துயரறுத்தலே துயரமோ?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
世の中よ
道こそなけれ
思ひ入る
山の奥にも
鹿ぞ鳴くなる

கனா எழுத்துருக்களில்
よのなかよ
みちこそなけれ
おもひいる
やまのおくにも
しかぞなくなる

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் தொஷினாரி

காலம்: கி.பி 1114-1204.

முந்தைய பாடலில் சென்சாய்ஷூ எனும் தொகுப்பைத் தொகுத்தார் என்று பார்த்தோமல்லவா? அவர்தான் இவர். இத்தொடரைத் தொகுத்த சதாய்யேவின் தந்தை. பேரரசர் இரண்டாம் தொபாவின் அரசவையில் தலைமைப் புலவராக இருந்தவர். சமகாலத்தில் பெரும்புகழ் பெற்றிருந்தார். இன்னும் உயிருடன் வாழும் முன்னாள் அரசியரின் அரண்மனைகளை நிர்வகிக்கும் அதிகாரியாகவும் பணியாற்றினார். நிர்வாகத் திறமையும் இலக்கியத் திறனும் ஒருங்கே பெற்றிருந்த மிகச்சிலருள் இவரும் ஒருவர். ஆயிரக்கணக்கான கவிதைப் போட்டிகளுக்கு நடுவராக இருந்தவர். போட்டிகளில் இவர் தேர்ந்தெடுத்த 2000க்கும் மேற்பட்ட பாடல்கள் பல்வேறு ஜப்பானிய இலக்கியங்களில் இடம்பெற்று இவரது தேர்வின் தரத்தை மெய்ப்பித்தன. 

இத்தொடரின் 74வது பாடலின் (கேட்டதும் கிடைத்ததும்) ஆசிரியர் தொஷியோரி புதிதாக ஒரு பாவகையை அறிமுகப்படுத்தினார் என்று பார்த்தோமல்லவா? இவரது செய்யுள்கள் எல்லாமே அப்பாவகையைப் பின்பற்றியவைதான். இதனாலேயே தொஷியோரியின் பாவகைகளுக்கு உயரிய அங்கீகாரம் கிடைத்தது எனலாம். கி.பி. 1197 முதல் 1201 வரை இயற்றப்பட்டு வந்த பாவகைகளைப் பற்றிய இவரது நூலான கோரெய் ஃபுதெய்ஷோ இன்றளவும் மிகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 450 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தனிமை, விண்ணழகு, மர்மம் (அமானுஷ்யம்) போன்ற பொருண்மைகளில் அமைந்தவை.

பாடுபொருள்: வாழ்வில் துயரம் எப்போதும் தொடரும்

பாடலின் பொருள்: வாழ்வின் துயரங்களிலிருந்து விலகியிருக்க விரும்பினாலும் மலைக்குடிலுக்குத் தொலைவில் கேட்கிறது அடிபட்ட மானின் துயரக்குரல்.

வாழ்வில் துயரை விட்டு விலகியோ விலக்கியோ இருக்க இயலாது என்பதை விளக்கும் ஓர் எளிய பாடல். இப்பாடலை கி.பி. 1140ல் இயற்றியபோது இவருக்கு வயது 26. இதுபோன்ற துறவு மனப்பான்மையைப் பெற 26 வயது என்பது மிகவும் இளம் வயது என்றாலும் இவர் அதைப் பெற்றதற்குக் காரணம் இவரது உற்ற தோழர் சாய்கியோ தனது 22ம் வயதில் துறவறம் பூண்டதுதான். இவரது தோழர்கள் இன்னும் சிலரும் ஏறத்தாழ இதே வயதில் துறவறம் பூண்டிருந்தாலும் இவர் கி.பி. 1176ல் தனது 62வது வயதில்தான் துறவறம் பூண்டு தலைநகர் கியோத்தோவிலுள்ள ஃபுஷிமி என்ற இடத்திலுள்ள கோயிலில் துறவியாக வாழத்தொடங்கித் தனது 90வது வயதில் இறந்தார்.

வெண்பா:

அலத்தல் தவிர்க்கத் துறவறம் பூண்டும்
உலத்தல் அரியது என்றே – விலகினும்
அங்கும் இருக்கும் பிறிதோர் துயரென
என்றும் தொடரும் துயர்


இன்று போல் நாளை இல்லை!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
ながらへば
またこのごろや
しのばれむ
憂しと見し世ぞ
今は恋しき

கனா எழுத்துருக்களில்
ながらへば
またこのごろや
しのばれむ
うしとみしよぞ
いまはこひしき

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் கியோசுகே

காலம்: கி.பி 1104-1177.

இத்தொடரின் 79வது பாடலின் (முகிலிடை ஒளிக்கசிவு) ஆசிரியர் அகிசுகேவின் இரண்டாவது மகன் இவர். சுமார் 30ம் வயது வரை தந்தையாருடன் ஒரு சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது. வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. பேரரசர் சுதொகுவின் ஆணைக்கிணங்க இவரது தந்தையார் அகிசுகே ஷிக்காஷூ தொகுப்பை உருவாக்கினார் என்று பார்த்தோமல்லவா? அதன் பின்னர் பேரரசர் நிஜோ இவரிடம் அதன் தொடர்ச்சியைத் தொகுக்க ஆணையிட்டார். 

ஜப்பானிய இடைக்கால வரலாற்றில் ஒவ்வொரு புலவரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் அங்கீகாரம்தான் இந்தத் தொகுக்கும் வாய்ப்பு. கியோசுகே மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் ஷொக்குஷிக்காஷு என்று பெயரிட்டுத் தொகுக்கத் தொடங்கினார். ஆனால் கியோசுகே தொகுத்து முடிப்பதற்குமுன் கி.பி. 1165லேயே பேரரசர் நிஜோ மரணமடைந்துவிட்டதால் தொகுப்பு நிறைவு பெற்ற பின்பும் அரசவையில் அரங்கேறாமலும் இலக்கிய வரலாற்றில் அதிகாரபூர்வமாக இடம்பிடிக்காமலும் போயிற்று. இதனால் இவர் மிகவும் மனமுடைந்தார். இருப்பினும் அதற்கு முன்பே ஓகிஷோ, வகா தோமோஷோ, ஃபுகுரோ ஜோஷி போன்ற தொகுப்புகளைத் தொகுத்திருந்தார்.

பாடுபொருள்: மலரும் நினைவுகளின் சுகம்

பாடலின் பொருள்: இன்னும் நீண்டகாலம் நான் வாழ்ந்தால் என் குழந்தைப்பருவத் துயரங்களின் வலி இப்போது மலரும் நினைவுகளாக இருப்பதுபோல் இப்போது நான் படும் துயரங்களின் வலியும் எதிர்காலத்தில் குறைந்திருக்குமோ?

வாழ்வின் துயரங்களின் வலியைக் கூறும் எளிய இப்பாடல் இவரது வாழ்வின் ஐம்பதுகளின் பிற்பகுதியில் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்றுபோல் இன்று இல்லை; இன்றுபோல் நாளை இல்லை என்ற இக்காலப் பாடலின் கருத்தை ஒட்டியிருக்கிறது. பேரரசர் நிஜோவின் மறைவால் தடைபட்டுப்போன ஷொக்குஷிக்காஷூவினால் மனமுடைந்தபோது இப்பாடலை எழுதியிருக்கலாம் என்றும் இவரது சமகாலத்திய சீனக்கவிஞர் பைஜுயி என்பவரின் ஹக்குஷூ மொன்ஜு என்ற தொகுப்பில் உள்ள பாடல் ஒன்றை அடியொற்றி இப்பாடலை இயற்றியிருக்கலாம் என்றும் உரையாசிரியர்கள் கருதுகிறார்கள்.

வெண்பா:

வலியது எண்ணிட எண்ணிடத் துன்பம்
சலிப்பது போன்றே பிறகு – சிலிர்க்கும்
நிலையது காட்டிடும் வாழ்வது கூறிடும்
என்றும் நினைவே சுகம்

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)


ஜப்பானியப் பழங்குறுநூறு

மைக்குழற் செறிவன்ன காதல் உள்ளத்தில் உள்ளேனா?

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.