மேலே வேருள்ள அஸ்வத்தம்

கீதையின் கடைசி ஆறு அத்தியாயங்கள் மூன்றாம் ஷட்கம் என்று அழைக்கப்படுகின்றன. உபநிஷத்துக்கள் பிரகடனப்படுத்தும் அறுதி உண்மையான “நீ அதுவாகவே இருக்கிறாய்” என்னும் தத்வமசி மகாவாக்கியத்தின் “அஸி” (இருக்கிறாய்) என்ற சொல்லை எடுத்துக்கொண்டு, ஜீவனுக்கும், ஈஸ்வரனுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதே இந்த ஷட்கத்தின் நோக்கமாகும். அத்வைத மாணவனானவன் முதல் ஆறு அத்தியாயங்களின் உபதேசத்தின் மூலம் கர்மயோகம் செய்து மனத்தூய்மை அடைகிறான். இரண்டாவது ஷட்கத்தின் உபதேசத்தின் மூலம் பக்தியோகத்தைப் பின்பற்றி ஈஸ்வர உபாசனை செய்து மனஒருமுகப்பாட்டை அடைகிறான். இப்போது இந்த இறுதி ஷட்கம் அவனுக்கு ஞானயோகம் வழியே எவ்வாறு மனித வாழ்வின் ஒரே இலக்கான மோட்சம்  என்ற அகவிடுதலையை அடைவது என்று போதிக்கிறது.

மெய்ப்பொருளை புரிந்துகொள்ளும் பொருட்டு செய்யப்படுகிற நேரடிச் சாதனமான ஞானயோகம் என்பது சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாசனம் எனும் மூன்று வழிமுறைகளை உள்ளடக்கியது. இதில், சிரவணம் என்பது கேட்டல் ஆகும்; உபநிஷத்தின் தத்துவம் புரியும்வரை அதை குருவிடம் கேட்டல். அடுத்ததாக மனனம் என்பது ஐயம் தெளிதலைக் குறிக்கிறது; கேட்பதற்கும் நமது அனுபவத்திற்கும் உள்ள முரண்பாட்டை நீக்கச் செய்கிற சாதனம் இது. இறுதியாக, நிதித்யாசனம் என்பது அறிவு நிலைத்தலுக்காக செய்யப்படும் தியானத்தைக் குறிக்கிறது; அறுதியான உண்மையை அறிந்து புரிந்த பின்னும் பழக்கத்தினால் அறிவில் நிற்க முடியாமலிருப்பதால், அதில் நின்று பழக செய்யப்படும் தியானம் இது. மேலும் இந்த ஷட்கத்தில் நற்குணங்களையும் தீயபண்புகளையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார் கிருஷ்ணர். தன்னறிவை உள்வாங்க ஒருவனிடம் என்னென்ன மாற்றங்கள் நிகழவேண்டுமென விளக்கமாக கூறப்போகிறார். 

கீதையின் பதிமூன்றாவது அத்தியாயம் க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் என்றழைக்கப்படுகிறது.  இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் ஆறு தலைப்புகளைப் பற்றிப் பேசுகிறார். பிரகிருதி, க்ஷேத்ரம் என்ற அனாத்மாவான ஜடதத்துவத்தைக் குறித்தும், புருஷன், க்ஷேத்ரக்ஞன், ஞேயம் என்ற உணர்வுப்பொருளான பிரம்மத்தைக் குறித்தும், ஞானம் என்ற பெயரில் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்படும் தன்னை அறிவதற்குத் தேவைப்படும் நற்பண்புகளைப் பற்றியும் கிருஷ்ணர் விரிவாகப் பேசுகிறார். க்ஷேத்ரம் என்றால் இருப்பிடம் என்று பொருள். கிருஷ்ணர் க்ஷேத்ரம் என்று நமது உடலைக் குறிப்பிடுகிறார். இந்த உடல் மாறுதலுக்கும், அழிவுக்கும் உட்பட்ட, உணர்வற்ற ஜடப்பொருள். எது அழியும் தன்மை வாய்ந்ததோ, எது மாறிக்கொண்டே இருக்கும் தன்மை வாய்ந்ததோ அதுவே க்ஷேத்ரம் என்று ஒரு பொருள் உண்டு. எது அழிவிலிருந்து காக்குமோ அது க்ஷேத்ரம் என்ற பொருளும் உண்டு. ஆத்ம ஞானத்தை அடைவதற்காக நாம் இந்த உடலைக்கொண்டுதான் சாதனைகள் புரிகிறோம். அந்தச் சாதனைகளே பந்தத்திலிருந்து விடுவித்து நம்மைக் காக்கின்றன. க்ஷேத்ரம் என்பதற்கு விளையும் நிலம் என்று ஒரு பொருளும் உண்டு. இந்த உடலிலிருந்துதான் நமது பாவபுண்ணியங்கள் விளைகின்றன. எனவே இந்த உடலை விளைநிலம் என்றும் அழைக்கலாம்.

இந்த உடலுக்குள் மாற்றமில்லாத சாட்சி உணர்வாக இருந்து கொண்டு உடல், மனம், மற்றும் எல்லாவற்றையும் அறிகின்ற ஒரு உணர்வுப்பொருள் உள்ளது. அதை கிருஷ்ணர் க்ஷேத்ரக்ஞன் என்கிறார். க்ஷேத்ரம் அனாத்மா, க்ஷேத்ரக்ஞனே ஆத்மா. கிருஷ்ணர், பதிமூன்றாவது அத்தியாயம் இரண்டாவது சுலோகத்தில் “க்ஷேத்ரஞம்ச அபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத” என்று கூறுகிறார். அதாவது, “பரதவம்சத்தவனே, எல்லா உடல்களிலும் உள்ளுறைந்து வாழும் அந்த அறிபவனான க்ஷேத்ரக்ஞன் என்பவன் நானே என்று அறிந்து கொள்,” என்று அவர் அர்ஜூனனிடம் உரைக்கிறார்.  ஒவ்வொரு உடலிலும் இருக்கும் “நான்” என்ற தனிப்பட்ட உணர்வு என்று நாம் நினைப்பது, உண்மையில் இந்தப் படைப்பு முழுவதும் நிறைந்துள்ள ஒரே பரம்பொருளே ஆகும். எனவே எல்லாவற்றிலும் இறைவன் உணர்வாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார். ‘இது எனது உடல்’ என்கிற உணர்வு இருக்கின்ற இடத்திலெல்லாம், சைதன்யமாக விளங்கும் இந்த க்ஷேத்திரஞன் உள்ளான். இதை வேறுவார்த்தையில் கூறுவதானால், ‘நீ நானே; ஒவ்வொரு ஜீவனும் பரமேஸ்வரனான நானே’ எனக் கூறி ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தைச் செய்கிறார் கிருஷ்ணர். “க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரஞனை குறித்த இந்த அறிவே ஞானம். இதுவே எனது தரிசனம் (யத் தத் ஞானம் மம மதம்)”, என்கிறார் கிருஷ்ணர். ‘எல்லா உடலிலும் நானே அறிபவனாக இருக்கிறேன்’ எனக் கூறி, அறிபவனான ஆத்மா பல அல்ல; ஒன்று என்று ஜீவ ஈஸ்வர ஐக்கியத்தைச் செய்வதால் இந்த சுலோகம் ஒரு மகாவாக்கியம் எனப்படுகிறது. எனவே சங்கரர் தனது பாஷ்யத்தில் இதற்கு மிக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். முழு சாஸ்திரத்தின் சாராம்சமாக விளங்கும் இந்த சுலோகத்தை குறித்து விரிவான விசாரம் தேவை என்பதை உணர்ந்தவராக அவர் இதை மேற்கொள்கிறார். பூர்வ-பக்ஷம் எனப்படுகிற, இந்த ஞானத்திற்கு எதிரான பார்வையை உடையவர்களின் தரப்பிலிருந்து எழுகிற கேள்வியை, பல்வேறு சர்ச்சைகளை இப்பகுதியில் கொண்டுவந்து அதற்கான முழு விளக்கத்தையும் அளிக்கிறார்.

ஜீவனாகிய க்ஷேத்ரமும், ஈஸ்வரனாகிய க்ஷேத்ரக்ஞனும் ஒன்று என்ற இந்த உண்மை எந்த ஐயத்துக்கும் இடமளிக்காமல், நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக ரிஷிகளால் பலவிதமான சந்தங்களில் பாடப்பட்டிருக்கிறது என்றும், பிரம்ம சூத்திரங்களில் இந்த உண்மை இசைக்கப்பட்டிருக்கிறது என்றும் கிருஷ்ணர் கூறுகிறார்.

கீதையின் பதினான்காவது அத்தியாயம் குணத்ரய விபாக யோகம் எனப்படுகிறது. மாயையின் முக்குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களைப் பற்றியும், எவ்வாறு அக்குணங்களைக் கடந்து குணாதீதம் எனப்படும் முக்தி நிலையை அடைவது என்பது பற்றியும் கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பேசுகிறார். முக்குணங்கள் கொண்ட மாயை என்பது பிரம்மத்தைச் சார்ந்துதான் இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும், மாயையின் குணங்களைக் கடப்பதற்கு அவை பற்றிய அறிவு இன்றியமையாதது என்பதற்காகவும் குணங்களைப் பற்றிய விசாரணை தேவைப்படுகிறது.

குணங்களின் விசாரணையை ஆறு தலைப்புகளிலாக எடுத்துக்கொண்டு கிருஷ்ணர் மேற்கொள்கிறார். லக்ஷணம் (குணங்களின் இலக்கணம்); பந்தனப்ரகாரம் (குணங்கள் நம்மை பந்தப்படுத்தும் முறை); குண ஆதிக்யம் (மூன்று குணங்களில் எவ்வெப்பொழுதுகளில் ஒன்றை மற்றொன்று மட்டுப்படுத்திக் கொண்டு மேலெழுகிறது); கதி: (எந்த குணம் மேலோங்கி இருக்கும்போது ஒருவன் மரணிக்கிறான் என்பதைப் பொருத்து அவன் அடையவிருக்கின்ற லோகங்கள்); இஹ லோக பலம் (இப்போதைய பலன். குணங்களின் அடிப்படையில் இப்போது ஒருவன் என்ன பலனை அனுபவிக்கிறான்) ஆகியன அந்த ஆறும்.

சாத்விகம், ராஜஸம் மற்றும் தாமசம் ஆகிய குணங்கள் பிரக்ருதியிலிருந்து உண்டாகின்றன(ஸத்த்வம் ரஜ: தம: இதி  ப்ரக்ருதி ஸம்பவா: குணா:). இங்கு ‘குணம்’ எனும் சொல்லானது ஒரு பொருளை வகைப்படுத்த உதவுகிற தன்மைகளை, அதாவது உயரம், நிறம், வடிவம் போன்றதான குணங்களைக் குறிக்கவில்லை. உருவம், நிறம் முதலிய பண்புகள் ஒரு பொருளைச் சார்ந்திருப்பதுபோல, இந்த குணம் என்ற பண்பு பிரக்ருதியை சார்ந்திருக்கிறது என எண்ணலாகாது. உதாரணமாக ரோஜா மலரின் குணமாக உள்ள அதன் வாசனை, மென்மை மற்றும் நிறம் போன்றவைகள் அந்த மலரைச் சார்ந்துள்ளது. ஆனால் இங்கு இந்த மூன்று குணங்களும் பிரக்ருதியிலிருந்து வேறுபட்டதல்ல. நெருப்பும் அதன் உஷ்ணமும் வேறானவைகளல்ல, ஒன்றே. அதுபோல பிரக்ருதியும் குணமும் ஒன்றேயாகும். மாயையே இந்த முக்குணங்கள் வடிவத்தில் உள்ளது. சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த முக்குணங்களைக் கொண்டு நமது அனுபவங்களை நாம் விளக்கி விடமுடியும். இந்த சிருஷ்டியின் பொருட்காரணமான மாயையின் குணங்களாக இவை இருப்பதால், அவற்றின் வெளிப்பாடுகள் படைப்பிலும் வெளிப்படுவதைக் காண்கிறோம். சுக-அனுபவமோ அல்லது அறிவை அடைவதோ சாத்விக-பிரக்ருதியின் வெளிப்பாடாகும். அதே சமயம் ஆசையும் கோபமும் ராஜஸ-பிரக்ருதி. மந்தத் தன்மையும் மோகமும் குழப்பமும்  தாமஸ-பிரக்ருதியின் வெளிப்பாடாக உள்ளன. இவ்விதம் பிரக்ருதியானது இந்த சிருஷ்டியாக வெளிப்படும் போது, இந்த முக்குணங்களும் சிருஷ்டியில் வெளிப்படுவதைக் காண்கிறோம்.

இந்த குணங்கள் ஒருவனைப் பிணைக்கின்றன (நிபத்நந்தி), என்கிறார் கிருஷ்ணர். சங்கரர் இந்த இடத்தில் அதிக கவனம் எடுத்து, ‘பிணைப்பதைப் போல’ என பாஷ்யத்தில் கூறுகிறார். இக்குணங்கள் உண்மையிலேயே ஒருவனை பந்தப்படுத்துகிறது எனில் அதிலிருந்து விடுதலைப் பெறுவது எப்படிச் சாத்தியமாகும்? இந்த அத்தியாயத்தின் பிற்பகுதியில், யாரொருவனும் தன்னை இந்த குணங்களிலிருந்து விடுபட்டவன்(நிர்குண) எனத் தெரிந்துகொள்வதன் மூலம், அவன் எல்லா குணங்களிலிருந்தும் விடுபடுகிறான் என்பதை கிருஷ்ணர் காட்டுகிறார். மேலும் அழிகின்ற உடலில் அழியாத ஜீவாத்மாவை இக்குணங்கள் கட்டுகிறது என்கிறார். அழிவற்ற, மாறாத, எப்போதும் ஒரே வடிவத்தில் இருக்கின்ற ஒருவனை இந்த குணங்கள் எப்படி பந்தப்படுத்தமுடியும்? அறியாமையினால்தான் இது நடைபெறுகிறது. இந்த மூன்று குணங்களின் இருப்புமே ஆத்மாவைச் சார்ந்திருக்கின்ற போது, தான் சார்ந்திருக்கின்ற ஒன்றையே எப்படி அதனால் பிணைக்கமுடியும்?  உண்மையில் முடியாது; ஆனால் அறியாமையினால் இது சாத்தியமாகிறது. இதனால் நித்தியமான மற்றும் எல்லையற்றதான ஆத்மா, வரையறுக்கப்பட்டதாகவும் காலத்திற்கு உட்பட்டதாகவும் மாறுகிறது. குணங்களற்ற ஆத்மா குணங்களுக்கு கட்டுப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு காரணம் அவித்யா(அறியாமை) ஆகும். க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரக்ஞனைப் பகுத்துப் புரிந்துகொள்ளும் அறிவை அடைந்தவனை இந்த குணங்கள் கட்டுவதில்லை.

பின்னர் இந்த மூன்று குணங்களின் இலக்கணங்களையும், ஒவ்வொரு குணமும் எந்த விதத்தில் ஒருவனை பந்தத்திலாழ்த்துகிறது என்றும் கிருஷ்ணர் விளக்குகிறார். சத்வகுணம் ஒளி பொருந்தியது, தூய்மையானது, எனவே அது ஆத்ம சைதன்யத்தை பிரதிபலிக்கக்கூடியது. இங்கு தூய்மையானது என்று கூறும்போது சத்வகுணம் பிற இரண்டு குணங்களான ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களின் ஆதிக்கமற்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு உயிரும் மூன்று குணங்களின் கலவையாகவே எப்போதும் இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.சத்வகுணம் மேலோங்கியுள்ள ஒருவன் தெளிவான அறிவைப் பெற முடியும். சத்வ குணம் அனாமயம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தச் சொல்லுக்கு நோயற்றது என்று பொருள். இங்கு நோய்கள் என்று குறிப்பிடப்படுவன காம குரோத மோக மத மாஸ்சர்யம் ஆகிய எண்ணங்களைத்தான். காமம் என்பது ஆசையையும், குரோதம் என்பது கோபம் மற்றும் வெறுப்பையும், லோபம் என்பது பேராசை மற்றும் சுயநலத்தையும், மோஹம் என்பது குழப்பம் மற்றும் ஆசையினால் உண்டாகும் மயக்கத்தையும், மதம் என்பது கர்வத்தையும் மற்றும் மாஸ்சர்யம் என்பது பொறாமையையும் குறிக்கிறது. மனமானது ரஜஸ் மற்றும் தமஸிலிருக்கும்போதே இவ்வகை நோய்கள் வருகின்றன. சத்வத்திலிருக்கும்போது மனம் விழிப்புணர்வுடன் இருப்பதால் இந்நோய்கள் உண்டாவதில்லை. எப்போதெல்லாம் நம்மால் விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க முடிகிறதோ, சரியான அறிவை அடைய முடிகிறதோ அது சத்வத்தின் வெளிப்பாடு என புரிந்துகொள்ளலாம். சத்வகுணமானது ஒருவனை நற்பண்புகளை அடைய வைத்து மோட்சத்திற்கு நேரடிக் காரணமாக ஆகிறது.

இரண்டு விதங்களில் சத்வகுணம் ஒருவனை பந்தப்படுத்துகிறது என்று கிருஷ்ணர் கூறுகிறார் (சுக சங்கேன பத்னாதி; ஞான சங்கேன பத்னாதி). சத்வகுணம் மன அமைதியையும், மனத்தெளிவையும் தருவதால் இன்பத்தைக் கொடுக்கின்றது. சத்வகுணம் மேலோங்கியவர்கள் இந்த சுகத்துக்காக சத்வகுணத்தோடு பந்தப்படுகிறார்கள். சத்வம் மோட்சத்துக்கு உதவினாலும், இறுதியில் குணங்களைக் கடந்த ஒரு நிலையை அடைவதற்கு அது அளிக்கும் சுகமே தடையாக இருக்கிறது. எனவே சாதகன் மிகுந்த விழிப்புணர்வுடன் இந்த குணம் தரும் சுகத்திலும் பற்று வைக்காமலிருக்க வேண்டும். இரண்டாவதாக சத்வம் அறிந்து கொள்ள வேண்டுமென்ற வேட்கையை ஒருவனிடத்து உண்டாக்கி அவனை பந்தப்படுத்துகிறது. மேலும், மேலும் அறிவைச் சேகரித்துக் கொண்டே செல்பவனுக்கு, தான் அடைந்த அறிவில் ஒருபோதும் திருப்தி ஏற்படுவதில்லையாகையால் அவனது புத்தியில் அமைதி உண்டாகாது. இங்கு கிருஷ்ணர் குறிப்பிடும் அறிவு என்பது தன்னையறியும் அறிவு அல்ல. தூய பிரக்ஞை சொரூபமாக உள்ள ஆத்மா அறிவு, அறியாமை இரண்டையும் சமமாகவே பிரகாசிக்கிறது. ஆத்மாவுக்கு எது குறித்தான அறியாமையும் இல்லை என்று ஒருவன் புரிந்து கொள்ளும்போது அந்த அறிவை அவன் அடைய காரணமாக இருக்கும் சத்வகுணம் அவனை பந்தப்படுத்துவதில்லை. அப்போது அவன் குணங்களைக் கடந்த குணாதீதனாக மாறுகிறான். ஆனந்தம் என்பது ஆத்மாவின் உண்மையான இயல்பு என்பதும், அது ஏதோ ஒரு காலத்தில் மட்டும் சுகத்தை அனுபவிப்பதில்லை என்றும், மாறாக எப்போதும் அது ஆனந்த வடிவமாகவே இருக்கிறது என்பதையும் உணர்ந்தவன் அவன்.

இதேபோல் ரஜோகுணம் ஆசையின் வடிவத்தை உடையதென்றும், அது வேட்கையையும், பற்றுதலையும் ஒருவனிடத்து உண்டுபண்ணுகிறது என்றும் கூறுகிறார். செயல்களின் மீதுள்ள பற்றுதான் ஒருவனை ரஜோகுணத்துடன் பிணைத்துக் கொள்கிறது என்று கூறுகிறார். ரஜோகுணத்தின் விளைவால் மனம் நிலையற்று அலைகிறது. தேவையற்ற எண்ணங்களின் தாக்கம் மற்றும் பொறுமையின்மையைத் தருகிறது. அதேபோல் தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறந்ததென்றும், அது சோம்பல், கவனமின்மை, உறக்கம் முதலியவற்றால் ஒருவனைப் பிணைக்கிறது என்றும் கிருஷ்ணர் கூறுகிறார்.

இவ்வாறு மூன்று குணங்கள் குறித்தும் விரிவாக விளக்கிக் கொண்டே வரும் கிருஷ்ணர், “தன்னுடைய உண்மையான சொரூபத்தை அறிந்த ஞானியானவன், தனது உடலுக்குக் காரணமான முக்குணங்களையும் கடந்து, பிறப்பு இறப்பு மூப்பு துன்பத்தினின்று விடுபட்டு மரணமிலாப் பெருவாழ்வு பெறுகிறான்” என்று கூறுகிறார். முக்குணங்களால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் இருந்துகொண்டு அவற்றை எப்படிக் கடப்பது? உண்மையில், ஆத்மாவானது ஏற்கனவே இந்த எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டுள்ளது. எனவே இந்த குணங்களை கடக்க அல்லது தாண்டிச் செல்ல எந்த நகர்வும் தேவையில்லை. ‘முக்குணங்களிலிருந்தும் விடுபட்ட சுய-சொரூபம் ஆத்மா’ என்கிற அறிவு மட்டுமே போதுமானது. அதன்மூலம், உடலில் வசிக்கின்ற தேகி எனப்படுபவன், பிறப்பு, இறப்பு, முதுமை உட்பட உடல் சார்ந்த எல்லாவற்றிலிருந்தும் விடுதலை அடைகிறான். 

இப்படி கிருஷ்ணர் கூறியவுடன் அர்ஜூனன் அவரிடம் சில கேள்விகளைக் கேட்கிறான். “இறைவனே, மூன்று குணங்களையும் கடந்தோன், என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?” (பாரதி மொழிபெயர்ப்பு). இந்தக் கேள்விகள் அவன் இரண்டாவது அத்தியாயத்தில் ஸ்திதப்ரக்ஞ லக்ஷணம் குறித்து கேட்ட கேள்விக்கு ஒப்பானவை. இதற்கு பதிலாக கிருஷ்ணர், மூன்று குணங்களையும் கடந்தவன், “சத்வத்தின் காரியமான ஒளி, ரஜஸின் காரியமான செயல், தமஸின் காரியமான மயக்கம், இவை வரும்பொழுது அவன் வெறுக்கிறதுமில்லை, நீங்கியபொழுது விரும்புகிறதுமில்லை,” என்கிறார். இந்த மூன்று குணங்களின் விளைவுகளை ஒரு ஞானியானவன் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளான். எனவே குழப்பம் அல்லது மந்தத் தன்மையை அனுபவிக்கும்போது, மனமானது தமஸின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறான்; இதனால் அவன் அது நீங்க வேண்டுமென விரும்புவதில்லை. மேலும் அமைதியின்மையும், செயலில் ஈடுபடும் நாட்டமும் ஏற்படும்போது அது ரஜஸின் விளைவு என்றும், சுகத்தை அனுபவிக்கும்போது அது சத்வத்தின் விளைவு என்றும் மிகத் தெளிவாக அறிகிறான். எனவே இந்த அனுபவங்களை அவன் வெறுப்பதோ, அல்லது இவைகளினால் ஈர்க்கப்படுவதோ இல்லை. மேலும் இவைகள்தான் வரவேண்டும் மற்றவைகள் விலகவேண்டுமென்ற விரும்புதல் எதுவும் கிடையாது. குணத்தை கடந்தவன் ஆதலால், குணங்களினால் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. “உதாசீனனைப்போல வெறும் சாட்சியாய் இருந்துகொண்டு குணங்களால் அசைக்கப்படாதிருப்பவன்; குணங்களே தொழில் புரிகின்றனவென்று ஆத்மாவிலேயே அசையாது இருப்பவன்; தீரன்; துன்பத்தையும் இன்பத்தையும் சமமாகக் கொண்டவன், ஆத்மாவில் நிலைத்தவன், மண், கல், பொன்னை நிகராகக் காண்பவன், இனியதையும் இன்னாததையும் சமமாகப் பார்ப்பவன், இகழ்ச்சி புகழ்ச்சியை ஒரே பாங்குடன் பார்ப்பவன்; மான-அவமானத்தை நிகராக நினைப்பவன், நண்பனிடத்தும் பகைவனிடத்தும் ஒரே பாங்குடையவன், தனக்கெனச் செயல் செய்யாதவன் யாரோ, அவன் குணாதீதன் எனப்படுகிறான்,” என்று உரைக்கிறார்.

கீதையின் பதினைந்தாம் அத்தியாயம் புருஷோத்தம யோகம் எனப்படுகிறது. பிரம்மம் ஒன்று மட்டுமே சத்தியமானது. இந்த உலகம் வெறும் தோற்றம் மட்டுமே என்ற கருத்து இந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது. துவக்கத்தில் சம்சாரம் எனப்படும் பந்தத்தை தலைகீழாக நிற்கும் ஒரு மரமாக உருவகித்து வர்ணிக்கிறார். மேலே வேருள்ளதும் கீழே கிளைகளுள்ளதும் ஆகிய ஆலமரம் போன்றது சம்சாரம் என்கிறார். பின்னர் தன்னைப் பற்றிய அறியாமையினால் ஏற்படும் தவறான அறிவே சம்சாரத்திற்கு அடிப்படையாக இருப்பதால், ஆத்ம-தத்துவத்தை போதிக்கிறார். சம்சாரத்தை மரமாகப் பார்க்கின்ற இந்த உதாரணத்தை ஸ்ருதியும் கையாளுகிறது. கடோபநிஷதத்தில், மரத்தின் வேராக பிரம்மமும், அதன் கிளைகளாக கால-தேச கட்டமைப்பும் கூறப்படுகிறது. மகாபாரதத்திலும் இந்த உருவகம் வருவதாக சங்கரர் தனது பாஷ்யத்தில் சுட்டிக்காட்டுகிறார். மரமானது அதன் வேரிலிருந்து பிறந்து பின் வேரினால் நிலைநிறுத்தப்படுவதுபோல, சம்சார மரமானது வெளிதோற்றத்திற்கு வராத ஒன்றிலிருந்து (ப்ரம்மத்திடமிருந்து) மேலெழுந்து, ஈஸ்வரனால் நிலைத்து நிற்பதாகக் கூறப்படுகிறது. “இப்படிப்பட்ட இந்த சம்சார மரத்துக்கு இங்கு வடிவம் தென்படுவதில்லை, முடிவில்லை; துவக்கமில்லை, இடையுமில்லை. வலுத்து வேரூன்றிய இந்த அஸ்வத்த மரத்தைப் பற்றின்மை எனும் உறுதியான வாளால் வெட்டி எறி” என்கிறார் கிருஷ்ணர். ஸம்ஸாரத்தை எப்படி நீக்கலாம் என்கிற கேள்விக்கு சங்கரர் அதன் உண்மைத்தன்மையை பார்ப்பதன்மூலம் நீக்கலாம் என விளக்கமளிக்கிறார். “த்ருஷ்ட நஷ்ட ஸ்வபாவம்”, பார்க்கும்போது அழிவதே அதன் இயல்பு. இந்த நொடியில் ஒரு வடிவத்திலிருக்கிற எந்தவொன்றும் அடுத்த நொடியில் மாற்றத்திற்கு உள்ளாவதைத் தடுக்க இயலாது. இதன் காரணமாகவும், அதற்கு ஆரம்பம் இல்லை, முடிவு இல்லை, சொந்தமாக இருப்புமில்லை. பிரம்மத்தின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது அதற்கு எந்த உண்மையும் இல்லை. எனவே மாயையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சம்சாரத்தை வெட்டி வீழ்த்த பற்றின்மை என்ற உறுதியான வாள்தான் தேவை என்கிறார் கிருஷ்ணர்.

பற்றின்மையால் சம்சார மரத்தை வீழ்த்திய ஒருவன் அதற்குப்பின், தேடத்தக்க, பிறப்பற்ற பதத்தை, எங்கு சென்றால் ஒருவன் திரும்புவதில்லையோ அந்த பதத்தை, எவரிடத்திலிருந்து காலங்காலமாக சிருஷ்டி தோன்றியுள்ளதோ அந்த ஆதிபுருஷனை சரண் அடைகிறான் என்கிறார். இங்கு தேடத்தக்க (பரிமார்கிதவ்யம்) என்ற சொல் பிரம்மத்தைப் பற்றிய முறையான விசாரணை செய்வதைக் குறிக்கிறது. இந்தச் சாதனைக்குப் பெயரே ஞானயோகம் என்பது. சிரவணம், மனனம், நிதித்யாசனம் என்ற மூன்று படிகளைக்கொண்டது ஞானயோகம். இந்த ஞானயோகம் புரிந்து பிறப்பற்ற பதத்தை ஒருவன் அடைகிறான். இங்ஙனம் இப்பதத்தை அடைந்தவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று ஞானியரின் இயல்புகளை கிருஷ்ணர் பட்டியலிடுகிறார். 

அகங்காரத்தையும் அவிவேகத்தையும் நீக்கியவர்கள், பற்று எனும் குறையை வென்றவர்கள், பரமாத்மாவினுடை அறிவிலேயே நிலைத்தவர்கள், ஆசையை முழுமையாக நீக்கியவர்கள், சுக துக்கம் எனப்படுகின்ற இருமைகளைக் கடந்தவர்கள், மூடத்தன்மையற்றவர்கள் இவர்களே அந்த அழிவில்லாத நிலையை அடைகிறார்கள். முயற்சியுடைய யோகிகள் ஆத்மாவைத் தங்களுக்குள்ளேயே காண்கிறார்கள். ஆனால் எவ்வளவு முயற்சியுடையவர்களாயினும், பண்படாத அறிவிலிகளால் ஆத்மாவை அறியவே முடியாது என்கிறார் கிருஷ்ணர். இங்கு “யோகிகள்” என்று கிருஷ்ணர் குறிப்பிடுபவர்கள் சரியான சாதனைகளை மேற்கொண்டு மனத்தூய்மையையும், மனஒருமுகப்பாட்டையும் அடைந்தவர்கள். “பண்படாத அறிவிலிகள்” என்று மனத்தூய்மையில்லாது வேதாந்த விசாரணையில் ஈடுபடுபவர்களைக் குறிப்பிடுகிறார். அவர்களால் எவ்வளவு காலம் ஞானயோகப்பயிற்சியில் ஈடுபட்டாலும் ஆத்மாவை அறிந்து கொள்ளவே முடியாது.

பின்னர் மீண்டும் இந்த அத்தியாயத்தில் பிரம்ம தத்துவத்தைப் பற்றிய விளக்கத்தை மேற்கொள்கிறார் கிருஷ்ணர். க்ஷர புருஷன், அக்ஷர புருஷன் என்று படைப்பு அனைத்தையும் இரண்டாகப் பிரிக்கிறார். க்ஷரம் என்றால் அழிவுக்கு உட்பட்டது, அக்ஷரம் என்றால் அழிவுக்கு உட்படாதது என்று பொருள். இங்கு அக்ஷர-புருஷன் என்பது வெளித்தோற்றத்திற்கு வராத மாயையைக் குறிக்கிறது. அதிலிருந்து வெளிவந்த இந்த முழு உலகமும் க்ஷர-புருஷன் எனப்படுகிறது. இதன்மூலமாக அனைத்தும் புருஷ தத்துவமே, அதிலிருந்து வேறானது எதுவுமில்லை எனக் காட்டப்படுகிறது. எனில் உண்மையான புருஷன் என்பதுயார்? சான்றோர்களாலும் ஞானிகளாலும் புருஷோத்தமன்(உத்தம-புருஷன்) என்று அறியப்படுகிற பரமாத்மாவே எல்லாவற்றின் ஆதாரமாக விளங்குகிறார். அவர் க்ஷர மற்றும் அக்ஷரத்தின் குணங்கள் எதுவுமற்று நிர்குணமாக இருக்கிறார். தொடர்ந்து அழிவுக்கு உள்ளாகும் இந்த க்ஷர-தத்துவமானது முடிவில், வெளித்தோற்றத்திற்கு வராத அக்ஷர-தத்துவத்தில் ஒடுங்குகிறது. பின்னர் இந்த அக்ஷர-தத்துவம் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டு, மீண்டும் க்ஷர-தத்துவமாக வெளித்தோற்றத்திற்கு வருகிறது. இந்த சுழற்சி தொடர்கிறது. இதில் தொடர்ந்து மாற்றத்திற்குட்பட்டு அழிகிற தத்துவம் ‘க்ஷரம்’ என்றும், அவைகள் சென்று ஒடுங்குமிடமாக உள்ள மாயா தத்துவம் ‘அக்ஷரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரு தத்துவத்தையும் நிலைநிறுத்திக் கொண்டுள்ள ஆத்மாவானது, தன் மீது ஏற்றிவைக்கப்பட்டதான இவ்விரண்டின் பண்புகளுக்கும் உட்படாது அவைகளுக்கு ஆதாரமாக விளங்குவதால் அது உத்தம-புருஷன் எனப்படுகிறது.

கீதையின் பதினாறாவது அத்தியாயம் தைய்வாசுரசம்பத் யோகம் எனப்படுகிறது. தைய்வீ’ என்றழைக்கப்படுகிற தெய்வீக மனநிலை ஒருவனை சம்சாரத்திலிருந்து விடுதலை பெற உதவுகிறது. அதேசமயம், அசுர மற்றும் ராக்ஷஸனின் மனநிலைகள் ஒருவனை சம்சாரத்துடன் பிணைக்கின்றது. இங்கு, ஆன்மீக குணத்தை வளர்ப்பதற்கு துணைநிற்கும் மனநிலைகளாக சில நற்பண்புகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் நாம் தவிர்க்கும் பொருட்டு, அசுர மற்றும் ராட்சச மனநிலைகளின் குணங்களும் அதன் விளைவுகளும் இங்கு சொல்லப்பட்டுள்ளன. சத்வகுணம் உடையவர்கள் இயல்பாகவே தைய்வசம்பத் உடையவர்கள். ரஜோகுணம் மற்றும் தமோகுணம் உடையவர்கள் அசுரகுணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.

“பயமின்மை, உள்ளத்தின் தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை, புலனடக்கம், யாகம், சாஸ்திரம் படித்தல், தவம், நேர்மை, அஹிம்சை, உண்மை, கோபமின்மை, துறவு, அமைதி, கோள் சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், தீவிர ஏக்கம் இல்லாமை, இனிமை, நாணம், மனம் சலியாமை, திறமை, பொறை, உறுதி, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை ஆகிய இவைகள் தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பாகின்றன அர்ஜுனா!” என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

அசுர சம்பத் கொண்டவர்களைப் பற்றி, “செய்யத் தகுந்த நல்வினையையும், தகாத தீவினையையும், அசுர இயல்புடையார் அறியார். அவர்களிடம் தூய்மையும், நல்லொழுக்கமும் வாய்மையும் இல்லை. அவர்கள் இவ்வுலகின் மக்கள் யாவரும் நேர்மையற்றவர்கள் என்றும், அறத்தால் இவ்வுலகம் நடத்தப்படவில்லை என்றும், இறைவன் என்பவர் இல்லைவே இல்லை என்றும், காம உறவு தவிர இவ்வுலகில் வேறு என்ன உள்ளது என்றும் கேட்பார்கள்,” என்கிறார். அவர்கள் தங்கள் கொள்கையிலேயே பிடிவாதமாக இருப்பார்கள் என்றும், அற்பபுத்தியுடையவர்களாகவும், தங்களையே இழந்தவர்கள் என்றும், கொடுஞ்செயல் புரிபவர்களாய், உலகின் பகைவர்களாய் அதன் அழிவுக்கென்றே தோன்றியிருக்கின்றனர் என்றும் கூறுகிறார். அசுர சம்பத் உடையவர்கள் நிறைவேறாத நெடுங்காமம் பிடித்தவர்களாய், ஆடம்பரமும், தற்பெருமையும், மதமும் பொருந்தியவர்களாய், மதிமயக்கத்தால் கெட்ட எண்ணங்களைக் கிரகித்துத் தீய தீர்மானங்களுடன் தொழில் புரிகின்றனர். சாகும்வரையில் அளவுகடந்த கவலையை உடையவர்களாய், காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாகக் கருதி, மற்றொன்றுமில்லை என்று தீர்மானம் செய்தவர்களாய், நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால் கட்டுண்டவர்களாய், காமக் குரோதங்களின் வசப்பட்டவர்களாய், ஆசைப்பட்டதை அனுபவிக்கும் பொருட்டு நியாயமற்ற வழியில் செல்வக் குவியல்களை தேட முயல்கின்றனர். 

“இன்று இது என்னால் அடையப்பட்டது; இவ்விருப்பத்தை நிறைவேற்றுவேன். இது இருக்கிறது; மேலும் எனக்கு இச்செல்வம் வந்து சேரும். இந்த பகைவன் என்னால் கொல்லப்பட்டான்; மற்றவர்களையும் கொல்லுவேன். நான் ஆளுபவன்; நான் போகத்தை அனுபவிப்பவன். காரியசித்தி பெற்றவன்; வலிமையுடையவன்; இன்பமாகவே இருப்பவன். செல்வம்படைத்து உயர்குலத்தவனாய் இருக்கிறேன்; எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான்; யாகம் செய்வேன், தானம் கொடுப்பேன், மகிழ்வடைவேன் என்றெல்லாம் எண்ணியபடி அறியாமையில் மயங்கியிருப்பார்கள். பலவித எண்ணங்களினால் குழப்பமடைந்தவர்கள், மோக வலையில் மூடப்பெற்றவர்கள், விரும்பியதை அனுபவிப்பதிலே பற்றுடையவர்கள் அசுரசம்பத் உடையவர்கள். அவர்கள்  துக்கமான நரகத்தில் வீழ்கின்றனர். தற்புகழ்ச்சியுடையவராய், வணங்காதவராய், செல்வச் செருக்கும் மதமுமுடையார் பெயரளவில் யாகத்தை விதிவழுவி ஆடம்பரத்துக்காகச் செய்கின்றனர். அஹங்காரம், பலம், இறுமாப்பு, காமம், குரோதம் இவைகளையுடையவர்கள் தங்கள் தேகத்திலும் பிறர் தேகத்திலுமுள்ள என்னை வெறுத்து அவமதிக்கின்றனர்” என்று கிருஷ்ணர் கூறுகிறார். எனவே காமம், குரோதம், லோபம் ஆகிய மூன்று அசுர குணங்களிலிருந்து விடுதலையடைபவனே தனக்கு நலம் செய்து கொள்கிறான். அதனாலேயே அவன் மேலான கதியை அடைகிறான் என்கிறார். அப்படி விடுபடாவிட்டால் அவனால் பரிபூரணத்தன்மையை அடைய முடியாது என்று எச்சரிக்கிறார். ஆகையால், செய்யத் தகுந்ததையும் தகாததையும் நிச்சயிப்பதில் சாஸ்திரம் உனக்குப் பிரமாணமாகிறது. இங்கு சாஸ்திர விதியில் சொல்லப்பட்டதை அறிந்து கர்மம் செய்யக் கடவாய் என்று இந்த அத்தியாயத்தை முடிக்கிறார் கிருஷ்ணர்.

“சாஸ்திர விதிகளை கைவிட்டுவிட்டு ஆனாலும் சிரத்தையோடு கூடியவர்களாய் வழிபாடுகளில் ஈடுபடுவர்களது நிலை சத்வமா, ராஜசமா, அல்லது தாமசமா?” என்று பதினேழாவது அத்தியாயமான சிரத்தாத்ரய விபாக யோகத்தின் துவக்கத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறான் அர்ஜூனன். அதற்கு பதிலாக மூன்று வகையான சிரத்தைகளைப் பற்றி விரிவாக இந்த அத்தியாயத்தில் பேசுகிறார் கிருஷ்ணர். சாத்விகம், ராஜசம், தாமசம் ஆகிய மூன்று வகை சிரத்தைகளின் இலக்கணம், வகைபாடு, அவைகள் தோன்றும் இடம், அவை ஏற்படுத்தும் விளைவு, அவைகளைத் தெரிந்து கொள்ளும் அடையாளம், இம்மூன்றில் நமது ஆன்மிக முன்னேற்றத்துக்குத் தேவையான சாத்விக சிரத்தையை அடைவதற்கான உபாயம் ஆகியவற்றை விளக்குகிறார்.

சிரத்தை என்பதன் நேரடிப் பொருள் நம்பிக்கை ஆகும். ஒருவனின் அறிவின் அடிப்படையில்தான் அவனது வாழ்க்கை உள்ளது. இந்த அறிவு என்பது நம்பிக்கையின் வழியாகத்தான் வெளிப்படும். எனவே அறிவும் நம்பிக்கையும் பிரிக்க முடியாத ஒன்று. அறிவுக்கு துணை தேவைப்படுகிறது; அதுவே நம்பிக்கை. ஒருவரின் வார்த்தையில் நம்பிக்கையிருந்தால் அது அறிவாக மாறுகிறது. சிரத்தையை நம்பிக்கை என்று கூறினாலும், உண்மையில் சிரத்தை என்பது அதையும் விட அதிகமானது. அது ஒரு முழு மனிதனாகவே இருப்பது; அவனின் வாழ்க்கை மீதான அணுகுமுறையை  அது குறிக்கிறது. உடல், செல்வம், மக்கள், வழிபாட்டுச் செயல்கள், உணவு, தானம் போன்றவற்றின் மீதான ஒருவனின் அணுகுமுறை என்பது சிரத்தையைச் சார்ந்து இருக்கிறது. இவற்றின் மீதான பார்வையானது இறைவனின் மீதான அவனது சிரத்தையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சிரத்தை என்பது வெளியே இல்லை; அது ஒருவனது மனதில், சிந்தனையில், புரிதலில், ஒழுக்க அமைப்பில், முன்னுரிமைகளில் உள்ளது. இந்த சாதாரண வார்த்தையில் இவையனைத்தும் மறைமுகமாக உள்ளது என்பதாலேயே சிரத்தையைப் புரிந்துகொள்வதற்காக இங்கு ஒரு முழு அத்தியாயமும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. “ஒவ்வொருவனுடைய மனப்பாங்குக்கேற்ப சிரத்தையமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன்; சிரத்தை எதுவோ அதுவே அவனுமாம்.” என்கிறார் கிருஷ்ணர். 

சிரத்தைகளில் மூன்று வகையுள்ளது என்று துவங்கி, பக்தர்கள், வேள்வி, தவம், தானம் என்று ஒவ்வொன்றையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என்று வகைப்படுத்துகிறார் கிருஷ்ணர். பின்னர் பிரம்மத்தைக் குறிப்பதான “ஓம் தத் சத்” சொற்றொடரை அறிமுகப்படுத்தி அதன் ஒவ்வொரு சொல்லையும் விளக்குகிறார். இவை பிரம்மத்தைக் குறிப்பதான சொற்கள் மட்டுமல்ல, எந்த ஒரு கர்மத்தைச் செய்யும்போதும் அதில் ஏதேனும் ஒரு பிழை நம்மையறியாமல் நிகழ்ந்திருக்கும். அப்போது இந்தச் சொற்களைக் கூறி அந்தச் செயலைச் செய்து முடித்தால் நம்முடைய பிழைகள் நம்மை பாதிக்காது என்று கூறுகிறார். இந்த கர்மங்கள் அனைத்தும் நிறைய பொருள், காலம் மற்றும் மனித உழைப்பு போன்ற பல்வேறு முயற்சிகளைக் கொண்டு செய்யப்படுகின்றன. ஆனால் சிரத்தை இல்லாதபோது அவைகள் இங்கும் எந்த நன்மையையும் கொடுப்பதில்லை. எனவே சிரத்தையின் இன்றியமையாமையை விளக்குவதற்காக ஒரு முழு அத்தியாயத்தையே அர்ப்பணித்திருக்கிறார் கிருஷ்ணர்.

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

இறை உறையும் இடம்

Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.