ஜானகிராமன்… மனுஷன்! எழுத்துக் கலைஞன்! ரெண்டும் ரெண்டும்தான்!

tanjoreprakash-1

[தஞ்சை பிரகாஷ் ‘யாத்ரா’ இதழில் எழுதிய கட்டுரை]

சில மாதங்களுக்கு முன் ஜானகிராமன் தஞ்சாவூர் வந்திருந்தார். ஒரு புத்தகம் எழுத வேண்டும்.

தஞ்சாவூர் பற்றி பழைய மதிப்பீடுகளுடன், புதிய எதிர்பார்ப்புகளுடன் ஒரு புத்தகம் எழுத மத்திய அரசு நிறுவனம் ஜானகிராமனை அழைத்திருந்தது. அதற்காகத் தஞ்சை வந்தார். தஞ்சாவூர் வந்தால் அவசியம் சந்திப்பது வழக்கம். இது கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஜானகிராமன் இப்போ இல்லை!

ந.பிச்சமூர்த்தி இறந்த சமயம். பிச்சமூர்த்தி பற்றி ஒரு கட்டுரை எழுதினார் ஒரு எழுத்தாளர். பிச்சமூர்த்தி தாடி ரொம்ப அபாரம் என்று! அதற்கு இன்னொரு எழுத்தாளர் “பிச்சமூர்த்தியோட தாடியெல்லாம் தூக்கி தோற்கடிக்கிற தாடிகள் எங்க ஊரிலேயே நாலைஞ்சு இருக்கு,” என்றார். பாவம் பிச்சமூர்த்தி.

ஜானகிராமனைப் பற்றி நினைக்கும்போது அவரது தோற்றம் கண்முன் வந்து நிற்கிறது. அவரே சொல்லிக்கொண்டதுபோல ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த தோற்றம் கொண்ட முகமல்ல அவருடைய முகம். ஜானகிராமனுக்கு எப்போதும் ஒரு கவலை இருந்தது எனக்குத் தெரியும். தன்னுடைய முகம் உருவம் எல்லாம் அத்தனை அழகாயில்லையேங்கிற கவலைதான் அது. எப்பவாவது தன்னுடைய போட்டாவை யாருக்காவது கொடுக்கும் வேளைகளில் ரொம்ப வெட்கப்படுவார். பரிதவிப்பார். தன்னோட அமைப்பு ஒரு சாதா. தன்னோட கதைகள் சாதாரணம்தான் என்றும் சொல்லுவார். ரொம்ப நயம் இதுதான். ஒரு ஜப்பானிய தெருவோரக் கலைஞன் ஜானகிராமனின் உருவத்தை நகத்தால் கீறி வரைந்து கொடுத்தான். அட! என் மூஞ்சியில் இருக்க அத்தனையும் மூளியும் அப்படியே இதுல வந்திருக்கே என்று வியந்தார் ஜானகிராமன்.

ஜானகிராமனோட எழுத்து எல்லாரையும் ரொம்ப மயக்கியிருக்கு. இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கும் அந்தப் பக்கம் தரை மஹாஜனங்கள்கூட அவரது எழுத்தில் கொஞ்சம் ஈடுபட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். சமஸ்கிருதப்படிப்பும், சமஸ்கிருத ஈடுபாடும் அவரைத் தமிழில் ஒரு தனி படைப்பாளியாக்கினது போலவே சாதாரண ஆசைகளும், அளவுகளும் அவரை எழுத்தில் தனித்துவத்தை அமைத்துக்கொள்ள உதவின என்பது ரொம்பச் சிலருக்கே தெரியும். அவரைத் தஞ்சாவூருக்கு அப்பால் வராத கலைஞராகவே விமர்சகர்கள் சொல்லிப் பழகினார்கள். அவர் வரைந்துகாட்டிய பெண்கள் மேல் மட்டுமே அதிக ருசி கொண்ட சில எழுத்தாளர்கள் “ஏன் ஸார், அப்படி பெண்கள் தஞ்சாவூரில் இருக்காளா என்ன? அப்படிக் கூட இருப்பாளா என்ன?” என்று என்னைக் கேட்ட எழுத்தாளர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஒரு கிராமியச் சுவை கண்ட சிலர் அவரை மண்வாசனைக் கதைகள் எழுதியதாக இனம் கண்டார்கள். சினிமா நடிகர் ரஜினிகாந்த் ஒரு ‘பொம்மை’ பேட்டியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜானகிராமன்தான் என்றார்! வெகுஜன விற்பனைப் பத்திரிகைகளில் ஜானகிராமன் எழுதிக்கொண்டே இருந்தார். சிறு இலக்கிய பத்திரிகைகளுக்கு ஒழுங்காகச் சந்தா கட்டியதுடன் அவற்றில் எழுதவும் செய்தார். புதியவர்களிடம் சிரத்தையுடன் பழகினார். பெரிய நிறுவனங்கள் அவரிடம் நியாயமான மரியாதை காட்டிப் பரிசளித்தன. நாடகங்கள் எழுதி சினிமாவிலும் காலடி வைத்தார். சாதாரண பத்திரிகைகளில் எழுதி சாஹித்ய அகாதமி பரிசும் வாங்கினார். “சாவி”யிலும் எழுதி “சதங்கை”யிலும் எழுதினார். எல்லாத் தரத்திலும் நண்பர்கள், எல்லாத் தரத்திலும் புகழும், ஏசலும் இருந்தது வியப்பல்ல.

தஞ்சாவூர் வரும்போதெல்லாம் சொல்லியனுப்புவார். நான் போய்ச் சந்திப்பேன். “இதெப்படி தஞ்சாவூர் மட்டும் அப்படியே இருக்கு?” என்று வியப்பார். கடைசியாய் மரணத்துக்குச் சில மாதங்களுக்கு முன்பும் தஞ்சாவூர் வந்திருந்த போதும், “என்ன? தஞ்சாவூர் இப்படி மாறிப்போச்சு?” என்று வியந்தார். வெண்ணாற்றங்கரை போவோம். “ஹோ”வென்று பாயும் ஜலப்ரவாகத்தைப் பார்த்தபடி நிற்பார். திருவையாறு போவோம். தியாகையர் சமாதியின் மணல்வெளியில் நிற்பார். மேலவீதி காமாட்சியம்மன் கோவில் சந்நதியில் நிற்போம். இடிந்த மராட்டிய அரண்மனை இடிசல் சுவரில் சரிந்து வளர்ந்திருக்கும் அரசு பூத்திருக்கிறதைக் காட்டுவார். பெரிய கோவில் நிலாமுற்றத்தில் காலத்தை வென்றக் காற்றை அண்ணாந்து வியப்பார். சந்தனாதித்தைலம் மணம் வீசும் சரஸ்வதி மஹால் பழஞ்சுவடிகளிடையே நின்று தெலுங்கு ஸ்லோகத்தை என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். தஞ்சாவூர் பாணி சீரங்கத்துப் படம் எழுதும் ராஜீவிடம் போய் அவன் ரேக்கு ஒட்டுவதைப் பார்த்து நிற்பார். கொண்டி ராஜபாளையம், சுவாமிமலை, மன்னார்குடி எல்லாம் போவோம். எங்கும் எதிலும் வியப்புத்தான். குழந்தை சந்தோஷந்தான். ஆச்சர்யம்தான். ஜானகிராமனுக்கு எழுத்து மூணாம் பக்ஷந்தான். வாழ்க்கைதான் அவரது ருசி. மழை பெய்து கொண்டிருக்கும் வராந்தாவில் நின்று பார்த்துக்கொண்டிருப்பார். வியப்பாய் மகிழ்ந்து கொண்டிருப்பது அருகிலிருந்தால் புரியும். இரவு இரண்டு மணி மூன்று மணி என்று பேசிக்கொண்டிருப்போம். தூக்கம் அண்டாது. மூன்று மணிக்குக் குஞ்சாலாடு சாப்பிட்டுப் பால் குடிப்போம். ஜீரணிக்கும்.

கடைசியாய்த் தஞ்சை வந்திருந்தபோதும் இதே வியப்பு புதியதாகவே அவரிடமிருந்தது. தஞ்சாவூர் பாணி படம் எழுதுகிற ராஜீவைத் தேடிப் போனோம். அவன் இல்லை. அவர் கையோடு ஒரு பூர்வீக படம் (ஜானகிராமனின் பாட்டனார் காலத்திய படம் அது) கொண்டு வந்திருந்தார். “ராஜுவைப் பார்த்து நாளாச்சே இப்பச் சமீபத்தில் பார்க்கவேயில்லை” என்றேன். “தேடிப் பார்ப்போமே” என்றார் அவரும். போனோம். ராஜு இல்லை. அதற்குப் பதில் வேறு ஆள் தேடியபோது ராஜு உலகத்திலேயே இல்லை என்ற செய்தி கிடைத்தது. அப்போதும் வியப்புதான். “அ-அப்படியா?” என்று நின்று போனார். ஸ்வாமிநாத ஆத்ரேயன் கடைக்குப் போவோம். பேச்சும் வியப்பும் மாறிமாறி வரும். ஆத்ரேயனும் ஜானகிராமனும் சிரிக்க ஆரம்பித்தால் பூத்துக் கொட்டுவது போல் இருக்கும். ஆத்ரேயன் நிஜமாகவே மல்லிகைப்பூ மாதிரியிருந்தார். ஜானகிராமனும் வாய்நிறைய வெற்றிலையுமாய் அவருடன் ஊடாடிச் சிரித்து வியப்பது அரிய காட்சிதான்! இரவு பதினொரு மணிக்குத் தீபாவளிக் கூட்டத்திடையே துணிக்குவியல்களிடையே ஜவுளிக்கடையில் ஆத்ரேயனிடம் விடைபெற்று அறைக்குத் திரும்பினால் இரவு முழுவதும் பேசுவோம். கூஜாவில் தண்ணீர் தீர்ந்து போகும். தண்ணீர் கொண்டுவர ஆளிராது. ஜானகிராமன் கூஜாவுடன் போவார். பனியிருட்டில் இரவில் அவர் பைப்பில் ஜலம் எடுத்துவரும்போதும் ரோட்டில் ஓரத்தில் சுருண்டுகிடக்கும் பிச்சைக்காரனைக் காட்டி வியப்பார். இந்தப் பனியில் பாவம் திண்ணையில் கிடக்கும் பிச்சைக்காரனைக் காட்டி வியப்பார். சுருண்டு கிடக்கும் மனிதர்களை பஸ்டாண்டு பனி மூட்டத்தில் கவிந்திருக்கும் காட்சியைக் காட்டுவார். கூஜாவை என்னிடம் தரமாட்டார்; கேட்டாலும்… கேட்க மாட்டேன்.

புதிய எழுத்தைச் சற்றுக் கவலையுடன்தான் பார்த்தார். ஜானகிராமனின் எழுத்து மாதிரியே இருப்பவற்றிலும், திருகல்களிலும், உத்தி என்ற பிடிகளிலும், நூதனம் என்பதற்காகவே அமைக்கிற பத்திகளிலும் அவர் ஆசை வைக்கவேயில்லை. புதிய ஐரோப்பிய எழுத்துகளிலும் அத்தனை பிரியத்துடன் மிக நல்ல எழுத்துக்களை ரசித்தார் என்று சொல்வதற்கில்லை. தமிழில் புதிய போக்குகளில் கவனமான தொடர்பு வைத்திருந்தார். தொடர்ந்து படித்தார். அவரது தோழர்களான பழைய பரம்பரை எழுத்துக்கலைஞர்கள் சிலரைப் போலத் தமிழில் படிப்பதை அறவே நிறுத்திவிடவில்லை. தொடர்ந்து ஈடுபாடும் படிப்பும் அவருக்கு உதவின. விமர்சனத்தில் ஒரே நேரத்தில் அவருக்கு நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் அடர்ந்து இருந்தன. இது பலருக்கு விசித்திரமாய் இருந்தது. அவரை கேலி செய்து “விமர்சனகிலி” என்று எழுதினார்கள். அவர் அப்போதும் ஆச்சர்யமாய்ச் சிரித்தார். தமிழில் மிகச் சில விமர்சகர்களே அவரை உண்மையில் உணர்ந்திருந்தார்கள். புதிய இளம் எழுத்துக் கலைஞர்களை வரவேற்றார். உற்சாகப்படுத்தினார். அவரது கௌரவமான பாராட்டுக்களை இளம் எழுத்தாளர்கள் விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். ஜானகிராமன் பரம்பரை என்று கூட எழுதிக் கொண்டார்கள். இதை என்னிடம் படித்துக் காட்டி ஜானகிராமனே கேலி செய்ததும் உண்டு! வெகுகாலம் அவர் தன் எழுத்தைப் பற்றிப் பேசியவரே இல்லை. சமீப காலங்களில் ரொம்ப ஏமாந்துபோய் அவரும் ஏதாவது தன் எழுத்தைப் பற்றி இளைஞர்களிடம் பண்டிதர்களிடம் விமர்சகர்களிடம் உணர்ச்சிவசமாய் வியப்பாய் ஏதாவது சொல்லிவிட்டதும் உண்டு. அதனையெல்லாம் தவறாது அந்த மஹானுபாவர்கள் தம் விருப்பப்படி உபயோகித்துக் கொண்டு அசிங்கப்படுத்தினார்கள்.

ஜானகிராமனின் வியப்புப் பல்லிளித்து விடுகிற பாமரவியப்பல்ல. உள்ளே மடங்குகிற வாசனை போல உணர்ந்து மடல் விரியும் பூவின் வியப்பு. விமர்சனங்களுக்குச் சொடுங்கி விடுகிற நெட்டிப் பூவல்ல அவர். விமர்சனகிலி அவருக்கு என்றும் இருந்ததில்லை. “புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கும்” குணம் அவருடையது. சிருஷ்டிரகஸ்யம் அது. பிடிக்காததைக்கூடப் பிடிக்கலை என்று உரத்துச் சொல்ல வெட்கப்படும் குணம். சகிப்புத்தன்மை அவருடையது. மனிதர்களிடம் இந்தக் குணம் கேலிக்குரியதுதானே! அவரை ஹிம்சிக்காமல் விட்ட நேரங்கள் குறைவே.

மனிதர்களில் பலர் எழுத்துக் கலைஞர்களும்தான்! ஒரு எழுத்தாளனையும் அவர் “உங்கள் கதை பிரயோஜனம் இல்லை” என்று விமர்சகனாய் நின்று விதி சொன்னதில்லை – எனக்குத் தெரிந்தவரை. இது தனக்குப் பிடிக்காது என்பதை அவர் சொல்ல முடியாமல், பெரிய கலைஞர்களிடம் கூட அவஸ்த்தைப்பட்டதையும் – ஒருவிதமான அமைதியோடு அந்தக் கஷ்டத்தை அநுபவித்து, தாங்கிக்கொண்டு, நிற்பதையும் பல நேரங்களில் நான் கண்டதுண்டு. வாழ்க்கையை ருசித்துப் பரிமாறிய ஜானகிராமன் எல்லா தரத்து மக்களுடன் உறவுகொண்டு பழகியவர். பாவம், நிறைய ஏமாந்தவர் கூட. அவர் கதைகளில் பெரும்பாலானவை இதற்குச் சாட்சி என்பது. யாரிடமுமே சொல்லாத ரகசியம், அவருடைய ஒரு கதாபாத்திரமும் கற்பனை அல்ல – இது அவர் நண்பர்களான எம்.வி.வெங்கட்ராம், “கரிச்சான் குஞ்சு” போன்றோருக்கும் கூட வியப்பளித்த விஷயமாய் இருந்து வந்தன. சில வேளைகளில் “இதெக்கூட எழுதிப்பட்டியா?” என்று ஜானகிராமனுடனும் ஒருவருக்கொருவர் வியந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன்.

பத்திரிகையாசிரியர்கள், பதிப்பாளர்கள் பலரும் நிறைய அவரை ஏமாற்றினார்கள். பதிப்பகங்கள் அவரை மிகவும் அழகாய் ஒதுக்கின. எல்லாருக்கும் நல்லவராக அவர் இருக்க முனைந்ததன் பலன் அது. அவரது “மோகமுள்” நாவல் அச்சாகிப் பலவருடம் வெளியே வராமல் அரசு அலுவலகக் கட்டிடம் ஒன்றில் அடைந்துகிடந்தது. ஒரு பதிப்பகத்தில் அவர் எழுத்துகள் ஒரு சேர அவர் வெகுபாடுபட்டது எனக்குத் தெரியும். பெரிய ஆளாகிப்போன பெரிய (எழுத்து) சம்பாத்யக்காரர்கள் பலரும்கூட அவரைப்பார்த்துப் பொறாமையால் வாடியதைப் பார்த்திருக்கிறேன்.

தன் எழுத்தைப் பற்றி பேசுவதைவிடத் தஞ்சாவூரைப் பற்றிப் பேசினால் அவருக்கு ரொம்பச் சந்தோஷம் இருந்தது. புதுசாய் யாராவது சந்தித்தால் அவரிடம் தான் எழுதுகிறவன் என்று சொல்வதைப் பெரும்பாலும் தவிர்த்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கடைசியாய்த் தஞ்சாவூர் வந்திருந்தபோதும் ஒரு இளம் எழுத்தாளர் அவரைப் பார்க்க வந்திருந்தார். நானும் கூட இருந்தேன். இந்த எழுத்தாளர் பெயர் ஸி.எம்.முத்து.

thija-logo4முத்து தன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஜானகிராமன் கேட்டுக் கொண்டிருந்தார். தஞ்சாவூர் கிராமங்களில் ஒன்றிலிருந்து வந்திருந்த முத்துவின் பேச்சு அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. முத்துவுக்கு ஸ்வாரச்யம். ஜானகிராமன் இடைஞ்சலாய் ஒன்றும் கேட்கவில்லை. உபதேசிக்கவில்லை. “நீ சொன்னது தப்பு” என்று குறுக்கில் மேதைமை காட்டவில்லை. முத்துவின் கிராம்யம், அவரது நுண்மையான ஈடுபாடு, ஜானகிராமனை ஈடுபடுத்தியது, நானும் அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் மணிபோனது தெரியவில்லை. முத்து கடைசியில் புறப்பட்டபோதும் சொன்னார். “எழுதுங்க! விடாமல் எழுதுங்க,” ஜானகிராமனுக்கு அன்று நிறைய சந்தோஷம். நான் கேட்டேன். “முத்து எப்படி?” “நானெல்லாம் எதுக்கு டெல்லி போனேன்று தோணுது. இந்தப் பையன் நிஜமா இந்தத் தஞ்சாவூர்க்காரன்! இந்தப் பையன் உங்களுக்கு எப்படிப் பழக்கமானான்?” – வியந்தார். கேட்கும் கலையைக் கலையாய் வளர்த்திருந்தவர் நண்பர் ஜானகிராமன்.

“நாலைந்து நாளாய் ‘கீழவிடயல்’ போகணும் என்று பார்க்கிறேன். என்னமோ பண்ணுது போகவிடாமல்!” என்றார் திடீரென்று. ஜானகிராமன் தஞ்சை வந்து நாலைந்து நாளாகியிருந்தது. கிருஷ்ணா லாட்ஜ் மாடியில் நின்று கொண்டு, “ஜோ”வென்ற ஜனக்கூட்டத்தை, பஸ்டாண்டுக் கடைகளை, அவருக்கே புதிதாக முகம் மாறிப்போன தஞ்சாவூரை, ஓயாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளாய், நாலாவது நாளும், அதே நிலை. ஜானகிராமன் வந்தால் காலை மாலை சாப்பாடு நேரம் தவிர எல்லா நேரமும் அவருடனேயே திரிவேன். ரொம்ப நாளைய பழக்கம். இம்முறையும் அதுபோலவே விடிவெள்ளி முளைக்கும்போது கூட லாட்ஜ் மாடி வராண்டாவில் பேசிக் கொண்டிருந்தோம். எதிரே பஸ்டாண்டு உறங்கிக் கிடந்தது. காலை இருளில் பனிக்காற்று இலேசாய் நடுங்கியது. எதிரே பஸ்டாண்டு உறங்கிக் கிடந்தது. எதிரே ஸ்டூலில் அமர்ந்தபடி, புகையிலையைச் சுருட்டி வாயில் அதக்கியபடி, விரலால் உதடுகளைத் துடைத்துக்கொண்டு சொன்னார். “ஊருக்குப் போக முடியல்லெ. போகணும்னும் தோணலை. போகணும்!” – நான் சொன்னேன் – ”காலையில் போயிட்றது!”

“ம்ஹீம் இனிமே போக முடியாது மெட்ராஸ்தான் இனிமே!”

“ஏன் இப்படி? மனதில் ஏதானும் கஷ்டம் இருக்கோ? சொல்லுங்களேன்!”

“குறை என்ன? மெட்ராஸ் வந்ததிலிருந்தே ஒண்ணும் சரியில்லை. தஞ்சாவூர் வரணும்னு இருந்தது – வந்தாச்சு. எல்லாரையும் பார்த்தாச்சு. மெட்ராஸ்ல ஒண்ணும் சரியில்லை. ஆரம்பமே சரியில்லை – எல்லாத்தையும் உட்டுட்டுக் கீழவிடயலுக்கே போயிலாமான்னுத் தோணுது. இன்னும் செத்த சம்பாதிச்சா என்னன்னும் துடிக்கிறது. ரொம்ப நம்பினவங்களும் கீழ தள்றாங்க – புதிசா வர்றவங்களும் அப்படித்தான்! மனசு எதுக்கும் உகந்ததா இருக்க மாட்டேங்கிது”

“ஏன்?”

“இங்கே இருந்தா அங்கே. அங்கே இருந்தா எங்கேயோ”

நான் சிரித்தேன். அவரும் வருத்தமாய்ச் சிரித்தார்.

ஜானகிராமன் இப்போ இல்லை!

அவர் ரொம்ப விரும்பிய காவிரிக்கரையும் வறண்டு கொண்டே வரும் நேரம் இது! தண்ணியில்லாத காவிரி பற்றியும் நிறையவே பேசியதுண்டு. அவர் நிறைய நம்பிய தமிழ் எழுத்து, பராங்குசம், எம்.வி.வெங்கட்ராம். கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன் இவர்களுடையவை. இதில் இப்போதும் எழுதிக் கொண்டிருப்பவர்கள் கரிச்சான் குஞ்சும் எம்.வி.வெங்கட்ராமும் மட்டும். ஆத்ரேயனும் அத்திப்பூப் பூப்பார். இளம் தலைமுறையில் நிறையப் பேரைப் பற்றி வஞ்சனையில்லாமல் வார பத்திரிக்கைகளில் பாராட்டியிருந்தாலும் அவரே அதை வெறுத்ததும் உண்டு. பண்டிதர்கள் பலருடனும், விமர்சகர் பலருடனும், முரணியும், சேர்ந்தும் கருத்துக்களைச் சொன்னவர்தாம் ஜானகிராமன். குறிப்பாகப் புதிதாக எழுதுகிற இலக்கிய சிறு பத்திரிக்கைகாரர்களுடனும், பெரிய வாரப் பத்திரிகைகாரர்களுடனும், அவர் கொண்டிருந்த உறவு, தாமரை இலை மீது தண்ணீர் போன்ற உவமைச் சுகம் கொண்டது.

தஞ்சை “சும்மா” இலக்கியக் கும்பல் ஜானகிராமனுக்கு ஒரு இலக்கியச் சந்திப்பை அவர் தஞ்சை வந்தபோது ஏற்படுத்தியது. பேனரில் பெரிதாய் “ஜானகிராமன் அவர்களே வருக! இலக்கிய சந்திப்பு மார்ஷ் ஹாலில் மாலை 6 மணிக்கு!” என்ற எழுத்துக்களைக் கண்டதும் “அட! பேனர் வேறே கட்டியிருக்கீங்களா?” என்று சிரித்தார். பஸ்டாண்டு எதிரில் மாடி ஹாலில் கூட்டத்தில் சம்பிரதாயமற்ற முறையில் வட்ட மேஜையைச் சுற்றிலும் “சும்மா” கும்பலினர் ஜானகிராமனுடன் பேச்சை நிகழ்த்தினர். கம்யூனிஸ்டுகள் வழக்கமான அவர்களது கேள்வியை ஜானகிராமன் மீது எய்தினர். “சமூகப் பொறுப்பு உங்களுடைய எழுத்துக்கு உண்டா? இல்லையா? (நீயும் ஏன் கம்யூனிஸ்ட் இல்லை?) நீ எழுதி என்ன பண்ணப்போறே?” ஜானகிராமன் அமைதியாய் மறுத்தார். “நான் சமூகப் பொறுப்பை ஏற்கிறேன். ஒரு மனுஷனா ஒரு எழுத்தாளன் ஒரு தொழிலாளி செய்கிறதைவிட ஒண்ணும் கிழிக்கலை. என் வேலை சமூகத்தைச் சரிபண்றதில்லை. பண்ணவும் முடியாது.” ரொம்ப எலிமெண்டரி விஷயங்களையும் பொறுமையாகத் தலையில் சுமந்து பதறாமல் “நான் உங்க ஆள் இல்லை,” என்று இவர் மெதுவாகச் சொன்னது அவர்களுக்குப் புரிந்தது மகிழ வேண்டிய விஷயம். சாஹித்ய அக்காடமி பரிசளிப்பு விழாவிலும் இதையேதான் இப்படிச் சொன்னார். “பல வர்ணங்களும் அமைப்புகளும் கொண்ட சின்னஞ்சிறு பூண்டு வகைகள் பூப்பதுண்டு. ஏன் பூக்கிறோம்? யாருக்காக? என்று அவைகளுக்குத் தெரியாது. ஒருகால் அவைகளைத் தெரிந்துகொள்ள அவை விரும்பவில்லை போலும்.”

விடியல் இருட்டில் ஜானகிராமனிடம் சொல்லிக்கொண்டு புறப்படுகிறேன் வீட்டுக்கு!

“ஆமா ரொம்ப நாழியாயிடுத்து போய்ட்டு வாங்கோ! லெட்டர் எழுதுங்கோ!” என்கிறார்.

“தஞ்சாவூர் பத்தி நீங்க எழுதற புத்தகம் எப்போ முடிப்பீர்கள்?”என்கிறேன். “நீங்க போட்டோவெல்லாம் அனுப்பித்தருவீர்களே அதுக்கு மிந்தி தமிழ்ப் புத்தகம் ஆய்டும். போட்டோவெல்லாம் ப்ளாக் ஆகிவரும்போது இங்கிலீஷ் புத்தகமும் எழுதி முடிச்சுடுவேன்.” என்கிறார் நீண்ட மூச்சுடன்.

ரோடு வரை வந்து வழியனுப்புகிறார் என்னை. தஞ்சாவூர் பற்றி புத்தகம் எழுத இதுவரை மூன்றுபேர் வந்தார்கள். ஏதோ காரணங்களால் அவர்கள் எழுதவில்லை. ஜானகிராமன் கடைசியாய் வந்தார். அவரும் எழுதவில்லை. எழுத அவரே இல்லை. ‘தஞ்சாவூர் பற்றிய அந்த புத்தகம் இனி எழுதப்படாமலே இருக்கும் – இனியார் எழுதினாலும்!’ என்று தோன்றுகிறது.

அந்தப் புத்தகத்துக்காக நான் எடுத்த படங்கள் என் முன்னே கிடக்கின்றன. பத்து வருடங்களுக்கு முன் இதே புத்தகம் எழுதுகிற நோக்கத்தோடு க.நா.சு. வந்திருந்தார். அவருக்கு முன்பும் சிலர் வந்திருந்தார்கள். தஞ்சாவூரைச் சுற்றினார்கள். ஸரஸ்வதி மஹால் லைப்ரரியில் வாசித்தார்கள். முன்னேறும் உலகத்தில் வேகத்தைப் பற்றிச் சற்றும் கவலைப்படாது, அழுக்கு குறையாது, அடிசல்கள் மாறாது, இன்னும் மராட்டிய கட்டிட கூட கோபுரப் பழைமையுடனும் ராஜராஜனின் காக்காய் உட்காரும் பெரிய கோவிலுடனும், இருண்ட சந்துச் சாக்கடைகளுடனும், பரந்த நெல் வயல்களுடனும், காய்ந்த காவிரியுடனும் இன்றும், இனியும் தஞ்சை ஜானகிராமனைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

இலக்கியமா ஜானகிராமனைப் பற்றிச் சொல்லிக்கொள்ள இங்கே ஒன்றுமில்லை. ஒரே நேரத்தில் நல்ல மனுஷனாகவும் இலக்கியாசிரியராகவும் வாழ முயற்சித்த ஒரு எழுத்தாளர் அவர். பெரிசா அவர் ஒண்ணும் சாதிக்கலை. அதுக்காக வந்ததாகவும் அவர் எப்பவும் நினைச்சதில்லை. வால்மீகி, வியாசன் போன்ற இமயங்களை எப்போதும் நினைத்து அடங்கிப்போன கலைஞர் அவர். வால்மீகியே ஒண்ணுமில்லை. அப்ப ஜானகிராமன் என்ன பெரிய “இது”ன்னு அவரே கலாட்டா பண்ணுவார்.

ஆனாலும், ஜானகிராமன் சாதனை ஒண்ணு இருக்கு. ரொம்ப அடக்கமா வாசிச்சாலும் அவர் வாத்தியம் என்னமோ தனிதான். தமிழ் எழுத்துக்கு அது தனிச்சுகமான சாதனையைத் தந்திருக்கிறதை யாராலும் மறுக்க முடியாது.

யாத்ரா இதழ் 40&41