வாக்குமூலம் – அத்தியாயம் 1

நாகலிங்கப் பூவின் வாசனை இத்தனை நெருக்கடி, களேபரத்திலும் மூக்கைத் துளைக்கிறது. திருநெல்வேலியில் காந்திமதி அத்தை இருக்கிற வளவில், பின்னால் வாய்க்காலுக்குப் போகிற முடுக்கில் ஒரு உயரமான நாகலிங்க மரம் நிற்கிறது. பூக்கிற காலத்தில் பூத்துத் தள்ளிவிடும். இளஞ்சிவப்பும் வெள்ளையுமாய் உதிர்ந்து கிடக்கும் பூவை, பூவென்றுகூடப் பாராமல்தான் எல்லோரும் மிதித்துக்கொண்டு போவார்கள். தை மாதம் வாசலில் கோலம் போட்டு சாணிப் பிள்ளையார் பிடித்து பூசணிப் பூவையும், பீர்க்கம் பூக்களையும் அழகாகச் சொருகி வைத்திருந்தால், உச்சியில் வெயில் ஏறுகிறதற்குள் ஏதாவதொரு சாணிப் பிள்ளையாரைப் பூவுடன் சேர்த்து யாராவது மிதித்துவிட்டுத்தான் போகிறார்கள். என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் என்ன செய்ய முடிந்தது?

வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்

அவளுக்கு ஊரோடயே இருக்கணும், நல்லது பொல்லாததுக்கு சொந்த ஜனங்களோட இருக்கணும்னு ஆசை. ஊர்தான் இருக்க விடலியே? பொழைக்க வழி இல்லாமே விரட்டில்லா விட்டுடுத்து. அப்பிடியே வேலை வெட்டி ஏதாவது கெடச்சாலும் படிச்ச படிப்புக்கு கவர்னர் உத்தியோகமா கெடைச்சிரும்?

வாக்குமூலம் – அத்தியாயம் 3

ஊர் என்றால் வீடுகளும், கட்டிடங்களுமா ஊரு? இல்லை தெருக்களும், ரோடுகளும் ஊரா? இவங்க என்னென்னவோ புஸ்தகங்களைப் படிச்சுப் போட்டு என்னென்னவோ பேசுறாங்க. அவுகளுக்கும் பொஸ்தகம், சினிமா, நாடகம், கதை இதுதான் உலகம்னு ஆயிப் போச்சு. “வேணும்னா நீயும் சினிமாவுக்குப் போயிட்டு வா”ங்கிறாங்க. டி.வி.யில் போடாத படமா? டி.வி.யில் போடாத நாடகமா? ஒண்ணும் மனசுல ஒட்ட மாட்டேங்குது.

வாக்குமூலம் – அத்தியாயம் 4

ஒரு காலத்திலே ஆனந்த விகடன், கல்கி, குமுதமெல்லாம் வாராவாரம் படிக்கலைன்னா என்னவோ மாதிரியா இருக்கும். இப்போ இந்தப் பத்திரிகைகளைப் படிக்கவே முடியலை. முன்னே தாமரை, கணையாழி மாதிரி சிற்றிதழ்கள் கூடப் படிக்கப் பிடிச்சிருந்திச்சு. இப்போ வருகிற இலக்கியப் பத்திரிகைகளைக் ‘கடனே’ன்னுதான் படிக்க வேண்டியதிருக்கு. சினிமாவும் இப்படித்தான் ஆகிப்போச்சு. ஆரம்பத்திலே ஶ்ரீதரோட நெஞ்சில் ஓர் ஆலயம், அவளுக்கென்று ஒரு மனமெல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்துது. போலீஸ்காரன் மகளும் அப்படித்தான்.

வாக்குமூலம் – அத்தியாயம் 5

எனக்கு காவேரி அத்தையோட ஞாபகம்தான் வந்துச்சு. காவேரி அத்தை வீட்டு மாமா வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோவில் தெருவுல இன்னொரு குடும்பம் வச்சிருந்தாங்க. காவேரி அத்தை மூக்கும் முளியுமா நல்லாத்தான் இருப்பா. சமையல் எல்லாம் நல்லா பண்ணுவா. மாமாவுக்குத் தொண்டர் சன்னதியில் புரோக்கர் வேலை. வத்தல், வெங்காயம், சிமெண்ட் இன்னதுன்னு இல்ல. எல்லாத்தையும் லாரி பிடிச்சி வெளியூருக்கு அனுப்புவா மாமா. அதுல கமிஷன் கெடைக்கும். அத்தை – மாமாவுக்கு ஆண் ஒண்ணு பொண்ணு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளைக. காவேரி அத்தையைக் குத்தம் சொல்ல முடியாது. கட்டாத்தான் குடும்பம் நடத்துனா.

வாக்குமூலம் – அத்தியாயம் 6

சித்தப்பா வேல பார்த்தது ஶ்ரீவைகுண்டத்துல. இப்போ இதை திருவைகுண்டம்னு சொல்றாங்க. ‘ஶ்ரீ’, ‘ஸ’ இதெல்லாம் கூடாதுன்னு அரசியல் கட்சிக்காரங்க சொல்றாங்க. சமஸ்கிருத எழுத்துகள் வேண்டாம்ங்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, காலங்காலமா ஜனங்க சொல்லிக்கிட்டு இருக்கிற ஊர்ப் பேருகளை மாத்துறது என்ன ஞாயம்னு தெரியலை. பஸ்ஸை பேருந்துன்னு தமிழ்ப்படுத்தினாங்க. ஆனால் இந்த 2022-ல எத்தனை பேரு பேருந்துன்னு சொல்றாங்க?

வாக்குமூலம் – அத்தியாயம் 7

பள்ளிக்கூடம் தொறந்த அன்னைக்கே பரிச்சப் பேப்பர் எல்லாம் தந்திருவாங்க. ஒவ்வொரு பீரியட் ஆரம்பிக்கும்போதும் பக்கு பக்குன்னு இருக்கும். மார்க் கொறைஞ்சா சார்வா பெரம்பால அடிப்பாரு. நான் விஞ்ஞானத்துலயும், தமிழ்லயும் தான் பெயிலாவேன். அண்ணன் எல்லாப் பாடத்துலயும் பெயிலாயிருவான். ஒரு வாரத்துல புராக்ரஸ் ரிப்போர்ட் வந்துரும். பெயிலான பாடத்து மார்க்குக்குக் கீழே செவப்பு மையால கோடு போட்டிருக்கும். அப்பாட்ட கையெழுத்து வாங்கணுமே. வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெரு மகராசன், அவன் அப்பா கையெழுத்தை அவனே போட்டு சார்வா கிட்ட மாட்டிக்கிட்டான். ஹெட்மாஸ்டர் அவனை ப்ரேயர்ல கூப்புட்டு அடிச்சாரு. ரொம்பப் பாவமா இருந்துச்சு.

வாக்குமூலம் – அத்தியாயம் 8

கடவுளை வழிபட பிரார்த்தனை, மந்திரம், சடங்குகள்னு நெறஞ்சு கிடக்குது. கோவில்களும், தேவாலயங்களும், பள்ளிவாசல்களுமா பெருத்துக் கிடக்கு. எல்லா இடத்திலேயும் பிரார்த்தனையோட முணுமுணுப்பு கேக்குது. பாவம் ஜனங்க. இதிலே செத்துப்போன பிறகு நற்கதி அடையணும், சொர்க்கத்துக்குப் போகணும்னு அதுக்காக வேற கடவுள்கிட்டே மல்லாடுகிறாங்க. இத்தனை பில்லியன் ஜனங்களோட ஆசையையும் அவரு எப்படி நிறைவேற்றி வைப்பாரு? அதனாலேதான் ‘மதம் ஒரு அபின்’னு கார்ல் மார்க்ஸ் சொன்னாரு போலிருக்கு.

வாக்குமூலம் – அத்தியாயம் 9

இப்பம் எந்தப் பேருகாலம் வீட்டுல நடக்குது? எல்லாம் ஆசுப்பத்திரிதான். ஜாதகம் எல்லாம் பார்த்து, அந்த நட்சத்திரத்துப்படி பேருகாலம் நடக்கணும்ன்னு சிசேரியன் கூடப் பண்ணிக்கிடுதாங்களாம். அப்போ எல்லாம் பிள்ளை பெத்தா ‘பச்ச ஒடம்பு, பச்ச ஒடம்பு’ன்னு சொல்லி, ஏழெட்டு நாள் எந்திரிக்கவே விடமாட்டாங்க. இப்போ பேருகாலம் ஆன மறுநாளே வீட்டுக்குப் போகலாம்னு சொல்லுதாங்க. ஆயுதம் போட்டு (சிசேரியன்) பிள்ளையை எடுத்தாத்தான் கூடுதலா ரெண்டு மூணு நாளு இருக்க வேண்டியது வரும். கல்யாணம் ஆகி வருஷக் கணக்கா பிள்ளை இல்லாமே இருந்ததெல்லாம் போயி, கல்யாணம் ஆன பத்தாவது மாசமே பிள்ளையைப் பெத்துக்கிடுத காலமா ஆயிரிச்சு. சில பேரு கல்யாணம் ஆகும்போதே ரெண்டு மாசம், மூணு மாசம் கர்ப்பமா இருக்காங்கன்னுல்லாம் சொல்லுதாங்க. கலி முத்திச் போச்சு. வேறென்னத்தைச் சொல்ல?

வாக்குமூலம் – அத்தியாயம் 10

வீடு மாதிரி, பள்ளிக்கூடம் தேவை, காலேஜ் தேவை, வாகனங்கள் தேவை, உணவு பயிரிட நிலம் தேவை, கோவில், மசூதி, சர்ச்கள் எல்லாம் வேணும். வியாபாரம் வேணும், தொழில் வேணும், நீர்நிலைகள் வேணும், காடு, மலை எல்லாம் வேணும். ஆனா, இலக்கியம் நவீன சினிமா எந்தளவுக்குத் தேவை? சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தான கோபாலன் இவங்களோட இசை எல்லாம் ரொம்ப பேருக்கு தேவைப்படாம இருக்கலாம். ஆனா இதுக்கும் உலகத்திலே இடம் இருக்கு.

வாக்குமூலம் – அத்தியாயம் 11

அவ நேத்து வந்திருந்தா. யாரோ கோடாடுன்னு ஒரு டைரக்டர் செத்துப் போயிட்டாருன்னு ரொம்ப வருத்தப்பட்டுப் பேசிக்கிட்டு இருந்தா. நம்ம நாட்டு டைரக்டர் செத்துப் போயிட்ட மாதிரி ரொம்ப ஆத்தாமைப் பட்டா. இவுஹ அப்பாவுக்கும் அவரு செத்துப் போனது சங்கடமாத்தான் இருக்குது போல. அவரோட படங்களப் பத்தி ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நாளைக்கி முன்னாலே ஶ்ரீதர் செத்துப் போனதையும், பாலச்சந்தர் செத்துப் போனதையும் பத்தி நெனச்சுக் கிட்டேன். ஒலகத்துல பொறந்துட்டா சாவுன்னு ஒண்ணு வரத்தானே செய்யும்? எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் செத்துத்தானே போறாங்க? சாவு கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா?

வாக்குமூலம் – 12

ஒலகத்திலே எல்லாமே கணக்குத்தான். நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போலன்னு சிவவாக்கியர் சொல்லுதாரு. சூரியன், பூமி, இந்தக் கெரகங்கள் எல்லாமே ஏதோ ஒரு கணக்குலதான் சுத்திக்கிட்டு இருக்கு. வேகம் கூடினாலும் போச்சு, வேகம் கொறைஞ்சாலும் போச்சு. ஒடம்புச்சூடு கூடிரவும் கூடாது, கொறைஞ்சிரவும் கூடாது. இந்த மாதிரித்தான், எல்லாமே கணக்குதான்.

வாக்குமூலம் – அத்தியாயம் – 13

சபரி மலைக்கிப் போறாங்க. மகர ஜோதி பாக்கப் போறாங்க. எதிர்த்த மலை உச்சியில ஆட்கள், ஜோதி தெரிய வேண்டிய அந்தக் கருக்கல் நேரத்துல, தீப்பந்ததைக் கொழுத்திக் காட்டுதாங்க. அந்த இருட்டுல ஆட்கள் இருக்கது தெரியாது. அந்த நெருப்பத்தான் மகர ஜோதின்னு சொல்லுதாங்கன்னு இவங்க அப்பா சொல்லுதாஹ. மகர ஜோதி அன்னைக்கி எதிர்த்த மலையில என்ன நடக்குன்னு ஆட்கள் போயிப் பாத்திருக்காங்க. அங்க போயிப் பாத்தா இதுதான் நடந்திருக்கு. கடவுள் நம்பிக்கையை வளர்க்கிறதுக்காக, நம்பிக்கை ஏற்படுகிறதுக்காக இதெல்லாம் செய்தாங்கன்னு ரவியோட அப்பா சொல்லுதாங்க. இது நெசமோ, பொய்யோ? யாரு கண்டது? நமக்கு அடியும் தெரியாது, முடியும் தெரியாது.

வாக்குமூலம் – அத்தியாயம் 14

எம்.ஜி.ஆர். மன்றத்த ஆரம்பிச்சு வைக்க கே.ஆர். ராமசாமியும், கருணாநிதியும் வந்திருந்தாங்க. ரொம்ப ஒண்ணும் பெரிய கூட்டம் இல்ல. ஏழெட்டுப் பேரு நின்னுருப்பாங்க. கோனாக்கமார் தெருக்கார திருவை அண்ணாமலைதான் அந்த மன்றத்தை நடத்துனாரு. கீழ, தெருவுல ரெண்டு நாற்காலியப் போட்டு கே.ஆர். ராமசாமியவும், கருணாநிதியவும் உட்காத்தி வச்சிருந்தாங்க. கருணாநிதியும், ராமசாமியும் தோள்கள்ல நீளமா நேரியல் மாதிரி துண்டைத் தொங்க விட்டிருந்தாங்க. அயர்ன் கடைக்காரர் அவா பாட்டுக்கு துணிகளைத் தேய்ச்சுக்கிட்டிருந்தாரு. பெரிசா எந்தப் பரபரப்பும் இல்ல. கொஞ்ச நேரம் இருந்துட்டு ரெண்டு பேரும் பொறப்பட்டுப் போயிட்டாங்க.

வாக்குமூலம் – அத்தியாயம் 15

பொங்கல் டயத்துல கடைகள்ள வெள்ளை அடிக்கிற மட்டைகள் விப்பாங்க. அது பனை மட்டை. அதை மாரியப்பன் வாங்கிட்டு வருவான். ஒரு பக்கம் கல்லை வச்சு மட்டைய நைப்பான். சுண்ணாம்புல நீலத்தக் கலந்து அடிச்சா வீடு பளீருன்னு ஆயிடும். எல்லா அறைகளையும் அடிச்சம் பெறவுதான் அடுப்பாங்கரைய அடிப்பான். ஏன்னா அடுப்படிச் சொவர் எல்லாம் பொகை பட்டு கருப்பா இருக்கும். மொதல்லயே அடுப்படி அடிச்சா நல்ல சுண்ணாம்புத் தண்ணியெல்லாம் கருத்திரும்ன்னு கடைசியிலதான் அடிப்பான். வெள்ளையடிச்சதுமே வீட்டுக்குப் பொங்கல் களை வந்துரும்.

இறுதி வாக்குமூலம்

தமிழ் இலக்கியம் பூரா பெரும்பாலும் வாழ்ந்து கெட்டுப் போனவங்களைப் பத்தித்தானே இருக்கு. அதுதான எழுத்தாளங்களுக்கு லேசா எழுத வருது. சோகத்த எழுதுறது சுலபமா இருக்கு என்று தோன்றியது. இந்த மாதிரி, நாராயண பிள்ள மாதிரி சின்னச் சின்னப் பணக்காரங்கதான் அரசியல், சமூக மாத்தங்களிலே தாக்குப் பிடிக்க முடியாமே சில பேரு நொடிச்சுப் போயிருதாங்க. டாடா, பிர்லா மாதிரி பெரும் பணக்காரங்களை ஒலகத்துல நடக்கிற மாற்றங்கள் ஒண்ணும் பண்ணுதது இல்லே. அம்பானி குடும்பம், அதானி குடும்பம் எல்லாம் எத்தன தலைமொறை ஆனாலும் நொடிச்சுப் போகாது. இவங்க எல்லாம் பல தொழில்கள்ள மொதலீடு செஞ்சு நிரந்தரப் பணக்காரங்களா இருக்காங்க.