புது நகர நிர்மாணமும் இரண்டாம் பயணத்தின் முடிவும்!

This entry is part 11 of 12 in the series கொலம்பஸ்

என்னவோ மிக மோசமாக நடந்திருக்கிறது என்று அஞ்சியபடி கொலம்பஸின் குழுவினர்அனைவரும் கப்பலிலேயே காத்திருந்தார்கள்.

நள்ளிரவில் ஒரு தோணியில் சில உள்ளூர் மக்கள் வந்து கொலம்பஸைச் சந்திக்க விரும்பினர். அவர்களில் ஒருவர் குவாகனகாரியின் உறவினர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இரண்டு தங்க முகமூடிகளைப் பரிசாகக் கொடுத்தார். ஸ்பானியர்கள் நலமாக இருக்கிறார்களா என்று கேட்டதற்கு, சிலர் நோயால் இறந்ததாகவும், சிலர் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இறந்ததாகவும் அவர்கள் பதிலளித்தனர். குவாகனகாரி தானே வராததற்கு காரணம் கவோனபோ-வின் படையெடுப்பில் இருந்து ஸ்பானியர்களைக் காக்க முயன்றதில்   அவர் தொடையில் கடும் காயமடைந்திருப்பதாகவும், தங்கள் கிராமமே அந்தச்சண்டையில் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மறுநாள் காலை, கரைக்கு அனுப்பப்பட்ட குழு லா நவிடாட்டை அணுகியபோது, அது முழுவதும் கருகிய இடிபாடுகளாக மாறியிருந்தது. ஆடைகள் சிதறிக் கிடந்தன. காட்டின் விளிம்பில் சில உள்ளூர் மக்கள் தென்பட்டாலும், ஸ்பானியர்கள் நெருங்கியதும் அவர்கள் மறைந்தனர். பின்னர் குவாகனகாரியின் இன்னொரு உறவினரும் அவரது மூன்று தோழர்களும் வந்து, 39 பேரும் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். பெரும்பாலோர் கவோனபோ நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், அதே தாக்குதலில் குவாகனகாரியின் கிராமமும் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மறுநாள் கொலம்பஸ் நேரில் சென்று பார்த்தபோது, கிராமம் முற்றிலும் அழிந்திருந்ததைக் கண்டார். கொலம்பஸின் குழுவினரில் சிலர்  குவாகனகாரியையே துரோகி என்று சந்தேகப்பட்டாலும், அவரது சொந்த கிராமமும் அழிக்கப்பட்டிருந்ததால் அது நம்பமுடியாததாகவும் இருந்தது. களைகள் மண்டிய ஆழமற்ற குழிகளில்  மேலும் 11 ஸ்பானியரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.  

குவாகனகாரி தன்னைச்சந்திக்க நேரில் வராததால், கொலம்பஸே அவரிடம் சென்றார். அழிந்த கிராமத்திலிருந்து சுமார் ஒன்பது மைல் தொலைவில், 50 குடிசைகள் கொண்ட புதிய இடத்தில் குவாகனகாரி இருந்தார்.  ஸ்பானியர்களைக் காப்பாற்றும் முயற்சியில் உண்டான (எனச்சொல்லப்பட்ட) தொடைக்காயத்தால் காற்றில் தொங்கும் படுக்கையில் சாய்ந்தபடி, ஸ்பானியர்களின் மரணத்திற்காக கண்ணீருடன் வருத்தம் தெரிவித்த அவர், சிலர் நோயாலும், சிலர் தங்கச் சுரங்கம் தேடிச் சென்று கவோனபோவினால் கொல்லப்பட்டும்  மற்றவர்கள் கிராமத்தில் அவர் நடத்திய சண்டையில் கொல்லப்பட்டதாகவும் விளக்கினார்.

கொலம்பஸுடன் வந்திருந்த இரு மருத்துவர்கள், குவாகனகாரியின் “காயமடைந்த” தொடையைப் பரிசோதிக்க அனுமதி கேட்டனர். கட்டை அவிழ்த்துப் பார்த்தபோது, அந்த தொடைக்காயம் எத்தகைய மோசமான நிலையிலும் இல்லை என்பது மருத்துவர்களில் இருவரான சான்கா*வுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதை கொலம்பஸிடம் அவர் ரகசியமாகத் தெரிவித்தார். ஆனாலும் குவாகனகாரி வலி இருப்பதாகவே நடித்தார்.

பிறகு, ஸ்பானிய மொழி சிறிது பேசக் கூடிய குவாகனகாரியின் சகோதரர் ஒருவர் கொலம்பஸிடம் முழு விவரத்தையும் தெரிவித்தார்.  லா நவிடாட்டின் அழிவும், ஸ்பானியர்கள் கொல்லப்பட்டதும் ஸ்பானியருக்கும் பூர்வகுடி மக்களுக்கும் இடையே அடுத்து வரவிருந்த  நீண்ட போராட்டத்தின் முதல் அறிகுறியாக அமைந்தது, இது கொலம்பஸை மிகவும் பாதித்தது

இதைத் தொடர்ந்து, கொலம்பஸின் குழுவினரில் சிலர் குவாகனகாரியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் கொலம்பஸுக்கு அதைவிட அவசரமாக கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் இருந்தன. கப்பலில் இருந்த 1,500 புதியவர்கள் நீண்ட பயணத்தால் களைத்திருந்தனர், உணவுப் பொருட்கள் ஈரப்பதத்தால் அழுகத் தொடங்கியிருந்தன. எனவே லா நவிடாட்டை முற்றிலும் கைவிட்டு, ஒரு புதிய இடத்தில், புதிதாக ஒரு குடியேற்றத்தை நிறுவ கொலம்பஸ் விரும்பினார்.

லா இசபெலா குடியேற்றமும், புதிய தீவில் கரும்புச் சாகுபடியும்

லா நவிடாட்டின் அழிவுக்குப் பின், கொலம்பஸ் அதற்குச் சற்று கிழக்கே, ஒரு ஆற்று முகத்துவாரத்திற்கு அருகில் புதிய குடியேற்றத்திற்கான இடத்தை அவசரமாகத் தேர்ந்தெடுத்தார்.  அரசி இஸபெல்லாவின் பெயரில் அதற்கு “லா இஸபெலா” என்று பெயரிட்டார். இந்தக் குடியேற்றம் 1493 இறுதியில் தொடங்கி, 1494 ஜனவரி 2-ல் முறையாக நிறுவப்பட்டது. ஆனால் இந்த இடத் தேர்வு சரியாக இல்லை, மோசமான துறைமுகம், வடக்கு மற்றும் மேற்கிலிருந்து வீசும் கடும் காற்றுக்கு உட்பட்ட பகுதி என்பதால், பிறகு இது பெரும் பிரச்சினையாக மாறியது.

லா நவிடாட்டின் “சாபம்” அடுத்து இவர்கள் காலெடுத்து வைத்த  லா இஸபெலாவையும் தொடர்ந்தது என்று ஸ்பானியர்கள் நம்பும் அளவுக்கு, அங்கு தொடர்ந்து துயரமும் நிராசையும் நிலவின. கட்டிடங்களைக் கட்டும் கடின உடல் உழைப்பில் புதிய பயணிகள் பலரும்  ஈடுபடுத்தப்பட்டனர். கப்பற்பயணிகள் பலரும்  ஒரே நேரத்தில் நோய்வாய்ப்படத் தொடங்கினர், அவர்களில்  பலர் காய்ச்சலால் இறந்தனர். வரலாற்றாசிரியர் லாஸ் காசாஸ் (இவரைக்குறித்தும் இவரது நூல்களைக்குறித்தும்  முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம்) எழுதியது போல, தங்கள் நாட்டிலிருந்து வெகுதூரத்தில் தனித்து விடப்பட்டு, தாங்கள் எதிர்பார்த்த செல்வத்தையும் காணாத நிலையில், அம்மக்கள்  ஆழ்ந்த வேதனையில் மூழ்கினர்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ்  1494 மார்ச் மாதம்  ஹிஸ்பானியோலா  தீவில், மத்தியப் பகுதியில் Santo Tomás கோட்டையைக் கட்டத் தொடங்கினார்.அமெரிக்கக் கண்டத்தின் உள்பகுதியில் ஸ்பானியர்களால் கட்டப்பட்ட முதலாவது உள்நாட்டுக் கோட்டை  இதுதான்

கொலம்பஸ் மற்றும் அவரது ஆட்களுக்கு ஹிஸ்பானியோலா தீவின் உள்பகுதியில் தங்கம் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆனால் ஸ்பெயினில் இருந்த பல அதிகாரிகள் அங்கு தங்கம் எதுவும் இல்லை என்று சந்தேகம் அடைந்தனர். 

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கண்களால் காணும் வரை நம்ப மறுத்த ‘புனித தோமா’ (St. Thomas / doubting Thomas)-வை நினைவுகூரும் வகையில் கொலம்பஸ் இதற்கு “சாண்டோ தோமாஸ்” என்று பெயரிட்டார். தங்கத்தைக் கண்ணால் பார்த்த பிறகாவது சந்தேகம் கொண்டவர்கள் நம்பட்டும் என்பதற்காக இப்பெயர் வைக்கப்பட்டது. 

அப்பகுதியில் இருந்த சிபாவோ (Cibao) பள்ளத்தாக்கில் தங்கம் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஸ்பானியப் படைவீரர்களுக்கு அக்கோட்டை பாதுகாப்பான தளமாக  விளங்கியது.  மேலும் தைனோ  பூர்வகுடி மக்களைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் இந்த இராணுவக் கோட்டை பயன்படுத்தப்பட்டது

ஸ்பெயினின் இளம் வீரனான  ஒஜெடோ (Alonso de Ojeda), 1493-ல் கொலம்பஸின் இரண்டாவது பயணத்தில் அவருடன் கடல்பயணத்தில் இணைந்திருந்தான்.தங்கம் தேடும் பணியில் கொலம்பஸின் நம்பிக்கைக்குரிய வீரனாக உயர்ந்த அவன், Santo Tomás கோட்டையின் பொறுப்பை ஏற்றான்

1494 ஏப்ரல் 24 முதல் செப்டம்பர் 29 வரை (சுமார் 5 மாதங்கள்) கொலம்பஸ் லா இஸபெலாவிலிருந்து புதிய தீவுகளை கண்டறியப் புறப்பட்டுச் சென்றார். அப்போது தன் சகோதரர் டியேகோ கொலம்பஸை நகரத்தின் தலைவராக விட்டுச் சென்றார்.இந்த ஆய்வுப் பயணத்தில்தான் அவர் ஜமைக்காவைமே 3, 1494 அன்று கண்டறிந்தார்.

 கொலம்பஸ் ஜமைக்கா தீவைக் கண்டறிந்த பின்னர் தொடர்ந்து கியூபாவின் தென் கரையோரத்தை ஆய்வு செய்து, “எவாஞ்செலிஸ்டா” என்று   பெயரிட்ட பைன்ஸ் தீவையும் அடைந்தார். பிறகு உடல்நலக் குறைவுடன் லா இஸபெலாவுக்குத் திரும்பினார்.  பார்வை இழந்தது, நினைவாற்றல் பாதிக்கப்பட்டது என்று மருத்துவ வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது மலேரியா, டைபாய்டு அல்லது டைபஸ் போன்ற காய்ச்சல் நோயாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆட்களே, அவர் இறந்துவிடுவார் என்று அஞ்சி, அவரை லா இஸபெலாவுக்கு தூக்கிச் சென்றனர்.

 சுயநினைவை இழந்து மயங்கிய நிலையில், செப்டம்பர் 29, 1494-ல் லா இஸபெல்லாவுக்கே  திரும்பக் கொண்டு வரப்பட்டார் கொலம்பஸ். அவர் உடல் நலமடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகுதான் லா இஸ்பெல்லா”கைவிடப்பட்டு”  அவரது சகோதரரால் புதிய நகரம் நிர்மாணிக்கபட்டது. 

மூன்று ஆண்டுகளுக்குள், கொலம்பஸின் இளைய சகோதரரும் ஆற்றல் மிக்கவருமான பார்த்தலோமியோ கொலம்பஸ், ஹிஸ்பானியோலாவின் தென் கரையில் சாண்டோ டோமிங்கோ* என்ற புதிய நகரத்தை 1496, ஆகஸ்டில் நிறுவினார்.

இதைத் தொடர்ந்து லா இஸபெலா முற்றிலும் கைவிடப்பட்டது. ஆனால் அதன் இருண்ட நினைவு ஆரம்பகால ஸ்பானியக் குடியேறிகளின் மனதில் ஒரு பொல்லாத கனவைப் போல நீடித்தது. லா இஸபெலா பாழடைந்த பிறகு, பலர் இரவு நேரங்களில் அந்த இடத்தைக் கடக்கவே அஞ்சினர் என்றும், அங்கு தலையில்லா ஆவிகளைக் கண்டதாக பயமுறுத்தும் கதைகளும் பரவின என்று லாஸ் காசாஸ் பதிவு செய்துள்ளார்.

ஹிஸ்பானியோலாவில் கானரி தீவுகளில் இருந்து கொண்டு வந்த கரும்புத் தண்டுகள் நடப்பட்டன. இது புதிய உலகில் கரும்பு பயிரிடப்பட்ட முதல் நிகழ்வாக அமைந்தது. காலப்போக்கில் இது ஹிஸ்பானியோலா, ஜமைக்கா, கியூபா ஆகிய இடங்களில் பெரும் சர்க்கரைத் தொழிற்துறையின் அடித்தளமாக மாறியது. ஐரோப்பியர்களால் “வெள்ளைத் தங்கம்” என்று அழைக்கப்பட்ட இந்தப் பயிர், பிற்காலத்தில் அடிமை வணிகத்துடன் இணைந்து, கரிபியன் பொருளாதார வரலாற்றையே மாற்றியமைத்தது.

1493-ல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் 17 கப்பல்களுடன் ஹிஸ்பானியோலாவுக்குத் திரும்பியபோது, அது வெறும் மனிதர்களின் பயணமாக மட்டுமல்லாது. பழைய உலகிலிருந்து புதிய உலகிற்கு விதைகள், தாவரக் கன்றுகள், கால்நடைகள் என ஒரு புதிய உயிரியல் பரிமாற்றமும் நடந்தது. தீவுகளில் கோதுமை, பார்லி, கொண்டைக்கடலை, பட்டாணி, வெங்காயம், முள்ளங்கி, lettuce, முலாம்பழம், வெள்ளரி, திராட்சைக் கொடி போன்ற பல பயிர்கள் பயிரிடப்பட்டன. அவற்றுடன் கரும்பும் கொண்டு வரப்பட்டது. புதியசூழலுக்கு அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதை அறியும் முயற்சி தொடங்கியது.

இது பின்னாளில் “Columbian Exchange” என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய உயிரியல் பரிமாற்றத்தின் முக்கியமான தொடக்கக் கட்டமாக அமைந்தது. அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்லத் தொடங்கிய மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகாய், அன்னாசி, மரவள்ளிக்கிழங்கு போன்ற தாவரங்களுக்கு இணையாக, ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு கோதுமை, திராட்சை, கரும்பு போன்ற பயிர்களும் வந்தன. இதில் கரும்பு பின்னாளில் மிகப் பெரிய வரலாற்றுப் பாதிப்பை ஏற்படுத்தியது. 

ஆனால் புதிய குடியேற்றத்தில் பயிர்ச்சாகுபடி முயற்சிகள் எல்லாமே வெற்றிகரமாக நடைபெறவில்லை. உணவுப் பற்றாக்குறை, நோய், ஸ்பானியர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள், தைனோ  மக்களுடனான மோதல்கள் ஆகியவற்றிற்கிடையில் சாகுபடிச் சோதனைகளும் நடந்தன.

கொலம்பஸ் உடல்நலம் பெற்று மீண்டு எழும்போது, குடியேற்றத்தில் அதிருப்தி பரவலாக இருந்ததைக் கண்டார். விரைவில் பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்று எதிர்பார்த்திருந்த குடியேறிகள், அது சாத்தியமில்லை என்று உணர்ந்ததும் ஏமாற்றமடைந்தனர். கொலம்பஸ் ஸ்பானியர் இல்லாமல், ஒரு இத்தாலியர் என்பதும் சிலருக்கு வெறுப்பாக இருந்தது. மறுபக்கம், தொடர்ந்த ஸ்பானிய அடக்குமுறையால் பூர்வகுடி மக்கள் கிளர்ச்சியில் இறங்கினர். 

இதற்குப் பதிலடியாக, கவோனபோ உள்ளிட்ட தலைவர்களை ஸ்பானியர் கைது செய்தனர். பெரும் வீரரான கவோனபோ ஒஜெடோவால் ஏமாற்றிப் பிடிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். 

கவோனபோவைப் போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஓஹெடா, நட்பின் பெயரில் அவரைச் சந்தித்து, ஸ்பெயின் அரசர்கள் அணியும் அரச அலங்கார அணிகலன் என்று கூறி பளபளக்கும் விலங்குகளை அவரது கைகளில் அணிவித்து கைது செய்தான்.

 தொடர்ந்து பஞ்சமும் ஸ்பானிய-பூர்வகுடி மோதல்களும் தீவு முழுக்க பரவின. அதிருப்தியடைந்த சில குடியேறிகள் தாங்களாகவே ஸ்பெயினுக்குத் திரும்பி, கொலம்பஸின் ஆட்சி முறை குறித்தும், புதிதாகக் கண்டறியப்பட்ட நிலத்தின் நிலைமை குறித்தும் மிகைப்படுத்தப்பட்ட, எதிர்மறையான கதைகளைப் பரப்பினர்.

 இந்தப் புகார்கள் ஸ்பானிய அரசவையை சென்றடைந்தன. இதனால் அதிருப்தி அடைந்த ஸ்பானிய அரசு, ஹுவான் அகாடோ (Aguado) என்பவரை 1495-ல் ஹிஸ்பானியோலாவுக்கு  உண்மை நிலவரத்தை விசாரிக்கவென்று அனுப்பினர். அவர் அரசரின் பிரதிநிதியாக வந்து அங்குள்ள நிர்வாக நிலைமையை விசாரிக்க வேண்டியிருந்தது.  அகாடோ தன் அதிகாரத்தை முறையில்லாமல் பயன்படுத்தியதால், கொலம்பஸ் இனி மேலும் புதிய கண்டுபிடிப்புகளைச் சேர்க்காமல் ஸ்பெயினுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஸ்பெயினிலேயே அரசரிடமும் அரசியிடமும் நேரடியாக விளக்கம் அளிப்பது நல்லது என்று கொலம்பஸ் கருதினார். எனவே, 1496 மார்ச் 10 அன்று ஹிஸ்பானியோலாவிலிருந்து ஸ்பெயினுக்குப் அகாடாவுடன் புறப்பட்டார். அவர்கள் இருவரும் தனித்தனியே இரண்டு கப்பல்களில் பயணம் செய்தனர். கொலம்பஸ் நினோ கப்பலிலும் அகாடோ  ஹிஸ்பானியோலாவில் புதிதாகக் கட்டப்பட்ட லா இந்தியா என்னும் கப்பலிலும் ஸ்பெயினுக்குப் புறப்பட்டனர்.

ஒரு சிறிய கப்பற்குழுவுடன் ஸ்பெயின் நோக்கி புறப்பட்ட கொலம்பஸ், மேலும் பலரை தீவிலேயே விட்டுச் சென்றார். கொலம்பஸ் அவரது சகோதரர் பார்த்தலோமா கொலம்பஸை  அங்கேயே நிர்வாகப் பொறுப்பில் விட்டுச் சென்றார்;  மற்றொரு சகோதரர் டியாகோவும் ஹிஸ்பானியோலாவிலேயே இருந்தார்.

ஜூன் 11, 1496 அன்று கொலம்பஸ் ஸ்பெயினின் காடிஸ் துறைமுகத்தை அடைந்தார் . இதுவே இரண்டாம் பயணத்தின் முடிவு (செப்டம்பர் 25, 1493 முதல் மொத்தம் சுமார் மூன்று ஆண்டுகள் நீடித்த பயணம்).

 துறைமுகத்தில் இறங்கியபோது கடுமையான கடல் பயணத்தால் களைத்துப்போன கொலம்பஸ் அப்போது வழக்கமான அரச அதிகாரியின் ஆடையில் தோன்றவில்லை. அவர் துறவியைப் போன்ற எளிய ஆடையணிந்திருந்ததாகப் பிந்தைய வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.  தன் தாழ்மையையும் மனச்சோர்வையும் காட்ட, ஒரு ஃபிரான்சிஸ்கன் பழுப்பு நிறத் துறவியின் உடையும் இடுப்பில் கயிறும் அணிந்திருந்ததாகவும், பராமரிக்கப்படாத சீவப்படாத தாடியுடன் கிட்டத்தட்ட ஒரு துறவியைப் போல அவர் தோன்றியதாகவும்  பல வரலாற்றுப்பதிவுகள் கூறுகின்றன.

முதல் பயணத்தில் திரும்பியபோது கிடைத்த வெற்றிக் கோலாகல வரவேற்பு இம்முறை கிடைக்கவில்லை. கொலம்பஸுடன் கரையிறங்கியவர்களும் நோயால் சோர்ந்து, மெலிந்து, துயரம் நிறைந்த ஒரு சிறிய குழுவாக இருந்தனர். தங்கம் நிறைந்த “இந்தியாவின்” செல்வத்துடன் திரும்புவார்கள் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தது. சில தங்க நகைகளையும், சில பூர்வகுடி மக்களையும் வெற்றிச் சின்னங்களாகக் மக்களுக்கு அவர்கள் காட்டினாலும், அவை முன்பு போல அவர்களைக் கவரவில்லை.

காடிஸ் துறைமுகத்தில் அவர்  இறங்கியவுடன் யாரும் அவரை அவமானப்படுத்தவோ கைது செய்யவோ இல்லை. மாறாக, அரசர் ஃபெர்டினாண்டும் அரசி இஸபெல்லாவும் அவரது வருகையைப் பற்றி அன்பான முறையில்  கடிதமளித்து, ஓய்வுக்குப்பின்னர் அரசவைக்கு வருமாறு அழைத்தனர். கொலம்பஸ் அங்கிருந்து  பர்கோஸ் என்னுமிடத்தில் செயல்பட்ட அரசவைக்குச் சென்றார். அங்கு அரச தம்பதியினரைச் சந்தித்து, ஹிஸ்பானியோலாவில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். கிடைக்கும் வரலாற்றுப் பதிவுகளின்படி, அந்தச் சந்திப்பு அவருக்கு அவமானகரமான ஒன்றாக அமையவில்லை; அரச தம்பதியினர் அவருடைய விளக்கத்தைக் கேட்டனர், அவருக்கான அரச ஆதரவும் தொடர்ந்து இருந்தது.

ஸ்பானிய அரச தம்பதியர் அவரை அன்புடன் வரவேற்றாலும், அவரது புகழ் வெகுவாகக் குறைந்திருந்தது, ஆரம்பகால உற்சாகமும் தணிந்திருந்தது என்று அக்காலப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, இரண்டாம் பயணத்தின் முடிவில் கொலம்பஸ் ஒரு புதிய உலகைக் கண்டுபிடித்த கடலோடியாக மட்டுமல்லாமல், இரண்டு உலகங்களுக்கிடையே தாவரங்கள், விலங்குகள், உணவு, நோய்கள் மற்றும் மனிதர்களின் பரவலைத் தொடங்கிவைத்த வரலாற்றுப் நாயகனாகவும் மாறியிருந்தார். ஹிஸ்பானியோலாவின் மண்ணில் நடப்பட்டு முளைத்தெழுந்த அந்தச் சிறிய கரும்புக் கன்றுகளும் மற்ற பயிர்களும், அடுத்த பல நூற்றாண்டுகளின் உலக வரலாற்றை மாற்றப்போகும் ஒரு மிகப் பெரிய பரிமாற்றத்தின் தொடக்கச் சின்னங்களாக அமைந்தன.

இதற்குப் பின்னரே, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, மூன்றாம் பயணத்திற்கான அனுமதியை அவர் பெற்றார்  

தொடரும்….

*டியேகோ ஆல்வரேஸ் சான்கா (Diego Álvarez Chanca)  என்னும் செவில்லேவைச் சேர்ந்த ஸ்பானிய மருத்துவர், ராணி இசபெல்லாவின் அரசவை மருத்துவராக பணியாற்றியவர். 1493-ல் கொலம்பஸின் இரண்டாம் பயணத்தில் கப்பற்படை மருத்துவராக இணைந்து பயணித்தார். இவரே புதிய உலகில் நடந்த நிகழ்வுகளை விரிவாக விவரிக்கும் ஒரு நீண்ட அறிக்கைக் கடிதத்தை (report)  செவில்லே நகர சபைக்கு எழுதி அனுப்பினார். இந்தக் கடிதம் இரண்டாம் பயணம் பற்றிய மிக முக்கியமான, நேரடியான சாட்சிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஏனெனில் கொலம்பஸின் சொந்தப் பதிவுகளைத் தவிர, அவரது சமகாலத்தவர் ஒருவர் எழுதிய விவரமான பதிவு இது ஒன்றுதான். கரீபியன் தீவுகளின் இயற்கை வளங்கள், தாவரங்கள், மற்றும் கரீப் மக்களின் பழக்கவழக்கங்கள் குறித்த ஆரம்பகால ஐரோப்பியக் குறிப்புகளில் இவரது கடிதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது

*சாண்டோ டொமிங்கோ இன்றும் அமெரிக்காவின் தொடர்ச்சியாக மக்கள் வாழும் மிகப் பழமையான ஐரோப்பிய நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.1990-ல் அதன் காலனித்துவ மண்டலம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.

கொலம்பஸ்

புதிய தீவுகளும் பெயரிடலும் படுகொலைகளும் கொலம்பஸின் வீழ்ச்சி!

Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.