- அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
- செயற்பாலது ஓரும் அறன்
- நுண்பொருள் காண்பது அறிவு
- வகையறச் சூழ்ந்தெழுதல்
- தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு
- ஒருமையுள் ஆமைபோல்
- நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…
- எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
- கர்மத்தின் வகையறிதல்
- செயல் என்னும் நிவேதனம்
- ஒன்றே நினைந்திருக்க உள்ளம் கனியும்
- ஞானம், ஞேயம், ஞானகம்யம்
மோக்ஷம் எனப்படும் அகவிடுதலைக்கான ஒரே வழி தன்னைப்பற்றிய உண்மைத் தன்மையை அறிதல் மட்டுமே. தன்னை அறிவதற்கான கருவி சப்தப்பிரமாணம் எனப்படும் வேதாந்தக் கல்வி என்பதைப் பார்த்தோம். அந்தக் கல்வியை அடையும் முறைக்கு ஞானயோகம் என்று பெயர். சென்ற சில அத்தியாயங்களில் ஞானயோகத்துக்கு ஒரு சாதகனை ஆயத்தப்படுத்தும் முறைகளான கர்மயோகம், உபாசனாயோகம் ஆகியவற்றைப் பார்த்து முடித்தோம். இந்த அத்தியாயத்தில் ஞானயோகம் குறித்து விரிவாகக் காண்போம்.

ஞானயோகத்தைப் பயில்தல் என்றால் தன்னைப் பற்றிய உண்மையான அறிவை அடைதலை, ஆத்ம ஞானத்தை அடையும் அறிவைக் குறிக்கும். ஒரு ஆன்ம சாதகன் இறுதியில் அடைய வேண்டியதை கீதையில் கிருஷ்ணர் “ஞானம், ஞேயம், ஞானகம்யம்” என்று குறிப்பிடுகிறார். இங்கு ஞானம் என்றால் பரம்பொருளை அறிவதற்குக் கருவியாக இருக்கும் சாஸ்திர அறிவு மற்றும் சாதகனுக்கு இருக்க வேண்டிய மனப்பக்குவம், நற்பண்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. ஞேயம் என்ற சொல் இந்த ஞானத்தின் மூலம் அறியப்பட வேண்டிய இறுதிப் பொருளான பிரம்மம் அல்லது ஆத்மாவைக் குறிக்கிறது. ஞானகம்யம் என்ற சொல் அந்த இலக்கு ஞானயோகப் பயிற்சியின் மூலமாக மட்டுமே அடையக்கூடியது என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரம்மம் செயலின் மூலம் அடையக்கூடியது அல்ல; அது அறிதலினால் மட்டுமே அடையக்கூடியது என்பதால் அதற்கு ஞானகம்யம் என்று பெயர் கொடுக்கப்படுகிறது.
ஞானயோகத்தின் பலன் மோக்ஷம். மோக்ஷம் என்பதற்கு சுருக்கமான விளக்கம் உலகப் பொருட்கள் அல்லது மனித உறவுகளின் இருப்பு நமக்கு அழுத்தத்தைத் தராமலும், அவற்றின் இன்மை நமக்குத் தனிமையையோ அல்லது துயரத்தையோ தராமலும் இருப்பதே உண்மையான மோக்ஷம் அல்லது ஆன்மவிடுதலை எனப்படுகிறது. ஆத்மஞானத்தை அடைவதன் மூலம் ஒருவர் மாற்ற முடியாத விஷயங்களை மனக்கசப்பின்றி முழுமையாகவும், அமைதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியும். மாற்றக்கூடிய விஷயங்களை மாற்றும் உறுதியும், துணிச்சலும் அவர்களுக்கு வரும். மேலும் எந்த விஷயத்தை மாற்ற முடியும், எந்த விஷயத்தை மாற்ற முடியாது என்பதில் அவர்களுக்குத் தெளிவும், பிரித்தறியும் விவேகமும் இருக்கும்.
ஒரு அறிவைப் பெறுவதற்கான கருவிகளை பிரமாணங்கள் என்று பார்த்தோம். அனுமானம், உபமானம், அர்த்தாபத்தி, அனுபலப்தி, சப்தம் என்று பிரமாணங்கள் ஐந்து வகைப்படும் என்றும், அவற்றில் சப்தப் பிரமாணம் மட்டுமே தன்னைப் பற்றிய அறிவை வழங்க முடியும் என்றும் பார்த்தோம். பிற எல்லாப் பிரமாணங்களும் வெளியிலுள்ள பொருளைக் குறித்த அறிவை மட்டுமே விளக்க வல்லன. ஆனால் அந்த அறிபவனைக் குறித்த அறிவைத் தரவல்ல ஒரே பிரமாணம் சப்தப்பிரமாணமாகிய வேதாந்தம் மட்டுமே. அந்த வேதாந்தக் கல்வியில் பிரஸ்தான த்ரயம் ஆகிய பகவத் கீதை, உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரங்கள் ஆகிய மூன்று வகை நூல்களும் பயிலப்படுகின்றன. இவற்றைப் பயில்வதே ஞானயோகப் பயிற்சி எனப்படும். இந்த ஞானயோகப் பயிற்சியின் அடிப்படைகளையும், அவற்றின் கற்றல் முறைகளையும் நாம் அறிந்து கொள்வது இன்றியமையாதது.
ஞானயோகத்தில் வேதாந்த சாஸ்திரங்களை முறையாகப் பயன்படுத்தி ஆன்ம விடுதலையை அடைய மூன்று பயிற்சிகள் அவசியம். அவை சிரவணம், மனனம், நிதித்யாசனம் என்றழைக்கப்படுகின்றன. சிரவணம் தகுதியான ஒரு குருவின் மூலம் சாஸ்திர போதனைகளைத் தொடர்ந்து கேட்டு, அறியாமையை நீக்குதல் ஆகும். மனனம் கற்ற விஷயங்களில் உள்ள சந்தேகங்களை தர்க்க ரீதியாகக் கேட்டுத் தெளிவு பெற்று, உறுதியான அறிவை அடைதல். நிதித்யாசனம் பெற்ற அறிவை உள்வாங்கி (Assimilation), நமது பழைய தவறான பழக்கவழக்கங்களையும், எண்ணங்களையும் மாற்றி, நாம் அடைந்த புதிய ஞானமான ஆத்ம ஞானத்திலேயே நிலைத்திருந்து தன் வாழ்வைக் கடத்துதல் ஆகும்.
ஒருவர் எத்தனைக் காலம் ஞானயோகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்? எத்தனைக் காலம் பயிற்சி செய்தால் இருப்பது நான் மட்டுமே என்ற உண்மையை மனது முழுமையாக ஏற்றுக்கொள்கிறதோ அத்தனைக் காலம் வரை பயிற்சி செய்ய வேண்டும் என்பதே இதற்கு பதில்.
ஸ்ரவணம், மனனம், நிதித்யாசனம் ஆகிய மூன்று பயிற்சிகளும் ஞானயோகப் பயிற்சியின் படிநிலைகளாகும். இந்தப் படிநிலைகளில் பிரஸ்தான த்ரயமான மூன்று முக்கிய வேதாந்த நூல்களையும் ஒரு மாணவன் பயில்கிறான். இது ஒரு பொதுவான பருந்துப்பார்வை. ஆனால் உண்மையிலே தன்னைப் பற்றிய அறிவை அடையும் முறை என்ன? என்ன மாதிரியான கற்பித்தல் கருவிகளைக் கொண்டு வேதாந்தம் நமக்கு நம்மைப் பற்றிய அறிவை அளிக்கிறது?
அத்வைத வேதாந்தம் தன் மாணவனுக்கு அளிக்கவிருக்கும் அறிவைக் கீழ்க்கண்டவாறு பிரித்து விடலாம்.
பிரம்மம் ஒன்று மட்டுமே உண்மை, காணும் இந்த உலகம் தோற்றமே. “பிரம்ம சத்யம் ஜகன் மித்யா.”
நான் என்று உணரக்கூடிய இந்த ஆத்மாவும், பிரம்மம் என்று சொல்லக்கூடிய அந்தப் பரம்பொருளும் உண்மையில் ஒன்றே. இதை ஜீவ பிரம்ம ஐக்கியம் என்று குறிப்பிடலாம். “ஜீவோ பிரம்மைவ நா அபர:”
ஆத்மா, பிரம்மம், சத்யம், மித்யா, ஜீவன், ஜகத், மற்றும் இதைப்போன்ற பல்வேறு கலைச்சொற்கள் வேதாந்தத்தில் பயின்று வருகின்றன. அவற்றுக்கு வேதாந்தம் தெளிவான வரையறைகளை அளிக்கிறது. அவ்வரையறைகளை ஐயமற அறிந்த மாணவர்களுக்கே வேதாந்தம் அளிக்கும் உண்மை புலப்படும். இக்கட்டுரைத் தொடரில் இக்கலைச்சொற்களுக்கான விளக்கம் பொருத்தமான இடங்களில் அளிக்கப்படும்.
ஆத்மாவும், பிரம்மமும் ஒன்றெனில் ஏன் அவை எனக்கு வெவ்வேறாகத் தெரிகின்றன? இந்தக் கேள்விக்கு விடையாக அத்வைதம் “மாயை” என்று கூறுகிறது. மாயை என்பதற்கு உண்மையை மறைத்து, இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் சக்தி என்று பொருள். வெயில் சுட்டெரிக்கும் பாலையில் நடந்து செல்பவனுக்கு தூரத்தில் ஏதோ நீர்நிலை உள்ளதைப் போன்றே தெரிகிறது. ஆனால் அருகில் சென்று பார்க்கும்போதுதான் அது கானல் நீர் என்று தெரிகிறது. அதுபோலத்தான் மாயையும். பார்ப்பதற்கும், அனுபவிப்பதற்கும் உண்மையைப் போலத் தெரிகிறது. ஆனால் விசாரணை செய்து பார்த்தால் அது வெறும் தோற்றமென்றே உறுதியாகின்றது.
மாயையைப் புரிந்து கொள்வதற்கு வேதாந்தத்தில் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் இன்னொரு பிரசித்தி பெற்ற உதாரணம் உண்டு. ரஜ்ஜூ சர்ப்ப த்ருஷ்டாந்தம் என்பது அதன் பெயர். தமிழில் கயிற்றரவு என்று குறிப்பிடும். ரஜ்ஜூ என்றால் கயிறு. சர்ப்பம் என்றால் பாம்பு. நல்ல தமிழில் அரவு. மாலை வேளையில் மங்கிய வெளிச்சத்தில் தரையில் கிடக்கும் கயிற்றைப் பார்த்து விட்டு ஒருவன் அஞ்சி நடுங்கி “ஐயோ! அங்கே ஒரு பாம்பு கிடக்கிறது,” என்று கூறுகிறான். உண்மையில் அங்கு இருப்பது கயிறுதான், பாம்பு அல்ல. அவனுடைய அறியாமையினால் அவன் கயிற்றின் மீது பாம்பு என்ற தோற்றத்தை ஏற்றி வைத்துப் புரிந்து கொள்கிறான். இந்த அறிவினால் அவனிடத்தில் தோன்றும் பயமும், நடுக்கமும் உண்மையாக இருக்கின்றது. பின்னர் அவ்வழியே வரும் ஒருவர் தன் கைவிளக்கை அவ்விடத்தில் காட்டி, “பார், அங்கு கிடப்பது பாம்பு அல்ல. அங்கிருப்பது உண்மையில் கயிறுதான்,” என்ற அறிவைப் புகட்டுகிறார். அது கயிறுதான் என்பதைப் புரிந்து கொண்டவுடன் அவனுக்கு பாம்பைப் பார்த்ததில் ஏற்பட்டிருந்த அச்சமும், நடுக்கமும் மறைந்து விடுகின்றன.
மாயையினால்தான் நமக்கு இந்த உலகமும், அதன் உயிர்களும் உண்மையைப் போலத் தோற்றமளிக்கின்றன. நம்மைப் பொறுத்தவரையிலோ இந்த உலகம் உண்மையாகவே தோற்றமளிக்கிறது. இந்தக் கூற்று நம்மால் ஏற்கவே முடியாததாக உள்ளது. ஆனால் அத்வைதம் இந்தக் கூற்று உண்மைதான் என்பதை தனது பல்வேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டு நிரூபிக்கிறது.
இயல்பாகவே நாம் அனைவரும் நாம் தனித்தனியான உயிர்கள் என்றும், நாம் காணும் இந்த உலகம் உண்மையானதென்றும் என்ற எண்ணதோடுதான் வாழ்ந்து வருகிறோம். நமது வாழ்க்கை அனுபவங்களும், நாம் அடையும் எல்லாவிதமான அறிவுத்தொகையும் இந்தக் கருத்தையே மேலும் வலியுறுத்துகின்றன. சொல்லப்போனால் எந்த ஒரு அறிவுத்துறையும் உலகின் பலவான தன்மையை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, அந்த பலவற்றின் உண்மைத்தன்மையை தனித்தனியாக ஆராய்ந்து நிலைநாட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன. அத்வைத தத்துவம் ஒன்று மட்டுமே இருப்பது ஒன்றுதான், பிற அனைத்தும் மாயையே, வெறும் தோற்றமே என்று கூறுகிறது. இந்தக்கூற்றை ஏற்றுக்கொள்வதென்பது உள்ளதிலேயே கடினமாக விஷயமாக ஓர் அத்வைத மாணவனுக்குத் தோன்றும். ஆனால் இந்த அறிவை அடைவதன் மூலம் மோக்ஷம் என்ற பரிபூரண விடுதலையை அத்வைதம் உறுதி செய்கின்றது. எனவே வேதாந்தத்தைக் கற்கத் துவங்கும் மாணவன் முதலில் அதன் உண்மையை ஏற்றுக் கொள்வதில் தடுமாறினாலும், வேதமும், வேதாந்தமும் என் நலனுக்காகவே இவற்றை உரைக்கின்றன என்றறிந்து பொறுமையுடன் ஆன்ம விசாரத்தை மேற்கொள்ள வேண்டும். வேதாந்தக் கல்வியினூடாகப் பயணம் செய்யும்போது அத்வைதத்தின் ஒவ்வொரு கூற்றும் தர்க்கரீதியாகவும், அறிவுபூர்வமாகவும் நிறுவப்படும்போது அவனுடைய ஐயங்கள் அனைத்தும் தெளிவாகும். அவனால் தன்னில் அனைத்து உயிர்களையும், அனைத்து உயிர்களிலும் தன்னையும் காண இயலும். வேதாந்தம் சொல்லும் அறுதி உண்மையான, “நானும், பிரம்மும் ஒன்றே” என்ற கருத்தை அவனால் ஏற்றுக்கொள்ள இயலும்.
இந்த அறிவைப் புகட்டுவதற்காகவே வேதாந்தம் பல்வேறு கற்பித்தல் கருவிகளைக் கையாள்கிறது. அவை பொதுவாக விவேகங்கள் என்று அழைக்கப்படும். இவற்றைப் பகுப்பாய்வு முறைகள் என்று அழைக்கலாம். இவ்விவேகங்கள் அனைத்தும் இருப்பது ஆத்மா எனப்படும் “நான்” மட்டுமே, பிற அனைத்தும் தோற்றமே என்பதை நிரூபிக்கின்றன.
இப்பகுப்பாய்வு முறையில் ஒன்று அவஸ்தாத்ரய விவேகம் என்றழைக்கப்படுகிறது. ‘அவஸ்தா’ என்றால் நிலை, ‘த்ரய’ என்றால் மூன்று, ‘விவேகம்’ என்றால் பகுத்தறிதல். அதாவது, மனிதன் அனுபவிக்கும் மூன்று நிலைகளைப் பகுத்தாய்ந்து, அதன் மூலம் ஆத்மாவான தன்னை உணரும் முறை இதுவாகும்.
நாம் அனைவருக்கும் பொதுவான “அவஸ்தா,”- நிலை- மூன்று வகையில் அடங்கும். விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்உறக்க நிலை. இவற்றை சம்ஸ்கிருதத்தில் முறையே ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷூப்தி என்றழைக்கிறோம். விழிப்பு நிலையான ஜாக்ரத்தில் நாம் நம்மை நமது உடல், மனம், புலன்கள் ஆகியவற்றுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். நமது உடல், மனம், புலன்கள் ஆகியன விழிப்பு நிலையில் முழுமையாகச் செயல்படுகின்றன. இவற்றைக் கொண்டு நாம் இந்த வெளியுலகைப் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம், அனுபவிக்கிறோம். நாம் நம்மை நமது உடல், மனம், புலன்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால், நமக்கென உறவுமுறைகளும், மகன், மகள், கணவன், மனைவி, தந்தை, தாய் போன்ற நிலைகளையும் உருவாக்கிக் கொள்கிறோம். நாம் விழிப்பு நிலையில் ஏற்றுச் செயல்படும் பாத்திரங்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். நமக்கென தனிப்பட்ட கனவுகளையும், கற்பனைகளையும், திட்டங்களையும் பெருக்கிக் கொள்கிறோம். ஆனால் பகல் கழிந்து இரவு படுக்கைக்குச் சென்று விழிகளை உறக்கம் மூடிய மறுகணமே இவையனைத்தும் நம்மைப் பொறுத்தவரை இல்லையென்று ஆகி விடுகின்றன. நமது உடல், மனம், புலன்களோடு நாம் நம்மை அடையாளப்படுத்தியபடி ஜாக்ரத்தில் வாழ்ந்தது உறக்கத்தில் அற்றுப்போகிறது. விழிப்பு நிலையில் வாழக்கூடிய இந்த ஜீவனுக்கு வேதாந்தம் “விஸ்வன்” என்ற பொதுவான ஒரு பெயரைக் கொடுக்கிறது.
இரண்டாவது நிலையானது ஸ்வப்ன அவஸ்தா எனப்படும் கனவு நிலை. கனவு நிலையில் நாம் ஓர் பிரத்யேகமான உலகத்துக்குள் பிரவேசிக்கிறோம். அவ்வுலகத்தில் பல்வேறு உயிர்களையும், தோற்றங்களையும் காண்கிறோம். நாமே வேறு ஓர் உடலோடும், மனத்தோடும், அகங்காரத்தோடும் உலா வருகிறோம். வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்கிறோம். ஆனந்தம், அதிர்ச்சி, துக்கம், கவலை, கொந்தளிப்பு போன்ற எல்லா வகையான அனுபவங்களையும் அனுபவிக்கிறோம். கனவுக்குள் இருக்கும் வரை அதற்குள் நிகழும் அனுபவங்கள் அனைத்தும் கனவைக் கண்டு கொண்டிருக்கும் நம்மைப்பொறுத்தவரை உண்மையாகவே இருக்கின்றன. நாம் கனவுக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் யாரேனும் ஒருவர் நம்மிடம் வந்து, “நீ இப்போது கண்டுகொண்டிருப்பது வெறும் கனவுதான். இவையெல்லாம் வெறும் மாயத்தோற்றமே! இந்த உடல் கொண்டு உலவும் நீயும், நீ காணும் இந்த உலகமும், உயிர்களும், உன் அனுபவங்கள் எல்லாமும் கனவைக் கண்டு கொண்டிருக்கும் உன்னிலிருந்தே தோன்றியிருக்கின்றன. நீ கனவிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்ததும் இவையெல்லாவற்றையும் தோற்றமென்றே உணர்ந்து கொள்வாய். இவை அனைத்தும் உன்னிலிருந்து தோன்றி உன்னிடத்திலேயே ஒடுங்குகின்றன,” என்று கூறினாரென்று வைத்துக் கொள்வோம். அக்கூற்றை நம்மால் ஒப்புக்கொள்ள இயலுமா? கனவைக் கொண்டிருக்கும் வரை நம்மால் அவற்றைத் தோற்றமென்று ஒப்புக்கொள்ளவே இயலாது. கனவுலகில் நாம் நம்மைக் கனவு உடலோடும், மனத்தோடும், அகங்காரத்தோடும் அபிமானம் வைத்துக் கொள்வதால்தான் அந்த உலகம் நமக்கு உண்மையாகத் தெரிகிறது. கனவு நிலையில் வாழக்கூடிய இந்த ஜீவனுக்கு வேதாந்தம் “தைஜஸன்” என்ற பெயரைக் கொடுக்கிறது.
ஸ்வப்ன அவஸ்தையை உதாரணமாகக் கொண்டுதான் வேதாந்தம் இவ்வுலகத்தின் மித்யாத்துவத்தை, அதாவது இவ்வுலகம் வெறும் தோற்றம் என்பதை, நிரூபிக்கிறது. எவ்வாறு கனவில் காண்பவை அனைத்தும் தோற்றம் என்பதும், அதைப் பார்த்துக் கொண்டிருப்பவன் மட்டுமே உண்மை என்ற அறிவு விழிப்பு நிலைக்கு வந்தவுடன் நமக்குப் புலனாகின்றதோ, அதேபோலத்தான் இந்த உலகமும், நாம் காணும் உயிர்களும், நாம் மேற்கொள்ளும் அனுபங்கள் அனைத்தும் வெறும் தோற்றம்; இந்தத் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஒருவன் மட்டுமே உண்மையானவன் என்னும் தெளிவு ஆத்ம ஞானத்தை அடைந்த ஒரு ஞானிக்கு ஏற்படுகிறது. இங்கு ஆத்ம ஞானத்தை அடைதல் என்பது விழிப்பு நிலையிலிருந்து விழித்தெழுதலாகும்.
இப்போது சுஷூப்தி அவஸ்தா எனப்படும் ஆழ் உறக்க நிலைக்குச் செல்வோம். ஆழ் உறக்கத்தில் நமக்கு நம் உடல், மனம், புத்தி, அகங்காரம் இவை எவற்றின் மீதும் அபிமானம் கிடையாது. உண்மையில் இவற்றின் மீதான அபிமானத்தை முழுமையாகத் தியாகம் செய்தால் மட்டுமே நம்மால் உறக்கத்துள் பிரவேசிக்க முடியும். இந்த அபிமானத்தின் சிறுதுளி எஞ்சியிருக்கும் வரையிலும் நம்மால் உறங்க இயலாது. ஆழ் உறக்கத்தில் எந்த அபிமானமும் இன்றி நாம் சுகமாக இருக்கின்றோம். வேதாந்தம் உறக்கத்தில் நாம் அனுபவிக்கும் ஆனந்தமான நிலையே நம் இயல்பான நிலை என்று வரையறுக்கின்றது. எனவேதான் நம் உள்ளம் எப்போதும் ஆனந்தமாக இருப்பதை விரும்புகிறது. நாம் செய்யும் எல்லாச் செயல்களும் ஒரு வகையில் இந்த ஆனந்த நிலையை அனுபவிப்பதற்காகத்தான். இந்த நிலைக்குத் தடையாக வரும் எதையும் நாம் விரும்புவதில்லை. துக்கமாகவோ, கவலையாகவோ இருப்பதற்கு நாம் விரும்புகிறோமா? அப்படிப்பட்ட எதிர் நிலைகளில் நாம் சஞ்சரிக்க நேரும்போது, அந்த நிலைகளிலிருந்து விடுபடவே நாம் விரும்புகிறோம். ஏனெனில் அவை ஆத்மாவினது இயல்பான நிலை அல்ல. ஆனந்தமே இயல்பான நிலை. ஆழ் உறக்கத்தில் நமக்கு நமது உபாதியின் மீது, அதாவது உடல்-மனம்-புத்தி-அகங்காரம் இவற்றின் மீது எவ்வித அபிமானமும் இல்லாததால், நமது உண்மையான சொரூபம் அங்கே கோலோச்சுகின்றது. எனவே நாம் ஆழ் உறக்கத்தில் முழுமையான ஆனந்தத்தை அனுபவித்தபடி இருக்கிறோம். ஆனால் உறக்கத்தின்போது நாம் ஆனந்தமாக இருக்கிறோம் என்பதை நம்மால் அறிந்து கொள்ள இயலாது. ஏனெனில் அறியும் கருவியான மனம் அங்கு செயல்படாமல் இருக்கின்றது. எனவே அது அறியாமையில் இருக்கிறது. ஆனால் உறங்கி எழுந்தவுடன் “நான் ஆனந்தமாக உறங்கினேன்” என்று நம்மால் நினைவுகூர முடிகின்றது. இதற்குக் காரணம் நான் ஆகிய ஆத்மா, தன்னுடைய சொரூபமான உணர்வு வடிவில் இருந்தபடி அங்கிருப்பதுதான். ஆழ்உறக்க நிலையில் ஆனந்தம் மட்டுமல்ல. எனக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற அறியாமையும் அங்கிருக்கிறது. ஆழ் உறக்க நிலையை அனுபவித்தபடி இருக்கும் ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர். அந்த நிலையில் அவன் ஆனந்தத்தை மட்டுமே அனுபவிப்பதால் அவனுக்கு ஆனந்த புக்கு என்றும் பெயர்.
இந்த மூன்று நிலைகளைப் பற்றியும் உபநிஷத்துக்கள் விரிவாகப் பேசுகின்றன. ஏன் அவை இந்நிலைகளைப் பற்றிப் பேச வேண்டும்? ஏனெனில் இந்த மூன்று நிலைகளும் ஒரு ஜீவனுக்கு மாறி மாறி வந்து கொண்டிருப்பவை. ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷூப்தி என்ற இந்த மூன்றையும் எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு சாட்சி இருக்கின்றது. அதற்கு “துரீயம்” என்று பெயர். இந்த துரீயமே ஆத்மா, அதாவது உண்மையான நீங்கள் என்று வேதாந்தம் பிரகடனப்படுத்துகிறது. ஒருவன் விழிப்பு நிலையில் விஸ்வனாக இருக்கும்போது அங்கு கனவு நிலையின் தைஜஸனோ, உறக்க நிலையின் பிராக்ஞனோ இல்லை. அதே போல ஒரு நிலையில் இருக்கும்போது பிற இரு நிலைகளின் இருப்பு அங்கு இல்லை. ஆனால் மூன்று நிலைகளைகளை சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பவன் ஒருவன் உள்ளான். அவனது பெயரே “துரீயம்.” அந்தத் துரீயமே நமது உண்மையான தன்மை. அதுவே ஆத்மா. நாம் ஒவ்வொரு நிலையில் சஞ்சரிக்கும்போதும், அந்த நிலைகளில் உள்ள உபாதியின் மீது அபிமானம் வைத்து நம்மை விஸ்வனாகவும், தைஜஸனாகவும், பிராக்ஞனாகவும் எண்ணிக் கொள்கிறோம். எனவே அந்தந்த நிலைகளின் இன்ப துன்பங்களுக்கு ஆளாகிறோம். இன்பங்கள் தொடரவேண்டும் என்றும், துன்பங்கள் நீங்க வேண்டும் என்றும் விடாது முயற்சித்தபடி இருக்கிறோம். ஆனால் உபநிஷத் காட்டும் உண்மை என்னவெனில் நமது உண்மையான சொரூபம் (தன்மை) என்பது இந்த மூன்றையும் கடந்த துரீய நிலையாகும். இந்த துரீய நிலையில் அபிமானம் வைத்து தன் வாழ்வைக் கடத்துபவன் இன்ப துன்பங்களைக் கடந்தவனாகிறான். இந்த நிலையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறவன் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுதலையடைந்தவனாகிறான். அவஸ்தாத்ரய விவேகத்தின் நோக்கம் மூன்று நிலைகளிலும் மாறாது தொடரும் நான் என்ற உணர்வுதான் ஆத்மா என்பதை உணர்த்துவதே ஆகும்.
இந்த மூன்று நிலைகளிலும் மாறாது இருக்கும் நான் என்ற அந்த உணர்வை அறிந்து கொண்டுவிட்டோம். சரி, இந்த அறிவு எப்படி நமக்கு மோக்ஷம் என்ற அகவிடுதலையை அளிக்கும்? அப்படி என்ன சிறப்பு இந்த அறிவில் இருக்கிறது?
இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு ஆத்மா, பிரம்மம், ஜீவன், ஜகத், மித்யா போன்றவற்றின் இலக்கணங்களை வேதாந்த நோக்கில் புரிந்து கொள்வது இன்றியமையாதது.
பொதுவாக ஆத்மா என்பதை நான் என உணரும் அந்தத் தன்மையாகவும், பிரம்மம் என்பதற்கு இந்தப் பிரபஞ்சத்தினுடைய இருப்புக்கு ஆதாரமான இறுதி உண்மை என்றும், பரம்பொருள் என்றும் வரையறுக்கப்படுகிறது. பிருஹ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு பெரியது அல்லது விரிவடைந்தது என்று பொருள். சுருக்கமாக பிரம்மம் என்றால் எல்லையற்ற ஒன்று என்றும், அதாவது காலத்தாலோ இடத்தாலோ, பிற பொருட்களாலோ கட்டுப்படுத்த முடியாது ஒன்று என்றும் புரிந்து கொள்ளலாம்.
நான் இருக்கிறேன் என்பதை உணர்வதற்கு நமக்கு வெளிப்புறக் கருவிகளின் உதவி எதுவும் தேவையில்லை. “ஆத்மா ஸ்வதசித்தம்” இந்த ஆத்மா சுயமாகவே விளங்கி வருகின்றது என்று வேதாந்தம் கூறுகிறது. ஆனால் நான் என்னவாக இருக்கிறேன் என்பதில்தான் நமக்கு குழப்பங்கள் இருக்கின்றன. நான் எத்தன்மையுடையவன் என்பதைத் தெளிவாக அறிந்து, அந்த அறிவில் நிலைநின்றால் எல்லாத் துயரங்களிலிருந்து விடுபடுவாய் என்று வேதாந்தம் கூறுகிறது. எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுதல் அவ்வளவு எளிதா என்ன? ஆம் என்கிறது வேதாந்தம். நாம் செய்ய வேண்டியது எல்லாம் நான் யார்? அல்லது இந்த நான் என்பதன் தன்மைகள் என்ன என்றறிய வேண்டியதுதான். நான் எனப்படும் ஆத்மாவின் தன்மையும், இந்தப் பிரபஞ்சத்தின் இருப்புக்கு ஆதாரமாக விளங்கும் பிரம்மத்தின் தன்மையும் ஒன்றே என வேதாந்தம் கூறுகிறது. நானும் அந்தப் பரம்பொருளும் ஒன்றுதான் என்று உணர்ந்து விட்டால் அதற்குப் பிறகு எதைத் தேடி ஒருவன் அலைய வேண்டும்? சரி, இந்த ஆத்மாவின், அந்த பிரம்மத்தின் தன்மைதான் என்ன?
முதலில் இங்கு தன்மை என்ற சொல்லால் குறிப்பிடப்படுவது ஒரு பொருளை வரையறை செய்யும் இலக்கணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நீரின் தன்மை என்று கேட்டால், அது திரவத்தன்மை, கொண்டது, ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது என்று கூறலாம். இதுதான் நீரின் இலக்கணம் எனப்படுகிறது. குளிர்ச்சி அல்லது உஷ்ணம் என்பதை ஒருவர் நீருக்கு இலக்கணமாகக் கூறினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் குளிர்ச்சி, உஷ்ணம் போன்றவை நீரின் வெப்பநிலையைப் பொறுத்து அதற்கு வந்து செல்லும் குணங்களாகும். ஒரு பொருளின் இலக்கணம் என்பது எக்காலத்திலும் மாறாததாக இருக்க வேண்டும். எனவே வந்து செல்லும் குணங்கள் ஒரு பொருளை வரையறுக்கும் இலக்கணங்களாக இருக்க முடியாது. பிரம்மத்தையும், ஆத்மாவையும் விளக்கும்போது அவற்றின் குணங்களை அவற்றை விளக்கும் வரையறைகளாக எடுத்துக் கொள்ள இயலாது. எக்காலத்திலும் மாறாதிருக்கிற அதன் இயல்புகளைத்தான் நாம் இலக்கணங்களாக வரையறை செய்ய வேண்டும். இதற்கு “ஸ்வரூப லக்ஷணம்” என்று பெயர்.
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
