சிறுகோட்டுப் பெருங்குளம்

This entry is part 11 of 11 in the series கவிதாயினி

குன்றுகளின் உச்சிகளிலும் ,பரந்த காடுகளிலும் ,வயல்வெளிகளின் ஈரத்திலும், நெடுங்கடலின் தூரத்திலும் , பாலையின் மணல்வெளியிலும் தகித்தும் குளிர்ந்தும், சேர்ந்தும் பிரிந்தும் மானுடரை ஆட்டிவைக்கும் காதலைப் பாடும் அகத்திணையை ’அன்பின் ஐந்திணை’ என்று தொல்காப்பியர் கூறுகிறார். 

கைக்கிளையும், பெருந்திணையும் ஐந்திணைகளில் சேர்வதில்லை. மனதொருமிக்கப்பட்ட காதலும் அதில் உள்ள உணர்வுகளுமே ஐந்திணைகளில் சிறப்பாக சொல்லப்படுகிறது. கைக்கிளையும் பெருந்திணையும் பொருந்தாக்காமம் எனப்படுகிறது.

 ஒருதலைக்காதல் அல்லது ஒரு தலைக்காமம் கைக்கிளை ஆகும். 

‘இது காதலின் தொடக்க நிலை. பின் இது ஐந்திணையில் காதலாக சேரும்’ என்று நம்பியகப்பொருள் [நூ 28] கூறுகிறது. சங்கப்பாடல்களில் கைக்கிளை திணையில் பாடப்பட்ட பாடல்கள் குறைவாகவே உள்ளன.

மேலும் கைக்கிளை திணையில் மனம் சார்ந்த உணர்வுகளை கொண்டப் பாடல்கள்  புறநானூற்று பாடல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. சங்கப்பாடல்களில் காதல் என்ற சொல் இல்லை என்றாலும் கூட மனம் சார்ந்த உணர்வுள்ள பாடல்களில் மூலம் காமத்திலிருந்து ஒருஅடி விலகி பெயர் சொல்லப்படாத ஒரு உன்னத உணர்வின் தொடக்கம் நிகழ்வதை இந்தப்பாடல்களை வாசிக்கும்போது உணரமுடிகிறது. 

பெண்புலவர்களில் பெருங்கோழி நாய்க்கன் மகள் நக்கண்ணையாரின் பாடல்கள் கைக்கிளை திணையில் அமைந்துள்ளன. இவர் சங்க இலக்கியத்தில் ஆறு பாடல்கள் பாடியுள்ளார். 

கைக்கிளை பாடல்கள் பழிச்சுதல் என்ற துறையை சேர்ந்தவை. பழிச்சுதல் என்றால் போற்றிப்பாடுதல் மற்றும் பழித்துப்பாடுதல் என்ற இருநிலைகளிலும் இருக்கலாம்.

தலைவியின் ஊரில் மல்லர்களுக்கிடையில் போட்டி நடைபெறுகிறது. வெளியூரில் இருந்து வந்த மல்லன் உள்ளூர் மல்லர்களை செயல் இழக்க வைக்கிறான். மல்லர் போர் என்பது  எதிர்ப்பவரை குறிப்பிட்ட பொழுது தாக்குதல் நடத்தவிடாது செயலிழக்க செய்தல். அந்த மல்லனின் வீரத்தில் திகைப்புற்று மையல் கொண்ட ஊர், வெளியூரில் இருந்து வந்த மல்லனை வென்றவனாக ஏற்றுக்கொள்வதா.. வேண்டாமா என்று தடுமாறுகிறது. அங்கே கூட்டத்தில் மற்பார் காண வந்த ஒருத்திக்கு அவன் மீது மையல் உண்டாகிறது. அவளும் அவனை  காதலிப்பதா? வேண்டாமா? என்று இருநிலைகளில் அலைகழிகிறாள். தந்தையுடன் மனத்தாங்கல் கொண்டு நாட்டை விட்டு காட்டில் வாழும் சோழன் போர்வைக் கோப்பெருங்நற்கிள்ளி என்ற இளவரசன் இந்தப்பாடல்களின் பாட்டுடைத்தலைவன் ஆவார்.

அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே
அடுதோள் முயங்கல் அவை நாணுவலே
என்போற் பெருவிதுப் புறுக என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்டஇம் மையல் ஊரே [புறநானூறு 83]

சில பேர் வெற்றி என்று கூவுகிறார்கள். சிலபேர் இல்லை என்று கூவுகிறார்கள். இந்தக்கூச்சலைக்கேட்டு தலைவி தன் வீட்டு முற்றத்தில் உள்ள பனைமரத்தில் சாய்ந்து நின்றபடி மற்போரை பார்க்கிறாள். 

என்னை புற்கை யுண்டும் பெருந்தோளன்னே
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன்னம்மே [புறநானூறு :84]

என்னுடைய தலைவன் புல்லரிசி சோறுண்ணடாலும் தோள்வலிமை கொண்டவன். அவன் களம் புகுந்தால் எதிர்த்து மல்லர்கள் நிலை உப்புவணிகர்கள் செல்லும் வழியைப் போல கடுமையாகும் என்கிறாள். 

தொழில் மழை பொழிந்த பானாட்கங்குதல்
எறி திரைத்திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே [அகநானூறு 252]

வேட்டையில் இரையை வலப்புறத்தில் மட்டுமே வீழ்த்தக்கூடிய புலிகளைக் கண்டு யானைகளை நடுக்கும். அந்த யானைகளின் தந்தங்களை பறித்து வீசக்கூடிய யாளிகள் உலவும் காட்டுவழியில் வருகிறான். அதை நினைத்தபடி இங்கிருந்தல் எனக்கு துன்பம் தருதாக உள்ளது. நான் என்ன செய்வேன் தோழி? அரும்புகள் உதிந்து மிதந்திருக்க பலநாட்களாக மழைபெய்து நிரம்பிய குளம் அலைஎழுந்து ததும்பி வழியப் பார்க்கிறது. சிறிய கரையை உடைய அந்தப் பெரிய குளத்தைக் காக்கும் துயிலாத காவலன் போல அன்னையும் துயில் மறந்திருக்கிறாள் என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

….ஈங்கைத்
துய்அவிழ் பனி மலர் உதிர வீசித்
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குதல்
ஏறிதிரைத் திவிலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங் குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே [அகநானூறு : 252]

முட்களுடன் உள்ள தாழம்புதரில்  யானை தந்தம் போன்று அரும்புகள் அரும்பியுள்ளன. அவை மலர்ந்து இந்த விழாக்களம் முழுக்க மனம் பரப்புகின்றன. அந்த மணம் கடலையும் மணமுள்ள கடலாக்குகிறது. அந்த மணக்கும்கடலின் தலைவனே உன்னுடைய தேர் பயணத்திற்கு தயாராகும் ஓசை நீ பயணப்படுவதாகக் காட்டுகிறது. நீ இன்றி சில நாட்கள் கூட தலைவி உயிர்வாழ மாட்டாள் என்று நீ அறிவாய் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப
இனமணி நெடுந்தேர் பாகன் இயக்க
செலீஇய செறிஆயின் இவளே
வருவை ஆகிய சில்நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே [நற்றிணை :19]

முள்போன்ற பற்களை உடைய வௌவ்வால் பகலில் உறங்கும் போது அழிசியின் சோழநாட்டில் உள்ள பெரிய காட்டில் நெல்லிக்காயை சுவைப்பது போல கனவு காண்கிறது. அதுபோல மழைப்பெய்து புன்னையின் அரும்புகளில் இருந்து மகரந்தப்பொடிகள் உதிர்கிறது. கடற்கரையில் கிளிஞ்சல்களை ஒதுக்கி விளையாடுகிறது கடல். அத்தகைய கடற்கரையில் பரதவர்கள் மகிழ்ந்திருக்கிறார்கள். அந்த இனிய பகல்பொழுதில் நானும் தலைவனுடன் இருப்பதைப்போல அப்பகலை கனவில் கண்டேன் என்று தலைவி சொல்கிறாள்

பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந்தண் கானலும் நினைந்த அப்பகலே [நற்றிணை 87]

நக்கண்ணையாரின் இந்தப்பாடல்களில் காதலின் முதல் நிலையான ஒருதலைக்காதலும், காதல்ஏற்பின் பின் களவியலின் துயரமும், பிரிவும், மகிழ்ச்சியான காதல் வாழ்வினை குறித்த கனவும் உள்ளது. 

கவிதையின் அழகு அதன் உவமையால் மேலும் கூர்க்கொள்கிறது. இன்னும் சரியாக மொழிபயிலாத குழந்தை தான் கண்ட ஒரு பொருளை நமக்கு விளக்குவதற்கு அதற்கு தெரிந்த ஒன்றை வைத்து நாம் காணாத அந்தப்பொருளை இப்படி.. அப்படி.. என்று கைகளை விரித்து கூறி நமக்கு புரியவைக்கும். ஒரு வகையில் கவிஞர்களும் அப்படிதான் உவமைகளை பயன்படுத்துகிறார்கள்.

ஒப்பீட்டளவில் பெண் தன்காதலை எழுதுதல் குறைவு. அவளால் கண்டதும் ஏற்படும் காதலை உடனே ஏற்க முடிவதில்லை. தலைவி ‘இருபாற் பட்ட மையல் ஊர்’ என்று சொல்வது தன்னையே தான். ஆம், இல்லைகளுக்கு நடுவே தலைவியின் மனம் ஒரு மற்போரை தனக்குள் நடத்திவிடுகிறது. இவன் என் ஊரன் இல்லை. என் நாடன் இல்லை என்றாலும் அவனே வென்றான் என்று தலைவி பனையின் கீழ் நின்று தன்காதலை தானே ஏற்றுக் கொள்கிறாள்.

என்ஐக்கு ஊர் இஃது அன்மை யானும்
என்ஐக்கு நாடு இஃது அன்மை யானும்
ஆடுஆடு என்ப ஒருசா ரோரே
நல்ல பல்லோர் இருநன் மொழியே
அஞ்சிலம்பு ஒலிப்பஓடி,எம்இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான்கண் டனன் அவன் ஆடாடுதலே [புறநானூறு 85]

 அகத்திற்குள் நடக்கும் அந்தப்போரின் முதல் தாக்குதலிலேயே தலைவி செயலிழந்து நிற்பதை நக்கண்ணையார் ‘அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்கு என்ற வரியின் மூலம் சொல்லிவிடுகிறார்.  நயம்உரைத்தில் வரிகளில் மிக அழகான வரி இது. 

காதலில் விழும் தலைவியின் மனமே தான் இந்தப்பாடல்களில் பலவித அரும்புகளாக மலர காத்திருக்கிறது. அரும்பு உடைந்து பரவும்  மணம் வீசும் கடற்கரை, தாழையின் அரும்பு மணக்கும் விழவுக்களம், அரும்புகள் உதிர்ந்து மிதக்கும் நிறைந்த குளம் என்று யாவற்றிலும் நாம் காண்பது அவளை தான். 

காதலின் தத்தளிப்பை நக்கண்ணையார் சிறுகோட்டு பெருங்குளம் என்றார். நிறைந்து தழும்பும் குளம் எப்போது வேண்டுமானாலும் கரையை உடைத்து கடந்து செல்லக்கூடும். தாழை மணம் நிறைந்த கடலின் தலைவன் அவன். அவனை நினைத்து அவள் காணும் பகல்கனவுகள் நிறைந்த பகலானது மிக நீண்ட பகல். அது கடலைப்போலவே நீண்ட தண்மையும், நீண்ட கானலும் இணைந்த கனவின் வெளி.

அத்தனை விசையுடன் தலைவி மனதை செயலிழக்க செய்யும் மற்பார் எது ?

அரும்புகள் மிதக்க உடையக்காத்திருக்கும் அந்தக் குளம் எது? 

கடலையே மணக்க வைக்கும் அந்த தாழைமலர் எது? 

நம்மையும் நக்கண்ணயாருடன் சேர்ந்து புன்னகைக்க வைக்கும் பாடல்கள் இவை.

Series Navigation<< மறம் பாடுதல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.