இசையுலகை துக்கம் நிறைந்த மௌனத்தில் ஆழ்த்திவிட்டுத் தம்முடைய 56-வது வயதில் அகாலமாக மறைந்து அமரரான வித்வான் மதுரை மணி ஐயர் பண்டிதனையும், பாமரனையும் மகிழ்விக்கும் இணையற்ற பாணிகளை வகுத்துக் கொண்டவர். ‘கானகலாதரர்’ என்று தஞ்சை ரஸிகர்களாலும், ‘சங்கீத கலாநிதி’ என்று சங்கீத வித்வத் சபையாலும், ‘இசைப் பேரறிஞர்’ என்று தமிழிசைச் சங்கத்தாலும் பட்டங்கள் அளிக்கப்பட்ட மதுரை மணி ஐயருக்கு இன்னொரு பட்டமும் உண்டு. திருச்சியில் அவரைச் சுற்றி இயங்கிவந்த இலக்கிய ரஸிகர்கள் கூட்டமொன்று அவர் தேசீய விருதுபெற்ற 1960ம் ஆண்டில் அவருக்கே உரித்தான பட்டமொன்றை அளித்துப் பெருமையடைந்தது. ‘மணிமண்டபம்’ கோஷ்டியென்று பிரபலமான இந்த நண்பர் குழாத்தின் முக்கியஸ்தரான வி.ஸ்ரீனிவாசனின் முயற்சியால் 15 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற ஸ்ரீராம நவமி விழாவில் ஆண்டு தவறாது மதுரை மணி ஐயர் இசை விருந்து அளித்து வந்தார்.
1960 ஆண்டு விழாவைப் பூர்த்தி செய்யும் முறையில் நடந்த வைபவத்தில் மணி ஐயருக்கு ‘நாதலோல’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இசையுலகில் ஒரு தனிச் சிறப்பு கொண்ட கட்டம். எம்பார் ஸ்ரீ விஜயராகவாச்சாரி மணிக்கொடி ஸ்ரீனிவாசன், ச.து.சு.யோகி, சிட்டி, ஜே. சடகோபன், தி.ஜானகிராமன் போன்ற நண்பர்கள் சேர்ந்து காமகோடி பீடாதிபதி ஆச்சார்ய ஸ்வாமிகளின் ஆசியுடன் நடந்த சிறந்த உத்ஸவத்தையொட்டி ஒரு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. அந்த மலரில் தி. ஜானகிராமன் எழுதியிருந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே வெளியிடுகிறோம்.
– கணையாழி ஜுன் – ஜுலை 1968
மதுரை மணி ஐயர் 1912 – 1968
பதினைந்து ஆண்டுகட்குமுன் திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இலக்கிய மேதை கு.ப.ரா.வின் குடும்ப நிதிக்காக மணி அய்யர் செய்த கச்சேரி மறக்க முடியாத வகையில் அவர் செய்திருக்கும் எத்தனையோ கச்சேரிகளில் ஒன்று. கச்சேரி முடிவில் பேசிய தேசத் தொண்டர் டாக்டர் சாமிநாத சாஸ்திரியார், “மதுரை மணி அய்யர் என்பதைவிட மதுரமணி அய்யர் என்பதே பொருந்தும்” என்று கூறினார். பதினைந்து ஆண்டுகட்குப் பிறகு மதுரமாக முதிர்ந்துள்ளது அந்த மதுர சங்கீதம்.
கர்நாடக சங்கீத பரம்பரையில் இன்று மக்களை அதிகமாகக் கவர்ந்தவர் யாராவது உண்டு என்றால் அது மதுரமணி அய்யர்தான். அவருடைய கச்சேரி நடக்கும் இடத்தில் உள்ளேயும் வெளியேயும் நிறைந்து வழியும் மக்கள் திரள் ஒன்றே இதற்குச் சான்றாகும். ‘மக்களுக்குப் பிடித்தது மெத்தப் படித்தோரைக் கவராது’ என்ற பெரிய மனித முசுமுசுப்பையும் இங்கே காண முடியாது. பெரிய கலைமேதை ஒருவன் படித்தவர்களையும் நுணுக்கம் தெரிந்தவர்களையும் மட்டும் கவர்வதில்லை. செவியுள்ள, சுவையுள்ள எல்லா உள்ளங்களையும் கவர்ந்து விடுகிறான். மதுர மணி அய்யரின் சங்கீதமானது சங்கீதத்தில் முதிர்ந்த ஞானமுள்ளவர்களிலிருந்து சாதாரண ரசிகன் வரை – அத்தனை பேர் நெஞ்சையும் அள்ளக்க்கூடிய தனிப்பெருமை படைத்தது. அதாவது, உண்மையான மேதை. கலை விஷயங்களில் உண்மை மேதையானது சாஸ்திர அறிவுக்கும் மேற்பட்ட ஒரு நிலையில் நின்று உலகம் அனைத்தையும் கவர்ந்து விடுகிறது.
கச்சேரியில் உட்கார்ந்து ஆரம்பித்ததுமே களை கட்டி, சபையின் கவனம் முழுவதையும் அந்தக்கணமே ஒருமிக்கவைத்து, சலசலப்பில்லாத, வேறு எங்கும் திரும்பாத, தனியானந்த மௌன நிலையைச் சாதிக்கிற ஒரு அனுபவத்தைக்காண வேண்டுமானால், மதுர மணி அய்யரின் கச்சேரியில்தான் காண முடியும். சூடேற வேண்டும், பிடிக்க அரை மணி ஒரு மணி ஆக வேண்டும், அதுவரையில் பொறுமை காட்ட வேண்டும் என்ற தர்மசங்கடங்கள் எல்லாம் அவர் கச்சேரியில் ஏற்படுகிறதேயில்லை.
இவ்வளவு சக்தி அவர் சங்கீதத்தில் ஓங்கி நிற்பதன் ரகசியம் என்ன? அவருடைய சுருதி உணர்வும், ஸுஸ்வர கானமும், அழுத்தமாக உள்ளே இழைந்து அமைந்து விட்ட லய உணர்வும்தான்.
இவ்வளவு சுருதி உணர்வு குரலில் எந்தக் கணமும் கைவிடாமல் கவ்விவரும் நற்பேறு கர்நாடக சங்கீதத்தில் இன்றுள்ள அநேக வித்வான்களுக்குக் கிட்டவில்லை. உரிய காலத்தில் போதிய சாதகமின்மை காரணமாக இருக்கலாம், பிறவிக் குணமாகவும் இருக்கலாம், சாதகமின்மை என்று ஒரேயடியாகவும் சொல்லிவிட முடியாது. இன்று முன்னணியில் நிற்கும் வித்வான்கள் சாதகத்தில் பின்வாங்கியதில்லை. ஆனால், வருங்கால வித்வான்களைப்பற்றி ஒருவிதக் கவலை பலருக்கு இருந்து வருகிறது. சாதகத்தை இரண்டாம் பட்சமாக வைத்து இன்று செய்யப்படும் சங்கீதப் பயிற்சியைப் பார்க்கும்போது சுருதி சுத்தமான கானத்திற்குக் காலம் உண்டோ என்றெல்லாம் கலக்குமுறத் தோன்றுகிறது.
மணி அய்யர் பிறவியிலேயே இனிமையான சாரீரம் படைத்தவர். குரல் உடையும் பருவத்தில் சிரமசாதகம் செய்து அதைக் காப்பாற்றித் தனி மெருகும் ஏற்றிவிட்டார்.
மணி அய்யரின் சங்கீதத்தில் இன்னொரு தனிப் பெருமை அதன் விச்ராந்தி. சுருதி, லயம் இரண்டிலும் உள்ள நிச்சயமான பிரக்ஞையினால், அவருடைய புகழ் பெற்ற, பிரமிக்க வைக்கிற ஸ்வரகல்பனைகளில்கூட ஒரு அமைதி விரவி நிற்கிறது. விரைவான கதிகளிலோ, சிக்கலான ஸ்வரப் பின்னல்களிலோ கூட இந்த அமைதி நிலை ஊடாடி நிற்பதால் கேட்போர் உள்ளத்திலும் ஒரு பிரமிப்புக் கலந்த அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்றி விடுகிறது அது. யுத்தகள ரகளை, அதட்டல், இரைச்சல், விவகார கெடுபிடி – இவைகூட சங்கீதத்தின் பகுதிகள் என்று சிலர் கூறலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக சங்கீதத்தின் உயிர் ஆனந்த அனுபவம். தன்னை மறந்த ஒரு நிலைக்கு ஏற்றுவதுதான் அதன் பயன். நீண்டகாலம் அதன் கார்வைகள் கேட்போரின் உள்ளத்தே ஒலிக்க வேண்டும். இந்த ஆனந்த அனுபவத்தை மணி அய்யரிடம் இந்நாடு கணக்கற்ற முறை அடைந்திருக்கிறது.
எந்த ராகத்தையும் தனக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்து அனுபவித்து, அதனுடைய ஜீவகளைகளையெல்லாம் சுருக்கமாகத் திரட்டி அவர் அளிப்பதால் ரசிகர்களுக்குக் குறையில்லாத ஒரு திருப்தி கிடைத்து விடுகிறது.
எல்லா மேதைகளையும் போலவே மதுர மணி அய்யரின் நடை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய ஒரு தனி நடை. இதை ஸ்வரம் பாடும்போது மட்டுமின்றி, ராக சஞ்சாரத்திலும் கீர்த்தனைகளிலும் காண முடியும். வெட்டி வெட்டி, கத்திரித்துக் கத்திரித்துப் பாடுகிறார் என்று சிலர் சொல்லலாம். அது ஒரு கலைஞனின் நடை. தனக்காக வகுத்துக் கொண்ட நடை. அது கலைஞனின் உரிமை. ஒரு குறையையே நிறைவாகவும் அழகாகவும் மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் ஒரு மேதைக்கு உண்டு. அடுக்குக் காசித் தும்பை மலரில், புள்ளிகள் கொண்ட வகை உண்டு. அந்தப் புள்ளிகள் குறைகளல்ல. மலரின் அழகைப் பெருக்குபவை. மணி அய்யரின் கத்திரிப்பு நடைகூட ஒரு தனி அழகாகவே காலப்போக்கில் அமைந்து விட்டது.
மணி அய்யரின் தோடி, காம்போதி, சங்கராபரணம், மோகனம், ரஞ்சனி, ஆபோகி முதலியவற்றை யாரும் மறக்க முடியாது. அதேபோல காபிநாராயணி, சித்தரஞ்சனி, கன்னட கௌள முதலிய அபூர்வ ரகங்களில் உள்ள மிகச் சின்ன கீர்த்தனைகளைப் பெரும் காவியங்களாக அவர் பாடிக்காட்டும் தனித்திறமையும் பலர் உணர்ந்திருக்கிறார்கள். பாரதி பாட்டுகளை அவர் பாடும்போது அந்த மந்திரச் சொற்களுக்கு ஒரு புது வேகத்தையும் அர்த்தத்தையும் ஊட்டியிருக்கிறார். சங்கீதப் பெரிய மனிதர்கள் இதெல்லாம் துக்கடா நேரத்துக்காக ஆனவை என்று கீழ்நோக்குடன் புன்னகைக்கலாம். ஸாஹித்யம் பிரதானமில்லை என்ற விதண்டாவாத நிலையினால் பிறந்த துர்ப்பாக்கியம் இது. இதற்காக நாம் மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. விவேகம் சொல்லி வராது.
மதுரமணி அய்யரின் சங்கீதம் உன்னதமானது என்று இன்னொரு வகையிலும் சொல்ல வேண்டும். அது தெய்வத்தின் முன் நிற்கும் ஒரு பரிசுத்த நிலையை, ஒரு ஆனந்த மோன நிலையைப் பல சமயங்களில் உண்டாக்கியிருக்கிறது. இத்தகைய கலைஞர் பல்லாண்டு வாழவேண்டும். இதே விச்சராந்தி, சுருதிலயப் பிரக்ஞையைச் செயலில் காட்டும் திடகாத்திரத்தை இறைவன் அவருக்கு அருள வேண்டும்.
One Reply to “மதுர மணி”
Comments are closed.