ஜகன்னாத பண்டித ராஜா – 4

This entry is part 4 of 6 in the series ஜகன்னாத பண்டித ராஜா

 கங்காலஹரி-1

ஜகன்னாதரின் கதைக்குத் திரும்பி வருவோம்.

பாமினி விலாஸ எனும் நூல் ஜகன்னாதர் முகலாய இளவரசியைச் சந்தித்துக் காதல் கொள்ளும் முன்பே எழுதப்பட்டது எனக் கொள்ளலாம். 

நாட்டில் ஔரங்கசீப் செய்த குழப்பங்களால் இளவரசியை மணந்து நாட்டை விட்டு அவளுடன் வெளியேறிய ஜகன்னாதர் பண்டிதர்களின் சுவர்க்க பூமி எனப்படும் காசியை நோக்கிப் பயணித்தார். அங்கு இலக்கிய, தர்க்க, மத சம்பந்தமான நூல்களை ஆராய்ந்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம் என்பது அவர் எண்ணம் போலும்!

உலகம் முழுமையும் அறியப்பட்ட கங்கை நதி ஒரு நீர்நிலை மட்டுமல்ல. பாரத கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும், நமது நாகரிகத்தின் வளர்ச்சி, தொடர்ச்சியாகவும், ஒரு சமுதாயத்தை வாழவைக்கும் சாதனமாகவும் இந்த கங்கை நதி அறியப்படுகின்றாள். அவளில் ஒருமுறை முழுகி எழுந்தால் அதுவரை செய்த பாவங்கள் தொலைந்துவிடும் என்ற தெய்வ நம்பிக்கைக்கு உரியவளாக உள்ளவள். எந்த நூலாலுமோ, வேதங்கள், புராணங்கள் அனைத்தாலுமோ அவள் பெருமையை முழுதாகக் கூற இயலவில்லை.  அதனால் கங்கையைப் பற்றிப் பாடுவதே இன்றுவரை அனைத்துக் கவிஞர்களின் பெரும் லட்சியமாக இருந்து வருகிறது.

ஆகவே ஜகன்னாதரும் பெருமை வாய்ந்த கங்கைக் கரையில் தங்கி வாழலானார். ஆனால் விதியின் விளையாட்டு வேறாக இருந்ததே! காசியிலிருந்த பண்டிதர்கள் முகலாய அரசகுமாரியை மணந்ததற்காக ஜகன்னாதரை ஜாதிப் பிரஷ்டம் செய்தனர். போதாத குறைக்கு ஜகன்னாதரும் பண்டிதர் பட்டோஜி தீக்ஷிதர் எழுதிய ‘ப்ரௌத மனோரம திகா’வைக் கண்டனம் செய்து ‘மனோரம குசமர்த்தன’ எனும் நூலை எழுதியிருந்தார்; அப்பைய தீக்ஷிதர் எழுதிய ‘சித்ர மீமாம்ஸை’க்கு மறுப்புத் தெரிவித்து ‘சித்ர மீமாம்ஸ கண்டன’ என்பதையும் எழுதியிருந்தார். அவர்கள் இருவரும் பெரிதும் மதிக்கப்பட்ட பண்டிதர்கள்; இவர்களுடன் மற்ற பண்டிதர்களும் சேர்ந்துகொண்டு ஜகன்னாதரை விலக்கி வைத்தனர். இதனால் மிகுதியான மனவருத்தம் அடைந்த ஜகன்னாதர் தன் மனைவியான முகலாய இளவரசியுடன் ஸ்நானம் செய்வதற்காக பஞ்சகங்கா கட்டத்தை1 நோக்கி வருகிறார்.

ஆனால் கங்கையும்கூட அவரை விட்டு விலகுவதுபோல அவர்கள் ஒவ்வொரு படியாக இறங்க இறங்க, நீரும் ஒவ்வொரு படியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதைக் கண்ணுற்ற ஜகன்னாதர் மிகுந்த துயரத்துடன் தாமிருந்த இடத்தில் படிகளிலேயே அமர்ந்து  கங்கையின்மீது ஸ்லோகங்களை ஒவ்வொன்றாக இயற்றி கங்காலஹரி எனும் நூலைப் பாடலானார். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் அவர் பாடி முடித்ததும் ஒரு படி அளவுக்கு நீர் உயர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு ஐம்பத்து இரண்டு ஸ்லோகங்களையும் பாடி முடித்ததும் கங்கை பொங்கியெழுந்து ஜகன்னாதரையும் அவருடைய மனைவியையும் தன்னுள் இழுத்துக் கொண்டுவிட்டாள்.

இந்த கங்கா லஹரியின் ஸ்லோகங்களைத்தான் நாம் காணப்போகிறோம். நான் அறிந்தவரை இதுவரை தமிழ் மொழிபெயர்ப்பைக் கண்டதில்லை. என்னைப்போலும் சம்ஸ்க்ருதம் அறியாதவர்கள் அறிந்து போற்றும் வகையில் (ஒரு ஆங்கில மொழியாக்கத்தின் துணைகொண்டு) இதனைச் செய்யத் துணிந்தேன். அன்னை கங்கைக்கு எனது காணிக்கை இதுவே. தீபாவளி சமயம் இதனைச் செய்யத் துவங்கியது எத்தனை பொருத்தம்!

தொடங்கும் முன்: ‘லஹரி – லெஹர்’ என்றால் அலைகள் எனப் பொருள். கங்கையின் அலைகள் எனப் பொருள் கொள்ள வேண்டும். கங்கையின் ப்ரம்மாண்டத்தையும், அனைத்து ஜீவராசிகளையும் அவள் அரவணைத்துக் காக்கும் தன்மையையும் கண்டவர்கள் இதன் பொருத்தத்தை உணர்வீர்கள்!

படித்து ரசிப்பவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றியும் வணக்கமும்!


கங்காலஹரி

  1. ஓ கங்கா மாதாவே!
    அம்ருதத்தின் இனிமை நிறைந்த உனது புனித நீர்
    சொற்களால் விவரிக்க முடியாததும்
    உலகின் பேரதிர்ஷ்டமும் ஆகும்.
    தெய்வங்களின் பெருமையின் வடிவமும்
    தன் விளையாட்டினால் உலகைப் படைத்த
    சிவபிரானின் பெரும் புகழுக்குச் சான்றுமாகிய
    அனைத்து ஸ்ருதிகளுக்கும் அதுவே ஆதாரம்.
    அது எங்கள் அமங்கலங்களைத் துடைத்தெறியட்டும்.
    1. தாயே! இந்த உலகத்தில் எது முழுமையாக
      அஞ்ஞானத்தைப் போக்கி
      இறையருளைச் சார்ந்து உள்ளதோ,
      எது ஒரே ஒருமுறை கண்களால் காணப்பட்டாலும்
      ஏழைகளின் துயரங்களை நீக்குகின்றதாயும்
      உள்ளம் முழுமையும் கர்ம வினைகளால் நிறைந்தவர்களின்
      பாவங்களை விலக்குகின்றதாகவும் உள்ளதோ,
      அந்த உனது நீரோட்டம்
      முடிவற்ற செல்வங்களை எங்களுக்கு வழங்கட்டும்.
    2. சிவனின் தலைமீது நடனமாடும் கங்கையின்
      உடலினின்றும் பிறந்த உயரமான அலைகள்,
      எவை கணேசனின் தாயான பார்வதியின்
      கடைக்கண் பார்வையால் சில பொழுதுகளுக்கு
      அச்சம் கொள்கின்றனவோ,
      எவை உதிக்கின்ற சூரியன் போன்று
      பாதி காணப்பட்டும், பாதி ஒளிந்தும் உள்ளதோ
      அவை அடியவர்களின் பயத்தையும்
      பாவங்களையும் அழிக்கட்டும்.
    3. ஓ தாயே! உனது துணையை எண்ணி மட்டுமே
      என்னால் மற்ற அனைத்துக் கடவுள்களும்
      சிறிதும் யோசிக்காமல் மரியாதையின்றி
      ஆங்காரத்துடன் எண்ணப்பட்டனர்;
      இப்போது நீ பாராமுகமானால், ஓ பாகீரதி,
      இவ்வுலகில் நான் யார்முன்பு சென்று அழுவேன்?
    4. அம்மா! அனைத்துக் கடவுள்களாலும் வழிபடப்படும்
      உனது திருவுரு, இப்பிறப்பிலோ அல்லது முற்பிறப்பிலோ
      நல்லது ஒன்றையும் செய்யாதவர்களின்
      சிந்தையுள் புகுந்தால், அஞ்ஞானத்தால்
      விளையும் மந்த புத்தியையும் விலக்குகிறது.
      எவ்வாறெனில் சந்திரனின் கிரணங்கள் படும்போது
      உள் இந்திரியங்களின் இருள் விலக்கப்படுகிறது.
      உனது இவ்வடிவம் எனது மனதின் தற்போதைய
      சஞ்சலங்களை நீக்கி மனம், மெய், மொழி செய்த
      முப்பரிமாணப் பாவங்களையும் களையட்டும்.
    5. ஓ தாயே! நிர்வாண நிலையைப் பழிக்கும் செயல் எது தெரியுமா?
      எதையுமே எண்ணிப் பார்க்காமல் வலிமைவாய்ந்த நாடுகளை
      புல்தரைகளாக எண்ணித் துறந்துவிட்டு பிரப்பஞ்செடிகள் காற்றிலாடும்
      உனது கரையில் தஞ்சம் புகுந்தும், அமிர்தத்தைவிட இனிமையான
      உனது நீரை திருப்தி ஏற்படும்வரை வெகுவாக அருந்தியும்
      வாழும் மனிதர்களின் அச்செயலே.
    6. ஓ அன்னையே!, உயர்குல மகளிரின் முலைகளினின்றும்
      அவர்களணிந்த கஸ்தூரியானது அவர்கள் காலை நீராடும்போதில்
      உனது நீரில் கரையும்பொழுது, அந்தக் கஸ்தூரி பெறப்பட்ட
      மான்களின் தூய உடல்கள் நூறும், ஆயிரமுமாகச் சூழப்பட்ட
      கடவுள்களுடன் ‘நந்தன’ எனும் காட்டினுள்
      சுதந்திரமாகப் புகும்.
    7. ஓ புனித நதியே! கேட்பதற்கு இனிமையான கங்கை எனும் பெயர்,
      ஒரேயொருமுறை நினைக்கப்பட்டாலும் ஒருவனின் புலனுணர்வால்
      அறியும் அங்கங்களை உடனே அமைதியாக்கும்.
      தீவிரமாக உச்சரிக்கப்பட்டாலோ பாவங்களை உடனே நீக்கி
      மறுபிறப்பை அறுக்கும்; அது எனது தாமரைபோலும் வாயில்
      எனது கடைசி மூச்சின்போதும் ஒளிரட்டும்.
    8. தங்கள் உள்ளத்தில் தேவலோகத்தையும் விரும்பாமல்
      காகங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடும்
      உனது கரையானது, உயிரினங்களின் பிறப்பு இறப்பு என்பவற்றை
      அங்கு வாழ்வதாலேயே களைந்து விடுவதால்
      எங்களது களைப்பிற்கு ஆறுதல் தருகின்றது.
    9. ஓ தெய்வ நதியே! நீ சாமான்யமானதொரு அனுபவப் பொருளன்று!
      வடிவமற்ற, சாஸ்வதமான தூய உண்மைப்பொருளான நீ
      அறியாமையை உனது ஒப்பற்ற பெருமையால் நீக்கினாய்;
      ஆதலால் பேச்சும் மனமும் விரிய இயலாத அத்வைதமான
      வேதங்களும் கூட நேரடியாக உணரவியலாத அந்த
      ஒப்புயர்வற்ற உண்மைப்பொருள் நீயே.

கங்கை என்பது பாரததேசத்தின் உயிர்நிலை, நமது பண்பாட்டின் வடிவம், வழிபாட்டின் உருவம், பல தொன்மங்களின் இருப்பிடம், பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் என்பதெல்லாம் நாமனைவரும் அறிந்ததொன்று. சாமான்யர் தொட்டுக் கவிஞர்கள்வரை தாயாகப் பாவிக்கும் ஒரு புண்ணிய நதியிடம் ஆதரவற்ற புகலிடம் தேடும் குழந்தையாகி உருகுவது உண்மை.

கங்கையின் நீரில் மருந்துகளும் கூட இருப்பதாக அறிவியலார் கருதுகின்றனர். (பின்னொரு சந்தர்ப்பத்தில் இதனை விரிவாகக் காண்போம்)

இப்படிப்பட்டதொரு நதியிடம் தனது தவறுகளை மன்னிக்கும் தாயாக, தன்னை ஆசுவாசப்படுத்தும் சக்தியாக அவளைக் கண்டு, அவளிடம் தன்னை ஒப்புவித்து விடுகிறார் ஜகன்னாதர். இனிவரும் ஸ்லோகங்களில் இதன் பிரதிபலிப்பைக் கண்டு ப்ரமிக்கலாம்; ரசிக்கலாம்; உள்ளம் நெகிழலாம்.

 (வளரும்)

குறிப்புகள்:

	1. பஞ்சகங்கா கட்டம் என்பது ஐந்து நதிகள்  சேரும் இடமானதால், மிகவும் புனிதமாகக் கருதப்படும். கங்கை, சரஸ்வதி, தூதபாப, யமுனா, கிரணா எனும் ஐந்து நதிகள் சேருமிடம் இது. மிகப் பழமையான கட்டமான இது வாராணசியில் முக்கியத்துவம் வாய்ந்தது. ப்ருகு முனிவரால் கட்டப்பட்டதென மகாபாரதம் கூறுகின்றது.

	2. ஆதி சங்கரர், துளஸிதாசர், கபீர்தாஸர், ரவிதாஸர், குரு நானக், த்ரைலங்க ஸ்வாமி ஆகிய இந்து மதத்தின் பல ஆன்மீக குருக்களுடன் தொடர்பு உடையது பஞ்சகங்கா கட்டம். பாரதத்தின் ஆன்மீகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் வழிகாட்டிய பெரியோர்கள் இவர்.

ஜகன்னாத பண்டித ராஜா

ஜகன்னாத பண்டித ராஜா -3 வீழ்ச்சியடைந்தவர்களால் ஒதுக்கப்பட வேண்டியவை! வீழ்ந்தவர்களால் உரக்கக் கூறப்படாதவை!!

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.