ஜானகிராமனுக்காக ஒரு கதை

நாங்கள் இருவரும் கல்லூரி நண்பர்கள். 1936-37லிருந்து கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சக மாணவர்கள். முதல் ஆண்டிலேயே என் கதைகள் மணிக்கொடியில் வெளிவரத்தொடங்கி நான் எழுத்தாளன் ஆகிவிட்டேன். என் கதை வெளிவந்ததும் கல்லூரியில் என்னை மிகவும் சங்கோசத்துடன் அணுகிப்பாராட்டுவார்,அவரைவிட அதிக சங்கோசப்பட்டபடி அவருக்குப் பதில் கூறுவேன். இப்படி ஆரம்பித்தது எங்கள் தொடர்பு. நான் எழுதுவதைப் பார்க்க அவர் எங்கள் வீட்டிற்கு வருவதும், நான் அவர் இருப்பிடம் செல்வதுமாக எங்கள் நெருக்கம் அதிகரித்தது.