வாக்குமூலம் – அத்தியாயம் 11

அவள்

நான் மூணாவது, நாலாவது படிக்கும்போது எனக்கோ, அண்ணனுக்கோ ஒடம்புக்குச் சொகமில்லைன்னா அம்மா பழனியப்ப டாக்டர் கிட்டதான் கூட்டிட்டுப் போவாள். சேர்மாதேவி ரோட்டுல கண்ணப்பர் டாக்டர் வீட்டுக்கு அடுத்தாப்பல இருந்த வண்டி காடினாவுலதான் பழனியப்ப டாக்டர் இருந்தார். கோட்டு, சூட்டெல்லாம் போட்டுருக்க மாட்டாரு. வேட்டி, பனியனோட உக்காந்திருப்பாரு. என்ன வியாதிக்குன்னு போனாலும் ரெண்டு ரூவா பீசு வாங்குவாரு. அவர் பக்கத்துல இருக்கிற கண்ணாடி அலமாரியில ஏகப்பட்ட சீஸா இருக்கும். டப்பாக்களும் இருக்கும். அதுல இருந்து மாத்தரையோ, தண்ணி மருந்தோ குடுப்பாரு. பழனியப்ப டாக்டர், டாக்டர் இல்லையாம். கம்பவுண்டராம். சம்முகத்து மாமா சொல்லித்தான் தெரியும். ஆனா அவரு மருந்து குடுத்தா கேக்கத்தான் செஞ்சுது.

செம்பகத்து அக்கா வீட்டுல எல்லாம் யாருக்கும் சொகமில்லைன்னா தேரடி நாயுடு டாக்டர் கிட்டயோ, இல்ல தெப்பக்கொளத் தெரு சுப்பிரமணிய ஐயர் கிட்டயோதான் காட்டுவாங்க. அவங்க கிட்ட எல்லாம் அஞ்சு ரூவா பீசு. எனக்கு தெப்பக்கொளத் தெரு டாக்டர் கிட்டயோ, நாயுடு டாக்டர் கிட்டயோதான் காம்பிக்கணும்னு தோணும். ஆனா, அம்மை, அஞ்சு ரூவா பீசு குடுக்கணுமேன்னு அவங்க கிட்ட எல்லாம் கூட்டிட்டுப் போக மாட்டாள்.

நான், அண்ணனெல்லாம் படிச்ச பள்ளிக்கூடம் தெக்குப் புதுத் தெருவுல இருந்துச்சு. சம்மந்த மூர்த்தி கோயில் தெருவுல இருந்து பை, தூக்குச் சட்டிய எல்லாம் தூக்கிக்கிட்டு நடந்தேதான் போவோம். ஒம்பது மணிப் பள்ளிக்கூடத்துக்கு எட்டு மணிக்கே வீட்டுல இருந்து பொறப்பட்டுருவோம். சொடல மாடன் கோயில் தெரு முக்குல ஶ்ரீ சங்கர் பஸ் கம்பெனி இருந்துச்சு. முன்னால மூக்கு வச்ச பஸ்ஸு. ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்துல வெளிப் பக்கமா பஸ் ஒசரத்துக்கு நீளமா, உருண்டையா ஒரு தகரக் கொழல் மாதிரி நிக்கும். அதுக்குள்ள கரியப் போட்டு ஒருத்தன் மிஷினாலே சுத்திக்கிட்டே இருப்பான். நல்ல கண கணன்னு சூடு ஏறுத வரைக்கும் சுத்திக்கிட்டே இருப்பான். அதை எல்லாம் நின்னு வேடிக்கை பாத்துட்டுப் பள்ளிக்கூடம் போறதுக்கு நேரம் சரியா இருக்கும். சொடல மாடன் கோயில் தெருவுல இருந்து நல்லபெருமாள் வருவான். அவனும் எங்க கூடச் சேந்துக்கிடுவான்.

வருசா வருசம் காப் பரிச்ச லீவு வுடுததுக்கு முன்னால பள்ளிக்கூடத்துல எக்ஸ்கர்ஷன் கூட்டிட்டுப் போவாங்க. ஒரு வருசம் மணிமுத்தாறுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அப்பந்தான் அந்த டேமைக் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அவ்வளவு நீளமான, ஒசரமான சொவர தளவா மொதலியார் வீட்டுல கூடப் பாத்தது இல்ல. எவ்வளவு நீளம், எவ்வளவு ஒசரம். டேமுக்குக் கீழ ஒரு எடத்துல வாசல் மாதிரி சொவர்ல விட்டிருந்தாங்க. அதுக்குள்ள கூட்டிட்டுப் போனாங்க. அந்தச் சொவருக்குள்ள நீளமா கொகை மாதிரி போயிக்கிட்டே இருக்கு. சைட்ல சொவர்ல இருந்து தண்ணீர் கசிஞ்சுகிட்டே இருந்திச்சு. உள்ள வெளக்கெல்லாம் போட்டுருந்தாங்க.

கல்லடைக்குறிச்சி வரை ரயில்ல போயி, அங்க இருந்து மணிமுத்தாறுக்கு பஸ்ஸுல கூட்டிட்டுப் போனாங்க. சாப்புடுததுக்கு பொரி கடலை, கொய்யாப் பழம் எல்லாம் குடுத்தாங்க. மத்தியானம் வரை மணிமுத்தாறுல சுத்திட்டு இருந்தோம். ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. சாயந்தரம் ஊருக்கு வந்துட்டோம். ஆறாப்புக்கு நான் அப்பர் கிளாப்டன் வந்துட்டேன். அப்பர் கிளாப்டன்ல படிக்கும் போதும் எக்ஸ்கர்ஷன் எல்லாம் கூட்டிட்டுப் போனாங்க. ஒரு வருசம் கொல்லத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க. இன்னொரு வருசம் கன்னியாகுமரி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைய எல்லாம் பாக்கக் கூட்டிட்டுப் போனாங்க. லிஸி மிஸ் ரொம்ப நல்லவங்க. ரெண்டு ரெண்டு பேராத்தான் வரிசையாப் போகணும்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க. ஓரமாப் போங்கன்னு மட்டும் சொல்வாங்க. நாகர்கோயில்ல லட்சுமி டாக்கீஸ்ல எம்.ஜி.ஆர். படம் பாசம் பார்த்தோம்.

சூரிய உதயம் பாக்கிறதுக்காக முந்தின நாளே கன்னியாகுமரிக்கிப் போயிட்டோம். ராத்திரி ஒரு பள்ளிக்கூடத்துல தங்கி இருந்தோம். கடல் காத்து ஜில்லுன்னு வீசிக்கிட்டே இருந்துது. யாரும் போர்வை கொண்டாரலை. தலை தொவட்ட வச்சிருந்த துண்டை எடுத்துப் போத்திக்கிட்டோம். ராத்திரி பூரா காத்துச் சத்தம் ஊஊன்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு. எப்பம் எக்ஸ்கர்ஷன் போனாலும் அப்பா, செலவுக்கு வச்சுக்கோன்னு ரெண்டு ரூவா குடுப்பா. மீனா வீட்டுல செலவுக்கு அஞ்சு ரூவா குடுப்பாங்க. அவ பணக்காரி. அவுஹ அப்பாவுக்கு மேல ரத வீதியில பெரிய ஜவுளிக் கடை எல்லாம் இருக்கு. எல்லாருக்கும் ஐஸ் வாங்கிக் குடுப்பா. எலந்தப் பழ சீசன்ல எலந்தப் பழம் வாங்கித் தருவா. ஆனா அவளுக்குப் படிப்புதான் வரலை. என்ன செய்ய?

அப்பர் கிளாப்டன் போனதும் அப்பா ஒரு பேனா வாங்கிக் குடுத்தா. அது சேம்பியன் பேனா. ரோஸ் கலர்ல இருந்திச்சு. மீனா பைலட் பேனா வச்சிருந்தா. அது ரொம்ப வெலை ஜாஸ்தி. அர்ச்சனா சேட்டு வீட்டுப் பொண்ணு. அவளும் பைலட் பேனா வச்சிருந்தா. இப்போ பைலட் பேனாவெல்லாம் ஒண்ணுமில்லாமேப் போயிட்டுது. என்னென்ன பேனாவெல்லாமோ வந்துட்டுது. ரவி, கீதா எல்லாம் யூஸ் பண்ணுத பேனாவெல்லாம் ஏகப்பட்ட வெலை. அப்பம் எல்லாம் பௌண்டன் பேனாதான் உண்டு. பால் பாயிண்ட் எல்லாம் வரலை. நான் வச்சிருந்த சேம்பியன் பேனா கீழே விழுந்து நெக் கட்டை உடைஞ்சிட்டுது. கசிய ஆரம்பிச்சிட்டுது. வெரல் எல்லாம் மை ஆயிரும். அரைப் பரிச்ச சமயத்துல அப்பா ஸ்வான் பேனா வாங்கிக் குடுத்தா. அதை ரொம்பப் பத்தரமா வச்சிருந்தேன்.

நான் ஏழாவது வரும்போது சம்மந்தமூர்த்தி கோவில் தெருவுல இருந்து தெக்குப் புதுத் தெருவுக்கு வந்துட்டோம். ஸ்கூலுக்கு ரொம்பப் பக்கம். அண்ணனுக்கு என்னைய விடப் பக்கம். தெக்குப் புதுத் தெரு வீட்டப் பாத்து வச்சது சேரகொளம் பண்ணையார் மாமா. அப்பாவுக்கு அவுஹ ரொம்ப பெரண்டு. அந்த வீட்டு ஆச்சி, அத்தை எல்லாம் ரொம்பப் பிரியமா இருப்பாங்க.

எங்களுக்கு அவங்க பாத்து வச்ச வீடு, சித்தி வளாகத்துக்கு எதிரில இருந்த வீடு. நாரத்தை மரத்து ஆச்சி வீடுன்னு சொல்வாங்க. எங்க வீட்டுல இருந்து ஆறாவது வீடுதான் பண்ணையார் மாமா வீடு. வீடு வசதியாத்தான் இருந்திச்சு. ஆனா வீட்டு வாசல்ல இருந்த முருங்க மரத்துல சடைசடையா முசுக்கட்டான் பூச்சி இருந்திச்சு. தார்சாவுக்கெல்லாம் வந்துரும். பண்ணையார் மாமா வீட்டு அத்தை, ஆச்சி கூட நானும் அண்ணனும் ராயல்ல அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் போய்ப் பார்த்தோம். செகண்ட் ஷோவுக்குக் கூட்டிட்டுப் போயிருந்தாங்க. எங்க ரெண்டு பேருக்கும் இண்டர்வெல்ல அந்த அத்தை முறுக்கு எல்லாம் வாங்கிக் குடுத்தாங்க. இண்டர்வெல்லுக்கு அப்பறம் எனக்குத் தூக்கம் வந்துட்டுது. அந்த ஆச்சி மடியிலேயே தூங்கிட்டேன்.

எங்க வீட்டுக்குப் பின்னால வாய்க்கால் ஓடும். வாய்க்கால ஒட்டி இருந்த குச்சு வீட்டுலதான் லெச்சுமி அக்காவும், அக்காவோட அப்பா அந்தத் தாத்தாவும், சுலைமான் அண்ணனும் இருந்தாங்க. லெச்சுமி அக்காவும் சுலைமான் அண்ணனும் கல்யாணம் ஆனதுல இருந்து அந்தக் குச்சுலதான் இருக்காங்க. அவங்களுக்குப் புள்ள இல்ல. சுலைமான் அண்ணனும் அந்த அக்கா மாதிரி நல்ல செவப்பு. அந்த அண்ணன், வாகையடி முக்குப் பக்கத்துல சைக்கிள் கடை வச்சிருந்துது. அந்த வீட்டுத் தாத்தா, லெச்சுமி அக்கா, அந்த அண்ணன் எல்லாருமே ரொம்பப் பிரியமா இருப்பாங்க. சுலைமான் அண்ணன் வாறதும் தெரியாது, போறதும் தெரியாது. அந்த அண்ணனுக்கு தலைமுடி சுருள் சுருளா இருக்கும். அந்த அக்கா கூடத்தான் நாங்க ரத்னா டாக்கீஸ்ல ஜனக் ஜனக் பாயல் பாஜே படம் பார்த்தோம். கலர்ப் படம். அதுவும் ரெண்டாம் ப்ளேக்குத்தான் போயிருந்தோம்.

அப்பந்தான் பரமசிவத்து மாமா கொழும்புல இருந்து வந்திருந்தா. பெரியாச்சியோட ரெண்டாவது மகந்தான் பரமசிவத்து மாமா. பரமசிவத்து மாமாவோட அண்ணந்தான் லெட்சுமண பிள்ள மாமா. சேர்மாதேவி ரோட்டுல சொடலமாடன் கோயில் தெருவுக்கு எதிர்த்தாப்ல சட்டி பானைக் கடை போட்டிருந்தா பெரிய மாமா. எப்பமும் கதர் வேட்டிதான் கட்டுவா. பரமசிவத்து மாமா கொழும்புல இருந்து ஒரு பெரிய பொட்டி கொண்டுட்டு வந்துருந்தா. அந்தப் பொட்டிக்கு துணியில ஒறை எல்லாம் போட்டுருந்துது. பொட்டிக்கு ஒறை போட்டுருந்ததை அப்பந்தான் மொத மொதலாப் பாக்கேன். அந்தப் பொட்டியத் தொறந்தாலே தாழம்பூ வாசனை அடிக்கும். பரமசிவத்து மாமா ஜிப்பாதான் போடுவா. கொழும்பிலே இருந்து பிஸ்கட் பாக்கெட், சில்க் துணி, வாச்சு எல்லாம் கொண்டுட்டு வந்திருந்தா. சம்மந்தமூர்த்தி கோயில் தெருவுல இருந்தப்ப ரெங்கூன்ல இருந்து ராசத்து அத்தை வீட்டு மாமா வந்திருந்தப்பவும் இப்படித்தான் சில்க் துணி, சந்தனக் கட்டை, பிஸ்கோத்து எல்லாம் கொண்டுட்டு வந்திருந்தா. அவுஹ பொட்டியில பௌடர் வாசனை அடிக்கும்.

செவாமி அத்தை வீட்டுக்கு தேர் பாக்கும்போது போயிருக்கேன். எப்பம் போனாலும் செவாமி அத்தை தோசைக்கு அறைச்சுக்கிட்டு இருப்பா, இல்லன்னா வடைக்கு அறைச்சுக்கிட்டு இருப்பா. அவுஹ வீட்டுல காலையில இட்லி யாவாரம். சாயந்தரம் வடை யாவாரம். செவாமி அத்தை ரொம்ப அழகா இருப்பா. அவ மாவு அறைக்கும்போது கையில போட்டுருக்க கண்ணாடி வளையல் சத்தத்தைக் கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

செவாமி அத்தைக்கும் பரமசிவத்து மாமாவுக்கும்தான் கல்யாணம் நடந்தது. மாமா வீட்டுக்கு அத்தை வந்த பெறகு பெரியாச்சியே வீட்டு வேலய எல்லாம் பாத்ததால, அத்தை சிலோன் ரேடியோ கேட்டுக்கிட்டே இருந்தாப் போதும்னு ஆயிட்டுது. பவானி அக்கா மாதிரி, சொன்ன சொல்லை மறந்திடலாமா பாட்டை செவாமி அத்தையும் முணுமுணுத்துக்கிட்டே இருப்பா. அந்தப் பாட்டை எப்பம் கேட்டாலும் நல்லாத்தான் இருக்கும். செல நாள் ஜெயா டி.வி. தேன்கிண்ணத்துல அந்தப் பாட்டைப் போடுவான். இப்பம் கேட்டாலும் நல்லாத்தான் இருக்கு. அத்தையும், மாமாவும் ஒரு பக்கம் ஸீரியல் எல்லாம் பாத்தாலும், பழய சினிமாப் பாட்டையும் விடாம கேப்பாங்க. மாமாவுக்கு ஹரிதாஸ் படப் பாட்டுன்னா உசுரு. அத்தைக்கு எம்.எஸ். பாட்டு ரொம்பப் புடிக்கும். காற்றினிலே வரும் கீதம் டி.வி.யில எப்பமாவது போடுவான். அப்பிடியே செல மாதிரி உக்காந்துருவாங்க அத்தை. ரவியோட அப்பாவுடைய ப்ரண்டு அந்தக் கௌஸல்யாகூட எம்.எஸ்.ஸோட ஃபேன்தான். அவ இந்தக் காலத்துப் பொண்ணு. அவ எம்.எஸ். கேஸட் பூரா வச்சிருக்கா. சங்கீதத்துக்கு காலம், வயசு எல்லாம் கெடையாது போல.

அவ நேத்து வந்திருந்தா. யாரோ கோடாடுன்னு ஒரு டைரக்டர் செத்துப் போயிட்டாருன்னு ரொம்ப வருத்தப்பட்டுப் பேசிக்கிட்டு இருந்தா. நம்ம நாட்டு டைரக்டர் செத்துப் போயிட்ட மாதிரி ரொம்ப ஆத்தாமைப் பட்டா. இவுஹ அப்பாவுக்கும் அவரு செத்துப் போனது சங்கடமாத்தான் இருக்குது போல. அவரோட படங்களப் பத்தி ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நாளைக்கி முன்னாலே ஶ்ரீதர் செத்துப் போனதையும், பாலச்சந்தர் செத்துப் போனதையும் பத்தி நெனச்சுக் கிட்டேன். ஒலகத்துல பொறந்துட்டா சாவுன்னு ஒண்ணு வரத்தானே செய்யும்? எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் செத்துத்தானே போறாங்க? சாவு கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா?

Series Navigation<< வாக்குமூலம் – அத்தியாயம் 10வாக்குமூலம் – 12 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.