சக்கர வியூகம்

மாம்பூ மலர்ந்திருந்தது. தேன் குடிக்க சென்ற வண்டு சுவையில் மயங்கி, தன் ஆறு கால்களிலும் படிந்த அடர்ந்த மகரந்தத் துளிகளோடு கிறக்கத்தில் இருக்க, பூவிதழ் மூடிக் கொண்டது. உள்ளிருந்த வண்டு உள்ளேயே இருந்து விட்டது. மாம்பழத்து வண்டு!

2025 சைபர்னெடிக்ஸ் (cybernetics- மனிதன்-இயந்திர பிணைப்பியல்) குழுவிற்கு உங்களை வரவேற்கிறேன். அறிவார்ந்த இயந்திரங்களும், மனிதர்களும் கலந்து வாழ்வின் ஒவ்வொரு நொடியையையும் கட்டமைத்துக் கொண்டு கலப்பினங்களாக வாழும் நூற்றாண்டில் நாம் வசிக்கிறோம் என்பதை ‘சைபர்னெடிக்ஸ்’ என்ற சொல் குறிக்கிறது. இந்தக் ‘கூட்டு வாழ்வு’ நன்மையா, தீமையா? ‘சிந்திக்கும் நகரம்’ தொடங்கி, தானியங்கி அழிவுச் சாதனங்கள் வரை இந்தக் கூட்டு வாழ்வுச் சேர்க்கை என்னவெல்லாம் செய்கிறது? பின்னூட்டங்களின் (Feedbacks)மூலம் இயங்கி செம்மைப்படுத்தப்படும் இந்த அமைப்பு, மனித ஆற்றலை மேம்படுத்துவதா, அவனது சுதந்திரத்தைப் பேணிக்காப்பதா அல்லது  தற்சார்பில்லாமல், கட்டுப் படுத்தப்பட்டு இயங்கும் நிலைக்கு அவனை ஆழமாக உட்படுத்துவதா?

சைபர்னெடிக்ஸ் ஒரு பல்துறை இணைப்பு. அது பொறியியல், உயிரியல், கணிதவியல்,, சமூகவியல் போன்ற பல துறைகளின் இணைப்புப்பாலம். தொழில் நுட்ப அமைப்புகள், உயிரியல் அமைப்புகள், போன்றவைகள் தம்மையும் செயல்படுத்தி, மற்றவற்றிடமிருந்து பெற்ற தகவல்களையும் ஒருங்கிணைத்து புதிய பாதைக்கும் இட்டுச் செல்வதைச் சொல்லும் அறிவியல் இது.. உதாரணத்திற்கு, செயற்கை நுண்ணறிவு,(செ நு) ரோபோடிக்ஸ் இவற்றிலிருந்து பெறப்படும் பின்னூட்ட வழிமுறைகள், இயந்திரக் கற்றலுக்கும், அதைத் தழுவி மேலே செல்வதற்கும் உதவும். உயிரியலில், வாழும் உயிர்களின் இயக்கவியல் அறிந்த தொழில்நுட்பத்தால், செயற்கை உறுப்புகளை அமைக்க முடியும். சுருக்கமாக, வாழும் உயிரிகளும், செயற்கை அமைப்புகளும், செய்திகளையும், பின்னூட்டங்களையும் பயன்படுத்தி, தகவமைத்துக் கொள்ளவும், கட்டுப்பாடுடன் நடக்கவும், இயங்கும் இவ்வுலகில் தம்மைப் பொருத்திக் கொள்ளவும் செய்கின்றன.

நாம், அரசியல், பொருளாதாரம், உயிரியல் போன்றவை நம் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன என நினைத்தால், நானே ‘ராஜா’ என முந்துகிறது ‘டேட்டா’. (Data) மென்பொருள் ஒரு கருவி மட்டுமல்ல; நம் அலைபேசிகள், விமான இயக்கங்கள், நிதிச்சந்தைகள் ஆகியவற்றில் இடம்பெறும் மென்பொருள், நம் வாழ்வின் புலனாகாத கட்டுமானங்களாகச் செயல்பட்டு, மனித நோக்கங்களை, உலக இயக்கங்களாக மாற்றிவிடும் வல்லமை படைத்தவை.

டேட்டா/ தரவு/ தகவல் இவைகள் வெறும் நேரலைக்கு உதவும் கருவிகள், அவற்றின் செயல் முறை திறன் உதவும் குறியீடுகள் மட்டுமல்ல. இதன் தாக்கம், மாபெரும் தொழிற்சாலைகளில், சமூக இயக்க அமைப்பின் மாற்றங்களில், பிரக்ஞைகளில் கூட இருக்கிறது. மென்பொருளில் ஒரு சிறிய திருகல், செல்வங்களை மேலேற்றும்/ கீழே தள்ளும், மக்களின் கருத்துக்களை பெருவாரியாக பாதிக்கும்/ மறு கட்டமைக்கும், 

பழக்க வழக்கங்களை எதிர்பார்த்திராத வகைமைகளில் மாற்றும் (தென் கொரியா மிகச் சிறந்த எடுத்துக்காட்டு). பல்லாயிரக்கணக்கான உபகரணங்கள் சாதாரண மக்களின் கரங்களிலும் இருக்கிறது/ பணம் படைத்தோர், அதிகாரம் படைத்தோர் ஆகியோரின் கைகளிலும் இருக்கிறது. எனவே, தரவுகள் பெறுவதோ, அதை அலசுவதோ, அதன் மூலம் விரும்பும் ஒரு கருத்தைப் பரப்புவதோ, அதை நம்பச் செய்வதோ, அதன்படி கட்டுப்படுத்துவதோ இயல்பாக, நாம் அறியா வண்ணம் நடை பெற்றுக் கொண்டேயிருப்பதால், கணக்கீடுகளும், உயிர் கூட்டமான மனிதர்களும் இணைந்து ஒரு சைபர்னேடிக்ஸ் அமைப்பாக நாம் வடிவெடுத்து வருகிறோம்.

இக்கட்டுரையில் என்ன பார்க்கப் போகிறோம்?

முக்கியமாக இந்தக் கூட்டு வாழ்வினை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதை. வரலாறு காட்டுவது, எப்போதுமே நிலவி வந்துள்ள சமத்துவம் இல்லாத சமூகங்களை, அந்தரங்க செய்திகள் அம்பலமாவதை, இன்னும் பலவற்றை. ‘புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சுதந்திரம்’ (Freedom to New Technology) இந்தத் தளைகளைத் தாண்டும் ஒரு மாற்று வழியினைக் காட்டுகிறது. நம் கையில் நம் சுதந்திரம், நமக்கான வரம்பிற்கு உட்பட்ட அதிகாரம், தேவையான கட்டுப்பாடு இவைகள் வேண்டுமென்றால், சைபர்னெடிக்சை நாம் எப்படி உபயோகிக்கப் போகிறோம் என்பதில்  பதில் அடங்கியிருக்கிறது. எனவே, அதுவும் வளர்ச்சி பெற்று இயங்குவது பயனர்களின் கரங்களில் இருக்கிறது.

சைபர்னெடிக்ஸ் காலம்

மனிதர்களை, இயந்திரங்களை, அமைப்புகளை, நகரங்களைக் கூட  இணைத்து, அதன் மூலம் பெறப்படும் பின்னூட்டங்கள் வாயிலாக, கட்டுப்பாடும், தொடர்செய்திகளுமாக எழும்பி வரும் ஒரு அறிவியலாக, 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றியது சைபர்னெடிக்ஸ். மருத்துவர் அர்டுரோ ரோசன் ப்ளுத், (Arturo Rosenblueth) இயற்பியலாளர் ஆண்ட்ரே மரி ஆம்பெர், (Andre Marie Ampere) ஆகியோரால் ஈர்க்கப்பட்ட கணிதவியலாளர் நார்பெர்ட் வீனர், (Norbert Wiener) எந்த அமைப்பையும் தனி ஒற்றைத் தன்மையதாக புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி, ‘சைபர்னெடிக்ஸ்’ என்ற சொல்லையும் கொண்டுவந்தார். கிரேக்க மொழியில் இதன் வேர்ச்சொல் இருக்கிறது- அது ‘ஆளுனர்’ என்பதைச் சுட்டுகிறது. நம் முடிவுகளிலும், செயற்பாடுகளிலும், நம் எண்ணங்களும், இயந்திர இயக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இன்று வீனரின் தொலை நோக்குப் பார்வை, ஒரு அமைப்பாகவே உருவெடுத்துள்ளது; வீடுகள் முதல், மாபெரும் நகரங்கள் வரை அனைத்திலிருந்தும் பெறப்படும் பின்னூட்டங்கள் பலவற்றை கட்டமைக்கின்றன.

இதன் பிரதிபலிப்புத் தன்மைதான் இதன் முக்கிய அம்சம். இலக்கக் குறியீடுகள், பொருண்மை உலகில் கலந்து எண்ணற்ற சுருள்களை உருவாக்குகின்றன. நிதிச் சந்தையில், அதிவேக அதிர்வெண்கள், பங்குகளின் விலைப் பயணத்தை கணிப்பதோடு மட்டுமல்லாமல், 2010ஆண்டில் நடந்ததைப் போல ‘மின்னல் வீழ்ச்சி’யிலும் இடம்பெறுகின்றன. சமூக வலைத்தளங்களில், ஒருபதிவு, ஊதிப் பெரிதாக்கப்பட்டு, பகிர்ந்து பகிர்ந்து நிறுவப்பட்டு, அரசியலை, கலாசாரத்தை மாற்றிவிடுகிறது. மனித நோக்கங்களும், இயந்திர பதிலீடுகளும் ஒன்றுடன் ஒன்று முயங்கி, தனிப்பட்ட சமிக்ஞைகளை, சமூக சக்தியாக மாற்றுகின்றன.

இந்த விளைவுகள், அவற்றின் அதிவேகத்தினால், திடீரென்று வந்தது போல தோற்றமளித்தாலும், அது அப்படியல்ல. படிப்படியாகக் கட்டப்படும் ஒன்று, முனைப்புள்ளியை நெருங்குகையில் வாசல்கள் படீரென்று திறந்து, அருவி போல விளைவுகளை ஏற்படுத்துகிறது. தரவுகளும், கணக்கீடுகளும் அதிக கீர்த்தி பெறும் வரையில், நரம்புப் பின்னல்கள், பயில்வோரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. இப்போதோ, உரையாடும் கணினிப் பொருளிலிருந்து, தானியங்கி ஊர்திகள் வரை இந்த ‘டேடா’வின் ஆதிக்கம்தான். நேரியலற்ற  (Non-linear) இந்தத் தாவல்தான், அன்றாட வாழ்வின் இயந்திரத்துணை முதல், மாபெரும் உலகக் கட்டுமானங்கள் வரை, தளங்களை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது, இயந்திரங்கள் இன்றியமையாதவை என்ற எண்ணத்தில் நம்மை இயக்குகிறது.

இந்தப் பின்னூட்டங்களின் தர்க்கம்தான், நிறுவனங்களை, நகரங்களை மாற்றுருவாக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது.

தொழில் நிறுவனங்கள், தங்கள் வழமையான நிலைத்த தலைமுறைத் தன்மையை அதிகமாகக் கைக்கொள்ளாமல், ஒரு உயிரியைப் போல, தகவல்களைக் கொண்டு தம்மை வார்த்துக் கொள்கின்றன. திட்டங்கள் மேலாண்மை முதல் நிலையில் வரையப்பட்டு கீழே செல்வதற்குப் பதிலாக, எவ்வாறு தொழிற்சாலை நிர்வகிக்கப்படவேண்டும், எப்படி அதை என்றும் இயங்கும் விதமாக செயலாக்க வேண்டும் என்பதை ‘முன்னரே’ கணித்துச் சொல்கின்றன தரவுகள்; சரக்கு மற்றும் மனிதப் போக்குவரத்துக்களை ஒரு நகரில் தீர்மானிப்பவையாக செயற்கை நுண்ணறிவு செயல்படுகிறது. சவுதியரேபியாவின் மாபெரும் நகரமான நியாம் (Neom) ஒரு ‘பிரக்ஞையுள்ள நகரமாக’ (Cognitive City)கருக்கொள்ளப்பட்டுள்ளது; அனைத்திலும் செ நு- அங்கு வசிக்கும் மக்களின் நிலைக்கேற்ப, போக்குவரத்து, மின்சாரம், எரிபொருள், அரசு நிர்வாகம், பரவலாக்கப்பட்ட அதிகாரம் போன்ற பலவற்றையும் கருத்தில் கொண்டு, எப்போதுமே நிகழ் நேரத்தில்(Real-Time) செயல்படும் ஒரு மாநகரமாக அதன் வரைபடம் அமைந்துள்ளது. இதனுள்ளே பொதிந்திருக்கும் அத்தனையும் நன்மைகள் மட்டும்தானா? மனிதர்களின் அறிவும், சிந்திக்கும் திறனும் ஒரு இயந்திரத்தின் மூலமாக இயங்கு திறனிற்கு வழி வகுப்பதில் நன்மைகள் வெளிப்படையாகத் தெரியலாம்; ஆனால், இதற்கான விலை என்ன? நம்மைப் பற்றிய அனைத்துத் தகவல்களும், எவரின் கைகளுக்குள்ளும் செல்லலாம்; குழப்பங்களை அதிகரிக்கலாம்; ஒளிபுகா நுட்பமான கட்டுப்பாட்டிற்குள் நாம் அடைபடலாம். கிட்டத்தட்ட மூளைச் சலவை செய்யப்படும் நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான். அவனது சுய சிந்தனைகள், குழப்பத்திற்குள் சென்று, கட்டுப்பாடு என்பதை உணராமலே அவன் கட்டப்படுவான். இயந்திரத்தை முடிவு செய்ய விட்டுவிட்டு, அதன் மறைவுத் தன்மையை அறியாமல், நடை பெறும் செயலின் விளைவுகள் பாதகமாக இருக்கும் பட்சத்தில், அதை பகுத்தறிவு கொண்டு உணரவும், விளக்கவும், அந்தத் தவறை சரி செய்யவும் சாத்தியங்கள் தேவை அல்லவா? 

பின்னூட்டங்கள் நம்மை சக்தி மிகுந்தவர்கள் ஆக்குகின்றதா அல்லது நம்மை மூச்சுவிடும் இயந்திரங்களாகச் செய்கின்றனவா என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும். பல்வேறு பின்னூட்ட மூலங்களிலிருந்து பெறப்படும் தரவுகள், இந்த உலகை மீள் தன்மை அடைய வழி வகுக்கலாம், உலகோரை ஊக்கமிக்க படைப்புத் திறன் கொண்டவராக்கலாம் அல்லது மனித இனத்தை கசக்கிப் பிழியலாம், அவனது எண்ணங்களை ஒரே பாதையில் செலுத்தலாம். கத்தி, அறுவை சிகிச்சை நிபுணர் கையிலா அல்லது சமூகக் கேடுகள் கையிலா என்பதுதான் கேள்வி.

சமூகமும், அதிகாரமும்

தொழிற்சாலைகள், சுயசிந்தனைகளுள்ள ஒன்றாகக் கட்டமைப்படுவதைப் போலவே, நகரங்களும் கட்டமைக்கப்படுகின்றன. சவுதியின் நியாம் ஒரு ‘மாபெரும் நகர பிரக்ஞை’ என்றே சொல்லலாம். $500 பில்லியனில் நிர்மாணிக்கத் திட்டம்- அதன் வரைவு சொல்லும் செய்திகள் வியப்பின் உச்சிக்கே நம்மைக் கொண்டு சென்றுவிடும்- மூலப் பொருட்களின் உன்னதமான பயன்பாடு, பராமரிப்பு கணித்தல், வேகமும், விவேகமும் இணைந்த தினசரி போக்குவரத்து, மக்கள் நலனிற்கு முக்கியத்துவம் எல்லாமே சிறந்த உறுதிகள். இவை அனைத்தும் உணரிகள் (Sensors) மூலம் சாத்தியப்படும்; அதே உணரிகள் முலமே உங்கள் நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படும் அல்லவா? தொடர் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் நீங்கள் இருப்பீர்கள் அல்லவா? ‘ஸ்மார்ட் சிடிஸ்’  (smart cities- திறன்மிகு நகரங்கள்) உங்களுக்கு வசதிகள் கொடுக்கும்; வலைக்குள்ளும் பிணிக்கும்.

‘மேகம்’ (Cloud) ஆற்றும் செயல்கள் அளப்பரியன. 7.5 இலட்சம் பணியாளர்களுடன், 1.5 மில்லியன் ரோபோக்களை அமேசான் ஏற்கெனவே பயன்படுத்தி வருகிறது. இது சரக்கு தளவாடங்களிலிருந்து, ஒப்பந்தங்களை தானாகவே இரத்து செய்வது வரை இரு, அதாவது மனிதன் மற்றும் ரோபோக்களின் கூட்டு முயற்சியில் நடை பெறுகிறது. இதனுடைய ‘மேகத் தளமும்’ மற்ற நிறுவனங்களின் அத்தகைய தளங்களும் செ நு.வால் இயங்கி கணக்கீடுகள், சேமிப்பு என்று இலக்கப் பொருளாதாரத்தின் முகங்களாகத் திகழ்கின்றன. நிர்வாகம், தொடர்பு சாதனம், வணிகம் என பலவற்றின் தண்டுவடங்கள் இவை. அதே நேரம் தங்கள் விசைவீச்சு வலையின் இழுபாதைக்கும் உட்பட்டவை. இப்படியாகத் தொழில் நுட்பம், அவை இணையும் பல துறைகள், மனித-இயந்திர கூட்டு என்பது தனது ஆதார விசையை இழந்தால், அதன் விலையும், வீழ்ச்சியும் அபாரமாக இருக்கும். இந்த திறன் நகரான நியாமை எடுத்துக் கொள்ளுங்கள்; அது எதை ஆதாரமாகக் கொண்டுள்ளதோ, அந்த மையத்தை பற்றிக் கொள்ள வேண்டும். வரலாறு காட்டும் ‘மோடோரோலா’ நிறுவனத் தின் ‘இரிடியத்தை பயன்படுத்தி செயற்கைக் கோள் வலை அமைப்பை ஏற்படுத்த நினைத்த அந்தச் செயற்பாடு’, அதன் உள்ளீட்டுப் பொருளின் விலையாலேயே தள்ளாடி நின்றுவிட்டது. ஒரு கட்டுமானத்தின் அடிப்படை இதுவெனத் தீர்மானித்தபிறகு, அதற்கு மாற்று காண்பதென்பது கடினம். வழி அடைபட்டுவிட்டால், இன்றைய திறன்கள், நாளைய தடங்கல்களாக உருவெடுக்கலாம். இதில் ஆழமாகப் பார்க்க வேண்டியது, ‘கட்டுமானம் என்பது அரசியல்.’ (அரச மாளிகைகளில் அமைந்திருந்த சுரங்க வழிப்பாதைகளும், செயற்கை அகழிகளும் நினைவிற்கு வருகிறதா?) “முதலாளித்துவம் என்பது தகவல்களின் அமைப்பு, அதில் முன்னேற்றம் என்பது சில வியப்புகளால் நடை பெறுவது, எதிர்பாராத கண்டுபிடிப்புகள் அதை உலுக்கி மேற் செலுத்தும்” என்று  ஜார்ஜ் கில்டர் என்ற பொருளாதார நிபுணர் சொல்கிறார். இந்த வியப்புகள் முன்னேற்றுவதற்கானவையா அல்லது மூச்சுக்குழலை அடைப்பதற்கானவையா என்பதை சைபர்னெடிக்ஸ் கட்டுமானங்கள் தீர்மானிக்கின்றன. யாருடைய மதிப்பீடுகள் பொதியப்பட்டுள்ளன, யார் தரவுகளை கட்டுப்படுத்துகிறார்கள், யார் ஆதாயம் பெறுகிறார்கள், தளங்கள் அதிகார மையங்களாகிறதா அல்லது அதிகாரம்  நாட்டு மக்களிடையே பரவலாக்கப்படுகிறதா என்பதெல்லாம் அவர்களால் தீர்மானிக்கப்படுகிறது.

அருகே அருகே வந்து, உன்னில் கலந்து

நகரங்கள், நகர சபைகள் இவைகளுடன் இந்த பிணைப்பு நின்றுவிடுவதில்லை. அது நம்முடன் ஒட்டி உறவாடுகிறது. இயந்திரங்கள் நம் உணர்ச்சிகளில், நம் தீர்மானங்களில் கலக்கின்றன.

உங்களது இறுதித் தேர்வை, பொதுத் தேர்வு அறையில் இல்லாமல் உங்கள் அறையிலேயே எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. தலையணியுடன் நீங்கள் தயார். உங்கள் அறையின் சுவர்கள் ஒரு இலக்கப் படுகையாகத் தோன்றுகிறது; பகல் கனவல்ல. மூளையும், கணினியும் உரையாடுகின்றன- உங்கள் கவனக்குவிப்பை சோதிக்கின்றன; நீங்கள் எதிர்கொள்ளும் புதிர்களை மாற்றி மாற்றி சரி செய்கின்றன; நீங்கள் தயங்கினால், சில குறிப்புகள் கொடுக்கின்றன; நீங்கள் வென்றுவிட்டால், உங்களுக்கு கடினமான சவால்களைத் தருகின்றன. ஒரு கருவியை உபயோகிப்பதாக உணர்வதை விட உங்கள் எண்ணம் விரிவடைந்துகொண்டே போகிறது. 

EEG மூலமாக, வெளிப்புறத்தில் பொருத்தப்படும் மின்குப்பிகளிலிருந்து மூளையின் மின்செயல்பாடுகள் அறியக் கிடைத்தாலும், மின்னியல் வளை வரைவியல், (Electrocorticography) மூளையின் புறணியில் சின்னஞ்சிறு மின்னிணைப்பு சாதனங்களைப் பொருத்தி ஒவ்வொரு ந்யூரானும் எப்படிச் செயல்படுகிறது என்று துல்லியமாகக் காட்டுகிறது. இது நரம்பு செயற்பாட்டிலிருந்து நேரடியாக பேச்சின் தொகுப்பை அறிந்து கொள்ள உதவும் ஒன்று. ஒவ்வொரு முன்னேற்றமும்,  நம்பிக்கையை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஆபத்துக்களையும் அதிகரிக்கும். ந்யூராலிங், (Neuralink)கெர்னெல், (Kernel) பாராட்ரோமிக்ஸ்  (Paradromics)போன்ற நிறுவனங்கள், தங்கள் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே போகும் இந்த நிலையில், மருத்துவத்திலும், உரையாடுவதிலும் இது நல்ல பலனைத் தரும் என்று உறுதி அளிக்கையில் மற்றொரு ஆழமான கேள்வியும் எழுகிறது; நீடித்த பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த முறைக்கான வாய்ப்பு, நாம் நம் உடலில் ஒரு இயந்திரம் செயல்படுவதற்கு எந்த அளவிற்கு உடன்படுகிறோம் என்பதெல்லாம் சிந்திக்க வேண்டிய வினாக்கள். இந்த மாதிரி இயந்திரமும், மனிதனும் பிணையும் ஒன்றை மனித நலம் பெருக்குதல் (Augmentation)என அழைக்கிறார்கள். இது மூளையோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. உங்கள் உடலில் வெளிப்புற எலும்புகள் (Exoskeletons)இருந்தால் எப்படியிருக்கும்? தோல் போர்த்தி இயற்கை நம்மை உலாவரச் செய்கிறது. ஆனால், வளர்சிதை மாற்றத்திற்கு (Metabolic)உட்பட்ட  மனிதன், தன் உயிரியல் அமைப்பு அனுமதிக்கும் வரம்பு வரை நடக்க முடிவதில் செலவாகும் சக்தியை 1-22% வரை குறைக்க வெளிப்புற எலும்புகள் உதவுகின்றன. இது தொழிலாளர்களுக்கு, போர்வீரர்களுக்கு தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்க உதவுகிறது. இந்த வெளிப்புற எலும்புகள், பெர்க்லீயிலுள்ள BLEEX- (Berkeley Lower Extremity Exo skeleton- Load bearing capacity and Endurance) கண்டுபிடிப்பு.  குறைந்த செலவில் அதிக இலாபம் அடையப் பார்க்கும் பொருள் வாதிகளின் ஆசையன்றி இது என்ன?  அமெரிக்காவின் டாலோஸ் உடை, (US TALOS Suit) – Tactical Assault Light Operator Suit) ரஷ்யாவின் ரோஸ்டெக், (Rostec) நீண்ட காலமெடுக்கும் செயல்களில்,(குறிப்பாக போர் காலங்களில்) தாக்குப்பிடிக்கவும், பளு தாங்குவதற்கும் என்றே வடிவமைக்கப்பட்டவை. மனிதன் இயல்பாக நடப்பதற்கும், ஓய்வு தேவைப்படும் நேரங்களில் அமரவோ, தூங்கவோ செய்வதற்கும், தாக்குப் பிடிப்பதற்கும் அவனது உயிரியல் தன்மை மையமென இருந்தது போக அதை சைபர்னெடிக்ஸ் கையில் எடுத்துக் கொண்டுவிட்டது! இவை என்னவோ மீள்தன்மையை உறுதியளித்தாலும், பொறுப்பற்றதனமும் சமத்துவமின்மையும் காணப்படுவதால், தார்மீக வேதனைக் கேள்விகள் எழுகின்றன. ‘மிகு திறன் போர்வீரர்களை’ உருவாக்குவதின் நியாய தர்மங்கள் என்ன?

இவ்வகையான அதி உன்னத  செயல்களுக்கான ‘பெருக்குதல்’ போர்க் களங்களில், அதீத போர்களை  (Hyperwar)ஏற்படுத்துகின்றன. ‘கவனி, கூர்ந்து நோக்கு, திட்டமிடு, செயல்படு’ என்பதையெல்லாம், ஒரு நிமிடத்திலிருந்து ஒரு நொடியாக தானியங்கிகள் மாற்றுகின்றன. குறைந்த மேற்பார்வையில், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இணைந்து செயல்படும் ஆராய்ச்சியை அமெரிக்காவின் தார்பா (DARPA-Defense Advanced Research Projects Agency) செய்கிறது. சீனாவும், ரஷ்யாவும் இதை பரிசோதித்துவிட்டன. ரஷ்யா-உக்ரைன் போரில், இரு தரப்பினரும், ஆளில்லா போர் தளவாட ஊர்திகளை (UAV)பயன்படுத்தி வந்தாலும், ரஷ்யா மாதம் ஒன்றிற்கு பத்தாயிரம் கணக்கில் ‘முதல் மனித(!) பார்வை’ (First-person View) ட்ரோன்களைத் தயாரிக்கிறதாம். எதிரிகளின் போர்க்கப்பல், அவர்களது தளவாடங்கள், அவற்றின் சேமிப்புக் கிடங்குகளை துல்லியமாக அறிந்து தாக்குவதற்கு இது மிகப் பெரிய உதவியாகும் (இந்தியாவின் ஆபரேஷன் செந்தூர்) பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளில் வெடி மருந்துகளை ஏந்திக் கொண்டு அலைந்து திரியும் ‘காமிகாஸி’ (Kamikaze) எனப்படும் தற்கொலை ட்ரோன்கள் பாதுகாப்பு படைகளில் இருக்கின்றன. காமிகாஸி என்பது இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய விமான ஓட்டிகள் இலக்கில் மோதி அதையும் அழித்து தாமும் அழிந்த ஒரு செயல்பாடாகும். Harop என்ற தற்கொலை ட்ரோன்களை, அலைந்து திரியும்  வெடிமருந்துகள், சிறிய, மனிதனில்லா போர் ஊர்திகள், போன்ற பலவற்றைப் பயன்படுத்தி குறி வைத்து இஸ்ரேல், காஸாவைத் தாக்கியது. இவ்வகை அழிவு சாதனங்களை தானியங்கிகளாக அமைக்க செ நு நுட்பம் பயனாகிறது. தரை தளங்களில் இருக்கவே இருக்கிறது ரோபோடிக்ஸ். எந்தப் பின்னூட்டங்கள் உங்கள் தேர்வில் பயன்படுத்தப்பட்டனவோ, அதே பின்னூட்டங்கள் தான் இந்த இயந்திர வேகத் தாக்குதலிலும் பயனாகின்றன.

இந்த மலைக்கும் மடுவிற்குமான பேதங்கள் தான் கொள்கைக்கும், அதைச் செயல்படுத்தும் முறைக்கும் இடையே இருக்கின்றன. பொறுப்பு, சமத்துவம், கண்டறியும் நிலை, நம்பிக்கை, நிர்வாகம் என்ற ஐந்து குறிக்கோளை தார்மீக அடிப்படையெனக் கொண்டு செ நு இயங்கவேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை சொல்கிறது. ஆனால், ஒரே குவிமையம் தான்; சர்வ அதிகாரம், அதன் மூலம் நடத்தை கட்டுப்படுத் தப்படுதல், மீறுவது தெரிந்தால் அச்சுறுத்தல்கள், என்று தான் பெரும்பாலும் இயக்கம் நடைபெறுகிறது. நேர்மையான சரியான நிர்வாகம் அமையவில்லை என்றால், மனித ஆற்றல் அதிகரிப்பது போலவே, மனித-இயந்திர பிணைப்பினால் நிகழும் சீர்கேடுகளும், நாசங்களும் அதிகரிக்கும்.

இந்த இயந்திர உதவியுடன் மனித ஆற்றலைப் பெருக்குதல், மாணவர் மற்றும் போர்வீரர் இவர்களுடன் மட்டும் நின்றுவிடும் என நாம் நினைத்தால், நாம் அறிய வேண்டியது இன்னமும் இருக்கிறது என்பதே பொருள். வரலாற்றுச் சுழற்சியில் அதன் பங்கு என்ன என்று பார்க்கலாமா?

சுழலும் உலகம்

அலைகளைப் போலே, எழுந்தும், வீழ்ந்தும், ஒரு சுழற்சியில், உலக நிகழ்வுகள் பயணிப்பதை வரலாறு காட்டுவதாக ரஷ்ய- அமெரிக்க அறிவியலாளர் Peter Turchin சொல்கிறார். இதை க்ளியோடைனமிக்ஸ்  (Cliodynamics)என்று அழைக்கிறார்கள். இது கணித மாதிரிகளைக் கொண்டு வரலாற்று நிகழ்ச்சிகளின் நிகழ்முறைகளை விளக்குவது. வரலாறு, பொருளாதாரம், சமூகவியல் போன்ற பலதுறைக் கூறுகளையும் உள்ளடக்கி இந்தக் கணித மாதிரிகள் செய்யப்படுகின்றன. நிகழ்முறைகள் மீள மீள வரலாற்றில் காணப்படுவதையும், அந்த நேரங்களில் மனித வாழ்வியல் எவ்வாறு இருந்தது என்பதையும் பற்றி அறிந்து கொள்வது நாம் வகுக்கும் கொள்கைகளுக்கான அடித்தளம்/ பின்னூட்டம் என எடுத்துக் கொள்ளலாம். நிலையற்ற தன்மை என்பது சீரற்ற ஒன்றாக இருப்பதில்லை என்று அவர் சொல்கிறார்- அதிகார வர்க்கத்தைக் காட்டிலும் உயரடுக்கு மனிதர்கள் அதிகரிக்கும்போது, மக்கள் தொகை, வளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்போது, சமத்துவமின்மை சமூகத்தில் அதிகரிக்கும்போது, நிலையற்ற தன்மை ஏற்படும் என அவர் சொல்கிறார்.

இதை எப்படி அளக்கிறார்கள்? வருமானம் சரிசமமாக இல்லை, அதிகரிக்கும் உயர்வர்க்கத்தினர், அரசு நிதி ஆகிய தரவுகள் அரசியல் அழுத்தக் குறியீடுகளில் (Political Stress Index) கிடைக்கும். இந்தக் குறியீடு அதிகரித்தால், அமைதியின்மை ஆபத்து அதிகரிக்கும். தொழில்நுட்பம், இப்படியான நிலை ஏற்படுவதை தடுப்பதற்குப் பதிலாக, படித்த தொழில் நுட்பர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி, அவர்களால் உயரடுக்கு மனிதக் கூட்டத்தை அதிகரித்து, சிலர் வாழ வாழ, பலர் வாட வாடச்  ( நன்றி: கவிஞர் வாலி) செய்துவிடுகிறது. இந்தப் பெரிய ‘மதமற்ற சுழற்சியை’, (Secular Cycle)பல நூற்றாண்டுகளின் ஒருங்கிணைப்பு, பிரிவினை, செல்வச் செழிப்பு, வறுமை என அடையாளம் காணலாம் என்று அவர் சொல்கிறார்.

இந்த அழுத்தம் இப்போது கண்கூடாகத் தெரிகிறது. ‘இறுதிக் காலங்கள்’ (End Times) என்ற தன்னுடைய நூலில், அவர், அமெரிக்காவில், முன்னர் வீழ்ந்துபட்ட அரசுகளின் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதின் எச்சரிக்கைகள் தென்படுவதாகக் கூறுகிறார்: ஆழமான துருவப்படுத்துதல், நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினரின் பொருளாதாரச் சரிவு, உயரடுக்கில் குவியும் செல்வம் என்று பட்டியலிடுகிறார். வரலாறு காட்டுவதைப் போலவே, பல நாடுகள் இத்தகைய  கொந்தளிப்புச் சுழலில் இருக்கின்றன- ஒழுங்கின்மை, அமைதியின்மை, வாய்ப்பின்மை என்ற மூன்று மந்திகள் அலைக்கழிக்கின்றன.

சமூகங்கள் இந்த சுழற்சிகளைப் பற்றி உணர்ந்தாலும், மேலும் ஒரு வலையும் இருக்கிறது. அந்தரங்கங்கள் அம்பலத்தில் இருக்கின்றன- நாம் இதழ்களில் சிக்குண்ட வண்டுகள்- மீளூம் வழியில்லை. ஸ்னோடென் கசிவுகளுக்குப் பிறகு, ரஷ்யா, கண்காணிப்பை தவிர்ப்பதற்காக, தட்டச்சுப் பொறிகளை பயன்படுத்தத் துவங்கியது. ஒலியியல் கொண்டு எந்தெந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிய முடியும் என்று ஆராய்ச்சி வல்லுனர்கள் சொல்கையில், தொடர்வரிசை முறைகளும்  (Analog)கசியும் எனப் புரிந்து கொள்கிறோம்.

ஸ்ட்ராவா (Strava) என்றொரு பயன்பாடு உள்ளது. அது உங்கள் உடலை வலுப்படுத்தும் செயற்பாடுகளின் பதிவேடு. உடற்பயிற்சிக் கூடத்தில் நீங்கள் செலவிடும் நேரம், ஓட்டம், வேக நடை என்ற அனைத்தையும் காட்டும், நினைவூட்டும், பதிவு செய்யும் ஒன்று. மேலும் ஒரு சமுதாயமாக ஒரு உடல் நல நிகழ்வில் பங்கு கொள்ள உதவும் ஒன்று. ஆனால், மகிழுந்து ஓட்டுவதற்கு பயன்படாது.

‘வேஸ்’ (Waze) என்றொரு பயன்பாடும் ,ஒரு சமூக அமைப்பில், அதிலுள்ளோருக்கு நிகழ் நேரத்தில் போக்குவரத்து நெரிசல், மாற்றுப் பாதை என உதவுகிறது. போக்குவரத்து நெறியாளர்களை விடவும் கச்சிதமாக செயல்படுகிறது.

இவ்விரண்டு பயன்பாடுகளும், உங்களைக் கண்காணிக்கின்றன; போகும் இடம், சேரும் நட்பு, பருகும் பானம், இன்ன பிற  தரவுகளாகச் சேமிக்கப்படுகின்றன. திறன்கைபேசி கடத்தாத உங்கள் தரவுகளா? ‘மேகங்களில்’ நீங்கள் அழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் கோப்புகள், சேமிப்புக் கிடங்குகளில் உள்ளன. யூரோப்பிய  யூனியனின் GDPR (General Data Protection Regulation Act) மற்றும் இந்தியாவின் DPDP (Digital Personal Data Protection Act) எல்லாம், அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்களின் மையப்படுத்தப்பட்ட தரவுகளையும், அதனால் பெறப்படும் வளமிக்க சக்திகளையும் அசைக்க முடியவில்லை. அவைகள் அத்தகைதொரு கட்டுமானம் பெற்றிருக்கின்றன.

இந்த சைபர்னெடிக்ஸ் யுகத்தில் சுழற்சிகளும், கண்காணிப்பும் நம் கடின எல்லைகள். வரலாறு சொல்லும் சமத்துவமின்மையும், அமைதியின்மையும் அந்த சுழற்சியில் அதி வேகத்தில் வந்துகொண்டேயிருக்கின்றன. மனிதர்களின் அந்தரங்கத்திற்கு மதிப்பில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால், சுழற்சிகள் தலையெழுத்தில்லை. பழைய பகுதிகளை புதிய முறையில் இணைப்பதைப் போன்ற கண்டுபிடிப்புகள், நம்மை நெருக்கிச் சுருக்குவனவற்றிலிருந்து  இதே பின்னூட்டங்கள் வாயிலாக நம்மை விடுவிக்கும்.

விட்டுவிடுதலையாவது கடினம் என்றாலும், மாற்று வழிகள் உண்டா என்று பார்க்கலாம்- விடுதலைக்கான தொழில் நுட்பம் இதில் உதவுகிறது. அது அதிகாரத்தை பரவலாக்குகிறது- மனிதன் இயல்பாகச் செயல்பட உதவுகிறது.

உலக வலைத் தளத்தைக் கண்டுபிடித்தவரான டிம் பெர்னர்ஸ் லீ, ஆஸ்டினில், ஒரு இரவுணவின் போது தன் அடுத்த செயல் திட்டத்தை ஹூசேனிடம் விளக்குகிறார். அது ஒரு எளிமையான ஆனால் புரட்சிகரமான செயல் திட்டம். அதன்படி ஒவ்வொருவரும் ஒரு ‘பாட்’ வைத்துக் கொண்டு, அதை யார் காணலாம் என்று அவரே தீர்மானிப்பதாகும். அவர் விரும்பும் நபர்கள் மட்டும் அதைப் பார்க்க முடியும். இதைத்தான் ஹூசேன் சுதந்திர தொழில் நுட்பம் என்று சொல்கிறார். பயனர்கள் தங்கள் தரவுகள், கட்டமைப்பு, ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். இந்தக் கருத்தும் இப்போது செயல் வடிவம் பெற்றுவிட்டது. பெரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவையில்லாமல், அக்கம்பக்கம் வசிப்போரின் குழு, தங்கள் தங்கள் மேல்தளத்தில் உள்ள ஆன்டெனாக்கள் மூலமாக தொடர்பு கொள்கிறார்கள். ந்யூயார்க்  சிடி மெஷ் என்ற பெயரில் அந்த நகரத்தில் இது செயல்படுகிறது. ஒரு ஆன்டெனா (உணர்கொம்பு) செயல்படவில்லை என்றாலும், மற்றவர்கள் தொடர்ந்து உரையாட முடியும்; இந்த வசதி மையமாகக் கட்டமைக்கப்பட்ட தொலைத் தொடர் நிறுவனங்களில் இல்லை. இதைப் போலவே ‘நெக்ஸ்ட் க்ளவுட்’ என்ற தொழில் நுட்ப வசதியும், உங்கள் மின்னஞ்சலை, கோப்புக்களை, நீங்கள் நம்பும் இயந்திரத்தில் சேமிக்க உதவுகிறது. கண்காணிப்பு முதலாளித்துவத்திற்கு மாற்றாக, நீங்கள் அளிக்கும் தகவல்களுக்கு ‘டேடா ஈவுத் தொகையும்’ இவர்கள் தருகிறார்கள்.

செ.நு. கூட இதைப் பின்பற்றலாம்; கூட்டமைப்புக் கற்றலின் மூலம், செ நு.விற்குப் பயிற்சி கொடுத்து, அடிப்படையான தரவுகளை வெளிப்படுத்தாமல், விளைவுகளை மட்டும் தெரியப்படுத்தலாம். கூகுளின் ஜிபோர்ட் தட்டச்சு இதைச் செயல்படுத்தியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், குவாண்டக் கணினிகளின், பாதுகாப்பிற்கென ‘Kyber’ என்ற செயல்முறையை செய்திப்  பரிமாற்றத்திற்கும், இலக்கக் கையெழுத்தின் பாதுகாப்பிற்காக ‘Dilithium’ (Digital Signature Algorithm based on Lattices- அல்ஜீப்ரா அடிப்படை) ‘SPHINCS+’ ( few-time or one-time hash-based signature) Merkle Tree)  அங்கீகாரம் செய்யவும் உருவாக்கியுள்ளனர். வருங்காலத்தில், குறியீடுகளை நிர்மூலமாக்கும் இயந்திரத் தாக்குதல்கள் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள இவை பயன்படும்.

அடையாளங்களும், நிர்வாகங்களும் மீள் வரையறை செய்யப்படுகின்றன. நீங்கள் யாரென்பதை, மையமான அதிகாரம் சொல்வது அவசியமில்லை; பரவலான ‘அடையாள மையங்கள்’ உங்களை அடையாளம் காண்பதால், உலகெங்கும் வியாபித்திருக்கும் ஒரு அனாவசிய பிம்பம் உங்களுக்குத் தேவையற்றுப் போகிறது; இலக்கக் கடவுச்சீட்டுகளாக இவையே உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும். இலக்க நாணயங்களோ, மெய் நிகர் உலகங்களோ, அந்தந்த சமுதாய அமைப்பினரே நிர்வாகம் செய்ய முடியும்; அதில் வெளிப்படைத் தன்மையும் இருக்கும்; பரவலாக்கப்பட்ட தொடர் அமைப்புகள், ‘ப்ளாக் செயின்’ நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்பில் இருப்பதற்கும், குழுவில் யாருடன் எதைப் பகிர நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் உதவும்.

ப்ரூக்ளினில் உள்ள சிறிய மின்சக்தி நிலையத்தில், அங்குள்ள மக்கள் நேரடியாக மின்சாரத்தை வாங்க முடியும்; மக்கள் பங்கு கொள்ளும் தளங்களில், நிதித் திட்டங்களும், கொள்கைகளும் விவாதிக்கப்பட்டு கூட்டு முடிவு எடுக்கப்படுகிறது. என்ன ஒன்று, இவற்றை இயக்க, புரிந்து கொள்ள, இலக்க செயல்முறை அறிவு தேவைப்படும். அதனால்தான், இலக்க அறிவினை மேம்படுத்த உலகெங்கிலும் பல நாடுகள் முயல்கின்றன. நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? நமது தகவல்களை பாதுகாத்துக் கொள்வது, நம் தளங்கள் கொந்தப்படாமல் இருக்க நம்பிக்கையான இணைப்புகளில் மட்டும் சேர்வது, இந்தத் துறையில் அடிப்படை அறிவு கொண்டிருப்பது  முக்கியம். அதற்காக, ‘தரவு உள்ளீட்டு குறியீட்டு முறைகள்,’ கணினி இயங்கு முறைகள், அல்ஜீப்ரா போன்ற மேம்பட்ட கணிதங்களின் அறிவு, கணினி மொழி அறிதல் இவைகளெல்லாம் அத்யாவசியமில்லை. அலைபேசியை, நம் சொந்தக் கணினியை பயன்படுத்துவதைப் போல இதையும் எளிதாகவே செய்து கொள்ளலாம்.

நம் அண்டை நாட்டு லாகூரில், ‘மைனஸ் ஃபிஃப்டீன் ஃபேரஹீட் திட்டம்’ என்ற ஒன்றை செயல்படுத்துகிறார்கள். கோடையில் தாங்க முடியாத வெப்பத்தை எதிர்கொள்ளவும், அளக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவுமாக, உணரிகள், மெஷ் வலைத்தளங்கள் மூலம், நகரை கடும் வெப்பத்திலிருந்து ஓரளவிற்கேனும் குளுமைப்படுத்தி, அதில் முனைவோருக்கு தொடர் சங்கிலி ஊக்கப் பரிசு கொடுத்து  செயல் படுத்துகிறார்கள். (2019க்குப் பிறகு இந்த திட்டத்தின் நிலை என்ன என்று தெரியவில்லை)

மேற்குறிப்பட்ட அனைத்துமே, உங்களுக்கு விடுதலை தருமா என்பது கேள்விக்குறியே. ஆனால், தொழில் நுட்பம் உங்களை வழி நடத்துவதற்குப் பதிலாக, நீங்கள் அதை உங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை கீற்று தென்படுகிறது.

தொகுப்பாக மேற்சொன்னவற்றைப் பார்ப்போம்

மனித-இயந்திர பிணைப்பு, நிதியை, பொருளாதாரத்தை, கொள்கைகளை, நம் கண்களுக்குத் தெரியாத கட்டுப்பாட்டை எவ்விதம் பின்னூட்டங்களின் மூலம் அமைக்கிறது எனப் பார்த்தோம்.

இதே பின்னூட்டங்கள் தான், கணினி-மூளை கலந்துரையாடலில், ஒரு நொடியில் விரைந்து செயல்பட போர்க்களத்தில் பயன்படுவதை, அதிக பளு தாங்கி நடக்க, ஒட உதவுவதை, தானியங்கி அழிவு தளவாடங்கள் செயலாற்ற உதவுவதை என்று பார்த்தோம். அமைதியின்மை, வருமான ஏற்றத்தாழ்வுகள், சமத்துவமின்மை, வாய்ப்பின்மை அனைத்தும் தொழில் நுட்பத்தால் மேலும் பெருவதைப் பார்த்தோம். அந்தரங்கம் அற்றுப் போன நிலையையும் பார்த்தோம்.

ஆயினும் மாற்றுக்கள் உண்டு; உள்சமூக இணக்கம், கலந்துரையாடல், நமக்கான தேர்வுகள், நமக்கான வலைத்தளங்கள் என்று மனிதத் தன்மையுடன் கூடிய மாற்று இருக்கிறது. தேர்வு நம் கையில்.

திருமந்திரம்

சைபர்னெடிக்ஸ் பற்றி படிக்கும் போது, தவிர்க்க முடியாமல் திருமூலரைப் பற்றிய எண்ணம் எழுகிறது. முன்னது அறிவியலின் பல துறைக் கலவை; பின்னதோ ஆன்மீகம். ஆனால், இரண்டும், உயிரிகளின் தொடர்புகளை, செய்திப் பரிமாற்றத்தை, நலம் பேணுவதை வலியுறுத்துகின்றன, இரண்டுமே சிக்கலான அமைப்புகளில் தென்படும், சுய நெறிமுறைகளையும், சார்ந்திருப்பதையும் சொல்கின்றன. இரண்டும் (ஜீவனும், இறையும்) பிணைந்திருந்து இயங்குவதை ‘அத்வைதம்’ என்று சொல்கிறார் திருமூலர்; சார்பு நிலையைக் குறிக்கவில்லையா இது?

பின்னூட்டங்கள் சைபர்நெடிக்சிற்கு முதுகெலும்பு என்றால், ‘ப்ராணாயாமத்தின்’ மூலம், உடலை, மனதை, சிந்தனையை வலுப்படுத்தும் மூச்சினை பின்னூட்டமாக திருமூலர் சொல்கிறார்.

மேம்பட்ட நிலையை அடைவதற்கு சுய நெறியும், விடுதலையும் தேவை என்பதை இருவரும் ஒப்புக் கொள்கிறார்கள். முன்னதில் நிலைத்தன்மை பேசப்படுகிறதென்றால், பின்னதில் உடல், மனம் நிலைத் தன்மையுடன் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளச் சொல்கிறது.

முன்னதில், தொடர்பும், செய்திப் பரிமாற்றமும் முக்கிய அம்சங்கள்; பின்னதில் ‘சைதன்யமே’ முக்கியம்; அது இருந்தால் தான், செய்திப் பரிமற்றம், தொடர்பு அனைத்தும் வசப்படும். வெளி, வெளியோடு கலந்தது; ஒளி, ஒளியோடு கலந்தது.

அதில், மனித உடல் ஒரு உயிரியல் இயந்திரம்; காய கல்பமாக ‘உடம்பை வளர்த்தோர் உயிர் வளர்த்தோரே’ என்கிறார் திருமூலர். 

உசாவிகள்:

  • The Cybernetic Society by Amir Husain, 
  • திருமூலர்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.