தி.ஜானகிராமன் – சில நினைவுகள்

நானும், அவனும் சேர்ந்து சங்கீதக் கச்சேரிகளுக்குப் போவதுண்டு. ரூமிலும் அடிக்கடி சங்கீத வித்வான்கள் கூடிப் பாடி மகிழ்வதும் உண்டு. ஜானகிராமன் ராகம் பாடும் முறை, கமகப் பிரதானமான ஸஞ்சாரங்கள் ஆகியவற்றை அந்த வித்வான்கள் போற்றுவார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவனுடைய ஸங்கீதோபாஸனை இளமையிலிருந்தே அவனுடன் வளர்ந்த ஒன்று. ஆகஸ்டில் அவனை நான் கடைசியாகச் சந்தித்தேன். இசைவிழாக்கள் நடக்கும் நாட்களில் தன்னுடனேயே தங்கி இருக்க வேண்டுமென்றும், என்னை மிகவும் ஸெளக்கியமாகக் கூடவே அழைத்துச் சென்று திரும்புவதாகவும், அவசியம் வரும்படியும் வற்புறுத்திக் கூறினான். பிறகு கடிதமும் எழுதினான். ஸங்கீதத்தைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதப்போவதாகவும், அதற்கான சில கலந்துரைகள் செய்ய வேண்டும் என்றும் சொன்னான். இளமை முதலே இசைப் பயிற்சி உண்டு அவனுக்கு.