மகரந்தம்

மெக்ஸிக தடய அறிவியல்

மெக்ஸிக அமெரிக்க எல்லைப் பகுதியில் இருக்கும் மெக்ஸிக நகரம் சியுதாத் ஹுவாரஸ் (Ciudad Juárez). போர் நடக்கும் பகுதிகளைத் தவிர்த்து, உலகிலேயே அதிக வன்முறைகள் நடக்கும் பகுதிகளில் ஒன்று. போதைமருந்து கடத்தல் கூட்டமைப்புகளின் கொலை, கடத்தல் போன்ற தொடர்ந்த வன்முறை அச்சுறுத்தல்களாலும், அதை தடுக்க முடியாத ஊழல் அரசாலும் பாதிக்கப்பட்டு வரும் நகரம்.இங்கு 80%- வரையிலான மக்கள், மாக்கியடோரா (maquiladora) என்றழைக்கப்படும் தொழிற்சாலை வேலைகளுக்காக மெக்ஸிகோ முழுவதிலிருந்தும் வந்து சேரும் ஏழை மக்கள். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆயிரக் கணக்கில் பெண் பாலியல் கொலைகளும் கடத்தல்களும் நடந்திருக்கின்றன. இத்தகைய நகரத்தில் ஒரு தடயவியல் பல் நிபுணர் (Forensic odontologist) மட்கி போன சடலங்களில் வன்முறைத் தடயங்களை மீட்டெடுக்கும் புதிய முறையைக் கண்டறிந்ததற்காக பிரபலமாகி வருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 2009-லிருந்து 2011-வரை நடந்த போதைமருந்து கடத்தல் கூட்டணிகளுக்கிடையே நடந்த கலவரங்களில் மட்டும் 8000 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் அடையாளம் காணப்படாத சடலங்களை ஒவ்வொன்றாக எடுத்து பரிசோதித்து கொண்டுவரும் டாக்டர்.ஹெர்னாண்டஸ் கார்டினாஸ் (Hernández Cárdenas)- க்கு அதிகாரிகளின் ஆதரவு இல்லையென்றாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதைப் பற்றி மேலும்,

http://www.nytimes.com/2012/10/16/world/americas/mexican-doctors-bath-for-corpses-reinvigorates-cold-cases.html?pagewanted=2&_r=0

கண்ணாடி போன்ற மண்

கண்ணாடி போன்ற மண். கேட்டாலே புதிராக இருக்கிறதல்லவா? செடிகள் எப்படி வளர்கின்றன? விதைகள் எப்படி வேர் விட்டு உயர்ந்து எழுகின்றன என்பது இன்னமுமே அறிவியலுக்குத் தெரியாத மர்மம். ஒரு காரணம் செடிகள் மண்ணடியில் அல்லது மண்ணால் மூடப்பட்டிருக்கையில் இந்த நடவடிக்கையைச் செய்கின்றன என்பது. கருப்பைக்குள் ஒலிக் கற்றைகளைச் செலுத்தி கரு எப்படி உயிராகிறது என்று காண முடிகிற அறிவியலால் இந்த விதைகள் செடிகள் விவகாரத்தை அறிய முடியாமல் இருப்பதைப் பொறுக்க முடியுமா? எனவே இப்போது வருகிறது…. ஒளி ஊடுருவும் மண். அதை மண் என்று அழைப்பது சரியா என்று தெரியவில்லை. ஆனால் இனி செடிகள் தம் ரகசியத்தை நம்மிடமிருந்து பொத்தி வைக்க முடியாது என்பது தெரிகிறது. ட்ரான்ஸ்பாரெண்ட் சொஸைட்டி என்று மனிதரின் எதிர்காலச் சமுதாயத்தை அழைக்கிற டேவிட் ப்ரின் (அறிவியலாளர், அறிவியல் புனைவாளர்) நம்மை அக்கருத்தை ஏற்க வைக்க முடியாமல் இருந்திருக்கலாம். மனித மனதின் ரகசியக் குகைகளை என்ன ஒளியால் ஊடுருவி விட முடியும் என்று நினைப்பதே நமக்குப் பழகி இருக்கிறது. குகை வாசிகளாக எத்தனை ஆயிரம் வருடங்கள் இருந்தோமோ நாம், அந்த வளர்ப்பு இன்னும் ஆழ் மனதில் இருக்கிறது போலும். ஆனால் செடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டால், மனிதர்களையும் ஒளி வெள்ளத்தில் ஆழ்த்த எத்தனை காலம் ஆகி விடப் போகிறது. இந்தச் செய்தியைப் பாருங்கள். ஸ்காட்லாந்தின் டண்டீ நகரில் உள்ள ஆபர்டே பல்கலையின் ஆய்வாளர்கள் பாலிமர் கூட்டு ஒன்றை வைத்து இந்த ‘மண்ணை’ உருவாக்கி இருப்பதாகத் தெரிகிறது.

மூலக் கட்டுரை
இங்கே.

இதன் சுருக்க விளக்கம்
இங்கே.

மாறிவரும் அறிவியல் சேகரிப்புத் தகவல்கள்

அறிவியல் சேகரிப்பு ஐம்பதாண்டுகளுக்கு ஒரு முறை பத்து மடங்கு அதிகரிக்கிறதாக ஒரு குத்துமதிப்பான கணக்கு சொல்கிறதாம். இதனால் நாம் பள்ளியில் படித்த தகவல்கள் எல்லாம் அனேகமாக நாம் நடுவயதுக்கு வரும் நேரம், முழுதும் மாறி விட்டிருக்கின்றன என்பது நமக்குத் தெரியாமல் நாம் உலவுகிறோம். ஏதோ இது மட்டும் பிரச்சினை என்றில்லை. அறிவியல் சோதனைகளில் அடையப்படும் ஏராளமான ‘முடிவுகள்’ தவிர கண்டுபிடிப்புகள் சில பத்தாண்டுகள் கழித்துப் பார்த்தால் அனேகமாகப் பலனற்றவை என்றும் தெரிகிறதாம்.

இதன் விளைவுகள் என்ன?

இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

இணைய வகுப்பறைகள்

பெருகி வரும் இணைய வகுப்பறைகள் பல்கலைகளையும் பேராசிரியர்களையும் இல்லாமல் செய்துவிடுவார்களா? மேற்கில், இலவச இணைய செய்தித்தாள்கள் அச்சு செய்தித்தாள்களை இல்லாமல் செய்துகொண்டிருப்பது போல? இங்கு, ஒரு பேராசிரியர் தன் துறை சம்பந்தமான இணைய வகுப்பறையில் சேர்ந்து, அதன் தொழில் நேர்த்தியால் மிகவும் கவரப்படுகிறார். அதே சமயம், அது போன்ற வகுப்புகள் தன்னை தன் வேலையில் இருந்து நீக்க முடியாது என்ற ஆசுவாசமும் அடைகிறார். ஏனென்றால், பல்கலைகளில், அவரும் அவரது ஆசிரியர் வர்க்கமும் அளிக்கக்கூடிய சரக்கே வேறு வகையானது,அது கிட்டத்தட்ட வாழ்க்கையைப் புரட்டிப்போடக்கூடியது.

http://www.insidehighered.com/views/2012/10/05/why-moocs-wont-replace-traditional-instruction-essay

மேதாவிகளை எப்படி இனம் கண்டுகொள்வது?

மேதாவிகள், மேதாவிகளாகவே தான் பிறக்கிறார்களா? இல்லை, தாம் வளரும் சூழல், தமக்கு கிடைக்ககூடிய கல்வி அவர்கள் மேதமையைத் தீர்மானிக்கிறதா? மேதைமை அபாரமான படைப்பூக்கமாகவும் இருக்கலாம், ஒருவகை கிறுக்குத்தனமாகவும் இருக்கலாம். இல்லை, ஒருவரது பிறவி பலவீனத்தால் வாய்க்கும் அரிய திறனாகவும் இருக்கலாம். அதற்கென ஒரு பொதுவான சமன்பாடு இருக்கிறதா ? அப்படி ஒரு சமன்பாடு இருக்குமானால், அதைக் கொண்டு நம் சமூகத்தில் மேதைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி? மேலும் படித்துப் பாருங்கள்.

http://blogs.scientificamerican.com/streams-of-consciousness/2012/10/18/how-do-you-spot-a-genius/

உடலை அழிக்கும் சோப்புகள்

இந்தக் கட்டுரையைப் படிக்கும் முன் உங்கள் சமையல் குழாய் அருகிலோ, கைகழுவும் தொட்டி அருகிலோ வைக்கப்பட்டிருக்கும் சோப்பில் ட்ரைகிலோஸன் (Triclosan) இருக்குமானால், முதலில் தூக்கி எறியுங்கள். அந்த சோப்புகள், கிருமிகளை மட்டும் அழிப்பதில்லை, உங்கள் தசை செயல்பாடுகளையும் சேர்த்துதான் அழித்துக்கொண்டிருக்கின்றன. இன்று எல்லா வகையான சோப்புகளிலும், பற்பசைகளிலும் சேர்க்கப்படும் ‘ட்ரைகிலோஸன்’ (Triclosan) எனும் ரசாயனத்தின் பாதிப்புகள் பற்றிய படிக்க வேண்டிய கட்டுரை.

http://blogs.smithsonianmag.com/science/2012/08/triclosan-a-chemical-used-in-antibacterial-soaps-is-found-to-impair-muscle-function/