இருகால் கொண்டெழும் பீமத் துணைவன்

சுமார் 80,90,100 கிலோ எடையுள்ள மனிதரை அனாயாசமாக தூக்கிக் கடாசும் ‘பீம் பாய்’ (படம்- மைக்கேல், மதன, காமராஜன்) பாத்திரம் சிறுவர்களை மட்டுமல்ல, பெரியவர்களையும் கவர்ந்த ஒன்று.

மாய யதார்த்தப் புனைவுகளில் நாம் கற்பனையில் இரசித்து மகிழ்ந்தவர்களின் அசாத்திய திறனோடு, மனித வடிவில் ரோபோக்கள் உருவாகி செயல் புரிவதை தொழில் நுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது.

அஜிலிடி ரோபோடிக்ஸ்

மனித உரு ரோபோக்களின் தொழிற்சாலை சேலம், ஒரெகானில், அமெசான் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உருவாகி வருகிறது. ஓராண்டில் 10,000 மனித வடிவிலான தானியங்கி ரோபோக்கள் உற்பத்தி செய்யப்படும். பெரும் நிறுவனங்களுக்கு எதற்காக இந்த பீமர்கள் தேவைப்படுகிறார்கள்? அணுக முடியா இடங்களுக்கும் சென்று, பொருட்களை, இழுத்து, நகர்த்தி, சேதமில்லாமல் அவற்றைக் கொணரும் திறன் இவைகளுக்கு இருப்பதால் தான். ‘அஜிலிடி ரோபோடிக்ஸ்’ என்ற நிறுவனத்தின் ‘ரோபோஃபேப்’ துறை, தற்சமயம் தொழிலகங்களில் பயன்படும் ரோபோக்களைக் காட்டிலும், இந்த மனித உருவ ரோபோக்கள் வேகம் மிகுந்தவையாகவும், பல்லாற்றல் கொண்டவையாகவும் இருக்கும் என்று கூறுகிறது.

A humanoid robot perched on two legs and reaching upwards with its arms.

அமெசானுக்காகச் சோதனை செய்யப்படும் இந்த ரோபோவில், ‘டிஜிட்’ என்ற பாட் (மென் பொருள்) பயன்படுத்தப்படுவதாக ‘அஜிலிடி ரோபோடிக்ஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி டேமியன் ஷெல்டன் சொல்கிறார். இக்கட்டுரை வெளியாகும் நேரத்தில் அனேகமாக தொழிற்சாலைப் பணிகள் துவங்கியிருக்கக்கூடும். பயன்பாட்டு நோக்கத்துடன் அமைக்கப்படும் உலகின் முதல் ரோபோ தொழிலகம் என்று அவர் பெருமிதப்படுகிறார்.

அஜிலிடி நிறுவனம் 2016ல் தொடங்கப்பட்டது. இதுவரை 100 ரோபோக்களை தயாரித்துள்ளது. 70,000 சதுர அடிபரப்பில் சேலம், ஒரெகானுக்கு தன் தொழிற்சாலையை, மாற்றி வணிக அளவில் ‘டிஜிட்’  உற்பத்தி செய்ய இவ்வாண்டில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவர் சில செய்திகளையும், திட்டங்களையும் சொல்கிறார்:

  • எத்தனை விரைவில் முடியுமோ, அத்தனை விரைவாகச் செயல்பட்டு இந்த ரோபோக்களை நாங்கள் பயனாளிகளுக்கு அனுப்புவோம்.
  • எங்களுடைய மாபெரும் திட்டம் பொதுவானச் செயல்களுக்கான ரோபோக்களை மனித உருவில் உருவாக்குவதாகும்.
  • இந்த ‘டிஜிட்’ற்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக, கிடங்குகளில் மனித உருவிலான இந்த பீமர்களின் தேவை அளப்பரியது. வணிக நிறுவனங்கள் இவற்றின் செயல்பாடுகளை அறிந்து விரும்புவதால், வணிகத்திற்கான எண்ணிக்கையிலும், நோக்கத்திலும் இவை உற்பத்தி செய்யப்படும்.
  • தொடக்கத்தில் நூறு ரோபோக்களில் ஆரம்பிப்போம்; அது வருடத்திற்கு 10,000 என்ற என்ணை எட்டும்.
  • பரந்த எண்ணிக்கையில் 2025ல் எங்கள் ரோபோக்கள் கிடைக்கும். எனினும், எங்களுடன் கூட்டு சேரும் திட்டத்தில், தங்கள் தங்கள் தளவாடத் தேவைகள், கிடங்குகள் முதலானவைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் நிறுவனங்களுக்கு, ‘டிஜிட்’ அவர்களின் தேவைக்கேற்ப அமைத்துத் தரப்படும்.
A rendering of RoboFab, a manufacturing facility for humanoid robots.

கீழே விழுந்துவிடாமல், இணைந்து பணியாற்றும் மனிதர்களுக்கு ஊறு செய்யாமல் இரு காலில் நடக்கும் ரோபோக்களை உருவாக்குவது பொறியியல் தொழில் நுட்பத்தின் மகத்தான சாதனை. பலத் திறமையாளர்கள் தோற்ற இடமும் இதுதான். ஆற்றல் மிக்க கரங்களும், தோள்களும், தடுமாறாத கால்களும் கொண்டுள்ள இந்த பீமசேனர்கள் நுகர்வோர் குழுமங்களுக்கு உதவும் கரங்களாக உருவெடுக்கின்றன.

இந்தத் துறையில் போட்டியாளர்கள் இல்லையா?

டெஸ்லா- ஆப்டிமஸ்

பாஸ்டன் டைனமிக்ஸ்- அட்லஸ்

சேங்க்சுரி ஏ ஐ- ஃபீனிக்ஸ் மற்றும் பலர்.

அமெசான்

அமெசான், தன்னுடைய பல்வேறு செயல்பாடுகளுக்காக ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது. சியாட்டிலின் தெற்கே அமைந்துள்ள ஒரு ஆய்வகத்தில் ‘டிஜிட்’டை பரிசோதித்து வருகிறது. 2022ல் அஜிலிடி நிறுவனம் நிகழ்த்திய $150 மில்லியன் நிதிச் சேர்ப்பில், அமெசான் குறிப்பிட்ட அளவில் பங்கெடுத்துள்ளது.

அமெசானின் தலைமை ரோபோடிஸ்ட் டை ப்ரேடி இந்த இருகால் ரோபோக்களைப் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார். நாங்கள் அஜிலிடியுடன் கடந்த ஏப்ரலில் இருந்தே இணைந்து பரிசீலிக்கிறோம்.

  • இயக்கங்கள், அதிலும் குறிப்பாக கால் கொண்டு நடந்து, கை கொண்டு பற்றும் ரோபோக்கள் என்னைக் கவர்கின்றன. இத்தகைய ரோபோக்கள் தொடக்கக் கால கட்டத்தில் தான் உள்ளன என்ற போதிலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • மனிதர்கள் சூழ்ந்துள்ள இடத்தில் இதனுடைய செயல்பாடுகளை அவதானிக்க வேண்டும்.
  • சமச்சீரற்ற நிலத்தில், சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள ரோபோக்களைவிட இந்த மனித உரு ரோபோக்கள் சிறப்பாகச் செயலாற்றுகின்றன. இதை விடவும் அதிசயம், நெருக்கமான மூலைகளிலும் அவை தம்மை திருப்பி அமைத்துக் கொள்ளும் சாகசம்!

ரோபோக்கள் மனித வேலையைப் பறித்து விடுமா? 

வேலைகளில் தானியங்கிகளின் பாதிப்பு என்பதைப் பற்றி அக்டோபரில் எம் ஐ டியுடன் இணைந்து அமெசான் ஒரு ஆய்வு செய்தது. அதன்படி, கடந்த 10 வருடங்களில் அது 7,50,000 ரோபோக்களைப் பயன்படுத்தி வந்திருந்தாலும், புதுவித 700 வேலைகள் மனிதர்களுக்காக உருவாகி வந்துள்ளது. 

திரும்பத் திரும்பச் செய்யும் வேலைகளை, ஒரே மாதிரியாக இருப்பவைகளை ரோபோக்கள் செய்யட்டும்; மிக நல்ல முயற்சிகளில், சிக்கலான விஷயங்களுக்கான தீர்வைக் காண்பதில் மனிதர்கள் பணி புரியட்டும்.

மனித உரு ரோபோக்கள் மானுடவியலில் ஆய்விற்கும், கிளர்ச்சிக்கும் ஆட்படுபவை. அவைகளை மிகு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஒரு நாள், மனிதன் ரோபோவைப் பார்த்து,
“யாயும், ஞாயும் யாராகியரோ?
எந்தையும், உந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல அன்புடை
நெஞ்சம் தாம் உதவினவே” என்று பாடக்கூடும்!

உசாவி: https://www.axios.com/2023/12/05/humanoid-robot-factory-agility-bipedal-amazon Dec 5,2023 Author : Jennifer A. Kingson

நாங்கள் முதன்மையாகக், காலியான பெட்டிகளை அகற்றுவதில் இவைகளை ஈடுபடுத்த உள்ளோம். சரக்குகள் அடுக்கப்பட்டு, சேருமிடத்திற்கு அவை அனுப்பப்பட்ட பிறகு காலியாக உள்ள எங்கள் மஞ்சள் நிறப் பெட்டிகளை அகற்றுவது தொடர்ந்து நடைபெறும் ஒரு பணி. அதில் அலுப்பில்லாமல் இந்த மனித உரு ரோபோக்கள் செயல்படும்.

மனிதர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள இடங்களில், தங்கள் உருவம் மற்றும் அமைப்பால், இந்த ‘டிஜிட்’, கிடங்குகளின் மூலைமுடுக்கெல்லாம் அலசி, புரிந்து கொண்டு, தக்க இடத்தில் தக்க விதத்தில் செயல்படும். 5 அடி 9 அங்குலம் 140 பவுண்ட் எடை கொண்ட இந்த ரோபோ தனக்குத் தேவையான நேரத்தில் தானாகவே மறு மின்னேற்றம் செய்து கொண்டுவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.