ஒருமுறை வெங்கட்சாமிநாதன் அவர்களோடு தி.ஜானகிராமன் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில், அவர் ஒரு விஷயம் சொன்னார், “ஜானகிராமனுக்கு இலக்கியம் குறித்தோ, கோட்பாடுகள் குறித்தோ பேசுவதைக் காட்டிலும் சாதாரண மனிதர்கள், பாட்டிகள், மரங்கள், பறவைகள் இவற்றைக் குறித்துப் பேசுவதில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது. நம்மோடு பேசிக்கொண்டேயிருப்பார். திடீரென்று ‘அங்கே ஒரு பறவை கத்தறது பாருங்கோ… எவ்வளவு இனிமையா இருக்கு’ன்னு வேறு உலகத்துக்குப் போய்விடுவார். ஜன்னல் வழியே வெளியே தெரியும் மரத்தின் இலைகளையும், பூக்களையும் பார்த்து வியந்துகொண்டிருப்பார். ‘இதைப் பாருங்கோ சாமிநாதன், இந்த குல்மொஹர் மரத்தோட இலையே எவ்வளவு அழகா இருக்கு?’ என்பார். உலகத்தின் வேறு எந்த சந்தோஷத்துக்கும் இணையாக, அல்லது அதற்கு மேலாக இயற்கை அவரைப் பரவசப்படுத்தியது’.
ஜானகிராமனின் படைப்புகளைப் படிக்கையில் அது எவ்வளவு நிஜம் என்று தெரிகிறது. பறவைகளைப் பற்றி அவர் எழுதியது போல் வேறு யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. பறவைகளின் குரலே அவருக்குப் பெரிய சங்கீத அனுபவமாக இருந்திருக்கிறது. 24 வயதில் அவர் எழுதிய கட்டுரையிலேயே மைய இழை கரிச்சான் பறவைதான். கரிச்சான் என்ற பாரத்வாஜப் பறவை அதிகாலையில் எழுந்துவிடும். அதன் குரலைக் கேட்கவேண்டுமென்றால் அதிகாலையில் எழுந்தால்தான் முடியும். அதைப்போல கு.ப.ராஜகோபாலனின் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் அது அவர் நிலைக்கு நாம் சென்றால்தான் முடியும் என்று சொல்கிறார் ஜானகிராமன். ஆனால் இதை பிராச்சாரமாகச் செய்யாமல், எழுத்தின் அனுபூதியோடு சேர்த்துக் கொடுக்கிறார். கரிச்சான், கு.ப.ரா, இலக்கியம், இசை – என எல்லாமே ஒரே இழையில் பிண்ணிப் பிணைந்து அக்கட்டுரையில் வருகின்றன. அக்கட்டுரையிலிருந்து ஜானகிராமனுக்கு மட்டுமில்லாமல், கு.ப.ராவுக்கும், ந.பிச்சமூர்த்திக்குமே அதிகாலைப் பறவைகளின் குரலில் அலாதிப் பிரியம் இருந்ததைத் தெரிந்து கொள்ளமுடிகிறது.
“கரிச்சான் அந்த நிசப்தத்தில் ஒரு மெட்டைத் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டிருந்தது. சாதகம் செய்பவன் வரவர அபிவிருத்தி காண்கிறது போல, அதன் மெட்டு போகப் போகத் தெளிவுபடவே அது உயிர் முழுவதையும் செலுத்திப் பாடத் துவங்கிற்று.
‘இப்போதுதான் சூடு ஏறி மேளம் கட்டியிருக்கிறது,’ என்றார் அவர். அதன் புதுப்புது மழலைகளைக் கேட்டு அவருக்குச் சிரிக்காமல் இருக்க முடியாது.
ஒரு இம்மி கூட மறதி, மாறல் இல்லாமல் அது ஒரே மெட்டை அனுபவித்துப் பாடும்போது, ‘பெரிய ஜீனியஸ்,’ என்று சொல்லிவிட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
சற்றுக் கழித்துப் பறவை ஓய்ந்துவிட்டது.
‘இனிமேல் படுத்துக் கொள்ளலாம். இனிமேல் கோழி கத்தும். வெயில் வந்ததும் ஒரு நிகழ்ச்சி உண்டு. நாம் எழுந்து கொள்வதற்கும், அதற்கும் சரியாக இருக்கும்’ என்று அவர் யோசனை சொன்னார்.
கரிச்சானைக் கேட்கும்போதெல்லாம் கு.ப.ரா சொல்வார், ‘நல்ல இருட்டில் வெளிச்சத்தினாலே கோடு எழுதுகிறாற்போல மின்னல் மாதிரி. என்ன சன்னமான சாரீரம் பார்த்தேளா?’
இரட்டையர்கள் கு.ப.ராவும், ந.பி-யும் கடைசி முறையாகச் சந்தித்தபோது கூட கரிச்சானைப் பற்றித்தான் பேசினார்கள்.”
ஜானகிராமனின் பல சிறுகதைகளில் பறவைகளைப் பார்க்கமுடிகிறது. ‘யாதும் ஊரே’ என்ற சிறுகதையில், ஒரே பத்தியில் பல பறவைகள் நமக்கு அறிமுகமாகிறார்கள்.
“மூங்கில் தோப்புகள், சுழியிட்டு ஓடுகிற ஆறு, வழிந்து ஓடுகிற வாய்க்கால், கொல்லை முருங்கை மரத்தில் தினைக்குருவியின் ஊசிக்கத்தல், வலியன் குருவி கனைத்துக் கனைத்துக் குழைக்கிற இனிமை, நீளமான ஒரு வாக்கியத்தைத் திருப்பித் திருப்பிப் பேசிக்கொண்டிருந்த புளிய மரத்துக் குருவி, ஆழங்காண முடியா நிசப்தம், அதன் நடுவே கீச்சிடும் அடுத்த வீட்டு ஊஞ்சல், நிழல், காற்று, நாற்றங்கால்களில் அலையோடுகிற பசும்பொன், வரப்புகளில் நாயுருவிகளை உராய்ந்து நடப்பது, களத்துக் கலியாண முருங்கையில் ‘ட்ரூவ்’ என்று அழைக்கிற மணிப்புறா…”
இந்தப் பத்தியாவது சிறுகதையின் நடுவே ஊரின் அழகை வர்ணிக்கும் இடம் என்று சொல்லிக் கடந்துசென்றுவிடலாம்.
மோகமுள்ளில் பாபு சங்கீதம் கற்றுக்கொள்வதற்காகத் தன்னைத் தயார் செய்து கிளம்பிக்கொண்டிருக்கிறான். அந்தச் சூழலைச் சொல்கிறார் ஜானகிராமன்.
“ஆனைச்சாத்தான் ஒன்று கொல்லையில் இன்னும் கத்திக் கொண்டிருந்தது. ‘டுவீக் டுவீக் டுவீக்’ என்று மிளகாய்க்குருவி ஓயாமல் அவசர அவசரமாக அரற்றிற்று. வாசலில் அங்காடிக் கூச்சல் காய்கறிகளைக் கூவிக்கொண்டு போயிற்று. மணி ஏழு இருபது ஆகியிருந்தது. ரங்கண்ணா வீட்டுக்குப் போகும் நேரம்.”
இந்தச் சித்தரிப்புகள் வலிந்து தன் இயற்கை மீது தனக்கிருக்கும் வியப்பைச் சொல்வதாக இல்லாமல், ‘எனக்கு எத்தனை பறவை விதங்களைத் தெரிந்திருக்கிறது பார்’ என்று பட்டியல் போடுவதாக இல்லாமல், தன்னியல்பிலேயே ஜானகிராமன் பறவைகளின் ஒலிகளைக் கேட்டு ரசிப்பவராக இருந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
“குளித்துவிட்டு, உடலைத் துடைத்து, மலரும் பன்னிற உடைகளும் அணிந்து புன்னகை பூக்கும் பெண்போல் தோன்றிற்று மலைக்காட்சி. ஊர்க்குருவி, காட்டுப்புறாக்களின் ஓசைகள் மலைவெளியில் ஆங்காங்கு நீர்த்துளிகள் போல் விழுந்துகொண்டிருக்கின்றன.” – இது ‘நடந்தாய் வாழி காவேரியில்’ வரும் ஒரு வர்ணனை. ஜானகிராமனின் ஒவ்வொரு பயணத்திலுமே பறவைகளைக்கு முக்கியமான இடம் உண்டு. ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’ என்ற ஆஸ்திரேலியா குறித்த புத்தகத்தில் குக்கா புர்ரா பறவையைக் குறித்த விவரணையும், ஆச்சரியமும் இரண்டு பக்கங்கள் நீள்கின்றன.
“திடீர் என்று யாரோ சிரிக்கிற சத்தம் கேட்டது. மனுஷச் சிரிப்பு மாதிரிதான் இருந்தது. எல்லோரும் சுற்றிமுற்றிப் பார்த்தார்கள். மாண்ட்டியும் பார்த்தார்.
‘அதோ’ என்றார், கையால் சுட்டிக்காட்டினார். பார்த்தோம்.
‘என்ன?’ ஆள் யாரையும் காணோம். ‘குக்கா புர்ரா’ என்றார்.
மெதுவாக சந்தடி செய்யாமல் எழுந்து நடந்தார். அந்தி மயக்கத்தில் மரத்தடியில் எதையோ பார்த்துவிட்டுத் திரும்பிவந்தார்.
‘கீழே உட்கார்ந்திருக்கிறது’ என்றார்.
‘எது?’
‘குக்கா புர்ரா மெதுவாகப் போய்ப்பாருங்கள், சத்தம் போட்டால் பறந்து போய்விடும்’ என்றார்.
அவர் காட்டிய இடத்திற்கும் சந்தடி செய்யாமல் போய்ப் பார்த்தோம். இரண்டு மூன்று பேர். குக்கா புர்ரா எங்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. கொஞ்சம் வெள்ளை நிறம். மீன்குத்திப் பறவை போலிருந்தது. நம் நாட்டில் குளத்தின் மீதும் ஆற்று நீர் மீதும் அந்தரத்தில் சிறகடித்து நின்று சளக்கென்று நீருள் நெட்டுக் குத்தாகப் பாய்ந்து மீனைக் கவ்வுமே அந்த மீன்குத்தியை விட இரண்டு மடங்கு பருமன். நிறம் நீலமாக இல்லை. சிறிது வெள்ளை. எங்களைக் கண்டு பயந்துவிடவில்லை அது. உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தது.”
இந்த விவரணை இத்தோடு முடியவில்லை. இன்னும் நீள்கிறது. இதில் என்னை ஆச்சரியப்படுத்துவது என்னவென்றால், குக்கா புர்ராவைப் பார்த்த ஜானகிராமனின் வியப்பு, புது விஷயத்தைப் பார்த்து வாயைப் பிளக்கும் வெறும் பாமர வியப்பில்லை. பறவைகள் மீது இயல்பாகவே அவருக்கிருக்கும் ஆர்வம் குக்கா புர்ராவின் உருவத்தை நம்மூர் மீன்குத்திப் பறவையோடு ஒப்பிட்டு ஒற்றுமை-வேற்றுமைகளையும் சொல்வதில் தெரிகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிவரும்போது, பல பறவைகளின் குரல்களைப் பதிவு செய்திருந்த ஒலித்தட்டை வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறார்.
ஆஸ்திரேலியப் பயணம் குறித்துப் பேசும்போது நினைவுக்கு வருகிறது. வெங்கட்சாமிநாதன், சுஜாதா உள்ளிட்ட எல்லோரும் ஜானகிராமனின் ஜப்பான் பயணப்புத்தகமான ‘உதய சூரியன்’ புத்தகத்தைத்தான் அதிகம் சிலாகிக்கிறார்கள். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது அவரெழுதிய ஆஸ்திரேலியப் பயணப்புத்தகமான ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’தான். ஜப்பான் பயணம்தான் ஜானகிராமன் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் என நினைக்கிறேன். அதனால் விமானப் பயணத்தில் ஏற்படும் பயம், தமிழ்நாட்டு உணவு கிடைக்காமல் திண்டாடுவது, இந்தியர்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவது, ஜப்பானின் வளர்ச்சி குறித்த அதீத வியப்பு என்று இருக்கிறது. ஆனால் அப்புத்தகத்திலும் அற்புதமான பல பகுதிகள் இருக்கின்றன. குறிப்பாக இறுதிப்பகுதி – அத்தனை நாள் அவருக்கு வழித்துணையாக இருந்த ஜப்பானிய ஆண் – பெண் இருவரும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு விவாகரத்தானவர்கள் என்பதும், அந்தப்பெண்ணை நினைத்து அவள் முன்னாள் கணவன் இன்னும் ஏங்கித் தனிமையில் தவிக்கிறான் என்பதையும் அவன் வாயிலாகவே சொல்லும் தருணங்கள் – அதற்குப் பின்னிருக்கும் ஜப்பானிய மனநிலை – என அப்பகுதி சிறப்பான ஒன்று. அதைப்போல முகவரி கேட்டு ஜப்பானியர் ஒருவரிடம் விசாரிக்கையில், அவர் அவர்களுடனே வந்து இடத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டு, ‘வீட்டில் அம்மா காத்துக் கொண்டிருப்பாள், நான் உடனே போகவேண்டும்’ என்று கிளம்பிச்செல்லும் சித்திரமும் சிறப்பான ஒன்று. அநேகமாக இந்நிகழ்ச்சிதான் அவருடைய ‘யோஷிகி’ சிறுகதையின் கருவாக இருந்திருக்கக்கூடும்.
ஜப்பான் பயணம் போலில்லாமல் ஜானகிராமனின் ஆஸ்திரேலியப் பயணம் வியப்புக்கடலில் மட்டுமே நிற்பதாக இல்லை. ஆஸ்திரேலியாவின் நிறை குறைகளை இந்தியாவின் நிறை குறைகளோடு ஒப்பிட்டபடியே இருக்கிறார். ஆஸ்திரேலியப் பயணம் அவர் கல்விப்பணி நிமித்தமாக, ஆஸ்திரேலியாவின் கல்வித்துறையைப் புரிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது. ஜானகிராமன் இயல்பாகவே குழந்தைகளிடம் அன்பும், அவர்கள் கல்வி மீது அக்கறையும் கொண்டவர். ஆகையால் ஆஸ்திரேலியர்கள், பரந்து விரிந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குடும்பங்களின் குழந்தைகளுக்குக் கல்வியளிக்க மேற்கொள்ளும் யத்தனம் அவருக்கு வியப்பூட்டுகிறது. அதே சமயம் அவர்களின் குறைவான மக்கள்தொகை, நிரம்பி வழியும் இயற்கை வளம் இவையும் அவர்கள் செழிப்புக்குக் காரணம் என்பதை மறக்கவில்லை. போலவே, ஆஸ்திரேலியர்கள் – அங்கு வாழ்ந்த பூர்வகுடியினரை அழித்துக் குடிபெயர்ந்தவர்கள் – என்பதையும் மறக்கவில்லை.
ஆஸ்திரேலியர்களுக்கும் – பழங்குடியினருக்கும் கலப்பாகப் பிறக்கும் குழந்தைகளும் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுடைய புத்திசாலித்தனம் கொஞ்சம் குறைவு – அதற்குக் காரணம் அவர்களுக்குள்ளிருக்கும் பழங்குடித்தன்மை என்கிறார் ஒரு ஆசிரியை. இத்தனைக்கும் அந்த ஆசிரியையே ஒரு பழங்குடிக் கலப்பினர்தான். ஜானகிராமனுக்கு அது கடுங்கோபத்தை வரவழைக்கிறது. [ஆசிரியையிடம் காட்டவில்லை. வாசகர்களிடம் காட்டுகிறார்.] மனிதர்களின் பொது அறிவை, பகுப்பறிவைச் சுட்டுவதாக நம்பப்படும் I.Q முறையைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, “இந்தப் பரீட்சைகளால் ஐக்யூ குறைவு என்று சில அமெரிக்க அறிவுஜீவிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பிராமணர்களை விட மற்றவர்கள் அறிவு குறைவானவர்கள் என்று சொல்வது போல இது. பரம்பரையாக வீடுகளில், படிக்க, அறிய, வாய்ப்பு, வசதி இருந்தால் அந்தக் குழந்தை சற்று மிடுக்காக இருக்கும். இந்த வசதி – வாய்ப்பு சித்தாந்தத்தை மூளைக்கே மாற்றுவது தப்பிலித்தனம். இது எல்லா நாடுகளிலும் வெவ்வேறு உருவங்களில் இருந்துவருகிறது. […] அந்த ஆஸ்திரேலிய வாத்தியாரம்மாளுக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஜாதி-குலம் பேசுபவர்களுக்கும் இது தெரியாமல்தான் இருக்கிறது.” என்கிறார் ஜானகிராமன்.
ஜானகிராமனின் பல சிறுகதைகள் தெளிவாகவே ஜாதீயத்தை விமர்சிப்பவை. இசைப்பயிற்சி, தாத்தாவும் பேரனும், வேதாந்தியும் உப்பிலியும், காவலுக்கு… போன்ற சிறுகதைகள் ஜாதீயம் குறித்த விஷயங்களைக் காட்சிப்படுத்தியவை.
ஆஸ்திரேலியப் பயணப்புத்தகத்தின் முதல் அத்தியாயமே ஒரு சுவாரசியமான சிறுகதையாக அமைந்திருக்கிறது. ஆஸ்திரேலிய காட்டுக்குள் வழி தவறிப்போகும் பேருந்து பெட்ரோல் தீர்ந்துபோய் அத்துவானத்தில் நின்று, வழிப்போக்கர்களிடம் உதவி பெற்று – பசிக்களைப்பில் வெகு நேரம் கழித்து – தங்களை வரவேற்றுக் காத்திருக்கும் ஆஸ்திரேலியக் குடும்பத்தைப் பார்க்கச் சென்று சேர்கிறார்கள். அப்போதுதான் ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் கிட்டத்தட்ட ஐம்பது மைல் தூரம் இருக்கும் என்பதையும், அதனால் இடையேயிருக்கும் பரந்து விரிந்த நிலப்பரப்பில் அந்தக் குடும்பம் தனியாகவே விவசாயம் செய்து வருகிறது என்பதையும், பள்ளிக்கல்வி வானொலி வழியாக தினமும் நடைபெறுகிறது என்றும் விவரித்துக்கொண்டே போகிறார் ஜானகிராமன்.
ஜானகிராமனின் இந்த ஆஸ்திரேலியப் பயணப்புத்தகம் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பயணநூல்களில் ஒன்று என்று நான் உறுதியாகச் சொல்வேன். இந்தப் புத்தகமே ‘குஞ்சாப்பாட்டி’யிடமிருந்துதான் தொடங்குகிறது.
“அந்தி வேளையில் அஜ்மல்கான் ரோடில் (புதுடில்லி), சாந்தினி சவுக்கில் (பழைய டில்லி), பாப்பா நகரில் (புது டில்லி), மவுண்ட்ரோட் தபாலாபீஸ் எதிரில் (சென்னையில்) நடக்கும்போது பூபாரம், பூபாரம் என்று குஞ்சாப்பாட்டி அலுத்துக்கொள்கிற வழக்கம். ‘இப்படியா நெளியும், புழு நெளியற மாதிரி! மனுஷக்கூட்டமா, புழு நெளிசலா இது! அடிப்பிரதட்சணம் பண்றேன்னு வேண்டிக்கவே வாண்டாம். இனிமே அஞ்சுநிமிஷம் இங்க நடந்தாப் போறும். எனக்கு ஒரு பசுமாடு வாங்கித்தாடாப்பா. நானும் அது பக்கத்தில பூமாதேவி மாதிரி நின்னுண்ணு பூபாரம் தாங்கலியேன்னு மகாவிஷ்ணுவை நிமிர்ந்து பார்க்கிறேன்” என்று ரவிவர்மா படத்தை ஞாபகப்படுத்துவாள் குஞ்சாப்பாட்டி.
ஆஸ்திரேலியப் பயணப்புத்தகத்துக்கும், மேற்கண்ட பத்திக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? எங்கிருந்து வந்தாள் குஞ்சாப்பாட்டி. அடுத்த பக்கம் திருப்பினால் அதற்கு பதில் கிடைக்கிறது – “மகாவிஷ்ணு விரும்பினால் நிச்சயமாக அவளை ஆஸ்திரேலியாவில் கொண்டு நிறுத்தியிருப்பார்!”
ஜானகிராமனுக்குப் பாட்டிகளிடம் அலாதிப்பிரியம் என்று தெரிகிறது. அவர்கள் தனக்குத்தானே பேசிக்கொள்வது, அந்தப் பேச்சிலிருக்கும் நையாண்டி ஜானகிராமனைக் கவர்ந்திருக்கவேண்டும். கண்ணாடிப்பாட்டி என்ற பாட்டியைக் குறித்து, அவளைப் போல் தனக்கு மனிதர்களை கவனிக்க வரவில்லை என்று ‘மோகமுள் உருவான கதை’ கட்டுரையில் குறைபட்டுக்கொள்கிறார் ஜானகிராமன்.
அந்தக் கண்ணாடிப்பாட்டியே நளபாகம் நாவலில் ஒரு சில பக்கங்களே வந்துபோகக்கூடிய ஒரு கதாபாத்திரமாக இருக்கிறாள். அதில் பாட்டியின் அறிமுகமே அவள் பேசிக்கொள்வதில்தான் ஆரம்பமாகிறது:
“என்னடீ, கொம்பேறி மூக்கான், என்ன வந்துடுத்து உனக்கு ரண்டு நாளா? நேத்திக்கு ரண்டு சேர் பாலைக் கொடுத்துட்டு காலைக் காலைத் தூக்கினே. இன்னிக்கு ஒன்றரைச் சேர் கொடுத்துட்டு மடியை மடியை எக்கிக்கறே! ஒரு வீசை புண்ணாக்கும், கால் குறுமணி பருத்திக்கொட்டையும் முழுங்கிப்ட்டு..! என்ன அடம்னேன்!… என்ன!… என்ன!… சமத்தாயிருடீ…! இல்லாட்டா அதொபாரு தென்னமட்டை, அதை எடுத்துண்டு முதுகிலே ரண்டு வாங்கினேனோ, ஏன்னு கேக்கப்படாது… இன்னிக்கு மடத்துத் தெருவுக்குப் போயி ரண்டு கட்டுப்புல்லு வாங்கிப் போட்டுடறேன்… கோச்சுக்காதே படவாச்சிறுக்கி! […] புல்லுக்கட்டுன்னா அத்தனை ஆசையாடியம்மா? புல்லுன்ன உடனே மடியை இளக்கிப்பிட்டியே… நிச்சயமா ரண்டு கட்டு இன்னிக்கு ராத்திரி வாங்கிப் போடத்தான் போறேன், இல்லாட்டா ஏண்டி வேம்பூன்னு கேக்கா மாட்டியோ நீ…!”
– என்று கண்ணாடிப்பாட்டி பேசிக்கொண்டிருப்பது எருமையிடம். ஒரு நாவலில் ஒரு சில பக்கங்களே வந்து போகக்கூடிய பாட்டி தனக்குத்தானே நிகழ்த்திக்கொள்ளும் உரையாடலில் கூட இத்தனை உயிர்ப்பைக் காட்டுவது பாட்டிகளின் மீதான பிரியத்தால் மட்டுமல்ல, அவர்கள் பேச்சின் மீதான வியப்பாலும்தான்.
‘குளிர்’ சிறுகதையில் வரும் பாட்டிதான் ஜானகிராமன் எழுதிய பாட்டிகளிலேயே பிரபலமான பாட்டி. ஒண்டுக்குடித்தனத்தில் பல குடும்பங்களுக்கு நடுவே ஒரு பகுதியில் தனியாக வசித்துவரும் பாட்டி – இரவு கோயிலுக்குப் போய் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வருவதற்குள், குடித்தனத்தின் சண்டைக்காரக்கிழவி தாப்பாள் போட்டுவிடுவாள். எத்தனை இடித்தாலும் திறக்கமாட்டாள். பாட்டி வெளியே நின்று இறைஞ்சிக்கொண்டேயிருப்பாள். ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ கழிந்து அந்தக் கிழவி கதவைத் திறக்கும் வரை புலம்பிக்கொண்டே கதவைத் தட்டியபடி குளிரில் நடுங்கிக்க்கொண்டு நின்றுகொண்டிருப்பாள் பாட்டி. இது தினப்படி நடக்கும் வழக்கம். இதை கவனித்துக்கொண்டேயிருக்கும் பக்கத்துவீட்டுக்காரர், ஒரு நாள் பொறுக்கமுடியாமல் தன் வீட்டில் வந்துப் படுத்துத் தூங்கிவிட்டு காலையில் போகுமாறு சொல்கிறார். அதைக் கேட்டுவிட்டு பாட்டி கேட்பது:
“நீர் தனியா இருக்கிறீரா? வீட்டில் இன்னும் யாராவது இருக்காளா?”
‘வேண்டாம் பூசணி’ என்ற அவருடைய சிறந்த சிறுகதையில் வரும் பாட்டி, யார் உதவியும் இல்லாமல் தனித்து வாழ்ந்து சிரமத்தில் நாளைக் கழிப்பவள்.
“மொகரையைப் பாரு. உங்களுக்கெல்லாம் வேளைக்குச் சமைச்சுக் கொட்டணுமோ? வெறுமனே கரைஞ்சுண்டு கிடங்கோ. இன்னும் ஒரு நாழியாகும் இன்னிக்கு. நீயும்தான் போயேன். எங்கேயாவது பந்தல் கால்லே படுத்துத் தூங்கிப்பிட்டு ஒரு நாழி கழிச்சு வந்து சேரு – என்று முற்றத்தில் உட்கார்ந்து கரையும் காக்கைக் கூட்டத்தையும், இடைக்கட்டில் வந்து வாலையாட்டிக் குழையும் நாயையும் செல்லமாகக் கடிந்துகொள்வாள் பாட்டி.”
இந்தப் பாட்டிக்குத் தனக்கு சமையல் செய்துகொள்வதே பெரும்பாடு. அதனாலேயே இரண்டு வேளை சமைப்பதை நிறுத்தி, பலகாரம் விடுத்து, ரசமோ, வெறுங்குழம்போ செய்து சாப்பிட்டுக் காலைத்தை ஓட்டுகிறாள். ஆனால் அந்தப் பாட்டி இவர்களுக்கெல்லாம் சோறு போடுகிறாள். முடியாத நாளன்றும் இல்லை என்று அனுப்புவதில்லை, ‘ஒரு நாழி கழிச்சு வந்து சேரு’ என்றுதான் சொல்கிறாள்.
‘வேண்டாம் பூசணி’ பாட்டி காக்கையைத் திட்டுகையில்தான் இக்கட்டுரை பறவைகளில் ஆரம்பித்தது நினைவுக்கு வருகிறது. மோகமுள்ளின் பாலூர் ராமுவின் மூக்கடைத்த குரல் பாபுவுக்கு காக்கைகளை நினைவூட்டுகிறது. “ராமுவுக்கு முக்கால் கட்டைக்குமேல் சாரீரம் எழும்பாது. சற்று அசைப்பில் கேட்டால் காக்கைகள் ஒன்றின் மூக்கில் இன்னொன்று மூக்கைவிட்டுக் குழறும்போது கேட்கும் தொனி மாதிரி இருக்கும்.” – இதைப் படித்துவிட்டு யோசித்துப் பார்க்கிறேன் – காக்கைகளை நான் அநேகமாக தினமும் பார்க்கிறேன். ‘ஒன்றின் மூக்கில் இன்னொன்று மூக்கைவிட்டுக் குழறுவதை’ – இந்த வரியைப் படித்தபின்புதான் கவனிக்கிறேன்.
எங்கோ ஓடும் கங்காருவோ, கத்தும் குக்கா புர்ராவோ எத்தனை அதிசயமோ, அத்தனை அதிசயம்தான் தினம் பார்க்கும் காக்கையும். பார்க்கப் பார்க்க எத்தனையோ புதிய விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. ஜானகிராமனின் இயற்கை பற்றிய வர்ணனைகளும் அப்படித்தான். அவர் தினம் பார்க்கும் மரங்கள், செடிகள், பறவைகள், கிராமத்து அழகு – அத்தனையும். நமக்கு சாதாரணமாகத் தோன்றும் விஷயங்கள். ஆனால் அவை ஜானகிராமன் கண்களில் வியப்பும், ஆனந்தமுமாகக் கொட்டிக்கொண்டிருக்கின்றன.
“சாலையில் ஒரு திருப்பம் இருக்கிறது. அதில் திரும்பினவுடனேயே ஊர்த் தெரியத் தொடங்கிவிடும். பன்னீர் மரங்களுக்கும், தென்னைகளுக்கும் பொன்பூப்பூத்த பூவரசுகளுக்குமிடையே பெருமாள் கோவிலின் வெள்ளைக் கோபுரம் வெண் தாமரை மொட்டு போல தெரியும். […] பஸ் நின்றது. இறங்கினேன். சாலையில் உள்ளங்கால் பாவ நின்றேன். ஒரு சிலிர்க்காத சிலிர்ப்பு. சுற்றிலும் பார்த்தேன். தூங்குமூஞ்சி மரங்களில் சிள்வண்டுகள் பெரிய சுருதியில் பாடின. வாய்க்காலில் நீர்ச்சேம்பு சாமரம்போட, காவிநீர் மந்தமாக நகர்ந்தது. வாய்க்கால் ஓரத்து மரத்தடியில் இரண்டு நாகணவாய்கள் ஆடி ஆடி நடந்துகொண்டிருந்தன.” [நடேசண்ணா]
“காவிரி அரை மைல் அகலத்துக்குப் பரந்து நகர்கிறது. முக்கால் ஆற்றில் வெள்ளம். நான் இந்த ஓரத்தில், மணலாக இருந்த பகுதியில் நிற்கிறேன். இக்கரையிலும், அக்கரையிலும் வாழைத்தோப்புகள். அப்பால் வானையளக்கும் சவுக்கைக் காடு. குடிசைக்குப் பதில் ஒரு சின்னக் கோயில் எனக்குப் பின்னால் நிற்கிறது. கண்ணுக்கு எட்டிய வரையில் ஜன நடமாட்டமே இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே மெளனம். நீர் தனக்குத்தானே மோதி ஓடுகிற சலசலப்பைத் தவிர, ஓர் ஓசை இல்லை. அக்கரை அரை மைல் தூரம். அங்கே தோப்பில் பாடும் பறவை ஒலி கூடக் காதில் விழாமல் அந்த மோனத்தில் அடங்கிவிடுகிறது.” [வீடும், வெளியும்]
– இப்படி ஜானகிராமனின் படைப்புகளில் இயற்கை வர்ணனைகளைக் குறித்து மேற்கோள் காட்டிக்கொண்டே போகலாம். ஆனால் அது ஜானகிராமன் எழுதிய புத்தகத்தையே முழுமையாகத் திருப்பி எழுதியது போலாகிவிடும். கரிச்சான் பறவை ஒரே மெட்டைத்தான் எப்போதும் திரும்பித் திரும்பிப் பாடிக்கொண்டிருந்தாலும், ஒவ்வொரு காலையிலும், அது ஒரு புதிய குரல்தான், புதிய வியப்புதான்.