சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

எளிய உயிரான இந்த ஜீவனும், இந்தப் பிரபஞ்சத்துக்கே காரணமாக இருக்கும் அந்த பிரம்மமும் உண்மையில் ஒன்றே என்று அத்வைதம் கூறுகின்றது. எந்த அடிப்படையில் இந்த பிரகடனம் செய்யப்படுகிறது? ஜீவன், பிரம்மம் இரண்டுமே தூய உணர்வான சைதன்யமே என்று நிலை நாட்டப்படுவதால் ஜீவனும், பிரம்மமும் ஒன்று என்று நிறுவப்படுகிறது. ஜீவன், பிரம்மம் ஆகியவற்றின் உபாதிகள் வேறு வேறானவை. ஜீவன் வரம்புக்குட்பட்ட ஆற்றல் கொண்டவன்; பிரம்மம் எல்லையற்ற ஆற்றல் கொண்டது. இவற்றில் வேறுபாடு இருக்கும்போது எப்படி வேதாந்தம் இரண்டும் ஒன்றே என்று கூற முடியும் என்ற கேள்வி எழும்போது, அதற்கு பதிலாக உபாதிகள் மூலம் வரக்கூடிய வேறுபாடுகள் வெறும் தோற்றமே என்று அத்வைதம் கூறுகிறது.

நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரு தோற்றமே என்று அத்வைதம் கூறுகின்றது. இது நமது அனுபவத்துக்கு மாற்றான ஒரு கூற்றாக இருக்கின்றது. இந்தத் தோற்றத்துக்கு மாயை என்று பெயர் கொடுக்கப்படுகிறது. எது அனுபவத்துக்குப் பொருளாக உள்ளதோ, ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இல்லையென்று நிறுவப்படுகிறதோ அதற்கு மாயை என்று பெயர். “யா மா சா மாயா.” எது இல்லையோ அது மாயா. விளக்கமுடியாத ஒன்றுக்குத்தான் மாயை என்று பெயர் என்று இன்னொரு விளக்கமும் உண்டு. “அனிர்வசனீயம் மாயா.” இருப்பது சைதன்ய வடிவிலான பிரம்மம் அல்லது ஆத்மா மட்டுமே. பிற அனைத்தும் அந்த சைதன்யத்தால் விளக்கப்படும் தோற்றமே என்று வேதாந்தம் கூறுகின்றது. தர்க்கரீதியாக சாத்தியமேயில்லாத விஷயங்களை நிகழ்த்திக் காட்ட வல்லது இந்த மாயை; ஆனால் அது பிரம்மமாகிய உன்னிடமே ஒடுங்கியுள்ளது என்ற புகழ்பெற்ற கூற்று ஒன்று உண்டு. “அகடித கடனா படீயசீ மாயா; சா த்வயீ ப்ரம்மணி ஸ்திதா:” இப்படிப்பட்ட மாயையைப் புரிந்து கொள்வதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கொண்டு வேதாந்தம் விளக்குகிறது.

மிகப்பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டு “ரஜ்ஜூ சர்ப்ப த்ருஷ்டாந்தம்” என்பது. கயிற்றரவு எடுத்துக்காட்டு என்று தமிழில் மொழிபெயர்க்கலாம். புதுமைப்பித்தன் கயிற்றரவு என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருக்கிறார். அந்தி மங்கிய மாலை வேளையில் தெருவில் நடந்து கொண்டிருக்கிறோம். அப்போது சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று படுத்துக் கிடப்பதைப் பார்க்கிறோம். அச்சத்தில் அங்கேயே உறைந்து நின்று விடுகிறோம். நம் இதயம் படபடவென்று துடித்துக் கொண்டிருக்கிறது. அப்போது அந்த வழி வரும் மற்றொருவர், “அது பாம்பு இல்லை வெறும் கயிறுதான். மங்கிய மாலை வெளிச்சத்தில் கயிறுதான் பாம்புபோலத் தெரிகிறது,” என்று நம்மிடம் கூறுகிறார். இப்போது நாம் கொண்டிருந்த அச்சம் மெல்ல நம்மிடமிருந்து நீங்குகிறது. இப்போதும் அந்தக் கயிறு மங்கிய வெளிச்சத்தில் பாம்பு போலத்தான் தோற்றமளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது கயிறுதான் என்ற அறிவை இப்போது நாம் அடைந்து விட்டதால் நம்மிடமிருந்த அச்சம் முழுமையாக விலகி விடுகிறது. நாம் நிம்மதியாக நம் பயணத்தைத் தொடர்கிறோம்.

இதுதான் கயிற்றரவு எடுத்துக்காட்டு. இந்த திருஷ்டாந்தத்தைக் கொண்டு அத்வைதம் நாம் காணும் உலகம் வெறும் தோற்றமே என்று நிறுவுகிறது. இன்னொரு எடுத்துக்காட்டையும்  இப்பிரபஞ்சம் தோற்றமே என்று நிறுவ வேதாந்தம் கைக்கொள்கிறது. அது ஸ்வப்ன திருஷ்டாந்தம், அதாவது கனவு எடுத்துக்காட்டு. நமது கனவில் நாம் பல்வேறு உலகங்களில் பிரவேசிக்கிறோம். பல்வேறு உயிரினங்களையும், மனிதர்களையும், அனுபவங்களையும் சந்திக்கிறோம். இவற்றையெல்லாம் படைப்பது யார்? கனவு காண்கின்ற நாம்தானே? எப்படி விழித்தவுடன் கனவுலக அனுபவங்கள் அனைத்தும் தோற்றமே என்பதை அறிந்து கொள்கிறோமோ அப்படியே நம்மைப் பற்றிய உண்மையான அறிவை அடைந்தபின், நாம் காணும் இந்த உலகமனைத்தும் தோற்றமே என்றும், எல்லாவற்றிலும் நானாகிய ஆத்மாவே இருக்கின்றது (அல்லது இன்னும் சரியாகச் சொல்வதானால், கனவுலகில் நிகழ்வதுபோல நாம் காணும் இந்த மொத்தப் பிரபஞ்சமும் ஆத்மாவாகிய என்னுள்தான் நிகழ்கிறது) என்பதையும் அறிந்து கொள்வோம்.

மாயை இரண்டு விதமான சக்திகளைக் கொண்டு நம்மைப் பற்றிய உண்மையை நம்மிடமிருந்து மறைக்கிறது. அவற்றுக்கு ஆவரணம் மற்றும் விக்ஷேபம் என்று பெயர். ‘ஆவரணம்’ என்றால் மூடுதல் அல்லது மறைத்தல் என்று பொருள். உண்மையாக இருக்கும் ஒரு பொருளை நம் கண்ணிற்குத் தெரியாமல் மறைப்பது ஆவரண சக்தி ஆகும். நம்முடைய உண்மையான சொரூபம் எல்லையற்ற பிரம்மம். ஆனால், அந்த உண்மையை நம்மிடமிருந்து மறைத்து, “உனக்கு ஆத்மாவைப் பற்றி எதுவும் தெரியாது” என்று மூடிக் கிடப்பதுதான் இந்த ஆவரண சக்தி. இது அறியாமையின் முதல் நிலை. விக்ஷேபம்’ என்றால் வளைத்தல், சிதறடித்தல் அல்லது இல்லாததொன்றைத் தோற்றுவித்தல் என்று பொருள். உண்மையை மறைத்ததோடு நிறுத்தாமல், இல்லாத ஒரு பொய்யான தோற்றத்தை அங்கே உருவாக்குவது விக்ஷேப சக்தி ஆகும். நான் பிரம்மம் என்ற உண்மையை ஆவரண சக்தி மறைத்தவுடன், விக்ஷேப சக்தி உள்ளே நுழைந்து, “நீ பிரம்மம் அல்ல; நீ அழியக்கூடிய இந்த உடல், கவலைப்படும் மனம், பிறந்து இறக்கும் ஜீவன்” என்று ஒரு தற்காலிக உலகியல் தோற்றத்தை நமக்குள் உருவாக்குகிறது. இதுவே சம்சார பந்தத்திற்கு வித்தாகிறது. 

உபநிஷத்துக்கள் சிலவற்றில் இந்தப் பிரபஞ்சம் உருவான விதம்  பற்றி விஸ்தாரமாக வர்ணனைகள் வருகின்றன. இப்பிரபஞ்சம் உண்மையில் தோற்றம் மட்டுமே என்றால் அந்தப் பிரபஞ்சத்தின் பிறப்பு குறித்த இவ்வளவு விரிவான விளக்கங்கள் ஏன்? ஏனெனில் துவக்க நிலையில் உள்ள ஒரு வேதாந்த மாணவனுக்கு ஆத்மாவே எல்லாம், காணும் அனைத்தும் தோற்றமே என்பதை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டுதான் அவ்வாறு கூறப்படுகிறது. பொதுவாக பிரபஞ்சத்தின் படைப்பைப் பொறுத்தவரை, மாணவனின் முதிர்ச்சிக்கேற்றவாறு மூன்று வகைக் கோட்பாடுகளைக் கொண்டு விளக்குகிறது வேதாந்தம். அவை சிருஷ்டி-திருஷ்டி வாதம், திருஷ்டி-சிருஷ்டி வாதம், மற்றும் அஜாத வாதம்.

சிருஷ்டி- திருஷ்டி வாதம் என்பது இந்த உலகம் ஓர் இறைவனால் படைக்கப்பட்டது என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது. எனவே சிருஷ்டி என்பது முதலில் ஏற்படுகிறது. பஞ்சபூதங்களைக் கொண்டு உலகை இறைவன் படைக்கிறார். அந்த இறைவனை ஈஸ்வரன் என்ற சொல்லால் அறிமுகப்படுத்துகிறது வேதாந்தம். படைக்கப்பட்ட உலகை அதில் வந்து பிறக்கும் ஜீவர்களாகிய நாம் பார்க்கிறோம். பார்த்தல் என்பது திருஷ்டி என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதுவே சிருஷ்டி-திருஷ்டி வாதம். இந்தக் கோட்பாட்டின்படி நாம் காணும் உலகம் என்பது படைக்கப்பட்டுள்ளது. அதில் வாழும் ஜீவர்களாகிய நாமும் படைக்கப்பட்டுள்ளோம். இந்த உலகத்தைப் பார்த்துக் கொண்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறோம். இது துவக்க நிலையிலுள்ள சாதகர்களுக்காக அளிக்கப்படும் மிக எளிமையான கோட்பாடு. உலகின் பல்வேறு மதங்களும் இக்கொள்கைகளைக் கொண்டுள்ளன.

சிருஷ்டி-திருஷ்டி வாதத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால் ஒரு முக்கியமான கேள்விக்கு நாம் பதிலளித்தாக வேண்டும். இறைவன் அல்லது ஈஸ்வரன் இந்த உலகைப் படைத்தார் என்ற கருத்து உண்மையாயின் அவர் எந்த கச்சாப்பொருளைக் கொண்டு இந்த உலகைப் படைத்தார் என்ற கேள்விக்கான பதில்தான் அது. எந்த ஒரு பொருள் உருவாவதற்கும் இரண்டுவிதமான காரணங்கள் இன்றியமையாதவை. ஒன்று நிமித்த காரணம், ஆங்கிலத்தில் இதற்கு Intelligent Cause என்று சொல்லலாம். இன்னொன்று உபாதான காரணம், Material Cause, அதாவது அந்தப் பொருள் உருவாவதற்குத் தேவையான கச்சாப்பொருள். ஒரு பானை செய்ய வேண்டும் என்றால் களிமண் உபாதான காரணம், அதைச் செய்யும் தொழிலறிந்த குயவன் நிமித்த காரணம். இதையே இந்தப் பிரபஞ்ச படைப்புக்குப் போட்டுப் பார்த்தால், ஈஸ்வரன் இவ்வுலகம் தோன்றுவதற்கு நிமித்த காரணம் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். அவரது வல்லமையால், திட்டத்தால் இந்த உலகம் உருவாகியிருக்கிறது என்று கொள்வோம். ஆனால் எந்த கச்சாப்பொருளைக் கொண்டு அவர் இந்த உலகத்தைப் படைத்தார்? அவருக்கு வெளியே உள்ள ஒரு பொருளைக் கொண்டு அவர் உலகைப் படைத்தார் என்று கூறினால் அந்தப் பொருளை யார் படைத்தது என்ற கேள்வி வரும். அப்போது சர்வ வல்லமை கொண்ட ஈஸ்வரன் என்ற தகுதி அவருக்குப் பொருந்தாமல் போய்விடும். எனவே இந்த உலகத்தை ஈஸ்வரன் தனது வல்லமையால் படைத்தார் என்று கூறுவதைவிட தன் வல்லமையைக் கொண்டு அவர் தன்னையே இந்த உலகமாக மாற்றிக் கொண்டார் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். அதாவது உலகின் படைப்புக்கு ஈஸ்வரனே நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறார். “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று கூறப்படும் சொலவடையை நினைவு கொள்க. எனவே வேதாந்தத்தைப் பொருத்தவரை பார்க்கும் அனைத்தும் இறைவனே. இதைத்தான் “ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்” என்று ஈஸாவாஸ்ய உபநிஷத் கூறுகின்றது. பொதுவாக எந்த ஒரு பொருளின் உருவாக்கத்துக்கும் அதைச் செய்பவன், அதன் மூலப்பொருள் என்ற தனித்தனியாக இரு காரணங்கள் இருக்கும். ஆனால் உலகப்படைப்பு என்ற விஷயத்தில் உலகைத் திட்டமிட்டுப் படைக்கத் தேவையான அறிவு அவரிடம் இருப்பதால், ஈஸ்வரனே நிமித்த காரணம். உலகமாக மாறுவதற்கு வெளியில் வேறு எந்த மூலப்பொருளும் இல்லாததால், அவரே உலகமாக மாறி நிற்கிறார். எனவே, அவரே உபாதான காரணம். இவ்வாறு, படைப்பவனும் (Intelligent cause) மூலப்பொருளும் (Material cause) ஈஸ்வரன் என்ற ஒரே தத்துவமாக இருப்பதால், அவருக்கு “அபின்ன நிமித்த உபாதான காரணம்” (இரண்டற்ற ஒரே காரணம்) என்று பெயர். அபின்ன நிமித்த உபாதான காரணத்துக்கு நம் வாழ்விலிருந்தே இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கொடுக்க முடியும். ஒன்று சிலந்திப் பூச்சி. சிலந்திப்பூச்சி வலை பின்னுவதற்கான அறிவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வலை பின்னுவதற்கான மூலப்பொருளையும் அது தன்னுடலிலிருந்தே உற்பத்தி செய்கின்றது. இன்னொரு உதாரணம் நாம் காணும் கனவு. கனவில் தோன்றும் உலகங்களும், அனுபவங்களும் நம்மிடமிருந்தே அல்லவா தோன்றுகின்றன?

இறைவனே பிரபஞ்சப் படைப்புக்கு நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறார் என்ற இந்த கருத்தை துவைதம் மற்றும் விசிஷ்டாத்வைதப் பள்ளிகளும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அவற்றுக்கும், அத்வைத வேதாந்தத்துக்கும் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு இருக்கின்றது. பிற பள்ளிகள் இறைவனே இந்த உலகமாக மாற்றமடைந்து நிற்கின்றார் என்று கொள்கின்றன. அதாவது எப்படி பால் உறைந்து தயிராக மாறுகின்றதோ அதுபோல இறைவனே பரிணாமமடைந்து இவ்வுலகமாக மாறி நிற்கின்றார் என்பது அவர்களது கருத்து. அதாவது இறைவனை அவர்கள் “பரிணாமி உபாதான காரணம்” என்கின்றனர். ஒரு மூலப்பொருள் தன் பழைய நிலையை முற்றிலும் இழந்து, ஒரு புதிய பொருளாக உண்மையாகவே மாறினால், அந்த மூலப்பொருளுக்கு ‘பரிணாமி உபாதான காரணம்’ என்று பெயர். ஆனால் அத்வைத வேதாந்தமோ இறைவன் இவ்வுலகுக்கு விவர்த்த உபாதான காரணமாக இருக்கிறார் என்று கூறுகிறது. ஒரு மூலப்பொருள் எந்தவொரு உண்மையான மாற்றமும் அடையாமல், வேறொரு பொருளாகத் தற்காலிகமாகத் தோற்றமளித்தால், அந்த மூலப்பொருளுக்கு ‘விவர்த்த உபாதான காரணம்’ என்று பெயர். நாம் ஏற்கனவே பார்த்த ‘ரஜ்ஜூ சர்ப்ப த்ருஷ்டாந்தம்’ (கயிறு பாம்பாகத் தோன்றுவது). இங்குப் பாம்பு தோன்றுவதற்குக் கயிறுதான் காரணம். ஆனால், கயிறு உண்மையாகப் பாம்பாக மாறவில்லை. அது கயிறாகவே இருந்துகொண்டு பாம்பாகத் தோற்றமளிக்கிறது. அது கயிறுதான் என்ற அறிவு ஏற்பட்டபிறகும் அது பாம்பைப்போலவே தோற்றமளிக்கிறது. இதனால்தான் பார்ப்பதனைத்தும் தோற்றம் என்றும், இருப்பதெல்லாம் பிரம்மமே என்றும் உரைக்கப்படுகிறது.

இதுவே திருஷ்டி-சிருஷ்டி வாதத்தின் அடிப்படையுமாகும். நான் பார்ப்பதால்தான் இந்த உலகம் இருக்கின்றது. இருப்பது பிரம்மமாகிய நான் மட்டுமே. பார்க்கப்படும் அனைத்தும் வெறும் தோற்றமே என்பதுதான் திருஷ்டி-சிருஷ்டி வாதம். மீண்டும் அதே கேள்விக்கு வருவோம். பார்ப்பதெல்லாம் தோற்றமேயென்றால் உபநிஷத்துக்கள் ஏன் பிரபஞ்சப் படைப்பு குறித்துப் பேசுகின்றன? அல்லது சிருஷ்டி-திருஷ்டி வாதம், திருஷ்டி-சிருஷ்டி வாதம் இரண்டும் சமமான இடத்தை வேதாந்தம் அளிக்கிறது என்று பொருள் கொள்ளலாமா? வெறும் தோற்றம் என்று முதலிலேயே கூறாமல் ஏன் பிரபஞ்சப் படைப்பு குறித்த விஸ்தாரமான வர்ணணை?

அத்வைத வேதாந்தம் உண்மைப் பொருளை அறிவிக்க ஒரு குறிப்பிட்ட கற்றல் முறையை, அதாவது பிரக்ரியாவைக் கையாளுகிறது. அதற்கு “அத்யாரோப அபவாதம்” என்று பெயர். வேதாந்தத்தின் துவக்க நிலையில் உள்ள மாணவன் இந்த உலகம், அது தரும் அனுபவங்கள் அனைத்தும் உண்மை என்ற கருத்தைக் கொண்டபடிதான் வேதாந்தத்துக்குள் நுழைகிறான். அத்வைத வேதாந்தமும் அவன் கருத்து உண்மையில் தவறாக இருந்தபோதிலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறது. ஒரு விஷயத்தில் நம்முடைய கருத்தை ஏற்றிப் பார்ப்பதற்கு “அத்யாசம்” என்று பெயர். Superimposition என்று ஆங்கிலத்தில் குறிப்பிடலாம். இந்த அத்யாசத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அத்வைத வேதாந்தம் உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள பிரபஞ்சப் படைப்பு குறித்து விளக்குகிறது. பின்னர் ஆத்மா, பிரம்மம், ஜீவன், ஈஸ்வரன், மாயை போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணவன் கொண்டிருக்கக் கூடிய தவறான கருத்தை நீக்குகிறது. இவ்வாறு தவறான கருத்தை நீக்குவதற்கு அபவாதம் என்று பெயர். இந்த அத்யாரோப அபவாத முறையைப் பயன்படுத்தித்தான் அத்வைத வேதாந்தம் நமக்கு நம்மைப் பற்றிய உண்மையான அறிவை அளிக்கின்றது. 

திருஷ்டி- சிருஷ்டி வாதத்தில் நான் பார்க்கிறேன், அதனால் இந்த உலகம் இருக்கிறது என்ற அறிவை மாணவன் அடைகிறான். அதாவது இந்தப் பிரபஞ்சப் படைப்புக்கு அவனது மனமே நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறது. மனம் இருக்கும் வரையில்தான் உலகம் இருக்கின்றது. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் இல்லை. அதனால் உலகமும் இல்லை. 

மூன்று விதமான சத்யங்கள் (இருப்புகள்) வேதாந்தத்தில் பேசப்படுகின்றன. அவை வியாவகாரிக சத்யம், பிராதிபாஷிக சத்யம், பாரமார்த்திக சத்யம். இருப்பது ஒரே சத்யம்தான் என்றுதானே கூறினீர்கள். இப்போது எங்கிருந்து மூன்று சத்யங்கள் வந்தன என்று கேட்கலாம். இந்தப்பிரிவுகளும் மாணவனின் முதிர்ச்சிக்கேற்றவாறு பிரிக்கப்படுபவையே. ஆனால் இருப்பது என்றுமே ஒரே சத்யம்தான். இவற்றில் வியாவகாரிக சத்யம் என்பது நான் தினமும் சஞ்சரிக்கும் இந்த உலகமும், அதன் அனுபவங்களும். நாம் வாழும் இந்த பௌதீக உலகம், சமுதாயம், உறவுகள், அறிவியல் விதிகள் அனைத்தும் இதில் அடங்கும். நாம் செயல்படுவதற்கு (Transaction) இது உண்மையாகத் தேவைப்படுகிறது. ‘வ்யாவஹாரம்’ என்றால் கொடுக்கல்-வாங்கல், பரிமாற்றம், செயல்பாடு என்று பொருள். இது நாம் விழித்திருக்கும் போது அனுபவிக்கும் இந்த உலகம். நாம் அனைவரும் பொதுவில் பகிர்ந்து கொள்ளும் உலகம் இது. பொதுவாக நாம் அனைவரும் இந்த உலகம் உண்மை என்று கருதியே வாழ்வைக் கடத்துகிறோம். ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானிக்கோ இந்த உலகம் ஒரு கனவுத் தோற்றமென பொருளற்றுப் போகிறது. ஆனாலும் அவன் தன் உடல் வீழும் வரைக்கும் இந்த உலகத்தில் செயல்களை எந்தவித பற்றுமின்றி மேற்கொண்டு வருவான். பிறருக்குத்தான் அவன் இந்த உலகில் இருந்து செயல் புரிவதைப் போன்று தோன்றும். அவனைப் பொறுத்தவரை அவன் எந்தச் செயலையும் செய்வதில்லை. 

இரண்டாவது வகையான சத்யம் பிராதிபாஷிகம் எனப்படுகிறது. இது தனி நபரைப் பொறுத்த உண்மை. நம்முடைய விருப்பு, வெறுப்புகள், பற்றுகள் இவற்றின் மூலம் நாம் நமக்கேயான தனி உலகம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளோம். இது நம்மைத் தவிர பிறருக்கு அறியாத உலகமாக இருக்கும். நாம் காணும் கனவுகளும் இந்த பிராதிபாஷிக சத்யத்துக்குள்தான் அடங்கும். எப்படி விழித்துக் கொண்டவுடன் நான் கண்ட கனவு வெறும் தோற்றமென ஒருவன் உணர்கிறானோ, அதேபோல் ஆத்ம ஞானத்தை அடைந்த ஒருவன் விழிப்பு நிலையிலிருந்தே விழித்தெழுகிறான். அதாவது இந்த உலகமே ஒரு கனவுதான் என்றும், அந்தக் கனவு தன்னிடமிருந்தே வெளிப்பட்டுள்ளது என்றும் அறிந்து கொள்கிறான். எனவே அவனைப் பொறுத்தவரை வியாவஹாரிக சத்யமும் இல்லை, பிராதிபாஷிக சத்யமும் இல்லை. சிருஷ்டி-திருஷ்டி வாதமும் இல்லை, திருஷ்டி- சிருஷ்டி வாதமும். இருப்பதெல்லாம் பிரம்மமே, வேறு எதுவும் இங்கு புதிதாகப் படைக்கப்படவில்லை என்பதே அவனது பார்வை. இருக்கும் அந்த ஒரே பிரம்மம்தான் பாரமார்த்திக சத்யம் என்றழைக்கப்படுகிறது. எதுவுமே புதிதாகப் படைக்கப்படவில்லை என்று ஞானி கொண்டிருக்கிற அந்தக் கருத்துதான் அஜாத வாதம் என்று அழைக்கப்படுகின்றது. ஜாதம் என்றால் பிறத்தல். அஜாதம் என்றால் பிறப்பற்றது. அதாவது இங்கு எதுவுமே பிறக்கவில்லை. படைக்கப்படவில்லை. பிரம்மம் மட்டுமே என்றுமே இருந்து கொண்டிருக்கிறது. ஞானி அதுவாகவே இருந்து கொண்டிருக்கிறான். இது இறுதி நிலை. இங்கு “உலகம் என்ற ஒன்று பிறக்கவே இல்லை, படைப்பே நடக்கவில்லை” என்று கூறப்படுவதால், காரணம்-காரியம் (Cause and Effect) என்ற தத்துவமே பொய்யாகிவிடுகிறது.  குடமே இல்லாதபோது குயவனுக்கும் களிமண்ணுக்கும் வேலை இல்லை அல்லவா? அதுபோல, உலகம் என்ற தோற்றமே இல்லாதபோது, அதற்கு நிமித்த காரணம் யார், உபாதான காரணம் யார் என்ற கேள்வியே எழாது. இருப்பது பிரம்மம் மட்டுமே. 

பிரம்மம் என்ற பாரமார்த்திக சத்யம் மட்டுமே இருந்து கொண்டிருந்தாலும் வியாவகாரிக சத்யமான இந்தப் பிரபஞ்சமும், பிராதிபாஷிக சத்யமான தனி நபர் உலகமும் நம் அனுபவத்தில் தோன்றுவதற்குக் காரணம் என்ன? அறியாமைதான் காரணம் என்று வேதாந்தம் கூறுகின்றது. பிரபஞ்ச அளவில் இருக்கும் ஒட்டுமொத்த அறியாமை அல்லது ஆற்றலுக்குத்தான் ‘மாயை’ என்று பெயர். இது ஈஸ்வரனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பேராற்றல். மாயை ஈஸ்வரனைப் பாதிப்பது இல்லை; மாறாக ஈஸ்வரன் மாயையைக் கொண்டுதான் இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்கிறார், நடத்துகிறார். தனிநபர் அளவில் இருக்கும் அறியாமைக்கு ‘அவித்யை’ என்று பெயர். “நான் வரம்புகளுக்குட்பட்ட ஆற்றல் கொண்ட உடலும் மனமும் கொண்ட ஜீவன். நான் பல்வேறு தளைகளால் கட்டுண்டிருக்கிறேன். அதனால் துயரத்திலிருக்கிறேன் என்று தனி மனிதன் நினைப்பதற்குக் காரணம் இந்த அவித்யை தான். அவித்யை ஜீவனைக் கட்டுப்படுத்துகிறது, அவனைச் சம்சாரத் துயரத்தில் ஆழ்த்துகிறது.  

ஓர் அத்வைத வேதாந்த மாணவன் இந்த மூன்று சத்யங்களையும் அகவிடுதலைக்கான பயணத்தில் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்துப் புரிந்து கொள்ள வேண்டும். உலகியல் விஷயங்களைச் செய்யும்போது வ்யாவஹாரிக சத்யத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். “உலகமே பொய்” என்று சொல்லிவிட்டுப் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது. அதே சமயம், உலகியல் இன்ப-துன்பங்களில் மூழ்கிவிடாமல், “இது வ்யாவஹாரிக சத்யம் மட்டுமே” என்ற விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிராதிபாஷிகம் மாயைக்குள் மாயை என்பதை அறிந்து அதிலிருந்து அறவே தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். வ்யாவஹாரிக சத்யத்தில் வாழ்ந்தாலும், அவனது பார்வை பரமார்த்திக சத்யத்தை நோக்கியே (பிரம்மத்தை நோக்கியே) இருக்க வேண்டும்.

(மேலும் அறிவோம்)

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

ஆனந்தம் பிரம்மனோ வித்வான்

Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.