தெய்வநல்லூர் கதைகள்

This entry is part 15 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் ஜவகர் நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் ஊருக்குள் “அண்மைச் செய்தி”களாக வலம் வர ஆரம்பித்தன. பல தகவல்கள் கணேசன் சாராலும், பொன்.செல்லையா சாராலும் வெளியாகின என்றும், வெளியாக வேண்டுமென்றே அவர்களிடம் சொல்லப்பட்டன என்றும் இருவேறு கருத்துக்கள் இன்றும் இருக்கின்றன. போஸ்டர் விஷயத்தில் ஏல் பள்ளி புகழ் பெற்றதால் அதைத் தாண்டிய ஒன்றைச் செய்ய நினைத்த செந்தூர்பாண்டி சார் செல்வராஜ் சார் யோசனையை ஏற்றார். அதன்படி விழாவன்று நிகழவிருந்த நாடகத்துக்கான விளம்பரத் தட்டிகள் ஊரில் 6 இடங்களில் வைக்கப்பட்டன.  அதுவரை திருவிழாக்களின்போது நடத்தப்படும் நாடகங்களுக்கு மட்டுமே விளம்பரத் தட்டி வைக்கப்படுவது வழக்கம் என்பதால் முதன்முதலாக பள்ளி ஆண்டுவிழா நாடகத்துக்கு விளம்பரத்தட்டிகள் என்பது ஊருக்குள் எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் என யூகிப்பது எளிது ( கடவுள் உங்களைக் காண நேரில் வருகிறார், நீங்கள் சென்று பார்க்கும் இறைவன் உங்களை வந்து பார்ப்பதை காண வாரீர், ஆண்டவன் நம்மோடு பேசுவதை, பழகுவதை நேரில் காணும் அரிய வாய்ப்பு).    நாடகத்தின் தலைப்பு –“கடவுளும், கந்தசாமிப் பிள்ளையும்” ( வேய் பொஞ்சே, இதென்னய்யா பிள்ளைவாளை மேடைக்கேத்துனா செட்டிமாருக்க கோபிக்க மாட்டாகளா? எதுக்கும் மயிலம்பிள்ளைட்ட பசார்ல ஒரு வார்த்த கேட்டுரும்வே – கணேசன் சார். இந்தக் கதைய  எழுதுன புதுமைப்பித்தன் பிள்ளைவாள் தான? கதையில கடவுள நேர்ல பாக்க பெரும பிள்ளைவாளுக்குத்தான்னு சொன்னா மயிலம்பிள்ளை மண்டையாட்டிர மாட்டாராக்கும்? இப்ப என்ன சொல்லுதீரு கஞ்சே    – பொன் செல்லையா சார்).

கதையில் இல்லாத சில காட்சிகளையும் பொஞ்சே சார் சேர்க்க தன் பங்குக்கு சில காட்சிகளை கஞ்சே சார் மாற்ற அந்த நாடகம் பழமைப்பித்தன் எழுதியதாக இருந்தது என்பதை ஏழு ஆண்டுகளுக்குப் பின் புதுமைப்பித்தன் தொகுப்பை (ஐந்திணைப் பதிப்பகம் – கல்லூரி ஆசிரியர் ராகவன் சார் வீட்டில் இருந்து வாங்கிப் படித்தது) படிக்கும்போது உணர முடிந்தது. என்றாலும் கடவுள் நாகரீக உலகிற்கு வருவதாக அமைக்கப்பட்டிருந்த காட்சிகளால் நாங்களெல்லாம் அன்றைக்கு  மிக ஆர்வமாகியிருந்தோம். ஆறு முதல் எட்டு வரை உள்ள மாணவர்களிடையே நடிப்புக்குத் தகுந்த ஆட்களைத் தேர்ந்தெடுக்கப் போவதாக இரு ஞ்சேக்களும் அறிவித்ததும் பரபரப்புடன் கிளுகிளுப்பும் சேர்ந்து கொண்டது. காரணம் பையன்களும், கேர்ள்ஸும் இணைந்து நடிக்க வேண்டிய நாடகம் அது. 

நடிப்புக்கு ஆர்வம் தெரிவித்து பேர் கொடுத்த மாணவர்கள் வியாழன் மாலையும், கேர்ள்ஸ் வெள்ளி மாலையும் ஆறாம் வகுப்பின் பி பிரிவுக்கு (அந்த வகுப்பறை மட்டுமே தனி அறையாக அதாவது உள்ளூர் மக்கள் நலச் சங்கமான நண்பர்கள் பூப்பந்தாட்டக் கழகத்தாரால் கட்டித்தரப்பட்டு அவர்களால் ஆண்டுக்கு ஒருமுறை பூப்பந்தாட்டப் போட்டி அலுவலகமாகவும் பிற நாட்களில் பள்ளி வகுப்பறையாகவும் பயன்படுத்தப்படும்) வருமாறு பணிக்கப்பட்டார்கள். நாடகத்துக்கான அறிவிப்பு வந்தவுடனேயே எங்கள் மகாத்மா அணி எங்களில் 8 பேரை நாடகத்தில் பங்குபெறுமாறு ஆணையிட்டது. நான், பிரேம், சிவாஜி, சங்கீதா, பாண்டியம்மாள், குட்டை வள்ளிமயில், சேமியா மணி, யக்கா பாட்ஷா ஆகியோர் நடிப்புத் தேர்வுக்கு பெயரளித்தோம்.  பெயர் அளித்த ஒவ்வொருவராக உள்ளே போய் வந்தனர். உள்ளே சென்று வந்தவர்கள் வெளியே இருப்பவர்களோடு பேச அனுமதிக்கப்படவில்லை (டே, அப்டியே பைக்கட்டைத் தூக்கிட்டு யார்ட்டயும் பேசாம போயிரணும். திங்கக் கெழம வகுப்புக்கு வந்து யார்,யாரு செலக்ட் ஆயிருக்கீங்கன்னு சொல்லுவோம், என்ன-செல்வராஜ் சார்) . என் பெயர் ஏழாம் வகுப்பில் முதலாவதாக அழைக்கப்பட்டதும் உள்ளே நுழைந்தேன். இரு நாடகாசிரியர்களும் , உடன் பாலகனி டீச்சரும், ஜெயலட்சுமி டீச்சரும் இருந்தார்கள். “எடே, அந்த பெஞ்சுல இருக்க நாலு தாளுல ஒண்ணை மட்டும் எடுடே” பொஞ்சே சாரின் குரலுக்குக் கட்டுப்பட்டு எடுத்தேன். “வானம் விளைகிறது” என ஆரம்பித்து கட்டுரை அளவுக்கு நீளமாக இருந்த வசனத்தை ஏற்றஇறக்கத்துடன் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். படித்து முடித்ததும் தாளை அங்கேயே வைக்குமாறு சொல்லப்பட்டபோது இன்னொரு தாளில் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் அன்று என்ற வரி மட்டும் கண்ணில் பட்டது. 

வெளியே வந்து மகாத்மா அணியினரிடம் தகவலை கண்களால் தெரிவித்து விட முயற்சித்து தோல்வியே அடைந்தேன். தலைமையகத்தில் காத்திருப்பதாக மட்டுமே கண் வழி கம்யூனிகேஷனில் தெரிவிக்க முடிந்தது. முடிந்தவரை மெல்ல நடந்து வகுப்புக்குச் சென்று பையை எடுத்துக்கொண்டு முடிந்ததை விட மெதுவாக நடந்து செல்லும்போது அதுவரை கேட்காத தொனியில் “வாழ விட்டார்களா கல்யாணியை” என்ற பிரேமின் குரல் மைதானம் வரை கேட்டது. செண்பக விநாயகர் கோவில் தலைமையகத்தில் நாங்கள் பேசியவை எந்தெந்த திரைப்படத்தின் வசனங்கள் என பரஸ்பரம் கூறி நடிப்புத் தேர்வில் எங்களது செயல்பாட்டை சுய ஆய்வு செய்துகொண்டோம். மிகுந்த ஆவலுடன் நாங்கள் எதிர்பார்த்த திங்கக் கெழம வந்தது. மதிய உணவு இடைவேளை வரை தேர்வுப் பட்டியல் வரவில்லை. நாங்கள் இரு ஞ்சேக்களிடம் கெஞ்சியும் அவர்கள் அன்பினால் கடமை தவறாமல் இருந்து விட்டனர். ஆனால் மாலை இடைவேளை முடிந்ததும் வகுப்பிற்கு வந்த ப்யூன் காளிமுத்து அண்ணன் கையிலிருந்த நோட்டில் கையெழுத்து போட்டு அனுப்பி விட்டு அதைப் பார்க்காமலேயே கணேசன் சார் சொன்னார் – “ஏடே, காலைலருந்து கெடந்து உருண்டீகள்ளடே, கேட்டுக்கங்க “ என புன்னகையுடன் தேர்வானோர் பெயர்களைச் சொன்னார். நான், சிவாஜி, பிரேம், வள்ளிமயில், சங்கீதா என ஐவரும் தேர்வாகியிருந்தோம். 

“இவன் கா ங்க எடத்துலல்லாம் யக்காங்கானே , இவன மேடயேத்துனா உருப்படுமா? என யக்கா  பாட்ஷா தேர்வாகாமல் போன காரணத்தை சொன்ன கணேசன் சார் பாண்டியம்மாளை நோக்கி “ஏம்மா, நெதோம் பல்லு தேக்கையில நாக்க வழிக்கணும் என்ன, ல, ழ, ள எல்லாத்தையும் ஒரேமாரி சொல்லுதே” என்றார். சேமியா மணி தேர்வாகாவிட்டாலும் கழிக்கப்படவில்லை என்றார். அதாவது கையிருப்பில் சேமிக்கப்பட்ட நடிகரானார் அவர். ஆகவே சேமியா மணி நாடக ஒத்திகையில் கலந்து கொள்ள அனுமதி தரப்பட்டது. 

நாடக ஒத்திகை மிக மகிழ்ச்சியான அனுபவமாக இப்போதும் நினைவில் நீடிக்கிறது. அதுவரை கண்டறியாத வேறு ஆசிரியர்களை ஒத்திகையில் கண்டோம். சார்வாள்கள் எல்லாம் சார்வால்களாக மாறியதைக் கண்டு மகிழ்ந்தோம்.  பிரேம் சிவனாகவும், சங்கீதா பார்வதியாகவும், கந்தசாமிப் பிள்ளையாக  சிவாஜியும், நான் ரிக்ஷாக்காரனாகவும் பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. மாடசாமியாலும், சங்கரநாராயணன் சாராலும் தூண்டப்பெற்று எட்டாம் வகுப்பு அண்ணன், அக்காமார்கள் கதாபாத்திர உரிமை கோரி வந்தார்கள். ஆனால் ஞ்சே க்கள் அவர்களிடம் நீட்டிய கட்டுரைத் தாள் வசனங்களை திக்கலின்றி வாசிக்க முடியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டு விலகினர். இருப்பினும், சட்டம் நிறைவேற்றாமலேயே இட ஒதுக்கீடு முறையை பின்பற்றிய ஞ்சே சார்வாள்கள் பண்ணையார், அவர் மனைவி போன்ற ஓரிரு நிமிட காட்சிகளில் அவர்களைப் பயன்படுத்தி சமூக சம நீதியை நிலை நாட்டினர். ஆறாம் வகுப்புக்கும் அவ்வாறே. நாடகத்தின் அரங்க வடிவமைப்பு, அதற்கான பொருட்களைத் தயார் செய்யும் பொறுப்பு முத்துசாமி சாரால் முன்வந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இயல்பிலேயே ஓவியரான முத்துசாமி சார் டி வி எஸ் மளிகைக் கடைக்குச் சென்று ரூபாய் இரண்டு செலவில் நான்கு மாணவர்கள் மூன்று முறை தூக்கி வரும் அளவுக்கு அட்டைப்பெட்டிகளைக் கொணர்ந்து அரங்க நிர்மானப் பணிகளை சத்துணவுக் கூடத்தின் ஒரு பகுதியில் செய்ய ஆரம்பித்தார். ஈத்தகுச்சியும், அமுக்குடப்பாவும் அவருக்கு உதவியாக சென்றார்கள். சத்துணவு ஆயாவான செண்பகவல்லி என்ற செம்பாச்சி உணவு தயாரிப்போடு சேர்த்து பசை காய்ச்ச நேர்ந்ததால் ஏற்பட்ட செயல் குழப்பம் அவ்வப்போது சத்துணவில் எதிரொலித்தது தனிக்கதை. சத்துணவு சார் என தன்னை அழைக்குமாறு சொல்லிக் கொண்டாலும் சத்துணவு அண்ணன் என்றே அழைக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளரான வடிவேல்முருகன் முதலில் சற்றே விலகியிருந்தாலும் கலை ஆர்வத்தால் தூண்டப்பெற்று அவரும் அரங்க வடிவமைப்பில் சேர்ந்து கொண்டார். பள்ளியின் பின்னிருந்த சில வாகை, வேப்ப மரங்கள் கிளைகளை தந்து அரங்க வடிவமைப்புக்கு உதவின. தவிர முத்து சைக்கிள் மார்ட், பந்தல்காரர் கந்தசாமி உதவியும் நாடப்பட்டது. 

நாடக வசனங்களை மனப்பாடம் செய்வதில் வழக்கம்போல பிரேமும், சங்கீதாவும் எங்களுக்கு உதவினர்.  இம்முறை மதுரையிலிருந்து அழைக்கப்பட்ட நாடக ஒப்பனைக் கலைஞர் அவரே சிவன், பார்வதி ஆடை, அணிகலன், வடிவமைப்புகளை எடுத்து வந்து விடுவதாக சொன்னதால் பிற கதை மாந்தர்கள் அவரவருக்கான உடைகளை கொண்டுவரும்படி சொல்லப்பட்டனர். நான் ரிக்ஷாக்காரன் என்பதால் வழக்கமான அரைக்கால் சட்டை, உள் பனியனுடன் கூடுதலாக தலைப்பாகைக்கு ஒரு துண்டு மட்டுமே. பிறருக்கும் சேலை, வேட்டி என அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வரும்படி சொல்லப்பட்டது. ஒத்திகை நாட்களில் எங்களுக்கு இஸ்மாயில் சார் ஷர்பத் தயாரித்துக் கொடுத்தார். 

நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. முதல்நாள் மாலையே எட்டாம் வகுப்பு மாணவர்களை வைத்து பள்ளி மைதானத்தை சுத்தமாக்கி சுண்ணாம்புப் பொடியால் கோடுகள் வரைந்து வைத்திருந்தார் செல்வராஜ் சார். மைதானம் என்பது சுற்றிலும் உள்ள வகுப்பறைக் கட்டிடங்களின் நடுவே திகழ்வது. ஆகவே எந்த வகுப்பிலிருந்து இறங்கினாலும் மைதானத்தில்தான் இறங்க வேண்டும்.  விழாவுக்கு இரு நாட்களுக்கு முன்னரே மேடை அமைக்க ஆட்கள் வந்ததும் விழா மனநிலை துவங்கிவிட்டது. வகுப்பில் எந்த ஆசிரியர்களும் பாடம் நடத்தவில்லை. விழாவன்று காலை மைக்செட் குமாரசாமி அண்ணன் வந்து வகுப்பிலிருந்து நாலு  பெஞ்சுகளை இறக்கி ஒரு ஸ்பீக்கர் பாக்ஸ்க்கு இரண்டு என்ற கணக்கில் வைத்தார். எங்கள் உயரத்துக்கு இருந்த அந்த ஸ்பீக்கர் பெட்டி எங்களை குதூகலிக்கச் செய்தது. ஏனென்றால் அதுவரை  ஊமத்தைப்பூ பூத்தது போன்ற புனல் வடிவக் குழாயையே கண்டிருந்த நாங்கள் முதன்முறையாக ஸ்பீக்கர் பாக்ஸை பார்த்தோம். காலை பத்து மணி வரை செல்வராஜ் சார் வராததால் செந்தூர் பாண்டி சார் பதட்டமடைவது தெரியாமல் எஸ் ஜானகி சிங்கார வேலனே தேவா பாடிக்கொண்டிருந்தார். நீ சரி நீ சரி என ஜானகியம்மா  நாதஸ்வரத்தை ஆமோதித்துக் கொண்டிருக்கையில் ஓட்டமும் நடையுமாக கையில் சிறு பையுடன் உள்ளே வந்தார் செல்வராஜ் சார். செந்தூர்பாண்டி சார் ஒரு கண்ணில் ஆசுவாசமும், மற்றொரு கண்ணில் கோபமும் காட்டி வரவேற்க செல்வராஜ் சார் பைக்குள்ளிருந்து ஒரு கேசட்டை எடுத்துக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அதே விரைவில் அவர் மைக் செட் குமாரசாமியிடம் போன இரு நிமிடங்களில் எங்களை ஊட்டி கான்வெண்டில் படிப்பவர்கள் போல உணரச் செய்த இன்று வரை கேட்கும்போதெல்லாம் பள்ளி மைதானத்தின் ஒவ்வொரு மணல்துகளையும் நினைவுப்படுத்தும் அந்த பாடல் ஜிவ்வென மைதானத்தை நிறைத்தது – கம்பீரமான குரலில் எங்கள் ட்ரிலில் சொல்வது போல ஒன்,டூ, த்ரீ என உஷா உதூப் இசையாய் ஆரம்பிக்க  “சிக்கென்ற ஆடையில்” என நியூட்ரின் சாக்லேட் குரலில் ஜானகி பாட ஆரம்பித்தார். சிங்கார வேலனே பாடிய அதே ஜானகிதான் இதையும் பாடுகிறார் என பிரேம் சொன்னதை அப்போது நாங்கள் நம்பவேயில்லை. அந்த பாடலுக்கு ஏற்றவாறு டிரில் செய்முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால் அப்பாடல் அன்று முழுவதும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. 

விழா நிகழ்வுகளை மேலும் சொல்லிக் கொண்டே செல்லலாம்தான். ஆனால் நீங்களெல்லாம் பொறாமைப்படுவீர்கள் என்பதால் சிலவற்றை மட்டும் சொல்லலாம். சங்கீதா பார்வதிக்கான முழு ஒப்பனையில் வந்ததும் சங்கரம்மாள் டீச்சரும், ஜெயலக்ஷ்மி டீச்சரும் அவரை கட்டியணைத்துக் கொண்டது, பிரேம் சங்கீதா இருவரும் வசனங்களை ஒரு திக்கல் திணறல் இன்றி பேசியது, இருவரும் இணைந்து ஆடிய ஒரு நடனம், சாலையில் செல்லும் ஒருவராக மேடையில் தோன்றியபோது தன் முழு நடிப்புத் திறனையும் வெளிப்படுத்த சேமியா மணி முயன்றதில் அன்னார் வேட்டி அவிழ்ந்து உடல் திறன் வெளிப்பட்டது, பாரதியாரைப் பற்றிய தெண்டிலாரின் உரைவீச்சு என அனைவரின் பங்களிப்பும் அருமையாக அமைந்திருந்தது. 

ஆனால் நாடகம் முடிந்து பரிசளிப்பு நடந்து கொண்டிருக்கையில் ஒப்பனை அறையில் பெண்கள் பக்கமிருந்து மிக அவசர அழைப்பு எங்களுக்கு வந்தது. ஆசிரியர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்ததால் ஒப்பனை அறையில் மாணவர்கள் மட்டுமே ஒப்பனைக் கலைப்பில் இருந்தோம். பள்ளியின் பின்புற சுவரை ஒட்டிய சத்துணவு பொருட்கள் வைக்கும் அறையே இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆண்களுக்கும், பெண்களுக்குமான ஒப்பனை அறையாக மாறியது. பெண்கள் பக்கமிருந்த சன்னல் வழியே வெளியே இருந்து இரண்டு, மூன்று தலைகள் உள்ளே எட்டிப் பார்ப்பதாக செய்தி வந்ததும் சிவாஜி, டொம்ப்ளீ இருவரும் பிரேமுடனான 6 நொடி ஆலோசனையில் அறைக்கு வெளியே பாய்ந்து எதிர்சுற்றாக    பதுங்கி முன்னேறினார்கள். பனிரெண்டாவது நொடியில் உளவுத்தகவலை கொண்டு வந்து சேர்த்தார்கள். வெளியே பதுங்கியிருந்து உள்ளே எட்டிப்பார்ப்பது மாடசாமியின் நண்பர்களான மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். எங்கள் பள்ளி மாணவர்கள் எவருமில்லை. ஆனால் பாதுகாப்பான தூரத்தில் மாடசாமி இருக்க வாய்ப்புண்டு என்றார் டொம்ப்ளீ. சாரை அழைத்து வருவதற்குள் அவர்கள் ஓடிவிட வாய்ப்புண்டு. அப்படியே மாட்டினாலும் சார்வாள்கள் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்றார் சிவாஜி. அடுத்த ஐந்து நொடிகளில் பிரேம் வேறோர் யோசனை சொன்னார். ஆண் பெண் ஒப்பனை அறைத் தடுப்பு என்பது மெல்லிய மரப்பலகை தடுப்பு. அதுவும் நகர்த்திவைத்துக் கொள்ள முடியக்கூடியது என்பதால் பிரேமின் திட்டம் பத்து நொடிகளுக்குள் எங்களுக்கு விளங்கியது. முதலில் இரு அறைகளிலும் இருந்த விளக்குகள் (விழாவுக்காக மட்டுமே வைக்கப்பட ட்யூப் லைட்டுகள்) அணைக்கப்பட்டன. தடுப்பு ஓசையின்றி மெல்ல அரை ஆள் நுழையும் அளவுக்கு அகற்றப்பட்டு நான்கு பேர் கொண்ட ஆண்கள் அணி பெண்கள் அணிக்குள் ஊடுருவியது. ஊடுருவிய நான்கு பேரும் அரவமின்றி சுவரை ஒட்டி பல்லி போல நகர்ந்து சன்னலுக்கு பக்கவாட்டு சுவரை ஒட்டி படர்ந்தோம்.  சன்னலுக்குப் பக்கவாட்டு சுவரை ஒட்டி நின்றிருந்த நால்வரில் இருவர் சன்னலுக்கு கீழாகக் குனிந்து மறுபுறம் நகர்ந்து ஒட்டி நிற்க கோவில் கருவறை வாயிலில் இரு ஜோடி துவாரபாலகர்களென  நின்றோம். நால்வர் கைகளும் எதையோ மூடி வைத்திருக்க நால்வரில் ஒருவரான பிரேம் கையசைக்க வள்ளிமயிலும், மெஜூராவும் சன்னலுக்கு அருகில் சென்று தங்கள் கைகளில் வைத்திருந்த பாவாடை சட்டைகளை கொடி ஆட்டுவது போல ஆட்டிவிட்டு விரைந்து திரும்பினார்கள். அடுத்த இரண்டாம் நொடியில் சன்னலில் மெல்ல தலைகள் முளைக்க ஆரம்பித்தன. இருளில் சரியாகத் தெரியாததால் சன்னலை ஒட்டி கவனத்துடன் அந்த முகங்கள் நெருங்கி வந்த சமயத்தில் சன்னலை ஒட்டி பதுங்கியிருந்த பிரேமின் கை மேலும், கீழும்   அசைய நால்வரும் சட்டென ஒரே நேரத்தில் வெளிப்பட்டு கைகளில் வைத்திருந்த சாம்பார் மிளகாய் பொடியை சன்னலை நோக்கி வீசினர். ஏகார, ஓகார நெடில் ஓசைகளும், உடல்கள் ஒன்றோடொன்று உரசிச் சாயும் தட் தட்டென்ற ஓசையும் கலந்து கேட்டன. தொடர்ந்து பாய்ந்து ஓடும் குழப்பமான ஓசைகள் மெல்ல அடங்கின. சேமியா மணியும், டொம்ப்ளீயும் முன்பு போலவே பதுங்கிச் சென்று எவருமில்லை என உறுதிப்படுத்திய பின்பு ட்யூப் லைட்கள் போடப்பட்டன. நால்வர் அணி பெண்கள் பகுதிக்குள் ஊடுருவியதுமே வெளிப்பக்கமாக பதுங்கி வெளியேறிய ஈத்தக்குச்சி அடிபம்பு அருகில் புளியமரத்தின் பின்னே மறைந்து நின்றார். குழாயில் முகம் கழுவ வந்த அவர்களை மாடசாமி சந்தித்துப் பேசியதை  நேரில் கண்ட சாட்சி அவர் மட்டும்தான்.  

எதிரிகளை துரத்தி அடித்து விட்ட பெருமையுடன் எங்கள் அணி பெண்களின் வாழ்த்தோடு ஆண்கள் பக்கம் வந்தது. ஆனால் பிரேம் கடைசி நொடியில் அதை உணர்ந்து சிவாஜியிடம் கண்ணசைக்க, வழமை போல சிவாஜி பார்வையை நொடி நேர இடைவெளியில் பின்தொடரும் நானும் பார்க்க சங்கீதா மேலே அள்ளிப் போர்த்திக் கொண்ட சேலையோடு தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். எங்களை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. சிவாஜி நொடி தாமதித்து மெஜூராவிடம் தகவல் கேட்க முற்பட்ட கணம் பீடி வாசனையோடு ஒப்பனைக் கலைஞர் உள்ளே புகுந்தார். நாங்கள் அவர் படி ஏறும் கணத்தில் இடைவெளிக்குள் புகுந்து ஆண்கள் தரப்புக்கு வந்து விட்டோம். பிரேம் ஏதோ பேச முற்படுவதற்குள் இரு ஞ்சேக்களும் முகமெலாம் புன்னகையாக உள்ளே புகுந்தனர்.  மெஜூராவிடமிருந்து ஆசிரியர்களிடம் தற்போது எதுவும் சொல்ல வேண்டாமென அவசரத் தகவல் வந்தது. ஆசிரியர்கள் அனைவரும் நாடகக் குழுவினரை ஈன்ற பொழுதில் பெரிது உவந்தார்கள். அய்யர்- பாய் கூட்டணி சிவனுக்கும், பார்வதிக்கும் அவர்களது சிறப்பான சிவாஜி-பத்மினி நடிப்பைப் பாராட்டி ஆளுக்கு பத்து ரூபாய் ரொக்கப் பரிசை மேடையிலேயே அளித்தார்கள். சிவன் சற்றே குழம்பிய முகத்துடனும், பார்வதி சிவந்து கலங்கிய கண்களுடனும் (ஒண்ணுமில்ல டீச்சர், இந்த பவுடரைத் துடைக்கும்போது கண்ணுல பட்டுருச்சு) வந்து பரிசினைப் பெற்று பெரும் கரவொலியையும் கூடுதலாகப் பெற்றுச் சென்றனர். விழா முடிந்து அனைவரும் கிளம்புகையில் மறுநாள் காலை பெரிய கோவிலில் சந்திக்க வேண்டுமென எனக்கு, பிரேம், சிவாஜிக்கு மட்டும் மெஜூரா மூலம் சங்கீதா தகவல் அனுப்பினார். விழா வெள்ளி அன்று நடைபெற்றதால் அடுத்த இரு நாட்களும் விடுமுறை. ஆகவே வழக்கமான மாலை நேர சந்திப்பு நேரம் மறுநாள் காலை நேர கோவில் சந்திப்பாக மாற்றப்பட்டது. எங்கள் பெற்றோரும் விழாவுக்கு வந்து எங்களுடன் வீடு திரும்பியதால் எங்களால் சரியாகப் பேசிக் கொள்ள முடியவில்லை. ஆனால் கோவில் சந்திப்புக்கு சற்று முன்னதாக பிரேம் வீட்டில் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்து இல்லம் ஏகினோம்.   

மறுநாள் காலை நானும், சிவாஜியும் பிரேம் வீட்டிற்குப் போனபோது பிரேம் எங்களை எதிர்பார்த்து வீதி முனையிலேயே காத்திருந்தார். கோவிலுக்குப் போகும்வரை நாங்கள் எவ்வளவோ பேசிப்பார்த்தும் எங்களால் என்ன நடந்திருக்கும் என யோசிக்க முடியவில்லை. கோவிலை அடைந்ததும் வழக்கமான புன்னகை இல்லாத சங்கீதாவின் முகமும், எப்போதும் இறுக்கமாக இருக்கும் மெஜூராவின் முகம் இன்னும் இறுக்கமாக இருப்பதையும் கவனித்தபோது ஏதோ ஒன்று சரியில்லை எனத் தோன்றியது. எங்களது ஆலோசனைக்கூடமான சபாபதி மண்டபப் படிக்கட்டில் அமர்ந்தபோதும் சங்கீதா எதுவும் சொல்லவில்லை. மாறாக மெஜூராதான் எங்கள் மூவரையும் பிரகாரம் சுற்ற வரச்சொன்னார். நாங்கள் எழுந்தபோது சங்கீதா மட்டும் அப்படியே குனிந்தவாறே அமர்ந்திருந்தார். (சிவாஜி, சங்கீதா வரல பாரு. நான் போயி கூப்டட்டா?- நான்.  கூறு கெட்ட வேலயச் செய்யாதல, அவ இல்லாம இருக்கையில சொல்லணும்னுதான மெஜூரா கூட்டிட்டு போறா, அரவங்காட்டாம வால – சிவாஜி). பிரகாரம் சுற்றி வருகையில் தல விருட்சமான புளிய மரத்தின் அடியில் உள்ள மேடையில் தற்காலிக அவையென நாங்கள் அமரவைக்கப்பட்டு மரத்தின் கீழிருக்கும் நாகர் சிலையை மட்டுமே நாங்கள் பார்த்தவாறு இருக்க வேண்டுமெனவும், தான் பேசுகையில் தன் முகத்தை எவரும் பார்க்கலாகாது எனவும் மெஜூரா வேண்டுகோள் போன்ற கட்டளையை இட்டார். எங்கள் முகத்தைக் கூட பார்க்காமல் கீழே பார்த்தவண்ணம் அவரது இயல்புக்கு சற்றும் பொருந்தா திணறல்களோடு சொல்லி முடித்தபோது பிரேம் முகம் பழுத்து நாகச் சிலையில் உறைந்திருந்தது. சிவாஜி முகம் செவ்வொளி ஏறியிருந்தது. நான் எப்படி இருந்தேன் என என்னை நானே பார்த்துக் கொள்ள முடியாததால் (அதேபோல  மெஜூரா முகத்தையும் பார்க்க முடியாததால்) நான் கோபமாக உணர்ந்தேன் என்பதைத்தான் சொல்ல முடியும்.  

எங்களை இவ்வளவு கோபத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் இதுதான் –பெண்கள் உடைமாற்றும் அறையை ஆரம்பத்திலேயே சுற்றி வந்திருக்கிறார்கள் மாடசாமி கோஷ்டியார். ஒப்பனையாளர் மற்றும் டீச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து உள்ளே இருந்ததால் அவர்களால் நெருங்க முடியவில்லை. பெண்களும் சன்னல் மூடியிருக்கிறது என்ற நினைப்புடன் சன்னலை ஒட்டிய மூலையில் உடைமாற்றியிருக்கிறார்கள். ( ஆனால் சன்னல் கதவின் கொக்கியை ஒட்டி ஈர்க்குச்சி நுழையும் அளவு அறுக்கப்பட்டிருந்த நுண்ணிய இடைவெளி, அதன்வழியே உள்பக்க கொக்கியை நீக்குவதற்காக நுழைக்கப்பட்ட வளைவு நீட்டப்பட்டு நேர்கோடாக இருந்த ஹேர்பின் கம்பி, சன்னல் கொக்கிகளில் ஓசை வராமலிருக்கவும், ஓசையின்றி வழுக்கும்படியுமாகவும்   தடவப்பட்டிருந்த சத்துணவு சமையல் எண்ணெய் ஆகியவை சம்பவ இடத்தில் எங்கள் குழுவின்  ஆய்வில் திங்கட்கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டன.) ஆசிரியர்கள் அனைவரும் மேடையேற்றப்பட்டு மாலை, பொன்னாடை ஆகிய மரியாதைகளில் இருக்கையில் பெண்கள் அறையில் நிலவிய பாதுகாப்பற்ற சூழலை சாதகமாக உணர்ந்த மாடசாமி கும்பல் அறைக்கு பின்புறமாக வந்து கொக்கியை நீக்கி லேசான இடைவெளியில் உள்ளே  பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.   சன்னலில்தான் டியூப் லைட் கட்டப்பட்டிருக்கும் என்பதால் அதன் பின்னுள்ள சன்னல் இடைவெளி கேர்ள்ஸின் கண்களுக்குப் பழகவில்லை. சங்கீதா உடைமாற்றும்போது வெற்று முதுகில் திரவப் பிசுபிசுப்பை சட்டென உணர்ந்து கேர்ள்ஸுக்கே உரிய ஐயத்தின் விரைவுடன் அவிழ்த்த சேலையை அள்ளிப் போர்த்தியவாறு அப்படியே தரையில் அமர்ந்து விட்டிருக்கிறார். கிசுகிசுப்பான கள்ள எச்சில் வடியும் சிரிப்புச்சத்தம் சன்னலின் மறுபக்கமிருந்து கேட்கவும்தான் வள்ளிமயில் பாய்ந்து வந்து எங்களிடம் சொன்னது. சொல்லாதது என்னவென்றால் சங்கீதா முதுகில் சன்னலுக்கு வெளியிலிருந்து பேனா மை தெளிக்கப்பட்டது.  

எனக்கு முதலில் புரியவில்லை. நாங்கள் வழக்கமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி மை தெளித்து விளையாடுவதுண்டு என்பதால் இதிலென்ன இவ்வளவு வருத்தப்பட என்றுதான் தோன்றியது ( அறிவிருக்கால, நாம மை தெளிக்கதும் கேர்ள்ஸ் சட்ட போடாம இருக்கைல முதுகுல மை  தெளிக்கதும் ஒண்ணால? நீ கெணத்துல குளிச்சிட்டு பம்புசெட்டு ரூம்ல டவுசர் மாட்டையில ஒனக்கே தெரியாம ஒன் குண்டில எவனாவது மையத் தெளிச்சா என்னல அர்த்தம்? – சிவாஜியின் கோபமான கேள்வி. அவன் என் குண்டியப் பார்த்துட்டான்னு அர்… என் பதில் வாக்கியம் முழுமை பெறாமல் போனதற்கு காரணம் அச்செய்கையின் கீழ்மை என் வாக்கியத்தாலேயே எழுந்து வந்து என் உணர்வை அறைந்ததுதான்).  மெஜூரா இதைச் சொல்லி முடித்துவிட்டு எங்களைப் பார்க்காமல் விடுவிடுவென ஓட்டநடையில் விரைந்து சென்று விட்டார். பிரேம்,சிவாஜி இருவரும் ஆழ்ந்த யோசனையில்  இருக்கும் முகபாவம் வெளிப்பட நானும் அதுபோலவே என் முகத்தை வைத்துக் கொள்ள முயன்றேன். மெல்ல நடக்க ஆரம்பித்த பிரேமை சிவாஜி இணையாகத் தொடர காடேகும் சீதா-ராமனைப் பின்தொடரும் இலக்குவன் என நான் தொடர்ந்தேன். வெளிப்பிரகார முருகர் சன்னதியில் சில விஷயங்களை நாங்கள் முடிவு செய்தோம். அதாவது  பிரேமும், சிவாஜியும் பேசி முடிவு செய்தார்கள்.   

மறுபடி நாங்கள் சபாபதி மண்டபப் படிக்கட்டுகளை அடைந்தபோது சங்கீதா எங்களை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. கூடுதலாக கண்ணீர் வழிந்து மூக்கின் நுனியில் சேர்ந்து மின்னி மறைந்து கொண்டிருந்தது. பிரேம்தான் முதலில் பேசியது. சிவாஜி அவ்வப்போது பேச நான் தலையசைப்பாலும், கையசைவாலும் பங்கு கொண்டேன். அரைமணி நேர பேச்சுக்குப் பின் சங்கீதா கண்களைத் துடைத்துக் கொண்டு எங்களை நிமிர்ந்து பார்த்தார். மெஜூரா முகம் வழக்கமான இறுக்க நிலைக்குத் திரும்பியது. சிவாஜியின் கூடுதல் முன்யோசனையின் பேரில் நாங்கள் ஆறுமுக நயினார் சன்னதிக்குச் சென்று நடந்த சம்பவங்களை வேறு யாரிடமும் கூற மாட்டோம் என நயினார் முன் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் மீது கைநீட்டி சத்தியம் செய்தோம் (இத்தனை ஆண்டுகளில் சத்தியம் காலாவதி ஆகியிருக்கும் என்பதால்தான் உங்களுக்குச் சொல்கிறேன்). 

பேச்சுவார்த்தையின் விவரம் – தன்னை அப்படி ஆண்கள் பார்த்துவிட்டதால் தான் குறைப்பட்டவளாக ஆகி விட்டதாக சங்கீதா துக்கமடைந்திருந்தார். அதுவரை தன்னை யாரும் அதுவரை அப்படி ஒரு பார்வையில்  பார்த்ததில்லை என்பதும், இப்படியும் தன்னை அவமதிக்க முடியும் என்பதும் அவரை அதிர்ச்சிக்கும், அவநம்பிக்கைக்கும் உள்ளாக்கியிருந்தது. மிக முக்கியமாக இந்தத் தகவல் பள்ளிக்குத் தெரிந்தால் வீட்டுக்குத் தெரிந்து விடும், ஏற்கனவே முத்தஷியைக் கவனிக்க சங்கீதா அம்மா ஊருக்கே திரும்பி விடலாமென்றும், சங்கீதா நாகர்கோவிலில் படிப்பைத் தொடரலாமென்றும் சொல்லிக் கொண்டிருப்பதாகவும், சங்கீதாவின் அப்பா அடுத்த ஆண்டு மாறுதல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி (சங்கீதாவின் கோரிக்கைக்கு ஏற்ப) இங்கு தொடர்ந்து  இருப்பதாகவும் தனது  வீட்டு சூழ்நிலை நிலவும்போது இந்த விவகாரம் வெளிவந்தால் தான் உறுதியாக நாகர்கோவில் போக நேரிடும் என்பதால் வெளியே சொல்லவும் முடியாத நிலை என சங்கீதா வேதனைப்பட்டார். ஆகவேதான் உடனே ஆசிரியர்களிடம் சொல்ல வேண்டாமென அவர் நேற்று இரவு கேட்டுக்கொண்டது. 

ஒரு கேர்ளை ஆடை மாற்றும்போது அப்படி ஒளிந்திருந்து பார்ப்பது கண்டிக்கப்பட வேண்டிய குற்றம் மட்டுமல்ல, தண்டிக்கப்பட வேண்டிய குற்றமும் தான் என்பது சிவாஜி தரப்பு (அவன கொற காலு, கொற கையா ஆக்கிறணும். பொம்பளப் புள்ளைய எட்டிப் பாத்தான்னா கண்ணவிஞ்சு போவும்னு எங்க ஆச்சி சொல்லுவா. அப்டி அவியலன்னா நம்மளே கொள்ளிக்கட்டயக் கொண்டு கண்ணுல வச்சி தேச்சுறணும்னும்பா. நான் சுனாகானா கிட்ட சொல்லி அவனுவள தூக்கிப் போட்டு மிதிக்கேன். இதுக்கு போயி நீ ஏம் அழுதுகிட்டு இருக்க? – சிவாஜி).  ஒரு கேர்ளாக இந்த சம்பவத்தில் சங்கீதா குற்ற உணர்வு கொள்ள ஏதுமில்லை. மாறாக அவர் இன்னும் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பது பிரேம் தரப்பு ( உங்க அக்கா, தங்கச்சில்லாம் டிரெஸ் மாத்தும்போது எட்டிப் பாப்பீங்க்களாடா தடிமாடுகளான்னு நீ கேக்கணும் சங்கீதா; நீ அவனப் பாக்கும்போதெல்லாம் உன்ன கேலி பண்ணணும்னுதான் மாடசாமி அப்படிச் செஞ்சான். அப்டி அவன் கேலி பண்ணா நீ அவன் கிட்ட உன் ஃப்ரெண்ட்சை  அழைச்சுண்டு போயி உங்க அக்கா, தங்கைல்லாம் ட்ரெஸ் மாத்தும்போது காமி, போடா ன்னு சொல்லு; அத வுட்டுட்டு அழுதா அவன் நெனச்சது நடந்துர்ற மாதிரில்லையா ஆயிடும் – பிரேம்). எனக்கு சொல்ல எதுவும் வராததால் நான் வழிமொழிதல் செய்தேன் ( அதான் ரெண்டு பேரும் சொன்னாங்கல்லா, நீ அழாத சங்கீதா, பெறகு ஓதுவார் சாமி வந்தார்னா நீ அழுததைப் பாத்துட்டு என்னன்னு விசாரிக்க ஆரம்பிச்சுருவாரு). அதன் பின் மெல்ல மெல்ல அனைவரின் சமாதானத்தாலும் சங்கீதா இயல்பு நிலை திரும்பினார். அவருக்கு மேலும் துணிவும், ஆறுதலும் ஊட்டும் பொருட்டே நாங்கள் நயினார் முன் சத்தியம் செய்து கொடுத்தோம். பெண்கள் தரப்பிலிருந்து விஷயம் கசியாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மெஜூராவும், பையன்கள் தரப்பிலிருந்து கசியாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சிவாஜியும் ஏற்றுக் கொண்டனர். துர்க்கை சன்னதியில் நாங்கள் ஐவரும் பிரேம் சொன்னபடி இத்தவறைச் செய்தவர்கள் தக்க தண்டனை பெற வேண்டுமென வேண்டிக் கொண்டோம். இதே நோக்கத்துக்காக தான் முழு ஆண்டுத் தேர்வு வரை ஒவ்வொரு செவ்வாயும் அடிசுற்று வருவதாக மெஜூரா கூடுதலாக வேண்டிக் கொண்டார். அதனால் தூண்டப்பெற்ற சிவாஜி  5 செவ்வாய் எலுமிச்சை விளக்கு ஏற்றி வைப்பதாக கூடுதலாக வேண்டிக் கொண்டார். என்னை அறியாமலேயே நானும் பட்டவாரத்திக்கு முட்டை ஓதி விடுவதாக வேண்டிக் கொள்ள பிரேம் உடனே அந்த வேண்டுதலை மறுத்து திரும்ப எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார் ( டேய், இந்த அம்மன்ட்ட வேண்டறதைதான் இங்க சொல்லணும், பட்டவராயன் கோவில்ல போயிதான் இந்த வேண்டுதலை சொல்லணும். ஒரு சுவாமியோட வேண்டுதலை இன்னொரு சுவாமி கிட்ட சொல்லுவாளா? அப்புறம் முட்டை ஓதி விடறதெல்லாம் செய்வினை வைக்கற மாதிரி. பலிக்கலைன்னா வைச்சவங்களையே திருப்பி அடிக்குமாம். அதெல்லாம் வேண்டாம். பேசாம நீ மெஜூரா மாதிரி ஆடிப் பிரதட்சிணமே பண்ணு, என்ன? – பிரேம்). எங்களது கூடுதல் வேண்டுதல்களால் மனம் நிறைந்த சங்கீதா இந்த நிறைவால் நடந்த சம்பவத்தின் குறை சற்றே மறைய புன்னகை அரும்பிய பழைய முகத்தை நினைவுப்படுத்தும் முகத்துடன் விடை பெற்றார். 

அதுவரை உடலால் வேறுபாடு அறியாத எங்கள் நட்பில் சிறு உறுத்தலென இச்சம்பவம் மாறியது. சங்கீதா முன்பு போலவே அன்பு பாராட்டினாலும் எங்கள் மூவரைத் தவிர வேறு எந்த பையன்கள் பார்வையையும் சற்று பதட்டத்துடனே எதிர்கொண்டார். வாழ்நாள் முழுவதும் வடுவென அவர் வாழ்வில் நிலைத்து விட்ட சம்பவத்தை ஐந்து நிமிட திமிருக்காக செய்து விட்டவர்களுக்கு இது போலவே இச்சம்பவம் வடுவாக நிலைத்திருக்குமா? சங்கீதா முன்பு நாங்கள் இதை பேசாமல் விட்டாலும் எங்கள் மூவருக்கும் இதை நினைக்க நினைக்க ஆத்திரம் பெருகியது. அதிலும் மாடசாமி அவ்வப்போது (சங்கரம்மாள் டீச்சர் இல்லாதபோது) சங்கீதா பார்வையில் படுமாறு வந்து மைப்பேனாவை உதறிக் காட்டுவதைப் பார்க்கையில் அவனை ஏதாவது செய்ய வேண்டுமென்ற வெறி எழுந்தது. அதுவரை சிறுவர்களாக இருந்த எங்களையும்  வேறொருவராக இச்சம்பவம் மாற்றி விட்டது. இந்த மாற்றங்களோடுதான் எட்டாம் வகுப்பிற்குள் அடியெடுத்து வைத்தோம்.

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் 14தெய்வநல்லூர் கதைகள் – 16 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.