
கணக்கு
பாவத்தை
புண்ணியத்திலிருந்து
கழித்து
மீதிக்கு நீதி தருவான்
சித்ரகுப்தனென்று
நினைத்துக் கொண்டிருந்தேன்.
சித்ரகுப்தன் கணக்கு வேறாம்
சாமி சொன்னார்
செய்த புண்ணியத்துக்கு
நல்லூழ் வரமாம்
செய்த பாவத்துக்கு தண்டனை
தருவானாம் சித்ரகுப்தன்.
தலையில் சீனி தடவி
எறும்புகளை மேயவிடுவானாம்.
வாய்க்குள் தேள்களைவிட்டு
வாயைத் தைத்துவிடுவானாம்
விரல்களில் அமிலம் பூசி
கொதிநீரில் விடுவானாம்
டேய்! திருந்துங்கடா
படிப்பறிவு
புத்தகங்கள் படிப்பதால்
அறிவு வளருமென்பது ஒரு நம்பிக்கை
நம்பிக்கை மெய்யாவது
நாம் படிக்கிற புத்தகத்தைப் பொறுத்தது.
படிப்பது நல்லதாயிருக்கவேண்டும்
படித்தது மனதில் பதிய
ஊன்றிப் படிக்கவேண்டும்
படித்தது சரியான சமயத்தில்
சரியாக நினைவுக்கு வரவேண்டும்.
படித்ததை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால்
அறிவு வளர்ந்த அறிகுறிகளாகக் கருதலாம்
அறிகுறிகள் எளிதில் தென்படுவதில்லை
பிறகு புத்தகங்கள் படிப்பதால் என்ன நன்மை?
அரைக்கிறுக்கன் அகராதி பிடித்தவன்
ஏட்டுச் சுரைக்காய் படித்த முட்டாளென்று
பலரும் நம்மைத் தவிர்க்கிறார்கள்.
நல்லதுதானே?
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
