மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று

மிர்ஜான்கோட்டை 1604

அவசரமான ஆலோசனைக் கூட்டம். சென்னபைரதேவி மகாராணி தகவல் அனுப்பிக் கூட்டுவது. மந்திரி பிரதானிகளையும், தளபதி, சேனாபதி போன்ற பிரமுகர்களையும் இன்று காலை பதினோரு மணிக்கு மகாராணி சென்னபைரதேவி அவர்கள் சந்திப்பார். தவறாது கலந்து கொள்ள வேண்டும். 

இப்படி அழைப்பு அனுப்பியும் ஆச்சரியகரமாக பத்தே முக்கால் மணிக்குக் கோட்டைக் காரியாலயத்தில் யாரும் வந்திருக்கவில்லை என்பதில் ஆச்சரியப்பட்டுப் போனார் முதலில் வந்த நஞ்சுண்டையா பிரதானி. எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது.

அவர் நிதானப்படுத்திக் கொண்டு கோட்டை தலைமை உத்தியோகஸ்தரை அழைத்தார். கூட்ட அழைப்பாகத் தான் எழுதி தூதர்களிடம் கொடுத்தனுப்பிய தாக்கீதைக் கொண்டு வரச் சொல்லிப் பார்த்தபோது தான் அபத்தம் புலப்பட்டது. 

புத்வார் (புதன்கிழமை)க்குப் பதிலாக குருவார் (வியாழக்கிழமை) என்று அழைப்பில் கூட்டம் நடைபெறும் நாள் கொடுக்கப்பட்டிருந்தது. தலைமை அதிகாரி மெய்நடுங்கத் தொடங்கி விட்டார் அதற்குள். 

”இன்றைக்கு சத்யநாராயண பூஜை பரவலாக கொண்டாடுகிற நாள்.  இன்னிக்கு சந்திப்புன்னு தவறுதலாக வந்திருக்கும்னு நினைச்சு அழைப்பிலே குருவாரம்னு மாற்றிக் கொடுத்திட்டேன். அதோடு கூட, இதுவரை ஆலோசனைக் குழுவின் சந்திப்புகள் குருவாரமான வியாழனன்று தான் நடந்திருக்கின்றன” என்றார் கோட்டை தலைமை அதிகாரி.

பிரதானி நஞ்சுண்டய்யாவுக்கு புத்தி அவசரமாக வேலை செய்தது. சத்தியநாராயண பூஜை என்ற காரணத்தை அழுத்தம் கொடுத்து பிரஸ்தாபிக்கவும், வழக்கமான குருவாரம் என்பதில் அழுத்தம் கொடுத்துச் சொல்லவும் தீர்மானித்தார். 

இப்படி இருப்பதால் கோட்டை உத்தியோகஸ்தர் கூட்ட தினம் நாளைக்கு என்று தானே தகவலை மாற்றி அனுப்பி விட்டார். மன்னித்து விடலாம். முடிந்தால் நாளை அல்லது எவ்வளவு நேரமானாலும் இன்று இரவு கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று மகாராணியிடம் பணிவாக விண்ணப்பித்தார் நஞ்சுண்டையா பிரதானி. 

சென்னாதேவி சற்றே சிடுசிடுப்பாக இருந்தாள். குரல் புகார் சொல்லும் தொனியில் கொஞ்சம் உரத்து இருந்தது. வைத்தியன் எதிர்பார்த்ததுபோல் காத்திருந்தான். தீர்மானத்தைச் சொல்வதற்குள் அத்தனை பிரதானிகளையும் ஒரு பிடி பிடித்து விட்டாள். அதன் சாராம்சம் இது –

 ”அரண்மனை உத்தியோகஸ்தன் கபிலன் தானே?  தாக்கீது அனுப்பும் வேலைதானே அவனுக்கு. அதில் கண்ட தகவலை அங்கே இங்கே மாற்றி அனுப்ப அவனுக்கு யார் அனுமதி கொடுத்தது? நஞ்சுண்டரே, நீர் அளித்தீரா? இல்லை என்றால் வாயைத் திறந்து இல்லை என்று சொல்லுமே. தலையை ஆட்டினால் என்ன புரியும்?” 

“நேமிநாதன் எங்கே?” இந்தக் கேள்விக்கு சங்கடமான மௌனம் தான் பதிலாக வந்தது. சென்னாவின் கோபம் தலைக்கேறியது,

”நேமிநாதன் ஏன் வரவில்லை? ஹொன்னாவர் போயிருக்கிறாரா? என்ன, தகவல் தவறாகப் போய்ச் சேர்ந்ததா? வாய்க்குள் முனகாமல் ஸ்பஷ்டமாகச் சொல்லும் நஞ்சுண்டரே. அவசரக் கூட்டம் எதைப் பற்றி என்றாவது என்னிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? நீர் எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்கிறீர்? நேமிநாதனைச் சொல்கிறேன் நான். நாளைக்கே நான் உசிரை விட்டால் அது பண்டிகை நாளாக இருந்தால், கிடக்கிற கிழவி கிடக்கட்டும். நாம் கொண்டாட்டம் எல்லாம் முடிந்து வந்து இழுத்துப் போடுவோம் என்று போவீரா? ஆமாமா, அமங்கலமாக ஏதும் பேச வேண்டாம்தான். நடப்பு சரியாக இருந்தால் ஏன் அதெல்லாம் பார்க்க வேணும்? எனக்கும் போக வேண்டிய நாள் குறிச்சுத்தானே இருக்கும். அது என்றைக்கோ தெரியாது. ஆனால் ஒண்ணு தெரியும் ஒற்றுமை இல்லாமல் தாந்தோன்றியாக அவரவர் முடிவு செய்து வேலை நடத்தினால் சீக்கிரம் என்னைப் படுக்க வைத்துத்தான் கூட்டம் நடத்தி எரிக்கணும். என்ன அடுத்த கூட்டமா? ராத்திரி வைக்கலாமாவா? சத்தியநாராயண பூஜைக்குச் செய்து மீந்த வடையும், தோசையும், அப்பமும், அதிரசமும் இனிப்பும் தின்னாமல் கிழவிகள் அவசரமாகக் கூப்பிடும் கூட்டத்துக்குக் கட்டாயப்படுத்தப்பட்டு வந்து சேர்ந்து என்னைப் பிடிப்பிடியாகத் திட்டுவதைக் கேட்கணுமா? நாளைக் காலை பதினொரு மணிக்கே கூட்டம் கூடட்டும். வாசல் கதவை சார்த்தி விட்டுப் போங்கள், புண்ணியமாகப் போகிறது. யார் வந்திருக்கிறது, வைத்தியனா? உடம்பைப் பிடித்த நோய் கூட ஒருநாள் போகும். வைத்தியனைத் தவிர்க்க முடியுமா? வரச்சொல்லி விட்டுப் போம். அரண்மனை உத்தியோகஸ்தன் கபிலனை நான் எல்லாக் குளறுபடிக்கும் மன்னித்ததாக அவனிடம் சொல்லிவிட்டுப் போம் நஞ்சுண்டரே”. 

பெரிதாகப் புன்னகைத்தபடி மருத்துவப் பெட்டியோடு வந்த பைத்யநாத வைத்தியர் நின்று, ராணியம்மாவைச் சந்தித்துத் திரும்பும் பிரதானி நஞ்சுண்டாரிடம் நமஸ்காரம் சொன்னார். பிரதானி பரிதாபமாகப் பார்த்தபடி வெளியே போனதைக் கண்டபோது அரசியார் சந்தோஷமாக இல்லாத பொழுதாக இது இருக்கக்கூடும் என்று அவருக்குப் புலப்பட்டது.

”நீ வேறே கழுத்தறுக்க வந்துட்டியா? வா” என்று சென்னா மகாராணி வைத்தியரை வரவேற்றாள்.

 ”அம்மா, சீன மருத்துவத்துலே கழுத்தறுத்து ஒட்ட வைக்கற வைத்தியம் இருக்கு. பின்னங்கழுத்துலே கொஞ்சம் சீவி வர்ற குருதியிலே அசுத்தம் எல்லாம் வெளியே போய் நோய் எதுவும் இல்லாமப் போயிடுமாம். ஒரு பொடியை கழுத்தைச் சுத்தி பூசிவிட்டா வெட்டிய இடம் சுக்கு மாதிரி உலர்ந்துடுமாம்”.

முகத்தை அழுத்தமாக வைத்துக்கொண்டு வைத்தியர் சொல்ல, சென்னபைரதேவி மகாராணி பக்கென்று சிரித்து விட்டாள். 

”இதென்ன ராட்சச வைத்தியம், கழுத்தை அறுக்கறதாம், ரத்தத்தை எடுக்கறதாம். அதுக்கு அப்புறமும் உசிரு இருக்குமா என்ன? சீனாக்காரங்க தலையெல்லாம் கழுத்தே இல்லாம கவுத்து இருக்கு அதுக்கு இந்த வைத்தியம் தான் காரணமா?”  

மகாராணி கேட்க, அந்தச் சூழ்நிலை திரும்ப சந்தோஷமும் உற்சாகமும் வரப் பெற்றது. வைத்தியர் எதிர்பார்த்ததும் அதுதானே.

காலில் புரட்டக் கற்பூரவல்லிக் களிம்பு, தலைக்குத் தடவிக்கொள்ள கரிசலாங்கண்ணி தைலம், ஜலதோஷத்தைக் கண்டிக்க வீபூதிப் பச்சை சூரணம், உடல் பலஹீனம் மாற நெல்லிக்காய் லேகியம், ரத்தம் சுத்தமாகத் தும்பைப்பூ உலர்த்திப் பொடித்துக் கலந்த குளிகை என்று வரிசையாகத் தன் மருத்துவப் பெட்டியில் இருந்து வைத்தியர் எடுத்து உள் மண்டப மேஜையில் வைத்தார். 

ஒவ்வொன்றுக்கும் பெயர் சொல்லி பிரதாபம் சொல்ல இதெல்லாம் மெல்லக் கேட்டுக்கறேன் என்றபடி உள்ளே பார்த்துக் கைதட்டினாள். மகாராணியின் தாதி மிங்கு முகம் நிறையப் புன்னகையோடு  வந்தாள். 

“அடியே மிங்கு, உன் வீட்டுக்காரன் ஊர்ப்பட்ட மருந்து செய்து எடுத்து வந்திருக்கான். எதை எதை எவ்வளவு எப்போ சாப்பிடணும் வகையறா விஷயம் எல்லாம் கேட்டு வச்சுக்க” என்றாள் மகாராணி. 

அதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டார் மகாராணியம்மா. உங்களுக்கு ஒரு தடவை கேட்கணும்னா அவரைச் சொல்லச் சொல்லுங்க. முடிக்கறதுக்குள்ளே தூக்கம் வந்துடும் அம்மா என்றாள். 

அர்த்த புஷ்டியோடு ”முடிக்கறதுக்குள்ளே தூக்கம் வந்துடறதா?” என்று கேட்டு மிங்குவை முகம் சிவக்க வைத்த மகாராணி தன்னறைக்குப் போகத் திரும்பியவள் வைத்தியரைப் பார்த்துச் சொன்னாள் – 

”நஞ்சுண்டய்யா பிரதானியவரை உடனே என்னை சந்திக்கச் சொல்லு. வீட்டுக்குப் போயிருக்க மாட்டார். சாரட்டை மெல்லத்தான் ஓட்டச் சொல்வார். கோட்டை வாசல்லே பிடிச்சுடலாம் கொஞ்சம் வேகமாக நீ போனால்”.

அவ்வண்ணமே கோட்டை வாசல் கடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நஞ்சுண்டய்யா பிரதானி மறுபடி உள்ளே விளிக்கப்பட்டார். கூடவே வைத்தியரும் திரும்ப வந்தார். 

நஞ்சுண்டய்யா ”என்ன ஆச்சு நீங்களும் மறுபடி வர்றீங்க?” என்று வைத்தியரைக் கேட்டார். 

“நாலு மணிக்கு என்னையும் அதிவீர் தளவாயையும் வரச் சொல்லியிருக்காங்க” என்றார் வைத்தியர்.

நஞ்சுண்டய்யா வரும் வரை வெறும் நாற்காலியில் முன் மண்டபத்தில் அமர்ந்திருந்தாள் சென்னபைரதேவி மகாராணி. 

“நஞ்சுண்டவரே, ஷமிக்கணும். இன்னிக்கு அதிவீர் தளவாயையும்,  வைத்தியனையும், செங்கமலத் தாயாரையும் பிற்பகல் நாலு மணிக்கு வரச் சொல்லியிருக்கேன்”

“ஒற்றர்படை சந்திப்பா அம்மா?”  . 

”ஆமா, அந்தக் கூட்டத்திலே நீங்களும். இங்கே மிர்ஜானிலோ ஹொன்னாவரிலோ இருக்கப்பட்ட பிரதானி, தளவாய், சுபேதர்கள் எல்லாரும் கலந்துக்கணும். உள்ளூர் தானே, சேவகர்களை அனுப்பி வரவழைச்சுடுங்க நஞ்சுண்டய்யா அவரே” 

சென்னா படுக்கை அறைக்குள் போனாள். குரலில் தளர்ச்சி தெரிந்தது. 

நேமிநாதனை அழைக்க வேண்டாமா? பிரதானி தனக்குள் கேட்டுக் கொண்டு விடை தெரியாமல் மௌனமாக நடந்தார். 

பகல் பனிரெண்டு மணி தானே ஆகிறது. பிற்பகல் நான்குக்குச் சந்திப்பு என்றால் ஹொன்னாவரில் வீட்டுக்குத் திரும்பிப் பகல் உணவுக்கு அப்புறம் மூணு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால் போதும் என்று அவர் மனம் கணக்குப் போட்டது. 

வைத்தியர் மிர்ஜான் கோட்டை அரண்மனை சமையலறை நோக்கி நடந்தார். மாதாமாதம் அரண்மனை சமையலறை மடையர்களை வருமுன் காப்பதாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி உடல்நலம் சீராக இருக்க மருந்து கொடுக்கும் திட்டத்தை சென்னபைரதேவி மகாராணி தான் ஏற்படுத்தியது. அரண்மனை சமையலறையில் பகல் உணவு கழித்துவிட்டு மடையர்களைப் பரிசோதித்து முடித்தால் நான்கு மணிக் கூட்டத்துக்கு வந்து விட முடியும் என வைத்தியர் மனம் கணக்குப் போட்டது.

முக்கியமான கூட்டங்களை நேமிநாதன் இல்லாமல் நடத்த சாக்குபோக்கு தேடிக் கொண்டிருப்பது சரியில்லைதான் என்று தோன்றியது சென்னாவுக்கு. அவன் இருந்தால் அந்தக் கூட்டம் வெளிப்படப் பேசி நடக்காது என்பதால் அவனில்லாமல் நடத்துவதே சரியானது என்று மகாராணி மனம் கணக்குப்  போட்டது. 

நேரக் கணக்கு பிழையில்லாமல் சுவிட்சர்லாந்து கடியாரம் நான்கு மணி சொல்ல, சென்னபைரதேவி கோட்டைக் காரியாலயத்தில் நுழைந்தபோது அதிவீர் தளவாயும், சந்திரப்பிரபு பிரதானி மற்றும்  உப பிரதானிகள் நான்கு பேரும், ஒரு சுபேதாரும் அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்தார்கள்.  கூட்டம் தொடங்கியது. சென்னா தொடங்கி வைத்துச் சொன்னது –

”இதுவரை நடந்திராத சில சம்பவங்கள் நடக்கும் ஷ்ரவண மற்றும் சென்ற மாதமான ஆஷாட மாதங்களில் நடைபெற்றன. உயிர் பறிக்கும் அளவு பெரியதோ, வேகமாகப் பரவி பொருள் நஷ்டத்தைத் தருமளவு விளைவுகள் கொண்டதோ இல்லை இந்த துரதிருஷ்டவசமான நிகழ்வுகள்.  யாரையோ ஏதோ ஒரு பெரிய ஜனக்கூட்டத்தையோ பயமுறுத்தும் விதம் நிகழ்ந்த சிறு வெடிவெடிப்புகள் இவை. தீபாவளி சீனவெடி வெடிப்புக்கு இரண்டு மடங்கு அதிக சத்தம் வாய்ந்ததாக, கோவில் வெடிவழிபாட்டுப் பரம்பில் வழிபாட்டு வெடி வெடிப்பதைப் போல், அதற்கு ஒன்றரை மடங்கு கூடுதல் சத்தத்தோடு நிகழ்ந்த வெடி வெடிக்கும் நிகழ்ச்சிகள் இவை. ஆஷாட  மாதம் அமாவாஸ்ய தினத்தன்று   – கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவில், ஆஷாட மாதம் அஷ்டமி தினத்தில் ஜெருஸோப்பா கிருஷ்ணன் கோவில், நிகழும் ஷ்ரவண மாதம் நவமி தினத்தில் ஹொன்னூர் மடம் மற்றும் நிகழும் ஷ்ரவண மாதம் சதுர்த்தியன்று ஜெருஸோப்பா சதுர்முக வசதியில் என்று நான்கு அசம்பாவித சம்பவங்கள் நேர்ந்திருக்கின்றன. கோகர்ணம் மகாபலேஷ்வரர் கோவில் வெளிச்சுவரில் விள்ளல் ஏற்பட்டதை சரி பண்ண பத்து வராகன் ஆனது தவிர பொருள் நஷ்டத்தை ஈடுகட்டச் செலவு என்று வேறு எதுவும் பகவான் கருணையால் ஏற்படவில்லை. ஆனால் கணிசமாக தேசவாசிகளிடையே பயத்தையும் கவலையையும் முளை விடச் செய்த மோசமான  செயல்கள் இவை. இவற்றில் மூன்று இந்து மதக் கோவில், மடத்திலும் ஒன்று சமணமத வசதியிலும் நடந்த சம்பவங்களாகும். இந்து மத ஸ்தாபனங்களில் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் சமணர்களால் ஏற்படுத்தப்பட்டன என்றபடியும், சமணவசதி சம்பவம் இந்துக்களின் பழி வாங்கும் செயலாகவும் தோன்றும்படி கட்டியமைக்கப் பட்டது. இவை எல்லாமே விஷமிகளின் செயல் என்று நான் நினைக்கிறேன். ஏன் இவை நிகழ்ந்தன? எப்படி இனித் தடுக்கலாம்? உங்கள் கருத்தைச் சொல்லலாம்”.

 எல்லோரும் அடுத்தவர் பேசுவதைக் கவனமாகக் கேட்டு,  அழைக்கப்பட்டபோது கருத்து சொன்னார்கள். எல்லோரும் துரதிருஷ்டவசமானது என்பதில் கருத்து வேறுபாடின்றி ஒன்றுபட்டார்கள். விஷமிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று கொங்கணியிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் திடமாகச் சொன்னார்கள். இன்று சிறிய வெடி, நாளை பெரிய வெடிவெடிப்பு என்றாகலாம் என அச்சப்பட்டார்கள். பிரதானி நஞ்சுண்டய்யா ஜாக்கிரதையாகப் பேசியதாக சென்னபைரதேவி மகாராணிக்குப் பட்டது. எல்லோரும் தான். எதற்குப் பயப்படுகிறார்கள்? எதை மறைக்கிறார்கள்?

“ஒற்றர் படைக்குக் கிட்டிய தகவலை அதிகாரபூர்வமாகச் சொல்லலாம்” சென்னா கூறினாள். தனிப்பட்ட முறையில் இன்றி அரசுத் தகவலாக அதைப் பகிர்ந்து கொள்ளலாம். எந்த விளைவும் ஏற்படாது என்று அரசு சார்பில் மறைமுகமாக அளிக்கப்படும் வாக்குறுதி அது.

“பதினைந்து வயதில் இருக்கும் இளைஞர்கள் நேரம் போக்க வெடி மருந்து கலந்து சிறு வெடிகள் செய்து தரையில் இட்டு வெடிக்கச் செய்தது போன இரண்டு வருஷமாக நடக்கிறது. அவற்றை வெங்காய வெடி என்று நிறத்தை வைத்துச் சொல்கிற வழக்கம். இந்த வருடம்  கொஞ்சம் பெரிய வெங்காய வெடிகளை சீனப் பட்டாசு போல் உண்டாக்கி வைத்திருந்தார்களாம்.  அவற்றில் சில காணாமல் போனதாகத் தகவல். அவைகளை விஷமிகள் எடுத்துப் போய் மத ஸ்தாபனங்களில் வெடித்திருக்கலாம் என்று ஒரு தகவல்”.

”வேறு தகவல் உண்டா?” 

“உண்டு மகாராணி.  ஜெருஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் கடைத்தெரு பிரமுகர்கள் இந்த ஆண்டு முதல் சீனப் பட்டாசு விற்காமல் சுதேசியாக இங்கேயே அவற்றைப் பண்ணலாம் என்று தீர்மானித்து சீனப் பட்டாசு செய்யும் கொச்சி வெடிமருந்து மேதாவி மல்லியக்கல் தோம என்னும் மல்லியைக் கூட்டி வந்தார்களாம். அவரும் ஒரு கோஷ்டி இளைஞர்களுக்கு வெடி மருந்தைக் கையாளப் பயிற்சி அளித்துப் போனார். வேண்டிய அளவு வெடியுப்பு கிட்டாததால் பட்டாசு செய்ய முடியாத அவர்கள், கிடைத்த கொஞ்சம் வெடியுப்பை வைத்துச் செய்த பட்டாசுகளை விளையாட்டாக எறிந்து பார்த்த இடங்கள் மத ஸ்தாபனங்களாச்சுதாம்”.

”இது தவிர வேறே ஏதும் ஒற்றுக் கிட்டிய தகவல் உண்டா” சென்னா கேட்டாள். 

”உண்டு மகாராணி’. 

வைத்தியன் சற்று நிறுத்தினார். கூட்டம் முழுவதும் அவரைப் பார்த்தபடி இருந்தது.

”இது உறுதி செய்யப்படாத தகவல். கற்பனை அதிகமா இருக்கப்பட்ட யாரோ எட்டுக்கட்டி எடுத்து விட்ட புரளியாக இருக்க வாய்ப்பு உண்டு. என்றாலும் பேச்சு வந்ததால் ஒற்றுத் தகவல்லே அதையும் சேர்க்க வேண்டிப் போச்சு”

“பீடிகை பலமா இருக்கே வைத்தியரே, முழு விவரம் சொல்லும்” என்றார் அதிவீர தளவாய்.

“நம்ம பெருமதிப்புக்கு உரிய, உயிர் மூச்சான, கண்ணுக்குக் கண்ணான மிளகு ராணியம்மாவை, அவங்க ராஜ்ய பரிபாலனம் செய்யறதை விரும்பாதோ யாரோ செய்யற விஷமம் இதுன்னு தகவல்”. 

வைத்தியர் சொல்ல மறுபடி கூட்டம் அவர் சொல்வதை முழு ஈடுபாட்டோடு கவனித்துக் கொண்டிருந்தது.

”மிளகு ராணியம்மா இல்லாமல் இருந்தால் மிளகு விவசாயம், ஏற்றுமதிக்கு தயார்ப்படுத்தறது, விலை நிர்ணயம் இப்படி இந்தப் பணப் பயிரைப் பற்றிய எல்லா விஷயத்தையும் திறமையாகக் கையாள வேறே யாருமில்லாமல்..”, வைத்தியர் தயங்கினார்.

”யாருமில்லாமல்?” தளவாய் கேட்டார்.

 ”வேறே யாராவது அந்த சிம்மாசனத்துலே இருந்து வெளிநாட்டு வியாபாரிகளுக்கு, வெளிநாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாக, இங்கே இருக்கப்பட்ட விவசாயிக்கு வருமானம் குறைவாக வர்றதா செய்து, மிளகு நமக்கு லாபம் கொடுக்காமல், போய்ச் சேர்ந்த இடத்துலே காசு கொட்ட வைக்கலாம். எனவே மிளகு ராணியை எதிர்க்கணும். இப்படி நினைப்பு” 

”அது எப்படி?” 

”இந்த ராஜதானியிலே ரெண்டு பெரிய மதங்கள் சமணம், இந்து மதம். ரெண்டு மதமும் ஒண்ணோடு ஒண்ணு எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் அடுத்தடுத்து வளர்ந்துட்டிருக்கு. அந்த அமைதியை அழிச்சா, ஜனங்கள் மிளகு ராணியை வெறுக்க ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம் ராணி அவங்களை பதவி இல்லாம செய்யலாம். இப்படி மத நல்லிணக்கத்தைப் போக்கி மத துவேஷத்தை விதைக்க  நினைச்சு விஷமிகள் வெடி வெடிச்சதா ஒரு ஆதாரமில்லாத தகவல்”.

வைத்தியர் சொல்லி முடிக்கும்போது முகம் வியர்த்திருந்தது. மேல் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு மகாராணி அருகில் போய் வணங்கி, நீங்க குளிகை சாப்பிடற நேரம் என்று நினைவுறுத்தித் தன் இடத்துக்குப் போனார். 

”யார் செய்திருக்கக் கூடும் இப்படி?” சென்னா கேட்டாள்.

”போர்த்துகீஸ் அரசாங்கத்தின் கைவேலையாக இருக்கலாம்”.  ஒட்டுமொத்தமாக அவை சொன்னது. சென்னா எதிர்பார்த்த பதிலில்லை இது.

”போர்த்துகீஸ் அரசுக்கும் நமக்கும் இப்போது நல்ல உறவும் இணக்கமும் இருக்கும்போது அதைப் பாழ் பண்ணிக்கொள்ள அவர்கள் ஏன் முனைய வேண்டும்? அதுவும் மிளகு விவசாயம் நல்லபடிக்கு நடந்து கொள்முதல் அதிகமாகும் காலம்”. நஞ்சுண்டய்யா பிரதானி பொதுவாகப் பார்த்துக் கேட்டார்,

 ”அவர்களுக்குத்தான் நிரந்தரமான நண்பர்களும் இல்லை, நிரந்தரமான பகைவர்களும் இல்லையே. நாளைக்கு பத்து வராகன் வருமானம் அதிகம் கிடைக்கும் என்றால் கப்பல் ஏறி யுத்தம் புரிய வந்துவிடுவார்கள் அவர்கள்”. அதிவீர் தளவாய் நேரே பார்த்தபடி சொன்னார்.

”அவர்களுக்கு சென்னபைரதேவி மகாராணி அரசாங்கத்தை விட சாதகமான ஜெருஸோப்பா அரசு கிட்டுமா என்ன?” நஞ்சுண்டையா பிரதானி கேட்டார்.

“ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்ளலாம். அரசியாருக்குப் பதிலாக   அவர்கள் இளவரசரை சிம்மாசனம் ஏற்றிப் பார்க்க ஆசைப்பட்டால்?”

“ஆசைப்பட்டால் எடுத்துக்கொள்ளச் சொல்லி விடுவேன்” சென்னா பட்டென்று சொன்னாள்.

மண்டப வாசலில் யாரோ வந்து நிற்பது தெரிந்தது. யார் அது? சென்னா கேட்க, நஞ்சுண்டையா போய்ப் பார்த்து விட்டு உள்ளே அழைத்து வந்தார். ஒற்றர் படை அதிகாரி செங்கமலத் தாயார் கையில் கட்டுப் போட்டுக்கொண்டு உள்ளே வந்தாள். ரத்தம் அந்தக் கட்டு ஊடே கசிந்து கொண்டிருந்தது.

வைத்தியர் அவசரமாக அவளைக் கவனிக்க   மண்டபத்தின் பின் இருந்த வெளி ஒழுங்கையில் வைத்திருந்த நாற்காலியில் அமரச் சொன்னார். அவளை அங்கே சுமந்து போய் உட்கார வைக்க  சுபேதார்கள் உடனே உதவினார்கள். செங்கமலத் தாயார் சென்னபைரதேவி ராணியை வணங்கினாள். ”மகாராணி, எனக்கு ஒண்ணுமில்லே” என்றாள் . அவள் கண்கள் களைப்பால் மூடித் திறந்தன.

Series Navigation<< மிளகு அத்தியாயம் நாற்பதுமிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.