- அதிரியன் நினைவுகள்-1
- அதிரியன் நினைவுகள்-2
- அதிரியன் நினைவுகள் -3
- அதிரியன் நினைவுகள் – 4
- அதிரியன் நினைவுகள் – 5
- அதிரியன் நினைவுகள் – 6
- அதிரியன் நினைவுகள் – 7
- அதிரியன் நினைவுகள் – 8
- அதிரியன் நினைவுகள் – 9
- அதிரியன் நினைவுகள் – 10
- அதிரியன் நினைவுகள் – 11
- அதிரியன் நினைவுகள் – 12
- அதிரியன் நினைவுகள் – 13
- அதிரியன் நினைவுகள் -14
- அதிரியன் நினைவுகள் -15
- அதிரியன் நினைவுகள் – 16
- அதிரியன் நினைவுகள் -17
- அதிரியன் நினைவுகள் -18
- அதிரியன் நினைவுகள் -19
- அதிரியன் நினைவுகள் -20
- அதிரியன் நினைவுகள் -21
- அதிரியன் நினைவுகள் -22
- அதிரியன் நினைவுகள் – 24
- அதிரியன் நினைவுகள் -25
- அதிரியன் நினைவுகள் -26
- அதிரியன் நினைவுகள் – 27
- அதிரியன் நினைவுகள் -28
- அதிரியன் நினைவுகள் -29
- அதிரியன் நினைவுகள் -30
- அதிரியன் நினைவுகள் -31
- அதிரியன் நினைவுகள் – 32
- அதிரியன் நினைவுகள் – 33
- இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்…
- காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு…
- அதிரியன் நினைவுகள் – 36
- அதிரியன் நினைவுகள் – 37
- அதிரியன் நினைவுகள் – 38
- அதிரியன் நினைவுகள் – 39
- அதிரியன் நினைவுகள் – 40
- அதிரியன் நினைவுகள் -41
- அதிரியன் நினைவுகள் – 42
- அதிரியன் நினைவுகள் – 43
- அதிரியன் நினைவுகள் – 44
- அதிரியன் நினைவுகள் – 45
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 1
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள்
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 4

இளமைக்காலத்தில் எனக்கு மிகவும் பரிச்சியமான உடற்கூறியலை திரும்பக் கற்கத்தொடங்கினேன், ஆனால் மனித உடலமைப்பை அறிவுபூர்வமாக அணுகும் மனநிலை எனக்கில்லை. எங்கே உடலும் ஆத்மாவும் ஒன்றிணைகிறதோ; எங்கே உண்மைக்குக் கனவு பதிலாகிறதோ அல்லது அவசியமெனில் சிற்சில நேரங்களில் உண்மையை முந்தவும் பார்க்கிறதோ; எங்கே வாழ்வும் சாவும் தங்கள் பண்புகளையும் முகமூடிகளையும் பண்டமாற்றுச் செய்துக்கொள்கிறதோ அந்தவெளியை அதாவது இருதரப்பிற்கும் நடுவே இடைத்தரகராக குறுக்கிடும் வெளிகளிடம் ஒருமுறை என்னுடைய ஆர்வத்தைப் பறிகொடுத்திருந்தேன். என்னுடைய மருத்துவர் ஹெர்மோஜேனஸ் என்னுடைய இந்த அனுபவங்களை ஏற்கவில்லை; இருப்பினும் இத்தரவுகளில் பணியாற்றிய குறைந்த எண்ணிக்கையிலான பயிற்சியாளர்களை அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுடன் இணைந்து ஆத்மா வீற்றிருக்கிற இடத்தைத் தெரிந்துகொள்ளவும், உடலோடு அதற்குள்ள பந்தங்களை அறியவும், உடலினின்று தன்னை விடுவித்துக்கொள்ள ஆத்மா எடுத்துக்கொள்ளும் நேரத்தை கணக்கிடவும் முயற்சி செய்தேன். இந்த ஆய்வின் பொருட்டு ஒரு சில விலங்குகள் பலிகொடுக்கப்பட்டன. அறுவைச்சிகிச்சை நிபுணர் சத்தீரஸ், பலியிடும் விலங்குகளின் வேதனையை நேரில் காண அழைத்துச்சென்றார். இருவருமே கற்பனையின் உச்சத்தில் மிதந்தோம். ஆத்மா என்பது உடலை உருவாக்கிய பின்னர் உச்சக் கட்டமாக, குறிப்பாக உடலின் வலிமையையும் சந்தோஷத்தையும் முனகலாக வெளிப்படுத்த சரீரத்தில் இறுதியாக சேர்க்கப்பட்ட கூறோ? அல்லது உடலைப் படைப்பதற்கு முன்பே ஆத்மா முந்திக்கொண்டு, பின்னர் அதன் கற்பனயில் உடல் வடிக்கப்பட்டு, விளைவாக ஏதோஒருவகையில் ஆத்மாவிற்கு இந்த உடல் வரையறுக்கப்பட்ட காலத்திற்குக் கருவியாகிப் போனதோ? ஒருவேளை ஊனுடலுக்குள் வருமாறு ஆத்மாவை அழைத்து, உடல் ஆத்மா இரண்டிற்குமிடையில் நிலைநாட்டிய நெருக்கமான புணர்ச்சியை, அக்னிபிரவேசத்தைத்தான் நாம் உயிர்வாழ்தலென அழைக்கிறோமா? இரு காதலர்கள் முத்தமிட்டுக்கொள்கிறபோது ஒரு பழத்துண்டுபோல, ஒரு மிடறு திராட்சை மதுபோல இருவேறு ஆத்மாக்களும் தங்களுக்கென்றுள்ள தனித்துவ அடையாளங்களைப் பரிமாறிக்கொள்ளுமோ அல்லது ஒன்று மற்றொன்றிடம் தம்மை ஒப்படைத்துக்கொள்ளுமோ? என்பது போன்ற கேள்விகள் என்னிடமுண்டு. அறிஞர்கள் பலரும் இதுபோன்ற விஷயங்களில் நிலையானக் கொள்கையுடன் இருப்பதில்லை, ஒர் ஆண்டில் குறைந்தது இருபது முறை தங்கள் கருத்தை மாற்றிக் கொள்கிறார்கள். இப்பிரச்சினையில் ஐயத்திற்குரிய இது போன்ற கேள்விகள் தெளிதலின் பொருட்டும், முரண்பாடுகளில் எனக்கேயுரிய ஆர்வக் கோளாறினாலும் எனக்குள் சண்டை பிடிப்பதுண்டு. நமது அறிவு இவ்வாறெல்லாம் கேள்விகளை வைத்தாலும்கூட கிடைக்கிற உண்மைகளில் மிகச் சொற்பமான திப்பிகளை மட்டுமே நம்மிடம் விட்டுவைக்கிறது என்பதை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன். இருந்தும் நான் மேலும் மேலும் உணர்வுகள் வழிநடத்தும் இருண்ட, இரவுக்கூறுகள் மிகுந்த, கண்களை கூசச்செய்யும் சூரியகோள் எங்கே சுற்றிவருகிறதோ அங்கே, அவ்வாறான உலகில்மட்டுமே ஆர்வம் காட்டுபவனாக இருந்துவந்துள்ளேன்.
கிட்டத்தட்ட இதே காலத்தில், பேய்க்கதைகளை சேகரிக்கும் ஃபிளெகோன் (Phelégon) ஒரு மாலை நேரத்தில், கொரிந்து மணமகள் (La Fiancée de Corinthe)1 என்கிற கதையைக் கூறி அதன் உண்மைத் தன்மைக்கு அவர் எங்களிடம் உறுதியும் அளித்தார். அக்கதை நிகழ்வின்படி காதல், உடலைப் பிரிந்த ஒரு ஆன்மாவை மீண்டும் பூமிக்குக் அழைத்து வந்து, தற்காலிகமாக அதற்கு ஒரு உடலைக் கொடுப்பதாகும். அளவில் வேறுபாடுகள் இருப்பினும் இக்கதையின் ஆழம் எங்கள் மனதை நெகிழச் செய்தது. எங்களில் அனேகர் இக்கதையை ஒத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினர் : சத்தீரஸ் தனது குரு நாவன்மை படைத்த அஸ்பாசியஸை (Aspasius) நினைவு கூர்ந்தார் (இவர் சிஷ்யருக்கு சில வாக்குறுதிகளை அளித்திருந்தார், ஆனால் அதை ஒருபோதும் அவர் நிறைவேற்றியதில்லை.) இதன்படி இறந்தமனிதர்கள் உயிருள்ள மனிதர்களிடம் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும். ஆண்ட்டினஸ் இத்தகைய சத்தியத்தை எனக்கு அளித்தான். ஆனால் அதனை நான் பெரிது படுத்தவில்லை, காரணம் இவன் உயிர் வாழ மாட்டான் என நம்புவதற்கு எந்த முகாந்திரமும் எனக்கு அப்போதில்லை. பிளாகன் தனது இறந்த மனைவியை அழைக்க விரும்பினார், என்னுடைய பெற்றோர்கள் பெயரை நான் குறிப்பிட்டேன் மாறாக புளோட்டினா பெயர் நினைவுக்கு வந்தும் அவரை அழைக்கும் யோசனைக்குத் தயங்கி. குறிப்பிடவில்லை. இம்முயற்சிகளில் ஏதேனும் பலனுண்டா என்றால் இல்லை, ஆனால் விசித்திரமான கதவுகள் சில அன்று திறந்தன.
அந்தியோக்கியாவை விட்டுப் புறப்பட ஒரு சில நாட்களே இருந்த நிலையில்,காசியஸ் மலையுச்சியில், முன்பு நிறவேற்றிய சில சடங்கு பலிகளை இம்முறையும் நிறைவேற்றச் சென்றேன். மலையேற்றம் இரவில் இருந்தது: எட்னா மலையைப் போலவே, இங்கும் என்னுடன் சிறிய எண்ணிக்கையில் நண்பர்கள் உடன் வந்தனர். நீ நினைப்பதுபோலவே, இம்முறையும் நடந்தே மலை ஏறினோம். பிற சன்னிதனங்களைக் காட்டிலும் புனிதமான இந்த இடத்தில் வழிப்பாட்டுக்குரிய சடங்கை நிறைவேற்றுவது மட்டுமே என்னுடைய நோக்கமல்ல, ஆகாயத்தில், முன்புபோலவே மகிச்சியை வெளிப்படுத்தாமல் பார்க்கச் சாத்தியமற்ற, நாளொன்றின் பெருமைக்குரிய வைகறைக் காட்சியைத் திரும்பக் காணும் நோக்கமும் இருந்தது. சிகரத்தின்
———————————————————————————————————————————
1 . கொரிந்து மணமகள் (la Fiancée de Corinth) கொரிந்து மணமகள், முதன் முதலாகச் சொல்லப்பட்ட பேய்க்கதைகளில் ஒன்று. தொடங்கிவைத்தவர் பிளேகோன், காலம் இரண்டாம் நூற்றாண்டென நம்பப்படுகிறது
.உச்சியில் ஆலயத்தின் செப்பு அலங்காரங்கள் சூரியன் தயவில் பிரகாசிப்பதைக் காணமுடிந்தது. ஆசிய சமவெளிகளும், கடலும் இன்னமும் இருளில் மூழ்கிக் கிடந்தன, அக்காட்சிக்கு மாறாக பிரகாசிக்கும் சூரியன் கீழ், பிரார்த்தனைக்கென்று வந்திருக்கும் எங்கள் ஒளிரும் முகங்கள், காலைதரும் இந்த வெகுமதியின் கணநேர பயனாளிகள்.
பலிச்சடங்கிற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் குதிரையிலும் பின்னர் நடத்தும் எங்கள் மலையேற்றம் இருந்தது. குறுகிய, ஆபத்தான அப்பாதையோரங்களில் நெடுக துடைப்பப் புதரும், குத்துச்செடிகளும் இருந்தன. ஆயினும் இரவில் அவற்றை வாசத்தைக்கொண்டே இனம் காணமுடிந்தது. பலத்தக்காற்று, வசந்தகாலம் என்கிறபோதும், பிற பகுதிகளில் கோடை காலத்தில் நிலவுவதைப் போன்றதொரு வெப்பம். மலை ஏற்றத்தில் முதன் முறையாக சுவாசிக்க சிரம்பட்டதால், எனக்குப் பிரியமான இளந்தோளில் சாய்ந்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தம். வானிலை ஞானமுள்ள ஹெர்மோஜேனெஸ் பலத்தக்காற்றும் மழையும் இருக்குமென சிறிது நேரத்திற்கு முன்பாக எச்சரித்திருந்தார், மலையுச்சிக்குச் சிறிது தூரம் இருந்தபோது, அவர் கூற்றை உறுதிசெய்வதுபோல இடியுடன் மழை கொட்டியது. எங்களை வரவேற்க ஆலயத்திலிருந்து பூசாரிகள் வெளியில் வரவும் மின்னல்வெட்டியது. பெருமழையில் நன்றாக நனைத்திருந்த எங்கள் கூட்டம் முட்டிமோதிக்கொண்டு பலிச்சடங்கு நிறைவேற்றும் கருவறைக்குள் நுழைந்தது. பலிகொடுக்க வேண்டிய நேரத்தில், மின்னற்தாக்குதலுக்கு ஆளாகி பலிக்குரிய ஜீவனும், பலியை நிறைவேற்றுகிற ஆசாமியும் மாண்டனர். பேரச்சத்திற்குரிய அச்சம்பவத்தின் முதல் மணித்துளிகள் கடந்திருந்த நிலையில் ஹெர்மோஜேனெஸ் மருத்துவர்களுக்கே உரிய ஆர்வத்துடன பாதித்திருந்தவர்களைக் குனிந்து பார்த்தார். ஏதென்ஸ் தளபதி ஷாப்ரியாஸும், ஆலயத்தின் தலைமைப் பூசாரியும் நடந்த சம்பவத்தைக் கண்டு பரவசத்துடன் கூச்சலிட்டனர். அவர்கள் இருவரைப் பொருத்தவரை, மின்னல் என்கிற தெய்வீக வாளினால் வெட்டப்பட்ட கவரிமானும், அவ்விலங்கை பலியிடவிருந்த ஆசாமியும் துர்த்தேவைதையோடு கலந்துவிட்டனர், தவிர உயிரைவிட்ட ஜீவன்களால் என் ஆயுள் கூடுமென்பது பலிச்சடங்கின் மரபுப்படி அனைவரது எதிர்பார்ப்பு. ஆண்ட்டினஸ் என் கரத்தைக் கெட்டியாகப் பிடித்திருந்தான், அவனுடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் நடந்துமுடிந்த பயங்கரத்தால் என நினைத்தேன், உண்மையில் அது காரணமல்ல, அவன் மனதிலிருந்த வேறு எண்ணங்களே அவனை அப்படி நடுங்கவைத்தது என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன். வயது கூடகூட அது தரும் இழப்புக்கு அஞ்சி, தனக்கென்று ஓர் உறுதிமொழியை உயிர் எடுத்துக் கொள்கிறது: “எனது உயிர்வாழ்க்கையின் சரிவுக்கான முதல் சமிக்கை என்று உணரப்படுகிறதோ அன்றே அல்லது அதற்கு முன்பே உயிரை மாய்த்துக்கொள்வேன்” என்பதுதான் அந்த உறுதிமொழி. அவ்வாக்குறுதியை இன்று நினைத்துப் பார்க்கிறேன், நம்மில் பலரும் இதுபோன்ற வாக்குறுதிகளை நமக்கு நாமே கொடுப்பதும், பின்னர் அவற்றைக் காப்பாற்றத் தவறுவதும் நடப்பதுதான், அப்படியொரு வாக்குறுதியின் காலத்தை அறிய பின்னோக்கி வெகுதூரம் பயணிக்க வேண்டும். இளைஞனின் பூர்வீக ஊரான நிகோமீடியா காலத்திற்குச் சென்று நீரூற்று அருகே நிகழ்ந்த சந்திப்பை நினைவுகூறவேண்டும். அச்சந்திப்பில், அவனுடைய மடிமை, இன்பத்தின்மீது அவன் கொண்டிருக்கும் ஆர்வம், எதிர்காலத்தைப் பற்றிய அவனுடைய அக்கறையின்மை என்று பல குணங்கள் உண்டு. அவன் இவ்வாழ்க்கையிலிருந்து விடைபெற விரும்பினால் அதில் கிளர்ச்சியின் சாயலோ, வேறு மனக்குறைகளோ இருக்கக் கூடாதென்பது எனது எதிர்பார்ப்பு. மரணம் அவனுடைய சேவையின் இறுதி வடிவமாக அமையலாம், அது அவனுக்கு கிடைக்கவிருக்கிற ஒரு பரிசு, இனி அவன் உயிர்வாழ்க்கையில் நிகழவிருப்பது அதொன்றுதான், காசியஸ் மலையில் நிகழ்ந்த மின்னல் அதற்கு வழிகாட்டியுள்ளது. விடியலின் ஒளியானது, அந்த மனச்சோர்வடைந்த முகத்தில் தோன்றிய புன்னகையுடன் ஒப்பிடும்போது பூஜ்யம்.
சில நாட்களுக்குப் பிறகு, முகத்தில் மீண்டும் அதே சிரிப்பு, ஆனால் இம்முறை கூடுதலாக ஒளியமுற்பட்டது, ஒருவித தெளிவின்மை அதை திரையிட்டிருந்தது. இரவு உணவின் போது, கைரேகை பார்க்கத் தெரிந்த போலமன்(Polémon), இளைஞன் உள்ளைங்கையைப் பரிசோதிக்க விரும்பினார், எரிநட்சத்திரங்கள் போலிருக்கும் அவனுடைய கைரேகைகள் என்னை பயமுறுத்தியதுண்டு. சிறுவன் நீட்டிய கையை இழுத்ததோடு, உள்ளங்கையை திரும்ப மடித்துக்கொண்டான், அச்செயலில் பதற்றமில்லை ஆனால் கூச்சம் தெரிந்தது, தன்னுடைய உயிர்வாழ்க்கை முடிவு உள்ளிட்ட இரகசியங்கள் பிறருக்குத் தெரியக்கூடாதென நினைத்தான்.
நாங்கள் ஜெருசலேமில் இடையில் தங்க வேண்டியிருந்தது. சக்கரவர்த்தி டைட்டஸ் நிர்மாணித்திருந்த நகரம் சீரழிந்த நிலையிருந்தது, அந்த இடத்தில் புதியதொரு நகரத்தை உருவாக்குவதென்கிற யோசனையுடன் திட்டங்களில் ஆழ்ந்திருந்தேன்; யூதேயா பிரதேசத்தில் காணமுடிந்த சிறந்த நிர்வாகமும், கீழை நாடுகளில் ஏற்பட்டிருந்த வர்த்தக முன்னேற்றம் இப்பகுதிகளுக்கிடையிலான சாலைச் சந்திப்பை மையமாக வைத்து ஒரு பெருநகரத்தை இங்கே கட்டமைப்பது அவசியமாயிற்று. ஏலியா கேபிடோலினா( Aelia Capitolina) என்ற இப்புதிய நகரம் கோபுரங்கள், சந்தைகள், பொது குளியல் இடங்கள்ன், ரோமானிய வீனஸ் தேவதையின் ஆலயம் என அனைத்து அம்சங்களிலும் வழக்கமானதொரு உரோமானிய நகரமாக இருக்கவேண்டுமென்பது எனது எதிர்பார்ப்பு. உணர்ச்சியும், உருக்கமும் நிறைந்த வழிபாட்டுமுறைகளில் அண்மைக்காலங்களில் எனக்கு ஏற்பட்டிருந்த விருப்பம், அடோனிஸ் (Adonis) தெய்வத்திற்கு விழா எடுக்க மிகவும் சாதகமான குகையை மோரியா மலையில் (Mont Moriah) தேர்வு செய்ய வழிவகுத்தது. இத்திட்டங்கள் யூதமக்களைக் கோபமடையச் செய்தது. தற்போதுள்ள நகரம் சீரழிந்திருப்பினும் கல்வி, சந்தோஷம் என்பதன்றி பிற ஆதாயங்களையும் வழங்குகிறபோது எதற்குப் புதிதாக ஒரு பெரிய நகரமென இப்பாமர மக்கள் நினைத்தார்கள். இடிந்து விழும் நிலையிலிருந்த சுவர்களை இடிக்க முதற்கோடரியை போட்ட தொழிலாளர்கள், இக் கூட்டத்தினரால் தாக்கப்பட்டனர். அடுத்தக் கட்ட வேலைகளில் கவனம் செலுத்தினேன்: ஃபிடுஸ் அக்விலா(Fidus Aquila) கூடியவிரைவில் தனது கட்டுமான மேதமையை ஆண்ட்டினோபொலிஸ் (Antinoöpolis) நகர நிர்மாணத்தில் பயன்படுத்த இருந்தார், அவரை ஜெருசல வேலைகளில் ஈடுபடுத்தினேன். இடிமானக் குவியல்கள் அதிகரிப்பிற்கேற்ப, உள்ளூர் மக்களின் வெறுப்பு எங்கள்மீது விரைவாக வளர்ந்தது, நான் அதனைப் பொருட்படுத்தக் கூடாதென்றிருந்தேன்.
ஒரு மாதம் கழித்து நாங்கள் பெலுசியம்(Pelucium) வந்திருந்தோம். அங்கு பாம்பே(Pompei)1 கல்லறையை புதுப்பிக்க கவனம் செலுத்தினேன். கீழைநாடுகள் விவகாரங்களில் நான் எவ்வளவு அதிகமாக மூழ்கியிருந்தேனோ, அந்த அளவுக்கு மாவீர்ர் ஜூலியஸ் சீசரிடம் தொடர்ந்து தோல்விகண்டவர்களின் அரசியல் மேதமையையும் பாராட்டினேன். இந்த நிச்சயமற்ற ஆசிய உலகை ஒழுங்கமைக்க எடுத்த முயற்சியில், சில சமயங்களில் சீசரை விட பாம்பே உரோமுக்காக மிகவும் திறம்பட பணியாற்றியதாக எனக்குப் பட்டது. சரித்திரம் சாதனை புரிந்து இறந்தவர்ககளின் கல்லறைகளை சீரமைக்கும்பணி என்பது இறுதியாக நான் அவர்களுக்குச் செலுத்தும் நேர்த்திக் கடன்களில் ஒன்று, விரைவில் பிற கல்லறைகளையும் இதுபோல கவனித்துக் கொள்ளும் எண்ணத்திலிருந்தேன்.
அலெக்ஸாண்ட்ரியாவிற்கு எங்கள் வருகை இரகசியமாக நிகழ்ந்தது. இச்சம்பவத்தைக் கோலாகலமாகக் கொண்டாடவேண்டும் என்றிருந்த திட்டத்தை, அரசியார் வருகின்றவரை நிறுத்திவைப்பதென முடிவுசெய்யப்பட்டது. அதிகம் பயணங்கள் செய்யாதிருந்த எனது மனைவியிடம் குளிர்காலத்தை இதமான தட்பவெப்பம் நிலவும் எகிப்து நாட்டில் கழித்துவிட்டு வரவேண்டுமென வற்புறுத்தப்பட்டது; இருமலிலிருந்து போதுமான வகையில் குணம் அடைந்திராத லூசியஸ் கூட இபட்டியொரு தீர்வுக்கு முயன்றிருக்கவேண்டும். நைல் நதியில் ஒரு பயணத்திற்கு ஏற்பாடாகியிருந்தது, அதன்பொருட்டு மரங்கலங்கள் திரட்டப்படிருந்தன. இப்பயணத்தில் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளவேண்டிய ஆய்வுகள், சில விழாக்கள், விருந்துகள் நிகழ்ச்சி நிரல்களில் இருந்தன. பாலட்டைனில்(Palatine) தங்கிய நாட்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளால் களைத்துபோனோம், இங்கும் அது நேரக்கூடும். நானே முன்னின்று இவை அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தேன். அரச பெருமைகளுக்குப் பழகிய பழைமையான இப்பகுதியில் அரசியல் மதிப்பு என்பது ஆடம்பரத்தையும், அரசவை கீர்த்திகளையும் சார்ந்திருந்த்து.
என்னுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருந்தினர்கள் வருவதற்கு ஒரு சில நாட்கள் இருந்த நிலையில், இடைபட்ட நாட்களை வேட்டையாடுவதற்கு செலவிட அதிக ஆர்வமாக இருந்தேன். பல்மைரேனிய(Palmyre) பாலைநிலப் பகுதியில் மேலஸ் அக்ரிப்பா(Meles Agrippa) வேட்டைக்கென்று ஏற்பாடுகளைச் செய்திருந்தார்; சிங்கங்களை எதிர்கொள்ள நாங்கள் அதிக தூரம் செல்லவேண்டி இருக்கவில்லை. ஆண்ட்டினஸ் வயதளவில் மிகவும் சிறியவன், வேட்டை
————————————————————————————————————————————–
1 பாம்பே(Pompei) ஜீனீயஸ் பாம்பீஸ் மக்னஸ் (Gnaeus Pompeius Magnus); (பிறப்பு: கி.மு செப்டம்பர் 106 -கி.மு48) இவர் மகா பாம்பே என்றும் அழைக்கப்படுகிறார். இவர் செனட் சபை உறுப்பினரும், போர்ப்படைத் தளபதியும் ஆவார்
அனுபவத்தில் போதாமையும் நிறைய இருந்தது, விளைவாக வேட்டைக்களத்தில், முன்வரிசையில் அவனை நிறுத்த அஞ்சினார்கள். இவ்விஷயத்தில் நானே நினைத்துபார்க்கமுடியாத அளவிற்கு அவனிடம் கோழைத்தனம் இருந்ததென்பதும் உண்மை. வழக்கபோல நான் இறங்கிவந்தேன், சிங்கவேட்டையில் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமென வாக்குறுதி தந்தேன். அறியாச் சிறுவனாக இனியும் அவனை நடத்த முடியாது, தற்போதைய அவனுடைய இளமை பலம் குறித்து உண்மையில் எனக்குப் பெருமை.
அலெக்ஸாண்டர் எந்த இடத்தில் சில பாதிரியார்களிடமிருந்து தமது தெய்வ பிறப்பு பற்றிய இரகசியத்தை அறியமுடிந்ததோ அந்த ஏமன்(Ammon) பாலைவனச் சோலைக்குச் செல்வதென முடிவுசெய்து அலெக்ஸாண்ட்ரியா நகரிலிருந்து கால்நடையாக புறப்பட்டிருந்தோம், ஒரு சில நாட்கள் போதுமென சொல்லப்பட்டது. அப்பகுதிகளில் கொடிய விலங்கொன்றின் அபாயம் இருப்பதாகவும், மனிதர்களை அடிக்கடி தாக்குவதாகவும் பூர்வீகக் குடிகள் எங்களை எச்சரித்திருந்தனர். அன்றிரவு சந்தோஷமாக தீக்காய்ந்து கொண்டிருந்தபோது, எங்களுடைய வேட்டையில் காட்டவிருந்த தீரச்செயல்களை ஹெர்குலிஸுடைய தீரச்செயல்களோடு ஒப்பிட்டு மகிழ்ந்தோம். ஆனால் வேட்டையின் ஆரம்பநாட்களில் ஒருசில கெஸல்வகை மான்களைக் கொண்டுவர முடிந்ததென்கிற பெருமையைத்தவிர பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் நடக்கவில்லை. மணலும் நீருமாகவிருந்த நிரம்பிய குட்டையொன்றில், நாணற் புதர்களும் மண்டிக்கிடந்தன, அங்குசென்று நாங்கள் இருவரும் காத்திருப்பதென முடிவுசெய்தோம். அந்தி சாயும் வேளையில் சிங்கம் தண்ணீரைக் குடிக்க வருமெனச் சொல்லப்பட்டது. சங்கு, தாளம், கூச்சலென்று பெரும் சத்தமிட்டு புதர்களையும் பிறவற்றையும் தட்டிச் சலசலப்புறச் செய்து, விலங்குகளை எங்கள் பக்கம் துரத்தும் பொறுப்பை நீக்ரோக்கள் பொறுப்பில் விட்டிருந்தோம்; எஞ்சியிருந்த எங்கள் பாதுகாவலர்கள் சிறிது தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டனர், காற்று அமைதியாக வீசியபோதும் அதன் வலிமையை உணர்த்தும் வகையில் இருந்தது. அன்றைய தினத்தில், பத்தாவது மணிநேரத்தை கடக்கின்ற தருணத்தில், ஆண்ட்டினஸ் என்னைச் சீண்டி, குட்டையில் இதழ்களை அகல விரித்துள்ள சிவப்பு அல்லிகளைக் காட்டினான். திடீரென்று, விலங்குகளுக்கெல்லாம் ராஜாவான விலங்கை, மிதிபட்டு உடையும் நாணல்களின் சலசலப்புக்கிடையில் காணமுடிந்தது, அதன் அச்சுறுத்தும் அழகோடு இணைந்த முகவாய் எங்களை நோக்கித் திரும்பியது. அபாயம் தனக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தும் தெய்வீகத் தலைகளில் அதுவுமொன்றெனச் சொல்லவேண்டும். பின்புறம் சற்றுத் தள்ளி என் குதிரையை நிறுத்தியிருந்த நிலையில், அபாயத்தை உணராமல் பையன் தன்ன்னுடைய குதிரையைக் கால்களால் உந்தியதோடு, தனது வேல்கம்பையும், இதர வேல்களையும் விலங்கின் மீது எரிந்தான், அதையும் கலைநயத்தோடு செய்வதுபோல எனக்குப்பட்டது, ஆனால் அதனை விலங்கின் வெகு அருகிலிருந்து செய்தான், எனக்கோ அவனைத் தடுக்கப் போதிய அவகாசமில்லை. கழுத்தில் குத்தப்பட்ட மிருகம் நிலைகுலைந்து விழுந்தது; அதன் வால் தரையில் அடித்துச் சிதறிய மணல் காரணமாக, சிவப்பு நிறத்தில் விளங்கிக்கொள்ள முடியாத பெரும்பொதி போன்ற உடலையன்றி வேறொன்று கண்ணிற்படவில்லை. கடைசியில் சிங்கம் எழுந்து நின்றது, எதிரிலிருக்கும் குதிரைமீதும், ஆயுதமின்றி அமர்ந்திருக்கும் வீரன் மீதும் பாய்வதற்குத் தனது சக்தியைத் திரட்டியது; இந்த ஆபத்தை நான் எதிர்பார்த்திருந்தேன்; நல்லவேளை, ஆண்ட்டினஸ் குதிரை மீதிருருந்த ஆசனம் அசையாமல் இருந்ததது, எங்கள் விலங்குகள் இரண்டுமே இது போன்ற சம்பவங்களை எதிர்பார்த்து மெச்சத்தக்கவகையில் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தன. இளைஞனுக்கும் கழுத்தில் ஆயுதங்கள் பாய்ந்திருந்த விலங்கிற்குமிடையில் என்னுடைய குதிரையை நிறுத்தினேன், அதன் வலதுவிலா சிங்கத்தின் பக்கமிருந்தது. இம்மாதிரியான நேரங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கான பயிற்சிகள் எனக்குமிருந்தன; ஏற்கனவே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த விலங்கின் கதையை முடிப்பது, எளிதாக இருந்தது. இரண்டாவது தடவையாக அது நிலைகுலைந்து வீழ்ந்தது; அதனுடைய தலை சேற்றில் புரண்டது; நீரில் கரிய நிறத்தில் நூல் போல இரத்தம். ஞாயிறு போலவும், தேன் மற்றும் பாலைவன நிறத்திலுமிருந்த அந்த இராட்சதப் பூனை மனிதர்க்குரிய கம்பீரத்துடன் உயிரைவிட்டிருந்தது. ஆண்ட்டினஸ் நுரைகள் வடிந்துகொண்டிருந்த குதிரையிலிருந்து கீழே குதித்திருக்க, அவனுடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. அதன் பின்னர் எங்களுடன் பிறதோழர்கள் இணைந்துகொண்டனர்; வேட்டையாடப்பட்ட மலைபோன்ற அந்த உயிரற்ற உடலை. நீக்ரோக்கள் முகாமுக்கு இழுத்து வந்னர்.
அன்றிரவு திடீரென்று ஒருவகை விருந்து அரங்கேறியது; தீக்கங்குகளில் வெந்திருந்த ஆட்டிறைச்சியை செப்புத் தட்டிலிருந்து இளைஞனே தம்கைகளால் அனைவருக்கும் விநியோகம் செய்தான். அவனுடைய பெருமையைப் போற்றுகின்ற வகையில் ஒருவகை பனைவகை மரத்தின் மதுவை அருந்தினோம். அவனுடைய பெருமிதம் ஒரு பாடலாக வெளிப்பட்டது. ஆபத்தில் இருக்கும் எந்தவொரு வேட்டையாடும் மனிதனுக்கும் அவ்வுதவியைச் செய்திருப்பேன் என்பதை மறந்து, நான் செய்த உதவிக்கு முக்கியத்துவம் அளிக்கிறவகையில், ஒருவேளை அதை மிகைப்படுத்துகிறானோ, என நினைத்தேன். காதலர்கள் ஒருவர் மற்றவருக்காக உயிரைவிடுகிற சாகச உலகில் நாங்களும் இணைந்திருபதுபோல உணர்ந்தோம். அவனுடைய மகிழ்ச்சியில் நன்றியுணர்வும் பெருமிதமும் பாடலொன்றின் சரணங்களைப்போல மாறி மாறி வெளிப்பட்டன. அன்றைய இரவு, நட்சத்திரங்கள் மின்னும் வானத்தின் கீழ், என் கூடாரத்தின் நுழைவாயிலில், இரண்டு முளைகள் நட்டு அவற்றில் இறந்த விலங்கின் உரித்த தோல் தொங்கவிடப்பட்டு காற்றில் அசையும் அதிசயத்தைக் கண்டேன், செய்தவர்கள் கறுப்பர்கள். தூவப்பட்டிருந்த மசாலாப் பொருட்களைப் பொருட்படுத்தாமல், காட்டு விலங்கின் மணம் இரவெல்லாம் எங்களை ஆட்டிப்படைத்தது. மறுநாள், பழங்களை உண்டு பசியாறிய பின்னர், முகாமை விட்டு வெளியேறினோம்; புறப்படும்போது, மிருக ராஜாவான சிங்கத்தின் உடலில் முதல்நாள் நாங்கள் உண்டவைபோக எஞ்சியவை, மேகம்போல ஈக்கள் மொய்த்திருக்க, சிவப்புநிறக் கழிவுகளாக, பள்ளமொன்றில் எங்களுக்குக் காணக் கிடைத்தன.
தொடரும்…
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
