நாங்கல்லாம் மதுர காரங்ய…!

ஒவ்வொரு தெருவிலும் எப்படி இத்தனை காபி வடை கடைகள்? காலை துவங்கி நள்ளிரவு வரை எப்படி விடாமல் எல்லா கடையிலும் ஒரு கூட்டம் எதையேனும் சாப்பிட்டபடியே இருக்கிறது? இன்று நேற்றா? பத்து இருபது ஆண்டுகளாகவா?  போன நூற்றாண்டிலிருந்தா? என்றிலிருந்து தோன்றியது இத்தகையதொரு பழக்கம்? நம்புவதற்கு கடினமெனினும், சங்க காலம் தொட்டு “மதுரைக்காரர்கள்” இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்! மதுரை மக்களிடம் பிரத்யேக உணவு மரபணுக்கள் ஏதேனும் இருக்குமோ? சொல்ல முடியாது… இன்னும் சில ஆண்டுகளில் ஏதேனும் ஒரு மரபணு ஆராய்ச்சியில், “மதுரை மரபணு” என்றொன்று கண்டறியப்படலாம்.

ஒரே ஒரு முத்தம்

உங்கள் அப்பாவை நீங்கள் முத்தமிட்டது உண்டா? இதென்ன அசட்டுத்தனமான ஒரு கேள்வி என்று தோன்றலாம். குழந்தைப் பிராயத்தில் உண்டு என்பது நாம் தரக்கூடிய சிறுபிள்ளைத்தனமான பதிலாக இருக்கலாம். எனவே கேள்வியை இன்னும் சற்று தெளிவாக்கலாம்…உங்கள் பால்யத்திற்குப் பின் எப்போதேனும் அப்பாவை முத்தமிட்டுருக்கிறீர்களா? நான் ஏன் இக்கேள்வியை கேட்கிறேன் என்பதை விளக்குவதற்கு முன், உங்கள் தந்தை இப்போது உங்களுடன் இருந்தால் உடனே சென்று முத்தமிட்டு வாருங்கள்.

குஞ்சர நிரை

சமீபத்தில் சென்னையிலிருந்து ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். என் மனைவியிடம் அலைபேசியில் மகன் என்ன செய்கிறான் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். அவனை நான் செல்லமாக, “யானை” என்று அழைப்பது வழக்கம். “யானை சாப்டுச்சா?”…”நிறைய தண்ணி குடுத்தயா?”… “யானை சேட்டை பண்ணிச்சா?”,…”இருட்டினப்புறம் வாழைமரம் பக்கம் அனுப்பாத”… என்று பேசிக்கொண்டிருந்தேன். பின்னிருக்கையில் இருந்த ஒரு சிறுமி, “அம்மா அந்த அங்கிள் வீட்டுல யானை வச்சுருக்காரும்மா” என்று உரத்த குரலில் சொன்னபிறகுதான் நிமிர்ந்து பார்த்தேன். பலரும் என்னையே பார்த்தபடி இருந்தனர். பேசி முடிக்கும் வரை காத்திருந்தவர் போல் பக்கத்து இருக்கையில் இருந்தவர், “சார் தனி ஆள் யானை வளர்க்கறது இல்லீகல் ஆச்சே” என்றார்.

இது வேற லெவல்…!

சமீபகாலங்களில் எனக்கொரு சந்தேகம். உங்களுக்கும் இருக்கலாம். தமிழில் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்பதே அது. சந்தேகம் சும்மா வரவில்லை. பல நாட்களாக, பல பேரிடம் பேசும் பொழுது சட்சட்டென்று இந்த எண்ணம் வந்து போகும். எதனால் என்று கேளுங்கள்… ஒரு நண்பரிடம் அவர் சென்று வந்த பயணம் “இது வேற லெவல்…!”

தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி

உணர்வு என்பதே ஒரு அற்புதமான சொல். நேர்மறையான, உன்னதமான, நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் அகத்தை ஊடுருவும் பொழுது ஏற்படுவதே உணர்வு. தொன்மையில் இருந்தது போலன்றி தற்காலத்தில் சொற்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டு பொருளின் அடர்த்தி நீர்த்துப் போய்விட்டது. பள்ளி செல்லும் வயதில், 80களின் முற்பகுதியில், மதுரை மேம்பாலங்கள் அனைத்திலும் “இன உணர்வு கொள்” என்று கரியினால் எழுதப்பட்ட வாசகத்தை பார்த்தபடி கடந்ததுண்டு.

தீண்டா நதி

மனிதர்களில் தான் எத்தனை வகை! அதிலும் ஒரு சமோசாவை மனித மனம் எப்படியெல்லாம் வித்தியாசமாக சாப்பிட நினைக்கிறது! என் அருகில் இருந்தவர் சமோசாவின் தோல்பகுதிகளை தனியே எடுத்துவிட்டு மசாலாவை மட்டும் சாப்பிடும் ரகத்தைச் சேர்ந்தவர். அதன் பொருட்டு தோலுக்கும் மசாலாவுக்குமான பிரிவினைவாத முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வழிப்போக்கர் ஒருவர் “ஜெயிந்திபுரம் எப்படி போறது” என்று அவரிடம் கேட்டபடி வந்தார். கிரைம் பிராஞ்ச் பக்கம் கைகாட்டி, “இப்படியே நேரா போங்க ஒரு சாக்கடை வரும் அதை ஒட்டின தண்டவாளத்தை தாண்டி லெப்ட்ல போனா வந்துரும்” என்றார். அவர் எதை சாக்கடை என்று சொன்னார் என்று அறிந்த நான் கொதித்தெழ வேண்டும்தான்.

பக்கிம் + பாரதி = பரவசம்

“பக்கிம் சந்திர பாபுவின் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மை இல்லாவிடினும், தமிழ் நாட்டாருக்கு அச்செய்யுளின் பொருளுணர்த்த வேண்டுமென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன்” என்கிறார். இது மட்டுமா? “தெய்வப் புலவர்” என்றால் நாம் அனைவரும் திருவள்ளுவர் என்போம். ஆனால் பாரதி தனது கட்டுரையில் “தெய்வப் புலவராகிய பக்கிம் பாபு” என்று அழைக்கிறார்.

பூப்போலே உன் புன்னகையில்…

மரணத்தை வெல்லும் உரிமம் மானுடத்திற்கு இல்லை. இருப்பினும், மரணத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாற்றுப்பாதையில், மாற்றுருவில் பயணிக்கும் வித்தையை இயற்கை இவ்வுலகிற்கு வரமாக்கியிருக்கிறது. ஆம்.  கலையின் ஏதேனும் ஒரு வடிவத்தை கற்றறிந்து அதை மற்ற உயிர்களின் உணர்வுகளுக்கு உணவாக அளிக்கும் ஆற்றல் பெற்ற எவரும் காலத்தின் மீதேறி கணக்கற்ற “பூப்போலே உன் புன்னகையில்…”

பைய மலரும் பூ…

அது ஒரு வெள்ளி இரவு… அலைபேசியில் தொலையாமல், சமூக ஊடகங்களின் சந்தடியில் சிதறாமல்‌, வானில் நகரும் வெள்ளியை ரசித்திட நேரம் கிட்டிய எண்பதுகளில் எழுந்த‌ ஒரு வெள்ளிக்கிழமை இரவு… அருகிருந்த வீடுகளில் ஓடும் ஒலியும் ஒளியும் கூட நம் வீட்டிற்குள் கேட்கும்படி ஊர் அமைதி கொண்டிருந்த காலத்தில் எழுந்த “பைய மலரும் பூ…”

ரசவாதம்…

மலையில பெய்யுற மழை ஓடி வரப்போ அதோட மண்ணு, மரஞ்செடி இதுல இருக்குற சத்தெல்லாம் அள்ளிட்டு வந்துரும். அது பாறைகளோட இடுக்கு, குழி இதுல தேங்கி நிக்கும். இப்படி தேங்கி நிக்குற தண்ணியோட சக்தி சொல்லி மாளாது. உங்களுக்குப் புரியற மாதிரி சொன்னா, இதுவரை சயின்ஸ் கண்டுபிடிக்காத பவர்புல் கெமிக்கல் அது. நினைச்ச நேரத்துல அதை எடுத்துற முடியாது. ஒவ்வொரு மலைக்கும், அதுல உள்ள‌ ஒவ்வொரு பாறைக்கும், ஒவ்வொரு பாறையில உள்ள ஒவ்வொரு குழிக்கும் தனித்தனி இயல்பு இருக்கு. அதப்பொறுத்தும் கால நேரத்தைப் பொறுத்தும் எடுத்தாத்தான் வேலை செய்யும்.

சீர் கொண்டு வா…

“கவிதை” என்ற பெயரில் ஜனரஞ்சக பத்திரிகைகளில் வரும் எழுத்துக் கோர்வைகளை படிக்காமல் தாண்டிச் செல்லும் அளவு புறந்தள்ளும் தன்மை இன்னும் வரவில்லை என்பதால், காலைக்கடன் சரிவர நேராவிடில் அன்றைய பொழுது நிகழும் விவரிக்க இயலா அவஸ்தை போல், மேற்கூறிய‌ கவிதைகளைப் படித்தபின் நாம் அடையும் மொழி மற்றும் மன‌உபாதைகளுக்கான “சீர் கொண்டு வா…”

காந்தள் மெல்விரல்

அம்புகள் தாக்கியதால் உண்டாகும் புள்ளிகள் உடைய, போரில் பங்கேற்ற யானையின் முகத்தைப் போன்ற கல்லின் மீது பல காந்தள் மலர்கள் ஒருசேர மலரும் வனப்புடைய நாட்டின் தலைவன் என்கிறார். துடைத்தெறிய முடியாத இரண்டு காட்சிப் படிமங்களை நம்முள் இறக்கி வைக்கிறது இப்பாடல். ஓன்று, இது வர்ணிக்கும் பாறையும் அதன் மீது கொத்தாய் சாய்ந்து நோக்கும் காந்தள் கூட்டமுமாய் அன்றி வேறு யாதொரு காட்சி வடிவத்திலும் பெரும்பாலும் காந்தள் நம் கண்ணில் படுவது இல்லை.

மதுமலர்த்தார் வாங்கி நீ வா..

“பயில்” என்றால் கற்பது என்பது நாம் அறிந்ததே. தூதுப் பாட்டின் பொருளை கற்றுத் தரும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்ற நேர் பொருள் நாம் கொண்டாலும், இன்னொரு அர்த்தமும் நம்மால் உண்டாக்க இயலும். “பயில்” என்பதற்கு “சைகை செய்வது” என்ற பொருளும் உண்டு. தூதின் உட்பொருளை சைகை செய்யும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்று சொன்னால் இன்னும் நயம் கூடுகிறது அன்றோ?

கலி வெண்பா என்பதை ஏன் களி வெண்பா என்று பெயரிடாமல் விட்டார்கள் என்றெண்ணும் அளவு உற்சாகம் ஊட்டும் வாசிப்பு எழில் கொண்டது இன்னிசை கலிவெண்பாவும் நேரிசை கலிவெண்பாவும்.

தேரோடும் வீதி…

வடம் போக்கித் தெரு…! கெட்டித்து போன கால உருளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு தெரு…தெரு என்றாகி, அதற்கொரு பெயர் சூடி சில‌ நூறாண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் அதன் கீழிருக்கும் மண்? மலையத்துவஜனும் காஞ்சனமாலையும் சுந்தரவல்லியை பெண்ணாய் பெறும் வேள்வியை செய்யக் கடந்து போயிருக்கக் கூடிய தெரு…அச்சுந்தரவல்லி, மும்முலை அரசியாய் கயிலை நோக்கி படைதிரட்டி சென்றிருக்கக் கூடிய தெரு…அங்கு நாயகனை கண்ட நாணத்தில் ஒரு முலை மறைந்து இருமுலை குமரியாய் திரும்பியிருக்கக் கூடிய தெரு…”மனமகிழ் துங்குநர் பாய்புடன் ஆடச் சுனைமலர்த் தாதுதும் வண்டுதல் எய்தா” பரங்குன்றம் நோக்கி பலர் சென்றிருக்கக்கூடிய தெரு…”பொன்தொழில் சிலம்பொன்று ஏந்திய கையள்

பிப்பல மரம்…

அண்டவெடிப்பின் ஆதி நொடி துவங்கி, யாதொரு இயக்க நேர்தலின் நிமித்தம் நிலைகுலைவா ஒழுங்கமைவா என்று ஆராய்வது அறிவியல். அதையும் கடந்து உயிர்களின் உருபுகளில் மேல் காலத்தின் திரிபுகளால் ஊழ் வந்தமர்ந்து உலா போவதன் ரகசியம் உணர முயல்வது ஆன்மீகம். ஆன்மீக ஊஞ்சலில் முன்னும் பின்னுமாய் ஊனை இயக்குகிறது வயது. அந்த ஆட்டத்தில் அனுபவம் பெறுகிறது மனது. அனுபவங்களை ஒன்றன் மீது ஒன்றாய் அகத்தின் மீது அடுக்கி வைத்துக் கொண்டே போவதனால் தான் வயதுக்கு அகவை என்ற சொல் ஏற்பட்டதோ?

டோக்கியோவின் இளையநிலா…

கலைமகள் எப்போதும் தமிழகத்தில் தாமரை மீதமர்ந்து வீணை மீட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவள் அகியாபாராவில் அமர்ந்து கோடோவும் வாசிப்பாள் என்பதை புரிய வைத்தது போல் புன்னகைத்து வந்தனம் கூறி அகன்றாள் அந்த ஓமோய்கானே*.  அவர் ஒரு தேர்ந்த கோடோ கலைஞர் என்பதையும், ஆர்வம் காரணமாக அந்தக் கடையில் பகுதி நேரம் பணியாற்றுகிறார் என்பதையும் நாங்கள் அறிந்த போது நம்புவதற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது.

மதுரைக் காஞ்சி

வைகையையே மதுரைக்கு உவமையாக்கி, வற்றாது ஓடும் வைகை போல மதுரையின் நுழைவாயிலில் மக்கள் கூட்டம் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார். ஆற்றின் அகலம் போன்ற விரிந்த தெருக்களும் அதன் கரைகள் போல இருமருங்கிலும் வீடுகளும் இருக்குமாம். ரொம்ப பழைய காலம் என்பதால் சாதாரண மண் குடில் என்று நாம் நினைத்து விடக்கூடாது. “பல்புழை நல் இல்” என்கிறார் ‍ அதாவது பல சாளரங்கள் உடைய வேலைப்பாடுகள் உடைய வீடுகளாம் அவை! “வைகை” போல் ஓயாது ஓடும் மக்கள் கூட்டத்திற்கு பசியும் ருசியும் உண்டே…அதற்கெனவே அன்றும் மதுரை முழுவதும் “பண்ணியம் பகர்நர்” நிறைந்து இருந்திருக்கின்றனர். யார் இந்த “பண்ணியம் பகர்நர்”?

சங்கத்தில் பாடாத கவிதை..

“வாரம் முழுசும் நான் மனைவி மக்களோட பேசறதே இல்லை. என் குழந்தை முழிச்சுக்கிட்டு இருக்கறதையே நான் ஞாயிறு தான் பாக்கறேன். இந்தப் பாட்டு என்னைய வாரம் பூரா அவங்களோட வச்சிருக்கிற மாதிரி இருக்கு. எப்படியும் ரயில்ல போற வரப்ப ஒரு தடவையாவது இதை கேட்டுட்டு போனா வீட்டுல கோபம் சண்டை அண்டாது தெரியுமோ” என்றார். அந்த வயதுக்கு எனக்கு எந்தளவு புரிந்ததோ அதற்குரிய அகலத்தில் தலையாட்டினேன்…பல நாட்கள் அவரின் வாக்மேனில் தும்பி வா கேட்டிருக்கிறேன். நல்ல இசை என்பது இறை நோக்கியே நம்மை செலுத்தும். அதாவது நம்முள் இருக்கும் இறைமையை நீர் கண்ட மண்ணிலிருந்து வரும் முளை போல உயிர்க்க வைக்கும். அதையே …

அம்மா…

கிளம்புவதற்காக சற்று நகர்ந்தபின் அம்மாவை திரும்பிப் பார்த்தேன். கூடாது என்று தடுத்த உறவினர்களையும் வெட்டியானின் சைகைகளையும் மீறி மீண்டும் திரும்பிப் பார்த்தேன். திரும்பிப் பார்க்கக் கூடாதா? திரும்பிப் பார்த்தல் அன்றி இங்கு வேறென்ன இருக்கிறது? அடுத்த நொடியின் மீதேறி நிற்க, அதனடியில் இந்த நொடியும், இதுவரையிலான நொடிகளும் தானே ஆதாரம்? திரும்பிப் பார்க்கக்கூடாதாம்…திரும்பிப் பார்த்தேன்…
திரும்பிப் பார்த்தலே காலத்தின் வினை என்பதால் விரும்பி மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். கர்மவெளியில் காற்றுவழியில் அம்மாவின் அடுத்த பயணம் துவங்கி விட்டது என்று அறிவிப்பது போல் புகை மேலெழும்பி பரவத்துவங்கியிருந்தது.

கதை சொல்லியின் ரயில் வண்டி

இவரின் பெரும்பாலான கதைகள் “விவரணம்” செய்யும் பாணியில் இருக்கிறது. அந்த விவரிப்பில் நினைப்பு இருக்கிறது. அந்த நினைப்பில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு, எதிர்பாராத தருணத்தில் உடையும் சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தின் வழியே மீண்டுமொரு நினைப்பு பிறக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாய், இவற்றை ஒன்றுகோர்க்கும் சரடாய் அங்கதம் இருக்கிறது. அந்த அங்கதத்தில் கூட இங்கிதம் தெறிக்கிறது. இவற்றை அவர் நிகழ்த்தும் களமும் நமக்குப் புதிது. பாத்திரங்கள் பிரான்ஸ், கனடா, ஆப்ரிக்கா என்று அன்னிய மண்ணில் நடமாடுகின்றனர். பீவர் மரங்களையும் தேவதாரு மரங்களையும் ரசிக்கின்றனர். ஆனாலும் வாசிப்பவருக்கு எவ்வித அன்னியத்தன்மை தாராது அப்பாத்திரங்களுடன் நடமாடும் ஒரு தேசாந்திரி போல …

சித்தன் போக்கு

“மலையத் தோண்டியா…அதுவும் இந்த மலையையா…” என்று சத்தமா சிரிக்க ஆரம்பிச்சார் அவர். எங்களுக்கெல்லாம் ஒரே எரிச்சலாப் போச்சு. “எதுக்குய்யா இப்படி சிரிக்கிறீங்க” அப்படின்னு என்னோட அசிஸ்டெண்ட் கேட்டான். சிரிப்பை நிறுத்தி எங்களை கூர்ந்து பார்த்த அவர், “கோரக்கர் மச்சமுனின்னு அம்புட்டு பேரு வந்து போற மலையை நீங்க தோண்டி ஆராய்ச்சி பண்ணப் போறீகளோ” என்று ஒருவித கேலியுடன் எங்களை பார்த்து சொன்னபடி பெருங்குரலில் பாட ஆரம்பிச்சார். அந்த அத்துவான பிரதேசத்துல, கொட்டுற மழையில, அந்த பூமிலேந்து குப்புன்னு கிளம்புற வாசத்துல, அவரோட குரலும் சேர்ந்து அப்படியே என்னமோ மயக்கமா கிறங்கடிச்சுச்சு…

ராக நிழல்

அவர் பெயர் குணசீலன். தொழில் தாண்டி அவரின் இசை ஆர்வத்தின் வேர் பல பாடல்களின் அடியில் பரந்து படர்ந்திருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தார் அவர். தலையணை அளவில் இருக்கும் மூன்று தடித்த புத்தகங்களில் அவரிடம் இருக்கும் பாடல்கள் பற்றிய தகவல்கள் அழகான கையெழுத்தில், பதிவு செய்ய வருவோர் பார்த்து செலக்ட் செய்ய வைக்கப்பட்டிருந்தன. அதன் மூலப்பிரதி அவராகவே இருந்தார்.

பெய்யெனப் பெய்யும் மழை

1. ஒப்பு மொழி [compatible language]: கி.பி 2300 வாக்கில் உருவாகி கடந்த நூறாண்டுகளாய் உலக மக்கள் அனைவராலும் பேசப்படும் மொழி.

2. இந்தக் கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் ஒப்பு மொழியில் பேசப்பட்டதாகும். நமக்கு அம்மொழி பரிச்சயம் இல்லை என்பதால் தமிழில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

நொண்டி யானை

அதனை கட்டிக்கொள்ள ஆசையாய் இருந்த எனது குட்டிக் கைகளை அகல விரித்து முன்னோக்கி படுத்தேன்…யானையுடைய தலையின் மேற்பகுதி இரு பாறைகள் இணைந்த குன்று போலவும் அதன் மீது ஆங்காங்கே செங்குத்தாக நின்றிருந்த ரோமங்கள் இலைகள் அற்ற மொட்டை மரங்கள் போலவும் தெரிந்தது. இன்றும், கோடை காலத்தில் மலைப்பிரதேசங்களை கடக்கையில், காய்ந்து கிடக்கும் மலைச்சரிவுகளில் இலைகள் முற்றிலும் உதிர்த்த மரங்களைப் பார்க்கும் பொழுது நொண்டி யானை நினைவில் நின்று தலையை ஆட்டி விட்டுப் போகும்.

அசோகமித்திரனும் காலத்தின் குழந்தைகளும்

க‌தை நாய‌க‌ன் பிடிக்க‌ப் போகும் ர‌யில், ர‌யில் இல்லை. வ‌ய‌தின் பெட்டிக‌ள் இணைக்க‌ப்ப‌ட்ட‌ கால‌த்தின் ஓட்ட‌ம் என்ப‌து போல‌த் தோன்றுகிற‌து. இந்த‌ யோச‌னையின் க‌ங்குக்கு விசிறி வீசுவ‌து போல‌, “இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் ரயிலைப் பிடித்து விட முடியுமா? முடியலாம். ரயிலின் வேகம் குறைவாக இருந்து, தன் வேகம் அதிகமாக இருந்தால். ஆனால் ஒரு சூத்திரத்தின்படி பின்னால் ஓடுகிறவன் முன்னே போவதை எட்டிப்பிடிக்க முடிவதில்லை. இருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

கடல் தின்ற காலம்…

நேரம் ஆக ஆக, கடல் செய்த காரியத்தின் வீரியம் தெரியத் தெரிய ஒரு பெருந்துக்கத்தின் கனம் செய்திகளின் வழியே உள்ளேறத் துவங்கியது. தம்மால் இயன்ற உதவியை செய்யும் பொருட்டு நூற்றுக்கணக்கானோர் பல்வேறு நகரங்களில் இருந்து வடதமிழக கடல் பகுதிகள் நோக்கித் திரள, அத்தகைய குழுக்கள் ஒன்றில் இணையும் பொருட்டு நான் கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்த பொழுது…

ஆச்சரியம் தரும் ஆவுடை அக்காள்

“நாய்க்கு முழுத்தேங்காய் நன்றாய் ருசிக்குமோ?” என்பதில் நாம் சற்று பொருளேற்றம் செய்தால், நமக்கு ருசித்திருப்பதாக நாமே நினைத்துக் கொண்டு, உடைக்கும் வழி அறியாது உருட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை என்னும் முழுத்தேங்காயின் உள்ளிருக்கும் பருப்பை பார்ப்பதற்குத்தான் பல பிறப்போ? என்னும் கேள்வி செறிந்த ஆன்மத்தின் பாதாளத்தில் நாம் விழுந்து விட்டிருப்பதை உணர்வோம்.

இவரின் “வேதாந்தக் கப்பல்” கட்டுமானம் “காயக் கப்பல்” வடிவிலேயே இருக்கிறது. “பஞ்சபூதப் பலகை கப்பலாகச் சேர்த்து” என்று துவங்குவது காயக் கப்பல் சித்தர் பாட்டு. ஆவுடையக்காளோ…

சிதறால் குன்றம் – சிதறாத காலம்

சிதறால் மலை உச்சிக்கு செல்ல, கீழே இருந்து ஒரு கிலோ மீட்டர் நடை தான். ஆனால் புறவெளியை பார்த்தபடி ஏற ஏற மனவெளியில் ஏற்படும் மாற்றங்கள் அளவீடுகளின் பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவை. தொடுவானைத் தூக்கிப் பிடித்தபடி தூரத்தில் தெரியும் மலை முகடுகளில் கண் வைத்தால், விசாலத்தின் உணர்வு மனது முழுவதும் ஊடுருவ, முதலில் நாம் அணிந்திருக்கும் நிகழ்காலத்தின் சட்டையை உரித்துப் போட்டு முன்னே நழுவுகிறது நமக்குள் இருக்கும் கால நாகம்.

தீக்குள் விரலை வைத்தால்

“பூவே செம்பூவே”…வயலினில் வழிந்த துயரத்தின் சாயல் கிடாரில் தேங்கி அதை கப்பாஸ் ஒற்றி எடுத்துக் கொண்டிருக்கும் முதல் சரணம் முடிகின்ற நேரம்…சட்டென்று அவர் எழுந்து தெருவின் குறுக்கே கடந்து எதிர்புறத்தை அடைந்தார். ஓவியம் இருந்த இடத்தில், அதன் கோடுகளை அவர் அறிந்த விதத்தில், விரல்களை நகர்த்தினார். கோடுகளின் பாதையில் விரல்கள். விரல்களின் போகும் பாதையெங்கும் நினைவின் பரல்கள் சிதறியிருக்கக் கூடும். அந்த சிதறல் நிகழ்ந்த நொடிகளைத்தான் இந்தப் பாடலின் ஒலியில் கடந்து கொண்டிருந்தாரோ அவர்? கோடுகளின் பாதையில் சென்ற விரல்கள் தாள‌ முடியாத நினைவின் வலியில் துடித்தனவோ?

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்

“இப்போ நான் பாடப் போற பாட்டு, முருகன் அருள் இருந்தால் மட்டுமே பிழையில்லாம பாட முடியும்” என்று சொல்லி விட்டு ஆரம்பித்தார் “முத்தைத்திரு பத்தித் திருநகை…”. அருவிக்கு படிகள் அமைத்து அதன் மீது தண்ணீரை இறங்கி வரச்சொன்னால் எப்படியிருக்குமோ அப்படி தமிழ் பெருகி தடதடவென்று அருவியென வருவது போல ஒரு அற்புதத்தை அர்த்தம் புரியாத பொழுதிலும் உணர்ந்தேன் நான். ஆகாய அகலத்தின் ஒரு பகுதியை பெயர்த்து வைத்தது போன்று நீண்டு அகண்டிருந்த‌ ஆடி வீதியில், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளிலிருந்து வெளிப்பட்டு கோயில் முழுவதும் பிரவாகமாக பெருக்கெடுத்தோடியது அந்தப் பாட்டு.

லா.ச.ரா – காலத்தின் மொழி

லா.ச.ரா நமக்கு சுவைக்கக் கொடுத்தவை கதைகள் அல்ல. “உணர்வு” என்ற ஒற்றைச் சொல்லின் பொருளை அணுஅணுவாய் பிளந்து கொண்டே போய், அது பிளக்கும் கனங்களின் ஆன்ம ஒலியை காலத்தில் வடிகட்டி, சொற்களுக்குள் திணித்துக் கொண்டே போய், அதிலேயெ வார்க்கப்படும் வரிகளுக்கு வடிவம் செதுக்கி…காகிதக் கூழில் எடுத்த நம் ஞாபகப் பிரதிகள்!

இசைபட வாழ்…

செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, “நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது”. எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம்வரை நடந்து வருவோம். சரியான இடங்களில், தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை “ஹம்” செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.