
பார்டன் ஃபிங்க் திரைப்படத்தின் தோற்றமே ஒரு கோயன் பாணி படைப்புத் தந்திரக் கதை. ஜோயல் மற்றும் ஈதன் கோயன் சகோதரர்கள் தங்கள் கேங்க்ஸ்டர் காவியமான மில்லர்ஸ் கிராஸிங் திரைக்கதையை நெய்யும்போது ஏற்பட்ட ரைட்டர்ஸ் ப்ளாக்கின்போது/எழுத்தாளர் தடையின்போது, இந்தத் திரைக்கதையை மூன்று வாரங்களில் மின்னல் வேகத்தில் எழுதினார்கள் என்பது பிரபலம். ஒரு கலை உருவாக்கத்தின் தோற்றக் கதை, படத்தின் மையக் கருப்பொருள்களுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது: படைப்புப் பிரவாகத்தின் பிரசவ வேதனைகள், கலையின் ஆன்மாவை அரிக்கும் வணிகத் தேவைகளின் நச்சுக்கரங்கள், மற்றும் அறிவுலகக் கனவுகளுக்கும் நிதர்சன வாழ்வின் கரடுமுரடான பாதைக்குமிடையிலான பெரும்பிளவு.

இத்திரைப்படம், 1941 ஆம் ஆண்டு வாக்கில், தற்பெருமை மிக்க, சமூக உணர்வுள்ள நியூயார்க் நாடக ஆசிரியரான பார்டன் ஃபிங்கின் (ஜான் டர்டர்ரோ) அல்லலுறும் ஆன்மாவின் ஆழத்திற்கு பார்வையாளர்களை இட்டுச் செல்கிறது. தனது பாட்டாளி வர்க்க நாடகத்தின் வெற்றியிலிருந்து புத்துணர்ச்சியுடன், ஃபிங்க் தனது கலையில் “சாமான்ய மனிதனின்” உரிமைக்காகக் குரல் கொடுக்கிறார், ஆனாலும் அவர் உண்மையான தொழிலாள வர்க்க தனிநபர்களிடமிருந்து ஆழமாகத் துண்டிக்கப்பட்டவராகவும், பல சமயங்களில் அவர்களை ஏளனமாகப் பார்ப்பவராகவும் இருக்கிறார். இலாபகரமான வேலையின் மாயவலையால் ஈர்க்கப்பட்டு, அவர் ஹாலிவுட்டிற்கு இடம் பெயர்கிறார்; கேபிடல் பிக்சர்ஸ் அதிபர் ஜாக் லிப்னிக் (மைக்கேல் லெர்னர்) என்பவரால் மல்யுத்த வகைமை படத்தை எழுத நியமிக்கப்படுகிறார் – இது அவரது உயர்ந்த கலைப் பாசாங்குகளுக்கு முற்றிலும் முரணான ஒரு வகைமை. சிதிலமடைந்த, பாதாள லோகத்தின் சாயல்பூண்ட ஹோட்டல் எர்லின் (Hotel Earle) இருண்ட கருவறையில் குடியேறும் பார்டன், ஒரு முடக்கும் எழுத்தாளர் தொகுதிக்குள் மூழ்குகிறார்; அவர் சந்திக்கும் கம்பீரமான ஆண்பால்மிக்க உருவங்களும், அவரது சொந்த ஆழமான பாதுகாப்பின்மையும் அவரது கவலைகளை மேலும் தீவிரமாக்குகின்றன. அவரது பக்கத்து அறைக்காரர், அரட்டை அடிப்பவரும், வெளித்தோற்றத்தில் கனிவும் கொண்ட சார்லி மெடோஸ் (ஜான் குட்மேன்), ஆரம்பத்தில் பார்டன் இலட்சியப்படுத்தும் “சாமான்ய மனிதனின்” திருவுருவமாகத் தோன்றுகிறார். இருப்பினும், ஹாலிவுட்டில் பார்டனின் நாட்கள் ஒரு சர்ரியல் கனவாக உருமாறும்போது, மெடோஸ் ஒரு மனநோயாளி தொடர் கொலையாளியான கார்ல் முண்ட் என்று வெளிப்படுகிறார்; இது யதார்த்தம் மற்றும் மனித இயல்பு குறித்த பார்டனின் ஏற்கனவே நொறுங்கிய புரிதலை மேலும் சிக்கலாக்குகிறது.

ஹோட்டல் எர்லின் பரவலான, கிட்டத்தட்ட உயிருள்ள சிதைவு, பார்டனின் மோசமடைந்து வரும் மனநிலையை ஆழமாக பிரதிபலிக்கிறது; இது கலை சமரசத்தின் புழுக்கத்தையும், மாயை மற்றும் சூத்திரத்தின் மீது கட்டப்பட்ட ஹாலிவுட்டின் வெறுமையையும், அதன் ஆன்மிக வறுமையையும் குறிக்கிறது. பிசுபிசுப்பான திரவத்தைக் கசியவிடும், உரிந்து தொங்கும் சுவரொட்டிகள், அடக்குமுறை மிக்க, தவிர்க்க முடியாத வெப்பம், மற்றும் சிதைவின் பொதுவான துர்நாற்றம் ஆகியவை பார்டன் சந்திக்கும் மற்றும் ஒரு அளவிற்கு உள்வாங்கிக் கொள்ளும் படைப்பு மற்றும் தார்மீக அழுகலின் உடல் வெளிப்பாடுகளாகும். ஹோட்டல் ஒரு பின்னணி மட்டுமல்ல, அவரது உளவியல் சிதைவில் ஒரு செயல்படும் பங்கேற்பாளர்; அதன் உடல், படைப்பாக்கம் மீதான ஹாலிவுட் சூழலின் சிதைக்கும் செல்வாக்கிற்கான ஒரு புறநிலை உருவகமாக மாறுகிறது. எனவே, பார்டனின் பதட்ட எழுத்தாளர் ஆளுமை தோல்வியின் மட்டுமல்ல, இந்த நச்சு சூழலின் ஆழமான அறிகுறியாகவும் உருவெடுக்கிறது. ஃபிங்க் அத்தகைய ஹாலிவுட்டின் மேலோட்டமான தன்மையில் செழித்து வளரும் ஒரு அமைப்பினுள், அதில் செயலாற்ற விரும்பும் ஆயினும் அதன் வழிமுறைகளில் நம்பிக்கையற்ற ஒரு ஆன்மாவின் குறியீடு.

பார்டன் ஃபிங்க் எளிதான வகைப்படுத்தலை மீறுகிறது; இது உளவியல் நாடகம், சர்ரியல் கரும்நகைச்சுவை மற்றும் திகில் கூறுகளின் குழப்பமான மற்றும் வசீகரிக்கும் கலவையாக உள்ளது, இது சினிமாவின் கனவு மொழியினால் ஒரு மாய யதார்த்தத்தை நெய்கிறது. ரோஜர் டீக்கின்ஸின் ஒளிப்பதிவும் கார்ட்டர் பர்வெல்லின் அமைதியற்ற இசையும் ஹோட்டல் எர்லின் எல்லைக்குள் குறிப்பாக ஆழ்ந்த அமைதியின்மை மற்றும் கிளாஸ்ட்ரோபோபியாவின் சூழலை வளர்ப்பதில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. படம் புதிரான குறியீடுகளால் நிறைந்துள்ளது: உரிந்து தொங்கும் வால்பேப்பர், தொடர்ந்து ரீங்காரமிடும் கொசு, சார்லி பார்டனிடம் ஒப்படைக்கப்படும் மர்மப் பெட்டி (அதில் மனித தலை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்), மற்றும் பார்டனின் அறையில் ஒரு சட்டமிடப்பட்ட படத்தில் கடற்கரையில் ஒரு அமைதியான பெண்ணின் காட்சி – அவரது நரக சிறைவாசத்தின் மத்தியில் அமைதி மற்றும் தப்பித்தலின் ஒரு கேலிக்குரிய மாயத்தோற்றம். குறிப்பாக இந்தப் படம், பெருநகரமாக திட்டமிடப்பட்ட லாஸ் ஏஞ்சலஸின் சாத்தியமற்ற, இலட்சியப்படுத்தப்பட்ட பிம்பத்தைக் குறிப்பதாகக் காணலாம், இது பார்டனின் அனுபவத்தின் இருண்ட யதார்த்தத்துடன் கடுமையாக முரண்படுகிறது.

இத்திரைப்படம் மைய நீரோட்ட சினிமாவின் திரைக்கதையை எழுதும் செயல்முறையின் ஒரு கட்டுடைப்பாகும்; இது “உள்மன வாழ்க்கையை” அதன் அனைத்து படைப்புத் திறன், பிரமைகள் மற்றும் முடக்கும் நிச்சயமற்ற தன்மைகளுடன் ஆராய்கிறது. இது ஹாலிவுட்டின் இடைவிடாத வணிகவாதம், கதைசொல்லலுக்கான அதன் ஆரம்பம்-மத்திமம்-முடிவு என்கிற அசைக்க முடியாத சூத்திர அணுகுமுறை (“இது ஒரு பி படம் தான்,” தயாரிப்பாளர் பென் கெய்ஸ்லர் பார்டனுக்கு உறுதியளிக்கிறார்), மற்றும் தங்கள் நேர்மையைப் பேணத் துணியும் கலைஞர்கள் மீது அதன் அழிவுகரமான எதிர்வினையை கேலி செய்கிறது. பார்டனின் “சாமான்ய மனிதன்” பற்றிய இலட்சியவாத ஆனால் அப்பாவித்தனமான அறிவிப்புகள் இரக்கமின்றி நக்கல் செய்யப்படுகின்றன. இதனால் அவரது அறிவுசார் திமிர் மற்றும் ஆழ்ந்த பச்சாதாபமின்மையை அம்பலப்படுத்தப்படுகிறது. இந்தக் கருப்பொருள்களுக்கு அப்பால், சில விமர்சன விளக்கங்கள், குறிப்பாக ரோஜர் ஈபர்ட்டால் ஆதரிக்கப்பட்டு கோயன்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட, பார்டன் ஃபிங்க் ஐரோப்பாவில் நாசிசத்தின் எழுச்சியின் போது அறிவுஜீவிகளின் செயலற்ற தன்மை மற்றும் தார்மீக சமரசத்திற்கான ஒரு குறியீடு. துப்பறிவாளர்களான டாய்ச் மற்றும் மாஸ்ட்ரியோனோட்டி (முறையே ஜெர்மனி மற்றும் இத்தாலியைக் குறிக்கும்) மற்றும் (உச்சக்கட்டத்தில் “ஹெய்ல் ஹிட்லர்!” என்று கூச்சலிடும்) சார்லி/கார்ல் முண்ட் போன்ற பாத்திரங்கள் இந்தப் வாசிப்புக்கு நம்பகத்தன்மையை அளிக்கின்றன.

பார்டன் ஃபிங்க் 1991 ஆம் ஆண்டு கான் (Cannes) திரைப்பட விழாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது ஒருசேர பாம் டி’ஓர், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் விருதுகளை வென்றது ஒரு முன்னோடியில்லாத சாதனையாகும்; இது எதிர்காலத்தில் இதுபோன்ற தனியொரு படத்தின் வெற்றியைத் தடுக்க விழாவின் விதிகளை மாற்ற வழிவகுத்தது. பார்டன் ஃபிங்க் அதன் அசல் தன்மை, அமைதியற்ற சூழல் மற்றும் டர்டர்ரோ மற்றும் குட்மேனின் ஒப்பற்ற நடிப்பிற்காக கொண்டாடப்படும், விமர்சன ரீதியாகப் பாராட்டப்படும் மற்றும் முடிவில்லாமல் பகுப்பாய்வு செய்யப்படும் ஒரு கலைப்படைப்பாக விளங்குகிறது.
மத்திய மேற்கு ஒழுக்கம் மற்றும் குழப்பம்: ஃபார்கோ (1996) வின் பனிக்கட்டி நிலப்பரப்பின் குரூர அழகு

1996 ஆம் ஆண்டு ஃபார்கோ வெளியானதன் மூலம் கோயன் சகோதரர்களின் கலைப்பயணத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இது அவர்களை பரந்த வணிக வெற்றிக்கும் விமர்சனப் பாராட்டுக்கும் இட்டுச் சென்றது, இதில் சிறந்த அசல் திரைக்கதை மற்றும் ஃபிரான்சஸ் மெக்டார்மண்டிற்கான சிறந்த நடிகைக்கான அகாடமி விருதுகளும் அடங்கும். “இது ஒரு உண்மைக் கதை” என்ற புகழ்பெற்ற மற்றும் பொய்யான முன்னுரையுடன் வெளிவந்த இப்படம், மினியாபோலிஸ் கார் விற்பனையாளரான ஜெர்ரி லண்டேகார்டின் (வில்லியம் எச். மேசி) இருண்ட நகைச்சுவை ததும்பும் அவலக் கதையை விரிக்கிறது. கடனில் மூழ்கியிருக்கும் ஜெர்ரி, தனது பணக்கார, ஆதிக்க மனப்பான்மை கொண்ட மாமனார் வேட் குஸ்டாஃப்சனிடமிருந்து (ஹார்வ் பிரஸ்னெல்) கனமான பணயத்தொகையைக் கறக்கும் தீயநோக்கில், தன் ஆருயிர் மனைவி ஜீனையே (கிறிஸ்டின் ருட்ரட்) கடத்த சதிவலை பின்னுகிறான். இருப்பினும், இந்தத் திட்டம், பொருந்தாத மற்றும் பெருகிய முறையில் கட்டுப்பாட்டை இழக்கும் குற்றவாளிகளான, மிகுதியாக பேசும் கார்ல் ஷோவால்டர் (ஸ்டீவ் புஸ்செமி) மற்றும் அமைதியான, மனநோயாளி கியர் கிரிம்ஸ்ரூட் (பீட்டர் ஸ்டோர்மேர்), ஆகியோரால் செயல்படுத்தப்பட்டு எதிர்மறையான விளைவை அளிக்கிறது. அக்கடத்தல் மூலம் பணம்பறிக்கும் திட்டம் அதிர்ச்சியூட்டும் வன்முறை மற்றும் சோக நகைச்சுவையில் மூழ்கிய திறமையின்மையின் படுபாதாளத்தில் அதிவேகமாக அபத்தமாக அவிழ்கிறது.

இந்த வட அமெரிக்க மத்திய மேற்கு புயலின் மையத்தில், மினசோட்டாவின் பிரெய்னெர்ட் நகர ஏழு மாத கர்ப்பிணி காவல் துறைத் தலைவர் மார்ஜ் குண்டர்சன் (மெக்டார்மண்ட்) நிற்கிறார். மார்ஜ், தீவிரமடைந்து வரும் குழப்பம் மற்றும் இரத்தக் களரிக்கு மத்தியில், திரைப்படத்தின் அசைக்கவியலா அறநெறிக்கும் உணர்வோட்டத்திற்குமான துருவ நட்சத்திரமாக, திறமையின் சுடரொளியாகவும், அன்பின் பெருக்காகவும், உறுதிகொண்ட கண்ணியத்தின் கலங்கரை விளக்கமாகவும் மிளிர்கிறார். அவரது “மினசோட்டா நைஸ்” – பண்பான, கிராமிய இயல்பும், தனித்துவமான பிராந்திய பேச்சுவழக்கும் கொண்ட அவரது பாங்கு – அவர் விசாரிக்கும் கொடூரமான குற்றங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக ஒளிர்கிறது. ( மினசோட்டா நைஸ்” என்பது கனிவு மற்றும் பணிவு பண்பாட்டிலிருந்து பிறந்த ஒரு வார்ப்புரு/stereotypical எண்ணம்.) அவரது கர்ப்பம் அவரது கதாபாத்திரத்தின் அகவய பார்வைக்கு முக்கிய அம்சமாக இருந்தாலும், அது அவரது திறன்களை வரையறுக்கவில்லை; அவர் ஒரு கூர்மையான, முறையான புலனாய்வாளர், அவர் கொடூரமான குற்றக் காட்சிகளை அசாத்திய அமைதியுடன் கையாளுகிறார். மார்ஜ் குண்டர்சன் பாத்திரம், குறிப்பாக அவரது கர்ப்பமும், கொடூரமான வன்முறைக்கு மத்தியில் அசைக்க முடியாத “மினசோட்டா நைஸ்” எனும் அவரது இயல்பும், ஒரு தார்மீக மையத்தை விட மேலானதொன்றாக செயல்படுகிறது. கோயன்களின் வழக்கமான குழப்பமும் ஒழுக்கமின்மையும் நிறைந்த பிரபஞ்சத்தின் முகத்தில், இயல்புநிலையும் வாழ்வை உறுதிப்படுத்தும் விழுமியங்களும் கொண்ட ஒரு ஆழமான, கிட்டத்தட்ட தீவிரமான வலியுறுத்தலை அவர் பிரதிபலிக்கிறார்.

கோயன் சகோதரர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் இருண்ட நகைச்சுவை, வன்முறை மற்றும் தார்மீக ரீதியாக தெளிவற்ற அல்லது திறமையற்ற கதாபாத்திரங்களால் வகைப்படுத்தப்படுகின்றன, இது குழப்பத்தின் பெருவெடிப்பிற்கு வழிவகுக்கிறது. ஃபார்கோ, தீவிர வன்முறையையும் பேராசையையும் கொண்டிருந்தாலும், மார்ஜை விதிவிலக்கான ஸ்திரத்தன்மையின் திருவுருவமாக அறிமுகப்படுத்துகிறது. அவரது எளிய கண்ணியம், அவரது கணவர் நார்ம் (ஜான் கரோல் லிஞ்ச்) உடனான அவரது அன்பான உறவு, அவரது பண்பான செயல்திறன் மற்றும் அவரது கர்ப்பம் ஆகியவை அசாதாரண குற்றங்களும் திறமையின்மையும் நிறைந்த ஒரு படத்தில் கிட்டத்தட்ட ஆக்ரோஷமாக சாதாரணமானவையாகத் திகழ்கின்றன.

இது, அடிக்கடி சமுகத்தை இழிந்து பேசுபவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் கோயன்கள், இங்கு ஒரு மாற்றீட்டை முன்வைக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது: அன்றாட கண்ணியம் விசித்திரமானது மட்டுமல்ல, ஒரு ஆற்றல் நிறைந்த, உறுதிப்படுத்தும் பேரொளி என்ற பார்வை. படத்தின் இறுதியில் கார்லின் உடல் எச்சங்களை மர அரவை இயந்திரத்தில் கியர் கிரிம்ஸ்ரூட் போடும்போது மார்ஜின் எதிர்வினை– “எதற்காக? ஒரு சிறு தொகைக்காக. வாழ்வு சிறு பணத்தொகையை விட மிக்கது, அது உங்களுக்குத் தெரியுமா … தெரியாதா?” – இதை ஆணித்தரமாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவரது கர்ப்பம் எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் குறிக்கிறது, இது குற்றவாளிகளின் அழிவுகரமான சூனியவாதத்திற்கு நேரெதிரானது. அவர்களின் படைப்புகளில் ஒப்பீட்டளவில், இருண்ட சாயல் கொண்ட தார்மீகத் தீர்வாக அதன் முடிவு இருந்த பட்சத்திலும், மார்ஜின் நம்பிக்கை கீற்று ஃபார்கோவை கோயன் சகோதரர்களின் படங்களில் தனித்துவம் நிறைந்த ஒன்றாக்குகிறது – பனிசூழந்த ஒளியற்ற கோயனுலகில் மார்ஜ் ஒரு மறக்கமுடியாத கீற்று.

ஃபார்கோ வகைமாதிரிகளைத் திறமையாகக் கலந்து, ஆழமான இருண்ட நகைச்சுவையுடன் கூடிய நியோ-நுவார் குற்ற த்ரில்லராக பரிணமிக்கிறது. கோயன்கள் மீண்டும் வகை மரபுகளுடனும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளுடனும் விளையாடுகிறார்கள்; ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸால் மிகக்குறைந்த செயற்கை வெளிச்சத்துடன் படம்பிடிக்கப்பட்ட, கடுங்குளிரும் பனிப்படலமும் போர்த்திய மினசோட்டா நிலப்பரப்பையே, உயிர்த்துடிப்புள்ள ஒரு பாத்திரமாக வார்த்தெடுக்கிறார்கள். பரந்த, வெண்மையான, அடக்குமுறை மிக்க விரிவுகள், நுவார் வகைமையின் இருண்ட மூலைமுடுக்குகளுக்கும் வெளிச்சமற்ற தெருமுனைகளுக்கும் எதிர்மறை அழகியலா க, கதாபாத்திரங்களின் தார்மீக அழிவையும், மனிதனின் முட்டாள்தனத்திற்கு இயற்கையின் குளிர்ந்த அலட்சியத்தையும், நுவார் வகைமையின் தத்துவார்த்த நீட்சியாக பிரதிபலிக்கின்றன. டீக்கின்ஸ் தனிமை, எதிர்மறை வெளி, மற்றும் பனியில் உறைந்த வெளிப்புறங்களைக் குளிர்ச்சியான, மலட்டு ஒளியில் குளிப்பாட்டும் ஒரு இயற்கையான ஒளியமைப்புத் திட்டத்தை வலியுறுத்தும் பரந்த காட்சிகளைப் பயன்படுத்துகிறார்; இது மார்ஜ் மற்றும் நார்மின் வீட்டின் வெப்பமான, நெருக்கமான உட்புறங்களுடன் முரண்படுகிறது. படத்தின் வலுவான பிராந்தியவாதம், “மினசோட்டா நைஸ்,” ஸ்காண்டிநேவிய-அமெரிக்க கலாச்சாரம் மற்றும் உள்ளூர் பேச்சுவழக்கின் நுணுக்கங்களைப் படம்பிடிப்பது, அதன் துல்லியம் மற்றும் ஆதரவளிக்கும் சாத்தியக்கூறு ஆகிய இரண்டிற்கும் குறிப்பிடப்பட்டுள்ளது; முக்கியமாக, அத்தகைய அழகியல் தேர்வு வெளித்தோற்றத்தில் சாதாரண உலகை கதைக்களமாகக் கொண்டு அசாதாரண நிகழ்வுகளின் மூலம் ஒரே வார்ப்பில் உதிக்கும் எண்ணங்களை மீறுவதற்கு இறுதியில் வழிகோலுகிறது.

ஃபார்கோ வில் உள்ள கருப்பொருள் கவலைகள் செழுமையானவை, பன்முகத்தன்மை கொண்டவை. ஜெர்ரியின் பேராசையும் தொடர் விரக்தியும் ஏற்படுத்தும் அழிவுகரமான விளைவுகள் அப்பட்டமாகக் காட்சிப்படுத்தப் படுகின்றன; பணம் பல கதாபாத்திரங்களுக்கு ஒரு மைய, சிதைக்கும் ஆற்றலாகச் செயல்படுகிறது. படம் கொடூரமான வன்முறையை சாதாரணமாக கடந்து செல்கிறது, இது தீமையின் அன்றாட இயல்பையும் மற்றும் மார்ஜால் உருவகப்படுத்தப்பட்ட அன்றாட ஒழுக்கத்தின் பின்னடைவையும் பற்றிய ஆய்வுகளுக்கு வழிவகுக்கிறது. சில அறிஞர்கள் ஃபார்கோ வை ஒரு விவிலிய ஒழுக்க நாடகமாக விளக்குகிறார்கள்; மார்ஜ் சட்டம் மற்றும் ஞானம் போன்ற நற்பண்புகளை ஆளுமைப்படுத்துகிறார், அதே நேரத்தில் குற்றவாளிகள் சட்டவிரோதம், பேராசை மற்றும் குடும்பத் துரோகம் போன்ற பாவங்களை உள்ளடக்குகிறார்கள். மற்றவர்கள் இப்படத்தை அமெரிக்க சமூகம், குடும்ப அலகு மற்றும் அமெரிக்கக் கனவின் வெறுமை ஆகியவற்றின் விமர்சனமாகக் கருதுகின்றனர்; குறிப்பாக ஜெர்ரி என்ற பாத்திரம் மூலம்: அவர் தனது மாமனாரால் அடையாளப்படுத்தப்பட்ட அடைய முடியாத வெற்றியைப் பின்தொடர்வதில் தார்மீக இழப்பையும் அந்நியப்படுதலையும் குறிக்கிறார். படத்தின் முரண்பாடான தொனி, வகைமாதிரி திரவத்தன்மை மற்றும் சுய உணர்வுள்ள “உண்மைக் கதை” கூற்று ஆகியவை அதன் பின்நவீனத்துவ உணர்திறனுக்கும் பங்களிக்கின்றன; இது சினிமாவில் உண்மை மற்றும் பிரதிநிதித்துவத்தின் தன்மையைக் கேள்விக்குள்ளாக்க பார்வையாளர்களை அழைக்கிறது.

ஃபார்கோ வின் விமர்சன மற்றும் வணிக வெற்றி மகத்தானது; இது கோயன்களின் படைப்புகளில் அறிவார்ந்த ஆர்வத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. படத்தின் நீடித்த தாக்கம், விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தற்கால நெட்ஃப்லிக்ஸ் (மற்றும் ஹுலு) தொடருக்கான அதன் உத்வேகத்தில் தெளிவாகத் தெரிகிறது, இது பிரபலமான கலாச்சாரத்தில் அதன் இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “எழுத்தாளரின் நரகம்: பார்டன் ஃபிங்க் (1991) மற்றும் ஹாலிவுட்டின் மாயத்தோற்றம்”