புல்நுனியில் பனிமுத்து

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
白露に
風の吹きしく
秋の野は
つらぬきとめぬ
玉ぞ散りける

கனா எழுத்துருக்களில்
しらつゆに
かぜのふきしく
あきののは
つらぬきとめぬ
たまぞちりける

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: கவிஞர் அசாயசு

காலம்: கி.பி 9ம் நூற்றாண்டின் பிற்பகுதி (பிறப்பு இறப்பு பற்றிய குறிப்பான தகவல்கள் இல்லை).

இத்தொடரின் 22வது பாடலை இயற்றிய புலவர் யசுஹிதேவின் மகன் என்பதைத் தவிர இவரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

பாடுபொருள்: காலைநேரப் பனித்துளியின் அழகு.

பாடலின் பொருள்: புல்வெளியில் புற்களின் தலையில் அழகாக அமர்ந்து இருக்கும் பனித்துளிகள் இறுகக் கட்டாத சரத்திலிருந்து உதிர்ந்த வெண்முத்துக்கள் போல் சிதறுகின்றன நான் நடக்கும்போது சலனப்படும் காற்றினால்.

இயற்கையைப் போற்றும் இன்னோர் எளிய பாடல். இலையுதிர் காலத்தில் நிகழ்ந்ததாகப் பாடலிலேயே வருகிறது. கி.பி 8, 9ம் நூற்றாண்டுகளில் முத்துக்களில் துளையிட்டு அவற்றைச் சரமாக்கி அணிவது வழக்கமாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். தமா (玉) என்ற சொல் இங்கு சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமா என்ற சொல்லுக்கு உருண்டை அல்லது பந்து என்ற பொதுவான பொருளும் முத்து என்ற சிறப்புப் பொருளும் உண்டு. புல்லின் நுனியில் அமர்ந்துள்ள பனி உருண்டையையும் முத்தையும் குறிக்குமாறு கவிஞர் பயன்படுத்தியுள்ளார்.

இத்தொகுப்பில் வெண்மையைப் போற்றும் இன்னொரு பாடல். முன்பொரு பாடலில் பனியை மலரின் இதழாக எண்ணியதுபோல் மிதத்தே முறையில் இப்பாடலில் பனியை வெண்முத்தாக எண்ணி மயங்கியதாகப் பாடல் இயற்றப்பட்டிருக்கிறது.

வெண்பா:

புல்நுனி கொள்ளும் பனித்துளி யாவுமே
நல்மணி அன்ன அழகொடு – செல்வழிக்
காற்றில் பரவுதல் காட்டுமே கட்டாச்
சரத்தின் சிதறுவெண் முத்து

Series Navigation<< கோடைநிலா எங்கே?காணும் பேறைத் தாரீரோ? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.