அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்

This entry is part 3 of 72 in the series நூறு நூல்கள்

தி. ஜானகிராமனின் நாவல்களில் மோகமுள்ளுக்கு அடுத்தப்படியாகப் பேசப்பட்டது “அம்மா வந்தாள்”. அதன் கதை 1966-ல் எழுதப்பட்ட காலத்திற்கு மிகவும் முன்னோக்கிய கதை. இன்றுவரை அது பேசப்படுவதற்கு அதன் அடிப்படைச் சரடான அலங்காரத்தம்மாளின் செயல். ஆனால் அது மட்டும்தான் அந்த நாவலா? பார்க்கலாம்.

அப்பு வேதப் படிப்பை முடித்து ஊருக்குக் கிளம்பத் தயாராவதில் நாவல் ஆரம்பிக்கிறது. வேதப் பாடசாலை நடத்தும் பவானியம்மாள், அவருடைய தம்பி மகள் இந்து இருவரும் அறிமுகமாகிறார்கள். அப்பு பாடசாலையில் சேர்ந்த நாள்களை எண்ணிப்பார்க்கிறான். அவன் அம்மாவின் உத்தரவில் அவன் வேதம் படிக்க அனுப்பப்படுகிறான். இந்து அவனை அங்கேயே நிரந்தரமாகத் தங்கவைக்க ஆசைப்படுகிறாள். வெளிப்படையாக அவன்மீது இருக்கும் மையலை வெளிப்படுத்துகிறாள். அதிர்ந்துபோன அப்பு அவளை மறுக்கிறான். பேச்சு முற்றி, இந்து அவன் தாயாரைப் பற்றிய அவதூறைச் சொல்கிறாள்.

ஊருக்குச் செல்லும் அப்பு, அங்கே குடும்பத்தோடு ஒட்ட முடியாமல் தவிக்கிறான். இந்து தன் தாயாரைப் பற்றிச் சொன்ன அவதூறு உண்மை எனத் தெரியவருகிறது. குடும்பத்திற்கே தெரிந்தாலும் அனைவரும் அதை விழுங்கிக்கொண்டு வளைய வருகிறார்கள். அவனிடத்தில் அம்மா ஒப்புதல் வாக்குமூலமாக ஏன் அவனை வேதம் படிக்க அனுப்பினாள் என்று சொல்கிறாள். இதனிடையில் அப்பு மீண்டும் பாடசாலைக்குத் திரும்ப நேர்கிறது. பவானியம்மாள் மற்றும் பலருக்கும் அவன் அம்மாவைப் பற்றித் தெரியும் என்ற உண்மையை அறிகிறான். மீண்டும் அவன் ஊருக்குத் திரும்பினானா? அவன் அம்மாவுடனான உறவு என்னவானது என்பதை நாவல் பேசுகிறது.

வேதம் என்பதை எப்படி வரையறுக்க முடியும்? அது அருவமானது. யாரிடமிருந்து உருவானது? அறிவியல்பூர்வமாக ஓர் இனத்திலிருந்து வந்தது என்று சொல்லலாம். ஆனால் அதுதான் உண்மையா? இதைப்போலவே அலங்காரத்தம்மாவின் செயல்களை எப்படி விளக்கலாம்? காமம்? கணவன்மீது வெறுப்பு? போதாமை? திஜா அதை படிப்பவர் கற்பனைக்கு விட்டுவிடுகிறார். காமத்தையும் வேதத்தையும் இங்கே இணைக்கவில்லை. மனதின் அடிப்படை உணர்ச்சிக்கும் ஆதாரம் தேடுவது இயலாது. அம்மா அப்புவை வேதம் படிக்க அனுப்புவது அருவமான அதன் புனிதம், தன் பாவச் செயலைப் பொசுக்கும் என்பதால். இவ்வளவு தெளிவாகச் சிந்திக்கும் அவள், பின் ஏன் தொடர்ந்து அந்தப் பாவத்தில் (அவள் பார்வையில்) ஈடுபடுகிறாள்?

கதையில் மிகக் குறைவாக வரும் பாத்திரம் அப்புவின் தகப்பனார் தண்டபாணி. அதனாலேயே அப்பாத்திரம் அதிகமாகப் பேசப்படவில்லை. இதைத் திஜா தெரிந்தே செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. தண்டபாணியின் உள் எண்ணங்கள் மிகச் சாதாரண மொழியில் எழுதப்பட்டாலும் அவரின் மன ஆழங்கள் அலசப்படவில்லை. இத்தனைக்கும் அந்தப் பாத்திரம் ஓர் அறிஞராகக் காட்டப்படுகிறது. இதைக் கதாசிரியரின் சுதந்திரம் என்று எடுத்துக்கொண்டாலும் நாவல் முழுமை அடையவில்லை என்று தோன்றுகிறது. கதை இந்தக் கோணத்தை அலசி இருந்தால் நாவல் இன்னொரு தளத்தை அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் திஜா-வின் மேதமை வெளிப்படும் இடங்கள் இந்து, அலங்காரத்தம்மாள் மற்றும் பவானியம்மாள் வழியே அப்பு நடத்தப்படும் இடங்கள். அம்மா அப்புவிடம் ரயில் நிலையத்தில் தன் அந்தரங்க வாழ்வை மனம்விட்டுப் பேசும் இடத்தில் “நான் என்னடா பண்ணுவேன்” என்று அங்கலாய்க்கும் இடம், அடுத்த இரண்டு நிமிடங்களில் அப்புவின் மனதைச் சலனப்படுத்திய பெண்ணின் நடத்தையைச் சந்தேகிக்கும் இடம் என்று திஜா-வால் பல்வண்ணக் காடசிக் கருவியாக மாறுகிறாள்.

இந்து யமுனாவைவிட உயிர்ப்பான பாத்திரம் என்று தோன்றுகிறது. அவளுக்குத் தெரியும் அவள் நிலையில் இன்னொரு திருமணம் சாத்தியமில்லை என்பது. ஆனால் அவளால் அப்புவை விடமுடிவதில்லை. காதலில் திளைக்கும் அவள் அப்பு அந்த வீட்டில் நடமாடி, அவனை ஸ்பரிசத்தால் போதும் என்ற ஆசை அல்லது வெறியில் அவள் அவனின் அம்மாவைப் பற்றிய உண்மையையும் உடைக்கத் தயாராக இருக்கிறாள். கரிச்சான் குஞ்சு, திஜா பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் இதைப்போன்ற சம்பவம் ஒன்று வருகிறது. திஜா அதை அடிப்படையாக வைத்து இந்து-வின் பேச்சை அமைத்திருக்கலாம். “கங்கைப் பருந்தின் சிறகுகள்” வாஸந்தி பாத்திரம் இந்துவின் பாத்திரத்தை ஒத்திருப்பதைப் படிப்பவர்கள் காணலாம்.

பவானியம்மாள் மரபான பெண்மணி என்றாலும் அவளால் இந்துவின் மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தன் காலத்திற்குப் பிறகு அப்புவையும் அவளையும் ஊர் பேசப்போவதைச் சொல்வதுபோல அவர்களுக்கு இடையே நிலவும் உறவைக் கோடிகாட்டுகிறாள். தாந்தோணி தைரியமாக இந்துவை அப்புவுக்கு மணம் முடிப்பேன் என்று சொல்வதை அவளால் மவுனமாகத்தான் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அம்மா, இந்து, பவானியம்மாள் மூவரும் மரபில் சிக்கிக்கொண்டு, உடைக்க ஆசை இருந்தாலும் இயலாத நிலையில்தான் வாழ்கிறார்கள்.

தமிழ் இலக்கியத்தில் திஜா-வின் பெண்கள் பற்றியே நிறைய எழுத முடியும். ஏனோ தமிழ் விமர்சகர்கள் மோகமுள் யமுனாவைவிட்டு வெளிவரவில்லை. ஏன் அலங்காரத்தம்மாவை அல்லது மரப்பசு அம்மிணி பற்றிப் பேசுவதில்லை? இருவருமே ஆண் சமூகத்தைப் பயப்படுத்துவதாலா? அலங்காரத்தம்மா பிள்ளைகள் தலையெடுத்த பின்னரும் சிவசு-வைத் தன் வீட்டிற்கே, அதுவும் மாடி அறைக்குச் சுதந்திரமாக வரவழைப்பதை இன்னும் நம்மால் ஜீரணிக்கமுடியவில்லை?

இந்தக் கதை க.நா.சு. மற்றும் தி.ஜா-வின் நண்பரான கரிச்சான் குஞ்சு இருவரையும் வருத்தியிருக்கிறது. அதுவும் திஜா-வின் அண்ணா இந்தக் கதையில் வரும் பாடசாலை போன்ற ஒன்றில் வேதம் படித்தவர். கரிச்சான் குஞ்சு, திஜா நினைவுகளில்:

“அம்மா வந்தாள் நாவலில் வரும் பாடசாலை – அதை ஏற்படுத்திய அம்மாள் – அங்கு ஒரு பெண் இருந்தது முதலிய அம்ஸங்கள் நிஜமானவை. ஜானகியின் அண்ணா அந்தப் பாடசாலையில் வேதக்கல்வி முற்றும் கற்றதும் உண்மை. ஆனால் அவன் செய்யும் கதைக்கும் இந்த மூலங்களுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. அந்த நாவலைப் படித்து அவனுடைய தமையனார் மிகவும் வருத்தப்பட்டார். எனக்கும் அதைப் படிக்கும்போது வருத்தம்தான். (ஒருமுறை நான் உயர்திரு. கி.வா.ஜ.வுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஜானகிராமனுக்கு ஏன் ஸாஹித்ய அகாடமி அங்கீகாரம் இல்லை என்று கேட்டு விவாதித்தேன். ‘எல்லாருமே ‘Bad taste’ என்று கூறினார்கள்,’ என்றார்.) ‘அம்மா வந்தாள்’ என்னுள் ஏற்படுத்திய உணர்வும் இத்தகையதே.”

ஆனால் திஜா அவருக்கே உரிய அமைதியான மொழியில் கலை உலகில் நடக்கும் நிகழ்வுகளைப் புற உலகில் பொருத்திக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்கிறார். அதே நினைவுக் கட்டுரையில் இன்னொரு நிகழ்வும் வருகிறது. திஜா-வின் ஒரு சகோதரி மறைந்தவுடன் அதே மாப்பிள்ளைக்கு அவரின் இன்னொரு சகோதரியை மணமுடித்தது குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பின், அந்த மாப்பிள்ளை மறைந்தபோது அவர் சகோதரிக்குச் செய்த சடங்குகளை வெறியோடு தடுக்க முயன்றிருக்கிறார். அவரால் தன் தந்தையை மீற முடியவில்லை.

பெண்ணை உயிருள்ள பிணமாக ஆக்கும் சடங்கை , தந்தையை மீற முடியாத ஆத்திரத்தை “அம்மா வந்தாள்” நாவலாக எழுதித் தீர்த்துக் கொண்டாரோ?

உதவிய கட்டுரை:

அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் (1966)

https://dialforbooks.in/product/1000000001932_/

Series Navigation<< ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வைஒற்றன் – அசோகமித்திரன் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.