சிவிங்கி – அத்தியாயம் நான்கு

This entry is part 4 of 4 in the series சிவிங்கி
சித்திரம்: அருண்
சித்திரம்: அருண்

நாய்களின் கோரிக்கை

  அனுபவம் இல்லாத தெய்வமாக இருந்தது உல்லுலூ. 

கதை முடிந்தது என்று சூசனை காட்ட இன்னொரு முறை குரல் எடுத்துக் கூவியது சிவிங்கி. வாராது வந்த குரல் செல்வமன்றோ.

அவ்வளவுதானா என்று அங்கே குழுமியிருந்த உயிரினங்கள் ஏமாற்றத்துடன் கேட்டன. வாதினியும் சாதினியும்   உறவு கொள்வது   குறித்து நீயோ உல்லுலூவோ இன்னும்  சொல்ல வேண்டும் என்று நாய்கள் சத்தம் போட்டன. 

அவர்கள் உறவின் போது நானோ உல்லுலூவோ அங்கே இல்லையே என்றது சிவிங்கி. தத்ரூபமாகச் சித்தரிக்க வேண்டுமென்று யார் கேட்டது? சுவானப் பிரமுகர்கள், என்றால் நாய் வம்சப் பிரதிநிதிகள் நகைத்தன,

 தரையோடு தரையாக நகரும் போமரேனியன் நாய், சிவிங்கியின் காலை ஈர்ப்போடு நக்கியது.

 அப்படி என்றால் புனைவாக எட்டுக்கட்டிச் சொல்லலாமில்லையா என்று புளகாங்கிதமடைந்தபடி கால் ஊன்றிய சிவிங்கி மேலும் வினவ, போமரேனியன் வானத்துக்குத் தலையுயர்த்தி, செய்க என்று வற்புறுத்தியது. 

நாய் இனத்துக்கு இந்த நாக்கு மட்டும் போதும், சகலமானதையும் சம்பாதித்துக் கொடுத்து விடும் என்று குள்ளநரியொன்று சிரிக்காமல் சொன்னது. கேட்டிருந்த முள்ளம்பன்றி முள் சிலிர்த்துச் சிரித்தது.

கிணறு புக்க தேவதைகள்

எல்லா தேவதைகளும் நடுவில் பொங்கிப் பெருகும் ஊருணிக் கிணறுகளுக்குள் புகுந்தபடி அதியதி பிரம்ம முகூர்த்தம் என்று முணுமுணுத்தன  . 

நானும் போக வேணும். பிரசவ ஆஸ்பத்திரி வாசலில் சைக்கிளை விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.   பூட்டு இல்லை. யாராவது கிளப்பிக்கொண்டு போய்விடுவார்கள் என்று ஆனந்தன் ஓரத்து ஊருணிக் கிணற்றில் கால் விட்டுப் பார்க்க உள்ளே நக்னையாக இருந்த ஒரு வாதினி இனத் தேவதை சதங்கை ஒலித்தது போல் நகைத்து ஆழமாக உட்புகுந்து மறைந்தாள். 

உல்லுலூ தெய்வம் ஓடி வந்து தாழப் பறக்க முயன்றபடி எரிச்சல் காட்டி கிணற்றில் உமிழ்ந்தது. 

என்றால் கேளும். நானும் வாதினி இனத் தேவதைதான். சிவிங்கியாக உருமாறி இருக்கிறேன். உறவாடலாமா? சிவிங்கி ஆர்வமாகக் கேட்டது.

குக்கல், எனில் நாய் இனம் சில தொடர் நகைப்பு நிகழ்த்தி காலுயர்த்தி குகைச்சுவர் நனைத்தது. உல்லுலூ சாதினி அருகில் வந்து காலுயர்த்தியது .

உல்லுலூவின் கன்னத்தில் அறைந்துவிட்டுத் தடவிக் கொடுத்தாள் வாதினி. 

பேயுரு கொண்ட தேவதைகள்

கிணறுகளில் ஒன்றினுள் அத்தனை தேவதைகளும் பேயுரு கொண்டன. அழுக்குத் தோலும், நாறும் கிழிசல் உடுப்பும், எட்டு ஊருக்குக் கெட்ட வாடை அடிக்கும் வாச்சி வாச்சியான பற்களுமாக அவை  எல்லோரும் எல்லோருடனும் பொருதி நின்றன. எல்லோரும் எல்லாருமாகக் கலந்து நின்றன.

 பிசாசு உருவில் அத்தனை வாதினி இனமும் சாதினி இனமும் சுய உருக்காட்டிக் கட்டிப் பிடித்துக் கடித்து, குருதி பருகி, ஓவென சத்தமின்றி உதடுகள் சிவந்து,  வழிய ரத்தத்தில் மூழ்கின. அவை மண் பாத்திரங்களில் நிணமும், மாமிசமும், பல்லும் எல்லுமாகக் கலந்து வைத்தன. 

வாதினியும் சாதினியும், ஆகட்டும் சீக்கிரம் ஆகட்டும் பிரம்ம முகூர்த்தம் வந்து கொண்டிருக்கிறது. உண்டு பசியாறிப் போக வேணும் என்று அவசரப்படுத்தின. 

சொல்லி நிறுத்தியது ஒட்டகச் சிவிங்கி. 

நிறுத்த வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தன விஜயதி மற்றும் அஜயதி வகை இனங்களில் பட்ட யார் யாரோ. புன்சிரிப்போடு தலையாட்டி, வீதியோர மரங்களின் பசுமையான இலையும் தழையும் பறித்து மென்றபடி இதோ இன்னும் கொஞ்சம்தான்  என்று சிவிங்கி கதையைத் தொடர்ந்தது. 

ஒட்டகச் சிவிங்கியின் ஞாபக மறதி

என் நினைவு கொஞ்சம் பிழையாகி விட்டது. வாதினி சாதினி போரில் பங்கெடுத்தது நான் இல்லை. என் பாட்டனார்.  மன்னிக்க வேண்டும். அது வேறு போர், வேறு சிவிங்கி. அடுத்த பௌர்ணமியன்று அதைச் சொல்லக் கேட்கலாம். 

தெரு அமைதியாக இன்னும் ஒரு தடவை இலை தழை மென்று   தெருத் திரும்பி மூத்த சிவிங்கி மெல்ல நடந்து வந்தது. முன்னூறு ஆண்டு முந்தைய சூழலாக அது நடக்க நடக்க மாறிக்கொண்டு வந்தது. ஆனந்தனும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு முன்னால் விரியும் கப்பிமண் தெருவில் நடந்தான். 

ஆனந்தன் ஓ ஆனந்தன் வீடு போய்ச் சேர இவ்வளவு அவசரமா? பின்னால் இருந்து ஒட்டகச் சிவிங்கி கேட்டபடி ஓட்டமும் நடையுமாக வந்தது. எங்கேயாவது சென்றடைய வேண்டும். நடக்கத் தொடங்கி விட்டேனே என்று முணுமுணுத்தபடி  நகர்ந்தான் ஆனந்தன். 

நான் உனக்குக் கதை சொல்லத் தொடங்கிய சிவிங்கி இல்லை. முன்னூறு வருடம் முந்தியவன்.  

அதுதான் சொன்னீர்களே இன்னொரு வாதினி சாதினி போர், கலவிக் கதை அடுத்த முழுமதி நாளன்று சொல்வதாக வாக்குக் கொடுத்ததற்கு நன்றி, 

வாதினியும், சாதினியும் கூட முன்னூறு வருடம் முந்திய பேய்களா அல்லது பரம்பரையில்  பட்ட தேவதைகளா எனக் கேட்டபடி வேட்டி திருத்திக் கட்டியபடி நடுத்தெருவில்  சோடியம் விளக்குகள் உமிழும் மஞ்சள் ஒளி படர நின்றான் அவன். 

ஏழு இரவு ஏழு பகல் ஓயாமல் நடந்த போர்

சரியாகச் சொன்னாய் ஆனந்தா, முன்னூறு வருடம் முன்னால் வாதினியும் சாதினியும் முழுக்க முழுக்கப் பேய்க்கூட்டங்களின் தலைமை வகித்திருந்தன. அந்த நேரத்தில் நடந்த பூண்டு  யுத்தத்தில் தான் நிலை மாறியது. ஒட்டகச் சிவிங்கி சொன்னது. 

பூண்டு யுத்தம் என்றால்? பூண்டு எறிந்து தாக்கும் போர். சிவிங்கி சொன்னது.

அரை மணி நேரம் நடந்த பேய்ச் சண்டைகளிலிருந்து ஏழு பகல் ஏழு இரவு விடாமல்   இப்படியான பல போர்கள் நடந்தன தான். அவை எல்லாம் சிறப்பு யுத்த வகையில் பட்டவை.

எல்லாப் போர்களும் நிகழ்ந்ததாகக் கருதப்பட்டன. ஒரு துப்பாக்கி வெடித்துக்கூட சம்பவம் ஆனதில்லை எதுவும். ஏதேதோ காரணம் காட்டி நடந்ததாகக் கருதப்படும் யுத்தங்கள் அவை.   யுத்தம் எதையும் பிரபஞ்சம் இனித் தாங்காது.  

ஏழு இரவு, ஏழு தினம் வானத்தைப் பார்த்து விளையாட்டுத் துப்பாக்கி சுட்டு நடைபெற்ற சமர் இவற்றில் முக்கியமானது. அரசு இரண்டாகப் பிரிந்து இரு வகுப்புக்கும் நிதி உதவி செய்து நிகழ்த்திய வீடியோ விளையாட்டுப் போர் இது. பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட சம்பவமாகும். 

சிவிங்கி, மூன்று நாள் யுத்த நினைவில் அமிழ்ந்திருந்தது.   கொழுந்து இலைகள் பலவற்றை ஒதுக்கி நடந்தது. 

நீங்கள் அந்த யுத்தத்தில் கலந்துகொண்டீர்கள் தானே? ஆனந்தன் கேட்க,  இரண்டு பக்க தேவதைகளில் யார் களைத்து வந்து சிறு ஓய்வு எடுத்தபோதும் உடம்பு முழுக்க நாவால் துடைத்து விட்டேன் என்றது கண்கள் மின்ன. 

ஆனந்தன் மூன்று நாள் போரில் களைத்தவர்களை நாவால் உபசரிப்பது பற்றிக் கூடுதலாகக் கேட்க ஆர்வமடைந்தான். எனினும் இதற்காக சிவிங்கியோடு காடும் மலையும் கடந்து போக முடியுமா? 

இன்னும் ஐந்து நிமிடத்தில் வீடு போய்ச் சேரணும். அதற்குள் மூன்று நாள் யுத்தம் பற்றி ஏதாவது சொல்லேன். கேட்டபடி ஆனந்தன் நடக்க ஒட்டகச் சிவிங்கி, ’யுத்தம் ஒரு மனநிலை’ என்று பாட்டும் ஆட்டமுமாக நடந்தது.

நடந்து வந்தார் அந்த வேடிக்கை காண 

ஐந்து நிமிடம் கழிந்து பத்து நிமிடம் ஆனது. பத்து இருபது நிமிடமானது. வீடுதான் வரவில்லை. இருட்டு மூடிய பாதுகாப்பான நல்லிரவு வீதி வெளிச்சத்தில் கிடந்தது. 

ஆனந்தன் இதுவரை கண்டே இருக்காத வீதி அது. எதிரே நடந்து வந்தபடி சைகை மொழியில் வணங்கிப் போனது ஒட்டகம் ஒன்று. அதைத் தொடர்ந்து உயரமான காட்டுப் பூனை   மீசை ஒதுக்கி கிசுகிசுப்பாக வணங்கி சுதானமாக இருக்கச் சொல்லி ஆனந்தனை எச்சரித்துப் போனது. 

ஜாக்கிரதைக்கு என்ன குறைச்சல், இடுப்புத் துணி தரையில் நழுவி விட்டதா என்று ஆனந்தன் குனிந்து பார்த்துக்கொண்டான் தன்னிச்சையாக. எல்லாம் சரியாகத்தான் இருக்கு. அவனது மூளை செய்தி அனுப்ப, சைகை மொழி மற்றும் தொடு மொழியில் அது மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படத் தயாராக வைக்கப்பட்டது. 

பல்லெலாம் தெரியக் காட்டி

முன்னால் எதிர்ப்பட்டு வால் சுழற்றி வந்த பன்றிமேல் இடறி விழப்போனான் ஆனந்தன். மன்னிப்பு கேட்க மனமில்லை ஏனோ அவனுக்கு. ஆனந்தனைக் கண்ணில் உற்றுப் பார்த்து வாய் திறந்து பல்லெலாம் தெரியக்காட்டிப் பயமுறுத்தியது வராகம். 

இந்தப் பயமொழி முற்றுமாக ஒழிக்கப்பட்டு ஐநூறு ஆண்டுகள் போனது என்றிருக்க பன்றிகள் அதைப் பயன்படுத்துவது எப்படி என்று ஆனந்தன் ஆச்சரியப்பட்டான். 

இப்படியான சட்ட விரோதப் பயன்பாடு குறித்து உடனே குகை அமைப்பு நிர்வாகத்திடம் அறிவிக்க நினைத்து வேண்டாம் என விலக்கினான். கோபக்காரப் பன்றி ஏதாவது ஒரு தருணத்தில் வேண்டியிருக்கலாம். அந்த மொழி கற்கவோ பயன்படுத்தவோ தேவை ஏற்படலாம். 

சின வராகம் – சினை வராகம்

தெரு முனை வரை வால் சுழித்து மெல்ல ஓடிய பன்றி நின்று ஆனந்தனைத் திரும்பிப் பார்த்து சைகை மொழியில் சொன்னது – ஜாக்கிரதை. வாதினி சாதினி இளையவர்களாக ஒப்பனை மூலம் தெரியக் கூடும். அவர்கள் இரண்டு பேர் மட்டுமில்லை அவர்களுடைய தோழிகள் கூட வங்கிழட்டு விலைமாதர். கலந்தால் உலகில், பிரபஞ்சத்தில் இல்லாத சீக்கு எல்லாம் அடையாக அப்பி விடும்.  ஆனந்தனைப் பார்த்து இரைந்தது வராகம். 

ஆனந்தன் தெருவில் கிடந்த சிறு கல்லை எடுத்து எறிந்து, போ என்று பன்றியை விரட்டியபோது தான் அது சினைப் பன்றி என்று அரையிருளில் அதன் வயிற்றைப் பார்த்துத் தெரிந்து கொண்டான். 

மன்னிக்க வேணும்  என்று சொல்லி அப்பன்றியை   எட்டு அங்கம் நிலத்தில் பட வணங்கினான் கண்ணில் நீர் மல்க. ஆனந்தன் அருகே நெருங்கி நின்று பன்றி அறிவுப் பரிமாறியது செவ்வியல் இசைக் குறிப்புகள் ஆகும். 

வராக இசை கேட்க வந்த சீவராசிகள் வேட்கை

அமைதி கோலோச்சிய அந்த இரவு வராக இசை கேட்க ஆர்வமுடன் காத்திருக்க, அசுத்த வஸ்து நனைத்த தரையில் மல்லாக்கக் கிடந்து மேல் ஸ்தாயியில் குரல் எடுத்து கந்தர்வ கானம் பாட ஆரம்பித்தது அவ்வராகம். 

தரைக்குள் துளைத்துப்போய் கவனமாக வளை எடுத்திருந்த காட்டு எலிகள் கூடச் சேர்ந்து பாடுவதற்கு முன்வந்திட, வேண்டாம் என்று விலக்கியது பன்றி.

 தானே எடுத்துத் தொடுத்து, சென்று தேய்ந்திறுதல் கிரமமாகக் கடைப்பிடித்த புற்று நீங்கிய மண்ணுளிப் பாம்புகள் வராகத்தின் கால் மேலேறி முகத்துக்கு மேல் கொத்தாகக் குடை பிடித்தது போல் படம் எடுத்து ஆடின. அரை மணி நேரம் தேவ கானமும் அசுர கானமுமாகக் கலந்து இசைத்து வால் சுழற்றி ஓடி நடந்தது வராகம். 

ஒட்டகச் சிவிங்கிகள் இசைக்குமோ என்ற ஆனந்தனின் கேள்விக்குப் புன்னகைத்துச் சொன்னது பெருவழியில் கூட நடந்து வந்த சிவிங்கி –  இருநூறு ஆண்டு முன்பு வரை நாங்கள் பேசவும் திறனற்றிருந்தோம். அப்புறம் தான் பேச்சு வந்தது. எங்களுக்குப் பேச்சு வந்தபோது தொடுமொழி பிரபஞ்சம் முழுக்கப் பரவியதால் பேச்சு நிகழ்த்த எந்த முகாந்தரமும் இல்லாமல் போனது. இன்னும் இருக்கு கற்றுக்கொள்ள.

வாதினியும் சாதினியும் ஆனந்தனுக்களித்த விருந்து உபசாரம்

ஆனந்தன் இன்னும் தன் குகைவீடு வரவில்லையே என்று மறுபடி அங்கலாய்த்தான். நிண வாடை அவன் முதுகுப்புறம் திடமாக வீச வாதினியும் சாதினியும் சிறுநீர் தேங்கிக்கிடந்த வழியோரம் கபாலங்களை தசையும், மஞ்ஞையும், எலும்பும், பல்லும் நிறைத்து, உப்புக்காக   ஊருணி நீர் கலந்து, களிமண் குழைத்த அடுப்பு    சிக்கிமுக்கிக் கல்கொண்டு ஏற்றி எரிய வைத்து, சதையும் தசையும் கூட்டிய வாடை காற்றில்லாத வெளியில் நிறைந்திடச் சமைத்தன. ஆனந்தனின் இருப்பிடம் வந்திருந்தது.

சிறுவனே உண்டிடு என ஆளுக்கொரு சிரட்டையில் சமைத்த மாமிசம் நிரப்பி வந்து ஆனந்தனுக்கு அன்போடு அளித்தன அவை. ருசிபேதம், குணபேதமிருந்தால் சுட்டிக் காட்டிடு என்றும் கோரின. உல்லுலூவுக்கு ஒரு பல் பருக்கை கூடத் தரவில்லை அந்தப் பெண் பேயிருவரும். 

உத்தரவும் உருமாற்றமும்

சூரியன் பிரகாசமாக ஒளிவிட்டது. நிணம் நிறைந்து வாயில் துர்வாடை வீச  வாதினி உத்தரவிட அணைந்து போனது. மறுபடி ஒளிரச் சொன்னது சாதினி. ஒன்றுமாகவில்லை. 

வராகத்தை ஓட்டியபடி குகைக்குள் நுழைந்தது உல்லுலூ தெய்வம். ஆனந்தனும் ஊருணி குழித்த உடையாரும் பிறரும் கூடப் பிரவேசித்தனர். அவரில் சிலர் ஒட்டகச் சிவிங்கிகளாக உருமாறி இருந்தனர். சூரியன் இறந்ததாக படபடத்துப் பேசியபடி இருந்தனர் அனைவரும்.

ஆனந்தன் குகைச் சுவரில் தன் பனி நிழல் பார்த்தபடி இருக்க, பாடும் வராகம் தரையில் உருண்டது குரலெடுத்துப் பாடியபடி. சூரியன் இறந்ததைத் துயரம் மிகுந்த இசையாகப் பாடியபடி இருந்தது அது. அதன் கருவிலிருந்து வராகப் பிஞ்சுகள் ஆமோதித்து ஒருசேர   இசைத்தன. வாதினி குரலிலும் சாதினி குரலிலும் உருக்கொண்டு, வராகக் கருவில் எதிரொலித்து எழுந்த கானமது.

குகை முகப்பில் சத்தம். குகை நகர ஆரம்பித்திருந்தது. குகை எல்லாம் நடந்துவர, ஒட்டகச் சிவிங்கிகள் இலக்கு இன்றி எல்லாத் திசையும் நகரத் தொடங்கின. உல்லுலூ என்றபடி ஆனந்தன் நிணம் உண்ணத் தொடங்க, இரு பாதியாகக் கிழிந்த அவன் வாதினியானாள். சாதினியும் ஆனாள். சினை வராகமானாள். உல்லுலூ தெய்வமும் ஆனந்தனே ஆனான். ஒட்டகச் சிவிங்கியுமானான். ஊருணி குழித்த உடையாருமானான். பாரவிப் பெண்ணும் ஆனான். நிணமும், சதையும், எலும்பும், பல்லும் வாயிலிட்டுச் சவைக்க, கோதுமை  மாவுப் பண்டமாகின. ஊருணிக் கிணறுகள் பொங்கி வழிந்தன. சற்றுமுன் சூரியன் மறைந்தான். நாமும் கதையை முடித்தோம். உலகு நல்லின்பத்தில் வாழ்க.

சிவிங்கி

சிவிங்கி – அத்தியாயம் மூன்று

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.