குமார சம்பவம் மஹா காவ்யம் – 4

அத்யாயம்-4

மூர்ச்சையடைந்த ரதி கண் விழித்ததும், தாங்க முடியாத வேதனை அடைந்தாள். கண்கள் பார்க்கும் சக்தியையே இழந்தாற் போல இருந்தன. நடந்ததை எண்ணிப் பார்த்தவள், காமனும் கூட மரிப்பானா என்ற நம்பவே முடியாமல் திகைத்தாள். ஹா என் உயிருக்குயிரான நாதா!  சுற்று முற்றும் பார்த்தவள் கண்ணில் பட்டது மனித  உடலின் வடிவில் கிடந்த காமனின் சாம்பல் – பஸ்மம் மட்டுமே. ஸ்ரீ சங்கரன் கண்  விழித்த பின் நடந்ததை மனதில் கொண்டு வர முயற்சித்தாள்.  புழுதியியிலே விழுந்து புரண்டாள். பூமியை அணைத்தபடி ஓவென்று கதறினாள்.  அழகனான காமன் தன் கணவனாக இருக்க சுகமாகவே இருந்து பழகியவள், இந்த நிலையில் உன்னைப் பார்த்தும் என் ஹ்ருதயம் வெடிக்கவில்லையே, ஆ பெண்களின் மனம் என்ன கல்லால் ஆனதா என்றாள். 

உன்னை அண்டியே வாழ்ந்தவள். உலகில் வேறு எதையும் அறிந்து கொள்ளவில்லையே,  எப்படி வாழ்வேன்?  வேகமாக வந்த வெள்ளம், நதியின் கரைகளை உடைத்துக் கொண்டு போகும் பொழுது அதில் இருந்த கமலங்களையா விட்டு வைக்கும் ? க்ஷண நேரத்தில் நான் அந்த கமலங்கள் போல தூக்கி எறியப் பட்டு விட்டேன். 

எந்த நிலையிலும் என் கோரிக்கையை நீ நிறை வேற்றாமல் இருந்ததில்லையே. நானும் தவறாக எதுவும் செய்யவில்லையே.  ஏன் என் எதிரில் வராமல் என்னை வருத்துகிறாய். 

வேறு ஒருவள் பெயரைச் சொன்னாய் என்பதற்காக என் மேகலா -ஒட்டியானம் என்ற ஆபரணத்தால் கட்டியதாலா, என் குண்டலங்கள் உன் மேல் காயப்படுத்தினவா, அதனால் கோபித்தாயா? உன் ஹ்ருதயத்தில் வசிப்பவள் என்று மற்றவர்களிடம் சொல்வாயே, அது வெறும் வார்த்தைக்காக சொன்னதா? தற்சமயம்  உடலே இன்றி அனங்கனாக கிடக்கிறாயே. பரலோகத்தில் புது பெண்கள் கிடைப்பார்கள் என்று என்னைத் துறந்து விட்டாயா?  நான் மட்டுமா, உலகம் முழுவதும் உன் அதீனத்தில் தானே சுகம் அனுபவிக்கிறார்கள். 

உன்னை நம்பித்தானே இளம் பெண்கள் தங்கள் நாயகர்களைத் தேடிச் செல்வர்.  இருளானாலும் பயப்படாமல் செல்வர். இனி இந்த ஆண் பெண் பரஸ்பரம் அன்பு செலுத்துவது கூட இயலாதே. உலகம் என்ன ஆகும்? 

காமன் என்று ஒருவன் இருந்தான் என்று உன் பெயர் மட்டுமே உலகில் எஞ்சி இருக்கப் போகிறது. உனக்கு ஈடாக வேறு எவர் வரமுடியும்?  பசுமையும், இளம் சிவப்புமாக மாமரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள் உன்னைத் தேடப் போகின்றன.  உன் வில்லின் நாணாக இருக்கும் வண்டுகள் எங்கு செல்லும்?  என்னிடம் வந்து கேட்டால் என்ன சொல்வேன்?  நினைத்து நினைத்து நான் இழந்தது என் வாழ்வு மட்டுமா, ஒவ்வொரு நாளும் நாம் வாழ்ந்த வாழ்க்கையை அணு அணுவாக நினைவில் வைத்திருக்கிறேனே,  அதுவே என்னை வாட்டுகிறதே. நீ சூட்டி விட்ட மலர்கள் என் தலையில் இன்னமும் இருக்கின்றன. கைகளிலும் மற்ற அங்கங்களிலும் நீ பூட்டி விட்ட ஆபரணங்கள் அந்தந்த சந்தர்பத்தை நினவுறுத்துகின்றன. 

எந்த அளவு மென்மையாக என்னை அரவணைத்தாய் என்பதை நினைத்தால் என் மனமே உடைந்து விடும் போல வலிக்கிறது. என்னை வருந்தும் படியாக நீ விட்டதேயில்லையே. பாதங்களில் லாக்ஷா ரஸம் இல்லாமல் நான் இருந்ததேயில்லையே. இனி யார் அதை கவனிக்கப் போகிறார்கள். 

இதோ நானும் தீக்குளித்து உன் அருகில் வந்து விடுகிறேன். விட்டில் பூச்சிகள் செய்வதில்லையா. தெரிந்தே தன்  பிரியமான நெருப்பில் விழுகின்றனவே. மற்றவர்கள் இறந்தால் உடல் இருக்கும். அது கூட இல்லையே.

வளைந்த வில்லை சீராக்கி கொண்டு, கால் முட்டியில் வைத்துக் கொண்டு, வசந்தனைப் பார்த்து, பின் என்னையும் பார்த்து சிரித்தாயே, அது கண் முன் நிற்கிறது. உனக்காக பூக்களைத் தொடுத்து வில்லை செய்து கொடுத்து அனவரதமும் உடன் இருக்கும் வசந்தன், அவனையும் காணோமே,  பிரிய சகா, உன்னை பிரியமுடியாமல் உடன் வந்து விட்டானா?  இதைக் கேட்ட வசந்தன் வந்தான். பதியை இழந்து வருந்தி புலம்பும் அவளுக்கு சமாதானம் சொல்ல முயன்றான். 

அவனைக் கண்டதும் ரதி வாய் விட்டு அழுதாள்.  மார்பில் அடித்துக் கொண்டு அலறினாள். தன் மனதிற்கு உகந்த உறவினர்களைக் கண்டால், வடிகால் கிடைத்தது போல  துக்கம் அதிகமாவது உலகில் இயல்பே.  வசந்தா! இதோ பார்,  உன் சகாவின் நிலைமையைப் பார்.   வெறும் சாம்பலாக, பறக்கிறது.  பூமியில் இறைகிறது.  நினைவில் இருப்பவன் ஸ்மர என்றும் மனோபவன் என்றும் உன் பெயர். உன் சகா வந்திருக்கிறானே பார்த்து வரவேற்று பேசு.  மனைவி மக்களை விட நண்பன் அதிக நெருக்கமானவன். இப்படி ஒரு நெருங்கிய நண்பன் யாருக்கு கிடைப்பான்?  இவன் அருகில் இருந்ததால் தானே உன்னால் உலகம் முழுவதும் தாமரைத் தண்டு போன்று மருதுவான உன்  ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு உலகையே ஆக்ரமிக்க முடிந்தது.  

வசந்தா! உன் சகா போனவன் தான்.  இனி திரும்பப் போவதில்லை. என் மேல் அவன் தூசி தான் படிந்திருக்கிறது.  எரியும் விளக்கை அணைத்து விட்ட காற்று  திரியை விட்டுச் செல்வது போல என்னை விட்டு விட்டு போய் விட்டான்.  வசந்தா! விதி இவ்வளவு வலியதா? காமன், மதனன்  என்று  உயர்வாக சொல்லியும், என்னில் பாதி என் மனைவி என்றும் சொல்லி என்னை நம்ப வைத்து, உதறி விட்டுப் போவானா ? மிகவும் நம்பி சால மரத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த கொடி, மரத்தை யானை அசைத்து தள்ளிய பொழுது கீழே கிடப்பது போல என் கதி ஆகி விட்டதே.  வசந்தா! நீ ஒரு உதவி செய்வாயா? என்னையும் என் பதியிடம் சேர்ப்பித்து விடு. உறவினனாக இந்த உதவியைச் செய்.  

சந்திரிகா – சந்திரனின் கிரணம் சந்திரனின் ஒளியால் தானும் ஒளி பெற்று புகழப் படுகிறது.  சந்திரன் அஸ்தமித்தால் தானும் உடன் சென்று விடுகிறது.  மின்னல் மேகத்தினால் தோன்றி அத்துடனேயே மறைகிறது. பெண்கள் மட்டும் என்ன விதி விலக்கா? பதியையே நம்பி வாழும் பத்னிகளும் உடன் செல்வது தானே நியாயம்?  நானும் என் பிரியமான பதியினால் அனுபவிக்கப் பட்டவள். அவனாலேயே, அவனுக்காகவே வாழ்ந்தவள். இந்த அக்னி என் கண்ணுக்கு புத்தம் புது தளிர் போல தெரிகிறது. இதில் வீழ்ந்து என் உடலை தியாகம் செய்கிறேன்.

வசந்தா! நீ அறிவாய். எங்கள் மண வாழ்க்கையில் நீ நிறைய உபகாரம் செய்திருக்கிறாய். அதே போல இப்பொழுது என் விருப்பத்தை நிறைவேற்று.  எனக்கான சிதையை தயார் செய்.  நான் இல்லாமல் உன் சகா என்ன செய்வான். அவனுக்காக செய். உனக்கும் ஒரு வசதி, இருவருக்கும் சேர்த்து நீர்க் கடன்  செய்வாய்.  அந்த நீரை பரலோகத்திலும் இருவருமாக ஏற்போம்.  வருடாந்திர திவசம் செய்யும் பொழுது, மாம்பூவை கண்டிப்பாக சேர்த்துக் கொள்.  அது அவனுக்கு பிடித்தமானது. 

இப்படி சொல்லிக் கொண்டே, தன் தேகத்தை தியாகம் செய்யத் துணிந்து விட்டவளை வானத்தில் இருந்து ஒரு குரல் கலைத்தது.  வற்றி விட்ட குளத்தில் இருக்கும் மீன், உயிரே  போகும் நிலையில் மழை ஜலம் ஒரு துளி தன் மேல் விழுந்தால் எப்படி மகிழுமோ அது போல மகிழ்ந்தாள். 

மலர் அம்பும் வில்லும் உடையவனின் மனைவியே, ரதியே ! உன் கணவன் வெகு நாட்கள் இப்படி அணுக முடியாதவனாக இருக்க மாட்டான். சற்று பொறு. உன்னிடம் வந்து விடுவான்.  உன் கணவன் ஸ்ரீ சங்கரனின் தவத்தை கலைத்ததால் வந்த கோபத்துடன் பார்த்த பார்வையால் விட்டில் பூச்சி போல் எரிந்து விழ்ந்தான். இது ப்ரும்மாவின் செயல். பரமேஸ்வரனுடைய மகனை தேவ காரியத்திற்காக பிறக்கச் செய்ய வேண்டும். அதனால் இந்திரிய நிக்ரஹம் செய்து தவமே செய்து கொண்டிருந்தவரை  எழுப்ப உன் பதியை அனுப்பினார்.  அகாலத்தில் எய்த செயல் அதனால் ஈஸ்வரன் தண்டித்தார்.  ப்ரக்ருதி என்ற இயற்கையை மீறக் கூடாது என்பதும் ஒரு காரணம். 

அவர் பார்வதியை மணந்து கொள்வார்.  அவளும் தவம் செய்து அவரை பெறுவார். இப்படி மனம் ஒருமித்து அவர்கள் இணையும் சமயம் காமன் உயிர் பெறுவான்.  மேகத்தில் மின்னல் இணைந்து மழையை பொழிவிக்கிறது. அது போல மன அடக்கத்துடன்  உறுதியாக இருப்பவரும், மனதில் கருணை உடையவரே. (கல்லுக்குள் ஈரம் என்பதன் காளிதாஸனின் சம்ஸ்க்ருத சொல் -अशनेरमृतम् ) அதனால் ஸோபனே! பெண்ணே! உன்னை காப்பாற்றிக் கொள்.  ஆதவன் குடித்த ஜலமே, தபித்த வேணிற்காலம் முடிந்த பின்,  மழையாக, பின் நதியாக ப்ரவகித்து உலகுக்கு நன்மையைச் செய்கிறது. 

இவ்வாறு கண்ணுக்குத் தெரியாத அசரீரியைக் கேட்ட  வசந்தனும் மனம் மகிழ்ந்தான்.   ரதியை தகுந்த வார்த்தைகளால் சமாதானப் படுத்தினான்.  அவளை தேகத் தியாகம் செய்வதில் இருந்து திசை திருப்ப முடிந்தது. மதனனின் பத்னியான ரதியும் ஆதவனின் ஓளியில் மறைந்து தெளிவாகத் தெரியாத சந்திரனின் கிரணங்கள் அஸ்தமயம் ஆன பின், பிரகாசமாகத் தெரிவதை எதிர்பார்ப்பது போல  தன் வாழ்விலும் வசந்தம்- நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கை வரப் பெற்றாள்.

(இது வரை ஸ்ரீ காளிதாஸனின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில், ரதி விலாபோ ரதி விலாபோ – ரதியின் புலம்பல் என்ற நான்காவது அத்யாயம்)

குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம் – 3 குமார சம்பவம் மஹா காவ்யம் – 5

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.