வேதாந்த மாணவனுக்கு பரிந்துரைக்கப்படும் முதன்மையான ஆன்மிகப் பயிற்சி என்பது கர்மயோகமேயாகும். அத்வைத வேதாந்தக் கல்வி என்பது நீண்டகாலம் குருவோடு பயணித்து, மனதை ஒருமுகப்படுத்தி பிரஸ்தான த்ரயத்தைக் கற்று, அந்தக் கற்றலின் வழி நிற்றலாகும். மனத்தூய்மையும், மனஒருமுகப்பாடும் இல்லாதவனுக்கு வேதாந்தக் கல்வி அதன் பலனான முக்தியை அளிக்காது. கர்மயோக அனுஷ்டானமே ஒருவனுக்கு மனத்தூய்மையைஅளிக்கவல்லது (உபாசனம் ஒருவனுக்கு மனஒருமுகப்பாட்டை அளிக்கின்றது), எனவேதான் வேதாந்தக் கல்விக்கு ஒருவன் தன்னைத் தயார் செய்து கொள்வதற்கு கர்மயோகத்தைக் கடைபிடிப்பது இன்றியமையாததாகிறது.
இப்பகுதியில் கர்மயோகம் என்றால் என்ன என்பது குறித்து விரிவாகக் காண இருக்கிறோம். சென்ற பகுதியில் கர்மங்களின் வகைகள் குறித்து அறிந்தோம். உத்தம கர்மம், மத்யம கர்மம், மற்றும் அதம கர்மம் ஆகியவை கர்மங்களின் வகைகள். எந்த ஒரு மனிதனின் செயல்களும் இந்த மூன்று கர்மங்களின் கலவையாகவே இருக்கும். ஆன்மிகப்பாதையில் பயணத்தைத் துவங்கும் ஒருவன் அதம கர்மத்தை அறவே விடுத்து, மத்யம கர்மங்களைக் குறைத்துக் கொண்டு, பெரும்பாலும் உத்தம கர்மத்திலேயே ஈடுபட வேண்டும்.
நற்பண்புகள் நிறைந்த எந்த ஒரு மனிதனும் மேற்கூறிய வகையிலேயே இயங்கி வருவான். ஆனால் கர்மயோகம் என்பது இவ்வாறு செயல்புரிவது மட்டுமல்ல. அதே நேரத்தில் அது எந்த வகையிலும் அடங்காத ஒரு தனித்துவமான செயலும் அல்ல. பொதுப்புரிதலில் கர்மயோகம் என்றால் ஒரு செயலில் தீவிரமாக ஈடுபட்டு அதிலேயே தன்னைக் கரைத்துக் கொள்வது என்பதாக அறியப்படுகிறது. அவ்வாறு செயலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் கர்மயோகிகள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் அத்வைத வேதாந்தத்தின் கூற்றுப்படி இது தவறான புரிதலாகும். வேதாந்தத்தின்படி நாம் அன்றாடம் ஆற்றும் எல்லாச் செயல்களையும் கர்மயோகம் என்ற குடைக்குள் கொண்டுவந்து விடமுடியும். ஒரு செயல் கர்மயோகமாக மாறுவதற்கென்று சில விதிமுறைகள், நிபந்தனைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி, அறத்தின்பால் நின்று ஆற்றப்படும் எந்த எளிய செயலும் கர்மயோகம்தான்.
அந்த நிபந்தனைகள் யாவை? செயல் செய்யும்போதும், செய்த செயலுக்கான பலனைப் பெற்றுக்கொள்ளும்போதும் ஒருவனுக்கு இருக்க வேண்டிய பாவனைகளே அந்த நிபந்தனைகள். செயல் செய்யும்போது ஒருவனுக்கு இருக்க வேண்டிய பாவனையை “ராக-த்வேஷ-ரஹித புத்தி” என்று வேதாந்தம் கூறுகிறது. அதாவது செயலிலோ, செயலின் விளைவாக அடையப்படும் பலனிலோ விருப்போ, வெறுப்போ அற்று நமக்குரிய கடமைகளை ஆற்றுதல் என்பதுதான் அந்த பாவனை. இவ்வாறு புரியப்படும் செயலுக்கு நிஷ்காம கர்மம் என்றும் பெயர். கர்மத்தின் பலனில் பற்றின்றி இருப்பது. எனில் எந்த நோக்கத்துக்காக செயல் ஆற்றப்பட வேண்டும்? அதற்கு விடையாக ஈஸ்வரார்ப்பண புத்தியுடன் செயல் ஆற்றப்பட வேண்டும் என்று வேதாந்தம் கூறுகிறது. நான் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கே அர்ப்பணிக்கிறேன் என்ற பாவனையுடன் செய்யப்படும் செயல் கர்மயோகமாகும்.
எந்த ஒரு செயலும் அதற்குறிய பலனை அல்லது விளைவைக் கண்டிப்பாக ஏற்படுத்தியே தீரும். கர்மயோகம் புரிகின்ற ஒருவன் தன் செயலின் மூலம் விளையும் பலனை ஏற்றுக்கொள்கையில் மேற்கொள்ளப்படும் பாவனையை “பிரசாத புத்தி” என்று வேதாந்தம் வரையறுக்கிறது. அதாவது வரக்கூடிய செயலின் பலன்களை ஈஸ்வரனுடைய பிரசாதமாக ஏற்றுக் கொள்வது என்பது அதன் பொருள்.

இந்த பாவனைகளை ஏன் கைக்கொள்ள வேண்டும்? கர்மயோகத்துக்கென்று ஏன் இந்த நிபந்தனைகள்? நாம் ஒரு செயலைப் புரிகையில் மேற்கொள்ளும் எந்த பாவனையும் அந்தச் செயல் குறித்தும், அதன் பலன் குறித்தும் நமக்குள்ள புரிதலின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதை நாம் காண்கிறோம். ஒரு விஷயத்தைக் குறித்த சரியான புரிதலின்றி அந்தச் செயல் குறித்த சரியான பாவனையை நம்மால் மேற்கொள்ள முடியாது. எந்த ஒரு செயலும் அதை நாம் செய்து முடித்த மறுகணத்திலேயே இந்தப் பிரபஞ்சத்தின் விதிகளுக்கு உரித்ததாகி விடுகிறது. எனவே செயலைச் செய்யும் அதிகாரம், உரிமை மட்டுமே என் வசம் உள்ளது. அந்தச் செயலுக்கான பலன் என்பது பிரபஞ்சத்தின் எண்ணிலடங்கா விதிகளுக்கு உட்பட்டது. நாம் செய்த செயலின் பலன் எப்போதுமே நமக்கு உவப்பானதாகவே அமைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே ஒரு செயலுக்கான பலன் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்று தீர்மானிக்கிற அதிகாரம் நம்மிடம் இல்லை. இதையே கிருஷ்ணர் கீதையில், “கர்மண்யேவாதி காரஸ்தே, மாபலேஷூ கதாசன” என்று உரைக்கிறார். கர்மத்தைச் செய்வதில்தான் உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதனுடைய பலனில் அல்ல என்று கண்ணன் கூறுகிறான். இது ஏதோ ஆன்மிக உபதேசம் அன்று. இயற்பியல் விதிகள் போல இதுவும் செயல் புரிதலின் இன்றியமையாத விதி. ஒரு செயலின் விளைவுகள் அதை செய்பவனையுமன்றி, பலநூறு காரணிகளைச் சார்ந்திருக்கிறது. எனவேதான் கர்மத்தைச் செய்வதில் மட்டுமே நமக்கு அதிகாரம், பலனில் இல்லை என்று கிருஷ்ணர் கூறுகிறார். இது பலராலும் “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்று கண்ணன் உரைப்பதாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. பலனை எதிர்பார்த்துத்தான் எந்தக் கர்மமும் செய்யப்படுகிறது. இந்த மாதிரியான குறிப்பிட்ட பலன்தான் எனக்கு வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத்தான் கிருஷ்ணன் தவிர்க்கச் சொல்கிறார்.
நாம் எந்தச் செயலையும் ஒரு விருப்பத்தின்பாற்பட்டுத்தான் செய்கிறோம். ஆனால் விருப்பு, வெறுப்பின்றி செய்யப்படுவதே கர்மயோகம் என்று இங்கு உரைக்கப்படுகிறது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது? நாம் செய்யும் எந்த ஒரு செயலும் பிரபஞ்ச விதிகளுக்குட்பட்டது. பிரபஞ்ச நியதிகள் ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுச் செயல்படுவதை நாம் காண்கிறோம். பிரபஞ்ச விதிகளை ஆற்றி, இயக்குபவரை ஈஸ்வரன் என்ற சொல்லால் வேதாந்தம் குறிப்பிடுகிறது. இறைவன், கடவுள் என்ற பொருளில் ஈஸ்வரன் என்ற சொல்லை எடுத்துக் கொண்டாலும், வேதாந்தத்தில் ஈஸ்வரன் என்ற சொல் தனித்த பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் பிரபஞ்ச விதிகளை ஆற்றி இயக்குபவர் என்ற பொருளில் ஈஸ்வரன் என்ற சொல்லை அணுகினால், நாம் செய்யும் செயலில் பலன்களைத் தீர்மானிப்பவராகவும் ஈஸ்வரனே இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். எல்லாச் செயல்களுக்கும் மூலமாகவும், செயல்களின் பலன்களைத் தீர்மானிப்பவராகவும் அந்த ஈஸ்வரனே இருப்பதால்தான், நாம் எந்தச் செயலைப் புரியும்போதும் “ஈஸ்வரார்ப்பண புத்தியு”டனும், செயல்களின் பலன்களைப் பெற்றுக் கொள்ளும்போது “பிரசாத புத்தி” யுடனும் இருக்க வேண்டும் என்று வேதாந்தம் கூறுகிறது. இவ்வுலகம் வெறும் பருப்பொருட்களால் ஆனதன்று. இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஈஸ்வரனாகிய அந்த இறைவனின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. எனவே தர்மம் எனப்படும் பொது அறத்தையும், ஸ்வதர்மம் எனப்படும் தன்னுடைய அறத்தையும் ஒருவன் ஈஸ்வரனுடைய பிரபஞ்ச விதிகளுக்கு ஒத்திசைவு தரும் வண்ணம் அமைத்துக் கொள்வதையே கர்மயோகம் என்கிறோம்.
இவ்வாறான பாவனைகளுடன் எந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டாலும் அது கர்மயோகமே. அது சாதாரணமான அன்றாடச் செயலாக இருப்பினும் சரி, மகத்தான படைப்பூக்கம் கொண்ட செயல்களாக இருப்பினும் சரி, பாவனைதான் ஒரு செயலைக் கர்மயோகமாக மாற்றுகிறது. அந்தச் செயலின் தன்மை அன்று.
செய்யும் செயலிலும், அதன் பலனிலும் பற்றின்றி, தொடர்ந்து அன்றாடச் செயல்களைப் புரிந்து வருவதால் மனம் இயல்பாகவே ஓர் அமைதியை அடைகிறது. கர்மயோகம் புரிவதன் மூலம் நான் இந்தச் செயல்களின் உரிமையாளன் என்று நினைக்கும் அகங்காரத்தின் பிடி தளர்ந்து கொண்டே வருகின்றது. பலனை எதிர்பார்ப்பது அற்றுப்போவதால் மனம் ஏமாற்றமடைவதிலிருந்தும், பதற்றமுறுவதிலிருந்தும் விடுதலை அடைகிறது. இவ்வமைதியான நிலையே மனத்தூய்மைக்கும் வழி வகுக்கின்றது. அமைதியடைந்த தூய்மையான மனம் ஞானயோக சாதனைகளை மேற்கொள்வதற்கு தயாரான நிலையில் இருக்கின்றது.
கர்மயோகத்தை அனுஷ்டானம் செய்யும் யோகி இவ்வாறு சிந்திக்கிறான்: என்னுடைய கருவிகளான உடல், மனம், புத்தி ஆகியவற்றைக் கொண்டு என்னால் சில குறிப்பிட்ட செயல்களை இயல்பாகவே ஆற்ற முடிகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் என்னால் மட்டும் ஆற்ற முடிந்த செயல்கள் அவை. அச்செயல்கள் அறத்தின்பாற்பட்டு இருப்பின் அவை என்னுடைய நன்மைக்காகவும், ஆன்மிக மேன்மைக்காகவும், இவ்வுலகின் நன்மைக்காகவும் பயன்படும். எனவே நான் இச்செயல்களைத் தொடர்ந்து செய்கிறேன். இவற்றினால் வரும் பலன்கள் எனக்கு ஒரு பொருட்டன்று. இச்செயல்கள் மூலம் எந்தப் பலன் வந்தாலும் அவற்றை நான் மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன். இச்செயல்களை கர்மயோகமாக நான் செய்வதற்கு ஒரே காரணம் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான மனத்தூய்மையை எதிர்பார்த்துத்தான்.
ஆன்மிகப்பாதையில் நுழையும் ஒருவன் கர்மத்தைப் புரிவது அவசியமா? அவன் ஏன் நேரடியாக ஞானப்பாதைக்குள் நுழைந்து தன் முழு நேரத்தையும் வேதாந்த நூல்களைக் கற்பதற்கு செலவிடக்கூடாது? அர்ஜூனன் கீதையில் கண்ணன் உபதேசத்தைத் துவங்குமுன் அவனிடம் கோருவதும் இதைத்தான். எனக்கு இந்த ராஜ்யம் வேண்டாம், வெற்றி வேண்டாம், என் உற்றோர் உறவினரைக் கொன்ற பாவமும் வேண்டாம். நான் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியாகப் போகிறேன் என்றுதான் அவன் கிருஷ்ணரிடம் சொல்கிறான்.
ஆனால் கர்மங்களைத் துறப்பது அவ்வளவு எளிதன்று. இயற்கையின் குணங்களால் தூண்டப்பட்டு ஒவ்வொருவரும் ஏதோ ஒரு செயலைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒருவன் ஒன்றும் செய்யாமல் சும்மா அமர்ந்திருந்தாலும், அவனது மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும். எனவே, “செயல் செய்ய மாட்டேன்” என்பது இயற்கைக்கு மாறானது என்று கிருஷ்ணர் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். ஆத்மசம்யம யோகம் என்ற அத்தியாயத்தில் “யார் ஒருவன் தான் செய்யும் செயலின் பலனை எதிர்பார்க்காமல், அதுதான் செய்ய வேண்டிய கடமை என்ற எண்ணத்துடன் கர்மங்களைச் செய்கிறானோ, அவனே உண்மையான துறவி; அவனே உண்மையான யோகி. நெருப்பைத் துறந்தவன் (யாகம் செய்யாமல் இருப்பவன்) மட்டும் துறவி ஆக மாட்டான்; அதே போல, கடமைகளைச் செய்யாமல் சும்மா இருப்பவன் மட்டும் யோகி ஆக மாட்டான் என்று கூறுகின்றார்.
அப்போது தன்னை அறிந்தவன் செயலற்றிருப்பானா? தன்னை அறிந்தவனுக்கு செய்வதற்கென்று எந்தச் செயலுமில்லை. அவன் செய்ய வேண்டிய அனைத்து கர்மத்தையும் செய்து முடித்து விட்டான். அவனை கிருதக் கிருத்யன் என்று கிருஷ்ணர் அழைக்கிறார். எந்தச் செயலிலும் ஈடுபட அவசியமில்லாதபோதும் அவன் தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறான். கிருஷ்ணர் அர்ஜூனனிடம் கூறுகிறார்: “எனக்கு இந்த மூன்று உலகங்களிலும் ஆக வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை. அடைய வேண்டியது ஏதும் இல்லை. இருப்பினும் நான் எப்போதும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறேன்.”
எனவே தன்னை அறிந்த ஞானியும் செயலில் ஈடுபட்டபடியேதான் இருப்பான். அவனது செயலின் தன்மை அவனது பிரகிருதியையும் (உடல், மனம் அமைந்துள்ள தன்மை), பிராரப்தத்தையும் (ஊழ்) பொறுத்து அமையும். அவன் செயல் புரியாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. செயல் புரியலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை ஞானியருக்கு மட்டுமே உண்டு. ஏனெனில் ஒரு ஞானி செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் எப்போதும் காண்கிறான் (கீதை 4.18). ஒரு கர்ம யோகி வெளியில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருப்பான், ஆனால் அவனுடைய மனதிற்குள் எந்தப் பற்றும், “நான்தான் செய்கிறேன்” என்ற அகந்தையும் இருக்காது. கடல் மேலோட்டமாக அலைபாய்ந்தாலும் ஆழத்தில் அமைதியாக இருப்பது போல, அவனது உடல் செயல்படும், ஆனால் ஆத்மா சாட்சியாக, அமைதியாக செயலற்று இருக்கும். இதுவே செயலில் செயலற்ற தன்மை எனப்படுகிறது. அதேநேரம் ஒருவன் வெளியில் ஒன்றும் செய்யாமல் சும்மா அமர்ந்திருக்கலாம். ஆனால் அவனது மனதிற்குள் ஆசைகளும், திட்டங்களும், “நான் ஏன் இதைச் செய்யவில்லை?” என்ற எண்ணங்களும் ஓடிக்கொண்டிருந்தால், அவன் உண்மையில் தீவிரமான செயலில் ஈடுபட்டிருக்கிறான் என்றுதான் பொருள். இதுவே செயலின்மையில் செயலைப் பார்த்தல் எனப்படுகிறது. இதையே கீதை, “கர்மண்யகர்மய: பஷ்யேத் அகர்மணிச கர்மய:” என்கிறது. ஒரு ஞானி செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் எப்போதும் காண்கிறான் (கீதை 4.18).
ஸ்வதர்மம் என்ற கருதுகோள் கீதையில் கிருஷ்ணனால் மிக முக்கியமானதொன்றாக முன்வைக்கப்பட்டு விளக்கப்படுகிறது. தன்னறம் என்று தமிழில் சொல்லலாம். கர்மயோகத்தைப் புரியும் கர்மயோகிக்கு பொது அறம், தன்னறம் இரண்டுமே அவனது கர்மயோகத்தை செயல்படுத்திப் பார்ப்பதற்கான வெளிகளாக இருக்கின்றன. இங்கு பொது அறம் என்பது எல்லாருக்கும் பொதுவானது. இதிலும் இரண்டு விதமான பிரிவுகள் உண்டு. சாமான்ய தர்மம் மற்றும் விஷேஷ தர்மம். சாமான்ய தர்மம் என்பது உலகம் முழுதும் ஒரே விதமாகக் கடைபிடிக்கப்படுவது. நேர்மை, வாய்மை, பிறருக்கு தீங்கு எண்ணாமை, தீங்கு விளைவிக்காமை போன்றவை எல்லாருக்கும் பொதுவான அறங்கள். விசேஷ தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட துறையிலோ அல்லது சூழ்நிலையிலோ கடைபிடிக்கப்படுவது. அவ்விடத்தில் மட்டுமே அது அறமாகக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, தன் நாட்டைக் காப்பதற்காகப் போரில் ஈடுபடுவது ஒரு போர்வீரனுக்குத் தனி அறமாகிறது. போரில் பிற உயிர்களை மாய்ப்பது அவனுக்குப் பாவத்தைக் கொண்டு வராது. விசேஷ தர்மம் என்பது அந்தந்த சூழ்நிலைகளுக்கும், துறைகளுக்கும் உரித்த அறமாக இருக்கின்றது. சாமான்ய தர்மத்துக்கும், விசேஷ தர்மத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது அறத்தை வாழ்வில் கைக்கொள்வதற்கு மிக உதவியாக இருக்கும்.
இந்தப் பின்ணணியில் ஸ்வதர்மம் என்ற கருதுகோளைப் புரிந்து கொள்ள முற்படுவோம். ஸ்வதர்மம் அல்லது தன்னறம் என்பது ஒருவனது இயல்பு, திறன், வாழ்க்கைச் சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து அவனுக்கு அமையும் கடமைகளைக் குறிக்கின்றது. வேதாந்தம் தன்னறம் என்பதையும் இரு தளங்களிலாக வைத்துப்பார்க்கிறது. முதல் வகை என்பது ஒருவனது உள்ளார்ந்த இயல்புகளோடும், சூழ்நிலைகளோடும் ஒத்திசைந்து ஆற்றப்படும் செயல்களைக் குறிக்கின்றது. இரண்டாவது வகையான தன்னறம் என்பது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொருவரின் உள்ளார்ந்த ஏக்கமாக இருப்பது தன்னைப் பிணைத்துள்ள எல்லாத் தளைகளிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்ற இச்சையே. இவ்விச்சை அக விடுதலையை நோக்கி ஒவ்வொருவரையும் செயல் புரியுமாறு தூண்டிக் கொண்டே இருக்கிறது. இந்தச் செயல்களை வேதாந்தம் எல்லாருக்கும் பொதுவான தன்னறமாக முன் வைக்கின்றது.
கர்மயோகத்தின் பாதையில் ஒருவன் தன்னுடைய ஸ்வதர்மத்தைக் கண்டறிதல் இன்றியமையாதது. இங்கு ஸ்வதர்மம் என்பது உலகியல் நோக்கில் மேன்மையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வேதாந்தத்தின் நோக்கில் சரியான பாவனையுடன் செய்யப்படும் எந்தச் செயலும் மேன்மையானதே. ஆனால் ஒருவன் தன் இயல்புக்கும், சூழ்நிலைக்கும் உரிய செயல் என்பதைக் கண்டறிந்து அந்தச் செயலில் ஆழ்ந்து ஈடுபட வேண்டும். அது சமூக சேவையாகவோ, நாவல் எழுதுவதாகவோ, மருத்துவம் பார்ப்பதாகவோ, கணிப்பொறி நிரல் எழுதுவதாகவோ, ஏன் தெருக்கூட்டுவதாகக் கூட இருக்கலாம். ஒருவன் முடிவு செய்ய வேண்டியது இது என்னுடைய தன்னறமா என்பதை மட்டும்தான்.
நம் வாழ்வில் நாம் நம் மனதுக்கும், இயல்புக்கும் ஒவ்வாத பல வேலைகளைச் செய்கிறோம். வாழ்வாதாரத்திற்காகவும், பொருளாதார மேம்பாட்டிற்காகவும் நாம் அவ்வகையான செயல்களை ஆற்றும் கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கிறோம். நம் இயல்புக்கு ஒவ்வாத அச்செயல்களைச் செய்து கொண்டிருக்கும்போதே, உண்மையிலேயே நம் இயல்புக்கும், மனதுக்கும் நெருக்கமான செயல் எது என்று கண்டறிந்து அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒருவன் தன்னுடைய ஸ்வதர்மம் எது என்று கண்டடைவதே கர்மயோகத்தின் முதல்படி. இந்தக் கண்டறிதலிலேயே மனம் மிகுந்த அமைதியையும், மகிழ்ச்சியையும் அடைவதைக் காணலாம். இந்தச் செயலைச் செய்வதால் என் மனம் மகிழ்ச்சியை அடைகிறது; என்னால் திறம்பட இச்செயலை செய்து முடிக்க இயலும்; புகழுக்காகவோ, எவருடைய அங்கீகாரத்துக்காகவோ நான் இச்செயலைச் செய்வதில்லை; செயலின் பலன்களில் அல்ல, செயலை செய்வதிலேயே என்னுடைய மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது என்று எந்தச் செயலை செய்யும்போது ஒருவனால் எண்ண முடிகிறதோ அதுவே அவனது தன்னறம். தன்னறத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் அவனால் கர்மயோகத்தைச் செம்மையாகப் பின்பற்ற இயலும்.
மிகவும் திருத்தமாகச் செய்யப்பட்ட பரதர்மத்தை விட அரைகுறையாகச் செய்யப்பட்ட ஸ்வதர்மமே மேன்மையானது என்று கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். பரதர்மம் என்பது நமக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவது. “ஸ்ரேயான் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்.” நமக்கு சம்பந்தமில்லாத எத்தனை விஷயங்களில் நாம் மூக்கை நுழைத்து அதில் கருத்துச் சொல்கிறோம்? எத்தனை விஷயங்களை நம்மாலும் செய்ய முடியும் என்று அதைச் செய்ய நினைத்துத் தோல்வியுற்றிருக்கிறோம்? இதனால் நமது ஆற்றல் விரயம் ஆவதும், காலம் வீணாகக் கழிவதும் தவிர நமக்கு வேறெந்தப் பலனும் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் தன்னறத்தைக் கண்டறிந்து அதிலேயே ஆழ்ந்து ஈடுபடுதல் மட்டுமே.
ஸ்வதர்மத்தைக் குறித்து சிந்திக்கும்போது, நமது மரபிலுள்ள வர்ணாசிரம முறையைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வது இன்றியமையாதது. வர்ணாசிரம முறையைக் கொண்டிருப்பதால்தான் இந்திய சமூகம் சாதியக் கட்டுமானங்களைக் கொண்டிருக்கிறது என்றும், மேலோன், கீழோன் என்ற பாகுபாடுகளின் இழிநிலை இந்த வர்ணாசிரம முறையால்தான் இந்திய சமூகத்தில் நிலவுகிறது என்றும் பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் அக்கருத்துக்கள் தவறானவை.
வர்ணாசிரமம் என்பதை வர்ணம், ஆசிரமம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். வர்ணம் எனப்படுவது சமூகத்தில் நிலவும் நான்கு பிரிவுகள். அவை பிராம்மணன், க்ஷத்ரியன், வைஷ்யன், சூத்ரன் ஆகிய நான்கும் ஆகும். இந்தப் பிரிவுகள் பிறப்பினடிப்படையில் செய்யப்பட்டதா? இந்து சமூகத்தில் இந்த நான்கு பிரிவுகளும் வேதங்களின் விதியாக முன்வைக்கப்படுகின்றனவா?
கிருஷ்ணர் கீதையில் “சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” என்று கூறுகிறார். அதாவது நான்கு வர்ணங்களும் என்னால் உருவாக்கப்பட்டவை என்று கூறுகிறார். இங்கு கிருஷ்ணன் தன்னை இறைவன் என்ற நிலையில் வைத்துக் கொண்டு இந்தக் கருத்தைக் கூறுகிறார். எனில் இறைவனே மனிதர்களிடத்தில் பிரிவுகளை உண்டாக்கினான் என்றுதானே அர்த்தம்? ஆனால் கிருஷ்ணர் சொல்லும் அடுத்த வரியையும் இங்கு சேர்த்துப் பார்க்க வேண்டும். “குண கர்ம விபாகச:” இந்த நான்கு பிரிவுகளும் ஒருவருடைய குணத்தின் அடிப்படையிலும், அவர் புரிகின்ற கர்மத்தின் அடிப்படையிலும் செய்யப்பட்டவை என்று கிருஷ்ணர் கூறுகிறார். எனவே வேதம், கீதை, இந்துமதம் ஆகியவற்றைப் பொறுத்தவரை பிறப்பினடிப்படையில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே. அவர்களிடையே எந்த விதமான பாகுபாட்டையும் வேதங்கள் காண்பதில்லை. மேலும், வேதாந்தத்தின் அடிப்படையில் எல்லா மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களும், அஃறிணைகளும் கூட சமமாக பாவிக்கப்பட வேண்டியவையே. எல்லாமே ஆத்மாவின் தோற்றங்கள்தாம் என்று அத்வைதம் கூறுகின்றது. அந்த ஆத்மா நானாகவே இருக்கிறேன் என்று அறிந்திருக்கிற ஞானி பார்க்கிற அனைத்தையும் தன்னுடைய வெளிப்பாடாகவே காண்பான். இதை சமத்துவ த்ருஷ்டி என்று கீதை சொல்கிறது. “ஸூஹ்ரூன் மித்ரார் யுதாசீன மத்யஸ் தத்வேஷ்ய பந்துஷூ, சாதுஷ்வசபி பாபேஷூ சமபுத்திர் விசிஷ்யதே” என்பது கீதை வாக்கு. ஒரு ஞானி சமபுத்தியை உடையவன். சமபுத்தி என்பது ஸூஹ்ருத் (நலன் விரும்பிகள்), மித்ர (நண்பர்கள்), அரி: (பகைவர்கள்), உதாசீன:(நடுநிலையாளர்கள்), மத்யஸ்த: (சமரசம் புரிபவர்கள்), த்வேஷ்ய (வெறுப்பவர்கள்), பந்து: (உறவினர்கள்), சாது: (துறவிகள்), பாபி:( தீயவர்கள்) ஆகிய அனைவரையும் சமமாக பாவித்தலே ஆகும்.
எல்லாவற்றையும் சமமாக பாவித்தலே நமது கலாசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது. அங்ஙனமிருக்க, இந்துமதம் சாதிபாகுபாட்டை வலியுறுத்துகிறது, மேலோன் கீழோன் போன்ற வேறுபாடுகளை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டுதல் தவறான புரிதலில் இருந்து எழுவதாகும். இருப்பினும் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருகின்றனவே என்று வாதிடுவோருக்கு இந்தக் கட்டுரைத் தொடரில் பதிலளிக்க இயலாது. வரலாற்று மற்றும் சமூகவியல் ஆய்வாளர்களால் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் அவை. இத்தொடரின் நோக்கம் அத்வைத வேதாந்தம் எனும் தத்துவத்தை விரிவாக அறிமுகப்படுத்துவதே.
யோகம் என்ற சொல்லுக்குப் பலவிதமான பொருள் உண்டு. கீதையில் யோகம் என்ற சொல்லுக்கு ஓரிடத்தில் சமத்வம் என்றே பொருள் கொள்கிறார். எல்லாவற்றையும் சமமாக பாவிப்பது என்பது ஒரு விளக்கம். இது ஞானியின் நிலை. கிருஷ்ணர் “சமத்வம் யோக உச்யதே” என்று ஓரிடத்தில் கூறுகிறார். இங்கு கர்மயோகத்தில் ஈடுபடும் சாதகனைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகிறார். எவனொருவன் கர்மத்திலோ, அதன் பலனிலோ பற்றின்றி, வெற்றி, தோல்விகளை சமமாகப் பாவித்து செயல் புரிந்து வருகிறானோ அந்த சமத்வமே யோகம் எனப்படுகிறது என்று அவர் கூறுகிறார். எனவே கர்மயோகம் என்பது ஒருவன் செயல்புரியும்போது மேற்கொள்ளும் சமத்வ பாவனையேதான்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
