தலை துண்டிக்கப்பட்ட புத்தர்

(1) தலை துண்டிக்கப்பட்ட புத்தர்

தலை துண்டிக்கப்பட்ட சிற்பத்தில்
தலை துண்டிக்கப்படாமலிருந்திருந்தால்
தெரிந்திருக்கும் அழகை விட புத்தர்
அழகாகத் தெரிகிறார் –
அழகாகத் தியானிக்கிறார்-
அழகாக உபதேசிக்கிறார்-
அழகாகப் பிரகாசிக்கிறார்-
அவரைப் பார்த்து
அவரவர்
அவரவர் நினைக்கும்
தலையைப்
பொருத்தி
உயிர்ப்பித்து விட்டுப்
போவது போல்
தெரிகிறது எனக்கு.
நானும்
நான் நினைக்கும்
ஒரு தலையைப் பொருத்தி
நேர் நின்று நோக்குகிறேன்-
‘ஒரே நேரத்தில்
விதவிதமாய்த்
தலை பொருத்தப்பட்ட
ஆயிரமாயிரம் புத்தர்கள்
தெரிகிறார்களே.
அவரவர் பொருத்திய தலையெலாம்
மனிதத் தலைகளாய்
அவையெலாம்
அவரவர் தலையா ?
எப்படி தெரியும்?
நான் பொருத்திய தலை
எத் தலை?
புன்னகைக்கிறதே
அது.
நினைவுபடுத்துகிறதே
என்றோ நான் மறந்த அல்லது
தொலைத்த என் புன்னகையை
புதிய வசீகரத்துடன்.
என் தலையோ
அது?
துண்டிக்கப்பட்டு விட்டதா
அது?
என் தலையுடன்
என்றும் பார்த்திராத அழகில் தெரிவது
யார்?
எனக்குள் மறைந்திருந்து
இது வரை நான்
கண்டு கொள்ளாத என்
மற்றொரு ”நானா’ ?
யார் உண்மை?
எனக்குள் ஒரு
காத்திருக்கும் புத்தனா?
யார் நான்?
என் கைவிளக்கை
எங்கு ஒளியேற்ற முதலில்?
என் தலைக்குள்ளா?
ஒளியேற்றாத வரை
துண்டிக்கப்படா விட்டாலும்
துண்டிக்கப்பட்டது போல் தானா
என் தலை?‘-
துணுக்குற்று நான்
திகைக்கும் கணத்திற்குள்
மறுபடியும் முன்பு போல்
துண்டிக்கப்பட்ட தலையுடன்
எதிரில் தெரிகிறார் புத்தர்
சிற்பத்தில்
உருவம் கொண்டு-
ஆனால்
துண்டிக்கப்பட முடியாத
ஒருதனிப்
புன்னகையைப்
புன்னகைத்து
சூக்குமமாய்.


(2) கடவுளின் விழிகள்

எங்கிருந்தும்
எதனிலிருந்தும்
தெரியாது-
(ஏனென்றால்
கவனிக்கப்படுவது மட்டுமே
உணர முடிவதால்)-
அதனால்
எப்படியோ நான்
சதா
கவனிக்கப்படுவதின்
என் கவனிப்பில் தான்
இதுவரை நான்
என்னை ஒழுங்காக
நடத்திக் கொண்டு வந்துள்ளேன்
என்ற உண்மையை
நான்
எனக்கு நானே
கண்ணாடியாய்க்
கண்ட போதுதான்
கண்டேன் –
என் விழிகளையே
கண்காணிக்கும்
என் விழிகளை-
கடவுளுடையதாய்.


(3) உலரிலை

வனத்தில் வீழ்கிறது
ஓர் உலரிலை
சப்தமில்லாததால்
நிசப்தமாய் இருக்கும்
நிசப்தமாய்
இல்லாது
நிசப்தமாய் இருக்கிறதால்
நிசப்தமாய் இருக்கிற
நிசப்தத்துக்குள்
என்னிரு விழிகள் செவிமடுக்க-
மேனியுலர்ந்து
பழுத்துக் கொண்டே இருக்கும்
முதுமையில் நான்
ஒரு நாள் உதிரப் போவதை
நினைவுபடுத்தும்
அதையெடுத்து
சட்டைப் பையில் போட்டுக் கொண்டேன்
ஒரு வாஞ்சையில்.
ஏனோ கனக்கிறது அது-
அது
வெறும் உலரிலையாய்த் தெரியவில்லை-
ஒரு
உடல்.


(4) சடலத்தின் சங்கடம்

தாழ்வாரத்தில்
கிடத்தப்பட்டிருக்கிறார்
தந்தை-

வசிக்கும் உள் அறைக்குள்
கைகால் உதைத்து
கொள்ளையாய்ச் சிரிக்கும்
’கிடத்தப்பட்டவனின்’ ஐந்து மாதக் குழந்தையை
யார் தான்
கொஞ்சாமல் இருக்க முடியும்?

ஒரு சுழற்கதவு தான்
பிரிக்கிறது
துக்கத்திற்கும்
சந்தோஷத்திற்கும் இடையே-

இரண்டில்
எதிலிருந்தும் நுழைந்து
எதிலிருந்தும் வெளியேற
சங்கடமாயில்லை யாருக்கும்-

தாழ்வாரத்தில்
கிடத்தப்பட்டிருக்கும்
தந்தையைத் தவிர.

சாவையும் வாழ்வையும்
மாறி மாறி அறிந்த தெருவில்
பாடை தயாராகிக் கொண்டிருக்கிறது.


(5) சொற்காடு

சொற்கள்
கூடியிருந்த கூட்டத்திற்குள்
நுழைந்தேன்.
ஒவ்வொரு சொல்லும்
இன்னொரு சொல்லை ஆற்றுப்படுத்த
அலைந்து அல்லாடினேன்.
அது அர்த்தத்தைக் குறித்த
அலைச்சலாய் இருந்தது.
ஒரு சொல்லின்
சொற்ப நிழலிலேயே
தங்கி விட்டாலென்ன?
எல்லாப் பொருளும் குறித்த
ஒன்றைச் சொல்லென
ஒரு சொல்லிடம் வினவினேன்.
வா என்று தனக்குள்
கைப்பிடித்து கூட்டிப் போனது-
அது
அதன் வேராயிருந்தது.
ஒவ்வொரு சொல்லின்
ஆதி வேராயும் இருந்தது.
அது மெளனமாய் இருந்தது.
அமைதி கொண்டேன்
காட்டுக்குள் நுழைவது போல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.