுவதும் மெழுகுவர்த்தி ஒளி மெதுவாக அசைந்துகொண்டிருந்தது. பெரிய ஜன்னல்களின் மறுபுறம் மழை நின்றிருந்தாலும், ஈரமான குளிர் இன்னும் நகரத்தின் கற்சுவர்களிலிருந்து மேலேறிக்கொண்டிருந்தது. வெள்ளிக் கிண்ணங்கள் மோதும் சத்தம், மெதுவான சிரிப்புகள், பட்டு ஆடைகள் உரசும் ஒலி, அரசியல் வார்த்தைகள் — அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்று கலந்திருந்தன.

எத்தியேன் மொரோ சுவரருகே நின்றுகொண்டிருந்தான்.

அவன் கையில் இருந்த மது கிட்டத்தட்ட தொடப்படவில்லை. இப்படிப்பட்ட வீடுகளுக்குள் வரும்போது, அவன் உடல் முழுவதும் எப்போதும் சற்றே எச்சரிக்கையாக மாறிவிடும். எந்தக் குழுவின் அருகே நிற்கலாம். எப்போது பேசலாம். யாருடைய சிரிப்புக்குள் நுழையலாம். இவை எல்லாம் யாரும் வெளிப்படையாக கற்றுக்கொடுக்காத விஷயங்கள். ஆனாலும் இங்கே இருப்பவர்கள் எல்லோரும் அவற்றை அறிவார்கள்.

அறையின் மையத்தில் புதிய நிலமான அமெரிக்காவின் அயல் உறவு கொள்கை பிரதிநிதியாக ஜெபர்சன் நின்றிருந்தார். அவரைச் சுற்றி மக்கள் இயல்பாகச் சேர்ந்துகொண்டிருந்தார்கள். சிலர் உண்மையில் கேட்க வந்தவர்கள். சிலர் பின்னாளில் “அவருடன் பேசினேன்” என்று சொல்லிக்கொள்ள.

ஒரு பிரெஞ்சு கோமகன் சிரித்தபடி சொன்னார்:“விவசாயிகளுக்கு அதிகம் படிப்பு கொடுத்தால் அவர்கள் நிலத்தைவிட காகிதத்தையே நம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.”

அறை மெதுவாகச் சிரித்தது.

மற்றொருவன் சேர்த்தான்:“ஒரு விவசாயிக்குத் தேவையானது நல்ல மழை. இலக்கியம் இல்லை.”

இந்த முறை சிரிப்பு சற்றே பெரிதாக இருந்தது.

ஜெபர்சன் சிரிக்கவில்லை. கண்ணாடிக் கோப்பையை மேசையின் மீது வைத்துவிட்டு அமைதியாகச் சொன்னார்:“குடியரசைத் தாங்குவது மக்கள். அதை புரிந்துகொள்ள கல்வி தேவை.”

அறையின் காற்று சிறிது மாறியது என்று எத்தியேனுக்கு தோன்றியது. இவர் அமெரிக்காவின் ஜனாதிபதி எதிர்காலத்தில் ஆகக்கூடும் என ஒரு கணம் தோன்றியது. அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தினை எழுதியவர். பெரும் புரட்சிக்கு கட்டியம் கூறியது. மகிழ்வினை தேடுவது மனித உரிமை என சொன்ன விவசாய குடும்பத்தின் பிரதிநிதி.அவன் உடல் சிலிர்த்தது.

அவன் ஏதாவது சொல்லவேண்டும் என்று நினைத்தான்.

பாரிசில் அவன் வேலைப் பார்த்த துறைதான் அமெரிக்க லூசியானவின் வரவு செலவுகளை பார்த்தது. அவன் பார்த்த பிரச்சினைகள் நினைவுக்கு வந்தன. சரியான பதிவுகள் எழுதத் தெரியாத உதவியாளர்கள். தவறான நில அளவைகள். ஒரே நிலத்துக்கு மூன்று உரிமையாளர்கள். ஒரு எழுத்துப் பிழையால் தொடங்கும் சண்டைகள்.

ஒரு அரசாங்கம் காகிதத்தின் மீது நிற்க வேண்டுமென்றால் கீழே எழுதத் தெரிந்த மக்கள் தேவை என்று அவன் சொல்ல விரும்பினான்.

ஆனால் அவன் அமைதியாக இருந்தான்.

அந்த அறையில் யார் பேசலாம் என்பதற்கே ஒரு ஒழுங்கு இருந்தது.

“அப்படியென்றால் எல்லாரையும் தத்துவஞானியாக்கப் போகிறீர்களா?” என்று இன்னொருவன் சிரித்தான்.

“இல்லை,” என்றார் ஜெபர்சன். “ஆனால் ஒரு குழந்தைக்கு வாசிக்கவும் எண்ணிக்கொள்ளவும் தெரிந்தால், அவன் உலகத்தை மற்றொருவர் சொல்லும் அளவுக்கு மட்டும் பார்க்க வேண்டிய அவசியம் குறையும்.”

அந்தச் சொல் எத்தியேனின் மனதில் நீண்ட நேரம் நின்றது.

அவன் தன் சிறுவயதை நினைத்தான்.

அவனுடைய தாய் ஒருபோதும் முழுமையாகப் பிரெஞ்சுக்காரியாகத் தோன்றவில்லை. சில ஆங்கில வார்த்தைகள் வீட்டுக்குள் இன்னும் உயிரோடு இருந்தன. அவன் உண்மையான தந்தையைப் பற்றி அவள் அதிகம் பேசவில்லை. “கடலுக்குப் போனவன்” என்பதற்கும் அதிகமான விவரம் இல்லை.

மேத்யூ.

அந்தப் பெயர் வீட்டுக்குள் சில நேரங்களில் மட்டும் தோன்றும். முழுமையாக இல்லாத மனிதர்களின் பெயர்கள் அப்படித்தான் பேசப்படும்.

எத்தியேன் முதலில் படித்தது Frères des Écoles Chrétiennes நடத்தும் பள்ளியில். கருப்பு அங்கி அணிந்த கத்தோலிக்க சகோதரர்கள். நீண்ட மரமேசைகள். ஒழுங்காக வரிசையாக உட்கார்ந்த சிறுவர்கள். எழுத்துக்களை ஒரே குரலில் மீண்டும் மீண்டும் உச்சரிப்பது.

அங்கே அவன் முதலில் கற்றது வாசிப்பல்ல.

அமைதியாக உட்கார்வது.

காத்திருப்பது.

கையை நேராக வைத்து எழுதுவது.

எண்களை தவறாமல் நகலெடுப்பது.

ஒரு தவறான கோடு முழு கணக்கையும் கெடுக்கும் என்று அவர்கள் சொல்வார்கள்.

அவன் எழுதும் கையெழுத்தை ஒரு சகோதரர் ஒருமுறை பார்த்து, “இவனுக்கு அலுவலக வேலை கிடைக்கும்,” என்று சொன்னது இன்னும் நினைவில் இருந்தது.

பிறகு அவன் வாழ்க்கை மாறியது.

அவன் தாய் பணக்கார வியாபாரி ஒருவரை திருமணம் செய்துகொண்டாள். அந்த வீட்டில் எல்லாம் வேறுபட்டிருந்தது. மேசைகளின் மரம் கூட வேறுவிதமாக ஒளிர்ந்தது. சத்தங்களும் மெதுவாக இருந்தன.

முக்கியமாக, அங்கே ஒரு தனி ஆசிரியர் இருந்தார்.

அந்த மனிதர் அவனுக்கு இலக்கணம் கற்றார். வரலாறு கற்றார். வரைபடங்களை எப்படி வாசிக்க வேண்டும் என்று கற்றார். வோல்டேர் பற்றிப் பேசினார். லத்தீன் வாக்கியங்களை திருத்தினார்.

ஆனால் அதைவிட முக்கியமான விஷயங்களையும் கற்றார்.

ஒரு அறைக்குள் எப்படி நுழைய வேண்டும்.

ஒரு உரையாடலுக்குள் எப்போது பேசலாம்.

யாராவது சிரித்தால் எவ்வளவு நேரம் கழித்து சிரிக்க வேண்டும்.

ஒரு மனிதர் தன்னைவிட உயர்ந்தவர் என்பதை எப்படிச் சுட்டிக்காட்டாமல் ஏற்றுக்கொள்வது.

அந்தப் பாடங்கள் எந்தப் புத்தகத்திலும் எழுதப்படவில்லை.

எத்தியேன் இப்போது அந்த இரு உலகங்களையும் தன்னுள் சுமந்துகொண்டிருந்தான்.

சகோதரர்களின் பள்ளி அவனை எழுத கற்றுக்கொடுத்தது.

தனி ஆசிரியர் அவனை உயர்ந்த மனிதர்களின் அருகே நிற்க கற்றுக்கொடுத்தார்.

ஆனால் முழுமையாக அவர்களில் ஒருவனாக மாற கற்றுக்கொடுக்கவில்லை.

அதனால்தான் அவன் இன்னும் சுவரருகே நின்றுகொண்டிருந்தான்.

அறையின் மறுபுறம் ஒரு அதிகாரி கால்வாய் திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். இன்னொருவர் புதிய சாலை வரைபடங்களை விரித்துக் காட்டினார். ஒரு வரி அதிகாரி மாகாண கணக்குகளைப் பற்றி வாதித்துக்கொண்டிருந்தான்.

எத்தியேன் அந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

பழைய உலகம் இன்னும் அந்த அறையில் இருந்தது:
குலப்பெயர்கள்,
பழைய இரத்தம்,
அரசவைக் கம்பீரம்.

ஆனால் அதன் கீழே வேறொரு உலகம் அமைதியாக வளர்ந்துகொண்டிருந்தது:
கணக்குகள்,
அளவைகள்,
பதிவுகள்,
வரைபடங்கள்,
பள்ளிகள்,
காகிதங்கள்.

அந்த உலகத்தில் தான் தன்னைப் போன்ற மனிதர்களுக்கு இடம் இருக்கலாம் என்று அவன் நம்பினான்.

விருந்து முடிந்து வெளியே வந்தபோது தெருவின் மறுபுறம் இருந்த அச்சகத்தில் இன்னும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. உள்ளே ஒரு சிறுவன் மை படிந்த கையுடன் எழுத்துக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தான்.

எத்தியேன் அவனை ஒரு கணம் பார்த்தான்.

அந்தச் சிறுவன் ஒருநாள் அலுவலகத்துக்குள் நுழையலாம் என்று அவன் நினைத்தான்.

அல்லது வாழ்நாள் முழுவதும் காகிதங்களை மற்றவர்களுக்காக மட்டுமே அடுக்கிக்கொண்டிருக்கலாம்.

வீட்டுக்குள் நுழையும்போது மனைவி இன்னும் விழித்திருந்தாள்.

“ஜெபர்சனைப் பார்த்தாயா?” என்று கேட்டாள்.

“பார்த்தேன்.”

“பேசினாயா?”

எத்தியேன் சிரித்தான்.

“நானெல்லாம் அவர் மாதிரி மனிதர்களிடம் எல்லோரும் பேச முடியாது.”

மனைவி அமைதியாக அவனைப் பார்த்தாள்.

“அப்படின்னா ஏன் இவ்வளவு தூரம் போனாய்?”

எத்தியேன் ஜன்னலருகே சென்று நின்றான்.

“அவர் அமெரிக்காவைப் பற்றி பேசினார்,” என்றான்.

“எல்லாரும் இப்போ அதைத்தான் பேசுறாங்க.”

“இல்ல,” என்றான் மெதுவாக. “அவர் வேற மாதிரி பேசுகிறார்.”

அவன் மேசையிலிருந்த வரைபடத்தை எடுத்தான். மிஸிசிப்பி நதியின் அருகிலிருந்த நிலப்பகுதிகளை விரலால் தொட்டான்.

“அங்க இன்னும் தேசமொன்றை கட்டிக்கொண்டிருக்கிறாங்க,” என்றான். “எழுதத் தெரிஞ்சவங்க வேணும். கணக்கு புரிஞ்சவங்க வேணும்.”

அவன் குரலில் மெதுவான கோபம் இருந்தது.

“நான் படிச்சதுக்கு, படிப்பினால் கெடைச்ச தெறமைக்கு அங்க மதிப்பு கிடைக்கும்.”

மனைவி அவனைப் பார்த்தாள்.

“படிக்கிற எல்லாருக்கும் அங்கே மதிப்பு கெடைக்குமா?”

எத்தியேன் உடனே பதில் சொல்லவில்லை.

“இல்லை… அங்கேயும் யாருக்கு யாரை தெரியுமென்பதும் முக்கியம். என் ஆங்கில பின்னனி அங்கே எனக்கு கதவுகளை திறக்கும்” என்றான் இறுதியில்.

அவன் மெதுவாகத் தொடர்ந்தான்.

“ஆனா படிப்பு எனக்கு ஒரு வாழ்க்கையை உருவாக்க வாய்ப்பு கொடுத்தது.”

தன் மகளின் அறைக்குள் சென்று அவளைப் பார்த்தான். அவள் உறங்கிக்கொண்டிருந்தாள்.

அவளுக்கும் வாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.

எண்ணிக்கொள்ளவும்.
எழுதவும்.
ஒருவேளை இலக்கியமும்.

அந்த எண்ணம் வந்த உடனே இன்னொரு எண்ணமும் அவன் மனதில் எழுந்தது.

பெண்கள் படித்து என்ன பயன்?

அவன் நீண்ட நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். பதிலுக்காக நின்றிருந்தான்.

கோனிக்ஸ்பெர்க், 1812.

க்ளேர் மொரோ தனது கையுறைகளுக்குள் மடித்துவைத்திருந்த பழைய காகிதத்தை மெதுவாகத் திறந்தாள்.

அந்தக் காகிதம் அவளுடன் பல ஆண்டுகளாக இருந்தது. பாரீஸிலிருந்து. புரட்சியிலிருந்து. தன் தந்தையிடமிருந்து.

காகிதத்தின் ஓரங்கள் கரைந்து மெலிந்திருந்தன. மை சில இடங்களில் மங்கியிருந்தது. ஆனால் எத்தியேனின் சிறிய கைஎழுத்து இன்னும் உயிரோடு இருந்தது.

அதன் கீழே ஆண்ட்ரே ஷெனியேவின் வரிகள்:

“நான் இன்னும் வசந்தத்தில் தான் இருக்கிறேன். அறுவடையைப் பார்க்க விரும்புகிறேன்.”

க்ளேர் அந்த வரிகளை மீண்டும் வாசித்தாள். சில வரிகள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வயதில் மட்டும் முழுமையாக அர்த்தமடைகின்றன என்று அவளுக்குத் தோன்றியது. இப்போது அவள் அந்த வயதுக்குள் நுழைந்துகொண்டிருந்தாள்.

அவள் மெதுவாக வயிற்றின் மீது கை வைத்தாள்.

பிறப்புக்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.

வெளியே மழை குதிரை வண்டியின் மரச்சட்டத்தின் மீது சீராக அடித்துக்கொண்டிருந்தது. அந்த ஒலி அவளுக்கு சில நேரங்களில் பாரீஸை நினைவுபடுத்தும். சில நேரங்களில் மருத்துவமனைகளை. சில நேரங்களில் வெறுமனே காத்திருப்பதை.

சேறு நிறைந்த தெருவில் வண்டி மெதுவாக வந்து நின்றது.

அலுவலகக் கட்டிடத்தின் கற்சுவர்கள் மழையால் கருமையாக இருந்தன. உயரமான ஜன்னல்களின் உள்ளே மெழுகுவர்த்தி ஒளி அசைந்தது. அதிகாரிகள் தொடர்ச்சியாக உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் காலணிகளில் சேறு இருந்தது. கைகளில் இருந்த காகிதங்கள் மட்டும் நனைக்கப்படவில்லை.

வண்டியோட்டி கீழே இறங்கி கதவின் அருகே நின்றிருந்த இளம் காவலரிடம் ஏதோ சொன்னான்.

க்ளேர் முதலில் அவனை கவனிக்கவில்லை.

பிறகு வண்டியோட்டி திரும்பிவந்து மெதுவாகச் சொன்னான்:

“அம்மையீர், உள்ளே அனுமதி கிடையாதாம்.”

க்ளேர் ஒரு கணம் புரியாமல் பார்த்தாள்.

“மழை பார்க்கிறாயில்லையா?”

வண்டியோட்டி சங்கடமாக தோளைச் சுருக்கினான்.

அவள் திரையைத் தூக்கி வெளியே பார்த்தாள்.

இளம் காவலர் இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். மழை அவன் தோள்களில் விழுந்துகொண்டிருந்தது. அவன் அசையவில்லை.

க்ளேர் மெதுவாக இறங்கினாள்.

குளிர்ந்த காற்று உடனே முகத்தில் மோதியது.

அவள் ஜெர்மன் மொழியில் பேசினாள். உச்சரிப்பில் இன்னும் பாரீஸின் மென்மை இருந்தது.

“நான் டாக்டர் ஃப்ரிட்ரிக் ஹோஃப்மானின் மனைவி. சிறிது நேரம் உள்ளே காத்திருக்க முடியுமா?”

இளம் காவலர் அவளைப் பார்த்தான்.

ஒரு கணம் அவன் பார்வை அவள் வயிற்றின் மீது நின்றது. பிறகு மீண்டும் முகத்திற்குத் திரும்பியது.

“மன்னிக்கவும் அம்மையீர்,” என்றான் அமைதியாக. “பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.”

அவன் குரலில் கடுமை இல்லை.

ஆனால் தயக்கமும் இல்லை.

அதுதான் அவளைத் திடீரென்று சோர்வடையச் செய்தது.

பாரீஸில் இருந்தால் இப்படி நடந்திருக்காது என்று அவளுக்குத் தோன்றியது. அங்கே விதிகள் இருந்தாலும், அதன் சுற்றிலும் மனிதர்கள் இருந்தார்கள். ஒரு சிறிய சிரிப்பு. ஒரு வருத்தம். “மழை நின்றதும் உள்ளே வாருங்கள்” என்ற மென்மை.

இங்கே விதி மட்டும் இருந்தது.

அவள் மீண்டும் வண்டிக்குள் ஏறினாள். பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்தாள்.

தன் தொடைகளுக்குக் கீழே சிக்கியிருந்த புத்தகத்தை மெதுவாக நகர்த்தினாள்.

பெர்லினிலிருந்து வந்த புதிய புத்தகம். ஃபிக்டேயின் உரைகள்.

அவள் கணவன் சில வரிகளை அடிக்கோடிட்டிருந்தான்.

“மக்களின் எதிர்காலம் பள்ளிகளில் உருவாகிறது.”

அவள் அந்த வரியை மெதுவாக வாசித்தாள்.

அந்த நேரத்தில் அவள் மீண்டும் ஜன்னல் வழியாக அந்த இளம் காவலரைப் பார்த்தாள். இப்போது தான் அவன் எவ்வளவு இளம் என்று அவளுக்குப் புரிந்தது. கிட்டத்தட்ட ஒரு பையன்.

ஆனால் அவன் ஏற்கனவே தன்னைவிட பெரிய ஒன்றின் குரலில் பேசிக்கொண்டிருந்தான்.

அவள் தன் தந்தையை நினைத்தாள்.

எத்தியேன் எப்போதும் ஆரம்பங்களைப் பற்றியே பேசுவார். வரைபடங்களின் மீது குனிந்து “நியூ ஆர்லியன்ஸ்ல இன்னும் ஆரம்பம் இருக்கிறது” என்று சொல்வார்.

அவர் கல்வியை நம்பினார்.

அவர் முதலில் படித்தது சகோதரர்களின் பள்ளியில். கருப்பு அங்கி அணிந்த ஆசிரியர்கள். ஒழுங்கான கையெழுத்து. கணக்கு. அமைதி. பிறகு அவரது தாய் மறுமணம் செய்துகொண்டபோது, பெரிய வீட்டுக்கான தனி ஆசிரியர் வந்தார்.

அந்த மனிதர் அவருக்கு வேறு விஷயங்கள் கற்றுக்கொடுத்தார்.

வரலாறு.

இலக்கணம்.

வரைபடங்கள்.

ஒரு அறைக்குள் எப்படிப் பேசாமல் நுழைய வேண்டும்.

யாரை நேராகக் கண்களில் பார்க்கலாம்.

யாரை பார்க்கக்கூடாது.

ஒரு மனிதன் எந்தக் குரலில் பிறந்தான் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது.

எத்தியேன் ஒருமுறை சொன்னது க்ளேருக்கு நினைவுக்கு வந்தது:

“பள்ளி எனக்கு எழுத கற்றுக்கொடுத்தது. ஆசிரியர் யாருடைய முன்னால் அமைதியாக நிற்கணும் என்று கற்றுக்கொடுத்தார்.”

அப்போது அவள் இளமையாக இருந்தாள். அந்த வாக்கியத்தின் சோகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.

இப்போது புரிந்தது.

வெளியே மழை சாய்வாக வழிந்தது. குதிரைகள் உடலை அசைத்தன.

மனிதர்கள் இப்போது எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று அவள் நினைத்தாள்.

அளவுகள்.

கணக்குகள்.

வரைபடங்கள்.

பதிவுகள்.

பள்ளிகள்.

ஒருநாள் மனிதர்களும் முழுவதுமாக கணிக்கப்படுவார்களா?

அவள் மீண்டும் அந்த இளம் காவலரைப் பார்த்தாள்.

ஒருகாலத்தில் அவனும் யாரோ ஒருத்தியின் வயிற்றுக்குள் இப்படியே அமைதியாக அசைந்திருக்கிறான்.

இப்போது அவன் ஒரு நிறுவனத்தின் குரலில் பேசுகிறான்.

என் மகனுக்கும் கல்வி தேவை என்று எல்லோரும் சொல்கிறார்கள் என்று அவள் நினைத்தாள்.

எண்ணும்.

எழுத்தும்.

இலக்கணமும்.

தர்க்கமும்.

அவன் அனைத்தையும் ஜெர்மன் மொழியில் கற்கப் போகிறான்.

ஆனால் அவன் ஒருநாள் தன்னை வரலாற்றின் மனிதன் என்று உணருவானா?

அல்லது ஒழுங்கின் மனிதனா?

அவள் வயிற்றின் மீது கை வைத்தாள். உள்ளே குழந்தை மெதுவாக அசைந்தது.

ஒரு கணத்திற்கு பாரீஸ் திரும்பிவந்தது. அரண்மனை எரிந்து. அங்கு பணிப்புரிந்த தந்தை என்ன ஆனார் என இன்று வரை தெரியவில்லை. அவரது சடலமும் கிடைக்கவில்லை

மருத்துவமனையின் உடைந்த ஜன்னல்கள். அருகில் இறுதி மூச்சில் அன்னை.

ரத்த வாசனை.

காயங்களால் நிரம்பிய உடல்கள்.

அப்போது தான் அவள் ப்ரிட்ரிக்கை முதலில் பார்த்தாள். பாரிஸ் மருத்துவக்கல்லூரி மாணவனாக வந்திருந்தான்.

அவன் கைச்சட்டைகள் முழுக்க ரத்தத்தில் நனைந்திருந்தன. மூன்று நாட்களாக தூங்காத கண்கள். ஆனாலும் கைகள் மட்டும் நடுங்கவில்லை.

“இவள் இன்னும் உயிரோடு இருக்கிறாள்,” என்று யாரிடமோ ப்ரெஞ்சில் சொன்னான். அவன் ப்ரெஞ்ச் இவள் ஜெர்மனை விட துல்லியமானது.

அவன் அவளைப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் பரிதாபம் இல்லை. பயமும் இல்லை. கவனம் மட்டுமே.பிறகு அவளுக்கு தண்ணீர் கொடுத்தான்.

அடுத்த சில வாரங்களில் அவன் அவளை உயிரோடு வைத்தான். காய்ச்சல் குறைந்த இரவுகளில் புத்தகம் வாசிப்பான். அவளை நோக்கி கனிவுடன் புன்னகைத்தான்.

போருக்கும் புரட்சிக்கும் நடுவே கூட அமைதியாக இருக்கக்கூடிய மனிதனை அவள் முன்பு பார்த்ததில்லை. ப்ரெஞ்ச் புரட்சிக்கு பிறகு அவளுக்கு, அவனும், அவனால் ப்ரஸ்யாவும் புகலிடம் ஆனது.

அதனால்தான் அவள் அவனைப் பின்தொடர்ந்து இங்கே வந்தாள்.

Deutsch.

Lutherisch.

Preußen.

அவள் உண்மையாக முயன்றாள்.ஆனால் சில நேரங்களில் அவளுக்குப் பயமாக இருந்தது. ஃப்ரிட்ரிக் ஒழுங்கை நேசிப்பதில்லை. குழப்பத்தைப் பயப்படுகிறார்.

அந்த பயம் அவன் உள்ளே எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்று அவள் ஆண்டுகள் கழித்தே புரிந்துகொண்டாள்.

அதனால்தான்:

ஒரே மொழி.

ஒரே ஒழுங்கு.

ஒரே கல்வி என்னும் ப்ரஸ்யாவின் பாதை கலக்கத்தினைக் கொடுத்தது. ஜீரணிக்க முயன்று கொண்டே இருக்கின்றாள்.  இன்றைக்கும் “நான் இன்னும் வசந்தத்தில் தான் இருக்கிறேன். அறுவடையைப் பார்க்க விரும்புகிறேன்.” வரிகளை சொல்லிக் கொண்டாள்.

அவள் மீண்டும் அந்த இளம் காவலரைப் பார்த்தாள்.

அவன் மழைக்குள் நின்றுகொண்டிருந்தான். இரும்பு வேலியின் முன்னால்.

திடீரென்று அந்த வேலியும் அவனும் ஒரே பொருளால் செய்யப்பட்டவை போல அவளுக்குத் தோன்றியது.

கல்வி மனிதர்களை உருவாக்குகிறதா?

அல்லது நிறுவனங்கள் தங்களைத் தொடர்ச்சியாக உருவாக்கிக்கொள்ள மனிதர்களைப் பயன்படுத்துகிறதா?

ஷார்லட்ஸ்வில், வெர்ஜீனியா, 1825.

மாலைக்குள் வேலைக்காரர்கள் பெரும்பாலும் கிளம்பிவிட்டார்கள். பாதி கட்டப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் நீண்ட நிழல்கள் சிவப்பு சேற்றின் மீது விழுந்திருந்தன. மலைகளின் பின்னால் சூரியன் இறங்கிக்கொண்டிருந்தது. சுத்தியல்களின் சத்தம் மட்டும் இன்னும் தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது.

ஜூலியன் பாதி முடிந்திருந்த தூண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தக் கட்டிடங்கள் இன்னும் முடியாதவையாக இருந்தாலும், ஏற்கனவே தன்னை விட பெரிய ஏதோ ஒன்றைச் சேர்ந்தவை போலத் தோன்றின.

அருகில் மிஸ்டர் கார்டர், கர்னல் விட்கோம், இன்னும் இரு பண்ணையார்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களது காலணிகளில் சேறு ஒட்டியிருந்தது. ஆனால் குரல்களில் உற்சாகம் இருந்தது.

“இது அழகான இடம்தான்,” என்றார் கர்னல் விட்கோம். “அதை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்.”

“ஜெபர்சனுக்கு கட்டிடங்களைக் காதலிக்க தெரியுமே,” என்று மிஸ்டர் கார்டர் சிரித்தார்.

“கட்டிடங்களை மட்டும் அல்ல,” என்றார் இன்னொருவர். “எதிர்காலத்தையும்.”

சிறிது நேரம் அவர்கள் அமைதியாக கட்டிடங்களைப் பார்த்தனர்.

பிறகு கர்னல் விட்கோம் மெதுவாகச் சொன்னார்:

“ஆனா நான் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்படுறேன்.”

“கடவுளை பற்றியா?” என்று மிஸ்டர் கார்டர் கேட்டார்.

“ஆமாம்.”

அவர் தன் குச்சியால் சேற்றை மெதுவாகத் தட்டினார்.

“ஹார்வர்ட் மையத்தில் தேவாலயத்தின் நிழல் இருக்கு. இங்க…” என்று சொல்லிவிட்டு அவர் சுற்றிப் பார்த்தார். “இங்க மனிதர்கள் தர்க்கம் மட்டும் போதும்னு நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.”

“அது தவறா?” என்று இன்னொருவர் கேட்டார்.

“முழுக்க இல்லை,” என்றார் கர்னல் விட்கோம். “ஆனா ஒரு மனிதன் வேதாகமத்திலிருந்து வெளியே வாசிக்க ஆரம்பிச்ச பிறகு எங்கே நிறுத்துவான்?”

அந்தக் கேள்வி காற்றில் சில நொடிகள் நின்றது.

மிஸ்டர் கார்டர் மெதுவாகச் சிரித்தார்.

“லூதர் சாதாரண மனிதன் தனியாக பைபிள் வாசிக்கணும் என்று நினைக்கவில்லைனா, இப்போ இந்த நாடே இருக்காது.”

“அது சரி,” என்றார் விட்கோம். “ஆனா அந்த வாசிப்பு இப்போ தேவாலயத்தைக் கடந்து போயிட்டே இருக்கிறது.”

“அதுதான் அமெரிக்கா இல்லையா?” என்று மிஸ்டர் கார்டர் கேட்டார். “நாம எல்லாத்தையும் புதியதா முயற்சி செய்கிறோம்.”

“அது என்னை பயமுறுத்துறது,” என்றார் மற்றவர் அமைதியாக.

“என்ன பயம்?”

“மதம் இல்லாத அறிவு.”

மிஸ்டர் கார்டர் சில நொடிகள் பதில் சொல்லவில்லை. “மதம் இல்லாத அறிவு என சொல்லத் தேவையில்லை, வெறும் மதம் மட்டுமே அறிவு இல்லை என பார்ப்பது”  தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். அவருக்கே அது போதுமானதாக இல்லாமையால் எச்சில் விழுங்குவதை போல விழுங்கிக் கொண்டார். பிறகு யோசித்து “சில சமயம்,” என்றார் அவர் மெதுவாக, “ஜெபர்சன் மனிதர்களை ரொம்ப நம்புறாரோன்னு தோணும்.”

“அதனால்தான் மக்கள் அவரை விரும்புகிறார்கள்,” என்றார் இன்னொருவர் உடனே.

அவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பில் கேலியும் இருந்தது. பெருமையும் இருந்தது.

ஜூலியன் அந்த உரையாடலை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் பெரியவர்களின் வார்த்தைகள் சிலநேரம் அவனுக்கு புரிவதில்லை. அவை வெறும்  உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பயங்கள். அவன் அம்மாவுக்கும் உண்டு.

அவன் தன் தாயைப் பார்த்தான்.

மடாம் க்ளேர் மொரோ ஒரு மரப்பெட்டியின் மீது உட்கார்ந்திருந்தாள். கையில் கையுறை. அதை அணியாமல் விரல்களுக்குள் மடித்துக்கொண்டிருந்தாள். அவள் வேலை செய்யும் புகையிலை தோட்ட கனவான் கார்டரின் குடும்பம் பேசும்போது அவள் அமைதியாக இருப்பாள். ஆனால் கேட்காமல் இருப்பதில்லை.

மிஸ்டர் கார்டரின் மகன்கள் தூரத்தில் கத்திக்கொண்டு ஓடினார்கள். அவர்கள் ஏற்கனவே இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இருந்தார்கள் போலத் தோன்றியது. ஒருவன் ஒருநாள் சட்டம் படிப்பான். இன்னொருவன் அரசியலுக்குப் போவான். அவர்கள் அப்படிப் பேசுவதை யாரும் விசித்திரமாக நினைக்கவில்லை.

ஜூலியன் மீண்டும் கட்டிடங்களைப் பார்த்தான்.

அவன் தன்னை அங்கே கற்பனை செய்ய முயன்றான்.

முடியவில்லை.

அவன் என்ன ஆகப்போகிறான் என்பதை அவன் ஏற்கனவே பாதியாகத் தெரிந்திருந்தது. ஒருவேளை கணக்குப் பணி. ஒருவேளை சுரங்க வேலை. ஒருவேளை ஒரு பெரிய பண்ணையின் பதிவுகளைப் பார்த்துக்கொள்ளும் வேலை.

அவனுக்கு எழுதத் தெரியும். கணக்கு பார்க்கத் தெரியும். அது நல்ல விஷயம் என்று எல்லோரும் சொல்வார்கள்.

ஆனால் அது எந்த கதவைத் திறக்கும் என்று அவனுக்குத் தெரியாது.

சிறிது நேரம் கழித்து அவன் தன் தாயருகே வந்தான்.

“அம்மா,” என்றான் மெதுவாக. “நாம் ஒருநாளாவது ப்ரஸ்யாவுக்கு திரும்பிப் போவோமா?”

க்ளேர் உடனே பதில் சொல்லவில்லை.

அவள் இன்னும் அந்த நீண்ட கட்டிடங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஏன் கேட்கிறாய்?”

“என் அப்பா அங்கேதானே இருக்கிறார்.”

அந்தச் சொல் வந்த உடனே அவள் முகத்தில் ஏதோ மெதுவாக மாறியது.

“ஆம்,” என்றாள். “அவர் அங்கேதான் இருக்கிறார்.”

மீண்டும் அமைதி.

தூரத்தில் பெரியவர்கள் இன்னும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“மனிதர்களுக்கு கல்வி வேணும்,” என்றார் மிஸ்டர் கார்டர். “அதை யாரும் மறுக்க முடியாது.”

“ஆனா ஆன்மா இல்லாத கல்வி?” என்று கர்னல் விட்கோம் கேட்டார்.

“அதை வரலாறுதான் முடிவு செய்யும்.”

க்ளேர் அந்தக் குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள் போல இருந்தது.

“அவர் நம்மை நினைப்பாரா?” என்று ஜூலியன் கேட்டான்.

க்ளேர் சிரிக்க முயன்றாள். ஆனால் அந்தச் சிரிப்பு பாதியிலேயே நின்றுவிட்டது.

“மனிதர்கள் தூரத்தில் இருந்தாலும் நினைப்பார்கள்.”

அவள் அதைச் சொன்னபோது கண்களில் நீர் மின்னியது. உடனே வேறு பக்கம் பார்த்தாள். கையுறையை கண்களின் அருகே கொண்டு சென்றாள். பழகிப்போன வேகமான அசைவு.

ஜூலியன் கவனித்தான்.

ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

“அப்படின்னா ஏன் வந்துட்டோம்?”

க்ளேர் பெருமூச்சு விட்டாள்.

“நான் இன்னும் வசந்தத்தில் தான் இருந்தேன். அறுவடையைப் பார்க்க விரும்பினேன். சில வாழ்க்கைகள் ஒரே இடத்துல முழுக்க இருக்க முடியாது.”

காற்று சற்றுக் குளிர்ந்தது.

“உன் அப்பா நல்ல மனிதர்,” என்றாள். “அமைதியானவர். ஒழுங்கானவர். ஒரு உலகம் எப்படி இருக்கணும் என்று அவருக்கு மிகவும் தெளிவாகத் தெரியும். அதுதான் உன் அம்மாவுக்கு பொருந்தவில்லை”

“அப்பா நினைப்பதில் என்ன தவறு?”

“தவறு என்றா சொன்னேன்.”

அவள் சிரித்தாள்.

“ஆனா ப்ரஸ்யா…” என்று தொடங்கி நின்றாள்.

“என்ன?”

அவள் மெதுவாகத் தலை அசைத்தாள்.

“அது ரொம்ப இறுக்கமா இருந்தது…எனக்கு…”

அவன் புரியாமல் பார்த்தான்.

“எல்லாத்துக்கும் ஒரு ஒழுங்கு. ஒரே ஒரு சரியான வழி. எப்படி பேசணும். எப்படி யோசிக்கணும்.”

அவள் சிரித்தாள்.

“நான் முயற்சி செய்தேன்.”

அந்தச் சொல்லில் சோர்வு இருந்தது.

“ஆனா நான் பாரிஸ்ல வளர்ந்தவள்.”

தூரத்தில் பெரியவர்கள் மீண்டும் சிரித்தார்கள்.

“ஜெபர்சன் மனிதர்களை ரொம்ப நம்புறார்,” என்ற குரல் மீண்டும் கேட்டது.

“அதனால்தான் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இருக்கலாம்,” என்று இன்னொருவர் சொன்னார்.

க்ளேர் அந்தக் கட்டிடங்களைப் பார்த்தாள்.

“சில மனிதர்கள் வீட்டுக்குள் வாழ்வதற்காக பிறக்கிறார்கள்,” என்றாள் மெதுவாக. “சிலர் வானத்தில்தான் கால் பதித்து வாழ முடியும்.”

பிறகு அவள் ஜூலியனைப் பார்த்தாள்.

“நான் ஒரு பறவை மாதிரி இருக்கலாம்.”

ஜூலியன் சிரித்தான்.

“ஒரு கூண்டை நான் ரசிக்க முடியும்,” என்றாள் அவளும் சிரித்தபடி. “சில காலம். அது அழகாக இருந்தாலும்.”

அவள் மீண்டும் பல்கலைக்கழகத்தைப் பார்த்தாள்.

“ஆனா நீண்ட நேரம் அதில் இருக்க முடியாது.”

ஜூலியன் பாதி கட்டப்பட்டிருந்த சுவரைத் தொட்டான். செங்கல் இன்னும் ஈரமாக இருந்தது.

“நான் இங்க படிக்க முடியும்னு நினைக்கிறீங்களா?” என்று திடீரென்று கேட்டான்.

க்ளேர் அவனை நீண்ட நேரம் பார்த்தாள்.

“இந்த நாட்டுல,” என்றாள் மெதுவாக, “சில கதவுகள் பாதிதான் திறக்கும்.”

ஜூலியன் கீழே பார்த்தான்.

“ஆனா,” என்று அவள் தொடர்ந்தாள், “பாதி திறந்த கதவுகள்கூட சில நேரம் புதிய உலகத்துக்கு போகும்.”

மாலை இருள் மெதுவாக இறங்கிக்கொண்டிருந்தது. பாதி கட்டப்பட்டிருந்த பல்கலைக்கழகம் அந்த இருளுக்குள் இன்னும் பெரியதாகத் தோன்றியது. ஏற்கனவே எதிர்கால மனிதர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த கட்டிடம் என ஜுலியன் நினைத்தான்.

பாஸ்டன், 1844.

மாலை கூட்டம் தொடங்குவதற்கு முன்பே சர்ச் மண்டபம் மனிதர்களால் நிரம்பத் தொடங்கியிருந்தது. வெளியிலிருந்து உள்ளே வந்தவர்களின் ஈரமான கோட்டுகளிலிருந்து குளிர்ந்த மணம் எழுந்தது. தரையில் சேறு தடங்கள். ஜன்னல்களின் அருகே காபி நீராவி மெதுவாக மங்கியது. பெரிய இரும்புப் பாத்திரத்தில் சூப் கொதித்துக்கொண்டிருந்தது.

மெர்சி மொரோ கிண்ணங்களில் சூப் ஊற்றிக்கொண்டிருந்தாள். அவள் இதே வேலையை கடந்த மூன்று வாரங்களாகச் செய்து வந்தாள். நகரத்தில் புதிதாக வந்திருந்த ஐரிஷ் குடும்பங்களுக்காக தேவாலயம் உணவு ஏற்பாடு செய்திருந்தது. சில நேரங்களில் அவளுக்கு இந்த நகரம் முழுவதும் எப்போதும் எங்கோ இருந்து வந்துகொண்டிருக்கும் மனிதர்களால் நிரம்பிக்கொண்டே இருக்கிறது என்று தோன்றும்.

அவள் கணவன் ஜூலியன் மண்டபத்தின் நடுப்பகுதியில் அமைதியாக அமர்ந்திருந்தான். வெர்ஜீனியாவிலிருந்து பாஸ்டனுக்கு வந்த பிறகு அவன் முகம் சற்றுக் கடினமாக மாறியிருந்தது. தச்சு தொழிலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைகளில் எப்போதும் மரத்தூள் மணம் இருக்கும். இரவு வீட்டுக்கு வந்த பிறகும் விரல்களின் மடிப்புகளுக்குள் அது தங்கி இருக்கும்.

பாஸ்டன் வேகமாக மாறிக்கொண்டிருந்தது. புதிய தொழிற்சாலைகள் மேலேறின. துறைமுகங்கள் கூட்டமடைந்தன. குழந்தைகள் வேலைக்குச் சென்றார்கள். ஒரே தெருவில் ஐந்து விதமான உச்சரிப்புகள் கேட்கும். சில நேரங்களில் ஜூலியனுக்கு நகரம் மனிதர்களை அவர்கள் பழைய வாழ்க்கையிலிருந்து பிரித்து வேறொரு வடிவத்துக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது போலத் தோன்றும்.

அந்த நேரத்தில் மண்டபம் மெதுவாக அமைதியானது. ஹோரஸ் மான் உள்ளே வந்திருந்தார்.

மெர்சி அவரைப் பார்த்த உடனே ஒரு விஷயம் நினைத்தாள். அவர் ஒரு போதகரைப் போலப் பேசுவார் என்று தோன்றியது. ஆனால் அவரது கண்கள் வேறுவிதமாக இருந்தன. மனிதர்களின் முகங்களைப் பார்க்காமல், அவர்கள் வாழும் அமைப்புகளைப் பார்த்துக்கொண்டிருப்பது போல.

மான் பேசத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள் அறையில் இருந்தவர்கள் முன்னே சாயத் தொடங்கினார்கள்.

“ப்ரஸ்யாவில்,” என்றார் அவர், “ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்கிறதா என்பதை அரசு கவனிக்கிறது.”

மெர்சியின் கை மெதுவாக நின்றது.

ப்ரஸ்யா.

அந்த வார்த்தை அவள் வீட்டுக்குள் மெதுவாகச் சொல்லப்படும் வார்த்தை. க்ளேர் அதைப் பற்றி பேசும்போது எப்போதும் குரல் சற்றுக் குறைந்து விடும். ஜெர்மன் மொழியே உடலை இறுக்கமாக்குகிறது என்று ஒருமுறை சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

மான் தொடர்ந்தார்.

“அவர்கள் ஆசிரியர்களை பயிற்றுவிக்கிறார்கள். பள்ளிகளை ஆய்வு செய்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் கல்விக்குள் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.”

அறையின் பின்புறத்தில் இருந்த வயதான ப்யூரிட்டன் ஒருவர் உடனே கேட்டார்:

“பைபிள் இல்லாத பள்ளியா?”

அந்தக் கேள்விக்காக காத்திருந்தவர்கள் போல சிலர் தலையசைத்தார்கள்.

“குழந்தைகளை தேவாலயம் வளர்க்கணும்,” என்று இன்னொருவர் சொன்னார். “அரசாங்கம் இல்லை.”

சில நொடிகளில் அறை சத்தமாகத் தொடங்கியது.

“வரி கட்டி வேற ஆளோட பிள்ளையை படிக்கவைக்கணுமா?”

“பள்ளிக்கு போன பையன் வயலில் வேலை செய்யமாட்டான்.”

“அடுத்தது என்ன? குழந்தைகளுக்கு நன்னடத்தை அரசாங்கம் கற்றுக்கொடுப்பாங்களா?”

அறையின் ஓரத்தில் இருந்த இரண்டு குடும்பங்கள் எழுந்து வெளியே நடக்கத் தொடங்கின. கதவின் அருகே நின்ற ஒருவர் திரும்பிப் பார்த்து சொன்னார்:

“கடவுளை விட்டு கல்வி மட்டும் கற்றுக்கொடுக்கும் நாடு நீண்ட நாள் நிலைக்காது.”

கதவு திறந்தபோது வெளியிலிருந்து குளிர்ந்த காற்று உள்ளே வந்தது. சில மெழுகுவர்த்திகள் அசைந்தன.

ஜூலியன் அந்த எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் கோபம் இல்லை. ஆனால் வேலைக்குச் சென்ற இடங்களில் அவன் இதே மாதிரியான விவாதங்களை ஏற்கனவே கேட்டிருக்கிறான். தொழிற்சாலைகள் பற்றி. குடியேறிகள் பற்றி. குழந்தைகள் பற்றி. நகரம் பெரிதாகும்போது யார் யாரைப் பார்த்துக்கொள்ளப் போகிறார்கள் என்று.

சர்ச்சின் மூப்பர் ஒருவர் மெதுவாக எழுந்தார்.

“நண்பர்களே,” என்றார் அவர், “முதலில் கேட்போம். பிறகு எதிர்ப்போம்.”

அறை மெதுவாக அமைதியானது.

மான் காத்திருந்தார். இது அவருக்கு புதிதல்ல என்று தெரிந்தது.

பிறகு அவர் மிகவும் அமைதியாகச் சொன்னார்:

“நான் ப்ரஸ்யாவின் அரசரைப் பற்றி பேசவில்லை. அவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொண்டார்கள் என்பதைத்தான் பேசுகிறேன்.”

அவர் சிறிது நேரம் நின்றார்.

“ஒரு பெரிய குடியரசு அறியாமையின் மீது நிலைக்க முடியாது.”

இந்த முறை யாரும் இடைமறிக்கவில்லை.

மான் வேகமாகப் பேசவில்லை. ஒரு மருத்துவர் நோயை விளக்குவது போலப் பேசினார்.

“கிராமங்களில் குழந்தைகளை குடும்பமும் தேவாலயமும் பார்த்துக்கொண்டன. ஆனால் நகரங்கள் பெரிதாகின்றன. மக்கள் தொடர்ந்து நகர்கின்றார்கள். குழந்தைகள் தொழிற்சாலைகளுக்குச் செல்கின்றார்கள். எழுதத் தெரியாத மனிதர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றார்கள்.”

ஜூலியனின் முகம் சற்றே மாறியது.

அவன் இதை தினமும் பார்த்துக்கொண்டிருந்தான். வேலை செய்த சில பையன்களுக்கு தங்கள் சம்பளக் கணக்கைப் படிக்கத் தெரியாது. ஒருவன் கடந்த மாதம் தவறான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான். இன்னொருவன் தனது பெயரை முழுமையாக எழுதத் தெரியாமல் வேறொருவரிடம் உதவி கேட்டான்.

மான் மேசையின் மீது மெதுவாக கையை வைத்தார்.

“பொது கல்வி என்பது வெறும் புத்தக அறிவு அல்ல,” என்றார் அவர். “தன் குடிகளை நம்பியுள்ள குடியரசு தன்னைத்தானே சிதறவிடாமல் காப்பாற்றிக்கொள்ள முயற்சிப்பது.”

மெர்சிக்கு திடீரென்று க்ளேர் நினைவுக்கு வந்தாள்.

மழைக்குள் நின்றிருந்த அந்த ப்ரஸ்ய காவலன் பற்றிய கதையை க்ளேர் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது. நாடு மனிதர்களின் வாழ்க்கைக்குள் மெதுவாக நுழைகிறது என்று அப்போது க்ளேர் சொன்னாள். பள்ளிகள். பதிவுகள். அனுமதிகள். ஒழுங்குகள்.

ஆனால் இங்கே வேறொரு விஷயம் நடந்துகொண்டிருந்தது.

அமெரிக்கா தன்னைத்தானே பெரிய அளவில் ஒழுங்குபடுத்த கற்றுக்கொண்டிருந்தது.

இந்த முறை பள்ளியாக வந்தது.

ஜூலியன் மெதுவாக பின்னால் சாய்ந்தான். திடீரென்று வெர்ஜீனியாவில் பார்த்த அந்தப் பல்கலைக்கழகம் நினைவுக்கு வந்தது. ஈரமான செங்கற்கள். பாதி கட்டப்பட்ட தூண்கள். “ஜெபர்சன் மனிதர்களை ரொம்ப நம்புறார்” என்று யாரோ சொன்ன குரல்.

அப்போது அவன் அதை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.

இப்போது சற்றுப் புரிய ஆரம்பித்தது.

நாடு இப்போது மனிதர்களை வெறுமனே ஆள விரும்பவில்லை என சொல்லிக் கொண்டான்.

ஜூலியனுக்கு அருகில் அமர்ந்திருந்த திருச்சபை மூத்தவர் அருகில் இருந்தவரிடம் “ஹாப்ஸ் சுட்டிய லெவையாதன் சிறிய மனிதர்களால் ஆன பேரூடலாக அரசாட்சியை சொன்னது, அதிகாரத்தினை சொன்னது. மான் அதில் ஜுலியன் போன்றவர்களை சேர்க்கின்றார். அமெரிக்கா கற்பனை செய்கின்றது. ஹா ஹா ஹா…”  எனச் சொல்லி சிரித்தார்.

“ப்ரஸ்யாவில் இருந்து சிந்தனை வருவது கவலை அளிக்கின்றது…ப்ரஸ்யாவும், ஹாப்ஸும் கிட்டத்தட்ட ஒரே போல…” அருகில் இருந்தவர் அந்த சிரிப்பில் கலந்துக் கொள்ளவில்லை. அவர் குரல் இறுக்கமாக இருந்தது.

அவர் ஜுலியனை கவலையுடன் பார்த்தார். ஜுலியன் முகத்தில் குழப்பம் நிறைந்த நம்பிக்கை இருந்தது. தயக்கம் இருந்தது.

என் பிள்ளைகள் இந்தப் பள்ளிக்கு போவார்கள் என சொல்லிக் கொண்டான். இவர்கள் விடுவார்களோ என அருகில் இருந்த கனவான்களை கண்டு ஐயமும் கொண்டான்.

ப்ரஸ்யாவில் இருந்தவரை அவன் கட்டாயக் கல்விக் கற்றதை நினைத்துக் கொண்டான். அமெரிக்காவில் அது சுதந்திரம். ஆனால் சுதந்திரம் நோக்கி செல்லத் தேவையான தனிமனித தேர்வு என்பது நேர்கோடான பார்வை இல்லை, அது விருப்பங்கள் உருவாக தேவையான நெளிவு, சுழிவுகள் விசித்திரமானவை. தான் கற்றுக் கொண்ட கணக்கு வழக்குகள் கைவிட்ட பொழுது, அங்குள்ள வெர்ஜினியாவில் புகையிலை பண்ணைகளில் வேலை செய்த ஆப்ரிக்க சமூகத்திடம் கற்றுக் கொண்ட மரவேலை அவனுக்கு சம்பாதிக்க உதவியதை நினைத்து சிரித்துக் கொண்டான். காரேஜ் வண்டிகளுக்கு சக்கரங்கள் செய்யும் வேலை.

எண்ணும், எழுத்தும் நம்பிக்கையை கொடுக்கின்றது. திறமை கல்வியாகையில் அது மனைவியை, வீடடை , பிள்ளைகளை காக்கிறது என யோசித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான். அவன் முதுக்குக்கு பின்னால் ஹோராஸ் மானின் கம்பீரமான குரலில் அரசின் கொள்கை முடிவுக்கான பாதையும், அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களின் மெல்லிய மறுப்பும், ஆமோதிப்பும் உள்ள பேச்சும் கேட்டுக் கொண்டே இருந்தது.

கதவுகளுக்கு மேல்  “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மைப்படுத்துவார்”  என வேதாகம வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதை கதவினை நெருங்கும் முன் வாசித்தான்.கதவுக்கு வெளியே கண்னுக்கு எட்டிய தூரம் வரை விரிந்த அமெரிக்க நிலம் தெரிந்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.