நெஞ்சம் மறப்பதில்லை

ஜப்பானியப் பழங்குறுநூறு – 55

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
滝の音は
絶えて久しく
なりぬれど
名こそ流れて
なほ聞こえけれ

கனா எழுத்துருக்களில்
たきのおとは
たえてひさしく
なりぬれど
なこそながれて
なほきこえけれ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் கின்த்தோ

காலம்: கி.பி. 966-1041.

ஜப்பானிய மொழியிலும் சீன மொழியிலும் பாடல் புனையும் ஆற்றல் பெற்ற மிகச்சில புலவர்களில் இவரும் ஒருவர். ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த யொரிததா என்ற அமைச்சரின் மகன் இவர். தொடக்கத்தில் அரசவையில் அதிகாரியாக இருந்த இவர் தனது மகளின் மறைவுக்குப் பின்னர் துறவறம் பூண்டு தலைநகர் கியோத்தோவின் வடக்கில் இருந்த ஒரு பள்ளத்தாக்கின் சரிவில் குடில் அமைத்து அங்கே வசிக்கத் தொடங்கினார். அந்தக் குடில் அவரது சமகாலத்திய புலவர்களின் சரணாலயமாக விளங்கியது. அவர் உயிருடன் இருந்தவரை அக்குடில் பல கவிதை விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான கருத்து விவாதங்களையும் கண்ட சாட்சியாக விளங்கிவந்தது.

ஷூய்ஷூ தொகுப்பின் தொகுப்பாளர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். தனியொருவராக வகான் ரோசெய்ஷூ என்ற பாடுவதற்கான சீன மற்றும் ஜப்பானியப் பாடல் தொகுப்பு ஒன்றையும் உருவாக்கினார். ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் காலத்தால் அழியாத 36 கவிஞர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 89 பாடல்களும் தனிப்பாடல் திரட்டு ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: ஒருகாலத்தில் புகழ்பெற்ற அருவியைப் பற்றி

பாடலின் பொருள்: தாய்கக்குஜி கோயிலில் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சியை இன்று பார்க்க முடியாவிடினும் அதன் ஓசை மட்டும் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

தொடர்ச்சியான பல காதல் பாடல்களுக்குப் பின்னர் இயற்கையைப் போற்றும் ஒரு பாடல். பேரரசர் சாகா (கி.பி 809-823) தலைநகர் கியோத்தோவில் தாய்கக்குஜி கோயிலில் நீர்வீழ்ச்சி ஒன்றை அமைத்தார். அது அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கியது. இன்று அது வறண்டுபோய் நீரின்றிக் காணப்படுகிறது. இருப்பினும் அந்நீர்வீழ்ச்சியின் புகழ் இன்றளவும் குன்றாமல் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது நீர்வீழ்ச்சியைப் போற்றும் பாடலாகத் தெரிந்தாலும் புலவரின் சொந்த வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கும்போது வேறுபொருள் புலப்படுகிறது. புலவரின் மகள் இறந்தவுடன் அரசவைப் பதவியைத் துறந்து துறவு வாழ்க்கை வாழத் தொடங்கினார் என்பது அவரது மகள்மீது வைத்திருந்த அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. நீர்வீழ்ச்சியை வாழ்க்கையாகவும் அதன் நீரை மகிழ்ச்சியாகவும் புகழை நினைவாகவும் உருவகித்தால் மகள் உயிருடன் இருந்தபோது கொண்டிருந்த மகிழ்ச்சி இன்று இல்லாவிடினும் அதன் நினைவு இன்னும் அழியாமல் இருக்கிறது என்று பொருள்கொள்ளலாம்.

வெண்பா:

சீர்சிறப்பு ஆர்த்தெழும் வாழ்வின் மகிழ்வுமே
பூர்ப்பியம் ஆயினும் மாறிலியாய் – நீர்வீழ்ச்சி
தன்னிலை மாறி நிலையை இழப்பினும்
என்றும் நிலைக்கும் புகழ்

பூர்ப்பியம் – பழங்கதை

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

ஜப்பானியப் பழங்குறுநூறு

வாள்போல் வைகறை நிலவினும் நெடிது!

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.