கே.ஜே  அசோக்குமாரின் ‘ரமணி குளம்’

This entry is part 57 of 72 in the series நூறு நூல்கள்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் நான்கும்   தென்மாவட்டங்களில் நாலும் மிகக்கடுமையான மழை வெள்ளத்தில் சிக்கி தவித்திருக்கும் இந்த நேரத்தில் மிகவும் டாப்பிக்கலாக  அந்தப் பிரச்னையே மையமாக வைத்து ஆனால் சில மாதங்கள் முன்னாலேயே வந்திருக்கிறது.கே.ஜே  அசோக்குமாரின்  நாவலான ‘ ரமணி குளம்’ .அநேகமாக 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இந்த நாவல் வெளிவந்த நேரம், இந்த நாவல் பேசும் முக்கியமான பிரச்னை மீண்டும் ஒரு தடவை சென்னையில் நடக்கும் என்று நாவலாசிரியர்  எதிர்பார்த்திருக்க மாட்டார்.தென்மாவட்டங்களில் அது நடந்திருக்கிறது.அது நடந்து விட்டதால், இந்த நாவல் மிகவும் Contemporary ஆகவும், Topical ஆகவும் மாறியிருக்கிறது.இம்மாதிரியான நாவல்கள் தமிழில் வருவது குறைவு. அதனாலேயே இதற்கு ஒரு சிறப்பிடம் அமைகிறது. 2015 சென்னை வெள்ளம் பற்றிய நாவல்கள் என்றால் சைலபதியின் ‘பெயல்’ விநாயக முருகனின் ‘நீர்’ ஆகிய  நாவல்கள் நினைவுக்கு வருகின்றன.இன்னும் நிறையவே வந்திருக்க வேண்டும்.

     சென்னைக்கு அருகே சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் அடர்ந்த வனமாக இருக்கும் ஒரு  இடம்  மெல்ல மெல்லத் தோட்டமாகவும் வயல்களாகவும் மாறி  குடியிருப்புப் பகுதியாகி, பின் மாநகரத்தின் ஒரு அங்கமான புற  நகராக மாறி,அடுக்ககக்  கலாச்சாரம் ஊடுருவி அதன்   நீர் நிலைகள்  சுருங்கி மாசாகி  கடும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை மூன்று தலைமுறைக் கதையாக  நிதானமாக காலத்தில் முன்னும்  பின்னும் சென்று  விவரிக்கிறது நாவல்.அந்தக் குளம்தான்  ரமணி குளம்.

  இந்த கால  மாறுதல்,மற்றும் அந்த இடம் அடையும்  மாறுதல்  பெரும்பாலும் அதை செயல்படுத்தும்  அதனால் பாதிக்கப்படும் மற்றும் அதனை எதிர்த்து,நிலத்தையும் குளத்தையும், மீட்க போராடவும் செய்யவும் மனிதர்களின் கதையாகவும் விரிகிறது.அந்த  இடத்தின் துவக்கக்காலத்திலிருந்தே அங்கு இருந்து வரும், மனிதர்களான .மனோகரியும்,அவரது மகன் முத்து வேலனும்,தஞ்சைப் பகுதியிலிருந்து வந்து அங்கே குடியமர்ந்த, இந்த மாற்றங்களுக்கு சாட்சியாகவும், அது ஏற்படுத்தும் அழிவுகளை தடுக்கப் போராடும் நேர்மையான,அந்த நேர்மைக்கான விலையாக பல இடங்களுக்குப் பந்தாடப்படும்  பொதுப்பணித்துறை  ஊழியர் ராமமூர்த்தி ஐயர், அவருக்கு துணையாக இருக்கும் குலசேகரன்,தனது  மகனுக்காக சென்னைக்கு வந்து மகன் மீண்டும் சொந்த ஊருக்கே போய்விட்டாலும், இந்த இடம் மற்றும் மனிதர்களின் மீது உருவாகிவிட்ட பிடிப்பினால் இங்கேயே தங்கி போராடத் துணியும் ஜெயராமன் ஆகிய பாத்திரங்களின் வாழ்க்கை,மனவோட்டங்களின் மூலம்  சொல்லப்படுகிறது.நிலம் சுற்றுச்சூழல் அழிவோடு இன்றைய கலகட்டத்த்தில் நம் சமூகத்தில் பரவலாககே காணப்படும், ,முதியவர்களின் தனிமையும் ஒரு அடி  ஓட்டமாக நாவலில் வருகிறது.

   இந்தக் கதாபாத்திரங்களில் மிக நன்றாக வந்திருப்பவை,ராமமூர்த்தி அய்யரும், முத்துவேலனின் தாயாரும் ஆன  மனோகரியும் என்று சொல்ல வேண்டும்.

       ராமமூர்த்தி கதாபாத்திரம் ஒரு வகையில் டிராஃபிக் ராமசாமியை நினைவூட்டுகிறது. மிக நேர்மையான ஊழியரான அவர் தனது  இளமையில் தனது  துறையில் நேர்மையாக நடந்து கொண்டதற்காக  இட  மாற்றங்களினால்  பந்தாடப்படுவதில் தொடங்கி தனது இறுதிக் காலம்வரை அமைப்புக்கு எதிராகவும், சமூகத்துக்கு எதிராக தவறு செய்யும் தனி மனிதர்களுக்கு எதிராகவும் போராடுவது அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாக ஒரு கட்டத்தில்  இடமாற்ற ஆணை யுடன் அவர் நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்து தூங்கும் குழந்தைகளைக் கண்டு மனமுருகி கொஞ்சும் இடமும்,அவரது மனைவி தனது கணவனின் குணத்தை,நிலையைப் புரிந்து கொண்டு அவரது தடுமாற்றத்தைக் கண்டு மனம் தளராமல்,வெறுக்காமல், ‘என்ன உங்களுக்கு மாத்தலாயிடுத்து’ அவ்வளவுதானே ..என்று ஆறுதலாக கேட்கும் இடம் அழகாக வந்திருக்கிறது.   

  போலவே சென்னையில்  இருக்கும் ரமணிகுளம் பகுதியில் ஒரு ஓடையை மறி த்து வீடு கட்டியிருக்கும்  அரசியல் அதிகாரமிக்க ஒரு லோக்கல் தாதாவிடம் வாதாடி அடி படும்  இடமும் மிக நன்றாக வந்திருக்கிறது.அவருக்கும் அவரது நண்பர்,குலசேகரனுக்கும் புதிதாக வந்து சேரும் ஜெயராமனுக்கும் இடையே நடக்கும் , இயற்கை, வாழ்க்கை,சட்ட நெறிகள் ஊழல்கள், பற்றிய உரையாடல்களும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

       மனோகரி எனும் அந்தக் கதாபாத்திரம் இந்த ரமணி குளம் எனும் இடத்தின் மறு வடிமாகவே  உருவாகி வந்திருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.மனோகரியும் அவளது கணவன் மருதையனும் ( அது மருத நிலம்தான்) ரமணி குளம் இருக்கும் காட்டுப்பகுதியை திருத்திக் கழநையாகவும் தோட்டமாகவும் மாற்றியதில் முக்கியமானவர்கள்.இந்தகே காட்டு நிலம் அப்படி மாறியதும், அவளது கணவன் மருதையன் பாம்பு கடித்து இறந்து விடுகிறான்.மருதையனினின் இறப்பை மருத  நிலமாக மாறிய அந்த நிலததின் இராப்பகவும் கொள்ளலாம். அதற்குப் பின் அந்த நிலம் சிறுகச்சிறுக தனது இயல்பை  இழந்து சீர்கெட்டு வெள்ளத்தில் சீரழிந்து போவது மனோகரி தனது கணவன் இறந்த பின் எதிர் கொள்ளும் வாழ்க்கையை ஒத்தே  இருக்கிறது.இறுதியில் மனோகரியும் அந்த நிலமும் அடையும்  முடிவும் பரிதாபகரமானது.மனோகரிக்கும் ராமமூர்த்திக்கும் இடையிலான அந்த மேலான நட்பும் மரியாதையுடன் கூடிய இணக்கமும்  கூட அந்த நிலத்துக்கும் ராமமூர்த்திக்கும் இடையேயான பாசம் மிகுந்த  உறவையே பிரதிபலிக்கிறது என்பதை பார்க்கலாம்.

   பெரும்பாலும் இன்றைய  நவீன வாழ்க்கையின் பல எதிர்மறை அம்சங்களின் தொகுப்பாகவே நாவல் அமைந்த போதும், இறுதியில் ஒரு நம்பிக்கை ஒளியுடனேயே முடிகிறது என்பதும் ஒரு சிறப்பு.இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன்.இன்றைய தமிழகச்  சூழலில் ஒரு வகையான அரசியல் சரிநிலையை இந்த நாவல் மீறுகிறது. அது எது என்பதை நான் சொல்லப்போவதில்லை. வாசகர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளலாம்.

   நாவலின் சிறு குறைகள் என்றால், துவக்கம் சிறப்பாக அமையாமல், இழுக்கிறது. அனாவசியமான நீளமான விவரணைகள் நாவலின்,சரளமான  ஒட்டத்தை  துவக்கத்தில் தடுக்கின்றன..மேலும் இன்னும் கொஞ்சம் கட்டுக் கோப்புடன் கோர்வையாகவும் இருந்திருக்கலாம்.  கொஞ்சம் அங்கே இங்கே என்று அலை பாய்கிறதே   என்ற உணர்வு தோன்றுகிறது.இன்னும் கொஞ்சம் இறுக்கமான எடிட்டிங் உதவியிருக்கக்கூடும்..இது ஆரம்பத்தில் இருக்கும் ஓரிரண்டு பகுதிகளுக்குத்தான்.

   அப்புறம் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கும் இருக்கும் ஒரு பிழையான  புரிதல் நாவலாசிரியருக்கும் இருக்கிறது. ராமமூர்த்தி பொதுப்பணித் துறையில் பணிபுரிபவர், அவர் தனது மேலதிகாரியுடன் முரண்படுவது  ஒரு ரோடு ஒப்பந்தத்துக்கான விஷயம் சம்பந்தமாக. அதற்காகவே அவர்  இட மாற்றம் செய்யப்படுகிறார் என்று வருகிறது. தமிழகத்தில் ரோடுகள், அதாவது சாலைப்பணிகள் பொதுப்பணித் துறை வசமில்லை. நெடுஞ்சாலைத் துறையிடமே உள்ளன. பொதுப்பணி துறை இங்கே அரசுக் கட்டிடங்கள், நீர் நிலைகள், அணைகள்,கால்வாய்கள் ஆகியவற்றைக்கட்டுதல் பராமரித்தல்  ஆகியவற்றுக்குத்தான் பொறுப்பு.இவையெல்லாம் சிறு குறைகளே.ஒட்டு மொத்தமாக நாவல் ஏற்படுத்தும் நேர்மறையான பாதிப்பினை இவை கெடுப்பதில்லை.

       ஆனால்,இப்படியொரு நல்ல  நாவலின் தயாரிப்பு/பதிப்பு  அதற்கான சிறப்புடன் இல்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. முதல் பாதிவரை ஏராளமான எழுத்துப்  பிழைகள் உள்ளன. சில இடங்களில் வாக்கிய அமைப்பே பிழையாக இருக்கின்றன.எல்லாவற்றுக்கும் மேலாக பிரதான கதாபாத்திரமான ராம மூர்த்தி அய்யரின் மனைவியின் பெயரான அலமேலு என்பது ஒரு அத்தியாயம் முழுக்கக் கமலம் என்றே வந்திருக்கிறது.இவ்வளவு கவனக்குறைவான பிழைகளை  எல்லாம் இதற்கு  முன் நான் காலச்சுவடுப் பதிப்பகத்தின் நூல்களில்  பார்த்ததேயில்லை.நான் நாவலை கிண்டிலில் படித்தேன். ஒருவேளை அச்சில் இவ்வளவு பிழைகள்  இல்லையோ என்னமோ..இருப்பினும் இரண்டாம் பதிப்பில் இவை களையப்பட வேண்டும் .

     இந்த ஆண்டில் நான் வாசித்த நல்ல புனைவுகளில் ஒன்று இது.

***

நூல் விவரங்கள்

  • புத்தகம்: ரமணிகுளம் (Ramanikulam) (Novel) (Tamil Edition) Kindle Edition
  • எழுதியவர்: கே.ஜே. அசோக்குமார் K.J. Ashokkumar
  • ASIN ‏ : ‎ B0CBMSZLZS
  • பதிப்பாளர்‏ : ‎ Kalachuvadu Publications Pvt. Ltd.,; 1st edition (July 1, 2023)
  • வெளியீட்டு தேதி ‏ : ‎ July 1, 2023
  • பக்கங்கள் ‏ : ‎ 295 pages

90களின் தொடக்கத்தில் தமிழகமெங்கும் நிலங்களைக் கூறு போட்டு விற்றுக்கொண்டிருந்த அவலத்தையும் அதன் விளைவாக மனிதனுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் பற்றிய நாவல் இது.

ரமணிகுளம் சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு முந்தைய மதராசபட்டினத்தின் கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியிலிருந்த குளமாகும். சுதந்திரமடைந்ததற்குப் பிற்பாடு குளம் மனிதர்களின் வசிப்பிடங்களாக்கப்பட்டதை இந்த நாவல் விவரிக்கிறது. மனிதர்கள், தாங்கள் அடைய விரும்பும் நிலத்தால் பறவைகளை, தானியங்களை, மரங்களை, தூய காற்றை, இருளை, ஒளியை, சகமனிதர்களை எப்படி இழக்கிறார்கள் என்பதையும் நாவல் பேசுகிறது. நிலமென்பது வெறும் இடமல்ல; அது தனிமனிதரின் கௌரவமான அடையாளம். மனிதர்களின் பேராசைகளை வளர்த்து, பிறரைத் துன்புறுத்தவும் வன்செயல்களில் ஈடுபடவும் தூண்டும் மாயை என்பதை ரமணிகுளம் காட்டுகிறது.

ரமணிகுளம் (Ramanikulam) (Novel) (Tamil Edition) eBook : கே.ஜே. அசோக்குமார் K.J. Ashokkumar: Amazon.in: Kindle Store

நூறு நூல்கள்

புத்தக அறிவிப்பு – மாயக் குரல் சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “கே.ஜே  அசோக்குமாரின் ‘ரமணி குளம்’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.