ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்கள் என்றவுடன் இரண்டு சம்பவங்கள் நினைவிற்கு வருகிறது. போதைப் பொருள் வாங்க நகையை அடமானத்திற்கு தர மாட்டேன் என்று சொன்னதால் புருஷனால் மூக்கும் உதடுகளும் அறுபட்டவர் ஒருவர்; காவல்துறையில் பணியாற்றுவதால் சுட்டுக் கொல்லப்பட்ட நெகர் இன்னொருவர். அந்த மாதிரி சம்பவங்களே, கேட்டும் படித்தும் அலுத்த காலத்தில் கமாண்டர் புறாவை ஆபகானிஸ்தானுக்கே சென்று சந்தித்த ஜென் பெர்சி அறிமுகம் செய்கிறார். ருஷியாவிற்கு எதிராக 150க்கும் மேற்பட்ட போராளிகளை ஒன்றிணைத்து சண்டை போட்டவர். இப்பொழுதும் தாலிபானுக்கு எதிராக தன்னுடைய குறுநிலத்தை இரட்சிப்பவர். அறுபது வயதானாலும் மூட்டு வலி இருந்தாலும் ஏகே 47 பிடிப்பவர். எவ்வாறு உள்ளூர் மக்களுக்கு நாயகியாக வழிகாட்டுகிறார் என்பதன் நேரடி அனுபவத்தை பதிந்திருக்கிறார்.
Category: மகரந்தம்
மகரந்தம்
ஐஸிஸ் பயங்கரவாதக் கும்பலை ஒழிக்கிறோம் என்று கிளம்பியுள்ள அமெரிக்க அரசு முதல் சில தினங்களில் எத்தனை செலவழித்துள்ளது? முதல் நாள் சிரியாவில் வீசிய குண்டுகளுக்கு அமெரிக்க ராணுவத்துக்கு ஆன செலவு இந்தியாவின் சந்திராயன் சாடிலைட்டை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஆன பயணச் செலவை விட அதிகமாம். ஒரு நாள் குண்டு வீச்சுக்கு அமெரிக்காவுக்கு ஆன செலவு 79 மிலியன் டாலர்கள். இந்திய செவ்வாய் கிரகப் பயணச் செலவு $74 மிலியன் டாலர்கள். இந்தச் செலவைத் தவிர வேறு செலவுகளும் அமெரிக்க விமானப் படைக்கு உண்டு. அவற்றில் அந்த ஏவுகணைகளுக்கு ஆகும் செலவைக் கணக்கிலெடுத்தால் எப்படி இருக்கும்?
மகரந்தம்
தற்செயலாக நூலகத்திலிருந்து கொண்டு வந்த ஸர் ஜான் ப்ராங்கிளினின் ஆர்க்டிக் கடற்பயணம் பற்றிய புத்தகத்தினால்தான் துருவப் பயண சாகஸங்கள் பற்றி ஆர்வம் ஏற்பட்டது. இரு முறை, இந்த மனிதர் ஆர்க்டிக் நோக்கி வடமேற்கு திசையில் செல்வழியைத் தேடிப் பயணமானார். இந்த நடைப்பகுதியே கற்பனை; இரண்டாம் முறை திரும்ப வரவேயில்லை. காணாமல் போனவர்களைத் தேடிப் பல பயணங்கள் நடந்தன. கப்பல்கள் மூழ்கின என்று இனூயிட் மக்கள் சொல்ல, மூழ்கும் முன் மனிதர்கள் நடந்து போனதைப் பார்த்ததாகவும் சொல்ல, பின் வெகு சிலரின் சமாதிகளும் கண்களில் சிக்கினாலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் தலையெழுத்து என்ன என்பது மர்மமாகவே இருந்தது. உயிர் பிழைக்க, பலரும் நர மாமிசம் சாப்பிட்ட தடயங்களும் கிடைக்க…
மகரந்தம்
பேரண்டமே மாயத்தோற்றமா என்றும் அகில உலகுமே ஹோலோகிரமா (hologram) என்று இயற்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தேகம் வந்தது. தொலைக்காட்சியில் தெரியும் பிம்பங்களுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியும் என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன எண்ணுவார்கள்? ‘டிவி பெட்டிக்குள் இருந்தாலும், நம்முடையது முப்பரிமாண உலகம்! நாம் அனைவருமே நிஜம்!!’ பூவுலகின் மனிதர்கள் கூட இப்படித்தான் கற்பனையில் வாழ்கிறோமா என்பதை சோதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். மென் இன் பிளாக், மேட்ரிக்ஸ் போன்ற திரைப்படங்களில் இது போன்ற கற்பனைகளைப் பார்த்து இருப்போம்.
மகரந்தம்
மனிதருக்கு 25 வயதிலிருந்தே கடும் கண் நோய். 48 வயதுக்குள் அவருடைய இடது கண்ணில் 800 இல் ஒரு பங்குதான் செயல்பட்டதாம். இன்னொரு கண் 30 இல் ஒரு பங்குதான். அவருடைய கண்ணாடியின் சக்தி +17 இரண்டு கண்ணிலும். பிறர் எழுத்து, கடிதங்களை உருப்பெருக்கும் கண்ணாடி கொண்டுதான் அவரால் படிக்க முடிந்ததாம். வாழ்நாளில் பெரும்பகுதி நோய்வாய்ப்பட்டே காலம் கழித்திருக்கிறார் ஜேம்ஸ் ஜாய்ஸ். 58 வயதில் இறக்கும்போதும் வயிற்றுப் புண்ணால் இறந்திருக்கிறார். இத்தனை பிரச்சினைகளோடு அவர் எழுதியவையோ அசுர சாதனை என்று சொல்லப்படக் கூடிய வகை நாவல்கள், சிறுகதைகள்.
மகரந்தம்
ஒசாமா பின் லாடனைத் துரத்திக் கொண்டு டோரா போரா மலைக்கு சென்றவர் டால்டன் ஃப்யூரி. இப்பொழுது அரசாங்கத்தின் பாதுகாப்பு சறுக்கல்களை ஆய்ந்து கொண்டிருக்கிறார். மின் உற்பத்தி நிலையங்களுக்கு எவ்வாறு எல்லாம் தீங்கு விளையலாம் என்பதை வைத்து நாவல் எழுதி இருக்கிறார். அடிதடி வீடியோ விளையாட்டுகளை வடிவமைப்பதற்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். கூடவே, அமெரிக்காவில் இருக்கும் 61 அணு நிலையங்களில் நாற்பதில் அத்துமீறி, தடைசெய்யப்பட்ட பிரதேசங்களுக்குள் நுழைந்திருக்கிறார். கதிரியக்க நாசகாரச் செயலை முடிக்குமளவு பதினாறு தடவை முன்னேறியிருக்கிறார். கூடங்குளத்திற்கு இன்னும் வரவில்லையாம்.
மகரந்தம்
கணித ஆசிரியர்களுக்கு உதவித் தொகை அளிப்பது மட்டுமல்லாமல், அவருக்கு பிடித்த தலைப்புகளான மரபணு புதிர்கள், வாழ்க்கை தோற்றம், மன இறுக்கத்தின் வேர்கள், கணித மற்றும் கணினி எல்லைகளை விரிவாக்குதல், அடிப்படை இயற்பியல் மற்றும் அகிலத்தின் துவக்க அமைப்பு என நிதிநல்கை நீள்கிறது. அவருக்கு மறதி இருந்தது. பதவி இறக்கம் செய்யப்பட்டார். அவரின் கணினி நிரலாக்கங்கள் பயனில்லாதது. கணிக் குறியீடுகளை மறக்கிறார். அதனால் வேலையை விட்டு நீக்கப்பட்டார். தனது வாழ்க்கை தோல்விகளுக்கு பின் அவரால் இதை செய்ய முடியும் என்றால், இன்றைய இளைஞர்கள் என்ன சாதிக்கலாம் என்னும் செய்தி தெளிவாக உள்ளதை விவரிக்கும் கட்டுரை.
மகரந்தம்
ஆங்கிலத்தில் introvert என்றால் என்ன அர்த்தம்? விக்கிப்பிடியாவைக் கேட்டால், ‘தன்னுடைய நலத்தைப் பற்றி சிந்திப்பவர்’. பொதுவில் பேசத் தயங்குபவரையும் அறிமுகமில்லாதவர்களிடம் ஒடுங்கி இருப்பவர்களையும் அகமுக சிந்தனையாளர் என நினைக்கிறார்கள். தடாலடியாகக் கூட்டங்களில் முழங்குபவர்களையும் படோடாபமாக களத்தில் இறங்கி களேபரம் செய்பவர்களை எக்ஸ்ட்ரொவெர்ட் என எதிர்ப்பதத்தில் வைக்கிறார்கள். இந்தப் பிரிவுகள் சரியா? நீங்கள் இதில் எந்த ரகம்? எப்படி இந்த வகையறாக்கள் தொக்கி நிற்கின்றன என ஸ்காட் பாரி கௌஃப்மான் அலசுகிறார்
மகரந்தம்
இதை எப்படிக் கண்டு பிடித்தார். பின் அதைத் தன் நிறுவனத்து மேலாளர்களிடம் சொல்லுமுன் எத்தனை தயங்கினார். பலமுறை சோதித்த பின்னரே அறிவித்தார் என்பதெல்லாம் கீழ்க்கண்ட செய்திக் குறிப்பில் கிட்டுகின்றன. உலகில் உள்ள கொலைக் கருவிகளுக்கெல்லாம் தடுப்பான ஒரு மேலங்கியைத் தயாரித்துப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காக்க உதவியவர் ஒரு பெண் அறிவியலாளர் என்பது எத்தனை பொருத்தமான விஷயம்?!
மகரந்தம்
மூட நம்பிக்கைகளும், ஒற்றைத் திரிக் கருத்துகளுமே நிரம்பிய மதம் எதுவானாலும் அது வாழ்வுக்கு விஷத்தைத்தான் அதிக பட்சமாகக் கொடுக்கும் என்பதே உகாண்டாவிற்கு நேர்ந்த கதை பற்றிய கட்டுரையில் புரிகிறது. ஒரு நாட்டில் விஷம் கக்கும் மதம் இன்னொரு நாட்டில் சுதந்திர ஜோதியாகத் தெரிவது என்பது நிச்சயம் இரண்டாவது நாட்டில் அதன் பிரச்சாரத் தந்திரம் வெற்றி பெற்றதாலிருக்கலாம் அல்லது அந்நாட்டு அறிவாளர்களுக்கு நிஜமாகவே புத்தி மட்டு என்பதாலுமிருக்கலாம். விவிலியத்தில் சொல்லி இருக்கிறதில்லையா, சில காசுகளுக்கு கருணாளரையே விற்கக் கூடியவர் அவரருகேயே உண்டு என்று…
மகரந்தம்
சீனர்களுக்கு எண்கள் மீது அப்படி ஒரு காதல். சீனாவில் கார் வாங்க, விற்க 92.காம்; வலையில் விளையாட 4399.காம். ஆங்கிலம் என்பது சீனர்களுக்கு விளக்கெண்ணெய் குடிப்பது என்றால், எண்கள் என்றால் வெண்ணெய் உண்பது போல் சுளுவானது. அதுவும் ஆங்கில இணைய முகவரிகளையும் அதில் உள்ள ஆங்கில எழுத்துக்களையும் ஹாட்மெயில்.காம் என நினைவில் வைத்திருப்பதை விட அதை ஒத்த சீன எண்களை ஞாபகம் வைப்பது சுலபம். அதிலும் ஒத்த ஒலியுடைய வார்த்தைகளும் எண்களும் இருப்பதால், சீனத்தை இணையத்தில் புழங்குபவர்கள் இடையே இது சுருக்கெழுத்தாகவே மாறிவிட்டது. 1 என்றால் “வேண்டும்”; 2 என்றால் “காதல்”
மகரந்தம்
உலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும், ஜனநாயக நாடாகவும் கருதப்படும், தன்னை அப்படியே உலகுக்கு முன் தொடர்ந்து சித்திரித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா உண்மையில் எப்படி இருக்கிறது? நடைமுறையில் ஒரு அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை வைத்துத்தான் இப்படிக் கேள்விகளுக்குப் பதில் காண முடியும். சில நடப்புகளை வைத்து ஒரு நாட்டையே எடை போட முடியாது என்பது உண்மைதான். ஆனால் இங்கு கொடுக்கப்படுவது ஏதோ சில நடப்புகள் மட்டும் அல்ல. பல லட்சம் பேர்களுக்கு இங்கு கொடுக்கப்படும் சில நடப்புகளைப் போன்றன ஏற்கனவே கடந்த சில வருடங்களில் நிகழ்ந்திருக்கின்றன என்பது அமெரிக்காவின் கடந்த சில வருட நிதி நிலைமையையும், அது சார்ந்த பல குளறுபடிகளையும் பற்றிய செய்திகளைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
மகரந்தம்
இவர்கள் பண்டைப் பண்பாடுகளையும், மரபுகளையும் இழித்துரைக்காத நாளே இல்லை என்பதுதான் அபத்த நாடகங்களின் உச்சம். அதுவும் இடது, முற்போக்கு என்ற முகமூடியை அணிந்து கொண்டு இவர்கள் ஆடும் அபத்த நாடகங்களில் பற்பலவும் வெறும் கேலிக் கூத்துகள். இங்கே ஒரு கேலிக்கூத்தை மேற்கின் ‘விளையாட்டு’ அமைப்புகள் ஆடியிருப்பதை ஒரு பெண் அம்பலப்படுத்துகிறார். விளையாட்டு என்ற சொல்லையே அபத்தமாக்கி இருப்பன பல நாட்டு ‘விளையாட்டு’ச் சீரமைப்பு நிறுவனங்கள். அவை கொணரும் சீர் என்ன வகைத்தது என்றால், பற்பல பெண்களின் உடல்களைச் சித்திரவதைக்குள்ளாக்கி, அவமதிப்பதுதான் என்று இவர் வாதிடுகிறார்.
மகரந்தம்
சினிமாவைப் பற்றி என்பதை விட அதன் பின்னணியில் என்னென்ன கிறுக்குத் தனங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். உலகெங்கும் பெண்கள் மீதான வன்முறை குறித்து ஏராளமான தகவல்களும், செய்திக் குறிப்புகளும், கடும் விமர்சனங்களும், பெண்களின் போராட்டங்களும் எழுந்துள்ள இந்தக் காலகட்டத்தில்தான் உலகெங்கும் பன்னாடுகளிலும் பெண்களுக்கெதிரான சட்டங்களும் அடக்கு முறையை நாடும் பழம்பெருமை இயக்கங்களும் தலையெடுத்திருக்கின்றன.
மகரந்தம்
மேற்கில் மிருக வளர்ப்பு என்பது அனேகமாக எல்லா நகரங்களிலுமே தடை செய்யப்பட்டிருக்கிற ஒன்று. நாய்கள், பூனைகள் போன்ற சில வளர்ப்பு மிருகங்களுக்கு விலக்கு இருக்கும். ஆனால் அவையும் பெருமளவு நகர அனுமதி பெற்ற மிருகங்களாக இருக்க வேண்டி வரும். சமீபத்தில் அமெரிக்காவிலாவது ஓரளவு இந்தத் தடைகள் விலகி வருகின்றன. பலர் பலவித முன்னாள் குடியானவ வாழ்வுக்குத் திரும்ப விரும்புகிறார்கள். அவர்கள் கோழி வளர்ப்பை மேற்கொள்ள முனைகிறார்கள். .
மகரந்தம்
சீன ஜனாதிபதியின் மருமகன் எங்கெல்லாம் சொத்து வைத்திருக்கிறார் என்னும் தகவல் கசிந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல. அவரைப் போல் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களின் 21,000த்து சொச்ச சொந்தபந்தங்களும் வெளிநாடுகளில் எங்கெல்லாம் செல்வம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் எவ்வளவு பணம் என்பதையும் வெளியிட்டிருக்கிறார்கள். சீன நாட்டை விட்டு நான்கு ட்ரில்லியன் டாலர்கள் எப்படி சென்றது என்பது மட்டும் தெரியவில்லை. ஆனால், எவரிடம் சென்றடைந்திருக்கிறது என்பதை இப்போது அறிய முடிகிறது.
மகரந்தம்
இணையம் வந்த பிறகு உலக இசையைக் கேட்பதில் எந்த வித சிக்கலும் இல்லை. ஆனாலும், இசையை திரையில் பார்ப்பதை விட நேரில் அனுபவிப்பது கிறங்க வைக்கும். சங்கீதத்திலேயே மூழ்க வைக்கும். ஆண்டிற்கொருமுறை உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் கலைஞர்கள் ஒரே மேடையில் தங்களின் புதிய ஆக்கங்களை ஒலிக்கிறார்கள். ஆப்பிரிக்க சேர்ந்திசையையும் வேகப் பாட்டையும் கலப்பவர்கள் முதல் பூர்வகுடி வாத்தியங்களையும் அறுபதுகளின் ஹிந்திப் பாடல்களையும் புத்துருவாக்குபவர்கள் வரை, எல்லோருக்குமே இடம் தருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் இருந்து சில பதிவுகளைக் இங்கே கேட்கலாம்.
மகரந்தம்
நம்முடைய தலைமைச் செயலகம் எவ்வாறு இயங்கும் என்பதை கணினி மூலம் பார்க்கலாம். என்ன என்ன செயல்களை நடத்தும்போது எவ்வாறு இயங்கும் என்பதை கணித்திரை வழியாக உருவகப்படுத்தி பார்க்கலாம். ஆனால், சிரியாவில் உயிர்க்கொல்லிகுண்டுகளை அரசே போடும்போது தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று ஒரு சாரார் மூளையும்; ”அது அவர்கள் உள்ளூர் பிரச்சினை… அதில் தலையிட நாம் மூன்றாம் மனிதர்கள் யார்?” என ஒதுங்கி நிற்கும் மூளையும் எப்படி முடிவெடுக்கிறது? அதை படம் பிடித்து அறிவதுஎப்படி என்னும் ஆராய்ச்சி கடந்த பதினைந்தாண்டுகளில் எங்கே முன்னேறி இருக்கிறது?
மகரந்தம்
அரிஸ்டாட்டிலும் டேகார்த்தும் கலிலீயோவும் மாக்கியவெல்லியும் திருடு போய்விட்டார்கள். அவர்கள் எழுதிய புத்தகங்களின் பண்டைப் பிரதிகள் காணாமல் போய்விட்டன. ஒவ்வொரு புத்தகமும் சராசரியாக பத்து பதினைந்து மில்லியனுக்கு ஏலம் போகும். நேப்பிள்ஸ் நூலகத்தின் காப்பாளரும் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் எப்படி கால்முளைத்து சென்றன என அறியேன் என்று கைவிரித்து விட்டார்.
மகரந்தம்
ஒரு ராணுவமே எப்படி மரக்கறி உணவை நம்பி நடத்தப்பட முடியும்? உலர்ந்த மாமிசம் என்பது ராணுவங்களில், குறிப்பாக மேலை ராணுவங்களில் அடிப்படை உணவு, அல்லது தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட மாமிசம் அப்படிப்பட்ட அடிப்படை உணவு என்றுதானே இத்தனை காலமாக இருந்தது. நார்வேயின் ராணுவம் இப்போது மரக்கறி உணவைத் தன் படையாட்களுக்குக் கொடுக்கப் போகிறதென்றால் அதன் செயல்முறைகள் என்ன்? இந்தக் கட்டுரை அப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று விளக்குகிறது.
மகரந்தம்
ஃப்ரான்ஸீனுக்கு ஒரு மஹா கணபதி கிடைத்திருக்கிறார். இன்று நேற்றல்ல… நாற்பது வருடங்களாக கூட வருகிறார். கல்யாணமான பிறகும் அவரின் மேஜையை அலங்கரித்திருக்கிறார். கல்லூரி கல்லூரியாக வேலை மாறினாலும் சுவரில் அருள்பாலிக்கிறார். மேற்கத்திய உலகில் நம்பிக்கைகள் ரொம்ப அதிகம். சொந்த அணி ஜெயிக்க வேண்டுமானால் ஜட்டி கூட மாற்றாமல் அலுவலுக்கு வருபவர்கள் அதிகம். அவர்களுக்காக பிள்ளையாரின் பெருமையை எடுத்துரைக்கிறார்.
மகரந்தம்
பல்லாயிரம் மக்களின் வாழ்வை அழித்து, பல கோடி உயிரினங்களை ஒழித்த ஒரு பெரும் விபத்தை, இத்தனை ஆண்டுகள் துப்புத் துலக்கி, இறுதியில் ஒரு சில தனி நபர்களை மட்டும் தண்டித்து விட்டு வழக்கை இழுத்து மூடப் போகிறது அமெரிக்க முதலிய அரசு. பெரும் தனக்காரர்களின் பலம் உலகப் பொருளாதாரத்தில் அத்தனை வலுவாக உள்ளது. இந்தியாவில் எத்தனை அழிப்புகளை இவர்கள் ராகு காலத்தின் ஆட்சியில் செய்யப் போகிறார்களோ.
மகரந்தம்
இது ரஷ்யாவில் மட்டும் நடக்கும் கொடுமை இல்லை. அங்கு கட்டாய ராணுவப் பணி என்பது இருப்பதால் இளைஞர்கள் இரண்டு வருடமாவது ராணுவத்தில் சிக்கிக் கொள்ளும் பயங்கரம் இருக்கிறது. மாறாக அமெரிக்க ராணுவமோ மக்கள் தாமாக விரும்பிச் சேரும் வகைப் படை. இதில் சேர்பவர்கள் அனேகமாக கீழ் மத்திய நிலை குடும்பத்து இளைஞர்கள், விவசாய நிலப்பகுதிகளிலிருந்தும், சிற்றூர்களிலிருந்தும், மத நம்பிக்கைகள் அதிகமாக உள்ள சமூகஙகளிலிருந்தும் வருபவர்கள். அனேகமாக உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர்கள். நகர்ப்புறங்களில் இருந்து சேர்பவர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, வறுமைக் கோட்டுக்கு அருகில் உள்ள குடும்பத்தினராகவோ, மத நம்பிக்கை அதிகம் உள்ளவராகவோ இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவத்தில் சில வருடங்கள் பணி புரந்தால் குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சேரும் குடியேற்றக் குடும்பத்தினரும் இதில் உண்டு. இதனாலோ என்னவோ அமெரிக்க ராணுவத்தில் மோசமான வன்முறை அத்தனை அதிகம் இல்லை, என்றாலும் இங்கும் பெண்கள்,சிறுபான்மையினர் மீது அடக்கு முறை அல்லது பால் வன்முறை ஆகியன செலுத்தப்படுகின்றன. உலகில் பல ராணுவங்களிலும் இந்த வகைக் கொடுமை நுழைவு நிலைப் பயிற்சியாளர்கள் மீது பாய்கிறது என்றே தெரிகிறது.
மகரந்தம்
சீனா வேறென்னென்னவோ திசைகளில் மக்களை ஓரம் கட்டினாலும், உற்பத்தித் திறனைப் பெருக்குவதில் கவனம் செலுத்துகிறது. விளைவு இன்றைய தலைமுறைகளுக்கு நாசகரமாக இருக்கலாம். நாளைய தலைமுறைகளுக்குக் கொஞ்சமாவது வளர்ந்த நாடொன்றில் வாழ்வதான உணர்வைத் தர வாய்ப்பு இருக்கிறது. இந்த அமெரிக்கச் செய்தியறிக்கையில் சீனாவின் அதிவேக ரயில் பாதைகளின் நன்மைகள் (அதிகமானவை) தீமைகள் (குறைவு) எல்லாம் பேசப்படுகின்றன.
மகரந்தம்
சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்திற்கு சென்று அங்கிருக்கும் புத்த மடாலயங்களில் தங்கிய அனுபவத்தை ஜெஃப்ரி பதிவாக்கி இருக்கிறார். உயிர் வதையே கூடாது எனும் கொள்கையில் நம்பிக்கையுடைய புத்த பிக்குகள் ஏன் தீக்குளிக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் ஆராய்கிறார்.
மகரந்தம்
நார்வேயை சேர்ந்த பெண்மணிக்கு பதினாறு மாதம் கடுங்காவல் தண்டனையை துபாய் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. வேலை விஷயமாக மார்ச் மாதம் துபாய் வந்திருக்கிறார். உடன் பணியாற்றுபவரின் பாலியல் வல்லுறவில் இருந்து தப்பியோடி உதவி கேட்டிருக்கிறார்.
மகரந்தம்
ஒரு பக்கம் சீனாவின் ‘வெட்டர் படை’யின் தாக்குதல்கள், இன்னொரு பக்கம் அமெரிக்காவின் ‘தோண்டுவார் படையின்’ தாக்குதல்கள். இதற்குத் துணை போகும் ரஷ்ய அரசின் உளவு நிறுவனங்கள், ரஷ்யாவின் பிரத்தியேக அளிப்பு- உலகுக்கு- குற்றக்கும்பல்களும் அவற்றுக்கு வேலை செய்யும் டெக்கி கும்பல்களும், பின் பிரிட்டிஷ், யூரோப்பிய உளவு நிறுவனங்கள், கொரியாவின் உளவு அமைப்புகள், ஏன் இந்தியாவின் சொத்தை அரசு கூட உளவு பார்க்கிறதாமே?
மகரந்தம்
ஷேன் வார்னின் முதல் பந்து – லெக் ஸ்டெம்பிற்கு வெளியே விழுந்தது. கேட்டிங்கும் மற்ற ஃபீல்டர்களும் அந்தத் திசையை நோக்கினார்கள்; நகர்ந்தார்கள். விழுந்த பந்து எழுந்த போது, நம்பவே முடியாத அளவிற்கு எதிர் திசைக்குத் திரும்பி ஆஃப் ஸ்டம்பைத் தொட்டது…
மகரந்தம்
நாய் வளர்ப்பவரா நீங்கள்? என்ன வகை நாய் உங்களுக்குப் பிரியமானது என்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? சின்ன உருவுள்ள நாய்கள் வாழும் காலம் கொஞ்சம் அதிகம். பெரிய நாய்களின் ஆயுள் காலம் குறைவு. இதை மட்டும் கருதாமல், வாழும்போது வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது என்றும் கருதினால் என்ன ஆகும்? சிறு நாய்கள் ஆரோக்கியமாக வாழும் இடைவெளி பல வருடங்கள் கூடுதல். பெரிய உரு நாய்களின் ஆரோக்கியம் தொடர்ந்த நிதானமான சரிவாக உள்ளது.
மகரந்தம்
அச்சுப் புத்தகங்கள் நிறைய விற்கின்றன. இன்னமும் விற்கின்றன என்பது அதிசயம்தான் என நிறைய மேற்குலக கருத்தாளர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். அதே நேரம் முன்னெப்போதையும் விட ஏராளமான எழுத்தாளர்கள் இப்போது புத்தகங்களையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதித் தள்ளுகிறார்கள். நிறைய முழு நேர எழுத்தாளர்கள் இப்போதெல்லாம் புத்தகங்கள் எழுதித் தொழில் நடத்த முடியவில்லை, வேறு வேலைகள் செய்தபடி அவ்வப்போது ஒரு புத்தகம் எழுதலாம், அது ஏதோ சில ஆயிரம் பிரதி விற்றால் அதிகம். அதையும் பெரும் பிரசுரகர்த்தர்களிடம் கொடுத்தால் நமக்கு ஏதும் கிட்டுவதில்லை என்கிறார்கள். அதனால் நிறைய எழுத்தாளர்கள் புத்தகங்களைத் தாமே பிரசுரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
மகரந்தம்
இப்படி பள்ளி மாணவர்களை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள் சில அமெரிக்கப் பல்கலைப் பேராசிரியர்கள். இந்த ஆய்வைப் பற்றிப் படித்தல் நமக்கு வியப்பு கூட எழலாம். இத்தனை எளிய கருத்து, இதை ஏன் வேறு யாரும் செய்யவில்லை?
மகரந்தம்
கடவுள் மன்னிக்கட்டும், தற்போது இந்தியா யுத்தத்தில் பங்கேற்க நேரிட்டால் அஸ்வினும் ஹர்பஜனும் போர் முனைக்கு செல்லுவார்களா என்பது சந்தேகமே.
ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின் பௌலர் யார்க்ஷையரின் ஹெட்லி வெரிட்டி (Hedley Verity) இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் தன்னிச்சையாக சேர்ந்தார்.
மகரந்தம்
ஒரு புறம் ஆழ்கடலில் உள்ள மீன்களை கப்பல் கப்பலாக வாரி எடுத்து மாகடலில் உள்ள மீன் எண்ணிக்கையையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்ட உள்ள கடலேல்லாம் காலியான பின் பஸிபிக் மாகடல், இந்து மாக்கடல் என்று படையெடுக்கக் கிளம்பி இருக்கிறார்கள். இதன் நடுவில் யாரோ இரண்டு மூன்று அறிவியல் ஆய்வாளர்கள், நகர்களில் இருந்து நீர்நிலைகளில் கலக்கும் கழிவு நீரில் மனிதர் உட்கொண்ணும் மன அழுத்த நோய்க்கான மருந்துகளின் எச்ச சொச்சம் கலப்பது மீன்களைப் பாதிக்கிறது என்று அந்த மருந்துகளின் எச்சங்களை கழிவு நீரில் இருந்து அகற்ற வழி காண்கிறார்கள்.
மகரந்தம்
சமீபத்தில் ஃப்ரெஞ்சுப் படையினர், மாலி நாட்டிலிருந்து இந்தக் கும்பலை ஒழித்துக் கட்டவென்று ஒரு படையெடுப்பைச் செய்து அந்நாட்டின் பெரும் பகுதிகளிலிருந்து இவர்களை விரட்டி இருக்கின்றனர். கடந்த ஒரு வருடமாகப் பல நகரங்களைக் கைப்பற்றி இருந்த இஸ்லாமியவாதிகள் துரத்தப்பட்டு மக்கள் விடுதலை பெற்ற பின்னர் அந்த ஒரு வருட பயங்கரங்கள் வெளிவரத் துவங்கி இருக்கின்றன.
மகரந்தம்
பல நூறாண்டுகளாக உலகில் பல வெள்ளையரல்லாத மக்களைக் கொன்று, மதம் மாற்றி, அடிமைகளாக்கி, கொடுங்கோல் ஆட்சி நடத்தி, எத்தி, சுரண்டிச் சேர்த்த பெரும் செல்வம் யூரோப்பியரைப் பாதுகாக்கவில்லை. உலகெங்கும் ஏகாதிபத்தியத் திமிரில் போர்களை நடத்தி, லத்தீன் அமெரிக்க மக்களைக் கொடுங்கோலர் ஆட்சியில் ஆழ்த்தி அந்நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டிச் சேமித்த பெருந்தனம் அமெரிக்கர்களைப் பாதுகாக்கவில்லை. சீனாவிலோ இன்று வேலையில்லாத் திண்டாட்டம் அல்ல பெரும் பிரச்சினை. அங்கு ‘Sectoral imbalance’ என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள். அதை ஒரு பிரச்சினையாகப் பார்க்க முடிகிறது.
மகரந்தம்
திராட்சைத் தோட்டங்களில் இருந்து உயர்தரத் திராட்சைகளைத் திருடுகிறார்கள். இவை மிக உயர்தர மது தயாரிக்கவென அரும்பாடுபட்டு வளர்க்கப்படுபவை. தவிர தேன் கூடுகளைத் திருடுகிறார்கள். அது தேனுக்காகவா? இல்லை. தேன் கூடுகளில் உள்ள தேனீக்களை அமெரிக்காவில் வாடகைக்கு விடுவார்கள். பழத் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கை இல்லாது மரங்களில் பழங்கள் விளையாதாமே, அதற்கு தேனீக்கள் தேவை.
மகரந்தம்
சீனாவில் இருந்து தேன் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகிறதாம். அதுவும் அதை இந்தியாவிலிருந்து கொணரப்படும் தேன் என்று பொருளின் மூலத்தை மாற்றி, மறு முத்திரையிட்டு, கடத்தப்படுகிறது. எதற்கு, தேனை திறந்த சந்தையில் விற்கத்தான் அனுமதி இருக்கிறதே, இதிலென்ன கடத்தல்? சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா இப்போது வரி விதிக்கிறது. இறக்குமதி வரியைக் கொடுக்க அமெரிக்க வியாபாரிகளும் தயாரில்லை, ஏற்றுமதியின் விலையை இப்படி அதிகரிக்க சீனர்களும் தயாரில்லை. விளைவு இந்தியாதானே ஏமாளி, அதன் பெயரைப் பயன்படுத்தி இந்தியாவின் தேனாக அமெரிக்கச் சந்தையில் சீனத் தேனை விற்க ஏற்பாடு.
மகரந்தம்
காஸா போரில் பல கடும் பிரச்சினைகளின் உண்மை முகங்கள் தெரிய வருகின்றன. உலக நாடுகளின் பல சாய்வுகளும் புலப்படுகின்றன. சில நாடுகள் இரண்டு பக்கமும் பங்கெடுக்கும் நிலையில் உள்ளனர். இவற்றின் நடுவே, எங்கும் வெடிகுண்டுகளும், ராக்கெட்டுகளும் வெடித்துக் கொண்டிருக்கையில் அதிகம் வெளித் தெரியவராத போர் ஒன்றும் நடக்கிறது. உலகில் இப்போது நாடுகள், அவற்றின் ராணுவங்களைத் தவிர வேறொரு சக்தியும் உருவாகி உலவுகிறது. நிஜமாகப் பார்த்தால் இப்படி நாடுகளின் வடிவுகளைத் தாண்டிய பல சக்திகள் சில பத்தாண்டுகளாக உலக அரசியல் இழுபறிகளில் பங்கெடுத்து வந்திருக்கின்றன
மகரந்தம்
கருத்துக் கட்டுப்பாடு (சென்ஸார்ஷிப்) கடுமையாய் உள்ள இரான் போன்ற நாடுகளிலும் இரானியத் தயாரிப்பாளர்கள் வேறு நாடுகளில் திரைப்படங்களை உருவாக்கி உலக அரங்கில் அவை காட்டப்படுவது பல வருடங்களாய் நடந்து வருகிறது. சமுதாய, அரசியல் மற்றும் கருத்து மாற்றங்களுக்கு ஒரு கருவியாய் தயாரிக்கப்படும் இத்தகைய திரைப்படங்கள் உலகப்பட விழாக்களில் பெரிதும் விவாதிக்கப்படுகின்றன.
மகரந்தம்
மேதாவிகள், மேதாவிகளாகவே தான் பிறக்கிறார்களா? இல்லை, தாம் வளரும் சூழல், தமக்கு கிடைக்ககூடிய கல்வி அவர்கள் மேதமையைத் தீர்மானிக்கிறதா? மேதைமை அபாரமான படைப்பூக்கமாகவும் இருக்கலாம், ஒருவகை கிறுக்குத்தனமாகவும் இருக்கலாம். இல்லை, ஒருவரது பிறவி பலவீனத்தால் வாய்க்கும் அரிய திறனாகவும் இருக்கலாம். அதற்கென ஒரு பொதுவான சமன்பாடு இருக்கிறதா?
மகரந்தம்
பாம்புகள் என்றால் நம்மில் பலருக்கு அதீதப் பயம். குரங்குகளுக்கும் பாம்புகளைக் கண்டால் பயம். மனிதர்களின் பாம்பு குறித்த பயம் குரங்குகளாக இருந்த காலத்திலிருந்து தொடர்வது என்று சில உளவியலாளர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதெல்லாம் ஏதோ ஹேஷ்யம் போலத்தான் தெரிகிறது. ஆனால் ஏன் நம்மிடம் சில குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்ததால் பயம் போய் விடுகிறதா என்ன?
மகரந்தம்
சீனாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் பணக்காரர்களாக இருந்தால், சிறையைப் பார்க்கத் தேவை இல்லையாம். அட, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கும் போலிருக்கிறதே என்கிறீர்களா? இங்கு ஏதோ ஓரிரண்டு தினங்கள் கண் துடைப்பாகவாவது சிறைக்குப் போவார்கள். அதை மகத்தான தியாகம், பகுத்தறிவு இயக்கத்திற்காகப் பலியானோம் என்று புரளியும் செய்வார்கள். அங்கு அதெல்லாம் கூடத் தேவை இல்லையாம். ஆனால் யாரையோ சிறைக்கு அனுப்பியே தீர வேண்டும் என்பதால், தமக்குப் பதிலாக இன்னொரு நபரைச் சிறைக்கு அனுப்பி வைப்பார்களாம் பணம் குவித்தவர்கள்.
மகரந்தம்
முன்பு வழக்கம்போல விவசாயிகள் இன்னும் மண்குடிசைகளில் இருந்து இதை உற்பத்தி செய்தனர், இடைத் தரக நிறுவனமான ஹாலிபர்டன் என்ற அமெரிக்க நிறுவனம் பெரும் லாபத்தை அள்ளிக் கொண்டது. சமீபத்தில் விவசாயிகளின் எதிர்ப்பால் அவர்களுக்குக் கிட்டும் பங்கு உயர்ந்திருக்கிறதாம். இதுவுமே இன்னும் அமெரிக்க நிறுவனத்துக்குத்தான் லாபம் பெருமளவில் போகிறபடி இருக்கும். அமெரிக்கர்கள் லாபத்தைப் பிறருக்கு விட்டு விடுவார்களா என்ன? ஆனால் ஏதோ ஒரளவு ராஜஸ்தானின் விவசாயிகள் வாழ்வில் சிறிது முன்னேற்றம் வந்திருக்கிறது. மண் குடிசைகளை விட்டு, கல் கட்டிடங்களுக்கு நகர்ந்திருக்கிறார்களாம்.
மகரந்தம்
நாய்களின் மோப்ப சக்தியை கேன்ஸர் போன்ற வியாதிகளை கண்டுபிடிப்பதற்கும் உபயோகப்படுத்தலாம் என்று இன்றைய மருத்துவம் சொல்கிறது. ஆடிஸம், ஆஸ்பெர்ஜெர் போன்ற நோய்குறித்தொகுதிகள் உள்ளவர்களுக்கு நாய்களின் அண்மை அமைதியைக் கொடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அத்தகையவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் லேப்ரடார் போன்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன
மகரந்தம்
ஃபேஸ்புக் தளத்தின் பங்கேற்பாளர்கள் கிட்டத்தட்ட 1 பில்லியன். இது ஒரு சாதாரண வெளி அல்ல. இங்கு நடைபெறும் சந்தைப்படுத்தல் என்பது நிச்சயம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் புகழும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் ஃபேஸ்புக்கின் அதே உத்தியை பயன்படுத்துகிறது. அதற்கு கூடுதல் கவனம் கிடைப்பதாகச் சொல்கிறார். ஆனால் அதை நிரூபிக்க போதுமான தரவுகளை இவர் தரவில்லை.
மகரந்தம்
F-22 ராணுவ விமானி ஒருவர், அந்த விமானத்தின் ஒரு பகுதி சுவாசக் காற்றை நச்சுக் காற்றாக மாற்றுகிறது, அது தனக்கு ஆபத்தை தருவதாக சொல்கிறார். இந்த காரணத்திற்காக விலை அதிகமான ஒரு விமானத்தை மாற்ற முடியுமா? சத்தம் போடாம இரு என்று அமெரிக்க ராணுவம் சொல்கிறது. அவரை ராணுவ ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்ட முயற்சி நடக்கிறது. ஒரு வழியாக ‘Whistleblower Act’ மூலம் அவரை இப்போதைக்கு காப்பாற்றியிருக்கிறார்கள். இதில் இருக்கும் ஒரு விஷயம் : விலை உயர்ந்த ராணுவ தளவாடத்திற்கு பதிலாக ஒரு மனித உயிரை விலை பேசலாம் என்ற எண்ணம். சமூகத்திற்கு முதலியம் அளிக்கும் சிந்தனை இது.
மகரந்தம்
ரோபாட்களால் உடனடியாக என்ன பெரும் பயன் என்பதை நம்மால் காண முடியாதது, சில பத்தாண்டுகள் முன்பு கணினி எந்திரங்களால் என்ன பயன் என்று இந்திய அரசாலும், இந்திய அரசு அதிகாரிகளாலும், இந்திய முற்போக்குகளாலும் காண முடியாததை ஒத்ததே.
மகரந்தம்
தொழில்முறைப்பட்ட விவசாயம் குறைப்பார்வையோடு பரந்த வகைகள் கொண்ட விவசாயத்தை மிகச் சில வகைகளான விதைகளில் குறுக்கி நாசத்தைக் கொணரவிருக்கிறது. நாம் பாரம்பரிய விவசாயத்தை முற்படுத்தி பன்முகப்பட்ட விளைச்சல் முறைகளைக் கொணர்வது மிக மிக அவசியம். இந்தியாவின் பாரம்பரிய விவசாயிகள் வெகு காலமாக இதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நகரத்தின் அறிவாளர்கள் அவர்களை இளக்காரமாகப் பார்த்து இந்திய விவசாயத்தை பெருமளவு நாசம் செய்திருக்கிறார்கள்.
மகரந்தம்
என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தொகுப்பு வருடா வருடம் அச்சிடப்பட்டுக் கொண்டிருந்தது. உலக மையமே பிரிட்டன் என்பது போன்ற, பிபிசி போன்ற செய்தி ஸ்தாபனங்களின் மமதை பிடித்த பார்வை இந்த புத்தகத் தொகுப்புக்கும் இருந்தது. இந்த புத்தகத்தை இனிமேல் அச்சிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். மரங்கள் கொஞ்சம் பிழைக்கும்.
மகரந்தம்
நன்கு பயின்ற, கல்வியிலும் தொழிலிலும் வெற்றி கண்ட சீன இளைஞர்கள் நாட்டை விட்டு நீங்கி மேற்குக்கு குடி பெயர்வதையே நாடுகிறார்கள். ஏன்? அவர்களைப் பொறுத்தவரை சீன அரசாங்கத்தை நம்பி எதையும் செய்துவிட முடியாது. தடாலடியாக எதையாவது செய்து அவர்கள் எதிர்காலத்தை சீன அரசு குழியில் தள்ளிவிடும் என்று நினைக்கிறார்கள்.
