குமார சம்பவம் மஹா காவ்யம் – 3

அத்யாயம்-3

தேவர்களுடன் இருந்த இந்திரன் காமனை வரவேற்றான். மரியாதை நிமித்தமாக ஆனாலும் வந்தவரை வரவேற்பது ஒரே போல இருக்காது என்பது நாம் அறிவோம்.  வாஸவன் ஆசனம் கொடுத்து இங்கு அமர் எனச் சொல்லவும், வணங்கி விட்டு அந்த ஆசனத்தில் அமர்ந்தான்.  வழக்கத்துக்கு மாறான  மதிப்பும் வரவேற்பும்- அது நல்லதல்லவே என ஒரு சந்தேகம் தோன்ற, 

ஆணையிடுங்கள் தலைவரே! நீங்கள் விவரம் அறிந்தவர். மனித உலகில் உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?  நீங்களோ அந்த:கரணம், மனதில் நினைப்பதை அறிந்து கொள்ளும் சக்தி உடையவர். என்னை நினைத்து அழைத்த காரணம் எதுவானாலும் செய்ய சித்தமாக இருக்கிறேன் என்றான்.

உங்கள் பதவியை அபகரிக்கும் எண்ணத்துடன் யார் தவம் செய்கிறார்களோ, அவர்களை நான் திசை திருப்பி விடுவேன்.  பொறாமையால் அல்லது பேராசையால் எவர் கடுமையான தவம் செய்து வருகிறனோ, அவன் பெயரைச் சொல்லுங்கள், ப்ரபோ!  யாரானாலும் என் அத்புதமான இந்த வில்லில் அம்பை பூட்டி காயப் படுத்தி உங்களை சரணடையச் செய்கிறேன்.
உங்கள் சம்மதம் இல்லாமல் யார் அது?   மறு பிறவி வேண்டேன் என்று பயத்துடன் வணங்கி நிற்கிறானா, முக்தி மார்கத்தை தேடுகிறானா? அவனை பெண்களின் அழகிய புருவங்களில் மயங்கி வம் என்ற இந்த உலக வாழ்க்கையிலேயே உழலச் செய்து விடுகிறேன்.

ஹே ப்ரபோ! சுக்ராசாரியாரிடம் நீதி சாஸ்திரம் படித்த ஞானியோ, (அசுரர்களின் குரு சுக்ராசாரியார் – இப்படிச் சொன்னதால் சுக்ராசாரியாரின் மதிப்பு தெரிகிறது. அவரை எதிர்த்து நிற்பதே ஒரு சவால் தான் என அறியலாம் )  எந்த சத்ருவை, அர்த்த, தர்மங்களை நாசம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், மழை காலத்து நதி நீர் கரையை உடைத்துக் கொண்டு போவது போல செய்து விடுகிறேன்.

தன் கணவனுடன் மனம் ஒருமித்து வாழும் எந்த கற்புக்கரசியான பெண்ணை அவள் அழகில் மயங்கி அபகரிக்க வேண்டும், அவளே வந்து உங்களை ஆலிங்கணம் செய்து ஏற்றுக் கொள்ளச் செய்கிறேன். இதே போல இந்திரனை புகழ்ந்து பேசுவது போலவே அவனது மோகத்தைப் பறை சாற்றுவது போல அவன் பேசினான்.  வீரனே, தயக்கமின்றி ஆணையிடுங்கள். உங்கள் வஜ்ராயுதம் தேவையில்லை. அதற்கு ஓய்வு கொடுங்கள். என் புஜ பலத்தால் எந்த அசுர சக்தியானாலும் நடுங்கச் செய்து விடுகிறேன். என் வில்லும் அம்பும் அசுரனுடைய வீட்டுப் பெண்களையும் பயந்து நடுங்க செய்து விடுகிறேன்.

ஹே ப்ரபோ! என் பாணங்கள் பூக்களால் ஆனது. மென்மையானது. ஆனால் அதற்காக யோசிக்க வேண்டாம். என் மித்ரன் வசந்தன். அவனுடன்  பினாக பாணி – பினாகம் என்ற வில்லை கையில் ஏந்திய  மகேசனையே எதிர்த்து ஜயித்து விடுவேன் (பினாக பாணி உண்மையில் ஈசனுடைய பல ரூபங்களில் மிக பயங்கரமானவர் )  அவருக்கே என் எதிரில் நிற்க தைரியம் வராது மற்றவர்கள் எம்மாத்திரம், என்று தற் பெருமை பேசிக் கொண்டே போனான். 

இந்திரன் செய்வதறியாது ஆசனத்தில் காலை மாற்றி வைத்துக் கொண்டு பதில் சொன்னான். காமனின் அறிவற்ற பேச்சினால் அலுப்படைந்தவன் போல இருந்தான்.

சகே! நீ அனைவருக்கும் சகா என்றே சொல்லப் படுபவன். உன்னை யார் வெறுப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். நீ சொல்வது சரியே.  உன் வில்லுக்கு சமமான வில் யாரிடமும் இல்லைதான். என் வஜ்ரமோ, உன் அஸ்திரமோ,  கடுமையாக  தவம் செய்து பெற்ற வீர்யம் உள்ள  ரிஷிகளிடம் கூட குறி தவறாது அடிக்கக் கூடியதே. அதிலும் உன் அஸ்திரம்  எங்கும் செல்லக் கூடியது. தன் செயலை தவறாது முடிக்காமல் திரும்பாது என்று அறிவேன். அதனால் தான் ஒரு பெரிய காரியத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.  எனக்கு சமமானவன் என்பதாலும், நீ இந்த செயலை செய்வாய் என்பதில்  எனக்கு நம்பிக்கை இருப்பதாலும் தான்  உன்னை வரவழைத்தேன்.   மஹா விஷ்ணு சேஷத்தின் தலையில் பூ பாரத்தை அது தாங்கக் கூடியதே என்று தெரிந்து தானே வைத்துள்ளார். 

 நீ மறுக்க மாட்டாய் என்று நம்பிக்கையுடன் சொல்கிறேன்.  மகேசன் தவம் செய்கிறார் என்பதை அறிவாய். உன் பாணத்தை அவர் மேல் பிரயோகி. நமக்கான யாக பாகம் திரும்பப் பெற இந்த உபாயம் செய்ய வேண்டியிருக்கிறது. (   பூமியில் யாகம் செய்பவர்கள் அவிசாக – யாகத் தீயில் போடும் யாக பாகத்தை வாங்கிச் செல்ல  தேவர்களின் பெயர் சொல்லி அழைப்பர்.  அந்த அவிசை பெறுவது  தேவர்களின் உரிமை) அதையும் தாரகாசுரன் அபகரித்துக் கொண்டு விட்டான்.  நீயாக சங்கரனின் பெயரைச் சொல்லி விட்டாய் என்பதால் நீ ஒத்துக் கொண்டு விட்டாய் என்றே ஆகிறது.  தாரகாசுரனை அடக்க இதுவே வழி. (ஹரன், சங்கரன், மரமேசன், மகேசன் , பினாக பாணி, ஈசன் என்று பகவான் சங்கரனுக்கே பல பெயர்கள்)

உன் வீர்யம் பற்றிச் சொன்னாயே, இந்த தைரியமும், தன்னம்பிக்கையும் தான் சங்கரனை நம் நன்மைக்காக திசை திருப்ப பயன் பட வேண்டும். அவரிடம் நமக்காக சேனானி- சேனைத் தலைவன் பிறக்க வேண்டும். தேவர்களை வழி நடத்திச் செல்லக் கூடியவன் நமக்கு தலைவனாக வர வேண்டும். ப்ரும்மா படைக்க சித்தமாக இருக்கிறார். உன் உதவியால் தான் அதுவும் சாத்யமாகும். சங்கரனோ, சத்யோ ஜாதம் முதலான மந்திரங்கள், அங்கம், ஹ்ருதய  நியாசங்களோடு  சங்கல்பம் செய்து கொண்டு தவம் செய்கிறார்.  சமாதி நிலையில் இருக்கிறார். அவருடைய  சமாதியை உன் பாணம் தான் கலைக்கக் கூடியது.  

இமய மலையின் மகளாக சதி அங்கு தோன்றியிருக்கிறாள். அவளிடம் அவர் மனம் ஈடுபட வேண்டும். அவர்கள் சேர்ந்தால் தான் நமக்கு சேனைத் தலைவன் கிடைப்பான்.  தான் தோன்றியான ப்ரும்மா, அவள் தான் பரமேசனின் மனைவி, அவள் தான் அந்த வீர்யத்தை தாங்குவாள் என்று சொன்னார்.  அதனால் அவர்களிடையில் சம்பந்தம் ஏற்படுத்துவது உன் பொறுப்பு. அவரோ சுத்தமான மனதுடன் தவம் செய்வதில் கட்டையாக அமர்ந்திருக்கிறார். 

குரு- அவள் தந்தையே அவளை மகேசனுக்கு பணிவிடை செய்ய நியமித்திருக்கிறார். ஸ்தாணு- அசைவில்லாதவர் என்று ஈசனைச் சொல்வர். சலனம் இன்றி திடமாக இருப்பவர்.   அப்சர பெண்கள் மூலம் இந்த செய்தி எனக்குத் தெரிய வந்தது.  அதனால் நீ கிளம்பு. தேவ காரியத்தைச் செய்.  இது தான் உன்னை நான் வரவழைத்த காரணம். இதன் பலன் நம் அனைவருக்கும் என்பதால் நீ உத்சாகமாக போ.  பூமியில் தான் பீஜம் முளைக்கிறது, வளருகிறது என்றாலும் அந்த பீஜம் முளைக்க நீரைத்  தானே வேண்டுகிறது. (பார்வதி அவர் அருகில் இருந்தாலும், பரம சிவனுடைய மனதைக் கவர அவளே போதுமென்றாலும், தற்சமயம்  தேவர்கள் அது வரை பொறுத்திருக்க முடியாமல் தாரகனால் வருந்துகிறோம். அதனால் தான் அவர்களிடையில் உன்னை அனுப்புகிறேன்.  அவர் மனதில் பார்வதியிடம் ஈடுபாடு வரச் செய்.)  

தற்சமயம் தாரகாசுரனிடமிருந்து நம்மை காக்க சக்தியுள்ளவர் பரமேஸ்வரனான ஸ்ரீ ஹரனே.  அவர் மகன் தான் இதைச் சாதிக்க வல்லவன். உன்னை அனுப்பும் நோக்கமும் அவர் மனதில் இந்த உணர்வு வரும்படிச் செய்ய உன் அஸ்திரங்களால் மட்டுமே முடியும். இதற்கு முன்பும் தேவ காரியமாக நீ செய்தாய்.  உனக்கு அபகீர்த்தி என பயப்படாதே. சாதாரணமான செயல்களை செய்பவர் கிடைப்பர். ஆனால் அசாதாரணமான செயல்களைச் செய்பவர் குறைவு, அவர்கள் தான் புகழ் பெறுவார்கள். 

தேவர்கள் அனைவருமாக யாசிக்கிறோம். உன் பாணம் வதைக்காது. அதன் பலன் மூவுலகிலும் உள்ள அனைவருக்கும் நன்மை தரும். உன் வீர்யம் ஆச்சர்யமானது.  இதன் விளைவால் உன் செயல் பாராட்டப் படும் என்பதில் சந்தேகமேயில்லை.  கவலைப்படாதே.

 ஹே மன்மதா! (மனதை மதனம்- கடைவது போல அலைகழிப்பவன் என பதத்தின் பொருள்) உனக்கு துணையாக, மது, மற்றும் உதவி செய்ய மாருதனும் வசந்தனும்  உடன் வருவர்.  நீ அழைக்க கூட வேண்டாம். அவர்களாகவே வருவார்கள்.  ‘ஹே வாயோ, நீ அக்னிக்கு உதவி செய்’ என்று சொல்ல வேண்டுமா என்ன?  சொல்லாமலே அக்னிக்கு வாயு உடனிருந்து உதவி செய்வது போல. 

இந்த செயல் நம்மால் முடியுமா என்ற சந்தேகம் வந்தாலும், உடன் வந்த நண்பர்கள், அன்புடைய பத்னி ரதி இவர்களும் உடன் வர, இது தேவ காரியம், என் உயிரே போனாலும் செய்து முடிக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டவனாக புறப்பட்டான். இமாலய மலையில் ஸ்ரீ  மகேசனின் ஆசிரமம்  இருந்த இடம் நோக்கிச் சென்றான்.

அந்த வனத்தில் பல முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர். சிலர் சமாதி நிலையில், மற்றும் சிலர் புலனடக்கம் கொண்டவர்களாக சாதனைகளை செய்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக நாம் என்ன செய்யப் போகிறோம்?  தான் எடுத்துக் கொண்ட சங்கல்பம் நிறைவேறும் என்ற நம்பிக்கையே இழந்த நிலையில், வசந்தன் கர்வத்துடன்  அந்த சூ (ஸூ)ழ் நிலையை கலைக்கும் விதமான பரவினான்.  பூக்கள் மலர்ந்தும், கோகிலங்கள் கூவியும், ப்ரமரங்கள் ஜங்காரம் செய்வதும் மன்மதனை  வரவேற்பதாக வசந்தனின் செயல்கள். வசந்த காலம் என்பது அகாலத்தில் அங்கு வந்தது.

ஆதித்யன்  தன் மதிப்பைக் குறைத்துக் கொண்டு ஏன் அகாலத்தில் வட திசை செல்கிறான் என்பதைக் கண்டு தக்ஷிணா ( தென் திசை) பெருமூச்சு விட்டாள் – விருப்பமின்றி மலயமாருதம் – தென்றலை அனுமதித்தாள்.

 வசந்தனின் தர்மமே-இயல்பு – வேணில் காலத்தில், ஸூரியன் சாகசிக நாயகன் எனப்படுவான்.  ஸூரியனின் தாபம் மிக அதிகமாக தெரியும் பருவம் அது.  தக்ஷிணாயனம் என்ற பருவம் தான் – ஸூரியன் தென் திசையில் இருந்த சமயம் ஜீவ ராசிகள் சங்கம காலம் எனப்படும் சமயம்.  அவன் குபேர திசை என்ற வட திசையில் சஞ்சரித்தால் பஞ்ச பூதங்களின் இயல்பை எதிர்த்து, அதை  வசந்த காலமாக மாற்றியது தவறான செயல் என்பது மட்டுமல்ல மிகவும் அபாயகரமானது. அது எப்படி என்றால்,

ஸூரியன் சாகசம் மிகுந்த நாயகனாக இருக்கும் குபேர திசை வடக்கு. அது குபேரன் பாலிப்பது. அங்கு யக்ஷர்கள் அதிக உயரமோ, அழகோ இல்லாத மக்கள் என்பது பொதுவான கருத்து.  அந்த இடம்  பெண்களுக்கு அனுமதியில்லாத இடங்கள் என்று ப்ரசித்தம்.  மிகவும் கவனமாக ரக்ஷிக்கப் படும் இடம்.  ஏதோ ஒரு பெண், அங்கு போக கிளம்பியவளை, தென் திசையின் காவல் தேவதை, தடுத்தாள். தன் கணவனை வேறு ஒருவள் அடைய முயற்சி செய்தால் சாதாரணமான மனைவிகள் வாயால் தூற்றுவது போல ‘ உத்தராயணத்தில் மலயானிலம் –   மலய மாருதம் எப்படி வரலாம்’ ஸூரியன் வடக்கில் சஞ்சரிக்கும் சமயம் இது, அவன் தக்ஷிணாயனம் -தென் திசையில் மந்தமாக இருக்கும் சமயம் வருவது,தென்றல்.  மலய மலையிலிருந்து வரும் காற்று அது.    அதனால் மலயானிலம் தக்ஷிணாயனத்துக்கு உரியது. அதை உத்தராயணம் தவறாக அணுகுவதாக காட்சி.  தக்ஷிணா என்பதன் இரு பொருள், சாதுவான  நேர்மையான பெண்,  மற்றொன்று தென் திசை.  அவள் வசந்தனின் மனைவி. தக்ஷிணாயன பருவத்தில் வருவதை  விட்டு உத்தர திசைக்கு செல்வது நியாயமல்ல – இது கவி காளிதாசனின் உவமை.

அசோக மரம் தன் கிளைகளிலிருந்து பூக்களை உதறியது போல எங்கும் மலர்களின் மணம் பரவியது. துணையாக இளம் தளிர்களும் அழகூட்ட வந்து சேர்ந்தன. அழகிய பாதங்களுடன் பெண்கள் வந்து மிதிக்க விரும்புவது போல, அந்த பாதங்களைக் காணத் துடிப்பது போலவும்.  பெண்களின் பாதம் பட்டு அசோகம் பூக்கும் என்பது தாவரவியல்.

மன்மதனுக்கு வசந்தன் வில், மாம்பூ பாணம் என்பது வழக்கு. வசந்தன் வந்து விட்டானே என்று மாமரம் பூக்கவும், வண்டுகள் திகைத்து தாங்களும் அவசரம் அவசரமாக மாம்பூக்களை வட்டமிட்டன. 

கர்ணிகாரம் என்ற பூ. வாசனையில்லாத வர்ண மயமான மலர் அது.  அது தனக்கு மணம் இல்லையே என்று வருந்தியதாம். படைத்தவன் பார பக்ஷமாக குணங்களை பார்க்காமல் தோன்றியபடி தகுதி இல்லாதவர்களுக்கு (இங்கு மணம்) செல்வத்தை கொடுத்து விடுகிறான் என்று புலம்பின.  சந்திரனின் களங்கம், கர்ணிகார புஷ்பத்தில் மணம் இன்மை, என்பவை சில ப்ரும்மாவின் பட்சபாதங்கள்.

 பலாச மரத்தின் இலைகள் தான் சிறப்பு. இடையில் சிவந்த நிறத்தில் பூக்கும் பூக்கள் கிம்சுகம் எனப்படும். வசந்தன் வந்து விட்டான் என்று வனம் முழுவதும் பூக்கள் மலர்ந்தும் மனோகரமாக இருந்தன. உவமானம்:பலாச புஷ்பங்கள் வனதேவதையாக வசந்தனை வரவேற்க காத்திருக்கும் சமயம், கணவனை எதிர் பார்த்திருக்கும் நாயிகா, பொறுமையின்றி நகத்தை கடிப்பது போல.

மாமரங்கள் பூத்துக் குலுங்கின. செந்நிற வண்டுகள் மொய்க்க சிவந்த அதரங்களுடன் இருக்கும் பெண் போல இருந்தன.  ப்ரியால என்று ஒரு மரம். ராஜதனம் என்பது அதன் மற்றொரு பெயர். அதன் மஞ்சரி, கொத்தாக இருக்கும் மகரந்தம் நிறைந்த பூக்கள்,  இலையின்றி இருப்பதைக் கண்டு மான்கள் திகைத்தன. அந்த பருவத்தில் காணாத அதிசயம் என்பதால். கோகிலங்கள் மதுரமாக கூவின. அது தான் மன்மதனின் குரல். அதுவரை பனியினால் அடிபட்ட இலைகள், நீர்த் துளிகளால் நிரம்பின. 

தபஸ்விகள், ஸ்தாணுவின் அருகில் இருந்து தவம் செய்யும் நோக்கத்தோடு அங்கு இருந்தவர்கள் இந்த அகாலத்தில் வசந்த பருவம் வந்ததைக் கண்டு திகைத்தனர்.  அது நல்லதல்லவே. எனவே மனக்லேசம் அடைந்தவர்களாக ஆனார்கள். 

மதனன் தன் மனவி ரதியுடன் வந்து தன் வில்லில் பாணத்தைக் கோர்த்ததுமே அந்த இடமே அங்கிருந்த அசையும் அசையா பொருட்கள் அனைத்தும் அவன் வசம் ஆகின.  ஆண் பெண் ஜாதிகள், விலங்குகளோ, மற்றவைகளோ இணைந்தவைகளாகவே  தென்பட்டன. 

 இரண்டு இறக்கைகள் மட்டுமே உள்ள வண்டுகள், பூக்களில் நிரம்பிருந்த தேனைக் குடித்து மயங்கின. க்ருஷ்ண சார என்ற மான்கள் தங்கள் பெண் மானைத் தொடர்ந்து சென்றன.  ஆண் யானைகள் கன்னங்களில் வழியும் நீர்த் துளிகளை மத ஜலம் என்பர். அது பெருகினால்  அவைகள் பெண் யானையைத் தேடும்.  மதனின் வரவால் மதஜலம் பெருகி அவை பெண்யானைகளான  கரேணு என்பவைகளைத் தேடின. யானைகளின் மதஜலம் தாமரை மலரின்  மகரந்த வாசனையைக் கொண்டிருக்கும் என்பது ஒரு செய்தி.

கிம்புருஷர்கள் (இவர்களும் சில செயல்களைச் செய்ய பிரம்மாவால் படைக்கப் பட்டவர்களே, மனிதருமல்ல,  அசுரர்களும் அல்ல தேவர்களின் ஏவலர்கள் போன்றவர்கள்).  என்பவர்கள், பாதி பாடிக் கொண்டிருந்தவர்கள் தொடர முடியாமல் நிறுத்தி விட்டனர். மரங்கள் தங்களைச் சுற்றியிருக்கும் கொடிகள் திடுமென பூத்து கனமாக மேலே விழுவதாக உணர்ந்தன. 

பகவான் சங்கரன் திடுமென அப்சர பெண்கள் பாடுவதைக் கேட்டும் தன் சமாதி கலையாமலே இருந்தார். தன்னை அடக்கியவர்கள், அனிச்சையாக எதுவும் செய்வதில்லை என்பர். நந்திகேஸ்வரர் லதா மண்டபத்தின்  வாயிலில் வந்து நின்றபடி வாயில் விரலை வைத்து, சபலத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று ஆணையிடுவது போல நின்றது.  அதைக் கண்டு அவருடைய பூத  கணங்கள் மட்டுமல்ல, வண்டுகள் மாமரத்தை விட்டு விலகின, முட்டையிடும் பறவை இனங்கள்,  மற்றும்  ஊர்வனவைகளும் ஸ்தம்பித்து நின்றன. மிருகங்களும் சாந்தமாயின. நந்திகேஸ்வரனின் ஆணையை சிரமேற் கொண்டு அந்த வனமே, சித்திரத்தில் வரையப் பட்டது போல் ஜீவராசிகள் அசைவின்றி நின்றன.  

காமன் நந்தியின் கண்ணில் படாமல் ஒதுங்கிச் சென்று, பூத பதி இருந்த மேரு சிகரம் என்ற இடத்தை நோக்கிச் சென்றான். யாத்திரையில் எதிரில் சுக்ரனைக் கண்டால் விலகிப் போவது போல நகர்ந்தான்.  ‘சுக்ரன்,புதன், அங்காரகன் இவர்கள் எதிர் பட்டால் இந்திரனுக்கு சமமான அரச சைன்யமும் திருப்பி விடப் படும்’ என்றும், அதை தவிர்க்க வேண்டும் என்பது நியதி. சுக்ரனுக்கு சமமான  நந்தியை வணங்கி விட்டு சங்கரனை வணங்குவது இருக்க, அவரை தவிர்த்து சென்றதற்கு காரணம் இதுவே. 

தேவதாரு மரங்களின் நடுவே, சதுரமான  மேடையில் சார்தூல என்ற புலித் தோலையணிந்து, சமாதியில் மனம் ஒன்றி இருந்த பகவான் த்ரயம்பகனைத் தரிசித்தான். தன் ம்ருத்யு சமீபத்தில் உள்ளது என்பதை அறியாதவனாக. 

அடுத்த ஆறு ஸ்லோகங்களும் பகவானின் தவக் கோலத்தை வர்ணிப்பது. 

வீராசனத்தில், சலனமின்றி நேராக கோடு போல நிமிர்ந்து அமர்ந்த நிலையில், தோள் பட்டைகள் விசாலமாக  விரிந்து கீழ் நோக்கிய முகமும், மடித்த கால்களில் பத்மம் போன்ற கைகளை கோர்த்தபடி இருந்தவரைக் கண்டான். (வீராசனம்: வலது  பாதம் இது துடையிலும், இடது பாதம் வலது துடையிலும் ஸ்திரமாக வைத்து அமருதல்.  அதே போல மேல் நோக்கி விரித்த கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக மடி மேல் வைத்து,  திடமாக தியானம் செய்தல் – யோக சாரம் என்ற வசிஷ்டரின் நூல்)

ஸர்ப்பங்கள் அலைவது போன்ற ஜடைகள், காதுகளில் ஸ்படிக மாலை, கழுத்தின் நீல நிறம் அதில் ப்ரதி பலித்து ஒளி விட, மான் தோல் – கருமை நிறம் கொண்ட மானின் தோலையே உடையாக கழுத்தில் முடிச்சாக கட்டியவராக,  

புருவங்களின் மத்தியில் இமைகள் தாழ மூடிய கண்கள் மூன்றும்  கீழ் நோக்கி நாஸிகாக்ரம் – மூக்கின் நுனியை குறியாக வைத்து கீழ் பார்வையாக வைத்தபடி இருந்தவர். (மனம் அலை பாயாமல் ஒரே புள்ளியை நோக்க வசதியாக கீழ் நோக்கிய பார்வை, மூக்கின் நுனி வழியாக பார்ப்பது போன்ற நிலையில் நிறுத்திக் கொண்டு தன்னையே தன் இதயத்தில் தியானம் செய்ய வேண்டும்  என்பது யோக சாரம்) 

மழையே இன்றி பிரவாகம் போன்ற ஓசையுடன் செல்லும் மேகங்கள் போல, பிராண அபான வாயுக்களை தன் வசமாக்கிக் கொண்டு விட்டதால் மழை பொழியும் வேலை இல்லாத  மேகங்கள் போல் என்றார்.  அதே போல கரு மேகம் போல நிறைந்த நீருண்ட  மழை மேகங்கள் போலவும்,  அலைகளை நிறுத்தி அசையாமல் இருக்கும் தடாகம் போலவும், அபான வாயுவை நிறுத்தி காற்றே இல்லாத அசையாது இருக்கும் விளக்கு போலவும்  அவர் சரீரம் இருக்கக் கண்டான்.  ( உள் மூச்சு தடைபட்டதால் சரீரத்தில் வாயுவின் கதிகள் இரண்டுமே பாதிக்கப் படும்.  பிராணவாயு உள் நுழைந்து வெளி வருவது அபான வாயுவை கீழ் நோக்கி வெளியேறச் செய்ய வேண்டும்.  அதனால் இரண்டும் தங்கள் செயலைச் செய்ய முடியாமல் தேங்கின என்பதாக). 

கபாலத்துக்கும் கண்களுக்கும் இடையிலான வழியில் ஜோதி – தீப்பறக்கும் தலையின் கேச ரோமங்கள், தாமரைத் தண்டைப் போல சுகுமாரமாக இருந்தன.  இளம் சந்திரனின் ப்ரகாசத்தில் ஒளிக் கற்றைகளாக தெரிந்தன.  ( உச்சந்தலையில் பிரும்ம ரந்திரம்- என்று உள்ளது. அதன் வழியாக ஜோதி வெளிப்படும் என்பது யோக முறையில் சொல்லப் படும் ஒன்று. அந்த ஜோதி சந்திரனின் மங்கிய ஒளியை பரிகசிப்பது போல என்று வர்ணனை)

நவத்வாரம் உடைய சரீரத்தில் மனம் என்பதை முழுவதுமாக அடக்கி, சமாதிக்கு அனுகூலமாக எந்த அழியாத சொல்லை (ஓம்) வேதம் அறிந்தவர்கள் அறிவார்களோ, உயிரினங்கள் அனைத்திலும் உள்ளுறையும் பரமாத்மாவை தன் ஆத்மாவுடன் கலந்து காண்பவராக – ( சரீரத்தில் மனம் தான் சலனத்துக்கும், செயல்களுக்கும் காரணம். அதை தன் வசப் படுத்திக் கொள்ளாத வரை மனதின் செயலான சுக துக்கங்கள் என்ற இரட்டைகளின் பாதிப்பை தவிர்க்க முடியாது. இப்படி  மனதை வசப் படுத்தியவர்களுக்கே தன்னிடமே உள்ள ஆத்மா நிதர்சனமாகத் தெரிய வரும் என்பது யோக முறை). 

இப்படி யோக நிஷ்டையில் இருந்தவரை மனதில் தோன்றுபவன்  என்ற காமன் பார்த்தான்.  இந்த ரூபத்தில் இவ்வளவு அருகாமையில் இருந்து காண்பது மனதால் நினைத்து கூட பார்க்க முடியாது என்பதால் காமனின் கைகள் நடுங்கின. பயத்தால் திகைத்தவன் கை நழுவி விழுந்த தன் வில்லையும் அம்பையும் கூட அறியவில்லை. இனி எந்த ஆற்றலும் பயன் தராது என்று நம்பிக்கையிழந்த  மன நிலையில் இருந்தவனை,  அந்த வனத்தின் தேவதை போல இருந்த பார்வதி, தன் சகிகளுடனும், பணிப் பெண்களுடனும் வந்து கொண்டிருந்தவள் கண்டாள்.  அவன் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டாள். 

அவள் உயர் மணியான பத்ம ராகம் என்பதை தோற்கடிக்கும் அசோக புஷ்பத்தை ஆபரணமாக அணிந்திருந்தாள். பொன்னின் நிறத்தை எடுத்துக் கொண்டு விட்ட கர்ணிகார புஷ்பங்கள், முத்துக்களுக்கு சம மான நிர்குண்டீ என்ற புஷ்பம், இவைகள் அவளை அலங்கரித்தன.  பூக்கள் குவியலாக மலர்ந்த கொடிகள் போல அவள் மார்பைச் சுற்றி  அணிந்திருந்த ஆடை அவளை கொடியாகவே காட்டியது. இளமையின் ராகம், இளம் சூரியனுடைய ஒளியைக் கொண்டிருந்தது.  நடமாடும் கொடி போல இருந்தாள்.

கீழே விழுந்த மன்மதனனின் வில்லின் மறு பாதி போல கேசர புஷ்பங்களால் செய்த அவளது இடையில் மேகலா என்ற ஒட்டியாணம் என்ற ஆபரணம் நடக்க நடக்க நழுவியதை கைகளால் தூக்கிக் கட்டியபடி இருந்தவளைக் கண்டான்.

அவள் அருகில் வந்து அவள் மூச்சின் வாசனையை நுகருவது போல வண்டுகள் மொய்த்தன.  அவன் மனைவி ரதியை விட அழகானவள் எனவே ரதி தான் தோற்றதாக நினைத்து வெட்கினாள்.  ஸூலத்தை ஆயுதமாக உடைய ஸ்ரீ சங்கரன், தன் புலன்களை வென்றவன்.  அவரிடம் தன் செயல் பலிக்குமா என்ற ஐயம் கொண்டிருந்த  மன்மதன் சிறிது நம்பிக்கை வரப் பெற்றான். 

அவள் தன் மணாளனாக வரித்த பரம் பொருள், தன் யோக சித்தியின் முடிவில் இருப்பவர், தானே ஜோதி மயமாக விளங்குவதைக் கண்டாள். தியானத்தின் முடிவான சமாதி நிலையில் ஜோதியை அடைந்தவர் மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  

அதே சமயம் பூமியைத் தாங்கிக் கொண்டிருந்த சேஷ நாகங்கள், ஏதோ காரணத்தால் லேசாக ஆடின. மெள்ள மெள்ள தன் சமாதியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த பகவான் ஸ்ரீ சங்கரன், தன் வீராசனம் என்பதை விடுவித்தார். பிராணனை மேல் எழுப்பிய ரீதியிலேயே வரிசையாக கீழ் முகமாக கொண்டு வந்து சகஜ நிலைக்கு வரவேண்டும் என்பது யோக முறை. அவர் சுய நிலை அடைந்தவுடன்,  நந்திகேஸ்வரர் வந்து வணங்கினார். பார்வதி தேவி வந்திருப்பதை தெரிவித்தார்.  அவரும் தன் புருவ அசைப்பால் அனுமதி அளிக்க வெளியில் சென்று பார்வதி தேவியை அழைத்து வந்தார். 

தானே பறித்து கொண்டு வந்த இளம் தளிர்களையும், மலர்களையும் சகிகள் கையிலிருந்து வாங்கி அவருடைய பாதங்களில் சமர்ப்பித்து விட்டு சிரசால் வணங்கி எழுந்தாள். நீல நிற குழல் கற்றைகள், அதில் ஸூடியிருந்த கர்ணிகாரம் நழுவியது.  தலை குனிந்து ருஷபத்வஜன் – தன் கொடியில் காளை உருவம் உள்ளவன். ( இதுவும் மகேசனின் ஒரு பெயரே.  பல பெயர்களாலும் அழைத்து போற்றுவது என்பது ஒரு வழிபாட்டு மரபு. அதனால் கவிதையின் அழகுடன் ஒத்து வரும் பெயர்களை கவிகள் கையாள்வர்)   என்ற பகவான் பாதங்களில் வணங்கினாள். தலையில் சூடியிருந்த மலர்களும் தளிர்களும் அவர் பாதங்களில் தானே விழுந்தன. அவரும் ஆசீர்வதித்தார். ‘அனன்யபாஜம் பதிமாப்னுஹி’  अनन्य भाजां पतिमाप्नुहि – உன்னைத் தவிர மற்றொரு பெண்ணை ஏறிட்டு கூட பார்க்காத பதியை அடைவாய் என்ற ஆசீர்வாதம்  பொதுவாக பெரியவர்கள் இளம் பெண்களுக்குச் சொல்வது. மகாத்மாக்கள் யதேச்சையாக சொன்னால் கூட அது சத்யமாகவே ஆகி விடும் என்பது கண்கூடு. 

காமன் இது தான் சமயம் என்று தானாகவே நெருப்பில் விழும் விட்டில் பூச்சி போல உமாவுடன் சேர்த்து ஸ்ரீ  சங்கரனை குறி வைத்து தன் வில்லில் அம்பை பொறுத்த சரியான தருணம் வரும் என்று எதிர் பார்த்தவனாக, தயாராக நின்றான்.

கௌரி,  மகேசனுக்கு அணிவிக்க மந்தாகினி நதியில் மலர்ந்த மலர்களிலிருந்து பீஜங்களை எடுத்து தயாரித்த ஜப மாலையை சமர்ப்பித்தாள். அந்த பீஜங்கள் ஆதவனின் கிரணங்களால் உலரச் செய்யப் பட்டிருந்தன- (தாமரை விதைகளை எடுத்து உலர்த்தி ஜப மாலை தயாரிப்பார்கள்.)  அவள் கரங்களின் தாமிர வர்ணமும் அத்துடன் சேர்ந்து வண்ணக்கலவையாக இருந்தது என்று கவியின் வர்ணனை.

முக்கண்ணன் அதை ஏற்றுக் கொள்ள முனைந்த அதே சமயம் காமனின் சம்மோஹனம் सम्मोहनम्  என்ற  பாணத்தை தன் வில்லில் பொருத்தி விட்டான்.  ஹரனும் ஒரு நொடி சபலத்துக்கு ஆளானது போல என்று அவன் நினைத்தான்.   கௌரியின் அழகிய அதரங்களைப் பார்த்தும் ஹரன் சலனமடையாமல் இருப்பாரா என்ற அவனது நம்பிக்கை, அவர் கண்கள் கௌரியை அன்புடன் பார்த்ததாக எண்ண வைத்தது.  சந்திரோதயம் கடல் அலைகளை  துள்ளி குதிக்கச் செய்வதில்லையா, அது போல.  அவர் தன் முக்கண்களாலும் கௌரியைப் பார்த்தார். 

கௌரியும் சற்று வெட்கத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.  நேருக்கு நேர் கண்டதால் வந்த நாணமும் மகிழ்ச்சியுமாக.(இதுவரை  கட்டையாக சமாதி நிலையில் இருந்தவர் தன் நிலைக்குத் திரும்பியதை இப்பொழுது தான் காண்கிறாள் என்பதால்)  இருவருமே சலனம் அடைந்தனர் என்பது பொருள்.

இதற்குள் ஸ்ரீ ஹரன் உடனே தன் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொண்டு, என்ன காரணம் என்று அறிய தன் விழிகளைச் சுழல விட்டார்.  நால் திசைகளிலும் தேடுவது போல பார்த்தார். 

ஆத்மயோனி-மனோ பவம் – आत्मयोनि, मनोभवम- இவை மன்மதனின் பெயர்கள். மனதில் தோன்றுபவன், ஜீவன்களுடன் அவர்கள் பிறவியிலேயே உடன் இருப்பவன் என்ற பொருளில். அவனைக் கண்டார். இடது கண் பார்க்கும் இடத்தில் தன் வில்லில் முஷ்டியை வைத்தவனாக, தன் இடது கால் முட்டியில் வில்லை சாய்த்து வைத்துக் கொண்டு,   சற்றே வணங்கிய உடலுடன், அழகிய வில் சக்கிரமாக சுற்றி அம்புகளை பிரயோகிக்க வசதியாக வைத்துக் கொண்டு, சௌம்யமான கோதண்டத்துடன் எய்யத் தயாராக இருந்தவனைக் கண்டார்.

இதுவரை தவமே கவனமாக  இருந்தவர், அடக்கி வைத்திருந்த மன்யு-கோபம் அவருடைய புருவ வளைவில் தெரியக் கண்ட மூன்றாவது   நெற்றிக் கண் தானாகவே க்ருசாணு என்று அழைக்கப் படும் அக்னியை வெளி விட்டதோ,  பள பளவென்ற ஜ்வாலையுடன் அக்னி தேவன்  அதிலிருந்து வெளிப் பட்டான்.

வானத்தில் மருத் கணங்கள் ப்ரபோ! இந்த கோபம் வேண்டாம், அடக்குங்கள், அடக்கிக் கொள்ளுங்கள் என்று அலறினர்.  இந்த எச்சரிக்கையை அவர் செவி மடுக்கும் முன்பேயே அந்த ஜ்வாலை மன்மதனை  சாம்பலாக ஆக்கி விட்டது. 

இந்த ஆரவாரங்களில் ரதி மூர்ச்சையானாள். எதிர் பாராத நிகழ்வுகள், அதன் பலா பலன்கள் எதையும் உணரும் முன் அவள் மூர்ச்சையானதே ஒரு விதத்தில் அவளைக் காப்பாற்றி விட்டது போலும். 

தீவிரமான தன் தவம் தடை பட்டதால் அந்த க்ஷணமே ஸ்ரீ சங்கரன் கண்ணுக்கு புலப் படாமல் மறைந்தார்.   அவருடன் பூத கணங்கள், ப்ரமத கணங்களும் மறைந்தன. 

மலைமகளை வெட்கம் ஸூழ்ந்தது. தந்தையின் பெருந்தன்மையும், தன் பிறப்புமே அவமதிக்கப் பட்டதாக வருந்தினாள்.  கொடி போன்ற தன் உடலையே வெறுத்தாள். சகிகளுக்கு முன்னால் என்பதால் லஜ்ஜை மிக அதிகமாகியது. எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தாள்.  ருத்ரனின் நடவடிக்கையால் பயந்து விட்ட மகளை அணைத்து தந்தை ஹிமவான் ஆறுதல் கூறினார்.  தேவ லோகத்து யானை தாமரை மலரை கொய்து  கையில் வைத்திருப்பது போல பூவினும் மென்மையான தன் மகளைத் தாங்கிய படி வேகமாக அந்த இடத்தை விட்டு விலகினார். 

(இதுவரை  ஸ்ரீ காளிதாசனின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில், मदन दहनो மதன தஹனோ – காமனை எரித்தல் என்ற மூன்றாவது அத்யாயம்.)  

குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம் – 2 குமார சம்பவம் மஹா காவ்யம் – 4

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.