வாக்குமூலம் – அத்தியாயம் 14

அவன்

1957-இலே சித்தப்பா வீட்டுக்கு ஶ்ரீவைகுண்டம் போயிருந்தேன். காப் பரீச்சை, அரைப் பரீச்சை, அனுவல் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சதும் அப்பா ஶ்ரீவைகுண்டத்துல கொண்டுபோயி என்னை விட்டுருவா. ஶ்ரீவைகுண்டத்துல தாமிரவருணி ஓடுது. வாய்க்காலும் இருக்கு. ஶ்ரீவைகுண்டம் பாலத்துக் கீழே அணை கட்டியிருந்தாங்க. பெரிய வெள்ளம் வந்தாத்தான் அணையைத் தெத்தி தண்ணீ விழும். மத்த நாள்கள்ள பாலத்துக்குக் கீழ ஆறு கொளம் மாதிரி தேங்கிக் கிடக்கும். பாலத்துக்கு ரெண்டு மொனையிலேயும் வாய்க்கால் வெட்டி விட்டிருந்தாங்க. வாய்க்கால்ல எப்பமும் தண்ணி தொறந்து விட்டிருப்பாங்க. சித்தப்பா என்னை வாய்க்காலுக்குத்தான் கூட்டிட்டுப் போவா. எனக்கு மைசூர் சாண்டல் சோப்புப் போட்டு குளிப்பாட்டி விடுவா. என்னைக் குளிக்க வச்சு, தலை தொவத்தி கரையில ஏத்திவிட்ட பொறகுதான் சித்தப்பா குளிப்பா.

சித்தப்பா சன்னதித் தெருவுல – தூத்துக்குடி ரோடும் அதுதான் – ஒரு சைக்கிள் கடையில வேலை பாத்தா. கருணா சைக்கிள் மார்ட்ன்னு கட பேரு. அந்தக் கட ஓனர் தி.மு.க.காரர். தி.மு.கா. அப்பத்தான் வளந்துக்கிட்டு இருந்துது. கருணாநிதி பேர கடைக்கி வைக்கணும்னு கருணா சைக்கிள் மார்ட்ன்னு வச்சிருந்தார். கடக்கிப் பக்கத்துல முத்தாரம்மன் கோயில் தெருவுலதான் சித்தப்பா வீடு. ஆச்சி சித்தப்பாவுக்குச் சோறு பொங்கிப் போட்டுக்கிட்டு இருந்தா. நாலு ரூவாயோ என்னம்போ வீட்டு வாடக. அந்த வீட்டுக்கு எதிர்த்தாப்பலதான் ஹைஸ்கூல் இருந்துது. இன்னைக்கியும் இருக்கு. வீடு, வளவு சேந்த வீடு. அஞ்சு வீடுக எதிரும் புதிருமா இருந்திச்சு. கடைசி வீடு கஸ்பா கணக்குப் பிள்ள வீடு. அவர் வீட்டுல எப்பமும் கிராமத்து வெவசாயிக ஏதாவது வேலயா வந்து நின்னுக்கிட்டு இருப்பாங்க. அடுத்த வீடு கொழும்புப் பிள்ள வீடு. மூணாவது வீடுதான் சித்தப்பா வீடு. வீட்டுக்குள்ள ஒரே இருட்டாக் கெடக்கும்.

நான் காலையில இட்லியோ, தோசையோ சாப்டுட்டு தெருவுக்கு வெளையாடப் போயிருவேன். தெரு மொனையிலே முத்தாரம்மன் கோவில் வடக்க பாக்க இருக்கும். அதையொட்டி ரெண்டு கடைகள். கடையின்னா பெரிய கடையில்ல. சதுரமா ரொம்பச் சின்ன அறைதான். கட வாசல சொருகு பலகைகளால மூடியிருப்பாங்க. அத அடுத்து தெக்ஷிண மாற நாடார் சங்கம்ன்னு பெரிய கட்டடம். ரெண்டு கடைகள்ள ஒரு கடயில எம்.ஜி.ஆர். மன்றம்.

எம்.ஜி.ஆர். மன்றத்த ஆரம்பிச்சு வைக்க கே.ஆர். ராமசாமியும், கருணாநிதியும் வந்திருந்தாங்க. ரொம்ப ஒண்ணும் பெரிய கூட்டம் இல்ல. ஏழெட்டுப் பேரு நின்னுருப்பாங்க. கோனாக்கமார் தெருக்கார திருவை அண்ணாமலைதான் அந்த மன்றத்தை நடத்துனாரு. கீழ, தெருவுல ரெண்டு நாற்காலியப் போட்டு கே.ஆர். ராமசாமியவும், கருணாநிதியவும் உட்காத்தி வச்சிருந்தாங்க. கருணாநிதியும், ராமசாமியும் தோள்கள்ல நீளமா நேரியல் மாதிரி துண்டைத் தொங்க விட்டிருந்தாங்க. அயர்ன் கடைக்காரர் அவா பாட்டுக்கு துணிகளைத் தேய்ச்சுக்கிட்டிருந்தாரு. பெரிசா எந்தப் பரபரப்பும் இல்ல. கொஞ்ச நேரம் இருந்துட்டு ரெண்டு பேரும் பொறப்பட்டுப் போயிட்டாங்க.

நான் ஆச்சி தார இட்லியையோ, தோசையையோ சாப்புட்டுட்டு எம்.ஜி.ஆர். மன்றத்துக்குப் போயிருவேன். அப்பம் ஆறாவதோ என்னவோ படிச்சுக்கிட்டிருந்தேன். மன்றத்துல சொவர்ல ரெண்டு பக்கமும் ஆணியடிச்சு நீளமா பம்பரக் கயிறக் கட்டியிருந்தாங்க. அந்தக் கயத்துல திராவிட நாடு, மன்ற முரசுன்னு மூணு, நாலு தி.மு.க. பத்திரிகைகளைத் தொங்க விட்டிருப்பாங்க. எல்லாம் வாரப் பத்திரிகைகதான். இது தவிர தந்தியும், தினமலரும் வாங்கிப் போட்டுருப்பாங்க. அந்த மன்றத்த ஆரம்பிச்ச திருவை அண்ணாமலை அஞ்சுலாம்புல ஒரு நாள் ஸ்டேஜ் எல்லாம் போட்டு கிளியோபாட்ரா நாடகத்த நடத்துனாரு. அதே அஞ்சுலாம்புல ஒரு பத்து நாள் கழிச்சு, பலவேசம்ன்னு ஒரு காங்கிரஸுக்காரர் திருப்பூர் குமரன்னு நாடகம் போட்டாரு. அப்பம் தி.மு.கா.வுக்கும், காங்கிரஸுக்கும் ஏகப் போட்டி.

இதே மாதிரி எம்.ஜி.ஆர். மன்றத்துக்கு எதிர்ப்பா, தூத்துக்குடி ரோட்டுல ஒரு பெரிய வீட்டு மாடியில புதுக்குடிக்காரங்க சில பேரு சேந்து, சிவாஜி கணேசன் மன்றம் ஆரம்பிச்சாங்க. எம்.ஜி.ஆர். மன்றத்தவிட சிவாஜி மன்றம் பெரிய எடத்துல இருந்திச்சு. சிவாஜி மன்றத்தத் தொறக்க சினிமா நகைச்சுவை நடிகர் பக்கிரிசாமியும், சிவதாணுவும் வந்திருந்தாங்க. திருநவேலி பொருட்காச்சி ஆனித் தேரோட்ட சமயத்துல நடக்கும். அனேகமா அது ஜூன் மாசமா இருக்கும். அப்ப பொருக்காச்சியில நாடகம் நடத்த மெட்ராஸ்ல இருந்து சினிமா நடிகர்கள் எல்லாம் வருவாங்க. அந்தச் சமயத்துலதான், பொருக்காச்சி நாடகத்துக்கு வந்திருந்த நடிகர்களை ஊருக்குக் கூட்டிட்டு வந்து, எம்.ஜி.ஆர். மன்றம், சிவாஜி மன்றத்த எல்லாம் தொறந்தாங்க.

திருநவேலி பொருக்காச்சி ஒரு மாசம் போல நடக்கும். எம்.ஜி.ஆர். இன்பக்கனா, அட்வகேட் அமரன்னு ரெண்டு நாடகம் போடுவாரு. சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்னு நாடகம் போடுவாரு. எஸ்.எஸ்.ஆர். மணிமகுடம் போடுவாரு. டி.கே.எஸ். சகோதரர்கள் மூணு நாலு நாடகம் நடத்துவாங்க. ராஜராஜ சோழன், ஔவையார், அப்பாவின் ஆசைன்னு டி.கே.எஸ். பிரதர்ஸ் நாடகங்களைப் போட்டாங்க. நாடகங்களைத் தவிர விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன் குழுக்களோட மெல்லிசைக் கச்சேரிகளும் நடக்கும். கிட்டு மாமா கூடப் போயி இன்பக்கனா, மணிமகுடம் நாடகம் எல்லாம் சின்னப் புள்ளையில பாத்துருக்கேன். அந்தக் காலத்துல எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர். ராதா, தங்கவேலு, என்.எஸ்.கே. எல்லாரும் சொந்தமா நாடகக் குழு வச்சிருந்தாங்க. ஆர்.எஸ்.மனோகர், பிற்காலத்துல வந்த மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா எல்லாம்கூட சொந்த நாடகக் குழு வச்சிருந்தாங்க.

சுதந்திரப் போராட்டக் காலத்துல நாடகக் குழுக்கள் இருந்திருக்கு. பாலாமணியம்மாள்ன்னு ஒரு நாடக நடிகை நாடகத்துல, எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிற காட்சியிலே நடிக்கிறதைப் பார்க்க பெருங் கூட்டம் வருமாம். எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், எம்.எம். கண்ணப்பா எல்லாம் நாடக நடிகர்கள்தானே. டி.ஆர். மகாலிங்கமும், யு.ஆர். ஜீவரத்தினமும் நடிச்ச ஶ்ரீவள்ளி நாடகத்த பாண்டிச்சேரியில பாத்திருக்கேன். இப்போ தமிழ்நாட்டிலே மேடை நாடகமே அறவே இல்லாமல் போச்சு. நவீன நாடகங்கள்ன்னு ஸீன், செட்டிங்ஸ் எல்லாம் இல்லாமே ஒன்றிரண்டு பேர் முயற்சி பண்றாங்க. ஆனா இது எல்லாம் பிரபலமாகலை. உலகத்துல ஒவ்வொரு சமயத்துல ஒவ்வொன்னுக்கு ரொம்ப மவுசு இருக்கு. காலப்போக்குல சிலது காணமே இல்லாம போயிருது.

மெட்ராஸ்ல இருந்த எத்தனையோ பழைய சினிமா தியேட்டர்கள் இன்னைக்கி இல்லாமே போயிட்டுது. ஆனா பெரிய பெரிய மால்களிலே தியேட்டர்கள் வர ஆரம்பிச்சிட்டுது. ஏ.ஜி.எஸ்.ன்னு ஒரு நிறுவனம் மெட்ராஸ்ல ஏகப்பட்ட தியேட்டர்களை புதுசாக் கட்டி நடத்துது. சென்னையிலே குளோப், வெலிங்டன், சித்ரா, கெயிட்டி, பிளாஸா, பாரகன், சன், ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, சாந்தின்னு எத்தனையோ தியேட்டர்கள் காணாமப் போன மாதிரி, திருநவேலியில பாப்புலர், ராயல், பார்வதி, சென்ட்ரல், பாலஸ்-டி-வேல்ஸ்ன்னு பல தியேட்டர்களை மூடிட்டாங்க. மதுரையில தங்கம் தியேட்டர் சென்னை சில்க்ஸ் ஆயிருக்குது. நியூ சினிமா, சிந்தாமணி, சந்திரா டாக்கீஸ், சிட்டி சினிமாவெல்லாம் காணாமெப் போச்சு. வீட்டிலே எத்தனை பேர் செத்துப் போயி, காணாமல் போயிட்டாங்க. எத்தனை பேர் எங்கெங்கியோ தூர தொலைவுக்குப் போயிரலையா? அந்த மாதிரித்தான் இதெல்லாம்.

கதைகள்ல இழப்புன்னு ரொம்ப சோகத்தோட விவரிக்கிறாங்க. இப்போ ‘வலி’ங்கிற சொல்லை எழுத்துல ரொம்பப் பயன்படுத்துதாங்க. இழப்பு, வலி யாருக்குத்தான் இல்ல? எங்கேதான் இல்ல? இதையும் மீறி சினிமா, டி.வி., பக்தி, கோயில், குளம்ன்னு எங்கேயாவது போயிக்கிட்டு, சந்தோஷம் அல்லது ஏதோ ஒரு திருப்தி இல்லாமலும் மனுஷனால இருக்க முடியாதுன்னுதான் தோணுது.

திருப்தி, சந்தோஷம்கிறது ஒண்ணும் பெரிய விஷயங்களாலே உண்டாகுறது இல்ல. நாக்கு வறண்டு போயி தண்ணித் தாகம் எடுக்கு. ஒரு சொம்புத் தண்ணியக் குடிச்சதும் வார திருப்திக்கு எது ஈடாகும்? புழுக்கமா இருக்கு ஃபேனைப் போட்டுட்டு அதுக்கும் கீழே உக்காந்ததும் மெள்ள மெள்ளப் புழுக்கம் கொறஞ்சு சந்தோஷமா இருக்கு. கொழந்தைகளைக் கொஞ்சினால் சந்தோஷமா இருக்கு. இப்படித்தான் சின்னச் சின்ன விஷயங்களாலே திருப்தியும், சந்தோஷமும் ஏற்படுது. வீடு வாங்கினால், கார் வாங்கினால் ஏற்படுற திருப்தியும் சந்தோஷமும், சின்னச் சின்ன விஷயங்கள் பூர்த்தியாகிறதால ஏற்படுகிற திருப்தியும் சந்தோஷமும் ஒரே மாதிரித்தான் இருக்கு. இந்த உணர்ச்சி உலகம் பூரா எல்லா மனுஷனுக்கும் ஒரே மாதிரித்தான் ஏற்படுது. இதுல ஒரு சோஷலிஸத் தன்மை இருக்கு.

எனக்குப் பொஸ்தகம் படிச்சா பெரிய சந்தோஷமா, கொண்டாட்டமா இருக்குது. க்ரியா பதிப்பகத்த அப்போ ராமகிருஷ்ணன் ஆரம்பிக்கலை. அவர்தான் கார்லோஸ் காஸ்டநாடா ஸீரிஸ் புஸ்தகங்களைத் தந்தார். அதப் படிச்சிட்டு கெறங்கிப் போயிக் கெடந்தேன். அந்த ஸீரியல் புத்தகங்கள்ள வருகிற டான்ஜூவானோட ஐக்கியமாயிட்டேன். பாளையங்கோட்டையில மோகமுள் படிச்சப்போவும் இப்படித்தான் தன்நெலை தெரியாமல் கெடந்தேன். சில பொஸ்தகங்கள் மனசை எங்கேயோ உச்சத்துக்குக் கொண்டுட்டுப் போயிருது. புணர்ச்சி இன்பத்துக்கு ஈடானது சில பொஸ்தகங்கள் தருகிற சந்தோஷம்.

1959-லே கருங்கொளத்துல இருந்தோம். கருங்கொளத்துல இருந்து தினசரி பஸ்ஸில ஶ்ரீவைகுண்டத்துக்குப் போயி படிச்சேன். லீவு நாட்கள்ள லைபரரியே கெதின்னு போயிக் கெடப்பேன். கருங்கொளம் லைபரரியன் ஆறுமுகம் அப்பாவுக்கு வேண்டியவர். நாங்க அக்ரஹாரத்துல குடியிருந்தோம். அக்ரஹாரத்துல யூத் அஸோஷியேஷன் லைபரரி ஒண்ணும் இருந்திச்சு. ஆனா இதைவிட பப்ளிக் லைபரரில நல்ல நல்ல நாவல்கள் எல்லாம் இருந்தது. அங்கதான் தமிழ்வாணனோட மர்ம நாவல்கள், அநுத்தமாவோட ஜயந்திபுரத் திருவிழா எல்லாம் படிச்சேன். மங்கள நூலகம் வெளியிட்டிருந்த பொன்னியின் செல்வன் அஞ்சு பாகத்தையும் நாலஞ்சு நாள்ல படிச்சு முடிச்சேன். பள்ளிக் கூடப் படிப்பு மண்டையில ஏறல. ஆனால் கதைப் பொஸ்தகம் படிக்கிறது, பத்திரிகைகள் படிக்கிறதெல்லாம் கொண்டாட்டமா இருந்திச்சு.

1961-லே பாளையங்கோட்டைக்கி வந்த பெறவும் லைபரரியத் தேடிப் போற கிறுக்கு விடலை. பாளையங்கோட்டையில இருந்த லைபரரி, டிஸ்ட்ரிக்ட் சென்ட்ரல் லைபரரி. ரொம்பப் பெருசு. பழைய பிரிட்டிஷ் கால கட்டடத்துல இருந்துச்சு. தாமஸ் சார்வாளோட கணக்குப் பீரியடுக்குப் போகப் பயந்துபோய் ஒரு மாசத்துக்கு மேல ஸ்கூலுக்கே போகாம லைபரரிக்குப் போயி பொழுதை ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்போ கண்ணன் பத்திரிகையில டிரான்ஸிஸ்டர் ரேடியோ செய்றது எப்படின்னு தொடர் கட்டுரை வந்தது. பகல்ல லைபரரிக்கு ஆள் வராது. சாயந்தரம்தான் சில பேரு வருவாங்க. விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, கண்ணன், குமுதம்ன்னு என் மனம் போல பத்திரிகைகளைப் படிச்சேன். ராதாகிருஷ்ண நாயுடு எழுதின டணாயக்கன் கோட்டை அங்கேதான் படிச்சேன்.

Series Navigation<< வாக்குமூலம் – அத்தியாயம் – 13வாக்குமூலம் – அத்தியாயம் 15 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.