வெள்ளையடிப்புக்கு அடுத்ததாக பொங்கலை ஊருக்குள் கொணர்பவை பனங்கிழங்குகள். பனங்கிழங்கின் வாசனை பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு மாதம் வரை ஊரை விட்டு லேசில் போகாது. அவிக்கப் பட்ட, அவித்து காய வைத்து பின் உரலில் போட்டு இடிக்கப்பட்ட, ஆச்சிமார்களின் கைவண்ணத்தால் தேங்காய், இஞ்சி சேர்த்து உருண்டையாகப் பிடிக்கப்பட்ட பனங்கிழங்குகள் இன்னும் இன்னும் என் நினைவில் மின்னுகிறவை.(ஒரு வாரம் வரை பல்லில் சிக்கியிருக்கும் பனங்கிழங்கின் நாரும் இதில் அடக்கம்.) பனங்கிழங்குகளின் பலாபலன்களும் விசேஷமானவை. ‘பனங்கெளங்க யாராவது வேண்டாம்பானாவே? ஒண்ணே ஒண்ணு தின்னு பாரும். காலைல நீரு எந்திரிக்கவே வேண்டாம். அதே எந்திரி எந்திரின்னு சொல்லிரும்லா!’
Author: சுகா
சொக்கப்பனை
வருடாவருடம் சொக்கப்பனையின் போது ஒரு பட்டரை கொளுத்திவிடுவார்கள் என்றே நான் வெகுகாலம் நம்பி வந்தேன். எனது சந்தேகத்தை குஞ்சுவும் ஊர்ஜிதம் செய்தான். ‘ஒனக்கு தெரியாதா? அதுக்குன்னே கோயில்ல இருந்து பட்டர்களை வளக்காங்க’ என்று கூசாமல் சொல்லியிருந்தான். விவரம் தெரிந்த வயதில் கார்த்திகை தீபம் முடிந்த ஓரிரு நாளில் நானும், குஞ்சுவும் போத்தி ஹோட்டலில் ரவா தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கணேச பட்டர் வந்து எங்களருகில் உட்கார்ந்து பன்னீர் பக்கோடா ஆர்டர் பண்ணி சாப்பிட்டார். அந்த வருடம் அவர்தான் சொக்கப்பனை கொளுத்தியவர். நான் மேஜைக்கடியில் அவர் கால்களையே பார்த்தேன்.
லோகநாயகி டீச்சரும், லலிதா ராகமும்
‘ஏய் . . . இந்த லலிதா, மாயாமாளவகௌளைக்கு கூடப் பொறந்த தங்கச்சில்லா!’ என்றார். உடனே வயலினை எடுத்துக் கொண்டார். மிக எளிமையாக இந்த இரண்டு ராகங்களுக்குமான வித்தியாசத்தை வாசித்துக் காட்டினார். ‘இப்பொ வெளங்குதா?’ என்றவர் என் பதிலுக்குக் காத்திராமல், ‘ஒனக்குத்தான் இன்னொரு வாத்தியார் இருக்காம்லா! அவன்ட்டதான் ஒரு வண்டிக்கு இருக்குமே.
போய் கேளு’ என்றார். அவர் சொன்ன அந்த இன்னொரு வாத்தியார் இளையராஜா.
சுந்தரம் ஐயங்காரின் கருணை
ஒரு வருடத்தில் அநேகமாக எல்லா சைக்கிள்களும் தத்தம் அடையாளங்களை இழந்து வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டன. வாத்தியாரின் மகன் என்பதால் ‘இந்த செறுக்கியுள்ளைய அப்படியே பொத்தாமரைக் குளத்துல கொண்டு தள்ளீறணும்ல’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு வெளியே சொல்ல தைரியமில்லாமல் ‘ஒனக்கில்லாத சைக்கிளா, எடுத்துக்கோடே’ என்று ரத்தக் கண்களோடு அந்த மாணவர்கள் சைக்கிள் சாவியைக் கொடுத்துவிட்டு மனதுக்குள் குமுறினர்.
அது அவள் அவன்
தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து போகும் சண்முக அண்ணனைக் கண்டாலே ஜாக்கனுக்கு ஆகாது. அவன் வருவது தெரிந்தாலே ஜாக்கனை கட்டிப் போடுவோம். ஆனாலும் கடும் கோபத்துடன் இவனை குதறியே தீருவது என்று கட்டியிருக்கும் சங்கிலி கழுத்தை அறுக்க, பாய்ந்தப் பாய்ந்து குரைப்பான்.எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் சண்முக அண்ணன் ஒரு நாள் ஜாக்கன் ஒரு நாய் என்பதையும் மறந்து, ‘ஒன் வயசென்ன என் வயசென்னலே’ என்று தன்னிலை மறந்து கோபப்பட்டான்.
நிறம்
பேச்சுவாக்கில் அவனுடைய அண்ணன் நான் என்று சொன்னதை அவர் நம்பவுமில்லை.மேற்கொண்டு என்னிடம் பேசுவதை விரும்பவுமில்லை.உலகநாயகன் கலரில் இருக்கும் அவன் எங்கே,தேமுதிக தலைவர் கலரில் இருக்கும் நான் எங்கே.என்னைப் போல ஓர் அண்டப் புளுகன் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது என்பதை அவர் வாயைத் திறந்து சொல்லவில்லையென்றாலும் அவர் என்னை பார்த்த ஓர் அற்பப்பார்வையே எனக்கு உணர்த்தியது.
சில்வர் டோன்ஸ்
பாடகர்கள்,வாத்தியக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் அந்தக் குழுவில் இருந்தாலும் அந்த வயதுக்கேயுரிய ரசனையோடு எனக்கு டிரம் வாசிப்பவரின் மீதுதான் காதல். அகலக் காலர் வைத்த சட்டை பித்தான்களை திறந்து விட்டு கழுத்துச் சங்கிலி தெரிய ஸ்டைலாக குச்சிகளை சுழற்றியபடியே
அவர் டிரம் வாசிக்கும் போது டிரம்முடன் சேர்ந்து என் மனமும்
அதிரும்.
திசை
அம்மன்புரத்தில் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதிக்கத் தொடங்கினோம். எனக்கு லேசாக தலை சுற்றியது. அதற்குப் பிறகு சைக்கிள்தான் எங்களைக் கூட்டிக் கொண்டு போனது. அடுத்த ஊரான திருச்செந்தூர் வர ரொம்ப நாளானது. ஒருமாதிரியாக செந்திலாண்டவன் சன்னிதியை அடைந்தோம். சட்டையைக் கிழற்றிவிட்டு சன்னிதானம் முன் நின்றோம். எனக்கு இரண்டு முருகர்கள் தெரிந்தனர். ஷண்முகர் சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை தரிசிக்கப் போன போது அங்கு அவர்கள் ஒரு கூட்டமாக ஒரு பெரிய கூட்டுக்குடும்பமாகக் காட்சியளித்தனர். கோயிலை விட்டு வெளியே வந்து கடற்கரையில் விழுந்தோம்.
