விட்டல் ராவ் சிறுகதைகள்
விட்டல் ராவ் சிறுகதைகள் அத்தனையும் முத்துக்கள். வெகு சுவாரசியமானவை. தோள் மீது கைபோட்டு வாசகனை வாஞ்சையாய் அவை தன்னுள்ளே அழைத்துச்செல்லும் படைப்புகள். சிறுகதையைப் படித்து முடித்த பின் நம் சிந்தனையில் அமர்ந்து கொள்ளும் ஈர்ப்பு கொண்டவை. எளிய மனிதர்களின் கண்ணுக்கு முன்னே காட்சியாகும் அத்தனையும் விட்டல் ராவுக்கு கதைக்கருக்களாய்ப் போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றன. எதனையும் வலிந்து செயற்கையாய் வாசகன் முன் நிறுத்திச் சோதனைக்குட்படுத்தும் பாணி விட்டல் ராவுக்கு அந்நியமானது. விட்டல்ராவின் சிறுகதையை வாசிப்பது நம் சொந்த சித்தப்பன் அத்தைமாரோடு அரசமரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற சுகானுபவத்தையே பிரத்யட்சமாக்கும்.

விட்டல்ராவின் ஐந்து சிறுகதைத் தொகுதிகளின் உள்ளடக்கத்தை சந்தியாபதிப்பகம் ‘விட்டல்ராவின் சிறுகதைகள்’ என்கிற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கியப்பணி ஆற்றியிருக்கிறது. வணிக மயமான சமூகச் சூழலில் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் படைப்பாளருமாகிய சந்தியா நடராஜனின் இலக்கிய சேவை வரவேற்புக்குரியது. இரண்டு தொகுதிகளிலும் சேர்த்துத் தேர்ந்த சிறுகதைகள் 116 வாசகனுக்குக் கிடைத்துவிடுகிறது.
மரியாதைக்குரிய எழுத்தாளர் பாவண்ணன் ‘புதிர்த்தருணங்களின் காட்சி’ என்று தலைப்பிட்டு அணிந்துரை ஒன்றை இதனில் வழங்கியுள்ளார்.
‘காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள் காலில் காட்டைத்தூக்கிக்கொண்டு அலைகின்றன என்பது தேவதச்சனின் கவிதைவரி. வண்ணத்துப்பூச்சிகளைப்போல இந்த வாழ்க்கையும் தன் கால்களில் மட்டுமின்றி தோள்களிலும் தலைகளிலும் புதிர்களைச் சுமந்துகொண்டு அலைகின்றன.காலம்தோரும் படைப்பாளர்கள் அப்புதிர்களைக்காட்சிப்படுத்தியபடி இருக்கிறார்கள்.ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக படைப்புலகில் இயங்கிவரும் மூத்த எழுத்தாளர் விட்டல்ராவின் சிறுகதைகளில் அத்தகு தருணங்கள் ஆழ்கடலில் முத்தென அமைந்திருக்கின்றன.’ என்று தொடங்குகிறார் பாவண்ணன். முத்துக்கள் சிலதை நாம் தரிசிப்போம்.
தனது முன்னுரையில் விட்டல்ராவ் இப்படிக் குறிப்பிடுகிறார்.
‘நான் ஏறத்தாழ 160 சிறுகதைகளை இருக்கும் பல்வேறு இதழ்களில் எழுதியிருக்கிறேன். அவற்றிலிருந்து நான் தேர்ந்தெடுத்தச் சிறுகதைகளே என்னுடைய ஐந்து தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சொற்ப அளவு கதைகள் வணிக இதழ்களில் வெளியானவை. இத்தொகுப்பில் பல கதைகள் எனக்கு அந்நியோன்மாய் உகந்த கதைகள். அவற்றில் நான் முக்கியமாய் நினைக்கும் கதைகளில் ‘தேடல் ‘ என்பது ஒன்று.’
ஆக அவரின் தேடல் என்னும் சிறுகதையிலிருந்து நாம் தொடங்குவோம். நா.பா வின் தீபம் இதழில் 1980ல் வெளிவந்த சிறுகதை. தங்கம் வெள்ளி ஷராப் கடை முன்னால் ஓடும் சாக்கடையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் விட்டல் ராவ். கடைகளுக்கு எல்லாம் விடுமுறை. சாக்கடை விடுமுறை எதுவுமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. தட்டாரத்தெரு கன்னிகாபரமேஸ்வரி கோயில் அக்கிரகாரம் வியாசராயர் மடம் திருமணிமுத்தாறு என சாக்கடை தாண்டித்தாண்டிதான் போய்க்கொண்டே இருக்கிறது. சாக்கடை இறுதியில் திருமணிமுத்தாற்றில் வீழ்ந்து அதனையும் தனது ஆளுகையின் கீழ் கொணர்ந்து விடுகிறது. ஆற்றையும் சாக்கடையாக மாற்றும் செய்தி நமக்குச் சொல்லப்படுகிறது. சாக்கடையை ஒட்டி அமைந்திருக்கும் ஒன்றிரெண்டு பெட்டிக்கடைகளும் தேனீர் விடுதியும் விடுமுறை எதுவுமின்றி வாரமெல்லாம் திறந்தே கிடப்பவை. பெயருக்கு விடுமுறை என்று காட்டிவிட்டு ஷராப் கடைகள் வேலை செய்துகொண்டுதான் இருக்கின்றன . சாரமற்ற சட்டங்களின் சாத்தியப்பாடு பற்றி வாசகனுக்கு விஷயம் சொல்லப்படுகிறது.
சாக்கடையைச் சலித்துத் தம் வயிற்றுப்பசிக்கு ஏதும் கிடைத்து விடுமா என்கிற ஆசையில் களம் இறங்கியிருக்கின்ற ஒரு ஏழைக்குடும்பத்தை நம் கண் முன்னே காட்சியாக்குகிறார் விட்டல்ராவ். கைக்குழந்தைக்குப் பாலுட்டிவிட்டு அக்குழந்தையை ’ கடையின் நிழலில் வெறுந்தரையை வாயால் நன்றாக ஊதிவிட்டுப்படுக்கப் போட்டு விட்டுத் தன் தலையை மூர்க்கத்தனமாய்ச் சொரிந்தபடி அவனருகில் வந்து அவள் நிற்கிறாள்.’ பையன் சாக்கடையில் இறங்கிக் கற்களைப்பொறுக்கிச் சேது பந்தனம் கட்டுகிறான்.’ சேது பந்தனம் என்கிற புராணப் பெரு வார்த்தையை துர்நாற்றமெடுத்து ஓடும் தெருச்சாக்கடைக்கு அழைத்து வந்து விடுகிறார் விட்டல். தாய் மகன் தந்தை மூவரும் சாக்கடை நீரைச் சலிக்கத்தொடங்கி விடுகின்றனர் சாக்கடை அள்ளிப்போடும் முனிசிபல் தொழிலாளர் வருகிறார். அவரை இந்தக்குடும்பம் சற்றுத்தள்ளிபோய் வேலை செய்யுயுமாறு வேண்டிக்கொள்கிறது. அவரும் அப்படியே செய்கிறார். சாக்கடை சலித்தலில் உடைந்த பிளாஸ்டிக் ஊதல், பவுடர் டப்பா மூடி,, பேனா நிப் என்று வரிசையாய்க் கிடைக்கின்றன. சாக்கடையில் இருக்கும் பையன் ‘ யப்பா .. யப்பா..’ ஆச்சரியப்பட்டு நிற்கிறான். பயன்படுத்தப்பட்டதோ என்னவோ நிரோத் ஒன்று பையன் கையில் கிடைக்கிறது. தந்தை சனியனைக் கீழே போடச்சொல்கிறான். அவன் நடுங்கிப்போய் கீழே போடுகிறான். அது அடித்துக்கொண்டு அவளிடம் வருகிறது.’தென்னாது லப்பரு?’ என்கிறாள்.
’அதான் போட்டுகினா புள்ள உண்டாவாது’ என்று பளிச்சென்று அவன் சொல்கிறான். கண்ணைச்சிமிட்டுகிறான். ’ அதெல்லாம் நம்ப மாதிரி ஆளுங்களுக்கு இல்லே.ஆபிசுக்கு போறதுங்க , சம்பளம் வாங்கித் தின்றதுங்க பார்க்கவேண்டிய சாஸ்திரம் சங்கதி…எனக்குமொனக்கும் எத்தினி பொறந்தா ஒனக்கென்ன கவலை, எனக்கென்ன கொற? தெல்லாத்தையும் சாக்கடையள்ளறதுக்கு உட்ர மாட்டனா’ அவன் பதில் சொல்கிறான். அடித்தட்டு மக்களின் மன நிலையைப் படம்பிடித்துக் காட்டி வாசகனைச் சொக்க வைக்கிறார் விட்டல் ராவ். திடீரென்று அவர்களுடைய சலித்தலில் பள பளக்கும் உலோகத்துகள் கிடைக்கிறது. அது தங்கம் இல்லை என அவள் முகர்ந்து பார்த்துச் சொல்கிறாள். அவன் அதனை எடுத்துக்கொண்டு தட்டாரின் வீட்டுக்கு ஓடுகிறான். அங்கு அது தங்கம் இல்லை என்று முடிவு சொல்கிறார்கள். மீண்டும் சாக்கடை சலிப்புத் தொடர்கிறது. கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் கவாஸ்கர், கபில் என்று எண்ணிக்கொண்டவர்கள் பந்து பொறுக்கச் சாக்கடைப்பகுதிக்கு வருகிறார்கள். ஏதுமற்றவர்களால் அவர்களை ஒன்றும் சொல்லமுடியாமல் போகிறது. உழைப்பு தொடர்கிறது. பலன் பூஜ்யம்தான். இல்லை என்கிற விஷயமே அவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்கிறார் விட்டல். ஆயினும் அவர்களின் உற்சாகம் மட்டும் குறைந்தபாடில்லை. சாக்கடையில் விழுந்த பந்தால் அவர்களின் முகமெல்லாம் சாக்கடை துர் நீர். பந்து வேகமாக வந்து அவர்களின் சட்டியை உடைத்துத் தூளாக்கிவிடுகிறது. கதையின் கடைசி வரி இப்படி வருகிறது.
‘வாளே, போவுலாம். இன்னொரு நா வந்து பாக்கலாம்’ என்கிறான் அவன். அவர்கள் அடுத்த நாளைக்கு வேறு தெருவின் சாக்கடையை நிச்சயம் செய்தபடி எழுந்து நடந்தார்கள். சிறுகதை முடிந்து போகிறது.
‘கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இன்னதென்ற அறிவுமிலார்’ பாரதி சொல்லிச்சென்றது எங்கிருந்தோ வந்து வாசகனுக்குக் காதில் ஒலிக்கவே செய்கிறது.
பாவண்ணன், விட்டல் ராவ் எழுதிய கதைகளில்’ அவளுக்கும் அவனுக்கும் இடையே’ என்னும் சிறுகதையை மிகவும் முக்கியமான ஒன்று என்கிறார். அங்கம்மா என்கிற இளம்பெண் தன் குழந்தையோடு கிராமத்தில் வசித்து வருகிறார். அவளின் கணவன் ஆசாரியாய் அபுதாபியில் வேலை செய்கிறான். அவனிடமிருந்து பணம் தொடர்ந்து வருகிறது. ஆனால் கடிதம் எதுவும் வருவதில்லை. ஆசாரியின் மனைவி அடுத்த தெருவில் படிப்பறிவு கொண்ட ஒருவனை வைத்துக் கடிதம் எழுதி எழுதிப்போடுகிறாள். போட்டுமென்ன கணவனிடமிருந்து பதில் எதுவும் இல்லை. அவள் அவனோடு பேசிக் கடிதம் எழுதச்சொல்வதை ஊரார் கேலி பேசுகின்றனர். வக்கிரமாய் கணக்குப் போடுகின்றனர். மனித இயல்புதானே அது. பாலியல் சங்கேதம் விடை காணா ஒன்று. இருப்பின் என்ன? அங்கம்மா திரும்பவும் அவனிடம் செல்கிறாள். தன் கணவனுக்குக் கடிதம் எழுத வேண்டுகிறாள். அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. அவள் சொல்வதை எல்லாம் அவன் கடிதத்தில் எழுதிவிடுகிறான். தன் போக்கில் தனக்கு மனதில் தோன்றிய சிலதையும் சேர்த்துக் கடிதத்தில் எழுதி முடிக்கிறான். கடிதம் கணவனை அடைகிறது. கடிதம் கண்ட சில நாட்களிலேயே அங்கம்மாவின் கணவன் வெளிநாட்டிலிருந்து ஊர் வந்து சேர்கிறான். கணவன் கொண்டு வந்த வெளிநாட்டு சட்டையொன்றைப் பரிசாகக் கடிதம் எழுதிய அவனுக்கு அங்கம்மா கொண்டு அன்போடு தருகிறாள். பாவண்ணன் சொல்கிறார்,’
அங்கம்மாவின் கடி தவரிகளோ வேண்டுகோளோ மட்டும் அவன் ஊருக்குத் திரும்பி வருவதற்கான காரணமல்ல. அங்கம்மாவின் சொற்களுக்கு அப்பால் அவன் எழுதிய கூடுதல் சொற்களே முக்கியக் காரணம். அதன் கூர்மையும் அழுத்தமும் தாங்காமல்தான் அவன் வெளி நாட்டிலிருந்து வேக வேகமாகத் திரும்பிவிட்டான். அது தெளிவாகத் தெரிகிறது.ஆனால் அவனை வரவழைக்கும் வகையில் என்ன எழுதியிருப்பான் என்பது புதிராகவே இருக்கிறது.’ கதையில் புதிராகவே விடப்பட்டுள்ளது என்பதுதான் கதையின் வெற்றி. அந்த மெளனமே விட்டல்ராவின் சிறுகதைக்கலை என்கிறார் பாவண்ணன்.
விட்டல்ராவின் கதைகள் அனைத்துமே ஒரு புதிரொன்றைச் சுமந்து படைக்கப்படுகின்றன. வாசகனுக்கு அந்தப்புதிரை அவிழ்த்துப்பார்க்கும் வேலை கொடுக்கிறார் விட்டல்ராவ். வாசனைத் தன் உணர்வோடு இணைத்துக்கொண்டு’ போதலில் அவரின் எழுத்துத் தனித்துவமாய் அமைகிறது.
’அவர் நினைவாக’ என்கிற சிறுகதையொன்று குங்குமத்தில் (1979) வெளியாகியிருக்கிறது. கந்தசாமியின் தகப்பன் இறந்து கிடக்கிறான். அந்தத் தகப்பனை ஊரே படையாச்சி என்றுதான் அழைத்திருக்கிறது. பறைமேளங்கொட்டிகள் தோலைச்சூடாக்கி அடித்து அடித்துப் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த கோவிந்தசாமி படையாச்சிக்கு ஒரு கூத்தியாள் இருக்கிறாள். அவளுக்குப் பிறந்த பிள்ளை ரத்தினம். அவனும் படையாச்சி தனக்குத் தந்தை ஆயிற்றே என்று எழவு வீட்டுக்கு வந்திருக்கிறான். அவனின் தாய் அவனை அனுப்பி வைத்திருக்கிறாள். ஒரு கூத்தியை வைத்துக்கொள்வது ஒரு ஆடவனுக்கு பெரிய கெளரவமாக ஊரார் பேசிக்கொள்கிறார்கள். ரத்தினம் ஒண்டியாய் வரவில்லை. அவனோடு நாலைந்து பேர் சகா வந்திருக்கிறார்கள். எழவுக்கு வந்த சனம் கூத்தியா பெற்ற பிள்ளை ரத்தினத்தை மாறி மாறி பார்த்து மகிழ்ந்து போகிறார்கள். கூத்தியாளின் நிறம் சிவப்பு. அதே நிறத்தில் ரத்தினம் இருப்பதைப் பெருமையாகப் பார்க்கிறார்கள். கந்தசாமி தனக்குச் சகோதரனான ரத்தினத்தையும் வாஞ்சையாய் அழைத்து வந்து சவத்திற்கு அருகே நிற்கிறான். படையாச்சிக்கு வீட்டில் போட்டோ எதுவும் இல்லை. சவத்தையாவது ஒரு போட்டோ எடுத்துவிடவேண்டும் எனக் கந்தசாமி ஆசைப்படுகிறான். ரத்தினசாமி அதற்கான ஏற்பாட்டோடு அங்கே வந்திருக்கிறான்.
‘கூத்தி ஷோக்கு வச்சிகிறதுக்கும் ஒரு தெகிரியம் ஒரு அந்தஸ்து வேணும்டா யப்பா?’ என்று பேசுகிறது எழவுக்கு வந்த ஒரு கிழம்.
‘இருந்தாக்கூட மித்தவங்க மாதிரி, வூட்டுப்பக்கமே வராமயோ வூட்டையே கெவுனிக்காமயோ இருந்திடலே ராமாயிக்குத்தான் என்ன கொறவச்சாருங்கறென்?’ என்கிறது மற்றொரு கிழம். ராமாயிதான் கோவிந்தசாமி தாலி கட்டிய மனைவி. சம்பாஷணைகளை தத்ரூபமாகத் தரவல்லவர் விட்டல். சேலம் வட்டாரத்துத்துச் சனம் பேசும் பேச்சு அவருக்குத் தங்குதடையில்லாமல் எழுத்தில் வெளிப்படுகிறது.
கோவிந்தசாமியின் சடலத்தை நாற்காலியில் உட்காரவைத்து போட்டோ எடுக்கிறான் ரத்தினம். சவத்தை நாற்காலியில் உட்காரவைப்பதற்கு ஏகப்பட்ட முஸ்தீபுகள் நிறைவேறுகின்றன.
கோவிந்தசாமி படையாச்சி ஒரு முறை தன் மகன் கந்தசாமியைத் தன் கூத்தி தங்கமணி வீட்டிற்கு அழைத்துப்போனார். கந்தசாமி அப்போது சிறுவன். கந்தசாமிக்குத் தலைமுடி நீட்டமாக இருந்தது. அதனை சீவிச் சிங்காரித்து அனுப்பினாள் தங்க மணி. அதிரசம் சுட்டுக்கொடுத்தாள். அங்கு நடந்த மொத்த விஷயத்தையும் விவரமில்லா கந்தசாமித் தன் தாய் ராமாயியிடம் சொல்லிவிட்டான்.. கந்தசாமிக்குப் பூசை கிடைக்கிறது. ராமாயி அழுதாள். அரற்றினாள்.. இவை அதனையும் சாவு வீட்டில் கந்தசாமியின் மனதில் காட்சியாக ஓடுகின்றன. கதைக்குள் ஒளிந்திருக்கும் கதையை அவிழ்த்துச்சொல்வதில் விட்டல்ராவுக்கு அத்தனை இலாகவம்.
ரத்தினத்திடம் தன் தந்தை சவத்தின் படமொன்று வேண்டுமென்று கேட்கிறான் கந்தசாமி. அவன் அதற்கு இசைவு சொல்கிறான். அவன் தன் சகாக்களோடு கிளம்பிவிடுகிறான். அவன் தான் கூத்திப்பிள்ளையாயிற்றே. கந்தசாமி தன் தந்தையின் சவப்போட்டோ வேண்டுமென்று ரத்தினத்திடம் பல்லைக்காட்டிக் கெஞ்சிக்கேட்டது தனக்கு அவமானம் என்று எண்ணுகிறான். சிறுகதையில் மனித மனங்கள் படும் சின்ன அவஸ்தையைப் புட்டு புட்டு வைக்கிறார் விட்டல்ராவ்.
மரி சுவாமிகள் என்கிற தலைப்பில் ஒரு சிறுகதை மிக சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. சுவாமிகளுக்கு ஐந்து முடிந்து ஆறு வயது தொடங்குகிறதாம்.இன்று பட்டாபிஷேகம் என்று சொல்கிறார்கள். கல்விப்பயிற்சி பிற சாத்திர போதனையெல்லாம் ஆரம்பிக்கப்போகிறார்கள். அதையொட்டித்தான் இந்தத் திருவிழாக் கொண்டாட்டம். ஐநூறு மைலிலிருந்தும் ஜனங்கள் வருவார்களாம். தொடர்ந்து வருகிறது பால சுவாமிகளுக்கு பாத பூஜை . அதற்கான ஒலிபெருக்கி அறிவிப்பு. பதினெட்டு வயது வரைதான் பாலசுவாமிகளுக்குச் சிறப்பு பட்டமெல்லாம். பிறகு வேறு மடத்திற்கு மாற்றி அனுப்பிவிடுவார்களாம். மறுபடியும் ஒரு பாலசுவாமி பதவிக்கு ஏற்பாடாவாராம். இப்படிப்போகிறது மரி கதை. பால சுவாமிகள் பயணத்தின் போது கோலி குண்டு அடித்து விளையாடும் சிறுவர்களைப்பார்த்து விடுகிறார். அவருக்கும் குண்டு விளையாடும் ஆசை தொத்திக்கொள்கிறது. குண்டு விளையாட்டிலே ஜெயித்தவன் பாடும் பாட்டை நமக்கு விட்டல்ராவ் சொல்லிச்செல்கிறார்.
அஞ்சிலே குஞ்சம்,அறுவக்கத் தகடி,எழுவக்கமைனா,எட்டாச்சி கோட்டை,,தொம்பம்பேட்டை,தொசிக்கிட்டி ராஜா என்று ஜெயித்தவன் பாட்டாய்ச் சொல்ல தோற்றவன் வரக் வரக்கென்று முட்டி இழுத்துத் தேய்ந்து போகிறது. விளையாடும் பையன்களோடு பாலா சாமி சேர்ந்துகொள்கிறார். கோலி விளையாடும் சிறுவர்கள் பயந்து போகிறார்கள். குண்டு விளையாட்டில் சுவாமி தோற்றுப்போகிறார். கூட வந்த பெரியவர்கள் சுவாமியை கையைப்பிடித்து அழைத்துப்போகிறார்கள். சுவாமி விளையாடிய கோலிக் குண்டை வீசித்தான் எறிகிறார்கள்.
ஏதுமறியா சிறுசுகளை சாமியாக்கித் தூக்கிச் சுமக்கும் சமூக மெளடீகத்தைச் சாடுகிறார் விட்டல்ராவ்.
பன்றி என்னும் தலைப்பில் விட்டல்ராவ் எழுதிய கதை மிகச்சிறப்பானது. கதைசொல்லியின் வீடு வாடகை வீடு. அந்த வீட்டிற்கு அருகே பெரிய பெரிய புதர்கள். அதனில் சில பன்றிகளின் வாசம். ஓயாத உறுமல் ஒலி அது கேட்டுக்கொண்டே இருக்கிறது. பன்றியின் உரிமையாளர்கள் எங்கோ தொலைவில் வசிக்கிறார்கள். எப்போதேனும் வந்து பன்றிகள் இருப்பை உறுதி செய்துகொள்வார்கள். ஒரு சமயம் ஒரு பன்றி எட்டு குட்டிகளை ஈன்றது. அனைத்தும் தாய்ப்பன்றியிடம் பால் குடித்தன. மூன்று குட்டிகள் செத்துப்போயின. ஒரு குட்டி நோயால் மெலிந்து போகிறது. அது வாழ வேண்டாம் என முடிவு செய்து தாய்ப்பன்றியே அதனைக் கொன்றுவிடுகிறது. ஆனால் எங்கிருந்தோ வந்த புதிய பன்றிக்குட்டிக்குத் தாய்ப்பன்றி பால் கொடுக்கிறது. அது வாட்ட சாட்டமாய் வளர்கிறது. பன்றி உரிமையாளர்க்கு அது ஒப்ப முடியாமல் போகிறது. அதன் காதுகளைப்பிடித்து குற இணையர் பேனாக்கத்தியால் அறுத்து விடுகிறார்கள். தாய்ப்பன்றியும் ஏதோ ஒரு அறத்தை மேற்கொண்டு வேறு ஒரு பன்றியின் குட்டிக்குப் பால் கொடுக்கிறது என்கிற அரிய செய்தியை நமக்குச் சொல்கிறார் விட்டல்ராவ். பன்றிகள் ஊர் சுகாதாரம் பேணும் ஜீவன்களாக வலம் வருகின்றன. அவைகள் இங்கே லட்சுமம்மாக்கள் ஆகின்றன. எது எப்படி இருந்தால் என்ன வாடகை வீட்டுக்குச் சொந்தக்காரன் எந்த வசதியும் செய்யகொடுக்க மறுக்கிறான் என்று மனித வக்கிரத்தை எழுத்தில் வரைந்து காட்டுகிறார் கதாசிரியர்.
’கல்யாணமான முத்தம்மா’ என்று ஒரு சிறுகதை. ஏழாம்வகுப்பு படிக்கும் முத்தம்மாவுக்குத் திருமணம் கூடிவிடுகிறது. திருமணத்தை முடித்துக்கொண்டு அந்தக் குழந்தை வகுப்புக்கு வருகிறாள் . வகுப்பு மாணவர்கள் ஒருத்தர் பாக்கியில்லாமல் முத்தம்மாவைக் கேலி பேசுகின்றனர். தேவபிச்சைதான் வகுப்பாசிரியர்.பிரம்பால் மாணவர்களை அடிப்பது என்பது அவருக்குச் சர்வ சாதாரணம். வகுப்பில் ஒவ்வொரு மாணவனும் தேவபிச்சையின் அடியை ஒவ்வொரு விதமாய் எதிர்கொள்கின்றனர். அடியைக்கண்டு மிரளாதவள் இந்த முத்தம்மா. தான் அடி வாங்குவதற்காகவே பூமியில் பிறந்திருப்பதாய் எண்ணுகிறாளோ என்னவோ அவளை நோக்கிப்.பிரம்பு பாய்ந்து வரும்போது மிரண்டு விடமால் அடியை வாங்கிக்கொள்வாள். அடி வாங்கிய கை வலிக்கும். அதனை ஒரு ஊது ஊதிவிட்டுக்கொண்டு தன் இருப்பிடம் சென்றுவிடுவாள். பிரம்பை ஓங்கி நிற்கிறார் தேவபிச்சை. முத்தம்மா சொல்கிறாள்.’நா நாளையிலேந்து இஸ்கூலுக்கு வரமாட்டேன் சார். அவுங்க இஸ்கூல்லேந்து நின்னுக்கச் சொல்லிட்டாங்க’
தேவபிச்சை ஓங்கிய பிரம்பைத் தாழ்த்திக்கொண்டு கேட்கிறார்.
‘ஆரு?’
‘எங்கூட்டுகார்ரு சார்’ என்றாள் முத்தம்மா. அதோடு விடவில்லை முத்தம்மா.
‘நாளைக்கு அவுங்களே இஸ்கூலுக்கு வந்து சொல்லிக்குவாங்களாம் சார்’ முடித்து வைக்கிறாள். பிள்ளைகள் அவளையே திரும்பத்திரும்பப் பார்க்கின்றனர். தேவபிச்சை பிள்ளைகளை ஆட்சேபிப்பதை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டார் என்று முடிக்கிறார் விட்டல்ராவ். முத்தம்மாவை நினைக்க நினைக்க வாசக மனம் கனத்துத்தான் போகிறது. 1981ல் குங்குமத்தில் பிரசுரமான கதை இது.
சட்டிச்சாமி என்கிற சிறுகதை என்னை மிகவும் பாதித்த கதை . சமூக எள்ளலை இப்படைப்பில் விட்டல்ராவ் எப்படிக் கையாள்கிறார் என்று பார்க்கலாம். சட்டிச்சாமியைப்பற்றி சரியாகப் பேச வேண்டுமென்றால் உள்ளூர் பூகோள அறிவும்,தரும சிந்தையும் இருக்கவேண்டும். தருமம் என்பது பிறருக்குத் தந்துதவும் அறிவுரையல்ல கும்பலோடு கலந்து பிறர் தருவதை வாங்கிக்கொள்வது. தருமத்தின் இருமுனைகளில் ஒன்றைப்பற்றிக்கொண்டால் சட்டிச்சாமியின் தரிசனத்திற்கு ஆளாகமுடியும் என்கிறார் விட்டல்.
மலையும் மலை சார்ந்த இடமுமாகியது குறிஞ்சி. அந்நிலத்தில் ஒரு முருகன் கோயிலில் சட்டிச்சாமியார் தங்கியிருந்தார். கள்ளங்கபடமற்ற முகம் அவருக்கு. எப்போதேனும் அவர் சிரிப்பார். பேச்சுவராத குழந்தை தான் கழித்த சிறுநீரிலேயே அளைந்து புரண்டு பூசிக்கொண்டு பிறர் படும் அசிங்க உணர்வைக் கண்டும்புரிந்து கொள்ளாததாய் சிரிக்குமே அந்தத் தோற்றம். திருகு திருகாய் ஓடு அகன்ற புளிபோன்ற செம்பட்டைச்சடை. கோவணம் மட்டுமே ஆடை. பழுப்பு நிறதேகம். ஆடையையும் பிறர்தான் கட்டிவிடவேண்டும். பல் துலக்கல் குளியல்,ஓய்வு ,உறக்கம், சிந்தனை,பேச்சு, அறிவுரை, எதுவுமே கிடையாது. அந்த முருகன் கோயிலில் சாம்பார்சாதமும் தயிர்சாதமும் மக்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். சட்டிச்சாமி தன் பங்கிற்கு மண் சட்டி ஒன்றை வைத்துக்கொண்டிருப்பார். முக்காலுக்கு அதனில் குழம்பு சோறு இருக்கும். சட்டியை அவர் இழுத்துக்கொண்டும் தூக்கிக்கொண்டும் அங்குமிங்கும் அலைவார். சன்னிதானத்துக்கு அருகிலும் பலிபீடத்துக்கு அருகிலும் போய் உட்கார்ந்து சட்டியில் கையை விட்டு விட்டு நக்கிக்கொண்டிருப்பார்.’சுவாமியோவ்’ என்று ஜனங்கள் அவருக்குக் கரம் குவிப்பார்கள். தம் குழந்தைகளை அவர் காலடியில் போட்டு ஆசி வாங்குவார்கள். தைப்பூச நாளன்று அக்கோவிலுக்கு ஆன்மிக சொற்பொழிவாற்ற ஒரு சான்றோர் வருகை தருகிறார். சைவச்செருக்கு அவருக்கு. அழகு கூடிய ருத்திராட்ச மாலை கழுத்தில் மின்னியது. சட்டிச்சாமி ஏனோ அன்று யாருக்கும் சோறு போடவில்லை. சொற்பொழிவாளர் சிறிது நேரம் பார்த்தார். வேறு ஒரு நிகழ்ச்சி அவருக்கு இருப்பதாய்ச்சொல்லிப் புறப்பட்டார். வந்தவர்கள் அன்னதானம் பெறாது கலைந்துகொண்டிருந்தார்கள். சட்டிச்சாமி சிரிக்காத்தால் அன்று சோறு யாருக்கும் விநியோகிக்கப்படவில்லை. கோவிலில் குழம்பு சோறு மீந்து கெட்ட வாடை வந்தது. பின்னர் சட்டிச்சாமி காட்னாம்பட்டு மலைமீதேறி நின்றது. ஊர்ஜனங்களும் போலிசும் அவரை தரைக்கு வந்துவிட வேண்டுகோள் விடுத்தனர். சட்டிச்சாமி எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. சட்டிச்சாமியிடம் ஊர் மக்கள் மன்னிப்பு கோறினார்கள்.’ கால்ல வுழுறோம், காவடி தூக்கறோம்’ என்றார்கள். ஆனால் சட்டிச்சாமி அழுதது. முதன் முதலாக அன்றுதான் அழுதது. இறுதி அழுகையும் அதுவே. மலையினின்று வழுக்கிக் கீழே வீழ்ந்த சாமி செத்துப்போனது.
சட்டிச்சாமியின் ரிஷி மூலத்தைக்கண்டறிந்து வெண்பாக்களால் ஆன புத்தகம் ஒன்றை ஆக்கி அச்சேற்றி கோயிலில் விநியோகித்தார்கள். அந்த சாமிக்குத் தானே மெய்யடியான் என்று கூறிக்கொண்ட ஒருவர் சட்டிச்சாமிக்குச் சமாதி கட்டும் திருப்பணி மேற்கொண்டார்.
அன்னதானம் மட்டும் இன்றும் நாளையும் காட்னாம்பட்டியில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் விவரமறியா ஏமாளித்தனத்தை, போலிச் சாமியார்களின் முகமூடியை வாசகர்கள் தரிசிக்க விட்டல்ராவின் சிறுகதை ஆதாரமாகிறது. நாஞ்சில்நாடனின் எள்ளல் எழுத்து நம் நினைவுக்கு வந்து போகிறது. 1992ல் கவிதாசரணில் வெளிவந்த படைப்பு இது.
ஒத்திகை என்று ஒரு சிறுகதை 1993ல் இந்தியா டுடே யில் வெளிவந்திருக்கிறது. பள்ளிக்கூடத்தில் ஒரு நாடகம் குறித்த ஒத்திகை. அது முதலில் சாதாரண உடையில் நிகழ்ந்தது. பின் அவரவர்கள் போட்டுக்கொள்ளவேண்டிய சரியான உடைகளைப்போட்டுக்கொண்டும் நடந்தது. அது யூசுஃப் என்னும் நாடகம். யூசுஃப்பின் ஒரே மகனை யாரோ கொன்றுவிடுகிறார்கள். கொலைகாரனைக் கண்டுபிடித்து பழிவாங்க தந்தை பாலைவனத்தில் கூடாரமடித்துக் காத்திருக்கிறான். அப்போது சிப்பாய்கள் துரத்த ஒருவன் யூசுஃப்பிடம் அடைக்கலம் கேட்டுத்தங்குகிறான். உயிர் தப்புகிறான். மாற்றுடையும் பணமும் குதிரையும் பெற்றுக்கொண்ட அவன் யூசுஃப்பின் காலில் விழுந்து தன்னைக்கொல்லும்படிக் கெஞ்சுகிறான். யூசுஃப்ப்பின் மகனைக்கொன்றது தான்தான் என்கிறான். அடைக்கலமென்று வந்தவனைக்கொல்ல மறுக்கிறான். யூசுஃப். அவனைத் தப்பிச்செல்ல மட்டுமே அனுமதிக்கிறான். இதில் கொலையாளியாக நடிப்பவன் ஜெகதீசன்.
ஒத்திகைக்கான உடைகள் இருக்கும் அறைக்கு ரெவரெண்டு எபினேசர் சாமியார் நாடகத்தில் நடிக்கும் மாணவர்களை அழைத்துச்செல்கிறார். கிறித்துவப்பள்ளிதானே அது. அங்கு ஜெகதீசன் ஒரு ஓவர்கோட்டைக்காண்கிறான். கோட்டுக்குப்பித்தளைப்பொத்தான்கள் அழகு செய்தன. அதனில் பிரிட்டீஷ் அரசு முத்திரை சிங்க உருவம் கொலுவிருந்தது. ஜிகினா பார்டருடன் அந்தக்கோட்டை க்கண்ட ஜெகதீசன் அதனைத் தான் அபகரித்துச்செல்லவேண்டும் என முடிவு செய்கிறான். தனக்கு வழங்கப்பட்ட நாடக உடைகளுடன் அதனை வெளியில் தெரியாமல் மடித்து வைத்துத் தன் வீட்டுக்குக் கொண்டுவந்துவிடுகிறான். இத்திருட்டு விஷயம் சாமியாருக்குத்தெரிந்து தான் மாட்டிக்கொண்டுவிட்டால் என்னாவது என்கிற குற்ற உணர்வு அவனை நிலைத் தடுமாற வைக்கிறது. ஆகவே பிறகு நடந்த ஒத்திகைகளில் அவன் சரியாக நடிக்க முடியாமல் சங்கடப்பட்டான். சாமியார் அவனை இந்நாடகத்தில் இரண்டு பரிசுகள் கட்டாயம் பெறவேண்டும் என எச்சரிக்கை செய்கிறார். நாடக நாள் வருகிறது. நாடகத்தில் சாமியார்தான் யூசுஃப்பாக நடிக்கிறார். ஜெகதீசன் கொலைகாரனாக நடிக்கிறான். சாமியாரின் காலைப்பிடித்துத் தான் செய்த தவறைச்சொல்லித் தன்னைக் கொலை செய்ய வேண்டினான். தான் ஓவர் கோட் திருடிய அந்த நிகழ்வை மனதில் வைத்துக்கொண்டு சாமியாரிடம் கதறிக்கதறி அழுதான். தத் ரூபமாகத் தனது பாத்திரப்படைப்பை வெளிக்காட்டினான். கிளிசரின் போடாமலேயே அழுதான். ஆகச்சிறந்த நாடகம் அந்த யூசுஃப் என்றும் ஆகச்சிறந்த நடிகர் ஜெகதீசன் என்றும் மேடையில் அறிவித்தார்கள். பிற்காலத்தில் ஜெகதீசன் சிறந்த நடிகனாக வருவான் என நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் வாழ்த்துக்கூறினார்.
மறுவாரம் நாடக உடைகளைத் திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வு. ஜெகதீசன். தான் கொண்டுவந்த நாடக உடைகளோடு திருடிக்கொண்டுவந்த ஓவர் கோட்டையும் அதே பையில் போட்டு எடுத்துக்கொண்டு பள்ளிக்குப் போகிறான்.
‘சரி பார்த்துக்கலாமுங்களா சாமி?” என்கிறான் சாமியாரிடம் பியூன்.
சாமியாரோ ’ஜெகதீசன் கணக்கை சரிபார்க்க வேண்டாம் . அது சரியாகவே இருக்கும்’ என்று ஜெகதீசனைப்பெருமையாகப் பேசி முடிக்கிறார். ஜெகதீசன் தான் கொண்டுவந்த அந்தப்பையை ஓவர் கோட்டோடு அதற்கான அலமாரியில் வைத்துவிட்டுத் திரும்புகிறான். அச்சமயம் ஜெகதீசனை சாமியார்’ ஒரு நிமிஷம் என் ரூம் வரை வந்திட்டுப் போ’ என்கிறார்
. சாமியார் இதனைச் சிரித்துக்கொண்டே சொல்கிறார் என்கிறார் விட்டல் ராவ். பின் என்ன நடந்தது என்பதை நீங்களும் நானும் ஊகித்துக்கொள்ளத்தான் வேண்டும். விட்டல்ராவ் நமக்கு விட்டு வைக்கிறார். சிறுகதையின் வெற்றி இங்கே பளிச்சிடுவது கண்டு நாம் சபாஷ் சொல்கிறோம்..
ஒரு சின்னஞ்சிறிய சிறுகதை’ நேதாஜி இருக்கிறார்’. சுகவனம் என்பவர் வீடு கட்டி முடித்துக் குடியேறி யிருந்தார். பக்கவாட்டில் குடிக்கூலிக்கு ஒரு குடும்பத்தை அமர்த்திக்கொள்கிற மாதிரிக்கு ஒரு போர்ஷனும் கட்டியிருந்தார். அந்த வீட்டுக்குக் குடி வந்தவர் பெயர் வேலாயுதன். அவரை’டான்’ என்று பர்மாவில் அழைப்பார்களாம். தன் என்று முடிவதை டான் என்று சொல்வது அந்தப் பர்மியப்பழக்கம் என்கிறார் விட்டல். கதையில் சுவாரசியங்களுக்கு குறைவேது. அவை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அவர் ‘நேதாஜி உயிரோடிருக்கிறார்’ என்கிற பெயரில் ஒரு புரட்சிகர மாத இதழ் பற்றிய சந்தா விபரம் அடங்கிய குறிப்பைச் சுகவனத்திடம் கொடுக்கிறார்.
‘ஆனால் எனக்குத்தெரியும் நேதாஜி உயிரோடுதான் இருக்கார். இமயமலை அடிவாரத்திலே எங்கேயோ சந்நியாசி மாதிரி’ என்று டான் சுகவனத்திடம் பீடிகை போடுகிறார். அப்புரட்சிகர இதழுக்கு . சுகவனத்தை ஒரு ஆண்டு சந்தா தாரராக ஆக்கிவிடுகிறார். இதழ்தான் வந்த பாடில்லை. இதோ அதோ என்பார். தன் மகள் விலாசினி கல்கத்தா போயிருக்கிறாள் பதினைந்து நாட்கள் ஆகின்றன. நேதாஜியின் கையெழுத்துப்பிரதிகளைப் போட்டோ எடுத்துவரத்தான் அவளின் பயணம் என்பார் அந்த டான். சுகவனம் இரவு நெடுநேரம் வரை அவர் சொல்லும் நேதாஜிக் கதைகளைக்கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த விலாசினி கன்னங்கரேல் என்கிற ஒருவனோடு ஓடிப்போனதே தெரியாமல் தகப்பன் டான் காலந்தள்ளுகிறார். ஆறுமாதமாய் வாடகை பாக்கி. புரட்சிகர பத்திரிகை எங்கே வெளி வந்தது. டானின் மகள் விலாசினி மட்டும் ஒரு நாள் ஆறு மாத கர்ப்பிணியாய்த்தன் வீடு வந்து சேர்ந்தாள்.
டான் என்பவரை வேலாயுதன் என்று மட்டுமே அழைத்து வீட்டைக்காலி செய்யச் சொன்னார் சுகவனம். உடன் மந்தைவெளியில் வேறு வீட்டுக்குப்போன வேலாயுதன் இன்னும் இரண்டு மாதத்தில் வாடகை பாக்கியைத் தந்துவிடுவதாய்ச் சொன்னார். அவ்வளவே. ஒரு பழைய ரெஃப்ரிஜிரேட்டரை பணயமாக சுகவனத்திடம் வேலாயுதம் கொடுத்துவிட்டுச்சென்றார். சுகவனம் மந்தை வெளிக்கே சென்று அவரைத்தேடினார். வாடகை பாக்கி பாக்கிதான். அந்த வீட்டிலும் அவர் இல்லை. அவர் பாண்டிச்சேரிக்குச் சென்றுவிட்டதாய்க்கூறினார்கள். வீட்டுக்கு வந்த சுகவனம் வேலாயுதன் கொடுத்துவிட்டுப்போன ரெஃப்ரிஜிரேட்டர் பாக்கிங்கை உடைத்துப்பார்த்தார். அதனுள் கம்ப்ரசர் இல்லாத ஒரு ஓட்டை ரெஃப்ரிஜிரேட்டர் பதுங்கிக்கிடந்தது.
விட்டல் சொல்கிறார்,’ நேதாஜியின் அஸ்தி ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வந்தது என்பது சமீபத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. டான் என்னும் வேலாயுதன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறாரா என்று கூட சந்தேகம் பிறந்தது சுகவனத்துக்கு.
’இந்தியா டுடேயில் 2000ஆம் ஆண்டு இக்கதை வெளிவந்திருக்கிறது.
அடுத்து 1996 ல் தினமணி கதிரில் வெளியான ‘மகமாயி’ என்னும் சிறுகதைக்கு வருவோம். மாசானியம்மன் கோயில் மகமாயியைக்காண சார்லுவும் கிருஷ்ணப்பண்டாரமும் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் நிற்கிறார்கள். ஆதிவாசிகளால் நிர்மாணிக்கப்பட்ட தெய்வம் இந்த மகமாயி. கிருஷ்ணப்பண்டாரம். அந்த மகமாயியின் மகிமைகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார்.
மாசானியம்மன் கோயில் செல்லும் பாசெஞ்சர் ரயில் இன்னும் வரவில்லை. எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஒரே பிளாட்ஃபாரம் கொண்ட ரயில் நிலையம். மக்கள் கூட்டம் கூடிக்கொண்டேயிருக்கிறது. எல்லோருக்கும் மகமாயியைக்கண்டு அவள் அருள் பெறுவதே ஒரே இலக்கு.
பிளாட்ஃபாரம் ஓரமாய் விளிம்பில் ஒரு மனிதப்பிறவி அமர்ந்திருக்கிறான். தொடைகளுக்கும் புட்டத்துக்குமாய்ச் சேர்த்து லாரிடயரிலிருந்து உரித்தெடுத்த ரப்பர் மட்டை ஒன்றால் கவசம் போல் பாதுகாப்பு தரித்திருந்தான். அவன் தரையில் தன்னுடலை அழுத்தித்தேய்த்துத் தேக்கிக்கொண்டு நகர்கையில் தொடைகளோ புட்டமோ சிராய்ப்புற்று ரணமாகாது. அவன் இங்கும் அங்கும் பார்க்கிறான்.’மகமாயி துணை…. மகமாயி துணை’ என்று கத்திக்கொண்டே கைகளை நீட்டுவதும் கும்பிடுவதுமாக இருந்தான். சார்லுவும் கால் ரூபாய் நாணயத்தை அவனுக்குப் போடுகிறார்.
சமீபமாய் ஒரு கூட்டம். அதனில் ஒரு இளம்பெண். மூக்கில் வைர மூக்குத்தி அணிந்திருந்தாள். கிருஷ்ணப்பண்டாரம் சமீபத்தில் மகமாயிக்கு வைர மூக்குத்தி சாத்தப்பட்ட செய்தியை சார்லுவுக்குச் சொல்கிறார்.
சப்பாணி ‘அய்யய்யோ அந்த வண்டி அந்த பிளாட்ஃபாரத்தில் நிற்குமே குறுக்கே கூட்ஸ் வண்டி நிக்குதே’ என்று புலம்ப ஆரம்பித்தார். சப்பாணியின் கதறல் யார் காதிலும் விழவில்லை. அவரவர்க்கு அவரவர் பிரச்சனைகள்.’ அய்யய்யோ எனக்கு ஒதவறதுக்கு யாருமில்லையே மகமாயி’ என்ன பண்ணுவேன் ஒன்ன இந்த ஆடி வெள்ளிக்குப் பார்த்தாகணுமுனு ஆசைபட்டேனே’ அவன் புலம்பல் நிற்கவில்லை.
கிருஷ்ணப்பண்டாரம் சார்லுவை விரைவு படுத்தினார். கூட்ஸ்வண்டியைத் தாண்டி பாசெஞ்சர் ரயிலைச் சந்திக்க இருவரும் முனைகிறார்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. அந்த ஒற்றை வைரக்கல் மூக்குத்தி அணிந்த பெண் அந்த சப்பாணியை அலாக்காகத்தூக்கிகொண்டு கூட்ஸ் வண்டியைத்தாண்டிக்கொண்டு பாசெஞ்சர் வண்டிக்குச் செல்கிறாள். அவனை வண்டியில் ஏற்றி விடுகிறாள். அவனைக்கண்ணால் பார்த்துப் பிச்சையிடவே அருவறுப்பாய் எண்ணுகின்ற மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் அந்த ஒற்றைக்கல் வயிரமூக்குத்தி அணிந்த பெண் அந்த சப்பாணியைத்தூக்கி அவனுக்கு உதவி நிற்கிறாள். ‘யம்மா யம்மா’ என்று அந்த சப்பாணி கூவுகிறான். அவளுக்குத் தனது நன்றியைத்தெரிவிக்கிறான். அந்தப்பெண்ணும் அதே வண்டியில் தன் குடுமபத்தோடு பயணிக்கிறாள்.
சார்லு சொல்கிறார், ‘ அம்பாளைப்பார்த்தாச்சு’. இனி எங்கேயும் செல்ல சார்லு தயாரில்லை. இப்படித் திக்கற்றவருக்கு உதவும் மற்றொரு மனிதனே மெய்யான தெய்வம். அந்த மகமாயியும் அவளே என்பதை விட்டல் நமக்குச்சொல்கிறார். பார்ப்பனராய்ப்பிறந்து வளர்ந்த விட்டல்ராவ் புனிதப்பூணலைக் கழற்றி எத்தனையோ காலமானது. சக மனிதனைச் சகோதரனாக எண்ணும் ஒரு எழுத்தாளன் தன் படைப்பில் தனது உயரிய சிந்தனையைப் பதிந்து விடுகிறான். அந்த வகையில் விட்டல்ராவ் உயர்ந்த மானுடனாய் நம் கண்முன்னே விரிதலை நாம் தரிசிக்கிறோம்.
உங்கள் ஓட்டு எங்களுக்கே என்கிற சிறுகதைக்கு வருகிறோம். தேர்தல் மக்களை எப்படியெல்லாம் பிய்த்துப்போடுகிறது என்பது இங்கே சொல்லப்படுகிறது. குட்டப்பன் ராஜவேலு இரு ஜல்லி விற்பனைக் காண்ட்ராக்டர்கள் நிகழ்த்தும் அரசியல் நாடகத்தை அழகாகக் காட்டுகிறார் விட்டல் ராவ். ராஜவேலுக்குக் கிடைதத காண்ட்ராக்ட் குட்டப்பனுக்குக்கிடைக்கவில்லை. ராஜவேலுக்கு எதிராக வேலை செய்கிறான் குட்டப்பன். சிறார்களை வேலைக்கு அமர்த்தி சுரண்டும் கொள்ளையை ராஜவேலு செய்வதாக ஊரெல்லாம் பரப்பினான்.
குட்டப்பனுக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்கு குழந்தைகள் தேவைப்பட்டார்கள். தினம் தினம் இரண்டு மணி நேரம் குட்டப்பனை ஆதரித்து குழந்தைகள் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். அந்தச்சிறுவர்களை ராஜவேலு தன் பக்கம் இழுக்க ஆசைகாட்டிப் பேசுகிறார். பையன்கள் ஏற்கனவே ஒருவரை ஆதரித்து வேலை செய்கிறோம். நாங்கள் உங்களோடு வரமாட்டோம் என்கிறார்கள். பணித்தருமம் பார்க்கிறார்கள்.
ராஜவேலு இப்பொழுது வேறு ஒரு குறுக்குத் திட்டம் போடுகிறார். சிறார் தொழிலை ஒழிப்பதாய் குவாரித்தொழிலை ஓரங்கட்டுவதாய்ச் சொன்ன குட்டப்பன் பள்ளிக்குப்போகும் சிறார்களை வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்வதைப்பாருங்கள் என்று சுவரொட்டிகள் அங்கே தயாரனது. ஊரெல்லாம் பிரச்சாரமும் நடந்தது. குழந்தைத்தொழிலாளர்களுக்கு ஆபாச வீடியோக்கள் காட்டப்படுவாதகவும் ராஜவேலு தெருவெல்லாம் பிரச்சாரம் செய்தார். குட்டப்பன் சிறுவர்களைக்கொண்டு தேர்தல் வேலை செய்வதை அப்போதே நிறுத்திவிடுகிறார்.
பிரச்சாரக்கூலி பாக்கியைக்கேட்க வந்த சிறார்களைப்பார்த்து, குட்டப்பன்,
‘கோஷம் போட வானாண்டா பசங்களா, நோட்டீசு ஒட்ட வர்ரீங்களா? நிறைய ஒட்டனும் ராவிலே போய் ஒட்டினா போதும்’ என்கிறார். அவ்விடத்திற்கு ராஜவேலுவின் ஆட்கள் வருகிறார்கள்.’ என்னடா பாக்கியெல்லாம் தீர்த்திட்டாரா குட்டப்பன்?’ நக்கலாய் கேள்வி வைக்கிறான் ராஜவேலுவின் நொண்டிப்பாண்டி.
’சர்தான் போய்யா வந்திட்டாரு’ சிறார் குழாத்துத்தலைவன் சிட்டி அவனை அழகாய் மடக்கிப்பேசுகிறான்.
சமுதாயச் சுரண்டலை நம் கண் முன்னே நிறுத்தி நியாயம் கேட்கிறார்..
நல்ல எழுத்தாளனின் பேனா யாருக்காக வேலை செய்யவேண்டும் என்பதற்கு இலக்கணம் வரைந்து தருகிறார்.
விட்டல்ராவின் சிறுகதைகள் நம்மைச் சும்மா விடுமா என்ன?.
விட்டல்ராவ் சிறுகதைகள் (பாகம் 1 + 2)
விட்டல் ராவ் (ஆசிரியர்)
Categories: Short Stories | கதைகள்
₹550
Year: 2025
Format: Paper Back
Language: Tamil
Publisher: சந்தியா பதிப்பகம்
விட்டல்ராவ் எழுதியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.வாழ்வின் ஏராளமான புதிர்த் தருணங்களின் சித்திரங்கள் அவருடைய படைப்புலகத்தில் உள்ளன ஓர் ஓவியக்கூடத்தில் கண்காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் சித்திரங்களைப்போல. அப்படிப்பட்ட தருணங்களை அவர் தேடித் தேடி தம் கதைகளில் காட்சிப் படுத்துவது புதிருக்கான விடைகளைக் கண்டடைய வேண்டும் என்பதற்காக அல்ல; இந்த வாழ்க்கை புதிர்களால் தொகுக்கப் பட்டிருக்கிறது என்னும் உண்மையைப் புரிந்து கொள்வதற்காக. அதுவே அவருடைய கதைகளின் மையத் தரிசனம். அவருடைய அனைத்து சிறுகதைகளும் அடங்கிய பெருந்தொகுதி வெளிவரும் இத்தருணத்தில் அவருக்கு என் வாழ்த்துகள்.
— பாவண்ணன்
Discover more from சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026
Subscribe to get the latest posts sent to your email.
