செயற்பாலது ஓரும் அறன்

எதற்காக ஒருவர் அத்வைதத் தத்துவத்தைக் கற்க வேண்டும்? அதனால் அவர் அடையக்கூடிய பலன் என்ன? இதற்கான பதிலை அளிப்பதற்கு முன் ஒரு சிறிய விசாரத்தை மேற்கொள்வோம்.

நாராயண பண்டிதர் எழுதிய ஹிதோபதேசம் என்ற நூலில் ஒரு சுலோகம் இவ்வாறு கூறுகிறது.

“ஆகார நித்ரா பய மைதுனஞ்ச சாமான்யம் ஏதத் பசுபிர் நரானாம்.” 

உணவு உட்கொள்ளல், உறக்கம், அச்சம், இனப்பெருக்கம் ஆகியன விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பொதுவான குணங்கள் ஆகும்.

புத்திர்ஹி தேஷாம் அதிகோ விசேஷ:” இதில் புத்தி என்பது மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள சிறப்பான கருவியாகும்.

புத்யா விஹீன: பசுபிர் சமான:” புத்தியைப் பயன்படுத்தாவன் விலங்குகளுக்கு சமானமாவான்.

புத்தி அல்லது சிந்தனைத் திறன் என்பது மனிதனுக்கே உரித்தான தனித்துவமான ஆற்றல். புத்தியின் காரணமாகவே நாம் மிகுந்த தன்னுணர்வுடன் இருக்கிறோம். நம்மை நாமே மதிப்பீடு செய்து அளவிட்டுக் கொள்ளும் திறனும், பிறரை மதிப்பிடும் திறனும் நமக்கு உண்டு. இத்திறன் விலங்குகளிடையே கிடையாது. அமெரிக்காவில் அடிக்கடி நாய்களுக்கான ஓட்டப் போட்டி, தாவும் போட்டி போன்றவை நடைபெறும். அதில் வெற்றி பெறும் நாய்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பரிசுகள் வழங்கப்படும். தங்கம் வென்ற நாய் தன்னை உயர்வாகவோ, கடைசியில் வந்த நாய் தன்னைத் தாழ்வாகவோ நினைத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்த உணர்வுகளுகெல்லாம் அந்த நாயின் சொந்தக்காரர்களுக்குக் கண்டிப்பாக இருக்கும். இதற்குக் காரணம் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிந்திக்கும் திறனே. புத்தியின் உதவி கொண்டு மனிதன் தன் இருப்பு பற்றிய உணர்வு, தன்னைப் பற்றிய தாழ்வுணர்வு அல்லது தன்னைப் பற்றி அதீத உயர் உணர்வு ஆகியவற்றை அடைகிறான். இத்திறனே வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கண்டறிவதையும், எதிர்காலத்தில் அந்தச் சிக்கல்களைக் களைவதற்கான திட்டங்களை இடுவதையும் செய்கிறது. ஆகவே எதிர்காலத்துக்காக திட்டமிடல் என்பது புத்தியுடைய மனிதன் இயல்பாக செய்யும் செயலாகும். மனிதர்களுக்கு உள்ளுணர்வும், தன் எதிர்காலத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரமும் புத்தியால் அவர்களுக்கு அமைகிறது. இந்தப் புத்தியைக் கொண்டு ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட செயலைத் தேர்ந்தெடுத்துச் செய்ய இயலும்; அல்லது ஒரு செயலைச் செய்யாமல் தவிர்க்க இயலும்; அல்லது அந்தச் செயலுக்கு மாறான ஒரு செயலைச் செய்ய இயலும். இதையே வேதாந்தம், “கர்தும் சக்யம்; அகர்தும் சக்யம்; அன்யதாவா கர்தும் சக்யம்,” என்கிறது.

இந்தத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதனை இயல்பிலேயே பல்வேறு வகையான தேடல்கள், குறிக்கோள்கள், ஆசைகள், இலக்குகள் ஆகியவற்றை நோக்கிச் செலுத்துகிறது. இந்த இலக்குகள் அனைத்தும்  புருஷார்த்தம் என்ற ஒரே சொல்லில் குறிப்பிடப்படுகிறது. புருஷன் என்றால் இங்கு மனிதன் என்று அர்த்தம். இந்த இடத்தில் அர்த்தம் என்றால் குறிக்கோள், இலக்கு என்று பொருள். எனவே புருஷார்த்தம் என்றால் மனிதனுடைய இலக்கு என்று பொருள்.

மனிதனின் இலக்குகளாக உள்ள அனைத்தையும் நான்கு வகையாக பிரிக்கலாம். ஒரு மனிதனின் முதன்மையான இலக்காக இருப்பது அவனது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள், உடல் நலம், மனநலம் ஆகியன. எல்லா உயிரினங்களையும் போலவே மனிதனுக்கும் இந்த அடிப்படைத் தேவைகள் குறித்த இயல்பான ஆர்வம் இருக்கின்றது. தன்னுடைய உடலின் பாதுகாப்புக்காக இவை தேவை என்ற அவசியத்தை அவன் உணர்ந்திருக்கிறான். எனவே தனது பாதுகாப்பு அவனது முதன்மைக் குறிக்கோளாகிறது. இந்தக் குறிக்கோள் “அர்த்தம்” என்ற பெயரில் சம்ஸ்கிருதத்தில் குறிக்கப்படுகிறது. தமிழில் பொருள் (செல்வம் என்ற பொருளில்)  என்று சொல்லலாம். பொருளுக்கான தேடல், பாதுகாப்புக்கான முயற்சி அவனோடு நின்று விடுவதில்லை. அவனது பெற்றோர், மனைவி, குழந்தைகள், சுற்றம் ஆகியோரது பாதுகாப்பும் அவனுக்கு முக்கியமாகி விடுகிறது. அதுவும் அர்த்தம் என்ற குறிக்கோளுக்குள்ளேயே அடங்கும். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் மனிதன் தன்னுடைய, தன்னைச் சேர்ந்தவர்களுடைய பாதுகாப்புக்காக மட்டும் அல்ல, தன்னுடைய பாதுகாப்பின்மை என்ற உணர்விலிருந்து தன்னால் விடுதலை அடைய முடியும் என்று நம்பிக்கையினாலும்தான் பொருட்களைச் சேர்க்க முனைகிறான் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் தன் பாதுகாப்புக்கான பொருட்களை அடைந்த பின்னர் அவனுக்கு வேறு என்ன தேவை இருக்க முடியும்? அடிப்படைத் தேவைக்கான பொருட்களை அடைந்தவன் மனம் இயல்பாகவே இன்பத்துக்கான நுகர் பொருட்களைத் தேடத்துவங்குகிறது. இன்பத்துக்கான நாட்டம் காமம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இங்கு காமம் என்ற சொல் நாம் பொதுவாகப் பொருள் கொள்ளும் காம இச்சை அல்லது பாலுணர்வு என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை. உட்கொள்ளும் உணவு பசியைப் போக்கிய பின் மனம் நாடும் அடுத்த கவளம் காமம் என்பதிற்குள்தான் அடங்கும். ஆடம்பர ஆடைகள், பொருட்கள், பயணம் செல்லுதல், இசை போன்ற கலைகளில் திளைத்தல் அனைத்தும் காமம் என்ற, மனிதன் தேடும் இரண்டாவது வகை இலக்குக்குள் அடங்கும்.

எனவே அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் அர்த்தம் என்றும், ஆடம்பரத் தேவைகள் அனைத்தும் காமம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு காலத்தில் ஆடம்பரத் தேவையாக இருந்த பொருளே பின்னாளில் அத்தியாவசியத் தேவையாக மாறிவிடுவதும் உண்டு. குளிர்பதனப் பெட்டிகளும், தொடுதிரை திறன்பேசிகளும் ஒரு காலத்தில் ஆடம்பரமானவையாகக் கருதப்பட்டன. ஆனால் அவையே இப்போது அத்தியாவத் தேவையாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.

மனிதன் தன் பாதுகாப்புக்காகவும், இன்பத்துக்காகவும் பொருட்களை அடைவதில் தவறிருக்கிறதா? கண்டிப்பாக இல்லை. உண்மையில் இத்தேடல்கள் அவனுக்குள் இயல்பாகவே இருக்கின்றன. அவற்றை அவன் தாராளமாக அடைய முயற்சி மேற்கொள்ளலாம். ஆனால் அப்பொருட்களை அடைய எந்த மாதிரியான வழிகளை அவன் கைக்கொள்கிறான் என்பதுதான் முக்கியம். அர்த்தமாயினும் சரி, காமமாயினும் சரி, அது அறவழியிலேயே ஈட்டப்பட வேண்டும். எனவே அறம் என்பதே மனிதனது மூன்றாவது இலக்காக இருக்கிறது. அறம் என்பது தர்மம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

ஏன் பொருளை அறவழியில் மட்டுமே ஈட்ட வேண்டும்? குறுக்கு வழிகளிலும், பிறரை வஞ்சித்தும் பொருள் ஈட்டுபவர்களும் உலகில் இருக்கத்தானே செய்கிறார்கள்?

நாம் புரியும் அனைத்து செயல்களுக்கும் ஏதோ ஒரு விளைவு, பலன் இருந்துதான் தீரும். அறம் என்னும் செயலும் இரு விதங்களில் பலனை அளிக்கிறது. ஒன்று கட்புலனாகும் பலன் -திருஷ்ட பலன். அற வழியில் செயல் புரியும் ஒருவன் தான் சரியான வழியில்தான் செல்கிறோம் சரியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மன நிறைவுடன் வாழ்க்கையை செலுத்துவான். இது அறத்தால் அடையப்படும் திருஷ்ட பலனாகும்.  அறம் தரும் கட்புலனாகாத பலன் அதிருஷ்ட பலன் எனப்படும். இதற்கு புண்ணியம் என்றும் பெயர். பலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தும் அதை அனுபவிப்பதற்கான உடல் நலமோ, உறவுகளுக்குள் சுமுகமான சூழ்நிலையோ அமையாதிருக்கும். புண்ணியம் ஒருவனுக்கு அவன் அடைந்த பொருட்களை அனுபவிப்பதற்கான நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தருகிறது. அறமல்லாத வழியில் அடையப்படுவன ஒருவனுக்கு மனநிம்மதியை தராது. மேலும் அவனுக்கு அவை பாவம் மற்றும் துக்கம் என்ற பலன்களை அளிக்கும். அது பின்னாளில் அவனுக்கு துக்கத்தை அளிக்கும் கருவியாக மாறும். எனவே பாவம், புண்ணியம் இரண்டுமே அறவாழ்க்கையின் மூலமாகக் கிடைக்கும் அதிருஷ்ட பலன்கள் ஆகும். வாழ்வின் துக்கத்தைத் தவிர்க்க விரும்பும் ஒருவன், எதிர்காலத்திலோ அல்லது இனிவரும் பிறவிகளிலோ பாவம் என்ற அதிருஷ்ட பலனைத் தவிர்க்க தன் அர்த்தத்தையும், காமத்தையும், தர்மத்தின் பாற்பட்டுத்தான் அடைய வேண்டும். சுவர்க்கம், நரகம் இவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள், மறுபிறவிகளில் நம்பிக்கை கொண்டவர், தாங்கள் இறந்தபின் சுவர்க்கத்தை அடையவேண்டும் என்றோ, மறுபிறவி எடுத்தால் அது நற்பிறவியாக இருக்க வேண்டும் என்ற ஆவலுற்றோ அறவழியில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வார்கள்.

இவை எதிலும் நாட்டமற்ற, ஆன்மிக நாட்டம் மட்டுமே கொண்ட சாதகனுக்கோ அறவழியில் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கும். அறமற்று இயங்குதலின் விளைவுகளை அவனுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு பாவம், புண்ணியம் ஆகியவற்றிலும் பெரிய விருப்பமில்லை. அறம் என்பது அவன் இயல்பிலேயே இருக்கும். எனவே, மனிதனின் மூன்றாவது இலக்காக தர்மம் குறிப்பிடப்படுகிறது. “தர்மார்த்த காம மோக்ஷம்” என்ற வாக்கியத்தில் தர்மமே முதல் இடத்தை வகிக்கிறது. இதை தமிழில், “அறம் பொருள் இன்பம் வீடு” என்போம். இதிலும் அறமே முதன்மை இடத்தைப் பெறுவதைக் காணலாம். 

அறவழியில் செயல் புரிந்து அர்த்தத்தையும், காமத்தையும் அடைந்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் எவரேனும் ஒரு சிலருக்கு தாம் அடைந்த எதுவும் தனக்கு நிறைவை அளிக்கவில்லையே என்ற தெளிவு காலப்போக்கில் ஏற்படும். மேற்கூறியபடி அவர்களுக்கு சுவர்க்கத்திலோ, நற்பிறவி எடுத்தலிலோ ஆர்வம் இல்லை. இந்த வாழ்க்கை என்பது வெறும் பொருளையும், இன்பத்தையும் தேடுவது மட்டும்தானா அல்லது அதற்கும் மேல் ஏதேனும் இவ்வாழ்வில் இருக்கின்றதா என்ற கேள்வி எழும். இந்த வாழ்விற்கான பொருள் என்ன? எதை அடைந்தும் நிறைவடையாத எனக்கு முழுமையான நிறைவைத் தரக்கூடிய ஏதேனும் இருக்கிறதா? நான் அனுபவிக்கும் துயரங்களிலிருந்தும், அச்சங்களிலிருந்தும், பாதுகாப்பின்மை என்ற உணர்விலிருந்தும் விடுதலையடைவதற்கான வாய்ப்பு எனக்கு இவ்வாழ்வில் இருக்கிறதா என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் துவங்குவார்கள். இவர்கள் தேடுகின்ற அந்த ஒற்றை இலக்குதான் “மோக்ஷம்” என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இதை வீடு என்றும், வீடுபேறு என்றும் சொல்வார்கள். மோக்ஷம் என்ற சொல்லின் நேரடியான மொழிபெயர்ப்பு விடுதலை என்பதாகும்.

எதிலிருந்து விடுதலை? நேரடியாகச் சொன்னால் துக்கத்திலிருந்தும், அச்சத்திலிருந்தும் விடுதலை. பொருள், இன்பம் ஆகிய இரண்டின் மீது சார்ந்திருப்பதிலிருந்தும் விடுதலை. ஏனெனில் பொருள், இன்பம் இரண்டுமே ஒருவனை பந்தத்துக்குள்ளாக்குகின்றன. முதலில் அவை தன்னிடம் இல்லையே என்பதால் அவற்றையே நினைத்து, நினைத்து அவற்றுக்கு அடிமையாக இருக்கிறான். அவற்றை அடைந்த பின்னர் அவை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் அவற்றுக்கு அடிமையாக இருக்கிறான். இரண்டு நிலைகளுமே அவனுக்குத் துயர் தருபவைதான். எதை அடைந்தாலும் மனம் நிறைவே அடையவில்லை என்ற நிலையே பந்தம். அது சம்சாரம் என்று சம்ஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. இந்த சம்சாரத்திலிருந்து விடுபடுதலே மோக்ஷம். எனவே ஒருவனது உண்மையான விடுதலை என்பது தன்னுடைய பாதுகாப்புக்கு, தன்னுடைய மகிழ்ச்சிக்கு, பிற பொருட்களையோ, பிற மனிதர்களையோ சாராதிருப்பதுதான். அந்த நிலையே மோக்ஷம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றது. மிக எளிய முறையில் சொல்ல வேண்டுமெனில் சம்சாரம் என்பது மனநிறைவின்மை, மோக்ஷம் என்பது மனநிறைவு.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு புருஷார்த்தங்களில் மோக்ஷம் என்ற புருஷார்த்தமே மேன்மையானது. எனவே அது “பரம புருஷார்த்தம்” என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் மோக்ஷம் என்பது நிரந்தரமான விடுதலையுற்ற ஒரு நிலை. பிற மூன்று புருஷார்த்தங்களின் மூலமாக மனிதன் உண்மையில் தேடிக் கொண்டிருப்பது மோக்ஷத்தைத்தான், வீடுபேற்றைத்தான்.

இப்போது அத்தியாத்தின் முதலில் கேட்ட கேள்விக்கு வருவோம். அத்வைதத் தத்துவத்தைக் கற்பது எதற்காக? அத்வைதக் கல்வி என்பது ஒருவனுக்கு வீடுபேறு என்ற பலனைத் தருவதாக உறுதியளிக்கிறது. எல்லாத் துயர்களிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் நிரந்தரமான விடுதலையை அடைய வேண்டும் என்பதற்காகவே ஒருவன் அத்வைதத் தத்துவத்தைக் கற்கிறான். வெறும் தகவலறிவுக்காகவோ, நானும் இந்தத் தத்துவத்தை அறிந்திருக்கிறேன் என்பதற்காகவோ இதைக் கற்கத் தேவையில்லை. வாழ்வின் எல்லாக் கேள்விகளுக்கும் விடையாக, எதை அடைந்தால் எல்லாவற்றையும் அடைந்ததாகுமோ அதை அடைவிக்கும் வழியாக அத்வைதம் இருக்கிறது. எனவேதான் அத்வைத்தை ஒருவர் கற்க வேண்டும்.

ஒரு தத்துவத்தைக் கற்பதால் ஒருவன் அனைத்துத் துயரங்களிலிருந்தும் விடுதலை அடைய முடியுமா? சில மந்திரங்கள், சுலோகங்கள் இவற்றின் விளக்கங்கள் எங்கனம் ஒருவனை ஆன்ம விடுதலை நோக்கிச் செலுத்துகின்றன?

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி துயரத்துக்குக் காரணம் என்ன என்பதுதான். துயரத்துக்குக் காரணமாக நாம் பல்வேறு காரணங்களை நினைத்துக் கொண்டிருப்போம். நாம் வாழும் வாழ்க்கைமுறை, நாம் பிறந்த சூழல், நம் வறுமை, நமது உடல் நலம் (அல்லது அதன் குறைவு), நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் (கணவன், மனைவி உள்பட), ஏன் கோள்கள், நட்சத்திரங்களைக் கூட நம் துயருக்குக் காரணமானவையாக குற்றம் சாட்டுவது நமது இயல்பு. ஆனால் அத்வைத தத்துவத்தின்படி ஒருவனது துயரத்துக்குக் காரணம் அவனது அறியாமையே. எதைப் பற்றிய அறியாமை? தன்னைப் பற்றிய, தன்னுடைய உண்மையான தன்மை பற்றிய அறியாமை. எனவே ஒருவன் தன்னுடைய உண்மையான தன்மையை அறிந்தானாகில் அவன் சகல துயரங்களின்றும் விடுதலையடைந்தவனாகிறான்.

மோக்ஷம் என்பது சகல துயரங்களிலிருந்தும் விடுதலை என்று வர்ணிக்கப்படுகிறது. அது நிரந்தரமானதும் கூட. ஒரு முறை அடைந்தால் அதை இழக்க முடியாது. ஒரு செயலின் மூலம் அடையப்படும் எல்லாப் பொருட்களும் காலவரையறைக்குட்டப்பட்டவை. ஒரு காலத்தில் அடையப்பட்ட பொருள், இன்னொரு காலத்தில் இழக்கப்பட்டே தீரும். எனில், இழக்கவே முடியாத பொருளை அடைதல் எங்கனம்? மிகப் பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டு ஒன்றின் மூலம் இதை விளக்கலாம். பரமார்த்த குரு சீடர்களுடன் நதியைக் கடந்த கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். படகு கரையைக் கடந்ததும் ஒரு சீடன் சீடர்களை எண்ணுகிறான். “பத்தாவது மனிதனைக் காணவில்லை” என்று அறிவிக்கிறான். ஆனால் எண்ணிக்கையில் அவன் தன்னைச் சேர்த்துக் கொள்ள மறந்ததனால் தன்னைக் காணவில்லை என்ற அறியாமையில் இருக்கிறான். குரு அவனுக்கு “அந்த பத்தாவது மனிதன் நீதான்,” என்ற அறிவைப் புகட்டுகிறார். எல்லா பந்தங்களிலிருந்தும் விடுதலை என்பது உண்மையிலேயே நான் பந்தங்களற்றவன், எப்போதுமே சுதந்திரமானவன் என்று அறிந்து கொள்வதே ஆகும். எனவே இங்கு அறிதலே விடுதலை அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட செயல் அன்று. அத்வைத கல்வியின் மூலம் ஒருவன் தன்னைப் பற்றிய உண்மையான தன்மையை அறிந்து கொள்ளுகிறான். தன்னையறிந்தவன் வாழ்வின் எல்லாக் கட்டுக்களிலிருந்தும் நிரந்தரமாக விடுதலையடைகிறான். அத்வைத தத்துவம் தன்னை அறியும் கலையை அதற்கான பயிற்று முறைகளுடன் ஆழமாகப் புகட்டுகிறது.

எந்த ஒரு அறிவும் ஏதோ ஒரு அறிவைக் கொடுக்கும் கருவியின் மூலமே அடையப்படுகிறது. பொருட்கள் குறித்த அறிவை நாம் நமது புலன்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் அறிபவனாகவே இருக்கின்ற என்னை எந்தக் கருவியின் மூலம் அறிந்து கொள்ள இயலும்? அடுத்த பகுதியில் விரிவாகக் காண்போம். 

[தொடரும்]

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் நுண்பொருள் காண்பது அறிவு

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.