மைக்குழற் செறிவன்ன காதல்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
長からむ
心も知らず
黒髪の
乱れてけさは
物をこそ思へ

கனா எழுத்துருக்களில்
ながからむ
こころもしらず
くろかみの
みだれてけさは
ものをこそおもへ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: சேடிப்பெண் ஹொரிகவா

காலம்: கி.பி 12ம் நூற்றாண்டு.

பேரரசர் ஹொரிகவாவின் மகன் பேரரசர் தொபாவின் பட்டத்தரசி தமாக்கோவின் உதவியாளராக இருந்தவர் இவர். இத்தொடரின் 77வது பாடலை (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!) இயற்றிய பேரரசர் சுதொகுவின் வளர்ப்பு அன்னை. கி.பி 1142ல் பேரரசர் சுதொகு பதவியிறக்கம் செய்யப்பட்டபோது தான் கட்டிய ஹோகொங்கோயின் கோயிலிலேயே இவர் புத்தமதத்தைத் தழுவித் துறவியானார். ஹோகென் கலவரத்தின் முடிவில் தோல்வியடைந்த பேரரசர் சுதொக்கு சனுக்கி மாகாணத்துக்குக் கடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறந்த கவிஞரும் ஆவார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 66 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையிலும் 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

பாடுபொருள்: காதலின் நிலையற்ற தன்மை

பாடலின் பொருள்: நேற்றிரவு மிகவும் மகிழ்வாக இருந்ததைத் தொடர்ந்து என்னை விட்டுப் பிரியவே மாட்டேன் என்று கூறுகிறாய். நேற்றிரவு என் கருங்கூந்தலில் ஏற்பட்ட சிக்கல்கள் எப்போது அவிழும் என்று தெரியாததுபோல் உன் அன்பும் எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியாது.

அரண்மனைக் காதல்கள் குறுகியகால வாழ்வைக் கொண்டவை என்பதை உணர்த்தும் இன்னோர் எளிய பாடல். மனைவியின் அல்லது காதலியின் வீட்டில் இரவு வந்து தங்கும் கணவன் அல்லது காதலன் காலையில் தன் வீட்டுக்குச் சென்றதும் மகிழ்வை வெளிப்படுத்தும் கவிதையைத் தூதாக அனுப்புவர் என்று முன்பு சில பாடல்களில் பார்த்தோமல்லவா? அதுபோல் அனுப்பப்பட்ட ஒரு கவிதைக்கான மறுமொழிதான் இப்பாடல். 

ஜப்பானிய இலக்கியங்களில் கருங்கூந்தல் என்பது சிக்கலான மனநிலைக்கு உவமையாகக் கூறப்படுகிறது. இடைக்கால இலக்கியங்களில் அவ்வளவாக இவ்வுவமை பயன்படுத்தப்படாவிட்டாலும் பிற்காலத்தில் 19ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற கவிஞரான யொசானோ அகிக்கோவுக்குப் பின் பெருமளவில் வழக்கத்திற்கு வந்தது.

வெண்பா:

இரவினில் சேர்ந்து மகிழ்ந்திட உந்தன்
வரவினில் துய்த்தே விரிப்பில் – பரவிடும்
மைக்குழற் சிக்கல் அவிழ்வதறி யார்போல்
எதுவரை வாழும்உன் அன்பு?


குயிலிசை போதுமே!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
ほととぎす
鳴きつる方を
ながむれば
ただありあけの
月ぞ残れる

கனா எழுத்துருக்களில்
ほととぎす
なきつるかたを
ながむれば
ただありあけの
つきぞのこれる

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: அமைச்சர் சனேததா

காலம்: கி.பி 1139-1191.

பேரரசர் இரண்டாம் ஷிராகவா மற்றும் அவரது மகன் பேரரசர் நிஜோ ஆகியோரின் அரசவையில் வலங்கைப் பிரிவின் அமைச்சராக இருந்த கின்யோஷியின் மகன் இவர். கி.பி. 1161ல் இவரது தந்தை இறப்பதற்கு முன்பிருந்தே (கி.பி. 1156லிருந்தே) அரண்மனையில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். இவர் ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த இவர் கி.பி. 1165ம் ஆண்டுவாக்கில் தாய்ரா வம்சம் அரண்மனையில் அதிகாரத்தைப் பெறத் தொடங்கியபோது பதவியை இழந்தார். பின்னர் கி.பி. 1189ம் ஆண்டு தாய்ரா வம்சம் சரிவைச் சந்திக்கத் தொடங்கியபோது மீண்டும் இடங்கைப் பிரிவின் அமைச்சராக அமர்த்தப்பட்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டுப் பதவியைத் துறந்து தலைமுடியை மழித்துத் துறவியானார். பின்னர் சில மாதங்களிலேயே இறந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 78 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: கூவிய குயிலைக் காண நினைத்து ஏமாறுதல்

பாடலின் பொருள்: கோடையின் வரவைக் கட்டியம் கூறி அதிகாலையில் கூவிய குயிலைக் காண ஓடிவந்தால், கிடைத்ததென்னவோ விடியல் நிலவின் அழகே.

ஜப்பானியப் பண்பாட்டின் கூறு ஒன்றைப் பொதிந்து வைத்துள்ள இப்பாடலைப் புரிந்துகொள்ள இடைக்கால ஜப்பானில் நிலவிவந்த ஒரு நம்பிக்கையைத் தெரிந்துகொள்ளவேண்டும். மே மாதங்களில் ஹொதொதொகிசு என்றொரு குயிலினம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வலசை வரும். மே மாதம் என்பது ஜப்பானில் வசந்தகாலம் முடிந்து கோடை தொடங்குவதற்குச் சற்று முன்னர் என்பதால் இக்குயிலின் முதல் கூவல் கோடையின் வரவை அறிவிப்பதற்கானது என்று ஜப்பானியர்கள் காத்திருப்பார்கள். இப்படித்தான் இப்பாடலாசிரியரும் அவ்வாண்டின் முதல் கூவலைக் கேட்டுக் குயிலைக் காண ஆவலோடு ஓடிவந்து பார்த்திருக்கிறார். ஆனால் அதற்குள் குயில் பறந்துவிட, அழகிய விடிகாலை நிலவின் தரிசனம் கிட்டியிருக்கிறது.

வெண்பா:

வசந்தமும் தீருங்கால் தேன்முதற் கூவல்
உசவுதல் ஈர்க்க விரைவாய் – முசற்றிசை
காணின் குயில்முகம் அன்றியே கண்டேன்
அழகாய் விடியல் நிலவு

உசவுதல் – செவியுறுதல் (உசாவுதல்)
முசற்றிசை – வடகீழ்த்திசை (முயற்றிசை)

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

ஜப்பானியப் பழங்குறுநூறு

இடம்பெயரும் புள்ளினங்காள்! துயரறுத்தலே துயரமோ?

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “மைக்குழற் செறிவன்ன காதல்”

  1. தொடர்ந்து ஜப்பானியக் கவிதைகளை மொழிபெயர்த்துத் தரும் கமலக்கண்ணனின் சீரிய பணி மிகவும் பாராட்டுக்குரியது. அழகு குறையாத இனிய தமிழில் இக் கவிதைகளைப் படிக்கும்போது நற்றிணையும் குறுந்தொகையும் படிப்பது போன்ற இனிமை நெஞ்சைத் தொடுகிறது. – இராய செல்லப்பா

    1. தங்களின் கனிவான பாராட்டுக்கு நன்றி ஐயா. இதுபோன்ற பாராட்டல்கள் அடுத்தடுத்த செய்யுள்களை மேலும் செறிவூட்ட ஊக்கமளிக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.